24 ஒருவருக்கொருவர்
24 ஒருவருக்கொருவர்
குஷி தன்னிடம் பேசியதை பற்றி நினைத்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் அர்னவ். தங்கள் திருமணத்தை நிறுத்த சொல்லி அவள் எப்படி கேட்கலாம்? அவனை மணந்து கொள்ள அவள் தயாராக இல்லை என்று அனைவரிடமும் கூறி விடுவாளோ? கட்டிலை விட்டு கீழே இறங்கி தரைதளம் வந்தான். அங்கு அரவிந்தனும் ரத்னாவும் ஜோசியரை அழைத்து, பொருத்தம் பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
"நம்ம நாளைக்கு போய் ஜோசியரை பாத்துட்டு வரலாமா?" என்றார் அரவிந்தன்.
"இல்ல இல்ல, அவர் இங்க வரணும்னு நான் நினைக்கிறேன். அவர் என்ன சொல்றாருன்னு எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்"
"எப்போ அவரை இங்க வர வைக்க போற?"
"நாளைக்கு சாயங்காலம். அதுக்கு பிறகு தான் நம்ம கல்யாண தேதியை குறிக்கணும். குஷியோட படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு தான் கல்யாணத்தை வைக்கிற மாதிரி இருக்கும்"
"ஆமாம். அது தான் அவளுக்கும் நல்லது. எந்த டென்ஷனும் இல்லாமல் அவர் கிராஜுவேஷனை முடிப்பா"
அவர்களது அந்த முடிவில் அவனுக்கு சுத்தமாய் உடன்பாடு இல்லை. குஷி அவனிடம் பேசிய விதம், அவனுக்கு ஒரு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கவில்லை. அவனை வெறுப்பேற்றும் படி அவள் ஏதாவது செய்தால் என்ன செய்வது? அவள் தான் இப்போதெல்லாம் அதை வெகு சாதாரணமாய் செய்கிறாளே...! அவளைப் பற்றி தீவிரமாய் ஆலோசித்தான்.
மறுநாள் மாலை
ஜோசியரின் வருகைக்காக அனைவரும் வரவேற்பறையில் காத்திருந்தார்கள். கடைசியாக வந்தவள் குஷி தான். அர்னவ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அவள், தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அது அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
அங்கு வந்த ஜோசியரை பெரியவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்கள். அவர்கள் இருவரது ஜாதகத்தையும் அவரிடம் வழங்கினார் ரத்னா. அதை பெற்றுக்கொண்ட ஜோசியரின் கண்கள் குஷியின் மீது விழுந்தது.
"இவங்க தான் கல்யாண பெண்ணா?" என்றார்.
"ஆமாம் பா. இவ தான் நம்ம அர்னவ்வை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு" என்றார் ரத்னா.
அந்த ஜோசியரை ரத்னாவுக்கு சிறு வயதில் இருந்தே தெரியும் என்பதால், அவரை அப்பா என்று அழைப்பதை வழக்கமாய் வைத்திருந்தார்.
குஷியின் கண்கள் அனிச்சையாய் அர்னவ் பக்கம் திரும்பின. அவன் தன் இடது புருவத்தை உயர்த்தினான். அதற்கு என்ன அர்த்தம் என்று அவளுக்கு புரியவில்லை.
"நல்ல ஜோடி பொருத்தம். ரெண்டு பேரும் பார்க்க ரொம்ப லட்சணமா இருப்பாங்க"
இந்த முறை குஷி அவனை பார்க்கவில்லை. அது அவனது புன்னகையை விரிவடைய செய்தது.
"அவங்க ஜாதகத்தைப் பார்த்து எப்படி இருப்பாங்கன்னு சொல்லுங்களேன்" என்றார் ரத்னா.
"தாராளமா சொல்றேன். நம்ம பிள்ளையோட ஜாதகம் ஏற்கனவே நான் பார்த்தது தான். பொண்ணோட ஜாதகத்தையும் பார்த்துடுறேன்"
குஷியின் ஜாதகத்தை பார்த்து, ஏதோ கணக்கு போட்டார் அவர். அவர் அதை படித்துக் கொண்டு வந்தபோது அவர் முகத்தில் தெரிந்த புன்னகை அவர்களுக்குள் ஆர்வத்தை தூண்டியது. பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதை அலசி ஆராய்ந்த அவர், நேராக நிமிர்து அமர்ந்தார்.
"எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...! இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்திருப்பாங்க... இருக்காங்க... இருக்க போறாங்க...! எவ்வளவு தூரம் தள்ளி இருந்தாலும், அதெல்லாம் அவங்களை பிரிக்க முடியாது. ஏதோ ஒரு விஷயமோ, இல்ல, ஒரு நபரோ அவங்களை எப்பவும் ஒரு இணைப்பு புள்ளியிலேயே வச்சிருப்பாங்க. ரெண்டு பேரும் நிறைய சண்டை போடுவாங்க. ஆனா ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டாங்க. அவங்க ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தவங்க"
அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. அதே நேரம் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. சங்கடத்தில் நெளிந்தாள் குஷி. அவர்களுக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் என்னவென்றால் எதிர்ப்பாராத விதமாய் அர்னவ் மிகவும் கூலாக இருந்தது தான்.
"கவலைப்படாதீங்க, அவங்க சண்டையெல்லாம் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரப்போகுது. அதுக்கப்புறம் அவங்க விளையாட்டுக்கு கூட சண்டை போட மாட்டாங்க. இப்போ சில கிரகங்கள் சரியில்ல. ஆனா அதைப் பத்தியெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். அது சில மாசம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். ஆனா..." என்று நிறுத்திய அவர்,
"இந்த கல்யாணத்தை தள்ளிப் போடக்கூடாது. ஒரு மாசத்துக்குள்ள செஞ்சாகணும்" என்றார்.
அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு மாதத்திற்குள்ளேவா?
"தள்ளி போட்டா என்ன ஆகும்?" என்றார் அரவிந்தன்.
அவரது பதில் அவர்களை ஆட்டிப் பார்த்தது.
"அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அவங்களுக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பில்ல"
"ஆனா அவங்க சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்கன்னு சொன்னிங்களே...?" என்றார் ரத்னா.
"ஆனா, அதெல்லாம் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாதன்னு சொன்னேனே...! உண்மைய சொல்லணும்னா, இந்த காலகட்டம், அவங்களுக்குள்ள சண்டையை ஏற்படுத்தி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உதவியா அமையும். அதனால நீங்க இதை தாராளமா செய்யலாம்"
"ஒரு மாசத்துக்குள்ளனா, எந்த தேதியில் செய்யணும்?" என்றார் கரிமா.
"வர்ற 27ஆம் தேதி தான் நல்ல நாளா இருக்கு"
"அப்படின்னா வெறும் 15 நாள் தான் இருக்கு..." என்றார் ஷஷி.
"ஆமாம், ஆனா வேற வழி இல்ல"
"சரிங்க ஐயா அந்த தேதியையே குறிச்சிடுங்க. வர்ற 27ஆம் தேதி அர்னவ்க்கும் குஷிக்கும் கல்யாணம்" என்றார் அரவிந்தன்.
இந்த முறை, குஷியால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் எதிர்பார்த்தபடியே, அவனும் அவள் மீதிருந்து கண்களை அகற்றவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்கள்.
ஜோசியருக்கு தட்சனை வழங்கினார் ரத்னா.
"என்னை யாராவது வீட்ல கொண்டு போய் விட முடியுமா?" என்றார் ஜோசியர்.
"நான் வறேன்" என்றார் அரவிந்தன்.
"இல்லப்பா. நான் கூட்டிகிட்டு போய் விட்டுட்டு வரேன்" என்ற அர்னவ், கார் சாவியை எடுத்துக்கொண்டு, வெளியே சென்றான். ஜோசியரை வழி அனுப்ப ரத்னாவும் கரிமாவும் வெளியே வந்தார்கள்.
"மன்னிச்சிடுங்க பா, உங்களை நான் என் விருப்பத்துக்கு பேச வச்சிட்டேன்" என்றார் ரத்னா.
"ஆனா ஜாதகத்துல இல்லாத எதையும் நான் சொல்லல. இந்த கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் நடக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடக்கணும்னு நீங்க ஆசைப்பட்டீங்க. அதுல எந்த தப்பும் இல்ல. ஒரு அம்மாவோட பயம் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியும். அதனால எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க"
"ரொம்ப தேங்க்ஸ் பா..." என்றார் ரத்னா.
அவரை வாயடைத்து பார்த்துக் கொண்டு நின்றார் கரிமா. இந்த திருமணத்தை விரைவாய் நடத்த வேண்டும் என்பது ரத்னாவின் திட்டமா? இந்தப் பெண் தனது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று எண்ணினார் அவர். காரை கொண்டு வந்து அவர்களுக்கு முன்னால் நிறுத்தினான் அர்னவ். ரத்னாவிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தார் ஜோசியர். காரை கிளப்பினான் அவன்.
