15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...


15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...

கரிமாவுடன் தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் குஷி. தேர்வுகள் முடிந்து, வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டிருந்த அவளுக்கு பொழுது போகவில்லை. அப்பொழுது அங்கு வந்த ரத்னாவை பார்த்து அம்மாவும் மகளும் ஆனந்தம் அடைந்தார்கள்.

"ஹாய் ஆன்ட்டி"

"ஹாய் பேபி"

"நந்து வீட்ல இருக்கானா?"

"அண்ணன் தம்பி ரெண்டு பேரும் வீட்ல தான் இருக்காங்க"

"எனக்கு செம போர் அடிக்குது"

"ரெண்டு பேரும் ஹால்ல தான் இருக்கானுங்க. நீ வேணும்னா அங்க போ. நான் கொஞ்ச நேரத்துல வரேன்"

தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை செய்ய இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணினாள் குஷி.

"சரிங்க ஆன்ட்டி. நான் ஒரு ஃபோன் பண்ணணும். ஆனா என் ஃபோன்ல சிக்னலே இல்ல. அம்மா அவங்க ஃபோனை எங்க வச்சாங்கன்னு தெரியல" என்றாள் கரிமாவின் கைபேசியை ஒளித்து வைத்துவிட்டு.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. இந்தா என் ஃபோன்ல இருந்து கால் பண்ணிக்கோ" என்று தன் கைபேசியை அவளிடம் கொடுத்தார் ரத்னா.

"தேங்க்யூ ஆன்ட்டி" என்று அதை பெற்றுக் கொண்ட அவள்,

"சார்ஜ் ரொம்ப கம்மியா இருக்கு" என்றாள்.

"சரி, நந்து கிட்ட சொல்லி அதை சார்ஜ்ல போட சொல்லு"

"ஓகே" என்றபடி அங்கிருந்து நடந்தாள்.

அவள் எதிர்பார்த்தது இதைத்தான். யாருக்கோ ஃபோன் செய்வது போல் பாசாங்கு செய்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தாள். ரத்னாவின் ஃபோனை சைலன்ட் மோடுக்கு மாற்றிவிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டாள். அர்னவ்வை கையும் களவுமாய் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்தாள்.

அர்னவ் தன் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, நந்தா டிவி பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் குஷியை பார்த்தார்கள். ஆனால் அவள் நந்தாவை மட்டும் தான் பார்த்தாள்.

"ஹாய் குஷி... உன்னோட லீவ் எப்படி போகுது?"

"அதை பத்தி மட்டும் கேட்காத... செம போர்!"

"ஏம்பா?"

"என்னோட ஃபிரண்ட்ஸ் அவங்க ஊருக்கு போயிட்டாங்க. இங்க டைம் ஸ்பென்ட் பண்ண எந்த ஃபிரெண்டும் இல்ல" என்றபடி தன் கைபேசியில் ஏதோ செய்தாள்.

"சாரி குஷி. நானும் பிஸியா இருக்கேன். இல்லன்னா நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்"

"பரவாயில்லை விடு, என்னோட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் செக் பண்ணு" என்றாள்.

தனது கைபேசியை எடுத்த நந்தா, அவளது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸை பார்த்தான்.

"வாவ்... ரொம்ப நல்லா இருக்கு. இது உன்னோட சின்ன வயசு ஃபோட்டோ தானே? இது நீ எப்ப எடுத்தன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு"

ஆமாம் என்று தலையசைத்த குஷி, அதை யார் பார்த்திருக்கிறார்கள் என்ற பட்டியலை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே, ரத்னாவின் பெயர் அதில் இருந்தது.

"இதை என்னால நம்பவே முடியல" என்றாள் முகத்தை சுருக்கி.

"என்ன ஆச்சு குஷி?"

"ரத்னா ஆன்ட்டியும் என்னோட ஸ்டேட்டஸை பார்த்திருக்காங்க" என்றாள் அர்னவ்வை பார்த்தபடி.

அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அமைதியாய் இருந்தான் அவன். அவனது கண்கள் மடிக்கணினியின் திரையின் மீதே இருந்தது

"அதுல என்ன இருக்கு? அம்மா பார்த்திருப்பாங்க..." என்றான் நந்தா.

