28 திருமணம்

28 திருமணம்

தன் வீட்டிற்கு வருகை புரிந்த தன் நண்பன் அர்னவ்வை பார்த்த அஞ்சலி உணர்ச்சிவசப்பட்டாள். அவனை நோக்கி ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

"என்னங்க... இங்க பாருங்க யார் வந்திருக்காங்க... " என்று தன் கணவன் ஷியாமை அழைத்தாள்.

அவளுக்கு சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்த ஷியாம், அங்கிருந்து வெளியே எட்டிப் பார்த்தான். அவனது முகம் பிரகாசம் அடைந்தது. அதே மகிழ்ச்சியோடு அர்னவ்வை அணைத்துக் கொண்டான்.

"உனக்கு எங்க ஞாபகம் வந்ததை நெனச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"நான் எப்பவுமே உங்களை மறந்ததில்ல"

"முதல்ல வந்து உட்காரு... ஏதாவது சாப்பிடு..."

"நான் இங்க எதுக்கு வந்தேன்னா..."

"உன் கல்யாணத்துக்கு எங்களை இன்வைட் பண்ண வந்திருக்க..."

ஆமாம் என்று தலையசைத்தான்.

"எப்படியோ, நீ உன் குஷியை கல்யாணம் பண்ணிக்க போற..."

"அப்படியா? நம்ம நினைச்சது உண்மை தானா?" என்றான் ஷியாம்.

"நீங்க என்ன நினைச்சீங்க?" என்று சிரித்தான் அர்னவ்.

"நீ குஷியை லவ் பண்றேன்னு நினைச்சோம்"

பதில் கூறாமல் புன்னகைத்தான்.

"இப்பவாவது உன் வாயை திறந்து பேசுடா" என்றான் ஷியாம்.

"தேவையில்ல. அவனோட ஸ்மைல் தான் ஆன்சர்" என்றாள் அஞ்சலி.

ஆம் என்று தலையசைத்தான் அர்னவ்.

"என் கல்யாணத்துல அக்காவும் மாமாவும் செய்ய வேண்டிய சடங்கையெல்லாம் நீங்க ரெண்டு பேரும் தான் செய்யணும்னு நான் விரும்புறேன்"

அதைக் கேட்டு நெகிழ்ந்த அஞ்சலி,

"உங்க சொந்தக்காரங்க ஏதாவது சொல்ல போறாங்க" என்றாள்.

"எங்க கிளோஸ் ரிலேஷன்ல அக்கா மாமா உறவுல யாரும் இல்ல.  இதைப்பத்தி நான் ஏற்கனவே அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்க அப்படியே செஞ்சிடலாம்னு சொல்லிட்டாங்க. அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க"

"நீ நெஜமா தான் சொல்றியா?" என்றான் ஷியாம்.

ஆம் என்று அவன் தலையசைக்க,

"சரி, கரெக்டா நாங்க டைமுக்கு வந்துடுவோம்" என்றான் ஷியாம்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அர்னவ்.

திருமணத்திற்கு ஐந்து நாள்...

பந்தக்கால் நடுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார் கரிமா.

"இந்த சடங்கு எதுக்காக செய்றாங்கன்னு ஆன்ட்டி சொன்னாங்களா?" என்றாள் குஷி.

"சொன்னா... வீட்டுக்கு வெளியில மாவிலை கட்டி ஒரு கொம்பு நடுவாங்களாம். கல்யாணமான பொம்பளைங்க எல்லாரும் சேர்ந்து அதுக்கு மஞ்சள் தடவி, குங்குமம் வச்சு,பூஜை பண்ணுவாங்களாம்..."

"கொம்பா? அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"

"ஆமாம். இது ஒரு கல்யாண வீடு. எந்த கெட்ட விஷயத்தையும் என்கிட்ட வந்து சொல்லாதீங்க அப்படின்னு மத்தவங்களுக்கு உணர்த்தத்தான் அந்த கொம்பை நடுறாங்களாம்"

"இன்ட்ரஸ்டிங்..."

