13 கசப்பான கடந்த காலம்
13 கசப்பான கடந்த காலம்
நூலகத்திற்கு செல்லும் வழியில்...
"இந்த ஏரியாவுல வேற ஏதாவது இடம் இருக்கா?" என்றாள் குஷி.
"எப்படிப்பட்ட இடம்?"
"மீட்டிங் ஸ்பாட் மாதிரி..."
"எக்மோர்லயா?"
"ஆமாம், லைப்ரரிக்கு பக்கத்துல..."
"இங்க மியூசியம் தான் இருக்கு. அது தான் இந்தியாவிலேயே இரண்டாவது பழமையான மியூசியம். சுத்தி பார்க்க நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கும்..."
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம, உக்காந்து பேசுற மாதிரி ஒரு இடம் வேணும்"
அருங்காட்சியகத்திற்கு எதிரில் தன் வண்டியை நிறுத்திய நந்து,
"நீ லைப்ரரியில மெம்பர்ஷிப் வாங்கணும்னு சொன்னியே?" என்றான்.
தன்னுடைய நூலக உறுப்பினர் அட்டையை அவனிடம் காட்டி,
"நான் ஏற்கனவே மெம்பர் ஆயிட்டேன்" என்றாள்.
நந்தாவிற்கு புரிந்து போனது, அவள் அதற்காக அவனை அழைத்து வரவில்லை என்பது. அவன் வந்த வேலை சுலபமாய் முடியும் போல் தெரிந்தது.
"நீ என்கிட்ட எதை பத்தி பேசணும்?"
"வேற எதை பத்தி பேச போறேன்? உங்க அண்ணனை பத்தி தான்... அவன் என்னை தூங்க விடாம படுத்தி வைக்கிறான்"
"என்ன ஆச்சு குஷி? அவன் என்ன செஞ்சான்?"
"அவன் ஏன் இப்படி இருக்கான்? எது அவனை இப்படி மாத்தி வச்சிருக்கு? ஏன் நந்து?"
"டென்ஷன் ஆகாத..."
"எப்படி டென்ஷன் ஆகாம இருக்கிறது? அதுக்காகத்தான் அவனைப் பத்தி தெரிஞ்சுக்க நினைக்கிறேன்"
அவர்கள் மரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது அமர்ந்தார்கள்.
"என்ன ஆச்சுன்னு எனக்கு சொல்லு"
"அவன் சென்னையில படிச்சுக்கிட்டு இருந்தப்போ தான் அந்த விஷயம் நடந்தது. அவனுக்கு ஆகாஷ்னு ஒரு ஃபிரண்ட் கிடைச்சான். ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா இருந்தாங்க. உனக்குப் பிறகு அவனுக்கு ஒரு நல்ல கம்பானியன் கிடைச்சிருக்கான்னு அர்னவ் அடிக்கடி சொல்லுவான்"
அது குஷியை திகைப்பில் ஆழ்த்தியது.
"ஆமாம் குஷி, உனக்குன்னு அவன் மனசுல ஒரு தனி இடம் இருக்கு. அவனும் ஆகாஷும் ஒவ்வொரு நாளும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டே போனாங்க. ஆகாஷ் நல்லா படிக்கிற பையன். அதனால எல்லா விஷயமும் அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒத்துப் போச்சு. அப்போ தான் சரிதான்னு ஒரு பொண்ணு அவனை ப்ரொபோஸ் பண்ணா"
"யாரை?" என்றாள் குஷி பதற்றத்துடன்.
"ஆகாஷை..." என்றான், அவள் பெருமூச்சு விடுவதை பார்த்து புன்னகைத்த படி.
