14 உடைந்த ஜாடி

14 உடைந்த ஜாடி

அர்னவ்வின் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த புதிய பூ சாடியை பார்த்தார், அவனுக்கு காபி கொண்டு வந்த ரத்னா. பழைய ஜாடியை தூக்கி எறிந்து விட்டு அவன் புதிதாய் வாங்கி விட்டானோ என்று எண்ணினார் அவர்.

"இந்த ஜாடி ரொம்ப அழகா இருக்கு. இதை நீ எப்போ வாங்கின? பழசை தூக்கி போட்டுட்டு, அதுக்கு பதிலா இதை வாங்கினியா?" என்றார்.

"எனக்கு பிடிச்ச எதையுமே நான் தூக்கி போட மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா? இது புதுசு இல்ல. அதே பழைய உடைஞ்ச ஜாடி தான்"

"நெஜமாவா?" என்றார் ஆர்வத்துடன்.

அதை எடுத்து ஆராய்ந்து பார்த்தார். அதில் உடைந்ததற்கான அறிகுறியே இல்லை. அவ்வளவு அழகாய் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. அவருக்கு தெரியும், அது வெறும் ஜாடி சம்பந்தப்பட்ட விஷயமல்ல... அவனது உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது. அது, அந்த ஜாடிக்கு பின்னால் ஒளிந்திருந்த விஷயத்தின் ஆழத்தை காட்டுவதாகவே தோன்றியது.

"இதை நீ பெயிண்ட் பண்ணியா?"

"ஆமாம்"

"எப்படி பண்ண? உள்ள கூட விரிசல் எதுவுமே தெரியலையே..."

"பெயிண்ட் பண்றதுக்கு முன்னாடி, ஒயிட் சிமெண்ட் வச்சி விரிசல் எல்லாத்தையும் பூசிட்டேன்"

"நீ இந்த வேலை எல்லாம் இவ்வளவு அழகா செய்வேன்னு எனக்கு தெரியாதே!"

"அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல, மா. இன்னைக்கு யூ டியூப்ல எல்லாமே இருக்கு. நம்ம என்ன வேணும்னாலும் கத்துக்கலாம்"

"இந்த சாதாரண ஜாடிக்காகவா நீ பெயிண்ட் பண்றது எப்படின்னு கத்துக்கிட்ட?"

அதற்கு அவன் பதில் கூறவில்லை. அவர் கொடுத்த காபியை அமைதியாய் பருகினான்.

"சூப்பரா செஞ்சிருக்க. நீ இதை அழகா செய்வேன்னு நான் எதிர்பார்த்தேன், ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கல. ரொம்ப அழகா இருக்கு. இதே மாதிரி நீ எல்லா விஷயத்துலயும் ஜெயிச்சு வருவ..."

எதையோ யோசித்து புன்னகைத்தான் அர்னவ்.

வரவேற்பறை

ஷஷி குஷியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருவதை பார்த்தார் அரவிந்தன். அவர்களை தொடர்ந்து வந்தார் கரிமா.

எதற்காக அவளை அப்படி அழைத்து வருகிறான் அவள் ஏதாவது தவறு செய்து விட்டாளா? ஆனால் ஷஷியை பார்த்தால் கோபமாக இருப்பதாய் தெரியவில்லை என்று எண்ணினார் அரவிந்தன்.

"எதுக்காக நீ அவளை இப்படி இழுத்துகிட்டு வர?" என்றார் அரவிந்தன்.

செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்த அர்னவ், அதைக் கேட்டு தலை நிமிர்த்தினான். முகத்தை சுருக்கியபடி எழுந்து நின்றான். ரத்னாவும் நந்தாவும் கூட அங்கு வந்தார்கள்.

"இந்த பொண்ணோட டார்ச்சர் என்னால தாங்க முடியல. அந்த விஷயத்தை நான் இன்னைக்கே முடிக்கணும்னு நினைக்கிறேன்" என்றார் ஷஷி.

"அவ என்ன செஞ்சா?"

கைகளை கட்டிக்கொண்டு முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு நின்ற குஷியை அனைவரும் பார்த்தார்கள்.

"டூ வீலர் வாங்கிக் கொடுத்தாலே ஆச்சின்னு என்னை படுத்தி வைக்கிறா. அது சேப்டின்னு எனக்கு தோணல"

"நான் சேஃபா தான் இருப்பேன். என்னை சுதந்திரமாய் இருக்க விடுங்க" என்றாள் குஷி.

