1 காதல் என்பது...
1 காதல் என்பது...
சென்னையின் குறிப்பிடத்தக்க இடங்களில் முக்கியம் வாய்ந்தது பெசன்ட் நகர். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒருங்கே கிடைக்கப் பெறக்கூடிய அமைதியான இடம். கடற்கரையின் முகப்பில் அமைந்த இடம் என்பதால், அதற்கு தனி மதிப்பு உண்டு. உயர்தர மக்கள் வாழும் அமைதியான இடம். ஆனால் இப்பொழுது, அதற்கு முற்றிலும் மாறான விஷயம் நம் காதில் விழுகிறது.
அந்த காலை வேளையில், பெசன்ட்நகர் கடற்கரையில், பலரும் வழக்கமான உடற்பயிற்சிகளும், ஓட்ட பயிற்சியும் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண், ஜாகிங் உடை அணிந்திருந்த ஒருவனை திட்டிக் கொண்டிருந்தாள்... இல்லை, சபித்துக் கொண்டிருந்தாள்...!
"நீ என்ன ஆகப் போறேன்னு பாரு அர்னவ்...! இன்னைக்கு நான் வேதனைப்படுற மாதிரி நீயும் ஒரு நாள் வேதனைப்படுவ. என்னை மாதிரியே நீயும் காதலுக்காக ஏங்குவ. ஆனா, அது உன்னை விட்டு ஓடிப் போகும். ஒவ்வொரு நாளும் அதை நினைச்சு நினைச்சு நீ சாவ...!" என்று கூக்குரலிட்டாள் அந்தப் பெண்.
அவளுடன் இருந்த மற்றொரு பெண், அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றாள். அர்னவ் என்று பெயர் பெற்ற அவனோ, அவளுடைய சாபத்தால் எந்த பாதிப்பும் அடைந்ததாய் தெரியவில்லை. அவளையோ, அவளது சாபத்தையோ அவன் மதிக்கவே இல்லை. அவளை வீணான காகிதத்தை பார்ப்பது போல் பார்த்துவிட்டு தன் இருசக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு சென்றான் அவன்.
"போதும் நிறுத்து, நிஷா. எதுக்காக இப்படி நடந்துக்கிற? நான் தான் அவனைப் பத்தி முன்னாடியே உன்கிட்ட சொன்னேனே...! அவன் அப்படித்தான்னு உனக்கு தெரியாதா? அவன் இதயமே ஒரு கல்லு. மத்தவங்க இதயத்தை உடைக்கிறத பத்தி அவன் கவலைப்பட்டதே கிடையாது. அவனை நம்பினது உன்னோட தப்பு"
"அவன் என்னை இப்படி நம்ப வச்சு கழுத்தறுப்பான்னு நான் நினைக்கவே இல்ல, மீனா. நான் அவனை எவ்வளவு காதலிச்சேன் தெரியுமா? ஆனா அவன், என்னை இப்படி செய்யலாமா?"
"உன்கிட்ட மட்டும் இல்ல. எல்லா பொண்ணுங்ககிட்டயுமே அவன் இப்படித்தான் நடந்துக்குவான். ஆனா, இன்னைக்கும் பொண்ணுங்க அவனோட ஒரு பார்வைக்காக தவம் கிடக்குறாங்க"
"அதனால தான் அவனுக்கு இவ்வளவு திமிரு...!" என்றாள் நிஷா கோபமாய்."அவன் தான் இவ்வளவு ஹேண்ட்சமா இருக்கானே...! பின்ன ஏன் அவனுக்கு திமிர் இருக்காது? ஆனா எங்க ஏரியா பொண்ணுங்க அவனைப் பார்த்தாலே பயப்படுவாங்க"
"எதுக்காக அவன் இப்படி எல்லாம் செய்றான்?"
"நான் தான் உன்னை வார்ன் பண்ணினேனே...! அப்புறம் எதுக்காக உன்னோட அட்ரஸை அவனுக்கு கொடுத்த?"
"எனக்கு என்ன தெரியும், அவன் என்கிட்ட அட்ரஸ் கேட்டது எங்க அப்பாகிட்ட வந்து என்னை பத்தி போட்டுக் கொடுக்கதான்னு? எங்க அப்பா என்னை எப்படி அடிச்சாரு தெரியுமா? அவனுக்கு என்னை பிடிக்கலைன்னா, அதை நேரடியா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு எதுக்கு எங்க அப்பா கிட்ட வந்து, நான் அவன் பின்னாடி சுத்தி அவனை டார்ச்சர் பண்றேன்னு சொல்லிட்டு போகணும்?" என்றாள் தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு.
"அவன் பின்னாடி வர வேண்டாம்னு உன்கிட்ட அவன் எத்தனை தடவை சொன்னான்?"
"தொடர்ந்து முயற்சி பண்ணா, அவனை மடக்கிடலாம்னு நினச்சேன்"
"ஆனா அவன் கதையை தலைகீழா மாத்தி, உன்னை உங்க அப்பா கிட்ட மாட்டி விட்டுட்டான். உன்னை பிடிக்கலை அப்படிங்கறதுக்காக அவன் இதை செய்யல. அவனுக்கு காதல்னாலே பிடிக்காது. அந்த வார்த்தையை கேட்டாலே அவன் மிருகமா மாறிடுவான்"
"ஏன் அப்படி?"
