25 பிடிவாதம்
25 பிடிவாதம்
அர்னவ்காக சிற்றுண்டியும் மதிய உணவும் தயார் செய்து கொண்டிருந்தார் ரத்னா. அன்று முகூர்த்த நாள் என்பதால், அவர்கள் திருமணத்திற்காக புடவையும் தாலியும் வாங்குவது என்று முடிவு செய்திருந்தார்கள். அப்பொழுது, தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தார் அவர். அவர் பின்னால் திரும்பிப் பார்க்க, அவரைப் பார்த்து புன்னகை புரிந்தான் அங்கு நின்றிருந்த அர்னவ்.
"அரு உனக்கு ஏதாவது வேணுமா?"
"அம்மா, இன்னைக்கு நீங்க தாலியும் புடவையும் வாங்க போறீங்க தானே?"
"ஆமாம், உன் ஒருத்தனை தவிர நாங்க எல்லாரும் போக போறோம். நீயும் எங்க கூட வந்தா நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்"
"இல்லம்மா. எனக்கு ஆஃபீஸ்ல ரொம்ப முக்கியமான வேலை இருக்கு (என்று தன் பாக்கெட்டில் இருந்து ஏடிஎம் கார்டை எடுத்த அவன்) குஷியோட புடவையும் தாலியும் வாங்க இதுலயிருந்து பணம் எடுத்துக்கோங்க" என்றான்.
உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட அவர்,
"இதுக்கு என்ன அவசியம், அரு? எங்ககிட்ட பணம் இல்லன்னு நினைக்கிறியா?" என்றார் வேண்டுமென்றே.
"இது காசு பத்தின விஷயம் இல்லம்மா. எல்லா செலவும் நீங்க தானே செய்றீங்க...! என்னோட கான்ட்ரிப்யூஷனும் என் கல்யாணத்துல இருக்கட்டுமேன்னு தான்..." என்றான் தயக்கத்துடன்.
"அப்படின்னா ஒன்னு பண்ணு... மளிகை கடைக்கு போயி, அவங்களுக்கு செட்டில் பண்ண வேண்டிய பில்லை கொடுத்துடு. அது இன்னும் உனக்கு திருப்தியை தரும்" என்றார் முகத்தை சீரியஸா வைத்துக் கொண்டு.
வாயடைத்து நின்ற அவன், இதற்கு மேல் அவரிடம் பொய்யுரைக்க முடியாது என்பதை உணர்ந்தான்.
"நீங்க என்ன செலவு வேணாலும் செஞ்சுக்கோங்க. ஆனா..."
"ஆனா?"
"குஷி எனக்கு சொந்தமாகும் போது, அவ நான் வாங்கிக் கொடுத்த புடவையில இருக்கணும்னு நான் விரும்புறேன் மா"
அதைக் கேட்டு புன்னகைத்த அவர்,
"அதை சொல்ல ஏன் இவ்வளவு தயங்குற? இதை செய்ய விரும்ப உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உண்மையை சொல்லப் போனா, அந்த உரிமை உனக்கு மட்டும் தான் சொந்தமானது. உன் மனசுல இருக்கிறதை வெளியில சொல்ல தயங்காத, அரு. அது உனக்கு ஈகோயிஸ்டிக் அப்படிங்கிற பெயரை தான் கொடுக்கும்"
"அதைப்பத்தி எனக்கு கவலை இல்ல மா"
"குஷியை பத்தி கூட உனக்கு கவலை இல்லையா? அவ உனக்கு முக்கியம் இல்லையா? இல்லைன்னு சொன்னா, இந்த கல்யாணத்தை தயவு செய்து நிறுத்திடு ( என்ற அவரை அவன் அதிர்ச்சியோடு பார்த்தான்) உனக்கு அவளைப் பத்தி எந்த கவலையும் இல்லன்னா, இந்த கல்யாணத்தை நடத்துறதுல எந்த அர்த்தமும் இல்ல. அவ தான் உன்னோட வாழ்க்கையை பகிர்ந்துக்க போறவ. ஒரு பொண்ணு தன் புருஷன்கிட்ட எல்லாத்தையும் விட அதிகமா எதிர்பார்க்கிறது அன்பையும் அக்கறையையும் தான். அதைவிட பெரிய சந்தோஷத்தை வேற எதுவும் கொடுத்துட முடியாது. அது தான் திருமணம் அப்படிங்கிற புனித பந்தத்தை தூக்கி நிறுத்துற தூண். (அவனது முகவாய்க்கட்டையை தொட்ட அவர்) அவளை தயவு செய்து ஏமாத்திடாத. தன்னோட பழைய அல்லவ் கிடைக்க மாட்டானான்னு அவ ஏங்குகிறா. நீயும் உன்னோட டின்டின் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தேன்னு எனக்கு தெரியும். இந்த கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம் போதும், அரு. பழசை எல்லாம் மறந்துட்டு, நீ ஒளிஞ்சுகிட்டு இருக்கிற கூட்டை உடைச்சிக்கிட்டு தயவு செய்து வெளியில வா. இல்லனா, உன்னோட மௌனம் உன் வாழ்க்கையை ரொம்ப தூரம் பாதிக்கும். அது நடக்கவே கூடாதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, அது உன்னோட வாழ்க்கை மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. இப்போ அதுல குஷியும் இருக்கா. ரெண்டு குடும்பத்தோட சந்தோஷம் இருக்கு. அதை பத்தி நினைச்சு பாரு"
சரி என்று தலையசைத்த அவன், சமையலறையை விட்டு வெளியேறினான். தன் கையில் இருந்த அன் ஏடிஎம் கார்டை பார்த்து புன்னகை புரிந்தார் ரத்னா.