"சரி, எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்" என்று அங்கிருந்து கிளம்பினார் கரிமா.

பந்தக்கால் நட்டு முடித்த பிறகு, அர்னவ்க்கு நலங்கு வைக்க அனைவரும் தயாரானார்கள். வயதான பெண்கள் சிலர் அவனுக்கு நலங்கு வைப்பதை கவனமாய் பார்த்துக் கொண்டார் கரிமா. மாப்பிள்ளையின் கன்னத்தில் சந்தனம் தடவி, நெற்றியில் குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து, அட்சதை போட்டு, ஆலம் சுற்றி நலங்கு வைத்தார்கள் அவர்கள்.

அவர்கள் செய்தது போலவே, சந்தனத்தை அவன் கன்னத்தில் தடவி...

"தாமாத்ஜி (மாப்பிள்ளை)..." என்று கூறி சிரித்தார் அவர்.

*நீ எனக்கு மாப்பிள்ளை ஆகிவிட்டாய்* என்பதை அதிகாரபூர்வமாய் உணர்த்துவதற்காகவே அவர் அதை கூறினார். அது அவன் முகத்தில் லேசான வெட்கத்தை இட்டு வந்தது.

"நீங்க எப்பவும் போலவே என்னை அர்னவ்னே கூப்பிடலாம் ஆன்ட்டி" என்றான் புன்னகைத்தபடி.

"என் பொண்ணையே நான் உங்களுக்கு கொடுக்கிறேன். இப்போதிலிருந்து நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியமானவர். ரொம்ப ஆழமான உறவு முறை நம்முடையது.  நான் எப்படி அலட்டிக்காம விட்டுடுவேன்? எங்களோட கனவு நினைவாக போகுது...! உங்களை மாப்பிள்ளைனு தான் கூப்பிடுவேன். உங்களுக்கு அதுல ஏதாவது பிரச்சனை இருக்கா?"

"இல்ல..." என்று புன்னகையுடன் தலையசைத்தான்.

"கரிமா, நீ உன் மாப்பிள்ளைகிட்ட வாழ்க்கை முழுக்க உட்கார்ந்து பேசிக்கிட்டே இரு. ஆனா இப்போ  சீக்கிரமா நலங்கை முடி. என் மருமக வீட்டுல தனியா காத்துகிட்டு இருக்கா"

"யாரோ அவளை கிட்னாப் பண்ணிக்கிட்டு போற மாதிரி கவலைப்படுறியே...!"

"அப்படி எல்லாம் எதுவும் நடந்துடாது. அவ மேல யாராவது கையை வைக்கணும்னு நினைச்சா, என் புள்ள அவனை கொன்னுடுவான்... நான் சொல்றது சரி தானே அரு?"

ஆமாம் என்று திடமாய் தலையசைத்தான் அர்னவ்.

அர்னவ்க்கு நலங்க வைத்த அதே பெண்கள், குஷிக்கு நலங்கு வைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

அவள் கன்னத்தில் சந்தனத்தை தடவிய ரத்னா,

"பாரு, என் மருமகள் எவ்வளவு அழகாக இருக்கா..." என்றார்.

"அதனால தானே அவ அண்ணனை மடக்கி பிடிச்சிட்டா..." என்றாள் லாவண்யா.

"நான் ஒன்னும் அவனை மடக்கி பிடிக்கல" என்றாள் குஷி.

"சரி, அவன் தான் உன்னை மடக்கிப் பிடிச்சிட்டான். ஓகேவா?" என்றார் ரத்னா சிரித்தபடி.

"என்னை யாரும் மடக்க முடியாது" என்றாள் குஷி.

"ஆமாம் ஆமாம், அது தான் எங்களுக்கு தெரியுமே... நீ அவன்கிட்ட மயங்கவே இல்லையே..." என்றார் கரிமா.

ரத்னாவும் லாவண்யாவும் அதைக் கேட்டு சிரித்தார்கள்.