"நீ எப்போ அவர்கிட்ட பேசின?" என்றார் கரிமா.
"நானும் அவரும் நேத்து கோவிலுக்கு போனோம்னு நினச்சியா?"
"ஆமாம்" என்றார் அவர்.
"இல்ல, நாங்க ஜோசியரை பார்க்கத்தான் போயிருந்தோம். இந்த விஷயத்துல நம்ம ரிஸ்க் எடுக்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் என்ன செய்வாங்களோ தெரியல. குஷி அர்னவ் மேல ரொம்ப அப்செட்டா இருக்கா. கல்யாணத்துக்கு பிறகு அவங்க எப்படியாவது அடிச்சுக்கட்டும்"
"அவங்க ஜாதகத்தை பத்தி அவர் சொன்னதெல்லாம் உண்மையா பொய்யா?"
"உண்மையிலயே அவங்க ஜாதகத்துல இருந்ததெல்லாம் உண்மை தான். அதைக் கேட்டு நாங்களே அசந்து போயிட்டோம். அதுக்காக தான் அவர் வீட்டுக்கே வந்து, அதைப்பத்தி அவங்க ரெண்டு பேரும் முன்னாடியும் சொல்லணும்னு இங்க வர வச்சேன். அப்போ தான், அவங்க ரெண்டு பேரும், அவங்க வாழ்க்கைக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு அவசியம்னு புரிஞ்சுக்குவாங்க"
"நீ சொல்றது சரி தான்" என்றார் கரிமா.
காரில்
"சாரி தாத்தா, இந்த கல்யாணத்தை உங்களை சீக்கிரம் ஃபிக்ஸ் பண்ண வச்சுட்டேன்" என்றான் அர்னவ்.
அவனைப் பார்த்து புன்னகைத்த ஜோசியர்,
"பரவாயில்ல அர்னவ்... உங்க அம்மா அப்பாவை சந்தோஷப்படுத்த தான் நீ இதை செய்றன்னு எனக்கு தெரியும். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்க அம்மா அப்பாவுக்கும் அது தான் வேணும். அதனால தான், நேத்து நீ எனக்கு ஃபோன் பண்ண போது, நான் உன்னை மறுத்து பேசல. அதேநேரம், நந்துகிஷோர்காகவும் இதை நான் ஏத்துக்கிட்டேன். இப்போ எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க இல்ல...!"
"என்னை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ், தாத்தா"
தன் தலையசைத்து புன்னகைத்தார் ஜோசியர். இந்த குடும்பத்தினர் விசித்திரமானவர்கள். அனைவருக்குமே இந்த திருமணம் விரைவாக நடைபெற வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. ஆனால் ஒருவரின் விருப்பத்தை பற்றி மற்றவர் அறியவில்லை.
ஜோசியரை வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்தான் அர்னவ். அப்பொழுதும் அனைவரும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. இன்னும் சில நாட்களில் அவர்களது உறவுமுறை மாற இருக்கிறது.
அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனிக்கலானான். அவனுக்கு முதுகை காட்டிய வண்ணம் அமர்ந்திருந்தாள் குஷி.
"ஒரு நல்ல நாள் பார்த்து தாலியும், புடவையும் வாங்கணும். அதுக்கு முன்னாடி குலதெய்வ பூஜை பண்ணணும். நமக்கு சுத்தமா நேரமேயில்ல. எல்லாத்தையும் கடகடன்னு செய்யணும்" என்றார் ரத்னா.
"உங்க சடங்கை பத்தி சொல்லு எனக்கு" என்றார் கரிமா.
"எங்க குலதெய்வ கோயிலுக்கு போய் பூஜை செஞ்சிட்டு தான் மத்த வேலையை ஆரம்பிப்போம்"
"அப்போ, இங்க ரோக்கா, சங்கீத், மெஹந்தி, ஹல்தி இதெல்லாம் கிடையாதா?" என்றாள் குஷி.
"நமக்கு டைம் இல்ல அப்படிங்கிறதால, கல்யாணத்துக்கு முதல் நாள் ரோக்கா (நிச்சயதார்த்தம்) வச்சுக்கலாம். ஹல்தி( நலங்கு) நாங்க அஞ்சு தடவை செய்வோம். சங்கீத், மெஹந்தி ரெண்டும் எங்களுக்கு கிடையாது. ஆனா நீ மெஹந்தி போட்டுக்கலாம்"
"நல்லதா போச்சு. நான் யாரோட பேரையும் என் கைல எழுதிக்க வேண்டியது இல்ல" என்றாள் எகத்தாளமாய்.