*குஷி அவன் பொண்டாட்டியா ஆகும் போது அவன் வாங்கிக் கொடுத்த புடவையை கட்டிக்கிட்டு இருக்கணுமாம்...! மனசுக்குள்ள எவ்வளவு ஆசை இருக்கு பாரு* என்று புன்னகைத்தார்.
புடவையும் தாலியும் வாங்க, அர்னவ் அவர்களுடன் செல்லவில்லை என்றாலும், அவனது மனம் என்னவோ அவர்களையே நினைத்துக் கொண்டிருந்தது. புடவையும் தாலியும் வாங்க அவனது ஏடிஎம் கார்டை அவனது அம்மா வாங்கிக் கொண்டது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. தன் கைபேசியை எடுத்து ரத்னாவிற்கு ஃபோன் செய்தான். அவர் அந்த அழைப்பை ஏற்றார்
"ஷாப்பிங் முடிஞ்சிடுச்சா மா?"
"இன்னும் இல்ல"
"இப்போ எங்க இருக்கீங்க?"
"ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ்"
"தாலி வாங்கியாச்சா?"
"இன்னும் இல்ல. புடவை எடுத்த பிறகு தான் தாலி வாங்கணும். அதை வச்சுக்கிட்டு இங்கேயும் அங்கேயும் அலைஞ்சுகிட்டு இருக்க கூடாது"
"ஓஹோ"
"நான் என்ன செய்றேன்னு உனக்கு தெரியுமா?"
"என்ன?" என்றான் ஆர்வத்தை காட்டிக் கொள்ளாமல்.
"என் மருமகளை ரசிச்சுக்கிட்டு இருக்கேன். நம்ம ட்ரெடிஷனல் புடவையில அவ எவ்ளோ அழகா இருக்கா தெரியுமா!"
"அவ புடவை கட்டியிருக்காளா?"
"நீ அதை பார்க்கணுமா? நான் உனக்கு போட்டோ அனுப்புறேன்" என்று அழைப்பை துண்டித்தார். குஷியின் புகைப்படத்தை காண காத்திருந்தான் அர்னவ். ஆனால் அவனுக்கு ரத்னாவிடமிருந்து எந்த புகைப்படமும் வரவில்லை. வேண்டுமென்றே அவனுக்கு அதை அனுப்பவில்லை அவர். அவன் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறான் என்று பார்க்க வேண்டும் அவருக்கு.
மாலை
அர்னவ் அலுவலகத்திலிருந்து வருவதை கண்ட அவர் சாதாரணமாய் கேட்டார்,
"அரு, காபி போட்டுத் தரவா?"
"ஆங்... எப்போ வந்தீங்க?"
"மூணு மணிக்கு வந்தோம்"
"குஷியோட புடவையை யாரு செலக்ட் பண்ணது?"
"குஷி தான் பண்ணா. அவ தானே அதை கட்டிக்க போறவ? இரு நான் உனக்கு அந்த புடவையை காட்டுறேன்"
"நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க"
"என்ன?" என்றார் புரியாதது போல்.
"குஷியோட போட்டோவை அனுப்புறேன்னு சொன்னீங்க"
"அந்த போட்டோ உனக்கு கிடைக்கலையா?"
தோள்களை குலுக்கினான் அவன். தன் கைபேசியை எடுத்து பார்த்த அவர்,
"அடடா... இன்டர்நெட்டை ஆன் பண்ணவே இல்ல" சாதாரணமாய் கூறிவிட்டு அதை ஆன் செய்தார்.