"ஆரம்பத்துல ஆகாஷ் அவளோட ப்ரொபோசலை ஏத்துக்கல. அவனோட குடும்ப கண்டிஷன் அப்படி இருந்தது. ஆனா அந்த பொண்ணு அவனை விடாம துரத்திக்கிட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆகாஷால அவளை அவாய்ட் பண்ண முடியல. அவள், அவன் மேல வச்சிருந்த ஆழமான காதல் அவனை மாத்திடுச்சு. ஆகாஷ் அவளை ரொம்ப தீவிரமா காதலிக்க ஆரம்பிச்சுட்டான். காலேஜ்ல அவங்களை ரோமியோ ஜூலியட்ன்னு சொல்ற அளவுக்கு அவங்க காதல் போச்சு. அவங்களோட ஃபைனல் எக்ஸாம் ஆரம்பிச்சது. சரிதா, ஆகாஷ்கிட்ட பேசுறதை நிறுத்தினா. அதுக்கு ஏதேதோ சாக்குப்போக்கு சொன்னா. ஆகாஷுக்கு அவ மேல எந்த சந்தேகமும் வரல. ஏன்னா, அவன் அவளை அந்த அளவுக்கு நம்பினான். ஆனா அர்னவ்க்கு அவ மேல சந்தேகம் வந்துடுச்சு. அவ ஆகாஷை அவாய்ட் பண்றதை பார்த்து அவன் பயங்கர எரிச்சல் ஆயிட்டான். அவளுக்கு தெரியாம அவளை பத்தி விசாரிச்சான். அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சது, அவ ஒரு பிசினஸ் மேனை கல்யாணம் பண்ணிக்க போறான்னு. அதை அவனால சாதாரணமா எடுத்துக்க முடியல. அவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறி போச்சு. அவகிட்ட அவன் நேரடியா கேட்டபோது, அவ அதை மறுக்கல"
"அவ என்ன சொன்னா?"
"அவ பேரன்ட்ஸ் பேச்சை மீறி அவளால நடக்க முடியாதுன்னு சொன்னா. ஆனா, அர்னவ்க்கு தெரியும் அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாதுன்னு. அவ பணத்தைப் பார்த்த உடனே மனசை மாத்திக்கிட்டான்னு அவனுக்கு வெட்ட வெளிச்சமா புரிஞ்சு போச்சு. எக்ஸாம் முடியுற வரைக்கும் அதைப்பத்தி அவன் ஆகாஷ்கிட்ட எதுவுமே சொல்ல வேண்டாம்னு நினைச்சான். ஆகாஷுக்கு உண்மை தெரிஞ்சா அவனால எக்ஸாம் ஒழுங்கா எழுத முடியாது. அது தான் ஆகாஷோட எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகுதுன்னு அவனுக்கு தெரியும். ஏன்னா, ஒரு பெரிய கம்பெனி நடத்தின கேம்பஸ் இன்டர்வியூல ஆகாஷ்க்கு வேலை கிடைச்சிருந்தது. ஆனா அவன் எதிர்பாராத விதமா, கடைசி பரீட்சை முடிஞ்ச அன்னைக்கு, ஆகாஷ்க்கு தன்னோட வெட்டிங் இன்விடேஷனை கொடுத்தா சரிதா. ஆகாஷ் சுத்தமா நொறுங்கி போயிட்டான். அவகிட்ட கெஞ்சி கதறினான். ஆனா அவ எதுக்குமே பிடி கொடுக்கல. அதுல இருந்து அவனை வெளியில கொண்டுவர தன்னால ஆன எல்லாத்தையும் செஞ்சான் அர்னவ். அப்படி செய்யறது அவ்வளவு சுலபமா இல்ல. அது அவனுக்கும் தெரியும். ஆகாஷை அவன் எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டான். அவனை ஒரு நிமிஷம் கூட தனியா விட அவன் தயாரா இல்ல. அரு மட்டும் இல்ல, எங்க ஃபேமிலில இருந்த எல்லாருமே அவனை பார்த்துகிட்டோம். எங்கள்ல ஒருத்தராவது தூங்காம அவனை கவனிச்சுக்கிட்டு இருப்போம். அவன் அந்த அளவுக்கு மோசமான நிலைமையில இருந்தான். ஆனா எவ்வளவு முயற்சி பண்ண போதும், எங்களால எங்க முயற்சியில ஜெயிக்க முடியல"
"ஜெயிக்க முடியலன்னா என்ன அர்த்தம்?"
