10 நான் ஒட்ட வைப்பேன்

10 நான் ஒட்ட வைப்பேன் (நீண்ட அத்தியாயம்)

மறுநாள் காலை

குஷியின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ஸை பார்க்க, தனது மடிக்கணினியை திறந்தான் அர்னவ். ரத்னாவின் வாட்ஸாப்பை, தனது மடிக்கணினியில் வாட்ஸ்அப் வெப்பை  பயன்படுத்தி இணைத்து வைத்திருந்தான் அர்னவ். குஷியின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்ஐ பார்த்த அவனது மனம் பரிதவித்தது.

உடைந்துவிட்ட கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் அது முன் போல் இருப்பதில்லை...!

அலுவலகம் செல்ல கிளம்பி வந்தான்  அர்னவ்.

"நந்து, கரிமாவும், ஷஷி அண்ணனும் கோவிலுக்கு போயிருக்காங்க. குஷிக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுக்க சொல்லி என்கிட்ட சொல்லிட்டு போனாங்க. டேபிள் மேல இருக்கிற பாக்ஸை கொண்டு போய் அவகிட்ட குடுத்துடு" என்றார் ரத்னா.

"சாரி மா. எனக்கு ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. கரெக்ட் டைமுக்கு போகலன்னா என் பாஸ் என்னை குதறிடுவாரு..." என்றபடி தன் பையை எடுத்துக்கொண்டு ஓடிப் போனான் நந்தா.

"இந்த பையனை நான் என்ன செய்யறது?" என்றபடி அந்த டப்பாவை தன் கையில் எடுக்க போனார் ரத்னா.

"நான் குடுத்துட்டு வரேன்" என்றான் அர்னவ்.

"நெஜமா தான் சொல்றியா அரு?" என்றார் வியப்புடன்.

ஏன்? என்பது போல் அவன் அவரை பார்க்க,

"அவ ரொம்ப பேசுவா... உனக்கு பிடிக்காது... அதனால கேட்டேன்" என்றார் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

அவருக்கு பதில் கூறாமல் அந்த டப்பாவை எடுத்துக் கொண்டு சென்றான் அர்னவ். குஷியின் வீட்டுக்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினான். கதவை திறந்த குஷி, திகைத்து நின்றாள்.

"அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்ல" என்றாள் எங்கேயோ பார்த்துக் கொண்டு.

"தெரியும். அம்மா இதை உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க"

தான் கொண்டு வந்த டப்பாவை அவளிடம் நீட்டினான். அந்த டப்பாவை பற்றிய குஷி, அதை அவன் விடாமல் இறுக்கமாய் பற்றி கொண்டிருப்பதை பார்த்து, தன் கண்களை உயர்த்தி, தன்னையே உறுதியாய் பார்த்துக் கொண்டிருந்த அவனை பார்த்தாள். தன் வீட்டுக்குள் நுழைந்த அவனை பார்த்து குழம்பினாள்.

"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்.

தன் முகத்தை திருப்பிக் கொண்ட அவள்,

"நான் உன்கிட்ட பேச விரும்பல. உன்கிட்டயிருந்து வேற எதையும் நான் கேட்க தயாரா இல்ல"

"நான் சொல்றதை கேளு"

"மாட்டேன்...  கேக்க முடியாது... நீ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? கண்டவன் கூட ஒட்டிக்கிற பொண்ணுன்னு நினைச்சியா? உன்னை மாதிரி யாருமே என்னை இன்சல்ட் பண்ணதில்ல" என்ற போது அவளது கண்கள் கலங்கின.

எதிர்பார்ப்பு, ஏமாற்றமாய் மாறும்போது, கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போவது இயல்பு தானே!

