22 ஒரு வழியாய்...
22 ஒரு வழியாய்...
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த ரத்னாவை பார்த்தார் அரவிந்தன். அவர் இப்படி நிம்மதியிழந்து தவிக்கும் பொழுது, எப்படி ரத்னாவால் இவ்வளவு நிம்மதியாய் உறங்க முடிகிறது என்று அவருக்கு புரியவில்லை. சைலன்ட் மோடில் இருந்த அவரது கைபேசி ஒளிர்ந்தது. அதில் அவரது நண்பன் ஷஷியின் பெயர் தெரிந்தது. அந்த அழைப்பை ஏற்றார் அவர்.
"நீ இன்னும் தூங்கலையா?"
"உனக்கும் தூக்கம் வரல போலருக்கு... அதனால தானே என்னோட காலை ஃபர்ஸ்ட் ரிங்க்லயே எடுத்துட்ட?"
"நம்ம இக்கட்டான நிலையில இருக்கும் போது, எப்படி தூக்கம் வரும்?"
"நீ எதுக்கும் கவலைப்படாத. அர்னவ் தான் என்னோட மாப்பிள்ளை. அந்த விக்னேஷ் என் மகளை கல்யாணம் பண்ணிக்க நான் விடமாட்டேன். கடைசி நேரத்தில் கூட நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்"
"ம்ம்ம்... கரிமா என்ன செஞ்சுகிட்டு இருக்கா?"
"வேற என்ன செய்வா? நிம்மதியா தூங்குறா"
அதைக் கேட்டு சிரித்த அரவிந்தன்,
"நமக்கு அவங்களை மாதிரி மனோதிடம் இல்லன்னு நினைக்கிறேன். பாரு, நம்ம ரெண்டு பேரும் தூங்காம புலம்பிக்கிட்டு இருக்கோம்... ஆனா இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு நிம்மதியா தூங்குறாங்க!"
"உண்மை தான். ஒரு, நேவல் ஆஃபிஸரா, நம்ம ரெண்டு பேரும் கடுமையான, ஆர்ப்பரிக்கிற கடல்களை எல்லாம் கடந்திருக்கோம். ஆனா இந்த சாதாரண சிற்றலை நம்மளை எவ்வளவு ஆட்டம் காண செய்யுது பார்த்தியா?"
"ஏன்னா, இது நம்ம பிள்ளைங்க சம்பந்தப்பட்ட விஷயம். நாளைக்கு அவங்க வராங்க. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். எல்லாத்துக்கும் தயாரா இரு"
"நீ என் கூட இரு. நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்"
"நீயும் கவலைப்படாத. நம்ம பொண்டாட்டிங்க நம்மளை தூக்கி நிறுத்துவாங்க"
சிரித்தபடி அவர்கள் அழைப்பை துண்டித்தார்கள்.
சற்று நேரம் குளிர்ந்த காற்றில் நின்றால், மனதுக்கு இதமாய் இருக்கும் என்று எண்ணி, மாடிக்கு செல்லலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தார் அரவிந்தன். அப்பொழுது,
அர்னவ்வின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை கண்டு வியப்படைந்தார். அவரது மகனும் கிட்டத்தட்ட அவரது மனநிலையில் தான் இருக்கிறான் போலிருக்கிறது. அவனது அறையின் கதவை தட்டினார்.
"அரு..."
உடனடியாய் கதவை திறக்காமல், சற்று நேரம் எடுத்துக் கொண்டான் அவன். அது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"என்னங்கப்பா?"
"நீ இன்னும் தூங்கலையா?"
"ஒரு முக்கியமான வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் பா"
"ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நாளைக்கு அந்த வேலையை பார்க்கலாமில்லையா?"
"நான் அந்த ஞாயிற்றுக்கிழமைக்காக தான் பா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்"
"நீ என்ன சொல்ற?" என்றார் முகத்தை சுருக்கி.