"ஒரு நாள் காலையில, ஆகாஷ் வீட்ல இல்ல. மூளைக்கு மூளை அவனை தேடினோம். கடைசில அவன் தற்கொலை பண்ணிகிட்ட விஷயம் எங்களுக்கு தெரிய வந்தது..."
"அவன் தற்கொலை பண்ணிக்கிட்டானா?" என்றாள் அதிர்ச்சியாக.
"மத்த தற்கொலை மாதிரி இல்ல... யாராலயும் அவ்வளவு சுலபமா மறந்துடவே முடியாத அளவுக்கு கொடூரமான சாவு அவனுடையது..."
"என்ன சொல்ற?"
"அவனை அர்னவ் என்ன நிலைமையில பார்த்தான் தெரியுமா?"
"எந்த நிலைமையில?"
"அவனோட தலை, கால், உடம்பு எல்லாம் வெட்டப்பட்டு துண்டு துண்டா ரயில்வே டிராக்கில் கிடந்தது"
"என்ன்ன்னனன?"
"அர்னவ் நிலைமையை சொல்ல எனக்கு வார்த்தையே கிடையாது குஷி. அவனோட நிலைமையில இருந்து யோசிச்சு பாரு... நம்ம மனசுக்கு பிடிச்ச ஒருத்தரை அப்படி பாக்குறது எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும்? அர்னவ் அப்படி அழுது நாங்க அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் எப்பவும் பார்த்ததே இல்ல. அவன் உடைஞ்சு போயிட்டான்னு சொன்னா அது ரொம்ப சாதாரண வார்த்தை. ஆத்திரத்தோட சரிதாவை தேடி போனான். கடவுள் புண்ணியத்துல அவளை அவன் பாக்கல. இல்லனா, அவன் ஹாவெர்டுக்கு போறதுக்கு பதிலா ஜெயிலுக்கு தான் போயிருப்பான். அவ மட்டும் அன்னைக்கு அவன் கையில கிடைச்சிருந்தா, நிச்சயமா அவளை கொன்னுருப்பான். அவ மேல அவ்வளவு கோவமா இருந்தான்.
அர்னவ் யார்கிட்டயும் பேசுறதையே நிறுத்திட்டான். அந்த மன அழுத்தத்தில் இருந்து அவனை வெளிய கொண்டு வர நாங்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல. எங்க போனாலும், எதை பார்த்தாலும், அவனுக்கு ஆகாஷ் ஞாபகம் தான் வந்தது. நைட்டு தூக்கத்துல அலறி அலறி எழுந்துக்குவான். அப்படி எழுந்ததுக்கு பிறகு, தூங்கவே மாட்டான். அழுதுகிட்டே உட்கார்ந்து இருப்பான்.
ட்ரீட்மெண்ட்க்கு போன பிறகு, அவன்கிட்ட மெதுவா மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சது. அவனை ஒரு புது இடத்துக்கு அனுப்ப சொல்லி டாக்டர் சொன்னாரு. அது அவனை ஆகாஷோட கசப்பான நினைவுகள்ள இருந்து வெளியில கொண்டு வரும்னு நம்பினோம். அதுல அம்மாவோட பங்கு ரொம்ப பெருசு. அவங்க தான் அவனை தனியா விடாம அவன் கூடவே இருப்பாங்க. அவனை அமெரிக்காவுக்கு போக சம்மதிக்க வச்சாங்க. அந்த புது இடம் அவனை மொத்தமா மாத்தும்னு நாங்க நினைச்சோம். படிப்புல அவன் கவனத்தை செலுத்த ஆரம்பிச்சாலும், பொண்ணுங்க மேல அவனுக்கு இருந்த வெறுப்பு அதிகமாயிக்கிட்டே இருந்தது. காதல்னு பேச்சை எடுத்துக்கிட்டு அவன்கிட்ட யார் வந்தாலும் அவன் எரிஞ்சி விழுந்தான். பிறகு தன்னோட நடவடிக்கையை மாத்திக்கிட்டான்"
"எப்படி?" என்றாள் கண்ணீரை துடைத்தபடி.