"ஐ... ஐ அம் சாரி... நான் அந்த அர்த்தத்துல சொல்லல... "

"ஆனா நீ சொன்னதுக்கு அந்த அர்த்தமும் இருக்கு தானே? எதுக்காக இப்படி எல்லாம் செய்ற? உன்னை பார்த்த முதல் நாளே நான் புரிஞ்சுகிட்டேன். என் கூடவே இருக்கணும்னு நெனச்ச அந்த அல்லவ் நீ இல்ல...! உன்னை பாக்குறதுக்கு நான் எவ்வளவு ஆசையா வந்தேன்னு தெரியுமா? உன்னை நான் நினைக்காத நாளே கிடையாது...  ஆனா நீ? நீ ரொம்ப மாறிட்ட... ஆனா, இந்த அளவுக்கு மாறி இருப்பேன்னு நான் நினைக்கல. என்னோட அல்லவ் உன்னை மாதிரி யார் மனசையும் உடைக்க மாட்டான்... நீ மாறிட்ட..." கண்ணீர் மல்க குரலெடுத்தாள் அவள்.

உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்ட அர்னவ்,

"நான் மாறி இருக்கலாம், ஆனா என்னோட பேரண்ட்ஸ் மாறல. அவங்க உன்னை நினைச்சி ரொம்ப கவலையோட இருக்காங்க. நான் செஞ்ச தப்புக்காக அவங்களை பனிஷ் பண்ணாத. வீட்டுக்கு வா..."

அவன் அங்கிருந்து செல்ல முனைந்த போது, அவனது கையை பற்றினாள் குஷி. அவன் நின்றான். ஆனால் திரும்பி பார்க்கவில்லை.

"உங்க அம்மா அப்பாவுக்காக தான் நீ இங்க வந்தியா? உனக்கு (என்பதை அழுத்தி) என் மேல எந்த அக்கறையும் இல்லையா? எனக்கு உன் இதயத்துல இடம் இல்லையா? இல்ல... உனக்கு இதயமே இல்லையா?"

தன் பல்லை கடித்து கண்ணை மூடி, கோபத்தை விழுங்கினான் அர்னவ்.

"உன்கிட்ட இருந்து ஒரு ஃபோன் இல்ல, மெசேஜ் இல்ல, ஒண்ணுமே இல்ல... ஆனா நான் பைத்தியக்காரி மாதிரி உன்னையே நினைச்சுகிட்டு இருக்கேன்... உன்கிட்ட எல்லாத்தையும் சகஜமா பேசின அந்த நாள் திரும்பி வராதா? அதையெல்லாம் எவ்வளவு மிஸ் பண்றேன்னு தெரியுமா? உன்கிட்ட பேசினதை நான் மிஸ் பண்றேன்... உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டி தீர்த்ததை நான் மிஸ் பண்றேன்..."

மென்று விழுங்கியபடி அவளது பிடியிலிருந்த தன் கையை விடுவித்த அர்னவ், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து நடந்தான்.

"நான் உன்கிட்ட பேசுறது இது தான் கடைசி... இதுக்கு அப்புறம் நான் உன்கிட்ட பேசமாட்டேன்... உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்ல..." என்று பின்னாலிருந்து கத்தினாள்.

அந்த இடம் விட்டு விரைந்தான் அர்னவ். வெடித்து அழுதாள் குஷி. ஒரு மூன்றாம் நபர் அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தது அந்த இருவருக்கும் தெரியாது. அர்னவ் எடுக்காமல் விட்டுச் சென்ற புதினா சட்டினியை கொடுக்க, அங்கு வந்த ரத்னா தான் அவர்.

அவர்களுக்காக வருத்தப்பட்டார் ரத்னா. இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசித்தார்கள் என்பது அவருக்கு தெரியும். அவரால் அர்னவ்வை குறை கூற முடியாது. அவனது மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் மனதில் எழுந்த கேள்வி என்னவென்றால், அவனுக்கு காதல் மீது தானே அலர்ஜி? நட்பின் மீது இல்லையே? அப்படி இருக்க, குஷியுடன் நட்போடு பழக அவனை எது தடுக்கிறது? ஒருவேளை நட்புக்கு மேல் ஏதோ ஒன்று அவன் மனதில் உதயமாகி விட்டதா?

அர்னவின் மனம் மிக மோசமான நிலையில் இருந்தது. எதற்காக அவளது வார்த்தைகள் அவனது இதயத்தை குத்தி கிழிக்கிறது? அவள் கண்ணீரைப் பார்த்த அவன் அது இதயம், ஏன் ரத்தம் வடிக்கிறது? அவனுக்கு புரியவில்லை.

