20 எதிர்பாராத சம்பந்தம்
20 எதிர்பாராத சம்பந்தம்
நந்தாவின் திருமண வரவேற்பிற்கு பிறகு, குஷியின் மீது ஒரு கண் வைத்திருந்தான் அர்னவ். மீண்டும் விக்னேஷ் அவளிடம் வந்து பேசுவான் என்று அவன் எதிர்பார்த்தது தான் அதற்கு காரணம். ஆனால் விக்னேஷ் அவளிடம் நெருங்கவே இல்லை. அது அவனுக்கு வியப்பளித்தது... குழப்பவும் செய்தது. ஆனால், அவன் உள்மனது ஏதோ தவறாய் நடக்கவிருப்பதை அவனிடம் உணர்த்திக் கொண்டே இருந்தது.
அவன் எதிர்பார்த்ததுபடியே, பத்து நாட்களுக்குப் பிறகு, பெசன்ட் நகர் கடற்கரையில்...
வழக்கம்போல் ஜாகிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஷஷி. அப்பொழுது அவரை நோக்கி ஒருவர் வந்தார். அவரிடம் கைக்குலுக்கலுக்காக கையை நீட்டினார். புன்னகைத்தபடி அவருடன் கை குலுக்கினார் ஷஷி.
"என் பேர் கணேஷ்... விக்னேஷ் டெக்ஸ்டைல்ஸ் ஓனர். உங்களுக்கு என்னை தெரியும்னு நினைக்கிறேன், சார்...!"
"ஓ, எஸ்... நல்லா தெரியும்..."
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்... உங்களுக்கு டைம் இருக்கா?"
"எதைப் பத்தி?"
"என்னோட சன் விக்னேஷை பத்தி"
"ஓஹோ... அவர் எப்படி இருக்காரு?"
"அவன் இப்போ ஒரு புது மனுஷனா மாறிட்டான்... உங்க டாட்டரால..."
அவரை குழப்பத்துடன் பார்த்த, ஷஷி துணுக்குற்றர்.
"நான் உங்ககிட்ட எதையும் மறைக்க விரும்பல. அவன் பொறுப்பில்லாம தான் இருந்தான். எதையும் பத்தி கவலைப்படாம ஊரை சுத்திக்கிட்டு, வேண்டாத வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தான். ஆனா இப்போ, சமீபத்துல பிசினஸ்ல ரொம்ப ஆர்வமா இருக்கான். லைஃப்ல செட்டில் ஆகணும்னு அவனுக்கு எண்ணம் வந்திருக்கு. அவனோட நடவடிக்கை தலைகீழா மாறிடுச்சு. உறுதியான ஒரு காரணம் இல்லாம அது நடந்திருக்காதுன்னு எனக்கு தெரியும். அப்போ தான், அவன் உங்க மகளை விரும்புறதா சொன்னான். அவனுக்கு இப்பவாவது வாழ்க்கையோட மதிப்பு தெரிஞ்சதேன்னு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்"
ஷஷியின் கைகளைப் பற்றிக் கொண்ட அவர்,
"உங்க மக, எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு நாங்க விரும்புறோம். ஏன்னா, நான் என் மகனை இழக்க விரும்பல. அவள் இல்லாம இவன் உயிரோடவே இருக்க மாட்டான். ஏன்னா, அவன் அவளுக்காக தன்னையே மாத்திகிட்டு இருக்கிறான். என்னை நம்புங்க. உங்க மக எங்க வீட்ல ராணி மாதிரி இருப்பா"
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார்"
"தயவு செய்து யோசிக்காம எதையும் சொல்லிடாதீங்க. வேண்டிய நேரம் எடுத்துக்கிட்டு, நல்லா யோசிங்க. ஏன்னா, இது என் மகனோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு நீங்க ஒரு நல்ல முடிவை சொல்லுவீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் சார்"
ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை ஷஷி. அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றார் கணேஷ். வீட்டிற்கு வந்த ஷஷி, குளித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தார். அவர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கவனித்தார் கரிமா.
"என்ன ஆச்சி உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?"