"நேரடியா அவங்க அப்பாகிட்ட போயி அவங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான்... எத்தனை பொண்ணுங்க அவனை சபிச்சிருக்காங்க தெரியுமா?"
"நிஜமாவா?" என்றாள் கவலையாக.
"ஆமாம், அதனால தான் அவனுக்கு பொண்ணுங்க மேலயும் காதல் மேலயும் வெறுப்பு"
"இது என்ன நியாயம்? ஒருத்தி செஞ்ச தப்புக்காக எல்லாரும் அப்படி தான் இருப்பாங்கன்னு அவன் எப்படி நினைக்க முடியும்?"
"இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்ட பிறகு, எப்படி அவனுக்கு ரிஸ்க் எடுக்க துணிச்சல் வரும்? உண்மையை சொல்லணும்னா, தனக்கு பிடிச்சவங்களை இழந்திடுவோமோன்னு அவனுக்கு ரொம்ப பயம். ரொம்ப மென்மையான இதயம் அவனுக்கு. தன்னை அவன் எப்படி காட்டிக்கிறானோ அவன் அப்படி கிடையாது"
அதை கேட்டு ஆர்வமான குஷி,
"ஆகாஷ் இறக்குறதுக்கு முன்னாடி வரைக்கும், அவனை ஒருத்தர் கூடவா காதலிக்கல?" என்றாள்.
"ஏன் காதலிக்கல...? அவன் அதையெல்லாம் சீரியஸாவே எடுத்துக்கல. அவன் வேற யாரையோ காதலிக்கிறதா சொல்லி எல்லாரையும் தட்டி கழிச்சிட்டான். இப்போ வரைக்கும் அவன் ஏன் அப்படி சொன்னான்னு எங்களுக்கு புரியவே இல்ல"
குஷியின் முகத்தில் யோசனை ரேகை படர்ந்தது.
"வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு அவன் எவ்வளவு ரோஜாப்பூ வோட வீட்டுக்கு வந்தான் தெரியுமா? அவன்கிட்ட அதை குடுத்த பொண்ணுங்ககிட்ட இருந்து அதை வாங்கிக்கிட்டு, தேங்க்யூ சிஸ்டர்னு சொல்லிட்டான். அதுங்க கடுப்பாகி அந்த பூவை அவன் மேல தூக்கி அடிச்சிட்டு போயிடுச்சுங்க. அதையெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து எங்க அம்மா கிட்ட கொடுத்து, ஐ லவ் யூ சொன்னான்" என்று சிரித்த அவனது முகம் மாறியது.
"அதெல்லாம் எவ்வளவு அழகான நாட்கள் தெரியுமா...! அப்போ நாங்க எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் தெரியுமா? இப்பவும் நாங்க சந்தோஷமா தான் இருக்கோம். ஆனா அந்த பழைய அர்னவ்வை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம். அவனை நினைக்கும் போதெல்லாம் அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க. எல்லாத்தையும் பழையபடி மாத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்...!"
குஷி விரும்பியதும் அதைத்தான்.
"நடந்ததை எல்லாம் நான் உன்கிட்ட சொல்லிட்டேன். இதையெல்லாம் நான் வேணும்னு உன்கிட்ட சொல்லாம இருக்கல. இதெல்லாம் தெரிஞ்சா, நீ ரொம்ப வருத்தப்படுவேன்னு தான் சொல்லாம இருந்தேன்"
"அவனோட வாழ்க்கையில இவ்வளவு விஷயம் நடந்திருக்குன்னு எனக்கு நிச்சயமா தெரியாது. அவன் ரொம்ப பாவம்" என்ற போது அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் கசிந்தது.
"கவலைப்படாத குஷி எல்லாம் சரியாயிடும்னு நம்புவோம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீ ஊருக்கு வர போறேன்னு தெரிஞ்சப்போ, நாங்க எல்லாம் ரொம்ப பயந்தோம். ஆனா நாங்க பயந்த மாதிரி அவன் எதுவும் செய்யல. ரொம்ப வருஷம் கழிச்சி, அவன் உன்கிட்ட தான் பேசினான். நீ அவனுக்கு ரொம்ப ஸ்பெஷல்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம்"
"எனக்கு என்னமோ அப்படி தோணல"
"இல்ல குஷி, அவனுக்கு மட்டும் பிடிக்கலைன்னா, உன்னை எங்க வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்க கூட அவன் விட்டு இருக்க மாட்டான்"
"நெஜமாவா?"
