11 ஸ்டேட்டஸ் விளையாட்டு
11 ஸ்டேட்டஸ் விளையாட்டு
தூங்கி எழுந்தவுடன் தனது கைபேசியை எடுத்தாள் குஷி, அன்றைய ஸ்டேட்டஸை வைப்பதற்காக. அவள் மனதில் ஒருவனை வைத்துக் கொண்டு தான் அவள் ஸ்டேட்டஸை வைத்தாள், அதை அவன் பார்க்க மாட்டான் என்று தெரிந்த பிறகும்...!
*என் மீது அக்கறையோடு
இருந்த உன்னை,
காணாமல்
நான் தவிக்கிறேன்...!*
என்று முதல் நாள் அவள் வைத்திருந்த ஸ்டேட்டஸை பார்த்து பெருமூச்சு விட்டாள் அவள்.
அதை அவள் மாற்ற நினைத்தபோது, ஸ்டேட்டஸ் லிஸ்டில் அல்லவ் என்ற பெயர் இருந்ததை பார்த்து, அவள் கரங்கள் நின்றது. அர்னவ் ஸ்டேட்டஸ் வைக்கும் வழக்கம் இல்லாதவன் என்று அவளுக்கு தெரியும். அவசரமாய் அதை திறந்து படித்தாள். அவளது கண்கள் அகலமாயின.
*ஒருவரது வலியை
நீ உணராத வரை,
அவர்களது நடவடிக்கையை
வைத்து மட்டும்
எந்த முடிவுக்கும்
வந்து விடாதே...!*
அது, அவளுக்கு அவன் கூறிய பதில் போல் இருந்தது. அவள் வைத்திருந்த ஸ்டேட்டஸை பார்த்தவர்களின் பட்டியலை அவள் சோதித்த போது, அதில் அவனது பெயர் இல்லை. அப்படி என்றால் இது தற்செயலாய் நிகழ்ந்ததா? எதையோ யோசித்தவள், அவளது ஸ்டேட்டஸை மாற்றினாள்.
*மௌனம் என்பது
வெறுமை அல்ல...
அதில் நிறைந்திருப்பதெல்லாம்
பதில்கள் மட்டுமே...!*
தன்னை வெகுவாய் அலட்டிக் கொள்ளாமல் குளியலறைக்கு சென்றாள் குஷி.
ஆனால் குளியலறையை விட்டு வெளியே வந்து, அர்னவ்வின் ஸ்டேட்டஸை பார்த்த பிறகு, அவளால் அல்லட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதை அவன் சில நிமிடங்களுக்கு முன்பு தான் மாற்றி இருந்தான்...!
*மனிதர்களை பிரித்து
வைப்பது தூரம் அல்ல...
அதை செய்வது
மௌனம் தான்...!*
........
அலுவலகத்தில் இருந்தான் அர்னவ். வரவிருக்கும் ப்ராஜெக்ட்டுக்காக தீவிரமாய் உழைத்துக் கொண்டிருந்தான். இன்று அவன் நேரத்திற்கு வீடு திரும்ப முடியாது போலிருக்கிறது. அது குழுவாய் இணைந்து செய்யும் வேலை. அவன் மட்டும் சரியாக இருந்தால் போதாது. அந்த குழுவில் இருக்கும் அனைவரும் தங்கள் வேலையை சரியாய் செய்தல் வேண்டும். அவனுக்கு எரிச்சலூட்டுவதே அது தான். ஏனென்றால் அவனைப் போல் யாரும் இல்லை.
அப்பொழுது அவனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் கரிமாவின் எண் ஒளிந்ததை பார்த்து, குழப்பமுற்றபடி அந்த அழைப்பை ஏற்றான்.
"அர்னவ்..." அவரது குரலில் நடுக்கத்தை உணர்ந்தான் அவன்.
"என்ன ஆச்சு ஆன்ட்டி? ஒன்னும் பிரச்சனை இல்லையே?"
"நீ நியூஸ் பாக்கலையா? ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி யாரோ ஒரு ரவுடியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். சிட்டிக்குள்ள ஒரே கலவரமா இருக்காம். குஷி எனக்கு ஃபோன் பண்ணி அவ பத்திரமா இருக்கிறதா சொன்னா. எல்லாம் சரியான பிறகு வீட்டுக்கு வந்துடுறேன்னு சொன்னா. இந்த கலவரத்துல அவ எப்படி பத்திரமா வீட்டுக்கு வருவான்னு எனக்கு தெரியல. அவங்க அப்பா வேற ஊர்ல இல்ல. நீ இதுக்கு ஏதாவது அரேஞ்ச் பண்ண முடியுமா?"
