27 புதியவன்
27 புதியவன்
தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த குஷி, தேநீர் பருகியபடி கடலை பார்த்துக்கொண்டு அர்னவ்வை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது சமீபத்திய நடவடிக்கைகள் அவளுக்கு நடுக்கத்தை தந்தது. எவ்வளவு தான் யோசித்தாலும் அவளது மூளை வேலை செய்யவே இல்லை.
திடீரென்று அவள் கண்ணில் கூரிய ஒளி தாக்கியதால், கண்களை மூடினாள். எவ்வளவு முயன்றபோதும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. கண்ணாடியில் பட்டு பிரதிபலித்த சூரிய ஒளி தான் அவளை கண்களை திறக்க விடாமல் செய்தது. தன் கையால் அந்த ஒளியை மறைத்துக் கொண்டு கண்களை திறந்தாள். தன் கையில் ஒரு கண்ணாடியுடன் அடுத்த பால்கனியில் சிரித்தபடி நின்றிருந்தான் அர்னவ். அவனைப் பார்த்து வாயை பிளந்தாள் அவள்.
அங்கிருந்து செல்லலாம் என்று அவள் திரும்பிய போது, அவளது கைபேசி ஒரு குறுந்தகவலை சுமந்து வந்து க்றீச்சிட்டது. அது அர்னவ்விடமிருந்து வந்திருந்ததை பார்த்தபோது அவளுக்கு வியப்பாய் இருந்தது. அதே வியப்போடு அவள் அவனைப் பார்க்க, அந்த தகவலை திறந்து படி என்பது போல் சைகை செய்தான். விருப்பம் இல்லாதவள் போல் அதை திறந்து படித்தாள்.
*எனது உண்மை சுரூபத்தை நான் பிரதிபலிக்க துவங்கி விட்டால்,
நீ என் முன் நிற்க முடியாமல் இப்படித்தான் ஓட வேண்டும்*
அது அவளது ஈகோவை தட்டிப் பார்த்தது. மீண்டும் தன் பழைய இடத்தில் வந்து தெனாவெட்டாய் நின்று கொண்டாள். அதைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரித்தான் அவன். மீண்டும் அவனிடமிருந்து ஒரு தகவலை பெற்றாள் அவள்.
*பார்த்தாயா, உன்னை
எப்படி என் விருப்பப்படி இங்கேயே நிற்க வைத்தேன் என்று...?*
அவளுக்கு பற்றி கொண்டு வந்தது. மீண்டும் அவளுக்கு ஒரு தகவல். அவனை அவள் எள்ளலுடன் பார்க்க, அவன் சாதாரணமாய் புன்னகைத்தான். தனக்கு துளியும் விருப்பமே இல்லை என்பது போல் அந்த தகவலை அவள் திறந்து படித்தாள்.
*எப்பொழுதும் என்னுடன்
இருப்பேன் என்று கூறு...
என் அருகிலோ... மடியிலோ... இறுக்கமான என் அணைப்பிலோ...*
அவள் உடலில் இருந்த ஒட்டுமொத்த சக்தியையும் இழந்துவிட்டது போல் தோன்றியது அவளுக்கு. அவளது கைகள் நடுங்கியதை அவன் கவனித்தான். அவள் உடல் *குப்* என்று வியர்த்தது. தன் பதற்றத்தை மறைக்க அவளால் இயலவில்லை.
அவனை திரும்பியும் பார்க்காமல் நேராய் வீட்டிற்க்குள் சென்றாள் அவள், மீண்டும் குறுந்தகவல் வந்ததை உணர்த்தும் சத்தத்திற்கு செவிமடுக்காமல்.
உள்ளே வந்த பிறகு அவசரமாய் அந்த தகவலை திறந்து பார்த்தாள். எப்பொழுது வேண்டுமானாலும் அழுது விடுவது போல் இருந்த அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள்.
அவளுக்கு முத்தம் கொடுக்கும் ஸ்மைலியை அனுப்பி இருந்தான் அர்னவ்.