"என்ன்னனது...? நான் மயங்கினேனா? அம்மா நீங்க என் அம்மான்னு மறந்துடாதீங்க" என்றாள்.

"இருந்தா என்ன? உண்மையை யாரும் மாத்திட முடியாது" என்றார் கரிமா.

"நீ வாயை மூடு... அர்னவ் தான் அவளைப் பார்த்து மயங்கினான்..." என்றார் ரத்னா.

"அம்மா, இவங்க ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் மயக்கத்துல தான் இருக்காங்க. ஆனா ரெண்டு பேரும் ஒத்துக்க மாட்டாங்க" என்றாள் லாவண்யா.

"எவ்வளவு நாள் இந்த மாதிரி இருக்காங்கன்னு பார்க்கலாம்" என்றார் ரத்னா.

*அந்த திமிர் பிடிச்சவன் என்னை விரும்புறான்னு ஒத்துக்கிற வரைக்கும்* என்று மனதிற்குள் எண்ணினாள் குஷி.

திருமணத்திற்கு முதல் நாள்

பெண் அழைப்புக்காக கோவிலுக்கு செல்ல தயாரானாள் குஷி. அப்பொழுது அங்கு வந்த ஷியாம் மற்றும் அஞ்சலியை பார்த்து அவள் வியந்தாள்.

"குட் ஈவினிங் சார், குட் ஈவினிங் மேம்" என்றாள்.

"நாங்க இங்க உன்னோட ப்ரொஃபசர்ஸா வரல. இவர் உனக்கு அண்ணன், நான் உனக்கு நாத்தனார்"

ஒன்றும் புரியாமல் விழித்த குஷியை பார்த்து புன்னகைத்தான் ஷியாம்,

"இந்த சடங்கை நாங்க தான் செய்யணும்னு அர்னவ் விரும்பினான். அதனால தான் உன்னை கோவிலுக்கு கூட்டிகிட்டு போக வந்தோம்" என்றான்.

"நெஜமாவா? என்றாள் சந்தோஷமாய்.

"ஆமாம் வா போகலாம்."

அவர்கள் கோவிலுக்கு கிளம்பினார்கள். அவர்களது சுற்றமும் நட்பும் கோவிலில் அவர்களுக்காக காத்திருந்தார்கள். கோவிலில் பூஜை முடிந்த பிறகு, திறந்த காரில் அமர வைக்கப்பட்டாள் குஷி. அஸ்வினும் சுருதியும் அவளோடு காரில் ஏறிக் கொண்டார்கள். அவள் திருமண மண்டபம் வரை ஊர்வலமாய் அழைத்துவரப்பட்டாள்.  அவளுடன் அனைவரும் சீர் வரிசையை சுமந்து நடந்து வந்தார்கள். திருமண மண்டபம் சீரியல் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த திருமண மண்டபத்தின் முதலாம் தளத்தில் இருந்த மிகப்பெரிய ஜன்னலின் வழியாக, ஒருவன் மணமகளை பார்த்தபடி நின்றிருந்தான்.

"சுருதி, அங்க பாரு, அர்னவ் அண்ணா நிக்கிறாரு" என்றான் அஸ்வின்.

அஸ்வின் சுட்டிக்காட்டிய இடத்தை ஏறிட்டாள் குஷி. சீரியல் விளக்குகளின் பிரதிபலிப்புக்கு இடையில் நின்றிருந்த அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை நன்றாகவே தெரிந்தது.

"அவரு குஷி அக்காவை தான் பாக்குறாரு" என்றாள் சுருதி.

"குஷி, இன்னைக்கு ஒரு நாள், நீ தலையை குனிஞ்சு இருக்கணும். அதுக்குப் பிறகு, உன்னோட அல்லவை நீ வாழ்நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்" என்று சிரித்தாள் அவளுக்கு அருகில் நடந்து வந்த லாவண்யா.

மணப்பெண் ஊர்வலம் திருமண மண்டபத்தில் வந்து முடிந்தது, குஷிக்கு ஆலம் சுற்றி அவளை வரவேற்றார் ரத்னா.