"நான் இங்க வந்து, இப்போ தான் என்னோட ஸ்டேட்டஸை மாத்தினேன்"

"அதனால என்ன?"

தன் பாக்கெட்டில் இருந்த ரத்னாவின் கைபேசியை எடுத்த அவள்,

"அவங்க ஃபோன் என்கிட்ட தான் இருக்கு. சார்ஜ் போட சொல்லி என்கிட்ட கொடுத்து அனுப்பினாங்க. அப்புறம் எப்படி அவங்க பார்த்திருக்க முடியும்?"

"என்ன சொல்ற நீ? உன்கிட்ட அவங்க ஃபோன் இருக்குன்னா, அவங்க எப்படி உன் ஸ்டேட்டஸை பார்த்தாங்க?"

"அதையே தான் நானும் கேட்கிறேன்... ஆன்ட்டி நம்பரை வேற யாராவது வாட்ஸ் அப் வெப்ல கனெக்ட் பண்ணி வச்சிருக்காங்களா?" என்றாள் குஷி

நந்தாவால் அர்னவ்வை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதை செய்தது அர்னவ் தான் என்று அவனுக்கு புரிந்து போனது.

"எனக்கு தெரியலையே குஷி" என்றான் தடுமாற்றத்துடன்

ரத்னாவின் கைபேசியை நந்தாவிடம் கொடுத்து,

"இதை சார்ஜ்ல போடு" என்றாள்.

சரி என்று தலையசைத்த நந்தா, அதை சார்ஜருடன் இணைத்தான்.

அர்னவ்வின் முகத்தில் அதிர்ச்சியை எதிர்பார்த்திருந்தாள் குஷி. ஆனால் அப்படிப்பட்ட ஒரு பாவம் அவன் முகத்தில் தோன்றவில்லை. அவன் அவளுக்கு வியப்பளித்தான் என்று தான் கூற வேண்டும். அவனது முகத்தில் பொருள் பொதிந்த புன்னகை துளிர்த்தது. அவளிடம் மாட்டிக்கொண்டதை அவன் ரசித்தது போல் இருந்தது. அவளது கணிப்புகளை பொய்யாக்குவதில் அவன் ஒரு மன்னன் என்பதில் சந்தேகம் இல்லை. அவள் எதிர்பார்க்காததை செய்வதிலும், அவள் எதிர்பார்ப்பதை செய்யவே செய்யாததிலும், அவன் கரை கண்டவனாய் இருந்தான்.

மேலும் அவளுக்கு வியப்பளிக்கும் வகையில், அவனது பெயர், முதல் முறையாய் அவளது ஸ்டேட்டஸை பார்த்தவர்களின் பட்டியலில் தோன்றியது. இதற்குப் பிறகு அதில் மறைத்து வைக்க ஏதுமில்லை அல்லவா!

...........

குஷியின் விடுமுறைக்குப் பிறகு...

தங்கள் ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட விவரங்களை தனது குழுவினரிடம் ஒப்படைத்துவிட்டு தனது அறைக்கு வந்தான் அர்னவ். இனி அவனுக்கு வேலை இல்லை. அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை அவன் முடித்து விட்டான். அதனால் முகநூல் பக்கத்தை திறந்து அதை பார்வையிட்டான். அதில் குஷி தனது சமீபத்திய புகைப்படத்தை ப்ரொஃபைலாக அப்டேட் செய்திருந்தாள். வழக்கம் போலவே அதில் அவள் மிக அழகாய் இருந்தாள்.

