2 அவள் வருகிறாள்!


2 அவள் வருகிறாள்!

மறுநாள்

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அர்னவ் எப்பொழுதுமே நெடுஞ்சாலைகளை தவிர்த்து சிறிய சாலைகளில் செல்வதை வழக்கமாய் வைத்திருந்தான். பெசன்ட் நகரின் தெருக்கள் விசாலமாக இருக்கும் என்பதால், அவன் அப்படி செய்வதை வசதியாக உணர்ந்தான். அன்றும் அப்படித்தான். தன் இருசக்கர வாகனத்தை அவன் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது, யாரோ ஒருவன் வேண்டுமென்றே அவன் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்து அவனை கீழே விழச் செய்தான். நல்ல வேலையாக அவன் வேகமாக செல்லவில்லை. அர்னவ் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு முன்பாக, அவனை எட்டி உதைத்த அதே மனிதன் அவனை அடிக்க கை ஓங்கினான். குங்ஃபூவில் பிரவுன் பெல்ட் வாங்கியவன் என்பதால், அந்த மனிதனின் சாமர்த்தியம் எதுவும் அர்னவிடம் எடுபடவில்லை. சில நிமிட சண்டைக்கு பிறகு, அந்த மனிதன் வாயில் ரத்தம் ஒழுக கீழே விழுந்து கிடந்தான். அவனை நோக்கி தன் கையை நீட்டினான் அர்னவ். வேறு வழியின்றி அவன் கரத்தை பற்றி எழுந்து நின்றான் அந்த மனிதன். அருகில் இருந்த ஒரு சிறிய மருத்துவ சாலைக்கு அவனை அழைத்துச் சென்றான் அர்னவ். அவனுக்கு ஊசி போட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.

"காலையில சாப்பிட்டியா?" என்றான் அர்னவ்.

அவன் இல்லை என்று தலையசைத்தான்.

"உன் பேர் என்ன?"

"சக்தி... சக்திவேல்..."

"சரி வா போகலாம்"

"என்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்க போறீயா பா?"

"அதைப்பத்தி நான் அப்புறமா யோசிக்கிறேன். முதல்ல வந்து சாப்பிட்டுட்டு, டாக்டர் கொடுத்த மாத்திரையை போடு" என்றான் அர்னவ்.

சக்திவேல் திகைத்து நின்றான். தன்னை தாக்க வந்த ஒருவனை, ஒருவனால் இந்த அளவிற்கு உபசரிக்கும் முடியும் என்பதை அவன் நம்பவில்லை. உணவு விடுதிக்கு சென்று சக்திக்காக சிற்றுண்டியை ஆர்டர் செய்தான் அர்னவ்.

"நீ ஒரு பொண்ண ஏமாத்துனேன்னு என்னால நம்பவே முடியல" என்றான் சக்தி.

"என்னது? நான் ஒரு பெண்ணை ஏமாத்துனேனா? நீ என்ன சொல்ற?" என்றான் அர்னவ் முகத்தை சுருக்கி.

"நிஷா பொண்ணு என்கிட்ட எல்லாத்தையும் சொல்லுச்சு. நீ அதை ஏமாத்திட்டியாமே..."

"நிஷாவா? யாரது?"

"நீ லவ் பண்ண பொண்ண யாருன்னே தெரியாத மாதிரி கேக்குறியே...  இன்னாப்பா ஆளு நீ?"

"லவ் பண்ணனா? என்ன உளறுற?" என்று யோசனையுடன் கூறிய அர்னவ், என்ன நிகழ்ந்திருக்க கூடும் என்பதை ஊகிக்க தொடங்கினான். அவனை பற்றி இல்லாதது பொல்லாததை எல்லாம் கூறி, நிஷா தான் சக்தியை அனுப்பி இருக்கிறாள் என்று அவனுக்கு ஓரளவுக்கு புரிந்தது.

"அந்த பொண்ண பார்த்தா உனக்கு பாவமா இல்லையா பா?"

"நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு,  அந்த பொண்ணு என்னை உண்மையிலேயே காதலிச்சிருந்தா, என்னை அடிக்க உன்னை அனுப்புவாளா?"

அவனை குழப்பத்துடன் பார்த்தான் சக்தி.

"நான் அந்த பொண்ண காதலிக்கல. என் பின்னாடி சுத்தி என்னை கடுப்பேத்துறான்னு அவங்க அப்பாகிட்ட போய் சொல்லிட்டேன். அதனால தான் அவளுக்கு என் மேல் கோபம்"

"மெய்யாவா?"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"மன்னிச்சிடு வாத்தியாரே... நான் அந்த பொண்ண அப்படியே நம்பிட்டேன். உனக்கு ஏம்பா அந்த பொண்ண புடிக்கல?"