அர்னவ்வும் குஷியும் விஐபி நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. தாம்பூலங்களை மாற்றிக்கொண்ட அரவிந்தனும், ஷஷியும் உணர்ச்சிவசப்பட்டார்கள். கரிமாவிற்கு இனிப்பை ஊட்டி விட்டு தன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார் ரத்னா.

புகைப்படம் எடுப்பதற்காக அழைக்கப்பட்டார்கள் மணமக்கள். அவர்களை பல விதங்களில் நிற்க வைத்து, புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. சங்கடத்தின் உச்சிக்குச் சென்றாள் குஷி. புகைப்படக் கலைஞர் கூறுவதை புன்னகையுடன் செய்து கொண்டிருந்தான் அர்னவ். வெகு நெருக்கமாய் இருப்பது போன்ற புகைப்படங்களை தவிர்க்கச் சொல்லி அவன் ஏற்கனவே புகைப்பட கலைஞனிடம் கூறிவிட்டிருந்தான், குஷியை சங்கடப்படுத்த வேண்டாம் என்று.

ஒரு ரோஜா பூவை அவனிடம் கொடுத்த புகைப்பட கலைஞர், அதை குஷியிடம் கொடுக்குமாறு கூறினார். அவனிடம் கொடுக்கப்பட்ட பூ ஆரஞ்சு நிறம். அந்த பூவை திரும்ப கொடுத்துவிட்டு, அங்கு மலர் செண்டில் இருந்த ஒரு சிகப்பு நிற ரோஜாவை கையில் எடுத்தான். அது குஷியின் முகத்தில் புன்னகையை இட்டு வந்தது. அவளுக்கு பிடித்த நிறம் சிகப்பு தான். அதை அவள் கையில் அவன் கொடுக்க, அந்த தருணத்தை அழகாக கிளிக் செய்தார் ஃபோட்டோகிராபர்.

"ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல வந்து நல்லா பிரைட்டா ஸ்மைல் பண்ணுங்க" என்றார் அவர்.

ஓர் அடி எடுத்து வைத்து அவளுக்கு நெருக்கமாய் வந்து நின்றான் அர்னவ். குஷிக்கு சிரிக்கவே வரவில்லை... அவளுக்கு அவ்வளவு நெருக்கமாய் நின்று அவளை பார்த்து அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தால், அவள் எப்படி சிரிப்பது? கடைசியில் அவள் அவனுக்கு எதிராய் முகத்தை திருப்பிக் கொண்டு, புன்னகைக்க, அது வெகு இயல்பான புகைப்படமாய் மாறியது.

திருமண நாள்

மணமகனையும் மணப்பெண்ணையும் மேடைக்கு அழைத்த புரோகிதர், அவர்களுக்கு திருமணத்தின்போது அணிய வேண்டிய உடைகளை கொடுத்து அணிந்து வரச் சொன்னார்.

அர்னவ் தயாராகி வந்தவுடன், காசி யாத்திரை சடங்கு துவங்கியது. அந்த சடங்கின்படி, தனக்கு பொருத்தமான பெண் கிடைக்காததால், வெறுத்துப்போன மணமகன், சன்னியாசியாகி காசிக்கு செல்வது என்று தீர்மானிக்கிறான். அதை தெரிந்து கொண்ட ஒருவன், என் சகோதரியை உனக்கு மணமுடித்து வைக்கிறேன் காசிக்கு செல்லாதே என்று திரும்ப அழைத்து வருவது போன்ற சடங்கு அது. காசிக்கு செல்லாமல் திரும்பி வரும் மணமகனுக்கு, மணப்பெண்ணின் சகோதரன் பாத பூஜை செய்வதும், அவனுக்கு மணமகன் தங்க சங்கிலியோ மோதிரமோ அணிவிப்பதும் அதன் சாராம்சம்.

இங்கு, குஷிக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லாததால், அர்னவ்க்கு பாத பூஜை செய்ய தயாராக இருந்தான் அஸ்வின்.