128 லைக்களும், 62 கமெண்ட்டுகளும் இருந்தன. அதில் இருந்த கமெண்ட்களை ஒவ்வொன்றாய் படித்தான். வாவ்... சோ குட்... பியூட்டிஃபுல்... கார்ஜியஸ்... என்பது போல் பல கமெண்ட்டுகள் இருந்தன. புன்னகைத்தபடி படித்துக் கொண்டு வந்தவனின் முகம் மாறியது. அவனது கை அசையாமல் நின்றது, *தொட துடிக்கிறேன்...* என்ற கமெண்டை படித்தபோது. அவனுக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அந்த கமெண்டை அனுப்பியது விக்னேஷ். தனது ஃபிரண்ட் ரிக்வெஸ்டை ஏற்றுக்கொள்ளச் சொல்லி குஷியை கேட்ட அதே விக்னேஷ் தான். இப்படித்தான் அவன் எல்லா பெண்களிடமும் நடந்து கொள்வான். அவன் அந்த கமெண்ட்டை எழுதி ஐந்து நிமிடம் தான் ஆகியிருந்தது. குஷி கல்லூரியில் இருப்பாள். அவள் இன்னும் அந்த கமெண்ட்டை பார்த்திருக்க மாட்டாள். அவள் அதை பார்க்கவும் கூடாது. அதைப் பார்த்தால், அவள் பதற்றமடைவாள்.

தனது கம்ப்யூட்டர் அறிவை பயன்படுத்தி, அவளது முகநூல் பக்கத்தை ஹேக் செய்தான். அந்த கமெண்டை டெலிட் செய்து, விக்னேஷை பிளாக் செய்தான்.

விக்னேஷின் கமெண்டை அழித்துவிட்ட பிறகும், அவனது ரத்தம் கொதித்துக் கொண்டுதான் இருந்தது. விக்னேஷ்கு எவ்வளவு தைரியம் இருந்தால், குஷி தனக்கு வேண்டிய பெண் என்று தெரிந்த பிறகும் இப்படி செய்திருப்பான்...! விக்னேஷ் அவன் முன் வராமல் இருப்பது அவனுக்கு நல்லது. வந்தால், அவனுக்கு இருந்த கோபத்தில்  விக்னேஷின் மண்டையை உடைத்து விடுவான் அர்னவ்.

அதன் பிறகு அவனுக்கு எந்த வேலையையும் செய்ய தோன்றவில்லை. குஷியின் ஒவ்வொரு போஸ்டையும் அலசி பார்த்தான், அப்படிப்பட்ட கமெண்ட் ஏதாவது இருக்கிறதா என்று. அப்படி ஒன்றும் இல்லாமல் போகவே நிம்மதி அடைந்தான்.

திடீரென்று அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் அவனை பதற்றம் அடையச் செய்தது. அவன் கடிகாரத்தை பார்த்தான்.  குஷியின் கல்லூரி நேரம் முடிய அரைமணியே மீதம் இருந்தது. அவள் இன்னும் அரை மணி நேரத்தில் கல்லூரியை விட்டு கிளம்பி விடுவாள். அலுவலகத்தை விட்டு அவசரமாய் கிளம்பினான்.

லாவண்யா மற்றும் அர்ச்சனாவுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்தாள் குஷி. குஷியிடமிருந்து விடை பெற்று, அவர்கள் இருவரும், கல்லூரியின் வளாகத்தை ஒட்டியிருந்த பெண்கள் விடுதிக்குள் சென்றார்கள். தனது இருசக்கர வாகனத்தை கிளப்பினாள் குஷி. அவள் ஒரு சிறிய தெருவிற்குள் வந்த போது, விக்னேஷ் அவளது வழியை மறைத்துக்கொண்டு நிற்பதை பார்த்தாள். அந்த தெருவில் யாரும் இல்லாதது அவளுக்கு ஒரு வித நடுக்கத்தை தந்தது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நந்தா தான் அவளுக்கு அந்த வழியை காட்டினான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் வண்டியை விட்டு கீழே இறங்கினாள் அவள்.

"எதுக்காக என் வழியை மறைச்சிகிட்டு நிக்கிற?"

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பிளாக் பண்ணி இருப்ப?"

"பிளாக் பண்ணினா? என்ன பேசுற நீ?"

"ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத. நான் யார் தெரியுமா? என்னை பகைச்சுக்கிட்டு நீ நிம்மதியா இருந்துடுவியா? உண்மையிலேயே நான் உன்னை தொட்டா என்ன செய்வ?"

அவளை நோக்கி நகர்ந்தான் அவன். அவனது அந்த செயல் அவளை திகைப்பூட்டியது.