"அவளை மட்டும் இல்ல, எனக்கு காதல்னாலே பிடிக்காது..."

"அவ செஞ்சது தப்பே இல்ல...!"

"என்ன்னனது?"

"பின்ன என்ன பா? பார்க்க சினிமா ஹீரோ மாரி டக்கரா இருக்க... லவ் புடிக்காதுன்னு நீ சொல்றத கேட்டா எனக்கே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குது... அப்படின்னா பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும்? அதனால தான் அந்த பொண்ணு உன்னை பொளக்க நினைச்சி இருக்குது..."

அதைக் கேட்டு சிரித்த அர்னவ்,

"காதல் வெளியழகு சம்பந்தப்பட்ட விஷயமில்ல. அது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்"

"உன்ன மாதிரி சோக்கா இருக்குற ஆம்பளைங்க எல்லாம் இப்படி சொன்னா, பொண்ணுங்க இன்னா தான் பா பண்ணனும்?"

"அதை விடு, நீ என்ன வேலை செய்ற?"

"ஒண்ணுமே இல்ல. அதனால தான் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்றேன்"

"உன்னோட ஃபோன் நம்பர் குடு. உனக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு வேலை இருந்தா நான் உனக்கு சொல்றேன்"

"தேங்க்ஸ் வாத்தியாரே"

"என்னை ஏன் வாத்தியாருன்னு கூப்பிடுற?"

"எல்லாம் ஒரு ரெஸ்பெக்ட் தான் பா"

"தமிழ்நாட்டுல வாத்தியார்னா, அது எம்ஜிஆர் ஒருத்தர் தான். அந்த பேர் அவருக்கு தான் பொருந்தும். என்னை அப்படி கூப்பிடாத"

"எனக்கும் தலைவரை ரொம்ப பிடிக்கும். நீயும் அவர மாதிரி பளபளன்னு இருக்க. அதனால தான் உன்னை அப்படி கூப்பிட தோணுது. மன்னிச்சுக்க பா... உன்னை நான் தப்பா புரிஞ்சுட்டேன்"

"பரவாயில்லை விடு, நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டதால தானே இப்போ நம்ம ஃபிரண்டா இருக்ககோம்..."

"சத்தியமா சொல்றேன் வாத்தியாரே... அந்த பொண்ண நான் சும்மா உடமாட்டேன். நடு ரோட்ல அவளை ஓட உடுறேனா இல்லையா பாரு"

"அப்படியெல்லாம் செய்யாத. என்ன இருந்தாலும் அவ ஒரு பொண்ணு. நான் போய் அவளைப் பத்தி கம்பளைண்ட் பண்ணதுக்கே அவங்க அப்பா அவளை போட்டு அடிச்சிட்டாரு. நீ அப்படியெல்லாம் பண்ணா, அவரு அவளை கொன்னுடுவாரு. போகட்டும் விடு" என்றான்.

"நீ உண்மையிலேயே நல்லவன் பா. அவளை நானா எதுவும் செய்ய மாட்டேன். ஆனா அந்தப் பொண்ணு மறுபடி என்கிட்ட வந்தா, அவளை  பஜார்ல ஓட உட்றதே சரி"

"என்னை எம்ஜிஆர்ன்னு சொன்ன, ஆனா நீ எம்ஜிஆர் படத்துல வர்ற நம்பியார் மாதிரி டக்குனு மாறிட்டியே..." என்று அவன் கவுண்டர், கொடுத்தான்.

அதைக் கேட்டு சிரித்த சக்தி, முகவாய் கட்டை பற்றி கொண்டு,

"ஆஆஆஆ..." என்றான், அது வலித்ததால்.

மாலை

அர்னவ் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது, தன் பெற்றோர்  மிகவும் மும்முரமாக எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதை கண்டான்.

"அரு, நீ வந்துட்டியா ரொம்ப நல்லதா போச்சு" என்றார் அரவிந்தன்.

"என்னப்பா விஷயம்?"

"அரு, உங்க அப்பா வானத்துல பறந்துகிட்டு இருக்காரு. இப்பவே நம்ம அவர் கூட இருந்து, அவருடைய நேரத்தை எடுத்துக்கணும். கொஞ்ச நாளுக்கு பிறகு, அவருக்கு நம்ம ஞாபகமே இருக்கப்போறதில்ல"  என்றார் இரத்னா.