"நீ கீழ விழுந்துட்டா என்ன ஆகுறது?" என்றார் கரிமா.

"அம்மா, ரோட்ல நடந்து போகும் போது கூட கீழே விழுந்து அடிப்பட வாய்ப்பிருக்கு..."

"அவ சொல்றதும் சரி தானே அண்ணா?" என்றார் ரத்னா.

"ஒரு மிலிட்டரி காரனா இருந்துகிட்டு ஏன் இப்படி தைரியம் இல்லாம இருக்க?" என்றார் அரவிந்தன்.

"ஒரு மிலிட்டரி காரனா நான் எதை வேணும்னாலும் சமாளிப்பேன். ஆனா ஒரு அப்பாவா நான் ரொம்ப கோழை..."

"அப்பா, நீங்க இப்படி ஓவரா பண்றதை பார்க்கும்போது எனக்கு எரிச்சலா இருக்கு" என்றாள் குஷி.

"இந்த பொண்ணை என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியல" என்றார் ஷஷி.

"வாங்கி கொடுங்க அங்கிள்" என்றான் அர்னவ்.

அவனை அனைவரும் வியப்போடு பார்த்தார்கள். ஏனென்றால் அவன் தனக்கு சம்பந்தம் இல்லாத எந்த விஷயத்திலும் தலையிட மாட்டான் என்று எல்லாருக்கும் தெரியும்.

"நீ நெஜமா தான் சொல்றியா அர்னவ்?"

"ஆமாம்... சில கண்டிஷன்ஸ்ஸோட வாங்கி கொடுங்க"

குஷி முகத்தை சுருக்கி அவனை பார்க்க, மற்ற அனைவரும் அப்படி என்ன கண்டிஷன் அது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

"அவ உடம்புல சின்னதா கீறல் விழுந்தா கூட, அதுக்கப்புறம் அவ எப்பவும் பைக்கை தொட கூடாதுன்னு சொல்லுங்க. ரொம்ப ஸ்பீடா வண்டி ஓட்ட கூடாதுன்னு சொல்லி வாங்கி கொடுங்க"

பல்லை கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள் குஷி. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன், அவளது முறைப்பினால் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை.

"இது ரொம்ப நல்ல ஐடியா. அதனால தான் நான் இங்க வந்தேன்" என்ற ஷஷி,

"அவளுக்கு ஏத்த வண்டியை நீயே ச்சூஸ் பண்ணிடு" என்றார் அர்னவ்விடம்.

அவன் சரி என்று தலையசைத்து அனைவருக்கும் வியப்பளித்தான்.

"நீ எப்போ ஃப்ரீயா இருப்ப, அர்னவ்?"

"உங்களுக்கு நான் எப்பவுமே ஃப்ரீ தான் அங்கிள்"

பேச்சிழந்து ரத்னாவை ஏறிட்டார் அரவிந்தன். அவரோ உடைந்த பூசாடியை பற்றி நினைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தார். உடைந்ததை ஒட்ட வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டால், அதை அவன் எப்படியும் செய்தே தீருவான்... அதிலும் முதலில் இருந்ததை விட மிகச் சிறப்பாய்...!

.......

தன் பெற்றோருடன் வீட்டிற்கு சென்ற குஷி,

"இதெல்லாம் ரொம்ப ஓவர் பா. நான் தான் வண்டியை ஓட்ட போறேன்... நீங்க எதுக்கு அவனை வண்டியை ச்சூஸ் பண்ண சொன்னீங்க?" என்றாள்.

"உன்னைவிட, என்னை விட அவனுக்கு எல்லாம் பெட்டரா தெரியும்... அவன் ச்சூஸ் பண்ணி கொடுத்தா இப்போ என்ன?"

"எனக்கு பிடிக்காத மாதிரி அவன் செலக்ட் பண்ணா என்ன செய்றது?"

"அவன் செலக்ட் பண்றது உனக்கு பிடிக்கும்"

தரையில் காலை உதைத்துவிட்டு அங்கிருந்து தன்னறைக்கு சென்றாள் குஷி.