சில நொடி யோசித்தான் அர்னவ். அவன் குஷியை அழைத்து வர வேண்டும் என்று அவர் விரும்புவது அவனுக்கு புரிந்தது. அதனால் தான் அவர் அவனுக்கு ஃபோன் செய்திருக்கிறார். தனது வாழ்க்கையையே புரட்டி போட்ட அந்த கல்லூரியின் வளாகத்திற்குள் அவன் எப்படி அடியெடுத்து வைப்பான்? அதே நேரம், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவன் கரிமாவிற்கு முடியாது என்ற பதிலை எப்படி கொடுக்க முடியும்?
"அர்னவ்..."
"நான் குஷியை கூட்டிகிட்டு வரேன், ஆன்ட்டி. நீங்க கவலைப்படாம இருங்க" என்றான் வேறு வழியின்றி.
தனது மேலதிகாரியிடம் அனுமதி பெற்று, அங்கிருந்து கிளம்பினான். கரிமா கூறியது உண்மை தான். நகரமே கலோபரமாய் இருந்தது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, சாலையெங்கும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தன. பிரதான சாலையை விட்டு ஒதுங்கி, சிறிய தெருக்களின் வழியாக சென்றான் அவன்.
தன் கல்லூரியை வந்து அடைந்தான் அர்னவ்... ஒரு காலத்தில், எந்த கவலையுமின்றி பட்டாம்பூச்சியாய் அவன் சுற்றித்திரிந்த அதே இடம்... உண்மையை கூறப்போனால் தனக்கு பாடம் நடத்திய பேராசிரியர்களுக்கு அவன் கவலையை கொடுத்த இடம்...! தன் கண்களை மெல்ல மூடினான். அவனது இதயம் வேகமாய் துடித்தது. கடந்த காலத்தை நினைத்துப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. கல்லூரி காலத்து நினைவுகள் அவன் கண்முன்னால் விரிந்தது, வரவேற்புக்கூடம், கல்லூரி மைதானம், வகுப்பறைகள், கலையரங்கம், அவனது நண்பர்களின் குரல்கள்...!
அப்பொழுது, அந்த கல்லூரியின் பணியாளர் வருவதை பார்த்தான் அர்னவ். அவர் அவனை அடையாளம் கண்டு கொண்டு, அவனை பார்த்து புன்னகைத்தார்.
"அர்னவ்... நீயா? எப்படி இருக்க? என்ன செஞ்சுகிட்டு இருக்க? உன்னை பத்தின எந்த விவரமும் யாருக்குமே தெரியலையே? நீ நம்ம காலேஜ்ல நடந்த அலுமினி ஃபங்ஷனை கூட அட்டென்ட் பண்ணவே இல்ல... உன்னை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். திடீர்னு உன்னை எது இங்க வரவச்சது?" என்று ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கினார் அவர்.
"நான் நல்லா இருக்கேன் ராஜன் அண்ணா... எனக்கு தெரிஞ்ச ஒருத்தரை கூட்டிகிட்டு போக வந்தேன்"
"பாதி ஸ்டூடண்ட்ஸ் ஏற்கனவே கிளம்பி போயிட்டாங்க. ஹாஸ்டல் ஸ்டுடென்ட்ஸை ஜாக்கிரதையா அனுப்பி வச்சாச்சு. பாக்கி இருக்கிறவங்க எல்லாரையும் அவங்கவங்க கிளாஸ் ரூம்லயே இருக்க சொல்லி இருக்கு. யாரை கூப்பிட வந்த? அந்த பையன் எந்த கிளாஸ்?"
"பையன் இல்ல பொண்ணு... குஷி, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்"
"ஓ... அந்த வடக்கத்தி பொண்ணா?"
ஆமாம் என்று தலையசைத்தான்.
"ஜாஸ்மின் விங், செகண்ட் ஃப்ளோர்"
"தேங்க்ஸ் அண்ணா"
அந்த இடம் விட்டு அகன்றான், மேலும் ராஜன் எதையும் பற்றி பேசி, பழையதை கிளற சந்தர்ப்பம் வழங்காமல். ஜாஸ்மின் விங்கின் இரண்டாம் தளத்திற்கு வந்த அவன், ஒவ்வொரு வகுப்பறையாய் குஷியை தேடினான். அவள் தன் வகுப்பறையில் தனியாய் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவனை அங்கு பார்த்த அவள் திகைப்படைந்தாள்.