"அம்மா, சுத்தி வளச்சி பேசுறதை நிறுத்திட்டு நேரடியா விஷயத்துக்கு வாங்க"

"என் ஃபிரண்டு வறான் டா" என்றார் அரவிந்தன் குதூகலமாய்.

"எந்த ஃபிரண்ட் பா?"

"ஷஷி வறான்..."

"கரீமாவும் வறா" என்றார் இரத்னா சந்தோஷமாய்.

"என்னம்மா சொல்றீங்க?"

"அவங்க குடும்பத்தோட வராங்க"

அர்னவ் திகைத்து நின்றான். அப்படி என்றால் குஷியும் வருகிறாளா? அவளை எப்படி அவனால் மறந்து விட முடியும்? தன்னிடம் ஒரு பெண் நெருங்கி வருவதை அவனால் தடுக்க முடியாது என்றால், அது குஷியாகத்தான் இருக்கும்.

போர்ட் பிளேயர் அவர்களை நன்கு அறியும். அவள் அர்னவை விட ஏழு வயது இளையவள் என்றாலும், அவளைப் போன்ற ஒரு சிறந்த தோழி அவனுக்கு இதுவரை அமையவில்லை. அந்தமான் தீவுகளின் ஒவ்வொரு கடற்கரையும் அவர்களது கதை சொல்லும்.

*எதற்காக என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டாய்?* என்று அவள் கேட்டால், அவன் அதற்கு என்ன பதில் கூற போகிறான்? அதற்கு அவன் பொருத்தமான பதிலை தேடி கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால், அவள் அதை ஏற்றுக் கொள்வாளா என்பது சந்தேகம் தான். அவனை கேள்வி கேட்கும் தைரியம் உள்ள ஒரே பெண்... ஏன், அவனை திட்டவும் அடிக்கவும் கூட உரிமையுள்ளவள் அவள் மட்டும் தான். அவன் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. சிரித்தபடி இரத்னாவின் பக்கத்தில் அமர்ந்தான். இரத்னாவின் கையில் சில புகைப்படங்கள் இருந்ததை அவன் கண்டான். அவர்கள் ஒட்டுமொத்தமாய் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டிருந்தது அவனுக்கு புரிந்தது.

"என்னம்மா இதெல்லாம்?"

"குஷியோட ஃபோட்டோஸ்... பாரேன், அவ இதுல எப்படி இருக்கான்னு... "

அவர் கையில் இருந்த அந்த புகைப்படங்களை பிடுங்கிய நந்துகிஷோர்,

"வாவ்... மா, இந்த ஃபோட்டோஸ் எல்லாம் எப்போ எடுத்ததுன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்றான்.

"ஏன் இல்லாம? ஆறு வருஷத்துக்கு முன்னாடி, கேப்டன் பானர்ஜியோட பொண்ணு கல்யாணத்துக்காக நம்ம கொல்கத்தாவுக்கு போயிருந்தோம். அப்போ எடுத்தது"

தன் ஓர கண்ணால் அந்த புகைப்படங்களை ஏறிட்டான் அர்னவ். அதில் அவள் குழந்தைத்தனமாய் இருந்தாள். அதை பார்த்து அவன் முகத்தில் புன்னகை அரும்பியது

"அவங்க எப்ப வராங்க?"

"இன்னும் ரெண்டு நாள்ல வராங்க"

"சரி, அவங்களுக்கு கெஸ்ட் ரூமை ரெடி பண்ண நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்"

"ஒன்னும் தேவை இல்ல. அவங்க நேரா நம்ம பக்கத்து வீட்டுக்கே வந்து இறங்கிட போறாங்க"

"எதுக்காகப்பா அங்க வந்து இறங்குறாங்க?" என்றான் அர்னவ் குழப்பத்துடன்.

"அவங்க இங்க டிரான்ஸ்பர்ல வராங்க. அடுத்த மூணு வருஷத்துக்கு அவங்க இங்க தான் இருக்கப்போறாங்க"

அவ்வளவு தான் அர்னவின் முகத்தில் இருந்த களை மங்கியது. அவள் இங்கு விருந்தாளியாய் வருவதென்றால் அவனுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது வெறும் சில நாட்களில் முடிந்துவிடும். ஆனால் இங்கேயே நிரந்தரமாய் தங்குவது என்றால், அது அவனுக்கு நல்ல அதிர்வலைகளை தரவில்லை. நிச்சயம் அது அவனை பிரச்சனையில் தான் கொண்டு விடும். அவனுக்கு குஷியை பற்றி நன்றாக தெரியும். அவள் பழைய அர்னவை எதிர்பார்த்தால், என்னவாகும்? எல்லாவற்றிற்கும் மேலாக, அரவிந்தனும் ஷஷியும் மிகவும் நெருங்கிய தோழர்கள். அவர்கள் மனதை காயப்படுத்தும் படி அவன் எதுவும் செய்து விடக்கூடாது என்ற பதற்றம் அவனைத் தொற்றியது.