"எனக்கு என்ன பிடிக்கும்னு அவனுக்கு தெரியும்னு அவன் செலக்ட் பண்றேன்னு ஒத்துக்கிட்டான்? என்னை இரிடேட் பண்றவங்க லிஸ்ட்ல இவன் தான் எப்பவுமே ஃபர்ஸ்ட்ல இருக்கான்.  எனக்கு பிடிக்காத மாதிரி ஏதாவது வண்டியை அவன் வாங்கிட்டு வரட்டும், அதுக்கப்புறம் இருக்கு அவனுக்கு...!" என்று பினாத்தியபடி தன் அறையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

மாலை

குஷியை தரைதளம் வரச் சொல்லி அழைத்தார் ஷஷி. விருப்பமே இல்லாமல் வந்த அவள், அர்னவ் தன் அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

*இவன் இப்போ இங்க எதுக்கு வந்திருக்கான்? எனக்கு வண்டியை செலக்ட் பண்ணி கொடுக்க என்னையும் அவன் கூட வர சொல்லி கேட்க போறான். ஆனா நான் அவன் கூட போக மாட்டேன்...  நிச்சயமா மாட்டேன்*

"குஷி இங்க வந்து அர்னவ் சாய்சை பாரு"

அவன் இவ்வளவு சீக்கிரம் வேலையை முடித்து விட்டான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவன் வாங்கிக் கொண்டு வந்த வண்டியை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட நினைத்தாள். ஆனால் அவளால் அப்படி கூற முடியவில்லை. ஏனென்றால் அவள் கண் முன்னால் நின்று கொண்டிருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த வண்டி. நம்ப முடியாமல் அவனை ஏறிட்டாள்.  இது அவளுக்கு பிடிக்கும் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? இதைப்பற்றி அவள் யாரிடமும் கூறியது இல்லையே...!

அந்த வண்டியின் சாவியை அவளிடம் கொடுத்த அவன்,

"வண்டியை ரொம்ப வேகமாக ஓட்டாத. அதோட பிக்கப் ரொம்ப நல்லா இருக்கு. பார்த்து ஜாக்கிரதையா ஓட்டு" என்று ஷஷியின் பக்கம் திரும்பிய அவன்,

"சீ யூ அங்கிள்" என்றான்.

"தேங்க்யூ யங் மேன்..."

"எங்க அவ்வளவு வேகமாக போற அர்னவ்? இரு நான் உனக்கு காபி கொண்டு வரேன்" என்றார் கர்மா.

"பரவாயில்லை ஆன்ட்டி. நான் போகணும்" என்று, குஷியை பார்த்து இதமாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

"உனக்கு இந்த வண்டி பிடிச்சிருக்கா?" என்றார் ஷஷி.

ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் தான் சொன்னேனே... உனக்கு அவனோட சாய்ஸ் பிடிக்கும்னு..."

"அவளுக்கு என்ன பிடிக்கும்னு அவனுக்கு தெரியாதா?" என்றார் கரிமா.

ஆனால் குஷியால் அதை அவ்வளவு சுலபமாய் விட்டுவிட முடியவில்லை. அது ஒரு லேட்டஸ்ட் மாடல் பைக். அவளுக்கு அது பிடிக்கும் என்று அவனுக்கு எப்படி தெரியும்? அவள் தனது மூளையை கசக்கினாள். அப்பொழுது தான் அவளுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அது தனக்கு மிகவும் பிடித்த பைக் என்று அவளது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸில் வைத்திருந்தாள். ஆனால் அந்த ஸ்டேட்டஸை பார்த்தவர்களின் பெயர் பட்டியலில் அவனது பெயர் இருக்கவில்லை. அவசரமாய் தன் அறைக்கு ஓடியவள் தனது ஸ்டேட்டஸை மாற்றினாள்.

*உன் மனதில் யாருக்கும்
முக்கியமான இடத்தை வழங்காதே!
இடத்தை கொடுப்பது சுலபம்...
அதைப் பெற்றவருக்கு அதன் மதிப்பு தெரியவில்லை என்றால்,
காயப்பட போவது நீ தான்...!*

அரை மணி நேரத்திற்கு பிறகு, யார் அந்த ஸ்டேட்டஸை பார்த்தார்கள் என்று அவள் சோதித்த போது அதில் அர்னவ் பெயர் இல்லை. அவளுக்கு குழப்பத்தை அளித்தது என்னவென்றால், அவனது ஸ்டேட்டஸ் அவளுக்கு பதில் அளிப்பது போல் இருந்தது.

*உனக்கு தெரிந்த
ஒவ்வொருவருக்கு பின்னாலும்
உனக்கு தெரியாத
உண்மை இருக்கலாம்*

அதைப்பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் அவளுக்கு. இதற்கு பிறகு எப்படி அவளால் சும்மா இருக்க முடியும்? அவர்கள் வீட்டிற்கு சென்றாள். வரவேற்புறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ரத்னா.