"வா போலாம்" என்றான்.
"நான் உன் கூட வரமாட்டேன்" என்றாள் அவள்.
"குஷி, தேவையில்லாம பிரச்சனை பண்ணாத"
"நீ தான் பிரச்சனை பண்ற. உன்னை யார் இங்க வர சொன்னா?"
கோபத்தை கட்டுப்படுத்தியபடி,
"கரிமா ஆன்ட்டி தான் சொன்னாங்க... அவங்க தான் உன்னை கூட்டிக்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பினாங்க. நான் அதை எப்படி இருந்தாலும் செஞ்சு தான் தீருவேன்" உறுதியாய் அவன் கூற, அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
அப்போது...
"அர்னவ்...????" என்று யாரோ கூப்பிடுவதை கேட்டு பின்னால் திரும்பினான் அர்னவ்.
குஷியின் பேராசிரியை அஞ்சலி, கண்களில் நீர் கட்டியபடி அங்கு நின்றிருந்தாள். நம்பிக்கையின்மை அவள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அடுத்த நொடி அவனை நோக்கி ஓடிவந்த அஞ்சலி, அவனை அணைத்துக் கொண்டாள். அவன் ஒன்றும் செய்யாமல் கல்லை போல் நிற்க, குஷியோ மலைத்து நின்றாள்.
"உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு... இத்தனை வருஷத்துல என்னை பார்க்கணும்னு உனக்கு ஒரு தடவை கூட தோணவே இல்லையா...? என்ன மனுஷன் நீ...? அப்படி என்ன பொல்லாத பிடிவாதம் உனக்கு?"
அவனைப் பிடித்து தள்ளினாள் அஞ்சலி.
"எங்க கல்யாணத்துக்கு உன்னை கூப்பிடணும்னு நாங்க உன்னை எப்படி எல்லாம் தேடி அலஞ்சோம் தெரியுமா? உன்னோட குடும்பம் வேற இடத்துக்கு குடி போயிட்டிங்க... உன்னோட நம்பரை கூட யாருக்கும் கொடுக்காம நீ ஹாவர்டுல போய் ஒளிஞ்சிகிட்ட... இது தான் நீ நம்ம ஃபிரண்ட்ஷிப்புக்கு கொடுக்கிற மரியாதையா? எங்க மேல நீ காட்டின அக்கறை எல்லாம் நடிப்பா? எதுக்காக நீ இப்படி மாறிட்ட அர்னவ்? நான் உன் ஃபிரண்ட் இல்லையா?"
"நம்ம அப்புறம் பேசலாம்..."
"எப்போ? நான் செத்ததுக்கு பிறகா?" என்றாள் கோபமாய்.
"வாயை மூடு அஞ்சு... சாவை பத்தி மட்டும் பேசற வேலை வச்சுக்காத. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்றான் கடுங்கோபத்துடன்.
கல்லூரி நாட்களில் அவனிடம் பார்த்த அதே கோபத்தை பார்த்த அஞ்சலி, பின் வாங்கினாள். அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் நின்றிருந்தாள் குஷி. அப்படி என்றால் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, நிறைய பேர் காயப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவர்கள் நண்பர்களா? அப்படித் தான் இருக்க வேண்டும். அஞ்சலி அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அஞ்சலியை அவரது கணவர் அஞ்சு என்று அழைப்பது போலவே அர்னவ்வும் அழைக்கிறான். அப்படி என்றால், அவர்கள் இருவரும் ஒன்றாய் படித்தவர்கள் போலிருக்கிறது.
"குஷி, வா போகலாம்" என்றான் அர்னவ்.
"நான் மேம் கூட இருக்கேன். அவங்க என்னை ட்ராப் பண்றேன்னு சொல்லி இருக்காங்க" என்று அஞ்சலியின் பின்னால் நின்று கொண்டாள் குஷி.