"ஒன்னும் இல்ல பா"
"உன் உடம்பை கெடுத்துக்காத. போய் தூங்கு"
"நான் இன்னிக்கு என்னோட தூக்கத்தை கெடுத்துக்கலனா, நிறைய விஷயங்கள் கெட்டுப் போயிடும் பா"
"நீ எதைப் பத்தி பேசுற?"
ஒன்றும் கூறாமல் அமைதியாய் நின்றான் அர்னவ்.
"ரிலாக்ஸ் அரு... நம்மால நடக்கப் போற எதையும் தடுக்க முடியாது"
"அஃப்கோர்ஸ்... நாளைக்கு நடக்கப் போறதை யாராலயும் தடுக்க முடியாது" என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.
அவனது முகத்தில் தெரிந்த கோபத்தை கண்ட அரவிந்தன், நாளை ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அவர்களது நிம்மதியற்ற மனநிலை முடிவுக்கு வரயிருக்கிறதா? அவரது ஆர்வம் அதிகமானது.
"நீங்க போய் தூங்குங்கப்பா... ஐ வில் பி ஆல் ரைட்" என்றான்.
தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றார் அரவிந்தன்.
மறுநாள்
அர்னவ்வை பற்றி தெரியும் என்றாலும் நிம்மதியாய் இருக்க முடியவில்லை ரத்னாவினால். கரிமாவும் அதே நிலையில் தான் இருந்தார். ஒருவர் மற்றொருவருக்கு ஃபோன் செய்து, தங்களை சமாதானப்படுத்தியபடி இருந்தார்கள்.
சமையலறைக்கு வந்த அர்னவ், ரத்னா ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டான். அவன் வந்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை. மெல்ல அவர் அருகே சென்ற அவன், அவர் தோளை தொட்டான். பதற்றத்துடன் அவர் திரும்பினார்.
"அம்மா, ரிலாக்ஸ், நான் தான்..."
"ஒன்னும் இல்ல... உனக்கு காபி வேணுமா? இரு போட்டு தரேன்"
அவரை ஆழமாய் பார்த்தபடி நின்றான். அவர் பதற்றமாக இருந்தார். அது ஏனென்று அவனுக்கு தெரியும். காபி கலந்து அவன் கையில் கொடுத்தார், தன் கண்களை அவர் மீதிருந்து அகற்றாமல் அதை பருகினான் அவன்.
"நிறைய வேலை இருக்கு. அதை எல்லாம் முடிச்சுட்டு நான் போய் கரிமாவுக்கு ஹெல்ப் பண்ணணும். கல்யாணம் பேசி முடிக்க, இன்னைக்கி விக்னேஷ் குடும்பம் வராங்க இல்லையா?" என்று அவர் கூறிய போது, அவன் முகத்தில் ஓடி மறைந்த கோப மின்னலை அவர் கவனித்தார்.
அவன் ஒரு வார்த்தையும் கூறாமல் அங்கிருந்து சென்றது ரத்னாவிற்கு ஏமாற்றம் அளித்தது. அவரை சமாதானப்படுத்த அவன் ஏதாவது கூறுவான் என்று அவர் எதிர்பார்த்தார்.
அவன் சமையலறையை விட்டு வெளியே வந்த போது, லாவண்யாவின் பெயரை கூறி அழைத்தபடி அங்கு வந்தாள் குஷி. அவளை முறைத்தபடி நின்றான் அர்னவ். ஆனால் அவளோ, அவளை சட்டை கூட செய்யவில்லை. அனாயாசமாய் அவனை கடந்து சென்றாள்.
அவள் குரல் கேட்டு வெளியே வந்த லாவண்யா,
"சொல்லு குஷி" என்றாள்.
அவளை முறைத்துக் கொண்டு நின்ற அர்னவ்வை பார்த்த லாவண்யா, குஷியை தன் அறைக்கு இழுத்துச் சென்றாள்.
"குஷி தயவு செய்து இந்த நான்சென்சை எல்லாம் நிறுத்து"
"ஏன் நிறுத்தணும்?"
"அர்னவ் அண்ணன் முகத்துல தெரிஞ்ச கோபத்தை நீ பார்க்கலையா?"
