16 உண்மையில் நீ யார்?

16 உண்மையில் நீ யார்?

விக்னேஷை அவ்வளவு அடித்துவிட்ட போதிலும், அர்னவ்வின் கோபம் தணிந்த பாடில்லை. மறுபடியும் விக்னேஷை பார்த்தால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவது என்று எண்ணியிருந்தான்.

அவனை காபி குடிக்க கீழே வருமாறு அழைத்தார் ரத்னா. தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அவன் தரைதளம் வந்தபோது, ரத்னாவும் நந்தாவும் எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"கோவிலுக்கா? எப்ப போக போறீங்க?" என்றான் நந்தா.

"நாளைக்கு ரொம்ப நல்ல நாள். நாளைக்கு நம்ம கோவிலுக்கு போயிட்டு வந்தா, நம்ம குடும்பத்துல சீக்கிரமே கல்யாணம் நடக்குமாம்"

"அப்படின்னா தயவு செய்து மறக்காம நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க" என்றான் கெஞ்சலாய் நந்தா.

"பின்ன? நான் போகாம இருப்பனா?"

'இவர்கள் ஆரம்பித்து விட்டார்களா?' என்ற முகபாவத்துடன் வந்து அமர்ந்தான் அர்னவ்.

"அரு, என்னைப் பத்தியாவது கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும். அதையாவது கொஞ்சம் நினைச்சு பாரேன்"

அதைக் கேட்டு சிரித்த ரத்னா,

"அவன் சொல்றது சரிதானே? வீட்ல அண்ணன் ஒருத்தன் இருக்கும்போது தம்பி எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?"

"அம்மா, அவனுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா அவன் தாராளமா பண்ணிக்கட்டும். எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீங்க"

பெருமூச்சு விட்ட ரத்னா,

"சாரி நந்து... நீ வாழ்க்கை பூரா பிரம்மச்சாரியா தான் இருக்கப் போற" என்றார்.

"நீங்க சொல்றது தான் நடக்கும் போல இருக்கு..." என்று வருத்தத்துடன் கூறிய அவன்,

"நாளைக்கு கோவில்ல கூட்டம் அதிகமா இருக்கும். ஜாக்கிரதையா போயிட்டு வாங்க" என்றான்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. கரிமாவும் என் கூட வறா"

"அப்படியா?"

"ஆமாம். அவ குஷிக்காக வேண்டிக்க வறா. அவ இந்த வருஷம் காலேஜ் முடிக்கிறா இல்லையா? அதுக்கப்புறம் கல்யாணம் தானே...?"

தன் மனதில் எழுந்த பதற்றத்தை விழுங்கினான் அர்னவ்.

"அவ நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு நான் வேண்டிக்க போறேன்" என்றார் ஆர்வத்துடன்.

"நீங்க மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?" என்றான் நந்தா.

"நான் எப்படா முடிச்சேன்?" என்றார் அவர்.

"நீங்க சொல்றதும் சரிதான். உங்க எண்ணம் முழுசா அவ மேல தானே இருக்கு??? கடவுள் உங்க விருப்பத்தை பூர்த்தி செய்யட்டும்"

ஏதாவது கூற வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் அர்னவுக்கும் தோன்றியது. ஆனால் என்ன என்பது தான் புரியவில்லை.

மறுநாள் காலை

செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்த அர்னவ்வின் கண்கள் குஷி வந்ததை பார்த்து அவள் பக்கம் திரும்பின. அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான் நந்தா. அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அவள் நேராக சமையலறைக்கு செல்ல, அவளை பின்தொடர்ந்தான் நந்தா. அது அர்னவ்க்கு எரிச்சலை தந்தது. எதற்காக அவன் எப்பொழுதும் அவள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான்? அவளை சற்று நேரம் விட்டு விலகி இருக்க முடியாதா இவனால்? அவள் சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, காபி ட்ரேயுடன் ரத்னாவே வெளியே வந்தார்.

"குஷி, நீ என்ன இவ்வளவு காலையில இங்க?"

"நான் காபி குடிக்க வந்தேன்" என்று அந்த ட்ரெயில் இருந்த ஒரு குவளையை எடுத்துக் கொண்டாள்.

"அதுல சக்கரை குறைச்சலா இருக்கும்" என்றார் ரத்னா.