"அப்புறம் நான் எதுக்கு இங்க வந்தேன்? வாயை மூடிக்கிட்டு என்கூட வா"
அவளது கையைப் பிடித்து இழுத்தபடி நடக்க துவங்கினான் அவன். நம்ப முடியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் அஞ்சலி. அர்னவ் குஷியின் மேற்கையைப் பிடித்து, வலுக்கட்டாயமாய் தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்துக் கொண்டு செல்வதை, இரண்டாம் தளத்திலிருந்து பார்த்த அஞ்சலிக்கு, தலை சுற்றுவது போல் இருந்தது. அப்பொழுது அங்கு வந்தான் அவளது கணவனான ஷியாம். அர்னவ் குஷியை அழைத்துச் சென்ற காட்சியை, அவனும் அஞ்சலியின் பக்கத்தில் நின்று பார்த்தான்.
அன்று குஷி, ரத்னாவிடம் தனக்கு தோழமை மிக்க தம்பதியர் பேராசிரியர்களாய் கிடைத்திருக்கிறார்கள் என்று கூறினாள் அல்லவா? அது அவர்களைப் பற்றித்தான்.
"அது நம்ம அர்னவ் தானே?" என்றான் ஷியாம் அதிர்ச்சியோடு.
"ஆமாம்..."
"அவனா ஒரு பொண்ணை தன்னோட பைக்ல ஏத்திகிட்டு போறான்? என்னால நம்பவே முடியலையே..."
"என்னாலையும் நம்ப முடியல. எந்த பொண்ணையும் தன் பைக்ல ஏத்த மாட்டேன்னு அவன் எவ்வளவு பிடிவாதமா இருந்தான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"
"அத எப்படி என்னால மறக்க முடியும்? நானே ஒரு தடவை உன்னை வீட்ல கொண்டு போய் விட சொல்லி சொன்ன போது, யாரும் உன்னை பத்தி தப்பா எதுவும் சொல்லிட கூடாதுன்னு, அவன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டானே..."
"அவனோட அம்மாவையும், ஒய்ஃபையும் தவிற வேற யாரையும் அவனோட பைக்ல ஏத்த மாட்டேன்னு சொல்லுவான்" அர்னவ்வின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள் அஞ்சலி.
"ஆனா இப்போ, அவன் குஷியை கூட்டிகிட்டு போறான்"
"அதுவும் கட்டாயப்படுத்தி... நான் அஞ்சலி மேடம் கூட வரேன்னு அவ சொன்னதுக்கு பிறகும்...!"
"குஷியை அவனுக்கு எப்படி தெரியும்னு உனக்கு ஏதாவது தெரியுமா?"
"அவனுக்கு குஷின்னு ஒரு ஃபிரண்ட் இருந்ததாகவும், அவள் அவனைவிட சின்ன பொண்ணுன்னும் அவன் அடிக்கடி சொல்லியிருக்கான். அவன் சொன்ன குஷி இவ தான்னு நினைக்கிறேன்"
"அவன் இன்னும் மாறவே இல்லல?எல்லார்கிட்டயும் இருந்து விலகியே இருந்தாலும், தனக்கு பிடிச்சவங்க மேல அக்கறை காட்டுறதை அவன் மாத்திக்கவே இல்ல"
"ஆமாம், நான் சாவை பத்தி பேசின போது அவனுக்கு எக்கச்சக்க கோபம் வந்தது"
"உனக்கு என்ன பைத்தியமா? எதுக்காக அப்படி செஞ்ச? அவனைப் பத்தி உனக்கு தெரியாதா? அவனை இப்படி அடியோட மாத்தினதே அது தானே? எதுக்காக மறுபடியும் அதை பத்தி பேசி அவனை காயப்படுத்தின?"
"நான் வேற என்ன செய்யணும்னு சொல்றீங்க? நான் மட்டும் காயப்படலையா? காலேஜ் டேஸ்ல நாங்க எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்னு உங்களுக்கு தெரியாதா? எவ்வளவு ஆசையா அவன் என்னை சிஸ்ஸினும் உங்களை மாமான்னும் கூப்பிடுவான்... அதையெல்லாம் நான் எப்படி மறக்கிறது?" என்றாள் உடைந்த மனதோடு.
"அவனை உன்னால பார்க்கவாவது முடிஞ்சிருக்கே... அதை நினைச்சு நீ சந்தோஷப்படு. அவனைப் பத்தி குஷிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ"
கண்களை துடைத்தபடி சரி என்று தலையசைத்தாள் அஞ்சலி.
............