அஸ்வின் கூற வேண்டியது என்ன என்பதை புரோகிதர் அவனுக்கு கற்றுக் கொடுத்தார்.

"எங்க வீட்ல ஒரு அழகான பொண்ணு இருக்கா. நீங்க காசிக்கு போக வேண்டாம். வந்து எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லு" என்றார் அவர்.

"ஐயர் தாத்தா, அது அர்னவ் அண்ணாவுக்கு ஏற்கனவே தெரியும். அவருக்கு குஷி அக்காவை ரொம்ப பிடிக்கும். எப்போ பார்த்தாலும் அவங்க பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருப்பாரு... (என்ற அஸ்வின், சுருதியை பார்த்து) நான் சொல்றது கரெக்ட் தானே சுருதி?" என்றான்.

"ஆமா... உங்களுக்கு சந்தேகமா இருந்தா, நீங்க அவரை காசிக்கு போக சொல்லுங்க.  அவர் நிச்சயமா போக மாட்டாரு..." என்ற சுருதி, கலகலவென சிரிக்க அந்த பொடிசுகள் இரண்டும் ஹை ஃபை தட்டிக் கொண்டன.

அவர்களை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் வெடித்து சிரிக்க, சங்கடத்தில் நெளிந்தான் அர்னவ். அந்த பொடிசுகள் அவனது ரகசியத்தை இப்படி போட்டு உடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"அர்னவ்க்கு குஷியை பிடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். அதனால தானே அவங்களுக்கு கல்யாணம் நடக்குது... இது ஒரு சடங்கு" என்று சிரித்தார் புரோகிதர்.

அர்னவ்வின் கால்களை கழுவி, பாத பூஜை செய்தான் அஸ்வின். அவன் விரலில் ஒரு தங்க மோதிரத்தை மாட்டி விட்டான் அர்னவ். அது அஸ்வினுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது. சம்பிரதாயப்படி குடை பிடித்து அர்னவ்வை மேடைக்கு அழைத்து வந்தான் அஸ்வின்.

குஷி மேடைக்கு அழைக்கப்பட்டாள். அஞ்சலியும், லாவண்யாவும் அவளை மேடைக்கு அழைத்து வந்தார்கள். சிவப்பு நிற பட்டுப்புடவையில், தமிழ் கலாச்சாரத்தை சுமந்து வந்த குஷியை பார்த்த அர்னவ், மெய் மறந்தான்.

அவர்கள் இருவரும், தங்களை நல்ல பிள்ளைகளாய் வளர்த்ததற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தங்கள் பெற்றரோருக்கு பாத பூஜை செய்தார்கள்.

குஷியை அர்னவ்வுக்கு கன்னிகா தானம் செய்து கொடுத்தார் ஷஷி. தன் உயிர் இருக்கும் வரை அவளை பேணி பாதுகாப்பேன் என்று அவருக்கு வாக்கு கொடுத்தான் அர்னவ்.

மட்டை உரிக்காத தேங்காயின் மீது வைக்கப்பட்டிருந்த திருமாங்கல்யம், அனைவரது ஆசியையும் பெற்று வந்த பிறகு, அர்னவ்விடம் நீட்டப்பட்டது. புரோகிதர் மந்திரங்களை உச்சரிக்க துவங்கினார். மங்கள வாத்தியம் இசை முழங்க, என்றென்றும் நிலைத்து நிற்கும் அன்பின் அடையாளமான திருமாங்கல்யத்தை, முதல் முடிச்சை, தம்பதிகளுக்காகவும், இரண்டாவது முடிச்சை குடும்பத்திற்காகவும், மூன்றாவது முடிச்சை சமுதாயத்திற்காகவும் இட்டு, குஷியின் கழுத்தில் கட்டினான் அர்னவ்.

பரவச நிலையை அடைந்தாள் குஷி. அவளது அல்லவ் அவனது கணவனாகி விட்டான் அல்லவா...! அவளது முகம் பேய் அறிந்தது போல் மாறியது,

"நீ என்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட" என்று அவள் காதில் அவன் கிசுகிசுத்த போது.