"அவன் கோவம் என்னை என்ன செய்யும்?" என்றாள் கூலாக.
"நானும் நந்தாவும் அவரோட கல்யாணத்துக்காக தான் காத்திருக்கோம். அவர் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு. அது ஏன் உனக்கு புரியல. உனக்கு எங்க மேல அக்கறை இருக்குன்னு நான் தப்பா நினைச்சுட்டேன். நீ இப்படி செய்வேன்னு நாங்க எதிர்பார்க்கல"
"நீ எதுக்காக இப்போ என் மேல பாயுற? உன் அர்னவ் அண்ணாவுக்கு உங்க மேல ரொம்ப அக்கறை இருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்த அவன் ஏதாவது செய்வான். அவனை நம்ம ஃப்ரீயா விட்டா, அவன் எதுவுமே செய்ய மாட்டான். நீயும் நந்தாவும் மட்டும் இல்ல, நானும் வாழ்நாள் முழுக்க அந்த சிடுமூஞ்சிக்காக காத்துகிட்டு தான் இருக்கணும்"
"ஒருவேளை நமக்கு பேக் ஃபயர் ஆயிடுச்சுன்னா?"
"அந்த பண்டாரம் எதுவும் செய்யாம போனா, நானே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன். அதை புரிஞ்சுக்கோ" என்றாள் கோபமாய்.
"சாரி குஷி, நான் உன்னை தப்பா நினைச்சுட்டேன்"
"நீ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? இந்த கன்றாவியை எல்லாம் நான் விருப்பப்பட்டு செய்றேன்னு நினச்சிகிட்டு இருக்கியா? பைத்தியக்காரி... வா என்கூட" என்று அவளை இழுத்துச் சென்றாள் குஷி.
சிரித்தபடி அவளுடன் சென்றாள் லாவண்யா. அவர்கள் இருவரும் வெளியே வருவதை பார்த்தார் ரத்னா. அவரைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்ட குஷி, ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.
"எல்லாம் சரியாயிடும்" என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற, இருவரும் சிரித்தார்கள்.
"சீக்கிரமா வாங்க"
சரி என்று தலை அசைத்தார் ரத்னா. அங்கு அர்னவ் இருக்கிறானா என்று தேடிப்பார்த்தாள் குஷி. ஆனால் அவன் அங்கு இல்லை. லாவண்யாவுடன் அங்கிருந்து வெளியேறினாள்.
............
விக்னேஷின் குடும்பத்தாரை வரவேற்ற ஷஷி, அரவிந்தன் குடும்பத்தாரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் சம்பிரதாயமாய் கை குலுக்கி கொண்டார்கள்.
"நீங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார் விக்னேஷின் அப்பா கணேஷ்.
"நம்ம கைல என்ன இருக்கு? கடவுள் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கும்" என்றார் ஷஷி.
"நம்ம தட்டை மாத்திக்கலாம் இல்லையா?" என்றார் தான் கொண்டு வந்த தாம்பூல தட்டை சுட்டிக்காட்டி.
"அதை செய்றதுக்கு முன்னாடி சில விஷயங்களை தெளிவா பேசிடணும்னு நான் விரும்புறேன்"
"நீங்க கல்யாணத்துக்காக எதுவும் செய்ய வேண்டாம். உங்க மகளை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க. அதுவே எங்களுக்கு போதும்"
"ஆனா அவ இன்னும் படிச்சுக்கிட்டு தான் இருக்கா. இந்த வருஷம் அவ படிப்பு முடியுது. அதுக்கு அப்புறம் இந்த பேச்சை வச்சுக்கலாம்னு நான் நினைக்கிறேன்"
"நாங்க இப்பவே கல்யாணம் பண்ண சொல்லி கேட்கல. இப்போ தட்டை மாத்தி நிச்சயம் பண்ணிக்கலாம். படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்"
அரவிந்தனை பார்த்தார் ஷஷி.