மறுநாள்
ரத்னா, கரிமா மற்றும் லாவன்யாவிற்கு ஃபேசியல், பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர் செய்து விட தனது உதவிக்காக இரண்டு பேரை தன்னுடன் அழைத்து வந்திருந்தாள் பியூட்டிஷியன். அந்த உதவியாளர்கள் தங்கள் வேலையை கவனிக்க, குஷிக்கு மெஹந்தி வரைந்துவிட தயாரானார் அந்த பியூட்டிஷியன்.
அவளுக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்யச் சொல்லி குஷியிடம் ஒரு மெஹந்தி புத்தகத்தை வழங்கினார் அவர். அர்னவ்வின் முதல் எழுத்தை எழுத வேண்டும் என்பதற்கு ஏற்றார் போல் ஒரு டிசைனை அவள் தேர்வு செய்தாள். ஆம் வேண்டுமென்றே தான். அவள் கையில் மெஹந்தி வரைய துவங்கினார் அந்த பியூட்டிஷியன். முழுதாய் வரைந்து முடித்த பிறகு நிறுத்திய அவர், மாப்பிள்ளையின் பெயரை கேட்பதற்கு முன்பாக, தானாகவே,
"A எழுதுங்க" என்றாள் குஷி.
அந்த எழுத்தை தன் கையில் எழுதிக் கொள்ள வேண்டும் என்பது அவளது கனவாயிற்றே. அர்னவ்வின் முதல் எழுத்தை அவளது கையில் வரைந்து தன் வேலையை முடித்தார் அந்த பியூட்டிஷியன். தன் கையில் இருந்த அவனது முதல் எழுத்தை பார்த்து ரசித்து சிரித்தாள் அவள். எப்படிப்பட்ட உன்னதமான உணர்வு அது...! அவளது மனம் கவர்ந்தவனின் முதல் எழுத்து அவளது கையில் இருக்கிறது... அதுவும் அது அவர்கது திருமணத்திற்காக வரையப்பட்டிருக்கிறது...! விரைவிலேயே, அவள் அவனுடையவளாக போகிறாள் என்பதை குறிக்கிறது அது.
சிரித்தபடி தன் தலையை உயர்த்திய அவளது புன்னகை, வரண்டு போனது, அர்னவ் தன் முகத்தை சுருக்கி அவளை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து. அவள் தன் முதல் எழுத்தை அவள் கையில் எழுதுவாள் என்பது தான் அவனுக்கு தெரியாதே...! அதை எழுத மாட்டேன் என்று அவள் தான் நேரடியாகவே கூறினாளே...!
அவசரமாய் பெண்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்த குஷி, தன் கையில் இட்ட மெஹந்தி காயும் வரை அவர்களுடன் இருந்து கொண்டாள்.
"உங்க யாருக்காவது காபி வேணுமா? நான் எனக்கு போட்டுக்க போறேன்" என்றாள் குஷி.
"எங்க யாருக்கும் இப்போ வேண்டாம். நாங்க அப்புறமா குடிக்கிறோம். நீ உனக்கு போட்டுக்கோ" என்றார் ரத்னா.
"அப்போ சரி" என்று தனக்கு காபி போட சமையலறையை நோக்கி சென்றாள்.
காப்பியை கலந்து ஒரு குவளையில் அதை ஊற்றினாள். அப்பொழுது,
"எனக்கும் ஒரு கப் காபி கொடு" என்றான் அங்கு வந்த அர்னவ்.
அவனை திரும்பிப் பார்த்த குஷி, வழக்கம் போல் அவனுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காமல், தான் கலந்த காப்பியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் வழியை மறித்தான் அவன்.
"நான் உன்கிட்ட என்னமோ கேட்டேன்... உனக்கு காதுல விழலையா?"
"உனக்கு வேணும்னா நீயே போட்டுக்கோ"
"எனக்கு வேண்டியதை நானே செஞ்சுக்கிட்டா, அப்புறம் என் பொண்டாட்டி என்ன செய்யப் போறா?" என்றான் நமுட்டு சிரிப்புடன்.
"நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல"
"தாலி கட்ட வேண்டியது மட்டும் தான் பாக்கி... மத்தபடி நீ எனக்கு அரை பொண்டாட்டி ஆயிட்ட"
"நான் உனக்கு முழு பொண்டாட்டியாவே ஆனாலும் கூட, எதுக்காகவும் என்னை நீ கட்டாயப்படுத்த முடியாது"
"இப்போ நீ எதுக்காக இப்படி ஓவரா ரியாக்ட் பண்ற? நான் உன்னை காபி தானே கேட்டேன்?"
"காபியோ என்னவோ... எதையும் நான் உனக்காக செய்ய மாட்டேன். ரொம்ப மேல பறக்கிறதை நிறுத்து" என்றவள் தன்னை அறியாமல் தன் கையை நீட்டி பேசினாள்.
தனது முதல் எழுத்தை அவள் தன் கையில் வரைந்திருந்ததை பார்த்த அவனது முகம் பிரகாசம் அடைந்தது.
"என்னோட பேரை உன் கையில எழுத மாட்டேன்னு சொன்ன...? இப்போ என்ன ஆச்சு? அதை எழுதாம இருக்க, உன்னை உன்னாலேயே கட்டுப்படுத்த முடியலையா?" அவன் தன் கையில் இருந்த மெஹந்தியை பார்த்து விட்டான் என்பது அவளுக்கு புரிந்து போனது. இதற்குப் பிறகு அதில் மறக்க ஏதும் இல்லை.
"இங்க பாரு... நம்ம ரெண்டு பேரும் ஒரே நிலைமையில தான் இருக்கோம். நீ என்னை உங்க அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்கிற... அதே மாதிரி தான் நானும் எங்க அம்மாவுக்காக உன் பேரை கையில எழுதிக்க வேண்டியதா போச்சு...! அவ்வளவு தான். புரிஞ்சுதா?"
"பாக்கலாம்... உங்க அம்மா சொல்றாங்கன்னு நீ இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறேன்னு... முக்கியமா கல்யாணத்துக்கு பிறகு..." என்றான் ஆளைக் கொல்லும் புன்னகையுடன்.
அவள் கையில் இருந்த காபி குவளையை பறித்து, அதை பருகினான்.
"ஏய் அதை குடிக்காத... அதுல சர்க்கரை போட்டிருக்கேன்" என்றாள் பரபரப்பாக.
அதைக் கேட்டு முகத்தை சுருக்கிய அர்னவ்,
"என்னது? சக்கரை போட்டிருக்கியா? இதுல சர்க்கரையே இல்லையே...!" என்றான்.
"சக்கரை இல்லையா? நான் அதுல ஒரு ஃபுல் ஸ்பூன் சர்க்கரை போட்டேன்"
"நான் என்ன பொய்யா சொல்றேன்? உனக்கு சந்தேகமா இருந்தா நீயே குடிச்சு பாரு..."
அந்த காப்பியை அவனே அவளை குடிக்க செய்தான். அந்த காபியில் வேண்டிய சர்க்கரை இருந்தது. அவனைப் பார்த்து முகத்தை சுளித்தாள் அவள்.
"நீ சரியான புளுகன். அதுல சர்க்கரை இருக்கு"
மீண்டும் அதை குடித்த அர்னவ், தன் புருவங்களை உயர்த்தி,
"ஆமாம்... இதுல சர்க்கரை இருக்கு. அது எப்படி நடந்தது? ஒருவேளை, உன்னோட அழகான லிப்ஸ் பட்டதால அது ஸ்வீட்டா மாறிடுச்சோ?"
குஷி திகைத்து நின்றாள். அவளது இதயம் பல மடங்கு வேகமாய் துடிக்க துவங்கியது. அவள் அங்கிருந்து ஓடிவிடலாம் என்று நினைத்தபோது அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
"ரொம்ப நாளுக்கு பிறகு, நம்ம ரெண்டு பேரும் ஒரே காபியை ஷேர் பண்ணியிருக்கோம்..." என்று மீண்டும் அதை பருகினான்.