அனைவரது பார்வையும் அங்கு அமர்ந்திருந்த அர்னவ்வை நோக்கி திரும்பியது. அவன் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் அமர்ந்திருந்தான்.
கரிமா ஏதோ சொல்ல முயல, வேண்டாம் என்று அவருக்கு சைகை காட்டினார் ரத்னா. அதனால் அவர் அமைதியானார்.
"நாளைக்கு நம்ம கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணும்"
"பொங்கல்னா உங்க ஃபெஸ்டிவல் தானே?" என்றாள் குஷி.
"ஆமாம். பொங்கல் தமிழர்களோட ரொம்ப பெரிய பண்டிகை தான். அந்த நாள்ல நாங்க புது மண்பானையில பொங்கல் சமைச்சி சூரியனுக்கு படைப்போம். உலகத்துல உயிர்கள் வாழ சூரியன் தானே காரணம்!"
"அப்படின்னா, பொங்கல் அப்படிங்கறது சாப்பிடுற ஐட்டமா?"
"ஆமாம், அரிசி, வெல்லம், நெய், முந்திரிபருப்பு, பால் எல்லாம் கலந்து செய்வோம்"
"அப்படின்னா, நாளைக்கு அதை நீங்க கோவில்ல சமைக்க போறீங்களா?" என்றாள் ஆர்வமாய்.
"ஆமாம்"
"நாளைக்கு நாங்க புடவை தான் கட்டணுமா மா?" என்றாள் லாவண்யா.
"உனக்கு விருப்பம் இருந்தா கட்டிக்கோ. ஆனா எந்த கம்பல்ஷனும் கிடையாது"
"அப்படின்னா நான் சுடிதார் போட்டுக்கிறேன். ஆனா கல்யாண பொண்ணு என்ன டிரஸ் போடணும்?"
"நானும் சுடிதார் தான் போட போறேன்"
"ஆமாம், சிம்பிளாவே டிரஸ் பண்ணிக்கோங்க. நம்ம கிட்டத்தட்ட 85 கிலோமீட்டர் போகணும்"
"அப்படின்னா உங்க குலதெய்வம் சென்னையில இல்லையா?"
"இல்ல. எங்க குலதெய்வ கோவில் காஞ்சிபுரத்தில் இருக்கு"
"நம்ம காலையில சீக்கிரம் கிளம்பணும்" என்றான் நந்தா.
"சரி" என்றார் ஷஷி.
"நீ உன்னோட காரை எடுத்துக்காத. நம்ம எல்லாரும் ஒரே காரில் போகலாம்" என்றார் அரவிந்தன்.
"அதுவும் நல்லது தான். நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கார் ஓட்டலாம்" என்றார் அவர்.
"அரு இருக்கும் போது நம்ம யாருக்கும் கார் ஓட்ட சான்ஸ் கிடைக்காது. அவனுக்கு தான் கார் ஓட்டணும்னா ரொம்ப பிடிக்குமே" என்றான் நந்தா.
"அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல. மாப்பிள்ளையை கார் ஓட்ட நாங்க விடமாட்டோம்" என்றார் அரவிந்தன்.
"ஆமாம். முன் சீட்ல நாங்க ரெண்டு பேரும் தான் இருக்க போறோம்" என்றார் ஷஷி.
"அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் பாரேன்" என்றார் ரத்னா சிரித்தபடி.
"பழைய வாழ்க்கைக்கு திரும்பின மாதிரி அவங்களுக்கு ஒரு எண்ணம்" என்றார் கரிமா.
"நாளைக்கு சீக்கிரம் கிளம்பணும். அதனால எல்லாரும் சீக்கிரம் தூங்குங்க" என்றான் நந்தா.
அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றார்கள் குஷியின் குடும்பத்தினர். அடுத்த நாளை பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் அர்னவ். வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு முழு நாளை அவன் குஷியுடன் கழிக்க இருக்கிறான் அல்லவா?