அர்னவ்வின் இருசக்கர வாகனத்தில் அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த குஷியின் மனம், குழம்பிய குட்டை போல் இருந்தது. அவனுக்கும் அஞ்சலிக்கும் இடையில் இருப்பது என்ன? அஞ்சலி மரணத்தை பற்றி பேசிய போது எதற்காக அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது? பார்க்கும் பெண்களை எல்லாம் ஓட விடும் அவன், அஞ்சலி அவனை அணைத்த போது ஒன்றும் கூறாமல் ஏன் நின்றான்? அவரை அஞ்சு என்று உரிமையோடு அழைத்தானே...! இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எதற்காக அஞ்சலிக்கு அவனைப் பார்த்தவுடன் அவ்வளவு கோபம் வந்தது? எதற்காக இவன் மர்மம் நிறைந்தவனாக இருக்கிறான்? அவளை விட்டுப் பிரிந்து, அவன் சென்னைக்கு வந்த பிறகு, அவனது வாழ்க்கையில் ஏகப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாய் தெரிகிறது.
அர்னவ் அவளை ரியர் வியூ கண்ணாடியின் மூலம் பார்த்தான். அவள் எவ்வளவு குழப்பத்தோடு இருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது. அவனைப் பற்றிய எந்த விஷயத்தையும் அவளிடம் வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனால், ஏனோ விதி அவளிடமே அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்துகிறது.
அவன் போர்ட் பிளேயரை விட்டு கிளம்பிய போது, குஷிக்கு வயது பதினொன்று தான். அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்திற்காக அவளுக்கே அவ்வளவு கோபம் வரும்போது, அஞ்சலிக்கு அவன் மீது ஏற்பட்ட கோபம் நியாயமானது தான். அவனுக்கு அவள் சகோதரி போன்றவள். அவளையும் ஷியாமையும் எப்படியெல்லாம் அவன் கிண்டலடித்து இருப்பான்...! ஷியாம் எவ்வளவு இனிமையான மனிதர்...! அர்னவ்வையும் அவனது தோழர்களையும் எப்பொழுதுமே ஷியாம் மாணவர்களை போல் நடத்தியதில்லை. அவர்கள் அஞ்சலியின் நண்பர்கள் என்பதால் அவர்கள் தன்னை மாமா என்று அழைக்க அனுமதி அளித்தான்.
அதை பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டு வந்ததில், சாலையில் இருந்த பள்ளத்தை அவன் கவனிக்கவில்லை. அதை பார்த்த குஷி கிலியடைந்தாள். அவனது தோள்களை இறுக்கமாய் பற்றி கொண்டு,
"அல்லவ்... பள்ளம்... பள்ளம்..." என்று கத்தினாள்.
அவன் பிரேக்கை அழுத்த, அவனது வண்டியின் சக்கரங்கள் தேய்த்துக் கொண்டு சென்றது. அந்த உந்துவிசை காரணமாய், அவள் அவனை நோக்கி தள்ளப்பட்டாள். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில், கண்களை இறுக்கமாய் மூடி, அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள். வண்டியை ஒருவாறு சமாளித்து நிறுத்தினான் அர்னவ்.
அவள் தனது சட்டையை இறுக்கமாய் பற்றிக்கொண்டு, அவனது தோளில் முகம் புதைத்துகொண்டிருந்ததை பார்த்த அவன், மென்று விழுங்கியபடி மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
எல்லாம் சரியாகிவிட்டதென்று சொல்ல ஏனோ அவனுக்கு தோன்றவில்லை. ஒருவேளை அப்படி சொன்னால், அவள் மீண்டும் தன் பழைய நிலைக்கு சென்று விடுவாள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தான் பாதுகாப்பாய் இருப்பதை உணர்ந்த குஷி, அவள் அர்னவ்வை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். அவள் பிடியில் இருந்த அவனது சட்டையை விடுவித்தாள். அவன் எதிர்பார்த்தது போலவே பின்னால் நகர்ந்து தன் பழைய நிலைக்குச் சென்றாள். தன் முதுகில் மாட்டி இருந்த அவளது பையை இழுத்து அவர்களுக்கு இடையில் வைத்துக் கொண்டாள். அது, அவனது முகத்தில் ஒரு நமுட்டு புன்னகையை அழைத்து வந்தது, அவனது மனதில் இருந்த அத்தனை இறுக்கத்தையும் மறக்கச் செய்து...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top