"பிஹேவ் யுவர்செல்ஃப்... என்கிட்ட இருந்து விலகி இருக்கிறது தான் உனக்கு நல்லது"

"உன்னை தொட்டா, அப்படி என்ன கெடுதல் நடந்துடப் போகுதுன்னு நானும் பாக்குறேன்" அவளை தொட தன் கையை நீட்டினான்.

அவள் அங்கிருந்து ஓடினாள். அவளை துரத்திக்கொண்டு ஓடிய விக்னேஷ், தலை குப்புற கீழே விழுந்தான். அவனது தாடையில் விழுந்த குத்து, அவனது உதட்டை கிழித்துவிட்டிருந்தது. தன் உதட்டை தொட்ட அவன் கையில் ரத்தம் ஒட்டிக்கொண்டது. தன் தலையை மெல்ல உயர்த்திய அவன், சிவந்த முகத்துடன் அசுரன் போல் நின்றிருந்த அர்னவ்வை பார்த்து திகிலடைந்தான். அங்கிருந்து ஓட விக்னேஷ் முயன்ற போது பின்னால் இருந்து அவனை அர்னவ் எட்டி உதைக்க, மரத்தில் மோதி கீழே விழுந்தான். விக்னேஷை அவன் தாறுமாறாய் எட்டி உதைக்க,அவன் வலியில் துடித்தான். அவனது பேய்த்தனமான கோபத்தை பார்த்த குஷி கதிகலங்கி போனாள்.

"அர்னவ்... விடு அவனை... போதும் நிறுத்து..."

அர்னவ்வின் காதில் ஒன்றும் விழவில்லை. அவன் கையைப் பிடித்து அவள் தடுத்து நிறுத்தினாள். ஆனாலும் அவனை அவளால் அடக்க முடியவில்லை. அவன் அவ்வளவு கோபமாய் இருந்தான். அவனை அவள் பின்னால் பிடித்து இழுக்க, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து சிட்டாய் பறந்தான் விக்னேஷ். அவனை துரத்திச் செல்ல அர்னவ் முயன்றபோது, அதற்கு குஷி அனுமதிக்கவில்லை. கைகளை நீட்டியபடி அவன் முன்னால் வந்து அவனை செல்ல விடாமல் தடுத்தாள். பேய் தனமாய் தோற்றமளித்த அவனை பீதியுடன் பார்த்து நின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அது ஒன்று போல் இல்லை. அவர்களது மனம் வெவ்வேறு சுழலில் அகப்பட்டிருந்தது.

ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தான் அர்னவ். அதை ஸ்டார்ட் செய்து, அவளும் ஸ்டார்ட் செய்ய காத்திருந்தான். அதிர்ச்சியில் இருந்து குஷி இன்னும் வெளியே வரவில்லை. விக்னேஷின் செயலை விட, அர்னவ்வின் கோபம் தான் அவளது அதிர்ச்சிக்கு காரணம். அவனது சிவந்திருந்த கண்கள், அவன் ரத்தம் கொதித்துக் கொண்டிருந்ததை காட்டியது. பதற்றத்துடன் தனது வண்டியை ஸ்டார்ட் செய்தாள் அவள். அவள் சென்ற அதே வேகத்தில் தன் வண்டியை செலுத்தி, அவளை பின்தொடர்ந்தான் அர்னவ். ரியர் வியூ கண்ணாடியின் மூலமாக அவனை பார்த்தபடி சென்றாள் குஷி. அது அவனுக்கும் தெரியும்.

அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள் தனது வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் வந்த அவன், தன் கையை அவள் வண்டியின் மீது வைத்துக் கொண்டு,

"இனிமே அந்த வழியில வராத. எவ்வளவு டிராஃபிக்கா இருந்தாலும் மெயின் ரோட்டிலேயே போ" என்றான் ஊடுருவும் பார்வையோடு. அவனை மறுத்துப் பேசும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. சரி என்று தலையசைத்தாள்.  அவன் தன் வீட்டிற்குள் சென்றான்.