"ஒருத்தரை எப்படி அவாய்ட் பண்றதுன்னு வழியை யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"
"அவாய்ட் பண்றத பத்தியா? அதுக்கு உங்க ஃபிரண்டு கிட்ட வழியை கேட்க வேண்டியது தானே?"
ஷஷியும் இதைப்பற்றி அரவிந்தனிடம் பேச வேண்டும் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தார். கைபேசியை எடுத்து அவருக்கு ஃபோன் செய்தார்.
"நீ இப்ப ஃப்ரீயா இருக்கியா?"
"உனக்கு நான் எப்பவுமே ஃப்ரீ தான்"
"ரத்னாவையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வா"
"ஏதாவது பிரச்சனையா?"
"ஆமாம். கொஞ்சம் லேட்டாக சான்ஸ் இருக்கு. அதனால ஆஃபீஸ்ல ஒரு மணி நேரம் பர்மிஷன் சொல்லிட்டு வா"
"சரி, இதோ வரேன்"
அழைப்பை துண்டித்த அரவிந்தன், ஷஷி ஏதோ பிரச்சனையில் இருப்பதை உணர்ந்தார். அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பர்மிஷன் சொல்லிவிட்டு, ஷஷியின் வீட்டிற்கு வந்தார்கள். கரிமாவும் குஷியும் சசியுடன் அமர்ந்திருந்தார்கள்.
"நான் உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் பேசணும்னு நினைக்கிறேன்" என்றார் ஷஷி.
"சொல்லு... என்ன விஷயம்?" என்றார் அரவிந்தன்.
கணேஷ் தன்னிடம் பேசிய விஷயங்களை அவர்களிடம் கூறினார் ஷஷி. அது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது என்று கூற தேவையில்லை.
முதலில் கோபத்தில் பொங்கியவர் கரிமா தான்.
"இதுல பேச என்ன இருக்கு? உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு அவரு முகத்துக்கு நேரா சொல்லிட வேண்டியது தானே? அந்த பையன் நம்ம குஷிகிட்ட எப்படி நடந்துக்கிட்டான்னு தெரியாதா உங்களுக்கு? எல்லாத்துக்கும் மேல, நம்மளோட விருப்பம் என்ன ஆகிறது? அர்னவ்வை தவிர வேற ஒருத்தனுக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுக்கிறத பத்தி நம்ம எப்படி நினைக்க முடியும்? நம்ம பொண்ணுக்கு ஏற்கனவே நிச்சயம் பண்ணிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிடுங்க" என்றார் அவர்.
"எனக்கு என்ன செய்யறதுன்னே புரியல"
குஷியின் பதட்ட நிலையை கவனித்துக் கொண்டிருந்தார் ரத்னா. அவள் முகத்தில் அச்சம் படர்ந்தது வெளிப்படையாய் தெரிந்தது.
"எனக்கும் கூட என்ன சொல்றதுன்னு தெரியல. ஏன்னா கல்யாண விஷயத்துல அர்னவ் என்ன முடிவெடுப்பான்னு என்னால சொல்ல முடியல" என்றார் அரவிந்தன் இயலாமையுடன்.
"நம்ம ஏன் அவன்கிட்ட பேசி பார்க்க கூடாது?" என்றார் ஷஷி.
"வேண்டாம் டாட்... " என்ற குஷியை அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
"தயவு செஞ்சு அப்படி செய்யாதீங்க... ஒருவேளை அவன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா? அவன் நிச்சயம் அதை செய்வான். அதை என்னால தாங்க முடியாது" என்ற போது அவள் தொண்டையை அடைத்தது
"காம் டவுன், குஷி... நீ ஏன் அப்படி நினைக்கிற?" என்றார் ஷஷி.
"எனக்கு அவனைப் பத்தி தெரியும். அவன் சரியான பிடிவாதக்காரன்" என்றாள் கோபமாய்.