"நம்ம ரெண்டு குடும்பமும் தான் தெரிஞ்சவங்களா ஆகிட்டோமே, அதனால அதை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா எனக்கு தோணல" என்றார் கரிமா.
"அவங்க சொல்றது சரி தான், இன்னைக்கு நான் உங்களை ஏன் வர சொன்னேன்னா, உங்களை டிசப்பாய்ண்ட் பண்ண வேண்டாம்னு தான். குஷி படிப்பை முடிதச்ச பிறகு நம்ம இதை பத்தி பேசலாம்" என்றார் ஷஷி
விக்னேஷின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. அங்கிருந்த நமது மக்களோ வீட்டின் நுழைவு வாயிலயே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அர்னவ் உள்ளே நுழைந்ததை பார்த்த அவர்களது முகங்கள் மலர்ந்தன. யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராக டிவியை நோக்கி சென்றான் அவன். தன் பாக்கெட்டில் இருந்து கைபேசியை எடுத்த அவன், அதை டிவியுடன் இணைத்தான். முதல் நாள் இரவு, விக்னேஷ் தனது நண்பனுடன் பேசிய உரையாடலை பதிவு செய்து வைத்திருந்ததை அதில் ஓட விட்டான்.
அதை பார்த்த விக்னேஷின் முகம் இருண்டது. அவன் தன் நண்பனுடன் பேசிய உரையாடல் இவனுக்கு எப்படி கிடைத்தது?
"என்ன மச்சான் நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்றான் அவனது நண்பன்.
"என்ன கேள்விப்பட்ட?"
"நீ கல்யாணம் பண்ணிக்க போறியாமே?"
"அதை நீ நம்பிட்டியா?"
"பின்ன இல்லையா?"
"இந்தப் பொண்ணு அவ்வளவு சீக்கிரம் படியிற கேசா தெரியல. அவளை என் பெட்டுக்கு கொண்டு வர்ற ட்ரிக் இது"
"அதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்க தயாராகிட்டியா?"
"கல்யாணமாவது மண்ணாவது... எப்படியும் அவ படிப்பு முடிகிற வரைக்கும் என்னை வெயிட் பண்ண சொல்லி தான் அவங்க வீட்ல கேப்பாங்க. அவகிட்ட நெருங்கி பழக அந்த டைம் எனக்கு போதும். எங்களுக்கு நிச்சயம் ஆயிட்டா, அவ என்னை மறுக்க முடியாது"
"ஆனா அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்காம எப்படி தப்பிப்ப?"
"அதே காரணத்தை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்... கல்யானத்துக்கு முன்னாடியே ஒருத்தன் கூட படுத்தவளை கல்யாணம் பண்ணிக்க நான் தயாரா இல்லைன்னு சொல்லிடுவேன்... சிம்பிள்"
"என்ன பிளான் மச்சி...! ஆல் தி பெஸ்ட்"
அனைவரது கனல் தெறிக்கும் பார்வையும் விக்னேஷின் மீதே இருந்தது. யாரும் எதுவும் கூறும் முன், விக்னேஷின் உள் உறுப்புகள் அதிரும் வண்ணம் அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டான் அர்னவ். அவன் முகத்தில் விடாமல் அவன் குத்த துவங்க, அவன் முகத்தில் ரத்தம் வழிந்தது. அவனது பெற்றோர்கள் நிறுத்தச் சொல்லி அவனை கெஞ்சினார்கள்.
"தம்பி, தயவு செய்து அவனை விட்டுடுங்க. அவனோட நடிப்பை நம்பி நாங்க ஏமாந்துட்டோம். அவனை நான் பார்த்துக்கிறேன். என்கிட்ட விட்டுடுங்க" என்றார் கணேஷ்.
"நான் வார்ன் பண்றேன். இன்னொரு தடவை அவனை நான் குஷி இருக்கிற திசை பக்கமே பார்க்கக் கூடாது" என்றான் கணேசிடம். அவர் சரி என்று தலையசைத்து, விக்னேஷை ஓங்கி அறைந்தார்.