மறுநாள்
திட்டமிட்டது போலவே அரவிந்தனும், ஷஷியும் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார்கள். கரிமாவும் ரத்னாவும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள, அவர்கள் பக்கத்தில் அமர்ந்தாள் லாவண்யா. அவள் அருகில் அமர்ந்து கொள்ளலாம் என்று குஷி நினைத்தபோது, லாவண்யா நந்தாவை தன் பக்கத்தில் அமர்ந்து கொள்ள செல்லி சைகை செய்ததை கண்டாள். அதனால் அங்கு அமரும் எண்ணத்தை கைவிட்டு, கடைசி இருக்கையில் அமர சென்றாள். அங்கு வந்த அவள் சில நொடி திகைத்து நின்றாள், அங்கு அமர்ந்திருந்த அர்னவ்வை பார்த்து. வேறு வழி இல்லை, அவள் அவனுக்கு எதிரில் தான் அமர்ந்தாக வேண்டும். அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை அவளுக்கு எரிச்சல் அளித்தது. அவன் அவளை வெறுப்பேற்றுகிறான் என்று அவள் எண்ணினாள். உண்மையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
தாங்கள் கொண்டு வந்த, தின்பண்டங்களை ஒவ்வொருவராய் எடுத்துக்கொண்டு பின் சீட்டிற்கு கடத்தினார்கள். அதை பெற்றுக்கொண்ட அர்னவ், குஷியிடம் நீட்டினான். அவள் அதை எடுத்துக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் கையைப் பிடித்து அதை அவள் கையில் திணித்தான். அவள் அவனை முறைக்க, அதை கவனிக்காமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான் அவன்.
ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் கோவிலை வந்தடைந்தார்கள். அங்கு அடுப்பு மூட்டி பொங்கல் வைக்க துவங்கினார் ரத்னா. அந்த இடம் குஷிக்கு வெகுவாய் பிடித்திருந்தது. வயல் வரப்புகளுக்கு இடையில் இருந்த, மிகப்பெரிய வேப்ப மரத்தின் அடியில் அமைந்திருந்தது அந்த கோவில். கோவிலை ஒட்டியபடி சிறு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. குஷியும் லாவண்யாவும் அந்த இடத்தின் அழகில் தங்கள் மனதை பறி கொடுத்தார்கள். இங்கும் அங்கும் ஓடுவதுமாய் இருந்தார்கள். அப்படி ஒரு மனோகரமான இடத்தில் அமைந்த கோவில், தங்களுக்கு குலதெய்வம் கோவிலாய் அமைந்தது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.
நற்பது நிமிடங்களுக்குப் பிறகு, பொங்கலை படைக்க அனைத்தையும் தயார் செய்துவிட்டு அவர்களை அழைத்தார் ரத்னா. பூஜையில் கலந்து கொள்ள அவர்கள் கோவிலுக்கு சென்றார்கள். அப்பொழுது, அரவிந்தனின் தூரத்து சொந்தமான ஒரு வயதான பாட்டி அங்கு வந்தார்.
"வாங்க சித்தி, எப்படி இருக்கீங்க?" என்றார் அரவிந்தன்.
"நல்லா இருக்கேன் கண்ணு... ரொம்ப நாளுக்கு அப்புறம் உன்னை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு"
"அர்னவ்க்கு கல்யாணம் வச்சிருக்கேன். அதனால தான் பூஜை போடலாம்னு வந்தேன்"
தன் கையை கண்களுக்கு மேல் வைத்து,
"பொண்ணு யாரு?" என்றார் அவர்.
குஷியை தன்னிடம் வருமாறு சைகை செய்தார் அரவிந்தன். அவரிடம் சென்ற குஷி அந்த மூதாட்டியின் பாதம் தொட்டு வணங்கினாள்.
"மகாலட்சுமி மாதிரி இருக்கா" என்றார் அந்த பாட்டி
"ஆமாம்... ஜீன்ஸ் போட்ற மகாலட்சுமி!" என்றான் நந்தா கிண்டலாய்.
அதைக் கேட்டு அனைவரும் குபீரென சிரிக்க,
"என் பொண்ணு மகாலட்சுமி கெட்டப்ல நல்லா தான் இருப்பா... ஆனா மகாவிஷ்ணு கெட்டப் தான் எப்படி இருக்குமோ...?" என்று சிரித்தார் ஷஷி.
அனைவரும் அவருடன் இணைந்து சிரிக்க, அர்னவ்வை மகாவிஷ்ணுவின் கெட்டப்பில் கற்பனை செய்து பார்த்த குஷி வாய்விட்டு சிரித்தாள். பூஜை செய்யும் போது கண்களை மூடிய பிறகு கூட, அவளால் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது என்ன என்பதை புரிந்து கொண்ட அர்னவ், அவள் சிரித்தபடி இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top