அவள் தன் கண்ணீரை விழுங்குவது தெரிந்தது. அதை கண்ட ரத்னா, அரவிந்தனிடம் கண் ஜாடை காட்டினார். அவரது ஜாடையை புரிந்து கொண்ட அரவிந்தன், அதிர்ச்சி அடைந்தார். உண்மையாகவா கூறுகிறாய்? என்பது போல் அவர் கேட்க, *ஆம்* என்று கண்ணிமைத்தார் ரத்னா. வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல்,
"இந்த சம்பந்தத்தை ஒத்துக்கோ ஷஷி. நம்ம கைல எதுவுமே இல்ல. எது நடக்கணும்னு இருக்கோ அதை நம்மால மாத்த முடியாது. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. குஷி எங்க மக மாதிரி. எங்க சுயநலத்துக்காக அவளோட வாழ்க்கையை கெடுக்க நாங்க விரும்பல. எது நடந்தாலும் நாங்க உன் கூட இருக்கோம். நீ நடத்து" என்றார்.
தன் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை குஷியால் தவிர்க்கவே முடியவில்லை. அவளுக்காக வருந்தினார் ரத்னா. ஆனால் முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்று அவருக்கு தெரியும். இப்படிப்பட்ட அதிர்ச்சி வைத்தியத்தை அர்னவ்க்கு கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இல்லாவிட்டால், அவன் தன் நிலையில் இருந்து நிச்சயம் மாற மாட்டான். தன் இடத்தை விட்டு எழுந்து சென்று குஷியின் கண்ணீரை துடைத்தார். அவரை கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள் குஷி.
"நீ அழக்கூடாது. எல்லாம் சரியாகும்...! என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல?" என்றார்.
தன் கண்ணீரை துடைத்தபடி, இருக்கிறது என்பது போல் தலையசைத்தாள். அவளது நெற்றியில் முத்தமிட்டு, அரவிந்தனுடன் அங்கிருந்து கிளம்பினார் ரத்னா.
"குஷி, உனக்கு பிடிக்காத எதையும் நான் நிச்சயம் செய்ய மாட்டேன்"
"இல்லப்பா, சில சமயம் இப்படி செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது" என்றாள் அவள்.
ரத்னா மஹால்
"உன் மனசுல என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல ரத்னா. நமக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்ல சொன்ன. அப்புறம், நீயே குஷிக்கு நம்பிக்கையும் கொடுக்கிற...! இதெல்லாம் என்ன? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல. என்னால இதை நடக்க விட முடியாது. குஷி நம்ம அர்னவ்வை தான் கல்யாணம் பண்ணிக்கணும். ஷஷி கடைசி வரைக்கும் நம்ம வாழ்க்கையில இருக்கணும். இது நம்ம ஏற்கனவே முடிவு பண்ணது தானே? ஏன் இப்படி எல்லாம் செய்யற? நம்ம பிள்ளையை பத்தி நீ யோசிக்கலையா? அவன் என்ன நினைப்பான்? தன் மனசுல இருக்குறத அவன் வெளியில சொல்லல அப்படிங்கறதுக்காக நம்ம இப்படி செய்யலாமா? அவனை இந்த மாதிரி தண்டிக்காத. நம்ம, பிடிவாதமா நீ குஷியை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்னு சொன்னா அவன் நிச்சயம் கேட்பான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அதுக்கப்புறம் நம்ம நிச்சயமா கல்யாணத்தை நடத்தலாம்"
"நடத்தலாம் தான்... ஆனா நான், இந்த கல்யாணம் அவன் முழு சம்மதத்தோட நடக்கணும்னு நினைக்கிறேன். என்னை நம்புங்க. அவனே இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பான் பாருங்க"
"எப்படி இவ்வளவு நிச்சயமா சொல்ற?"
"இன்னைக்கு சாயங்காலம் நீங்களே அதை பார்ப்பீங்க. நான் சொல்றதை மட்டும் செய்யுங்க"
"ஒருவேளை நீ எதிர்பார்க்கிற மாதிரி அவன் நடந்துக்கலனா...??? அவன் கூலா இருந்துட்டா?"
"கூலாவா? உங்க பிள்ளையா? அப்படின்னா உங்களுக்கு உங்க பிள்ளைய பத்தி தெரியலன்னு அர்த்தம்" என்று சிரித்தார்.
அரவிந்தன் பெருமூச்சு விட்டார்.
மாலை
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அர்னவ், அரவிந்தனின் தோளில் சாய்ந்த படி சோகமாய் அமர்ந்திருந்த தன் அம்மாவை பார்த்து முகம் சுருக்கினான். லாவண்யாவும் நந்தாவும் கூட கவலையோடு இருந்தார்கள்.