"உன்னால தானடா எங்களுக்கு இந்த அவமானமெல்லாம்... நீ இன்னைக்கு செஞ்ச காரியத்துக்கு உன்னை நான் எப்பவுமே மன்னிக்க மாட்டேன்" அவனது சட்டையின் காலரை பற்றி தரதரவென இழுத்துச் சென்றார்.
அர்னவ்விடம் வந்த ஷஷி, அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு,
"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல" என்றார்.
அவரது கையை கோபமாய் உதறிய அவன், கோபத்தில் எகிறினான்.
"உங்களுக்கு அவ்வளவு என்ன அவசரம்? ஊர்ல வேற மாப்பிள்ளையே இல்லன்னு தான் அவன்கிட்ட போய் விழுந்தீங்களா? அந்த பொறுக்கியை விட்டா வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு? உங்க தோல்ல இருக்கிற சுமையை இறக்கி வச்சுட்டா போதும்னு நினச்சிங்களா? என்ன அப்பா நீங்க?"
அப்பொழுது குஷியின் கோபக் குரலை கேட்டான் அவன்.
"போதும் நிறுத்து..."
அவனுக்கு முன்னாள் வந்து நின்ற அவள்,
"எங்க அப்பாவை கேள்வி கேட்க நீ யாரு? உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது?"
அப்பொழுதுதான் எதார்த்தம் அவனை ஓங்கி அறைந்தது. அவன் எல்லை மீறி தான் சென்று விட்டான். ஷஷியிடம் அவன் அவ்வாறு குரல் உயர்த்தி இருக்கக் கூடாது.
ஆனால் அவன் எதிர்பாராத விதமாய், ஷஷியே, நிலைமையை சமாளிக்க முன் வந்தார்.
"அவன் உன் வாழ்க்கை வீணா போயிருக்குமேன்னு கவலைப்பட்டு தான் அப்படி செஞ்சிருக்கணும்"
"யாரு...? இவனா என் வாழ்க்கையை நினச்சி கவலைப்படுறவன்? அவன் என்னை பத்தி எப்பவுமே கவலைப்பட்டது இல்ல. இன்னைக்கு மட்டும் எதுக்காக என் மேல அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்கிறான்... அதுவும் என் அப்பாவை விட அதிகமா..."
தன்னை கட்டுப்படுத்தியபடி பதில் கூறாமல் நின்றான் அர்னவ்.
"உன் வாழ்க்கையை காப்பாத்தணும்னு தானே குஷி அவன் நினைச்சான்?" என்றான் நந்தா.
"ஓ... அப்படியா? கல்யாணத்துக்கு பிறகு என் புருஷன் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சா இவன் என்ன செய்வான்? அப்பவும் அவனை அடிப்பானா? இல்ல, அவனை கொன்னுடுவானா? வாழ்க்கை முழுக்க எப்படி இவன் என்னை காப்பாத்துவான்?"
"குஷி, அப்படியெல்லாம் புருஷனைத் தவிர வேற யாராலும் செய்ய முடியாது. உன் ஃபிரண்டா இருந்துகிட்டு உன் வாழ்க்கை நாசமா போகும்போது அவன் எப்படி பார்த்துக்கிட்டு சும்மா இருப்பான்?" என்றார் கரிமா.
"ஆமாம் குஷி... அவனால வேற என்ன செய்ய முடியும்? உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்நாள் முழுக்க காப்பாத்த முடியும்?" என்றான் நந்தா.
"ஏன் முடியாது?" என்று கேட்ட அரவிந்தனை நோக்கி அனைவரும் திரும்பினார்கள்.
"குஷி கேக்குறதுல என்ன தப்பு இருக்கு? எதுக்காக அவங்க அப்பாவை விட அதிகமா இவன் ரியாக்ட் பண்ணணும்? அவனுக்கு உண்மையிலேயே அவ மேல அவ்வளவு அக்கறை இருந்தா, அவளை அவனே கல்யாணம் பண்ணிக்குவானா?"