"ஆமாம்... அவனுக்கு வேண்டாம்னா வேண்டாம் தான். ஆனா, அதுவே அவனுக்கு வேணும்னா, கண்டிப்பா வேணும். அவன் உன்னை தன்னுடைய ரூம்குள்ள வரக்கூட அனுமதிச்சிருக்கான். அப்படின்னா நீ அவனுக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு பார்த்துக்கோ..." என்று நிறுத்திவிட்டு,
"தன்னோட இடத்தை வேற யாரும் பிடிக்கிறதை அவனால சகிக்கவே முடியாது. அது மட்டும் நடந்தா, அவனோட கோபத்தை அவனால கட்டுப்படுத்தவே முடியாது. அது தான் அவன்"
"அவனுக்கு என்னை பிடிக்கலைன்னு நெனச்சேன்"
"நிச்சயமா இல்ல. அவனால உன்னை வெறுக்கவே முடியாது. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற ஒட்டுதல் ரொம்ப வித்தியாசமானது. அவன் மனசு காயப்படறதுக்கு முன்னாடியே நீ அவன் மனசுல உனக்கு ஒரு இடத்தை பிடிச்சி வைச்சிருந்த. அவன் பழைய அர்னவ் இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன்... அதே நேரம், அவன் மத்த பொண்ணுங்களை பார்க்கிற கண்ணோட உன்னை பார்க்கிறது இல்ல. நீ ஊருக்கு வந்தப்போ, அவன் உன்கிட்ட மன்னிப்பு கேட்டதை பார்த்து நாங்க எல்லாம் அசந்து போயிட்டோம். ஒருத்தர்கிட்ட பேசாம இருந்ததுக்காக முதல் தடவையா அவன் மன்னிப்பு கேட்டான். உன்னை பொறுத்த வரைக்கும் வேணும்னா அது சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா என்னை பொறுத்த வரைக்கும், அவனுக்கு நீ முக்கியம்னு நினைச்சதால தான் அவன் சாரி சொன்னான். அவன் முதல்ல மாதிரி பேசுறதில்லைன்னு நினைக்காத. அவன் பேசுறதை தான் நிறுத்தி இருக்கான். தன்னோட பிரியத்தை செயலில் காட்டுறதை அவன் நிறுத்தல. அவனை நல்ல கவனிச்சு பாரு, அவன் மனசுல உனக்கான இடம் என்னன்னு அப்போ தெரியும்"
அர்னவ் கேட்ட மன்னிப்பு பற்றி நந்தா கொடுத்த விளக்கத்தை அவள் யோசித்துப் பார்த்தாள். அவளிடம் மன்னிப்பு கோர அர்னவ் அவள் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றும் கூறினான். ஆனால் பேசுவதற்கு அவனுக்கு அவள் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அவள் புத்திக்கு எட்டாத ஏதோ ஒன்று இருக்க வாய்ப்பு இருக்கிறதா? ஒருவேளை அவன் மீது தவறு இல்லாமல் இருக்குமோ? அவனது தற்போதைய செயல்பாடுகள் நந்தா சொன்னதற்கு ஏற்பவே இருந்தது. அவள் அவனிடம் அது பற்றி பேச வேண்டுமா? அவள் பேசிய பிறகு மறுபடியும் வேதாளம் முருங்க மரத்தின் மீது ஏறிக்கொண்டு அவளிடம் பேச மாட்டேன் என்று கூறினால் என்ன செய்வது? முதலில் நந்தா கூறியதை போல் அவனை கவனித்து பார்ப்பது என்று முடிவுக்கு வந்தாள்.
"கிளம்பலாமா?" என்றான் நந்தா.