தன் மகன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்க விரைந்து வந்தார் ரத்னா. கதவுக்கு பின்னால் ஒளிந்து நின்று, அவனை கவனித்தார். எதிர்பார்த்தபடியே அவன் பொல்லா கோபத்துடன் இருந்தான். ஒரு தலையணையை எடுத்து அதை தூக்கி வீசினான். அந்த தலையணை அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு பூசாடியின் மீது சென்று விழுந்தது. அது கீழே விழுந்து உடையும் முன், அதை காப்பாற்ற, அதை நோக்கி பாய்ந்தான். ஆனால் அதற்கு முன் அந்த ஜாடி கீழே விழுந்து, ஏழு துண்டாய் உடைந்தது.

உள்ளே வந்த ரத்னா, அந்த ஜாடியின் துண்டுகளை சேகரித்தார்.

"என்ன ஆச்சு அரு? எப்படி இது உடைஞ்சது?"

"அதை காப்பாத்த நான் ட்ரை பண்ணேன். ஆனா மிஸ் பண்ணிட்டேன்"

"அப்படி நடக்குறது சகஜம் தான். நம்முடைய அலட்சியத்தால நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளை நம்ம இழந்துடுவோம்... நமக்கே தெரியாம..." என்றார் பொருளோடு.

அவர் கையில் இருந்த துண்டுகளை பெற்று மேசையின் மீது வைத்தான் அர்னவ்.

"நான் அதை ஒட்ட ட்ரை பண்றேன்"

"நீ ஒட்டினாலும் விரிசல் இருக்கத்தான் செய்யும்"

அன்று காலை குஷி வைத்திருந்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ஸை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

"ஆனா அரு, நீ ஒரு விஷயத்தை முடிக்கணும்னு நினைச்சா, அதை நிச்சயம் முடிச்சிடுவேன்னு எனக்கு தெரியும். உன்னால முடியாதது எதுவுமே இல்ல" என்றார் ரத்னா.

"தேங்க்யூ மா" என்று உணர்ச்சிவசப்பட்டு அவரை அணைத்துக் கொண்டான் அர்னவ்.

அவனது தலையை மெல்ல வருடி கொடுத்தார் ரத்னா. அப்படி என்றால், விஷயம் இது தான். இந்த இருவரும் நட்புக்கு மேலான ஏதோ ஒன்றில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கே தெரியாமல்...!

..........

அர்னவ்க்கு எந்த வேலையிலும் மனம் செல்லவில்லை. அவன் குஷியை அழ வைத்து விட்டான். அவள் மனதை உடைத்து விட்டான். பிரச்சனையை தீர்க்க அவன் முனைப்பு காட்டினான் தான்... ஆனால் அவன் கூறுவதை கேட்க அவள் தயாராக இல்லை. அவன் கூறுவதை கேட்டால் என்ன குறைந்து விடப் போகிறது? அவர்களுக்குள் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டிருக்குமே...! அப்படி என்ன கோபம் அவளுக்கு?

அதற்கு காரணம் என்னவென்றால், அர்னவ் அவள் மனதிலும் வாழ்க்கையிலும் மிக உன்னதமான இடத்தை பிடித்து வைத்திருந்தது தான். அவன் அவளை கீழ்த்தரமாய் நினைத்து விட்டான் என்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் உண்மையில் அவன் அவளை அப்படி நினைக்கவே இல்லை...! அவளுக்கு எப்படி புரிய வைப்பது? அது தான் அவனுக்கு புரியவில்லை. மதிப்புமிக்க ஒன்றை இழந்து விட்டதாய் உணர்ந்தான் அவன்.

மறு நாள்

பஸ்ஸை விட்டு இறங்கினாள் குஷி. அப்பொழுது அவளுக்கு வெகு பரிச்சயமான ஒருவர் எதிர் பேருந்து நிறுத்தத்தில் யாருக்காகவோ காத்திருப்பதை கண்டாள். அது நந்துகிஷோர். அவள் தன் கையை அவனை நோக்கி அசைத்தாள். ஆனால் அவன் அவளை கவனிக்கவில்லை. அப்பொழுது, துப்பட்டாவால் தன் முகத்தை மூடிய ஒரு பெண், அவனை நோக்கி வந்து அவனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். வண்டிகை கிளப்பிய அவன், அங்கிருந்து அவளுடன் சென்றான்.

குஷியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. இதற்கு என்ன அர்த்தம்? நந்து அந்த பெண்ணை காதலிக்கிறானா? இதைப் பற்றி ஏன் அவளிடம் அவன் கூறவே இல்லை? அப்படி என்றால் அவளை தன் தோழியாய் அவன் கருதவில்லையா? இந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை...! அவன் எப்படி இவ்வாறு செய்யலாம்? அவனை கையும் களவுமாய் பிடிக்க நினைத்தாள் அவள். பின்னால் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறி அமர்ந்து கொண்டு அவர்களது வாகனத்தை பின்தொடருமாறு கூறினாள்.

நந்து வண்டியை வேகமாய் ஓட்டவில்லை. அந்தப் பெண்ணுடன் தனது பயணத்தை அவன் ரசித்துக் கொண்டிருந்தான் என்று தோன்றியது. அவர்களது இருசக்கர வாகனம் ஃபீனிக்ஸ் மாலின் உள்ளே நுழைந்தது. ஆட்டோவிற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு அவர்களை நோக்கி ஓடினாள் குஷி. நந்துகிஷோருடன் இருந்த பெண், முகத்தை மறைந்திருந்த துப்பட்டாவை நீக்கினாள். அவளை பார்த்த குஷி, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள். அவள் வேறு யாருமல்ல, குஷியின் தோழி லாவண்யா.

வண்டியை நிறுத்திவிட்டு, லாவண்யாவின் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான் நந்தா. அவர்கள் இருவரும் பார்க்க அவ்வளவு பொருத்தமாய் இருந்தார்கள். தங்கள் எதிரில் நின்றிருந்த குஷியை பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். தன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களை நிதானமாய் பார்த்துக் கொண்டு நின்றாள் குஷி. எந்த பாவமும் இன்றியிருந்த அவளது முகத்தை பார்த்த லாவண்யா, மென்று விழுங்கினாள். ஒரு வார்த்தையும் கூறாமல் குஷி அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவர்கள் இருவரும் ஓடிச் சென்று, தங்கள் கைகளை இணைத்துக் கொண்டு, அவள் மேலே செல்லாமல் அவளை தடுத்து நிறுத்தினார்கள்.

"என்னை ஃபிரண்டா நினைக்காத யார்கிட்டயும் நான் பேச விரும்பல" என்றாள் குஷி.

"குஷி, ப்ளீஸ் எங்களை தப்பா நினைக்காத" என்றாள் லாவண்யா.

"ஆமாம் குஷி, நாங்க உன்கிட்ட சொல்லனணும்னு தான் நினைச்சோம். ஆனா... "

"ஆனா என்ன? என்னை ஒரு நல்ல ஃபிரெண்டுனு நினைச்சிருந்தா நீ இதை என்கிட்ட மறைச்சிருப்பியா?"

"இல்ல குஷி, நாங்க இதை மறைச்சதுக்கு காரணம் லாவண்யாவோட மாமா தான். அவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா, அவளை காலேஜுக்கு வரவே விட மாட்டார். காலேஜை நிறுத்திட்டு, ஊருக்கு கூட்டிகிட்டு போயிடுவாரு. அதுக்கு பயந்து தான் நாங்க இதை இரகசியமா வச்சிருந்தோம். ஆனா சத்தியமா நாங்க இதை உன்கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சோம்"

"சாரி குஷி, எங்களை மன்னிச்சிடு" என்றாள் லாவன்யா.

"அதனால தான் அன்னைக்கு எங்க வீட்ல ரத்னா ஆன்டியை பார்த்ததும் அர்ச்சனா பின்னாடி ஒளிஞ்சியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் லாவண்யா.

"ஆனா ஏன்? நிச்சயமா ரத்னா ஆன்ட்டியும் அரவிந்த் அங்கிளும் உங்க காதலை ஏத்துக்குவாங்க. அப்படி இருக்கும்போது, ஏன் அவங்ககிட்ட நீங்க இந்த விஷயத்தை சொல்லக்கூடாது?"