அவளது பதற்றம் அடங்கவே இல்லை. அர்னவ் விக்னேஷை அடித்த காட்சி தான் அவளது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. என்ன ஒரு முரட்டுத்தனம்...! என்ன ஒரு ஆத்திரம்...! அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்? அவனுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை என்றால், எதற்காக விக்னேஷ் மீது அவ்வளவு கோபம் கொண்டான்? சரியான நேரத்திற்கு எப்படி அங்கு வந்து சேர்ந்தான்? அது தற்செயலாக நடந்ததா? அவள் தன்னை பிளாக் செய்து விட்டதாய் விக்னேஷ் கூறினானே...? அவள் எப்போது அவனை பிளாக் செய்தாள்?  ஒருவேளை இதற்கு பின்னால் இருப்பது அர்னவ் தானோ?

என்ன தான் நடந்தது? அவள் தன் மூளையை கசக்கிப் பிழிந்தாள். ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை. விக்னேஷ் கூறியதற்கான காரணம் அவளுக்கு புரியவில்லை. அப்பொழுது அவளது கைபேசி சினுங்கியது. அவளுடன் நேவி பள்ளியில் படித்த வைஷ்ணவியின் அழைப்பு அது. அதை பார்த்தவுடன் அவள் முகம் பிரகாசம் அடைந்தது.

"ஹாய் வைஷு எப்படி இருக்க?"

"நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்"

"ஏன்?"

"உன்னால தான்"

"நான் என்ன செஞ்சேன்?"

"உன்னோட ஃபேஸ்புக் போஸ்டையும் அதுல இருந்த கமெண்ட்டையும் பார்த்தேன். யாரு அந்த பொறுக்கி? நல்ல வேலை நீ அந்த கமெண்ட்டை டெலிட் பண்ணிட்ட... முதல்ல அந்த பொறுக்கியை பிளாக் பண்ணு"

தனக்கு விடை கிடைக்காமல் இருந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்று தோன்றியது அவளுக்கு.

"நீ எதை பத்தி பேசுற?"

"விக்னேஷ்னு ஒருத்தன் கமெண்ட் பண்ணி இருந்தானே, அதைப்பத்தி தான் பேசுறேன்"

"என்ன கமெண்ட்?"

"என்ன உனக்கு எதுவுமே தெரியாத மாதிரி கேக்குற?"

"உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியாது"

"அப்படின்னா அந்த கமெண்ட்டை டெலிட் பண்ணது யாரு? ஒருவேளை விக்னேஷே அதை டெலிட் பண்ணிட்டானா?"

"இல்ல... அர்னவ் பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்!"

"யாரு? உன்னோட அல்லவ்வா?"

"ம்ம்ம்..."

"நெஜமாவா? நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் இருக்கீங்களா? கடைசில நீ அவர்கிட்ட போயி சேந்துட்ட்டியா? உன் மனசுல இருக்கிறதை அவர்கிட்ட சொல்லிட்டியா?"

"நீ என்ன சொல்ற?"

"உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாதா?"

"ஷட் அப்"

"நான் ஷட் அப் பண்ணிக்கிறேன். ஆனா நீ அப்படி இருக்காத. உன் மனசுல இருக்குறத அவர்கிட்ட சொல்லிடு"

"நீ என்ன பேசுறேன்னு எனக்கு புரியல" என்றாள் தடுமாற்றத்துடன்

"உன்னை நீயே ஏமாத்திக்காத குஷி. நீங்க சின்ன வயசுல ஃபிரண்டா இருந்தீங்க தான். ஆனா உன் மனசுல இருக்கிறது உண்மையிலேயே வெறும் ஃபிரண்ட்ஷிப் மட்டும் தான்னு நீ நினைக்கிறியா? நீ அவரை விட்டு பிரிஞ்ச போது உனக்கு வயசு 11. ஆனா நீ அவரைப் பத்தி பேசாத நாளே கிடையாது. அதுக்கு என்ன அர்த்தம்?