அந்த புகைப்படம் அவனை சென்றடைந்தது. மிகவும் ஆபத்தான பெண்மணி ஒருவர், தன் முன்னாள் நின்று அவனை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவனுக்கு மறந்து போனது. மெல்ல கண்களை இமைத்து, மென்று விழுங்கினான் அவன். அவனால் கண்களை எடுக்கவே முடியவில்லை. அவனுக்கு வேண்டிய நேரத்தை அளித்து அமைதியாய் நின்றார் ரத்னா. அவன் இருக்கும் நிலையை பார்த்தால், இப்பொழுது இது முடிவுக்கு வருவதாய் அவருக்கு தோன்றவில்லை. அவனுக்கு பக்கத்தில் வந்து, அவன் அருகில் நின்று, அவன் தோளில் கை வைத்த படி அவரும் அந்த புகைப்படத்தை பார்த்தார். அப்பொழுது தான் தன் சுயநினைவு பெற்றான் அவன்.
"அந்த போட்டோவுல அப்படி என்ன இருக்குன்னு நீ அதை இவ்வளவு நேரமா ரசிச்சிட்டு இருக்க?"
தன் கைபேசியை சட்டென்று தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் அவன்.
"ஓஓஓஓ.... அதுல இருக்கிறது குஷி... சாரி சாரி... உன்னோட டின்டின்..."
அவன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவன் கையைப் பிடித்து நிறுத்தினார்.
"அதுல எந்த தப்பும் இல்ல. அவ சீக்கிரமே உனக்கு மனைவியாக போறவ. நீ அவளைப் பத்தி என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சுக்கிற எல்லா உரிமையும் அவளுக்கு இருக்கு. இப்படி செய்யாத அரு. எந்த ஒரு உறவுலயும் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய விஷயம் கம்யூனிகேஷன் கேப். உனக்கும் அவளுக்கும் நடுவுல ஏதோ ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு எனக்கு தெரியும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதை அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வா. அவளுக்கு நிம்மதியை கொடு... மிச்சத்தை அவ பாத்துக்குவா"
சரி என்று தலையசைத்து அங்கிருந்து சென்றான் அவன்.
தன் அம்மா கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் அர்னவ். அவர் கூறுவது தவறில்லை. மனதில் இருப்பதை எதற்காக அவன் மறைத்து வைக்க வேண்டும்? அவன் மனதை அவளிடம் திறந்து காட்டவில்லை என்றால், அவள் மீது அவன் கொண்டுள்ள காதலுக்கு தான் என்ன அர்த்தம்? அதை அவன் வெளிப்படையாய் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களுக்குள் ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திய அந்த ஒரு விஷயத்தை மட்டுமாவது அவன் தெளிவு படுத்தத் தான் வேண்டும். அதை திருமணத்திற்கு முன்பு செய்து விடுவது நல்லது. அதன் பிறகு அவள் முன்பு போல் அவனிடம் பழக துவங்குவாள்.
மறுநாள்
அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் அர்னவ். அப்பொழுது அங்கு குஷி வருவதைக் கண்டான்.
"குஷி, பிரேக்ஃபாஸ்ட் இங்க இருக்கு. சாப்பிடு. நான் கல்யாணத்துக்காக எல்லாரையும் கூப்பிட போகணும். சரியா?" என்றார் ரத்னா.
"ஒன்னும் பிரச்சனை இல்ல ஆன்ட்டி. நான் சாப்பிட்டுக்கிறேன். நீங்க கிளம்புங்க"
அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க, தங்கள் வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அரவிந்தனுடன் கிளம்பினார் ரத்னா. தனக்கு பிடித்த இட்லியும், புதினா சட்னியும் ரசித்து உண்டாள் குஷி. அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான் அர்னவ். அவன் பேச துவங்கினால், அவள் பாதியிலேயே சாப்பிடாமல் சென்றுவிட்டால் என்ன செய்வது? சாப்பிட்டு முடித்து, தட்டை கழுவி வைத்துவிட்டு, அவள் வெளியே வந்த போது, அங்கு அர்னவ் நின்றிருப்பதை கண்டாள். வழக்கம் போல் அவனுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காமல், அங்கிருந்து நடந்தாள். அப்பொழுது, அவளது பெயரை அவன் அழைப்பதை கேட்டு, திடுக்கிட்டாள்.
"குஷி..."
ஒரு நொடி நின்ற அவள், மீண்டும் நடந்தாள்.
"நான் உன்னை கூப்பிடும் போது நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்?"