அவன் முகத்தில் திடீரென்று தோன்றிய தயக்கத்தை அரவிந்தனும் இரத்னாவும் கவனிக்கவே செய்தார்கள். கிட்டத்தட்ட அவர்களுக்கும் அவன் மனதில் இருந்த அதே பயம் இருக்கத்தான் செய்தது.

"அரு, நீ ஒன்னும் கவலைப்படாதே. குஷி ரொம்ப புத்திசாலி பொண்ணு. அவ எல்லாத்தையும் புரிஞ்சுக்கவா" என்றார் அரவிந்தன்.

"அப்படித்தான் பா நானும் நம்புறேன். ஆனா நீங்க என்னை நினைச்சு கவலைப்படாதீங்க. என்னால உங்க பிரண்ட்ஷிப்புக்குள்ள எந்த பிரச்சனையும் வராது"

"நீ ஏன் கவலைப்படுற, அரு? குஷி இந்தியாவோட எல்லா மெட்ரோ சிட்டிஸ்லயும் இருந்த மாடன் பொண்ணு. அவ உன்னை விட ஹேண்ட்ஸமான நிறைய பேரை பார்த்திருப்பா. நீ அவளைப் பத்தி கவலைபடாத. அவளுக்கு உன்னை விட  நிறைய பெட்டர் சாய்ஸ் இருக்கு" என்றான் கிண்டலாய் நந்துகிஷோர்.

"நானும் அதை ஒத்துக்கிறேன்" என்றார் அரவிந்தன்.

அது அர்னவின் ஈகோவை தொட்டுப் பார்த்தது என்று தான் கூற வேண்டும். நந்துகிஷோர் குஷியை பற்றி கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவன் கூறியதும் தவறில்லை. குஷியின் சுலபமாய் அனைவரிடமும் பழகிவிடும் குணம், அவன் அறிந்தது தான். அவள் அனைவரிடமும் சீக்கிரமே ஒட்டிக்கொள்வாள். அப்படிப்பட்ட பின்னணியில் வளர்ந்தவள் அவள்... இந்திய கடற்படை அதிகாரியின் மகள் அவள்.

அரவிந்தனும் ஷஷியும் ஒன்றாக இந்திய கடற்படையில் பணிபுரிந்தவர்கள். தான் கையெழுத்திட்ட பனிக்காலம் முடிந்த பிறகு, அரவிந்தன் கடற்படையை விட்டு வந்துவிட்டார். ஆனால், ஷஷி இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இப்பொழுது அவருக்கு சென்னைக்கு வேலைமாற்றம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இங்கே வரவிருக்கிறார்கள்.

அர்னவும் குஷியும், அந்தமான் தலைநகரான போர்ட் பிளேயரில் ஒன்றாக ஐந்து வருடம் இருந்தவர்கள். அப்பொழுது அர்னவ்க்கு 13 வயது. ஷஷிக்கும் போர்ட்டு பிளேயருக்கு வேலை மாற்றல் கிடைத்தது. தனது சிறிய குடும்பத்துடன் அவர் அங்கு குடிப்பெயர்ந்தார். அப்பொழுது குஷிக்கு ஆறு வயது தான். அவள் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இரண்டு குட்டி குட்டி குதிரைவால் கொண்டையுடன் அவள் பார்க்க பொம்மை போல் இருப்பாள்.

அவளிடம் வம்பு செய்வதென்றால் அர்னவுக்கு அலாதி பிரியம். அவள் அவனது பெயரைஅல்ல்லலவ்... என்று கத்தும் போது அது அவனுக்கு வேடிக்கையாய் இருக்கும். அவளுக்கு ஆர் என்ற எழுத்தை உச்சரிப்பதில் பிரச்சனை இருந்தது. அதனால் அர்னவை அவள் அல்லவ் என்று அழைப்பது வழக்கம். ஆர் எழுத்தை அவள் சரியாக உச்சரிக்க துவங்கி விட்ட பிறகும் கூட அவள் அதை மாற்றிக் கொள்ளவில்லை. அர்னவ் அவளை நிம்மதியாக இருக்க விட்டதே இல்லை. அப்படித்தான் அவளும். அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டும், அவன் முதுகில் சவாரி செய்து கொண்டும் இருப்பது அவளுக்கு பிடித்த விஷயங்கள்.