"நம்ம என்ன செய்ய முடியும் ரத்னா? இதெல்லாம் விதி" என்றார் அரவிந்தன்.
"என்னம்மா ஆச்சு?" என்ற அர்னவ், அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தான், தன் கணினி பையை மடியில் வைத்துக்கொண்டு.
ஒன்றுமில்லை என்று தலையசைத்த அவர், குனிந்து கொண்டார்.
"நீங்க அழுதீங்களா?"
மீண்டும் இல்லை என்று தலை குனிந்தபடி தலையசைத்தார்.
"அவளை விடு அரு. அவளை சமாதானப்படுத்துறது அவ்வளவு ஈஸி இல்ல"
"என்ன விஷயம் பா?"
"குஷிக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு. அதை ஃபைனலைஸ் பண்ண அவங்க நாளைக்கு வராங்க" என்றான் நந்தா வருத்தத்தோடு.
அதைக் கேட்ட அவனது முகம் இருண்டு போனது.
"என்ன்னனது?" என்று அவன் எழுந்து நிற்க, அவன் மடியில் இருந்த கணினி பை கீழே விழுந்தது. ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்பட்டதாய் தெரியவில்லை.
"என்னடா பேசுற நீ?" என்றான் அடி தொண்டையில்.
"அவன் மேல ஏன் கோபப்படுற அரு? அவன் சொல்றது உண்மை தான். கல்யாண தேதியை முடிவு பண்ண அவங்க நாளைக்கு சாயங்காலம் வராங்க" என்றார் அரவிந்தன்.
அவனை கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவை ஏறிட்டான் அர்னவ். *இப்பொழுது நீ என்ன செய்யப் போகிறாய்?* என்று அவரது பார்வை எழுப்பிய கேள்வி அவனுக்கு புரிந்தது.
"அவளுக்கு அந்த ப்ரொபோசல் யார்கிட்ட இருந்து வந்திருக்குன்னு உனக்கு தெரியுமா?" என்றான் நந்தா.
நெருப்பை உமிழும் கண்களுடன் அவனைப் பார்த்தான் அர்னவ்.
"விக்னேஷ்..."
அவ்வளவு தான்... அவனுக்கு பொத்துக் கொண்டு வந்ததே கோபம்...!
"என்ன்னனது???? உங்களுக்கெல்லாம் புத்தி கெட்டு போச்சா? அவளை விக்னேஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு பதில், ஒரு பாட்டில் விஷத்தை வாங்கி கொடுத்து அவளை கொன்னுடுங்க... அவனை கல்யாணம் பண்ணிக்கிறதை விட அது எவ்வளவோ மேல்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து, வெளியே செல்ல அவன் முனைந்தான்.
அவன் எங்கு செல்கிறான் என்று புரிந்து கொள்வதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இல்லை. அரவிந்தன் ஓடிச் சென்று அவனைத் தடுத்தார்.
"எங்க போற அரு?"
"வேற எங்க? நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி உங்க ஃபிரண்டை கேள்வி கேட்க போறேன்" எரிமலையாய் குமுறினான்.
"தேவையில்ல. நாங்க ஏற்கனவே இதைப்பத்தி வேண்டிய அளவுக்கு பேசிட்டோம். எங்க முழு சம்மதத்தோட தான் அவன் இதை செய்றான்"
அதை கேட்டு முகம் சுளித்த அவன்,
"நீங்க எப்படி இதுக்கு சம்மதிச்சீங்க?" என்று உறுமினான்.
"நீ கேட்கிற கேள்விக்கு என்ன அர்த்தம்?" என்றார் ரத்னா.
"உங்களுக்கு விக்னேஷ் பத்தி தெரியாதா? அவன் ஒரு கடஞ்செடுத்த பொறுக்கி"
"அப்படின்னா அவளுக்கு வேற யாரை கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற?"
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லம்மா..."
"நான் உன்னை கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு"
அவனை இழுத்துச் சென்று சோபாவில் அமர வைத்தார் அரவிந்தன்.