சரி என்று தலையசைத்தாள் குஷி அதற்குப் பிறகு அவர்கள் வீடு வந்து சேரும் வரை அவள் எதுவும் பேசவில்லை. அர்னவ் பற்றியே அவளது மனம் நினைத்துக் கொண்டிருந்தது. அவளது கண்கள் அணிச்சியாய் கலங்கின. எவ்வளவு பெரிய துயரத்தை அவன் வாழ்வில் கடந்து வந்திருக்கிறான். உயிருக்கு உயிராய் பழகிய நண்பனின் கொடூரமான மரணத்தை காண்பது என்பது மிகப்பெரிய தண்டனை. அவனுக்காக மனதார வருந்தினாள். அவனை கட்டியணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. என்ன இருந்தாலும் அவளது அல்லவ் அல்லவா? ஆனால் அது அவ்வளவு சுலபமாய் நடந்து விட கூடாது. அவள் அவனுக்கு முக்கியம் என்று நினைத்தால், அவன் அதை வாயை திறந்து கூறட்டும். அவனது செயல்பாடுகள் விரும்பத்தக்க விதத்தில் தான் இருக்கிறது என்றாலும், அவன் வாயில் கொழுக்கட்டையை வைத்துக் கொண்டு இருப்பது போல் இருக்க முடியாது.
ரத்னா மஹால்
நந்தாவும், குஷியும் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் விதத்தில் அர்னவ் வரவேற்பறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி தனக்கு தெரிந்து விட்டது என்பதை காட்டிக் கொள்ள குஷி விரும்பவில்லை. அதனால், அவனை கண்டும் காணாமல் சமையலறைக்குச் சென்றாள்.அவள் தன்னை தவிர்ப்பதை பார்த்த அவனுக்கு எரிச்சலாய் வந்தது.
"அரு நீ ஆஃபீசுக்கு போகலையா?" என்றான் நந்தா.
இல்லை என்று தலையசைத்தான்.
"ஏன்?"
அவனை பார்த்து முறைத்தான் அர்னவ்.
"இல்ல இல்ல, நீ வழக்கமா லீவு எடுக்கவே மாட்டியே அதனால கேட்டேன் பா"
"நான் சண்டே வேலை செஞ்சதனால எனக்கு இன்னைக்கு ஆஃப் கொடுத்தாங்க"
"அதை ஏன் நீ காலையிலேயே சொல்லல"
"ஏன்? சொல்லி இருந்தா என்ன செஞ்சிருப்ப?"
"என் வேலையை விட்டுட்டு நான் குஷி கூட போனேன். நீ வீட்ல இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா, உன்னை அவ கூட அனுப்பியிருப்பேன்"
சமையலறையில் இருந்து ஆரஞ்சு பழச்சாறுடன் வெளியே வந்த குஷியை பார்த்தான் அர்னவ். அவள் ஒன்றும் கூறாமல் அந்த பழச்சாறை பருகியதை பார்த்து அவன் வியப்புற்றான். 'அவனோடு போக மாட்டேன்' என்று அவள் கூறுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் அப்படி கூறவில்லை.
"எப்படியோ, எங்களுக்கு செம ஜாலியா இருந்துது. ஆமாம் தானே குஷி?"
ஆமாம் என்று புன்னகையுடன் தலையசைத்தாள் குஷி.
தன் பையில் வைத்திருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து அதை குஷியிடம் கொடுத்தான் நந்தா. இதை பார்த்த குஷி குதுகலமானாள். அவளுக்கு அனைத்து பிரச்சனையும் மறந்து போனது.
"தேங்க்யூ சோ மச்" என்றபடி அவன் கையில் இருந்து அதை பெற்றுக் கொண்டாள்.
"ஒரு வழியா, என் செல்லத்துக்கு சாக்லேட் கொடுக்க ஒரு ஆள் கிடைச்சிடுச்சா?" என்றார் ரத்னா வேண்டுமென்றே.
ஆமாம் என்று சிரித்தபடி தலையசைத்தாள் குஷி.
"உனக்காக நான் என்ன வேணா செய்வேன் குஷி... சாக்லேட் தானா கொடுக்க மாட்டேன்?" என்றான் நந்தா.