"ஆமாம் பண்ணிகிறேன்..." என்று அந்த அறை அதிரும்படி கத்தினான் அர்னவ்.
அந்த அறை நிசப்தமாய் மாறியது.
ஷஷியை பார்த்த அவன்,
"குஷியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான்.
தாங்கள் கேட்டது உண்மை தான் என்பதை அங்கிருந்தவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை கண்களால் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் அதே நேரம், அவன் அதை முழுமனதாய் தான் கூறினான் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருந்தது. இது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கும் விஷயம் இல்லை அல்லவா...?
"அர்னவ், இது விளையாட்டு இல்ல ரெண்டு பேர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்... ரெண்டு குடும்பத்தோட சந்தோஷம் சம்பந்தப்பட்ட விஷயம்... இவங்க எல்லாரும் உன்னை தூண்டி விட்டாங்க அப்படிங்கிறதுக்காக நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம்" என்றார் ஷஷி.
"ஆமாம் பா, அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காத. குஷியை நாங்க பாத்துக்குவோம் நீ அவளைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்ல." என்ற கரிமா, ரத்னாவை நோக்கி திரும்பி,
"நீ ஏதாவது சொல்லு. ஏன் அமைதியா இருக்க?" என்றார்.
"கல்யாண வேலையை ஆரம்பிச்சிடலாம், கரிமா" என்றார்.
"என்ன்னனது???? நீ உண்மையா தான்....?"
"என் பிள்ளை அப்படியெல்லாம் எடுத்தேன் கவுத்தேன்னு முடிவெடுக்கிறவன் கிடையாது. அவசரப்பட்டு வார்த்தையை விடுறவனும் கிடையாது. அப்படியே அவன் அதை செஞ்சாலும், அதை எப்படி சரி படுத்தணும்னு அவனுக்கு தெரியும்" என்றார் ரத்னா மிடுக்காய்.
அவரது வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் உச்சி குளிர்ந்தார்கள். தன்னை முழுதாய் புரிந்து கொண்டிருந்த தன் அம்மாவை நினைத்து பெருமை கொண்டான் அர்னவ். பார்வையால் தன் நன்றியை அவருக்கு காணிக்கை ஆக்கினான்.
"அரவிந்த், இதெல்லாம் உண்மையிலேயே நடக்குதா இல்லனா நான் கனவு காண்றேனா?" என்றார் ஷஷி.
அரவிந்தன் அவர் கையைப் பிடித்துக் கிள்ள, அவர்
"இஸ்ஸ்..." என்றார்.
"நீ கனவு காணல... நம்ம பிள்ளைங்க ஸ்ட்ராங்கான ரிலேஷன்ஷிப்ல நம்மளை கட்ட போறாங்க" என்று சந்தோஷமாய் கூறி அவரை அணைத்துக் கொண்டார் அரவிந்தன்.
அர்னவ்விடம் வந்த ஷஷி,
"குஷி கோபத்துல சொன்னதை எல்லாம் உன் மனசுல வச்சுக்காத அர்னவ். அவளை மன்னிச்சிடு" என்றார்.
"அவ சொன்னதுல எதுவும் தப்பில்ல, அங்கிள். நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது. ஐ அம் சாரி"
"என்னை சத்தம் போட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு...! இதுக்குப் பிறகு உனக்கு அந்த உரிமை நிறையவே இருக்கும். நீ என்னோட மாப்பிள்ளை ஆச்சே" என்று பெருமையுடன் அவன் முதுகை தட்டினார் அவர்.
அவர் தன்னை மாப்பிள்ளை என்று அழைத்ததை கேட்ட அவன் வயிற்றில், கனமான உருண்டை உருள்வது போல் இருந்தது. எவ்வளவு பெரிய பொறுப்பு மாப்பிள்ளை என்பது...! பெயர் கூற முடியாத ஒரு முக பாவத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த குஷியை ஏறிட்டான் அவன். அவள் பார்த்த பார்வை, மீண்டும் அந்த உருளையை அவன் வயிற்றில் உருள செய்தது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top