"விக்னேஷோட அப்பா, எந்த ஒளிவு மறைவும் இல்லாம, அவன் முன்னாடி எப்படியெல்லாம் இருந்தான்னு ஷஷிகிட்ட பேசிட்டாரு. குஷியால தான் அவன் இன்னைக்கு மாறி இருக்கான்னு அவர் நம்புறாரு"
"விக்னேஷ் மாறுறதா? பாம்போட குணம் எப்பவுமே மாறாது பா... அது விஷத்தை தான் கக்கும்..." என்றான் பல்லை கடித்துக் கொண்டு.
"ரிலாக்ஸ்... நீ எதுக்காக இப்படி நடந்துக்கிறேன்னு எனக்கு புரியல. ஷஷி அவளோட அப்பா. அவளோட எதிர்காலத்தைப் பத்தி அவனைவிட வேற யாரால அதிகமாக யோசிக்க முடியும்? அவன் பொண்ணு மேல அவனுக்கு இல்லாத அக்கறையா? இந்த கல்யாணத்துக்கு உன்னால என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ அதை பண்ணு. இல்லனா விட்டுடு...!"
"ஹெல்ப் பண்ணனுமா? என் வாயில ஏதாவது வந்துட போகுது...! நீங்க தானே சொல்லுவீங்க குஷி உங்க மக மாதிரின்னு...? அவ உண்மையிலேயே உங்க மகளா இருந்தா, இப்படிப்பட்ட ஒரு பொறம்போக்குக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைப்பிங்களா?" வீடு அதிரும்படி கத்தினான் அவன்.
"இந்த விஷயத்துல நம்மளால எதுவும் செய்ய முடியாது"
அவரது கைகளை உதறிவிட்டு எழுந்து நின்ற அவன், அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்து, மீண்டும் நின்று அவரை நோக்கி திரும்பி,
"குஷி என்ன சொன்னா? அவ இதுக்கு ஒத்துக்கிட்டாளா?" என்றான் தவிப்புடன்.
"அவ அப்பாவோட முடிவு தான், அவளோட முடிவும்"
யாரும் எதிர்பாராத வண்ணம், மேசையின் மீது இருந்த ஒரு பூசாடியை எடுத்து, அதை கோபமாய் தரையில் ஓங்கி அடித்தான். அந்த ஜாடி, சுக்கு நூறாய் சிதறி, வீடு முழுவதும் தெறித்தது. அவனது கோபாவேசத்தை பார்த்த அனைவரும் திகைத்தார்கள். கோபத்தின் கடவுள் போல், முறுக்கிய நரம்புகளுடனும் சிவந்த விழிகளுடனும் நின்ற அவன், பார்க்கவே அச்சத்தை தந்தான்.
நந்தாவையும் லாவண்யாவையும் ஊடுருவும் பார்வை பார்த்த அவன், மென்று விழுங்கியபடி வீட்டை விட்டு வெளியேறினான். அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் அவர்களுக்கு தெரியும். அவனது திருமணத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அவனோ, ஒருவரின் படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தான்...! ஆனால் எதிர்பாராத விதமாய், அந்த ஒருவர், வேறு ஒருவரை மணக்க சம்மதம் தெரிவித்து விட்டார்...!
வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்த அவன், அடுத்த வீட்டில் இருந்த ஒருத்தியை தேடினான். அந்த ஒருத்தி, அவன் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டு நின்று அவனை கவனித்துக் கொண்டிருந்தாள்.
தன் கைபேசியை எடுத்த அவன்,
"சக்தி, பெசன்ட் நகர் பீச்சுக்கு வா" என்று அழைப்பை துண்டித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தின் கியரை மாற்றி, அடுத்த வீட்டை பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.
வீட்டினுள்...
தன்னை பார்த்து பொருள் பொதிந்த புன்னகை சிந்திக் கொண்டிருந்த ரத்னாவை ஏறிட்டார் அரவிந்தன். நான் சொன்னது நிகழ்ந்ததா? என்பது போல் தன் புருவம் உயர்த்தினார் அவர். ஆம் ரத்னாவின் கணிப்பு சரிதான். இப்பொழுது அரவிந்தனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அர்னவ், நிச்சயம் இந்த திருமணத்தை நடக்க விடமாட்டான்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top