குஷிக்கு தெரியும், அந்த சர்க்கரை குறைவான காபி யாருக்கு என்பது. உணவு மேசையின் மீது இருந்த சர்க்கரை டப்பாவில் இருந்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து அந்த காப்பியில் கலந்தாள். ரத்னாவின் கண்கள் அர்னவ்வை ஏறிட்டன. அவனது கண்கள் என்னவோ செய்தித்தாளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் இதழ்களோ புன்னகை பூத்தன. அவனுக்கு காபி கலந்து கொண்டு வர அவர் மறுபடியும் சமையலறைக்கு செல்ல நினைத்தபோது,

"அம்மா, நீங்க உங்க காபி ஆறி போறதுக்கு முன்னாடி குடிங்க. எனக்கு நானே போட்டுக்கிறேன்" என்று சமையல் அறைக்கு சென்றான்.

சில நிமிடங்களில் ஒரு குவளை காப்பியுடன் வந்து அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

"ஆன்ட்டி, உங்களுக்கு தெரியுமா, அந்த விக்னேஷ் நேத்து என்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண பார்த்தான்" என்றாள்.

அதை கேட்ட  அர்னவ்க்கு புறை ஏறியது. அவன் முதுகை தட்டினார் ரத்னா. மீண்டும் காப்பி பருகுவதை தொடர்ந்தான் அவன்.

"அவன் என்ன சொன்னான்?" என்றார் ரத்னா

"அவன் என்னை தொட ட்ரை பண்ணான்"

"அடக்கடவுளே! நீ என்ன செஞ்ச?"

"அந்தப் பக்கம் போன ஒருத்தன் என்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்தினான்" என்றாள்  அர்னவ்வை பார்க்காமல். ஆனால் அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"நல்ல காலம்... உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்"

"நீ ஜாக்கிரதையா இருக்கணும் குஷி" என்றான் நந்தா.

"அதுக்காகத்தான் அன்னைக்கே அவனை அன்ஃபிரண்ட் பண்ண சொல்லி அரு சொன்னான்" என்றார் ரத்னா.

"ஆமாம் குஷி, அவனை பிளாக் பண்ணிடு" என்றான் நந்தா.

"ஏற்கனவே செஞ்சாச்சு. அதனால தான் அவனுக்கு என் மேல கோபம்"

"அவனை என்கிட்ட விடு. அவனுக்கு நான் பாடம் சொல்லித் தரேன்" என்றான் நந்தா.

"தேவையில்ல, அவன் ஏற்கனவே நல்ல படத்தை கத்துக்கிட்டான்"

"அப்படியா? எப்படி?"

"என்னை ஒருத்தன் காப்பாத்தினான்னு சொன்னேன்ல? அவன் தான் விக்னேஷை போட்டு அடி வெளுத்துட்டான்"

"யாரு குஷி அவன்?"

"நானும் கூட உண்மையிலேயே அவன் யாருன்று தெரிஞ்சுக்க தான் நினைக்கிறேன்"  என்று அவள் அர்னவ்வை பார்க்க, அவன் தன் பார்வையை அவள் மீதிருந்து அகற்றாமல் இருந்தான். அந்தப் பார்வை அவளை என்னவோ செய்ய, தன்னை சமாளித்துக் கொள்ள மீண்டும் தன் கையில் இருந்த காபியை பருகினாள்.

ரத்னாவும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள் மனதில் எழுந்த சந்தேகத்தோடு.

"அவனை இதுக்கு முன்னாடி நீ பார்த்ததில்லையா?" என்றான் நந்தா.

"நிறைய தடவை பார்த்திருக்கேன்"

"அவனுக்கு நீ தேங்க்ஸ் சொன்னியா?" என்றார் ரத்னா.

இல்லை என்று தலையசைத்தாள் குஷி.

"ஏன் குஷி? அவன் மட்டும் வராம போயிருந்தா என்ன ஆகி இருக்கும்? அவன் உன்னை அந்த பொறுக்கிகிட்ட இருந்து காப்பாத்தி இருக்கான்... அவனுக்கு நீ தேங்க்ஸ் சொல்லணும் தானே?"

"என்கிட்ட தேங்க்ஸை எதிர்பார்த்து அவன் அதை செஞ்சிருப்பான்னு எனக்கு தோணல"

"நீ என்ன பேசுறேன்னு எனக்கு புரியல. சில நேரம் நீ என்னை தலை சுத்த வைக்கிற" என்றார் ரத்னா.

காப்பியை குடித்து முடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் அர்னவ். அவனை பின் தொடர்ந்தாள் குஷி. ரத்னாவும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பொருளோடு பார்த்துக் கொண்டார்கள்.

"நந்து நீ என்ன நினைக்கிற?"

"நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையே தான் நானும் நினைக்கிறேன். எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல, அவளை காப்பாத்தினது உங்க சீமந்த புத்திரன் தான்"

"நீ சொல்றது சரி. அவனைத் தவிர வேற யாரு தேங்க்ஸை எதிர்பார்க்காம அதை அவளுக்காக செய்யப் போறா?"

.....

குஷி தனக்கு பின்னால் வந்ததை உணர்ந்தான் அர்னவ். அவனது அறைக்குள் நுழையாமல், வாசலுக்கு வெளியிலேயே நின்று தன் கைகளை கட்டிக் கொண்டாள் குஷி. அர்னவ்வும் அவளைப் பார்த்தபடி தன் கைகளை கட்டிக் கொண்டான், நான் தயார் என்பது போல.

"நீதான் விக்னேஷை பிளாக் பண்ணியா?" என்றாள், அது அவன் தான் என்று அவளுக்கு தெரிந்திருந்த போதிலும்...! அவளுக்கு தெரியும், அவன் அதை ஒப்புக்கொள்ள மாட்டான் என்று. ஆனால் அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில்,

"ஆமாம் நான் தான் அவனை பிளாக் பண்ணேன்" என்றான்.

"ஏன் அவனை பிளாக் பண்ண?" என்று கேட்டபடி அறையின் உள்ளே நுழைந்தாள்.

"அவன் அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம்னு தான் அப்படி செஞ்சேன்"

"அப்படின்னா நீ என்னோட அக்கவுண்ட்டை ஹேக் பண்ணியா?"

"ஆமாம்" என்றான் அலுத்துக் கொள்ளாமல்.

"ஏன் பண்ண?"

"நான் என்ன செஞ்சாலும் உன் நல்லதுக்காக தான் செய்வேன்"

"எனக்கு நல்லது செய்ய நீ யாரு?"

"நீ யாருன்னா என்ன அர்த்தம்? உனக்கு நல்லா தெரியும் நான் யாருன்னு" என்றான் விரல்களை மடக்கி.

"இல்ல... உண்மையிலேயே நீ யாருன்னு எனக்கு தெரியல... சில சமயம் எனக்கு வேண்டியதை செய்ற... சில சமயம் என்னை காப்பாத்துற... ஆனா பல தடவை எனக்கு அந்நியன் மாதிரி தெரியிற. உண்மையிலேயே நீ எனக்கு யாரு? எனக்கு வேண்டியதை செய்ற உரிமையை உனக்கு யார் கொடுத்தா?"

"நான் யாரோவாவே இருந்துட்டு போறேன். ஆனா உங்க அப்பாவோட மரியாதையை காப்பாத்த எனக்கு யாரோட பர்மிஷனும் தேவையில்ல. அவர் அவமானப்படுறதை என்னால பொறுக்க முடியாது. அதுக்காகத்தான் நான் அப்படி செஞ்சேன். அதை செய்ய எனக்கு யாரோட பர்மிஷனும் தேவையில்ல"

"அப்படின்னா நீ அதை என் அப்பாவோட கௌரவத்தை காப்பாற்ற தான் செஞ்சியா?"

அவன் அதற்கு பதில் கூறவில்லை. அவள் என்ன கேட்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்து தான் இருந்தது.

"வாயை தொறந்து பேசு...ஏன் அமைதியா நிக்கிற?"

"இப்போ நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற?"

"உண்மையிலேயே உனக்கு தெரியாதா? தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை யாராலும் எழுப்ப முடியாது"

அதை நான் உனக்காகத்தான் செய்தேன் என்று அவன் கூற வேண்டும் என்பதைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள் என்று அவனுக்கும் தெரியும். அப்படி அவன் கூறினால், அவளிடம் இருந்து, ஏன்? என்ற அடுத்த கேள்வி எழும். அந்த கேள்விக்கு அவனால் பதில் கூற முடியுமா? நிச்சயம் முடியாது. மீண்டும் அவன் அமைதியானான். அது அவளை மேலும் கோபப்படுத்தியது.

"உனக்கு ஏன் இவ்வளவு அகங்காரம்? ஏன் உனக்கு இவ்வளவு அடம்? உன்னை நான் வார்ன் பண்றேன்... மறுபடியும் என் விஷயத்துல தலையிடாத. என்கிட்ட இருந்து விலகி இரு. நானும் உன்கிட்ட பேசமாட்டேன்... நிச்சயம் பேசமாட்டேன்" அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள்.