ஒருவரை ஒருவர் சீண்டியபடியே அவர்கள் வளர்ந்தார்கள். தன் அம்மாவின் உடல்நிலை காரணமாக அரவிந்தன் இந்திய கடற்படையை விட்டு வெளியேறி சென்னையில் குடியேற முடிவு செய்தார். போர்ட் பிளேயர் விமான நிலையம் போர்க்களம் ஆகிப்போனது குஷியின் அழுகையால். தன்னை அர்னவ் விட்டு செல்கிறான் என்று தெரிந்து அவனை விட முடியாமல், அவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள். அந்த வருடம் தான் தன் பள்ளி படிப்பை முடித்திருந்தான் அர்னவ். அவனிடமிருந்து அவளை வலுக்கட்டாயமாய் பிரித்துச் சென்றார் ஷஷி. எப்பொழுதும் அவளை வெறுப்பேற்றி, அழ வைத்து வேடிக்கை பார்க்கும் அர்னவால், முதன் முறையாக அவள் அழுகையை பொறுக்க முடியவில்லை. விமானத்தில் ஏறி அமரும் வரை குஷியின் அழுகையுடன் கலந்த அல்ல்லலவ் அவன் காதில் விழுந்தபடியே இருந்தது.

சென்னை சென்று சேர்ந்த பிறகு, அழுது அழுது  குஷிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்பதை தெரிந்து கொண்ட அர்னவ் அவளுக்காக மனம் வருந்தினான்.

தன் கைபேசி மணியின் ஒளியால் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் அர்னவ். அந்த அழைப்பை அவன் ஏற்கவில்லை. யாரிடமும் பேசும் மன நிலையில் அவன் இல்லை. அவன் மனம் நிம்மதி இழந்திருந்தது. அவன்   அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டு பல நாள் ஆகிறது என்றாலும், அவனுக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாமல் இல்லை. ஏனென்றால் அவர்களது இரு குடும்பங்களும் தொடர்பில் தான் இருந்தன. கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாமல் ஒருவரை ஒருவர் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள் அரவிந்தனும் ஷஷியும்.

கடைசியாக அவளை பத்தாண்டுகளுக்கு முன்பு அவன் சந்தித்திருந்தான். அவன் அவளை பார்க்க வேண்டும் என்று விரும்பிய போது, அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அவர்களுக்கு சந்தர்ப்பம் அமைந்த போது, அவளை பார்க்கும் மனநிலையில் அவன் இல்லை. அவனைப் பற்றி அவள் அவனது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தது அவனுக்கு தெரியும். அவளிடம் முதலில் பழகியது போல பழக முடியும் என்று தோன்றாததால் அவன் அவளது உறவை ஊக்குவிக்கவில்லை.

அவனுக்கு பதற்றம் அதிகரித்தது. அவனால் அவளை தவிர்க்கவும் முடியாது, முன்பு போல நட்பாய் பழகவும் முடியாது. அவன் காயப்பட தயாராக இல்லை. அவன் யாரையும் நம்ப முடியாத நிலையில் இருந்தான். அவள் சிறிய வயதில் இனிமையானவளாக இருந்திருக்கலாம்! ஆனால் அதையே இப்பொழுதும் எதிர்பார்ப்பது சரியாய் இருக்காது. பெண்கள் தனது மனதை உடை மாற்றுவது போல மாற்றக் கூடியவர்கள். சிறந்த ஒன்று கிடைக்குமானால், அவர்கள் தன் கையில் இருப்பதை தூக்கி எறிய தயங்குவதில்லை. வளரும் போது, தங்களுடன் கூடவே பல மோசமான குணங்களையும் கவர்ந்து கொள்கிறார்கள். அவனால் யாரையும் அவனிடம் நெருங்க விட முடியாது. எந்த ஒரு மன உளைச்சலுக்கும் ஆளாக அவன் விரும்பவில்லை. அவன் தன் வழியில் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறான். அதுவே அவனுக்கு போதுமானது.

ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால், குஷி அவனுடைய சிறு வயது தோழி. அப்படி இருக்கும் பொழுது, எதற்காக அவன் அவர்களுடைய உறவைப் பற்றி இவ்வளவு யோசித்துக் கொண்டிருக்கிறான்? ஏன் அவனால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை?

அதற்கு காரணம், குஷி தனக்கு மருமகளாக வரவேண்டும் என்பது ரத்னாவின் விருப்பம்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top