"நீ என்னை பொய் சொல்லி குடிக்க வச்ச" என்றாள் பல்லை கடித்த படி.
"நான் நெனச்சா, பொய் சொல்லாமலேயே உன்னை எனக்காக எது வேணா செய்ய வைக்க முடியும்"
அவளது கண்கள், அதிர்ச்சியில் பெரிதாயின.
"என்கிட்ட ஃப்லிர்ட்( காதல் விளையாட்டு) பண்றதை நிறுத்து"
"தேங்க் காட்... ஒரு வழியா விஷயத்தை புரிஞ்சுகிட்ட. இதுக்கு அப்புறம் நான் ஃப்ரீயா அதை செய்யலாம்"
"என்னோட அனுமதி இல்லாம நீ எதையும் செய்ய முடியாது. ஞாபகத்துல வச்சுக்கோ"
அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் கழுத்தை ஏதோ இறுக்குவது போல் இருந்தது. அவளது துப்பட்டாவை பற்றி கொண்டிருந்தான் அர்னவ். அதை பார்த்து அவள் கிலி பிடித்தது போல் நின்றாள். அவன் திடீரென்று எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்?
"என் ஷாலை விடு..." என்றாள் தடுமாற்றத்துடன்.
அந்த துப்பட்டாவின் மூலம் அவளை தன்னை நோக்கி இழுத்தான்.
"உன்னோட அனுமதி இல்லாம நான் எதுவுமே செய்ய முடியாதுன்னு சொன்ன?"
"என்னை விடு, அர்னவ்..."
"ஏன்?"
"விடுன்னா விடு..."
அவளை மேலும் தனக்கு நெருக்கமாய் இழுத்து,
"உன்னோட அல்லவ் திரும்ப வேணும்னு நீ தானே கேட்ட? நீ என்ன நெனச்ச, சாக்லேட்டை பிடுங்குறதும், தலைமுடியை பிடிச்சி இழுக்கிறதும், அவன் பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தானோ, அப்படியே இப்பவும் இருப்பான்னு நினைச்சியா? எனக்கும் கூட அதெல்லாம் செய்யணும்னு ஆசை தான்..." என்ற அவனது குரல், அவள் காதின் வழியாக உள்ளுக்குள் சென்று நடுக்கத்தை தந்தது. அவன் கூறுவதற்கு என்ன அர்த்தம்?
"நான் உன்னை பத்தி எதுவும் நினைக்க விரும்பல"
"அப்படியா?"
அவள் அவனுக்கு பதில் கூறுவதற்கு முன், அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளுக்கு அதிர்ச்சி அளித்தான். கீழே விழுந்து விடுமோ என்னும் அளவிற்கு அவளது கண்கள் பெரிதாயின.
"இந்த நிமிஷத்திலிருந்து என்னை பத்தி நினைக்காம உன்னால இருக்கவே முடியாது"
அவனைப் பிடித்து தள்ளிவிட்டு, சமையலறையை விட்டு ஓடிச் சென்றாள் குஷி... அவனை நினைத்தபடியே தான்.
அவள் சட்டென்று அமைதியாகி போனது, அவளுடைய மனம் கவர்ந்த பெண்களுக்கு குழப்பத்தை தந்தது. சற்று முன்பு வரை அவள் நன்றாக தானே இருந்தாள்? திடீரென்று அவளுக்கு என்ன ஆகிவிட்டது? அவள் மீண்டும் மீண்டும் தன் கன்னத்தை தொடுவதை கவனித்த லாவண்யா,
"குஷி உனக்கு என்ன ஆச்சு?" என்றாள்.
"எனக்கு என்ன ஆச்சு? நான் நல்லா தான் இருக்கேன்..." என்றாள் தடுமாற்றத்துடன்.