"நான் அதைப் பத்தி பேச விரும்பல. அதெல்லாம் முடிஞ்சு போச்சு"

"முடிஞ்சு போச்சா? உங்களுக்குள்ள என்ன நடந்ததுனு எனக்கு தெரியாது. ஆனா நீ முடிஞ்சிடுச்சுன்னு சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்"

"அதை விடு. விக்னேஷ் என்ன கமெண்ட் எழுதி இருந்தான்னு சொல்லு"

அவள் பார்த்ததை குஷியிடம் கூறினாள் வைஷ்ணவி. குஷிக்கு குழப்பம் ஏற்பட்டது. விக்னேஷின் கமெண்டை அர்னவ் பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனால், அந்த கமெண்ட் எப்படி மாயமாய் மறைந்தது?

"அதை படிச்ச போது, அந்த விக்னேஷ் மூஞ்சை அடிச்சு உடைக்கணும்னு எனக்கு தோணுச்சு" என்றாள் வைஷ்ணவி.

"அதையெல்லாம் ஏற்கனவே செஞ்சாச்சு"

"அந்த நல்ல வேலையை செஞ்சது யாரு?"

"வேற யாரு? அர்னவ் தான்..."

'என்ன சொல்ற? இப்போதானே எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொன்ன?"

அமைதியாய் இருந்தாள் குஷி. அவள் என்ன கூற முடியும்?

"பரவாயில்லையே... உன் பேச்சை கேட்டு, அவர் அவன் மூஞ்சை அடிச்சி உடைக்கிற அளவுக்கு போயிருக்காரே..."

"இல்ல, விக்னேஷ் கமெண்ட் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நான் அதை பாக்குறதுக்கு முன்னாடியே அர்னவ் அதை டெலிட் பண்ணிட்டான்"

"எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு யாரோ சொன்னாங்க... ஆனா அவங்க அக்கவுண்ட் பாஸ்வேர்டை கூட கொடுத்து வச்சிருக்காங்க..."

"இல்ல நான் என் பாஸ்வேர்டை அவனுக்கு கொடுக்கல. அவனுக்கு அது எப்படி தெரிஞ்சதுனு எனக்கு தெரியல"

"அப்படின்னா அவர் இன்னும் உன் மேல அக்கறை வச்சிருக்கார்ன்னு தானே அர்த்தம்? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"இல்ல... நீ நினைக்கிறது உண்மை இல்ல"

"உண்மையா இல்லாம இருக்கலாம்... ஆனா நிச்சயம் பொய்யில்ல"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இதை நான் டீல் பண்றேன்"

"அதை புத்திசாலித்தனமா செய். மேல மேல சிக்கலாகாத"

"சரி" என்று அழைப்பை துண்டித்தாள் குஷி.

*அப்படின்னா விக்னேஷை பிளாக் பண்ணது அர்னவ்.  ஆனா, அவன் எப்படி அதை செஞ்சான்? அவன் தான் கம்ப்யூட்டர்ல புலி ஆச்சே... அவனோட காலேஜ் ப்ராஜெக்ட்டே, காலேஜ் ஒய்ஃபை பாஸ்வேர்டை எப்படி ஹேக் பண்றதுன்னு தானே...! என்னோட பாஸ்வேர்டை ஹேக் பண்றதுக்கு அவனுக்கு என்ன கஷ்டமாவா இருக்கப் போகுது? ஆனா அந்த உரிமையை அவனுக்கு யார் கொடுத்தது? என்னோட பர்மிஷன் இல்லாம அவன் அதை எப்படி செய்யலாம்? நான் மட்டும் லிமிட்ல இருக்கணும்னு நினைப்பான், ஆனா அவன் மட்டும் எந்த லிமிட்டையும் கிராஸ் பண்ணுவான்..." புலம்பினாள்.

நந்தா கூறியது அவள் நினைவுக்கு வந்தது. அர்னவ் தன் செயல் மூலமாய் பேசுவான் என்று அவன் கூறினானே. உண்மையிலேயே அவள் மீது அவனுக்கு அக்கறை இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை வெளிப்படையாய் கூறுவதில் அவனுக்கு என்ன பிரச்சனை? ஏன் அவன் இப்படி அவள் உயிரை வாங்குகிறான்? அவனுக்கு என்ன தான் வேண்டும்? அவளுக்கு அவன் பதில் கூறியே ஆக வேண்டும்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top