"நந்து, இவ்வளவு ஸ்வீட்டா இருக்காத... அப்புறம் உன்னோட ஒய்ஃப் மேல எனக்கு பொறாமை வந்துடும்" என்றாள் கிண்டலாய்.
அதையெல்லாம் கேட்டு, உட்கார முடியாமல் ஒருவன் தவித்துக் கொண்டிருந்தான். அவனால் பொறுக்கவே முடியவில்லை. அதே நேரம், அங்கிருந்து செல்லவும் அவனால் முடியவில்லை.
"இப்படி எல்லாம் சொல்லாத குஷி... எனக்கு மயக்கம் வருது" என்றான் நந்தா.
"இந்த மாதிரி ஒரு ஸ்வீட்டான மாமியாரை யாராவது மிஸ் பண்ணணும்னு நினைப்பாங்களா?" என்று ரத்னாவின் தோளை சுற்றி வளைத்துக் கொண்டாள்.
இதில் அர்னவ்க்கு எரிச்சலை தந்தது என்னவென்றால், ரத்னா நந்தாவை பார்த்து புருவம் உயர்த்தி சிரித்தது தான். அவன் அங்கு இருப்பதையே அவர் மறந்து விட்டாரா?
அப்போது, குஷிக்கு அவளது அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
"அம்மா கால் பண்றாங்க நான் போயிட்டு அப்புறம் வரேன்"
"சரி, சாயங்காலம் வா. நம்ம எல்லாரும் சேர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்" என்றான் நந்தா.
"ஷ்யூர்..." என்றபடி அங்கிருந்து ஓடிப் போனாள்.
"அவளுக்கு உன்னை பிடிக்கும்னு நான் சொன்னேன்ல?" என்றார் ரத்னா, நந்தாவிடம்.
"அம்மா, அவ என்னை கிண்டல் பண்ணா. அவ்வளவு தான்..."
ரத்னாவின் முகம் பொலிவிழந்தது. ஆனால் மற்றொருவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
"ஆனா அதுக்கு சான்ஸ் இருக்கு இல்ல, அரு?" என்றார் ரத்னா.
"நான் அப்படி நினைக்கல" என்றான் அர்னவ்.
"ஏன் அப்படி சொல்ற?"
"ஏன்னா, எனக்கு அவளை பத்தி தெரியும்"
"உனக்கு என்ன தெரியும்? என்னை மாதிரி ஒரு நல்ல மாமியாரை இழக்க யாருக்கும் மனசு வராதுன்னு அவ தான் சொன்னாளே" என்றார் பெருமையுடன்.
"அதுக்காக அவளுக்கு நந்தாவை பிடிக்கும்னு அர்த்தமில்ல. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை பிடிச்சிருக்கு அப்படிங்கிறதுக்காக இதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்ல. நீங்க ஏன் இப்படி சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கிறீங்கன்னு எனக்கு புரியல"
"எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியாதா?"
ஒன்றும் கூறாமல் முறைப்புடன் அங்கிருந்து சென்றான். அவனது எரிச்சலை பார்த்து ரத்னாவும் நந்தாவும் சிரித்துக் கொண்டார்கள்
"நான் குஷிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் மா"
"நெஜமாவா? எப்படி நீ அவ கிட்ட எல்லாத்தையும் சொன்ன?"
"அவளே என்கிட்ட கேட்டா. அவ அதுக்காகத்தான் என் கூட வந்ததே"
"அவ அப்செட் ஆகி இருப்பாளே..."
"ரொம்ப... எப்படியோ அவளுக்கு உண்மை தெரிஞ்சிதே, அதுவே போதும்"
"ஆனா நீ ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கல. அவங்க ரெண்டு பேரும் பேசிக்குறது இல்ல. அதனால அவன் அவனை நம்பலைன்னு அவ நினைக்க வாய்ப்பு இருக்கு"
"நான் அப்படி நினைக்கல. குஷி ரொம்ப புத்திசாலி. அவ புரிஞ்சி நடந்துக்குவா"
"பாக்கலாம் அவங்க தலையில என்ன எழுதி இருக்குன்னு..."
தன் தலையசைத்தான் நந்தா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top