அவனை அவள் அதிர்ச்சியோடு ஏறிட, மக்கள் வீசிய அட்சதைகளுக்கு இடையில், அவன் ஒன்றும் அறியாதது போல் சாதாரணமாய் புன்னகைத்தான்.

குஷியின் நெற்றியில் குங்குமம் இடச் சொல்லி புரோகிதர் கூற, அவளது தலையை சுற்றி வளைத்து அவள் நெற்றியில் குங்குமம் இட்டான், *எப்பொழுதும் நான் உனக்கு பாதுகாவலனாய் இருப்பேன்* என்பதை உணர்த்தும் வகையில்.

மணமக்கள் தங்கள் கழுத்தில் இருந்த மலர் மாலைகளை மூன்று முறை மாற்றிக் கொண்ட பின், தங்கள் சிறு விரல்களை இணைத்துக் கொண்டு, மூன்று முறை அக்கினியை வலம் வந்து, இல்லறத்தில் அடி எடுத்து வைத்தார்கள்.

குஷியின் கால் விரலில் அணிவித்து விடுவதற்கான மெட்டியை அர்னவ்விடம் கொடுத்தார் ரத்னா. அவளது கால் விரலை பிடித்து தூக்கி அம்மியின் மீது வைத்து, அதை அவள் கால் விரலில் அணிவிக்க வேண்டும். அது, மணமக்கள் இருவரும் எந்த பிரச்சனைக்கும் அசைந்து கொடுக்காமல் அம்மியை போல் தங்கள் உறவில் உறுதியாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகும். அதேபோல, அம்மிக்கல் வீட்டின் நிலை வாசலுக்கு இணையானது, மணமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல, படி தாண்டும்போது, அவர்கள் அந்த குடும்பத்தில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து, அதற்கு பங்கம் வராமல் நடந்து கொண்டு, மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்ற அர்த்தத்தையும் அது தருகிறது.

"குஷி, உன் காலை நல்லா அழுத்தமா தரையில பதிச்சு வச்சுக்கோ. அவ்வளவு சீக்கிரமா உன் காலை அவனை எடுக்க விட்டுடாத. அவனோட குடும்ப பொறுப்பை ஏத்துக்கிறது ரொம்ப பெரிய விஷயம். அதை அவனை ஈசியா செய்ய விட்டுடாத" என்று சிரித்தார் அரவிந்தன்.

அதைக் கேட்டு புன்னகை புரிந்த அர்னவ், குனிந்து அவள் பாதத்தை பற்றினான். அவனது அந்த ஒரு தொடுதல் போதுமானதாய் இருந்தது, அவளை நிலைகுலைய செய்ய! அதை உணர்ந்த அவன், தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்து புன்னகைத்தான். திடுக்கிட்ட குஷி, தன் காலை நிலத்தில் அழுத்தமாய் ஊன்றிக் கொண்டாள். அவள் காலை மெல்ல அவன் சுரண்ட, சட்டென்று அவளது இறுக்கம் தளர்ந்தது. அவள் காலை எடுத்து அதை அம்மியின் மீது வைத்து, அன்பாய் மெட்டியை அணிவித்தான் அர்னவ்.

மணமேடையில் நடத்தப்பட வேண்டிய கடைசி சடங்கு அது. தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு குடத்தில் ஒரு மோதிரத்தை போட்டார் ரத்னா. மணமக்கள் அந்த மோதிரத்தை தேடி எடுக்க வேண்டும். நேரம் ஓடிக் கொண்டிருந்தது, இருவரும் மோதிரத்தை எடுக்கவில்லை. அவளை மோதிரத்தை தேட விடாமல் அவள் கையை பற்றிக் கொண்டிருந்தான் அர்னவ். விழி விரித்த குஷி தன் கையை விடுமாறு அவனுக்கு சைகை செய்தாள். அவன் முடியாது என்று தலையசைத்தான்.

"அரு, குஷி கையை விடு" என்றார் அரவிந்தன்.