"எனக்கு மேல கல்யாணம் ஆகாத ஒரு அண்ணன் இருக்கும் போது நான் எப்படி சொல்ல முடியும்?"

"அவனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீ காத்திருந்தா உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே ஆகாது" என்றாள் பல்லை கடித்த படி.

"எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல... லாவண்யா படிப்பை முடிக்க ஒரு வருஷம் தான் இருக்கு. அதுக்குள்ள நாங்க இந்த விஷயத்துக்கு முடிவு கண்டுபிடிச்சி ஆகணும்"

"ஆமாம். ஏற்கனவே எங்க மாமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை படுத்த ஆரம்பிச்சுட்டாரு. படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு நான் எப்படி அவரை சமாளிக்க போறேன்னு எனக்கு புரியல"

ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள் குஷி.

"சரி, நம்ம அந்த விஷயத்தை அப்புறம் யோசிக்கலாம். நீங்க படத்தோட ஆரம்ப சீனை மிஸ் பண்ணிடாதீங்க. நீங்க கிளம்புங்க"

"பரவால்ல, குஷி"

"நந்து, உன் கேர்ள் ஃபிரண்டை டிசபாயிண்ட் பண்ணாத... கிளம்பு..."

"இன்னும் எங்க மேல கோவமா தான் இருக்கியா?"

இல்லை என்று தலையசைத்தாள் குஷி.

"தேங்க்ஸ் குஷி"

"கிளம்புங்க. பை" என்றபடி அங்கிருந்து கிளம்பினாள் குஷி.

நந்தா சொல்வது உண்மை தான். லாவண்யா பலமுறை அவளது மாமாவை பற்றி கூறியிருக்கிறாள். அவளது காதல் விவகாரம் தெரிந்தால், நிச்சயம் அவளது படிப்பை நிறுத்துவதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். அவளர் லாவண்யாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஒருவனுக்கு மனம் முடித்து, அவளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறார். அப்பொழுது தானே அவளது பெயரில் இருக்கும் சொத்துக்கள் எப்பொழுதும் அவரிடமே நிலைத்திருக்கும்...!

ரத்னா மஹால்

மாலை

தன் வீட்டில் குஷியின் குரலை கேட்ட அர்னவ் சில நொடி அசையாமல் நின்றான். கடைசியில், அவள் அவன் வீட்டிற்கு வந்து விட்டாள். அவள் எதையோ பற்றி ரத்னாவுடன் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆனால் அவள் என்ன பேசுகிறாள் என்று அவன் காதில் விழவில்லை. அவளது குரல் முன்பு போல் புத்துணர்ச்சியுடன் இல்லை. இப்பொழுது அவள் அவனை பார்த்தால் என்ன செய்வாள்? அவன் உள்ளே செல்வதா வேண்டாமா? ஆனால், உள்ளே செல்லாமல் அவள் என்ன நினைக்கிறாள் என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும்? மெல்ல உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த ரத்னா,

"அரு, நீ என்ன சீக்கிரம் வந்துட்ட?" என்றார்

நிமிர்ந்து அமர்ந்த குஷி, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் ரத்னா. அவர்களது அணுகுமுறை முற்றிலும் புதிதாய் இருந்தது.

"அம்மா, எனக்கு கொஞ்சம் காபி கிடைக்குமா?" என்ற அர்னவ், குஷியின் எதிரில் வந்து அமர்ந்து கொண்டான்.

ரத்னாவை பார்த்தபடி எழுந்து நின்ற குஷி,

"நான் கிளம்பறேன் ஆன்ட்டி" என்றாள்

"அட, என்ன திடீர்னு கிளம்பிட்ட?"

"ஒரு முக்கியமான வேலை செய்ய வேண்டி இருந்தது இப்ப தான் ஞாபகம் வந்தது"

அவளையே வைத்த கண் வாங்காமல் ஊன்றி பார்த்துக் கொண்டிருந்த அர்னவை கவனித்தார் ரத்னா.