"குஷி, உனக்கு அர்னவ் சாய்ஸ் பிடிச்சிருக்கா?"

"அது என்னோட ஃபேவரைட் பைக் ஆன்ட்டி"

"நெஜமாவா? அது தான் என் பையன்... பாரு, உனக்கு என்ன பிடிக்கும்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு"

லேசாய் தலையசைத்தாள் குஷி.

"சரி, இன்னைக்கு உன்னோட ஸ்டேட்டஸ்ல என்ன ஸ்பெஷலா வச்சிருக்க?"

அதைக் கேட்டு குழம்பிய அவள்,

"நீங்க என் ஸ்டேட்டஸை பார்க்கலயா?" என்றாள்.

"இன்னைக்கு நான் ரொம்ப வேலையா இருந்துட்டேன். அதனால அதை பார்க்க எனக்கு டைம் கிடைக்கல"

குஷிக்கு சுருக்கென்றது. ஏனென்றால் அவருடைய பெயரை, பார்த்தவர்களின் பட்டியலில் அவள் பார்த்தாள்.

"உண்மையிலேயே நீங்க என் ஸ்டேட்டஸை பார்க்கலையா?"

"இரு, இப்ப நான் பாக்குறேன்" என்று தன் கைபேசியை எடுத்து பார்த்த அவர்,

"உனக்கு இந்த மாதிரி ஸ்டேட்டஸ் எல்லாம் எங்கிருந்து கிடைக்கிது?" என்றார்

அவரை விசித்திரமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் குஷி. இதுவரை அவளது ஸ்டேட்டஸை அவர் பார்க்கவில்லை என்றால், அவரது பெயர் எப்படி பார்த்தவர்களின் பட்டியலில் வந்தது? அப்படி என்றால் அவருக்கு முன்னதாக யாராவது அவர் பெயரில் பார்க்கிறார்களா? அந்த யாராவது அர்னவ்வாக இருக்குமா?

"உங்களுக்கு இந்த மாதிரி ஸ்டேட்டஸ் வேணுமா? நீங்களும் வைக்கப் போறீங்களா?"

"இல்ல, நான் வைக்க மாட்டேன்"

"ஏன்?"

"நான் யாருக்கு அதை அனுப்பணும்னு நினைக்கிறேனோ, அவங்களுக்கு நேரடியா அனுப்பி விடுவேன்" என்றார் கிண்டலாய்

"அங்கிளுக்கா?" என்று பேச்சை மாற்றினாள்.

ஆமாம் என்ற தலையசைத்துவிட்டு,

"எல்லாருமே யாரோ ஒருத்தரை மனசுல வச்சுக்கிட்டு தானே ஸ்டேட்டஸ் எல்லாம் வைக்கிறாங்க?" என்றார்.

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல..." என்றாள் தடுமாற்றத்துடன்.

"அட நான் உன்னைப் பத்தியா சொன்னேன்...? உனக்கு சந்தேகமா இருந்தா உன் ஃபிரண்ட்ஸை வேணா கேட்டு பாரு"

"அதனால தான் நீங்க ஸ்டேட்டஸ் வைக்கிறது இல்லையா?"

"நான் மட்டும் இல்ல, எங்க ஃபேமிலில யாருமே ஸ்டேட்டஸ் வைக்கிறது இல்ல"

அதைக் கேட்டு அதிர்ந்தாள் குஷி. அர்னவ் தான் ஸ்டேட்டஸ் வைக்கிறானே...! அந்த விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் இருக்கிறது?

"உங்க பேமிலில யாருமே வைக்கிறது இல்லையா?"

"யாரும் வைக்கிறது இல்ல"

"என்னால இதை நம்ப முடியல"

"வேணும்னா, நீயே பாரு" என்று தனது கைபேசியை எடுத்து, அவளிடம் காட்டினார். அதில் அர்னவ் வைத்த ஸ்டேட்டஸ் இல்லை.

"நான் தான் சொன்னேன்னே..."

குஷி பதற்றமானாள். இதற்கு என்ன அர்த்தம்? இதை உடனே சோதித்துப் பார்த்து விட வேண்டும். ரத்னாவிடம் விடைபெற்று வெளியே வந்தாள். அப்பொழுது எதிரில் வந்தான் நந்தா.

"நந்து நீ இன்னைக்கு என்னோட ஸ்டேட்டஸ் பார்த்தியா?"