அந்த திருப்பத்தை எதிர்பார்க்காத அவன் சட்டென்று அவள் கையை விட்டான். அவன் ஏற்கனவே எடுத்துவிட்ட மோதிரத்தை அவள் கையில் கொடுத்தான். குழப்பத்துடன் தன் கையை உயர்த்தினாள் அவள்.

"என் மருமக ஜெயிச்சுட்டா... வாழ்நாள் முழுக்க அவ தான் தன் புருஷனை ஆளப்போறா...!" என்றார் ரத்னா.

அர்னவ்வை குஷி கிண்டலாய் பார்க்க, தன் கன்னத்தை தொட்டு அவளுக்கு தன் முத்தத்தை நினைவு படுத்தினான் அவன். முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் குஷி.

"அப்பா, அவன் குஷியோட கையை பிடிச்சிக்கிட்டு இருக்கான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் நந்தா.

"இந்த ஆட்டத்தை நாங்களும் ஆடி இருக்கோம் மகனே!" என்றார் அரவிந்தன் சிரித்தபடி.

அதைக் கேட்டு சிரித்த நந்தா,

"அது தானே பார்த்தேன்... உங்களை மாதிரி தானே இருப்பான் உங்க பிள்ளை...!" என்றான்.

"உங்க ஆட்டத்துல யாருப்பா ஜெயிச்சது?" என்றாள் லாவண்யா.

"சந்தேகம் இல்லாம ரத்னா தான். ஆம்பளைங்களுக்கு பரந்த மனசு. நாங்க வேணுமுன்னே விட்டுக் கொடுத்துடுவோம், அரு இப்போ செஞ்சது மாதிரி...!" என்றார்.

"அப்படின்னா அண்ணா வேணும்னே விட்டுக் கொடுத்தாருன்னு சொல்றீங்களா?"

"ஆமாம், அவன் குஷியை ஃபீல் பண்ண வைக்க மாட்டான்...!"

அது குஷியின் காதிலும் விழுந்தது. அவன் அவளிடம் மோதிரத்தை கொடுத்தது அவளை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்காகவா? தனது நண்பர்களிடமிருந்து திருமண வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்த அவனைப் பார்த்த குஷி, எல்லாம் சரிதான், ஆனால் அவன் மனதில் இருப்பதை மட்டும் ஏன் சொல்லாமல் இருக்கிறான்? என்று நினைத்தாள்.

தங்கள் பெற்றோரிடம் ஆசி பெற்றனர் மணமக்கள்.

"வாழ்க்கை ஒரு பேலன்ஸ் ஷீட் மாதிரி. நீங்க ரெண்டு பேருமே ஈக்குவலா பேலன்ஸா இருந்தா தான் அதுவும் பேலன்ஸா இருக்கும்" என்றார் அரவிந்தன்.

"அவர் ஒரு பேங்க் மேனேஜர் அப்படிங்கறத நிரூபிக்கிறார் பாரு. ஆசிர்வாதம் பண்றதை கூட பேங்க்கை வச்சே பண்றாரு" என்று சிரித்தார் ரத்னா.

ஷஷியை பார்த்த கரிமா,

"நீங்க என்ன சொல்லி ஆசீர்வாதம் பண்ண போறீங்க?" என்றார்.

"வாழ்க்கை ஒரு கப்பல் மாதிரி. நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருந்தா தான், அதை எதிர்த்து வர புயல்ல இருந்து காப்பாத்தி அதை கரை சேர்க்க முடியும்" என்றார்.

சுற்றி இருந்தவர்கள் குபீர் என்று சிரிக்க, அர்னவ்வும் குஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாழ்க்கை... இருவரும் ஒன்றாய் இணைந்து அதை எதிர்கொள்ள வேண்டும்...! ஆனால் இவர்களோ, ஒருவருக்கு ஒருவர் எதிராய் இருக்கிறார்கள்...! இருவரும் இணைந்து அதை எதிர்கொள்வார்களா?  காலம் தான் பதில் கூற வேண்டும்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top