எதையோ நினைத்த அவள், தன் நடையின் வேகத்தை கூட்டினாள். ஆனால் அவன், அவளை விட வேகமாய் நடந்து, அவளுக்கு முன்னால் வந்து கதவை சாத்தினான். கதவின் மீது சாய்ந்து நின்று அவளை செல்ல விடாமல் தடுத்தான். அவனது வேகம் அவளை மலைக்கச் செய்தது.
"என்கிட்டயிருந்து அவ்வளவு ஈஸியா ஓடிப்போயிட முடியும்னு நினைக்கிறாயா?" என்று அவள் காதில் ரகசியமாய் கேட்டான்.
அவனது நடத்தையால் அவளது இதயத்துடிப்பு பல மடங்கு ஓங்கியது.
"என்னைப் போக விடு"
"நான் சொல்றதை நீ கேட்கிற வரைக்கும் போக விட மாட்டேன்"
"நீ சொல்ற எதையும் நான் கேட்க மாட்டேன்"
"கேட்டு தான் ஆகணும்"
"மாட்டேன்னு சொன்னேன்ல..."
"இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ"
"மாட்டேன். ஏன்னா, உன்னை பத்தி எனக்கு தெரியும்"
"என்னை பத்தி உனக்கு தெரியாது"
அவனை நோக்கி திரும்பிய அவள்,
"என்னைவிட உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்க வேற யாரும் இல்ல" என்றாள் கோபமாய்.
"நமக்கு நல்லா தெரிஞ்ச எல்லாருக்கும், நமக்கு தெரியாத ஒரு பக்கம் இருக்கும்"
"ஆனா உன்னை பத்தி உன்கிட்டயிருந்து நான் தெரிஞ்சிக்க வேண்டியது எதுவும் இல்ல"
"நெஜமாதான் சொல்றியா?"
"ஆமாம்" என்றாள் உறுதியாக.
"நீ ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன்"
"நான் புத்திசாலி தான். அதுவும் உன் விஷயத்துல..."
"நீ நினைக்கிறது தப்பு"
"என் மனசை மாத்த முயற்சி பண்ணாத"
"என்னமோ அதை செய்யறது ரொம்ப ஈஸி மாதிரி பேசுற...?"
"அப்புறம் எதுக்கு ட்ரை பண்ற?"
"நான் தான் சொன்னேனே... நீ புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சேன். அதனாலதான் ட்ரை பண்ணேன்"
"நான் புத்திசாலி தான்"
"இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. இந்த ஒரு சந்தர்ப்பத்தை நழுவி விட்டதுக்காக ஒரு நாள் நீ நிச்சயமா வருத்தப்படுவ"
"ஆனா உனக்கு பேசுற சந்தர்ப்பத்தை கொடுத்தா, இன்னைக்கே நீ என்ன ஃபீல் பண்ண வைப்ப"
"உன்னை கட்டாயப்படுத்தி என்னால பேச முடியாதுன்னு நினைக்கிறியா?"
"அந்த மாதிரி ஏதாவது செஞ்சா, எனக்கு கெட்ட கோபம் வரும். என்னால உன்னை எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா?"
அதைக் கேட்டு சிரித்த அவன்,
"என்ன செய்வ? என்னை அடிப்பியா? அடி பார்க்கலாம்..." என்று அவள் கையைப் பிடித்து தன் கன்னத்தை அடிக்க அவள் கையை உயர்த்தினான். அவன் பிடியிலிருந்து வெளிவர அவள் போராடினாள். ஆனால் அது கனவிலும் நினைக்க முடியாததாய் இருந்தது.
"என் கையை விடு"
"நீ தான் உன்னால எல்லாம் செய்ய முடியும்னு சொன்னியே... இப்போ என் பிடியிலயிருந்து நீயாவே வெளியில வா"
மெல்ல அவளது கையை விடுவித்த அவன்,
"என்னை எப்படி எல்லாம் சமாளிக்கிறதுன்னு இப்பவே எல்லாத்தையும் யோசிச்சு வச்சுக்கோ" என்றான் நமுட்டு புன்னகையை உதிர்த்தபடி கிண்டலாய்.
அவனைப் பிடித்து தள்ளிவிட்டு, கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினாள் அவள். அவள் தன்னை தவிர்த்து விட்டு செல்வதை பார்த்த அவன் புன்னகையுடன் நின்றான்
*உன்னோட அல்லவ் திரும்பி வரணும்னு நீ நினைக்கிற... ஆனா நீ அவன் சொல்றத கேட்க தயாரா இல்ல...! எவ்வளவு தூரம் ஓட முடியுமோ ஓடு. கல்யாணத்துக்கு பிறகு நீ என்னை எப்படி அவாய்ட் பண்றேன்னு நான் பார்க்கிறேன்...!* என்று சிரித்தான் அவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top