"எதுக்காக சும்மா சும்மா உன் கன்னத்தையே தொட்டுக்கிட்டு இருக்க?"
"ஒன்னும் இல்லையே... ஒன்னும் இல்ல... " என்றாள் பதற்றத்துடன்.
"சரி சரி பதறாத... உனக்கு திடீர்னு என்ன ஆச்சோ... கிச்சன்ல ஏதோ நடந்திருக்கு..."
"ஒன்னும் நடக்கல. நான் வீட்டுக்கு போறேன். எனக்கு தலை வலிக்குது" என்று அங்கிருந்து சென்றாள் குஷி.
......
குட்டி போட்ட பூனையைப் போல் தன் அறையில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தாள் குஷி. அர்னவ் கூறியது போல் அவளால் அவனை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை... ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. அவனது திடீர் தலைகீழ் மாற்றம் அவளுக்கு நடுக்கத்தை தந்தது.
*அவனுக்கு என்ன ஆச்சு? அவன் மனசுல என்ன தான் இருக்கு...? எவ்வளவு தைரியம் இருந்தா அவன் எனக்கு முத்தம் கொடுத்திருப்பான்...! ஆனா என்னால ஒன்னும் செய்ய முடியலையே... ஏன் அப்படி? என்னோட அல்லவ் எனக்கு திரும்ப வேணும்னு நான் நெனச்சேன் தான். ஆனா அவன்கிட்ட நான் இப்படி ஒரு கம் பேக்கை எதிர்பார்க்கலையே. அவனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே...! கல்யாணத்துக்கு பிறகும் அவன் இப்படியே ஏதாவது செஞ்சா நான் என்ன செய்யறது...? ஒருவேளை, இதுக்கு மேலயும் போனா...? ( அவள் எச்சில் விழுங்கினாள்) ஆனா ஏன் அவனோட செய்கை என் வயித்தை கலக்குது? ஏன் என்னால நார்மலா இருக்க முடியல? நான் இதுக்கு முன்னாடி எப்பவும் இப்படியெல்லாம் இருந்ததே இல்லையே? அவன் சொன்னதெல்லாம் உண்மையா இருக்குமோ? அவன் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி இப்போ இல்லைன்னு சொன்னானே... அப்படின்னா அவன் புதுசாவும் வித்தியாசமாவும் இருப்பானா? அப்படின்னா நான் எப்படி அவனை சமாளிக்க முடியும்? அவன் என்கிட்ட ஃப்லிர்ட் பண்றானே... இதை நான் அவன்கிட்ட கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே... அவன் ஏன் அப்படி ஒரு குரலில் பேசுறான்? அவன் பேசினது ஏன் என் மனசுல இப்படி சதா அடிச்சுக்கிட்டே இருக்கு? அவனை சமாளிக்க வழி தேட சொன்னானே... கல்யாணத்துக்கு பிறகு நான் அவன்கூட ஒரே ரூம்ல தானே இருக்கணும்...? கடவுளே! அவனை சமாளிக்கிற சக்தியை எனக்கு கொடு. ஒன்னு மட்டும் நிச்சயம். அவன் என்னை காதலிக்கிறான்னு சொல்ற வரைக்கும் நான் அவனை ஏத்துக்க போறதில்ல. அவன் என்கிட்ட அதை சொல்லித் தான் ஆகணும்..." என்று முடிவெடுத்தாள் அவள்.
அவள் என்னவோ முடிவு எடுத்துவிட்டாள் தான்... ஆனால் அதை சாதிப்பது அவ்வளவு சுலபமா? திருமணத்திற்கு பிறகு, *கணவன் அல்லவ்வை* எதிர்கொண்டு அவ்வளவு சுலபமாய் மீண்டு விடுவாளா அவள்? குறும்புத்தனத்தை மொத்தமாய் குத்தகை எடுத்து விட்டது போல் மாறி போயிருந்த அவனுக்கு முன்னால் அவள் என்ன செய்யப் போகிறாள்? நாமும் தான் பார்ப்போமே...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top