தொப்பென்று கட்டிலின் மீது அமர்ந்தான் அர்னவ். ஏன் இந்த பெண் பிரச்சனையை மேலும் மேலும் இடியாப்ப சிக்கல் ஆக்கிக் கொண்டே செல்கிறாள்? அவளால் சாவகாசமாய் இருக்கவே முடியாதா? ஆனால் அவனது உள்மனம் கூறியது, அவளால் அவனிடமிருந்து பேசாமல் இருக்க முடியாது என்று.

........

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டிலை விட்டு கீழே இறங்க தோன்றவே இல்லை அர்னவ்க்கு. ஞாயிற்றுக்கிழமை என்பதெல்லாம் வெறும் சாக்கு. அவனது சுறுசுறுப்பின்மைக்கு காரணம், குஷி அவனிடம் சண்டையிட்டுவிட்டாள் என்பது தான்.

அப்பொழுது அவனுடைய கைபேசி ஒலிக்க, அதில் ஒரு புதிய எண் ஒளிர்ந்ததை பார்த்தான். அந்த அழைப்பை அவன் ஏற்ற போது, ஒரு பெண்ணின் குரலை கேட்டு வழக்கம் போல் எரிச்சல் அடைந்தான். வழக்கம்போல் அவன் அவளை திட்டி விடலாம் என்று நினைத்தபோது, அந்த பெண் அண்ணா என்று அழைத்ததை கேட்டு அமைதியானான்.

"ஹலோ அண்ணா"

"யார் பேசுறீங்க?"

"என்னோட பேர் அர்ச்சனா. குஷியோட ஃப்ரெண்ட்"

எழுந்து அமர்ந்தான் அர்னவ்.

"சொல்லு"

"ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா அண்ணா? ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லாதீங்க... இது என் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம்"

"விஷயத்தை சொல்லு"

"என்னோட ப்ராஜெக்ட்டை டவுன்லோட் பண்ணி வச்சிருந்த பென் ட்ரைவ் தொலைந்து போச்சு. என்னோட லேப்டாப்ல இருந்ததையும் நான் டெலிட் பண்ணிட்டேன்"

"அதனால?"

"நான் டெலிட் பண்ண ஃபைலை என்னோட லேப்டாப்பில் இருந்து எடுத்துக் கொடுக்க முடியுமா?"

"ஆனா..."

"ப்ளீஸ், ப்ளீஸ் அண்ணா"

"இதை என்கிட்ட ஏன் கேக்குற?"

"ஏன்னா அதை உங்களால் மட்டும் தான் செய்ய முடியும் "

"என்னை பத்தி உனக்கு எப்படி தெரியும்?"

அவனுக்கு தெரியும், அவனைப் பற்றி குஷி தான் அவளிடம் கூறி இருக்க வேண்டும் என்று.

"உங்களைப் பத்தி குஷி தான் சொன்னா. அவ தான் உங்க நம்பரையும் கொடுத்தா. எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா அண்ணா?"

"சரி, ஆனா நீதான் நீ குஷியோட ஃப்ரெண்ட்ன்னு எனக்கு எப்படி தெரியும்? நீ அவளோட ஃபிரண்டு தான்னு என்கிட்ட யாராவது சொன்னா, நான் ஹெல்ப் பண்றேன்"  என்றான் வேண்டுமென்றே, அப்பொழுது தானே அவள் குஷியை தன்னுடன் அழைத்து வருவாள்? அப்படி வரும்போது அவனிடம் பேசுவதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்காது அல்லவா?

"சரிங்க அண்ணா"

நமுட்டு புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான் அர்னவ்.

பரபரவென எழுந்து குளித்து தயாரானான். வரவேற்பறைக்கு வந்து செய்தித்தாளை புரட்டத் துவங்கினான்.

"அரு, ஏற்கனவே நீ ரொம்ப லேட். ப்ரேக்பாஸ்ட் ரெடியா இருக்கு. வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் பேப்பரை படி" என்றார் ரத்னா.

செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு உணவு மேசைக்கு சென்றான் அவன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்க, அவன் துணுகுற்றான்.

ரத்னா கதவை திறந்தார். அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள் அர்ச்சனா.

"அர்ச்சனா நீயா?" என்றார் அவர்.

"அர்னவ் அண்ணன் கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்னு வந்தேன் ஆன்ட்டி"

"அப்படியா? உள்ள வா..."

"அரு, இவ தான் அர்ச்சனா. நம்ம குஷியோட ஃப்ரெண்ட்" என்றார் அவர்.

அவனது முகம் தொங்கிப்போனது

"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான்.