"வந்து போய்க்கிட்டு இரு"

"சரிங்க ஆன்ட்டி"

அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள் குஷி. இயலாமையுடன் தலை குனிந்தான் அர்னவ். அவனைப் பார்க்கவே வருத்தமாய் இருந்தது ரத்னாவுக்கு. அவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை என்னவென்று தெளிவாக அவருக்கு புரியவில்லை. ஆனால் ஏதோ தவறான புரிதல் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்க அவர் விரும்பவில்லை. அவர்களே அதை சரி செய்யட்டும் என்று நினைத்தார் அவர்.

*பிரிந்து விடவே கூடாது என்று நினைப்பவர்களை,  நெருக்கமடையச் செய்யும் வல்லமை பிரிவை தவிர வேறு எதற்கும் இல்லை* என்று அவருக்குத் தெரியும். ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான வழியை நிச்சயம் கண்டு பிடிப்பார்கள்.

அர்னவ்வின் நிலை மிகவும் கவலைக்கிடமாய் இருந்தது. அவனுக்கு என்ன வேண்டும் என்பதே அவனுக்கு புரியவில்லை. முதலில் அவன் குஷியுடன் நெருங்கி பழக வேண்டாம் என்று எண்ணினான். அதனால் அவளிடம் இருந்து விலகி இருந்தான். இப்பொழுது அவள் அவனை விட்டு விலகிச் செல்லும்போது அதை அவனால் தாங்க முடியவில்லை. நமக்கு எல்லாமுமாக இருந்த அந்த ஒரு நபர், அந்நியன் போல் பழகுவதை விட சகிக்க முடியாத விஷயம் வேறு எதுவும் இல்லை.

அவன் காதலிக்க பயந்தான். தான் காதலிக்கும் நபர் தன்னை விட்டு சென்று விடுவாரோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. தன்னை யாரிடத்திலும் முழுமையாய் அர்ப்பணிக்க அவன் பயந்தான், அந்த ஒருவர் அவனை நிராதரவாய் விட்டு விடுவாரோ என்ற அச்சத்தில். இன்று அவன் தனியாய் விடப்பட்டதாய் உணர்ந்தான். அவனுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று உலகத்திற்கு வேண்டுமானால் அவனால் பொய் கூற முடியும். தனக்குத்தானே பொய் உரைத்துக் கொள்ள முடியாது அல்லவா? அவளுடைய செயல்பாடுகள் அவனை அடித்து போட்டது... ஏனென்றால் அவளது நடவடிக்கை அவனை பாதித்தது.

மறுநாள்

வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாரானான் அர்னவ். இருசக்கர வாகனத்தை கிளப்பிய அவன், வழக்கமாய் செல்லும் சிறிய தெருக்களை விட்டுவிட்டு பிரதான சாலைக்கு சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, பேருந்து நிரறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் குஷி.

அவனது ஹாவர்டு மூளையில் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. வேண்டுமென்றே தனது இரு சக்கர வாகனத்தின் சைடு ஸ்டாண்டை எடுத்து விட்டான். அதே நேரம் அவன் பக்கம் திரும்பிய குஷி, அவன் வருவதைப் பார்த்து தன் முகத்தை திருப்பிக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவனது வண்டியின் சைடு ஸ்டாண்ட், அவளது கவனத்தை ஈர்த்தது. அது அவளை திகிலடையச் செய்தது. அந்த ஸ்டாண்டைத் தவிர அவள் மனதில் வேறு எதுவும் இல்லை. அனைத்தையும் மறந்து,

"அல்லவ்... ஸ்டாண்ட்.... ஸ்டாண்ட்..." என்று கத்தினாள்.

ஒரு நமட்டு புன்னகையுடன் அந்த ஸ்டாண்டை மடக்கினான் அர்னவ். அதை பார்த்த குஷி திகைத்தாள். அவன் வேண்டுமென்றே இப்படி செய்தானா? அவன் முகத்தில் தவழ்ந்த நமுட்டு புன்னகை ஆம் என்று பதில் கூறியது.

அதே நேரம், அவள் செல்ல வேண்டிய பேருந்தும் வந்தது. அந்த பேருந்தில் ஏறிக்கொண்டு, தன் தலைக்கு மேல் ஓடிய குழலை பற்றி கொண்டு நின்ற குஷி, மெல்ல குனிந்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் வழியாக அர்னவை பார்த்தாள்.

அங்கு, தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்த படி, கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top