"இன்னும் பாக்கலையே... ஏன்?"

"இப்போ பாரு"

"ஏதாவது ஸ்பெஷலா?"

தன் கைபேசியை எடுத்து பார்த்தான். அவளும் பக்கத்தில் நின்று அவன் பார்ப்பதை கவனித்தாள். அவனது கைபேசியிலும் அர்னவ் வைத்த ஸ்டேட்டஸ் இல்லை. என்ன நடக்கிறது?

தன் வீட்டிற்கு ஓடி சென்று, கரிமாவின் கைபேசியை எடுத்து அதிலும் சோதித்துப் பார்த்தாள். அதிலும் அவனது ஸ்டேட்டஸ் இல்லை. தொப்பென்று அமர்ந்தாள். இதற்கு என்ன அர்த்தம்? அவன் மற்ற அனைவரது பெயரையும் பிளாக் செய்து விட்டு, அவள் மட்டும் பார்க்க வேண்டும் என்று இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் வைக்கிறானா? அப்படி என்றால் அவன் வைக்கும் அனைத்து ஸ்டேட்டஸும் அவளுடைய ஸ்டேட்டஸிற்கான பதில் தானா? இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? அல்லது, அவள் அளவுக்கு அதிகமாக யோசிக்கிறாளா? எதையோ யோசித்தவள், மீண்டும் தனது ஸ்டேட்டஸை மாற்றினாள்.

*ஆழம் காண முடியா உன் மனதில் அப்படி என்ன தான் இருக்கிறது?*

சில நிமிடங்களில் அவனது பெயர் அவளது ஸ்டேட்டஸ் பட்டியலில் தோன்றியது. அதை அவசரமாய் எடுத்து பார்த்தவள் பெருமூச்சு விட்டாள்.

*ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களது செயலை கவனி!*

அவளுக்கு நிச்சயமாகி போனது அவன் வைக்கும் ஒவ்வொரு ஸ்டேட்டஸ்சும் அவளுக்கான பதில் தான்.

மறுநாள் காலை

தனது புது பைக்கில் கல்லூரிக்கு செல்ல தயாரானாள் குஷி. தலைகவசத்தை அணிந்து கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தாள். அதை பார்த்த அஸ்வினும், ஸ்ருதியும் அவளை நோக்கி ஓடி வந்தார்கள்.

"குஷி அக்கா, இது புது பைக்கா?"

"ஆமாம். எப்படி இருக்கு?"

"சூப்பரா இருக்கு. இது உங்களுக்கு கிஃப்ட்டா?"

"கிட்டத்தட்ட அப்படித்தான்... வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்..."

"ஏஏஏஏஏ.... என்று கத்தியபடி வாண்டுகள் இரண்டும் வண்டியில் ஏறிக்கொண்டது.

ஒரு சுற்று சுற்றி விட்டு அவர்களை ஏறிய இடத்திலேயே இறக்கி விட்டாள். அப்பொழுது தனது மடிக்கணினி  பையுடன் அர்னவ் வருவதை பார்த்தார்கள்.

"அர்னவ் அண்ணா, எங்க போறீங்க?" என்றான் அஸ்வின்.

"ஆஃபீஸ் போறேன்"

"உங்க பைக் எங்க?"

"பஞ்ச்சர்"

"குஷி அக்கா, அர்னவ் அண்ணனை ட்ராப் பண்ணிடுங்க"

கண்களை பெரிதாக்கி அவனை பார்த்தாள் குஷி. அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை.

"ஆமாம் கா, உங்க ஃபிரண்டை அவர் ஆஃபீஸ்ல விட்டுடுங்க" என்றாள் ஸ்ருதி.

"அக்காவுக்கு இன்னும் ஒழுங்கா வண்டி ஓட்ட தெரியாதுன்னு நினைக்கிறேன். அதனால தான் அவங்களுக்கு தயக்கமாய் இருக்கு. வண்டி ஓட்றதுல பாய்ஸ் தான் சூப்பர்" என்றான் கிண்டலாய் அஸ்வின்.

"கேர்ள்சும் வண்டி நல்லா ஓட்டுவோம். அக்கா, அவரை நீங்க கூட்டிகிட்டு போங்க" என்ற ஸ்ருதி, அர்னவ் கையை பற்றி இழுத்துச் சென்று, உட்காரச் சொல்லி வற்புறுத்தினாள்.

"உட்காரலாமா?" என்றான் அவன்.