"நாங்க ஏற்கனவே ஒரு தடவை குஷியோட வீட்ல மீட் பண்ணி இருக்கோம். இவ தான் அன்னைக்கு அவளுக்கு நாட்டு கோழி கொண்டு வந்து கொடுத்தது. நீ அவளுக்கு ஏதோ ஹெல்ப் பண்ண போறியாமே... கேட்கவே சந்தோஷமா இருக்கு"

தனது ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளவில்லை அர்னவ்.  அவன் ஏற்கனவே அவளுக்கு உதவுவதாய் வாக்களித்து விட்டான். ஆனால் அதன் மூலம் குஷியுடன் பேச தீட்டிய திட்டம் சொதப்பிவிட்டது.

"உட்காரு அர்ச்சனா. நான் உனக்கு காபி கொண்டு வரேன்"

"தேங்க்யூ ஆன்ட்டி" என்று அமர்ந்து கொண்டாள் அர்ச்சனா. அப்பொழுது அங்கு வந்தாள் குஷி.

"உங்க இன்ட்ரொடக்ஷன் முடிஞ்சிடுச்சா?" என்றாள் அவள் நமுட்டு புன்னகையோடு.

அவளைப் பார்த்து முறைத்தான்  அர்னவ். அப்படி என்றால் வேண்டுமென்றே தான் அவள் அர்ச்சனாவை முன்னதாக அங்கு அனுப்பி இருக்கிறாள். அப்போதுதானே ரத்னா அவளை தனக்கு அறிமுகம் செய்து வைத்துவிடுவார்...!

அர்ச்சனாவிடம் இருந்து அவளது மடிக்கணினியை பெற்று அவளுடைய ப்ராஜெக்ட் பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு தன் வேலையை தொடங்கினான்.

"இன்னைக்கி எங்க கூட சாப்பிடுங்க" என்றார் ரத்னா.

"இல்ல ஆன்ட்டி அம்மா எங்களுக்காக லன்ச் ப்ரிப்பேர் பண்றாங்க. லாவண்யாவும் வரப்போறா" என்றாள்.

"ஓ... அப்படியா? நடத்துங்க..."

"நீங்களும் எங்க கூட வந்துடுங்களேன்"

"இல்லடா... இன்னைக்கி சண்டே. எல்லாரும் வீட்ல இருப்பாங்க. அதனால இன்னைக்கு எனக்கு வேலை அதிகம்"

வேண்டிய நேரத்தை எடுத்துக் கொண்டு தன் வேலையை செய்து முடித்தான்  அர்னவ். அந்த மடிக்கணினியை லாக் அவுட் செய்யாமல் எழுந்து நின்றான்.

"முடிஞ்சிடுச்சு"

"தேங்க்யூ அண்ணா"

"ப்ராஜெக்ட்டை சப்மிட் பண்றதுக்கு முன்னாடி அதை டெலிட் பண்ணாதீங்க" என்று கூறிவிட்டு, குஷியை ஒரு  விபரீத பார்வை பார்த்து விட்டு தன் அறைக்கு சென்றான் அவன்.

இந்தப் பெண் தான் எவ்வளவு பிடிவாதக்காரியாக மாறிவிட்டாள்...! முன்பு போல் அவனை புரிந்து கொள்ள முடியாதா அவளால்? எதையோ யோசித்த அவன், தன் கைபேசியை எடுத்து வாட்ஸ் அப்பை பார்த்தான். அவன் நினைத்தது சரி தான். அவள் ஒரு புது ஸ்டேட்டஸ் வைத்திருந்தாள்.

அவர்கள் நம்மிடம் நடந்து கொள்வது போலவே நாமும் நடந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று காட்டும் போது, அவர்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படுகிறது...!

இயலாமையுடன் கண்களை மூடினான்  அர்னவ். அப்படி என்றால் அவள் வேண்டுமென்றே தான் அவனை தவிர்க்கிறாள். அவள் அவனிடம் பேச விரும்பவில்லை என்ற உண்மையை அவனால் தாங்க முடியவில்லை.

அவனுக்கு சரியான பதிலை கூறிவிட்டது போல்  மகிழ்ச்சியில் திளைத்தாள் குஷி. ஆனால் அதற்கு பதிலை, அவனது ஸ்டேட்டஸ் மூலமாக கண்டபோது அவளது கண்கள் தளும்பின.

நீ எதை தவிர்க்கிறாய்
என்பதில் கவனமாக இரு.
சில சமயங்களில்,
நீ தவிர்க்கும்
அந்த ஒன்று தான்
உனக்கு மிகவும்
வேண்டியதாக இருக்கும்...!

பொத்துக் கொண்டு வந்த தன் அழுகையை அவள் கட்டுப்படுத்துவதை பார்த்த அவன், மென்று விழுங்கினான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top