அது அவளை உலுக்கி போட்டது. உண்மையிலேயே அவளுடன் வர அவன் தயாரா? அந்த சில்வண்டுகளின் முன்னால் வேண்டாம் என்று அவளால் கூற முடியாது. சரி என்று தலையசைத்தாள். நமுட்டு புன்னகையுடன் அமர்ந்த அர்னவ், அஸ்வின் ஸ்ருதியை பார்த்து கையசைக்க, வண்டியை கிளப்பினாள் குஷி.

"என்னை டாக்ஸி ஸ்டாண்டில் விட்டா போதும்"

சரி என்று தலையசைத்து, விட்டு டாக்ஸி ஸ்டாண்டிற்கு வந்து வண்டியை நிறுத்தினாள்.

கீழே இறங்கிய அவன்,

"தேங்க்ஸ்" என்றான்.

"வெயிட்..."

"என்ன?" என்றான் புருவம் உயர்த்தி.

"எனக்கு இந்த பைக் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?"

அந்த கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்காத அவன், தான் மாட்டிக் கொண்டு விட்டதை உணர்ந்தான். அவன் என்ன சொல்வது? நான் இதை உன் ஸ்டேட்டஸில் பார்த்தேன் என்றா? அதுவும் எனது அம்மாவின் வாட்ஸ்அப் நம்பரின் மூலமாக திருட்டுத்தனமாக பார்த்தேன் என்றா கூறுவது? அவள் அவ்வளவு சுலபமாய் விட்டுவிடுவாளா? நிச்சயம் மாட்டாள். அவளது வெடிகுண்டு கேள்விகளால் அவனை திணற அடிப்பாள். அந்த கேள்விகளுக்கு பதில் கூற அவன் தயாராகவில்லை. அதனால் பொய் கூறுவது என்று முடிவு செய்தான்

"ஓ...  உனக்கு இந்த பைக் பிடிக்குமா?"

"உனக்கு தெரியாதா?"

"எனக்கு எப்படி தெரியும்?" என்றான் அமைதியாய்.

"அப்புறம் எப்படி எனக்கு பிடிச்ச அதே பைக்கை நீ செலக்ட் பண்ண?"

"மைலேஜ், லோ மெயின்டனன்ஸ், மார்க்கெட் வேல்யூ இதையெல்லாம் வச்சு தான் செலக்ட் பண்ணேன்"

"இது எனக்கு பிடிச்ச பைக்ன்னு உண்மையிலேயே உனக்கு தெரியாதா?"

"உனக்கு இது பிடிக்கும்னு எப்பவாவது என்கிட்ட சொன்னியா? இல்ல தானே? அப்புறம் எனக்கு எப்படி தெரியும்?"

அவளது கண்கள் சட்டென்று கலங்கியது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை. அதற்காக அவன் வருத்தப்பட்டான். வண்டியை விட்டு கீழே இறங்கிய அவள், அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயன்றாள்.

"அதுல செல்ஃப் ஸ்டார்டர் இருக்கு..."

"தெரியும்... ஆனா இப்போ, எனக்கு ஒருத்தரை உதைக்கணும்னு தோணுது" என்றாள் தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய். அது அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

அவன் புன்னகையை பார்த்து சில நொடி அவள் தன்னை மறந்தாள். அந்த புன்னகை அவனது முகக்களையை எவ்வளவு அழகாய் அடிக்கோடிட்டு காட்டுகிறது. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த அவன், தன் விரல்களை அவள் முன்னால் சொடுக்கினான்.

"உன்னோட கோபம் குறைஞ்சிடுச்சா?"

"நீ ஒன்னும் அதைப்பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல"

"ஜாக்கிரதையா இரு குஷி. அடுத்தவனை உதைக்கணும் அப்படிங்கிற கோவத்துல, உன்னை நீயே காயப்படுத்திக்க வாய்ப்பிருக்கு" என்றான் அக்கறையோடு.

அவளுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

*இவன் எதையுமே நேரடியாக பேச மாட்டானா?  அது என்ன அவ்வளவு கடினமா? எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கிறான் என்று தான் பார்த்து விடலாம். நான் அவனது டின்டின் என்பது உண்மையாக இருந்தால், நிச்சயம் அவனை என்னிடம் மனம் விட்டு பேச வைப்பேன்* என்று எண்ணியபடி தனது பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றாள்... அவன் மீது ஒரு கோப பார்வையை வீசி விட்ட பின்பு...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top