"யாருக்கு தெரியும்? ஆறு வருஷத்துக்கு முன்னாடி அவங்க ஃபேமிலி எங்க ஏரியாவுக்கு குடி வந்தாங்க. அவன் அப்போ அமெரிக்காவில் இருக்கிற ஹாவர்ட் யுனிவர்சிட்டியில படிச்சுக்கிட்டு இருந்தான். ஹாவர்ட்ல படிச்சுக்கிட்டு இருந்த அவனைப் பார்க்க, எங்க ஏரியாவில் இருந்த பொண்ணுங்க எல்லாரும் அவ்வளவு ஆர்வமா இருந்தாங்க. ஆனா அவன் திரும்பி வந்ததற்கு பிறகு, இவன் ஏன்டா வந்தான்னு ஃபீல் பண்ண வச்சுட்டான். பொண்ணுங்க கிட்ட அவ்வளவு ரூடா நடந்துக்குவான். ஆனா பெரியவங்க கிட்ட ரொம்ப மரியாதையா பேசுவான். அதனால தான் அவன் எது சொன்னாலும் உண்மையா தான் இருக்கும்னு பெரியவங்க நம்புறாங்க""அவனுக்கு இதே தான் வேலையா?"
"இல்ல. அவன் யார் பேச்சுக்கும் போகவே மாட்டான். காதல் கீதல்னு சொல்லிக்கிட்டு யாராவது அவன் கிட்ட வந்தா, அவ்வளவு தான்... ஜோலி முடிஞ்சது..."
"எனக்கு எதைப் பத்தியும் கவலையில்ல. அவன் வெறுத்து ஒதுக்குற அதே காதலால அவன் அவஸ்தை படணும். அதுக்காக அவன் ஏங்கி சாகணும்"
"அது உன் கனவுல மட்டும் தான் நடக்கும். நான் பெட்டு கட்டுவேன். அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது"
அதை கேட்ட நிஷாவின் முகம் தொங்கி போனது.
"எங்க அப்பா கிட்ட நான் வாங்கின அடியை அவனுக்கு எப்படி திருப்பி கொடுக்கணும்னு எனக்கு தெரியும்" என்றாள் தன் கையில் இருந்த வீக்கத்தை பார்த்தவாறு.............
இரத்தின மஹால்
வாசலில் போடப்பட்டிருந்த அழகான மாக்கோலம் நம்மை அந்த வீட்டிற்குள் வரவேற்கிறது. வீடு முழுவதும் கமழ்ந்த ஊதுபத்தியின் மனம், அந்த வீட்டிற்கு ஒரு தெய்வீக அருளை தருகிறது.
தித்திக்கும் தேன் பாகும், தெவிட்டாத தெள்ளமுதும்... என்று டிஎம்எஸின் குரலில் கரைந்தபடி, பரபரப்பாய் சமைத்துக் கொண்டிருந்தார் திருமதி இரத்னா அரவிந்தன். வங்கி மேலாளராக பணிபுரியும் தன் கணவர் அரவிந்தனுக்கும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கும், காலை சிற்றுண்டியையும்,மதிய உணவையும் சமைத்துக் கொண்டு இருந்தார். நாம் சற்று முன் கடற்கரையில் சந்தித்த அர்னவ் தான் அவரது மூத்த பிள்ளை. இளையவன் நந்து கிஷோர். அவர்கள் யாருமே உணவை வெளியில் சாப்பிட விரும்புவதில்லை. அதனால் சமையலில் கவனம் செலுத்துவது ரத்னாவின் வழக்கம்.
சமையலறைக்குள் பரபரப்பாய் நுழைந்த நந்துகிஷோர், சற்று முன் கடற்கரையில் நடந்த சம்பவத்தை அவரின் காதில் ஓதினான். அவனது நண்பனின் மூலமாக அது அவனிடம் வந்தடைந்திருந்தது. சலிப்புடன் பெருமூச்சு விட்டார் ரத்னா. இது வழக்கமாய் நடப்பது தான். சில சமயங்களில் சாபம்... சில சமயங்களில் கோபம்... சில சமயங்களில் சண்டை கூட நடப்பதுண்டு. அர்னவை எதுவுமே மாற்றிவிடவில்லை. நந்து கிஷோரை போல அவன் கலகலப்பாக பழகக்கூடியவன் இல்லை என்றாலும், அவனது குடும்பத்தினருக்கு அவன் இனிமையானவன் தான்.
எதுவுமே நடக்காதது போல் வீட்டினுள் நுழைந்த அர்னவை பார்க்கும் படி செய்கை செய்தான் நந்து கிஷோர்.
"அரு..."
"சொல்லுங்க மா..."
"என்ன பிரச்சனை?"
அவனுக்கு தெரியும், அவனால் தன் குடும்பத்தாரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது என்று. கடற்கரையில் அவர்களுக்கு தெரிந்த நிறைய பேர் இருந்தார்கள். அங்கு நடந்ததை நிச்சயம் யாராவது ஒருவர் கூறி இருப்பார்கள்.
"புதுசா ஒன்னும் இல்லம்மா" என்றான் சாதாரணமாய்.
"எதுக்காக டா இப்படி எல்லார் வாயிலையும் நிக்கிற?"
"எனக்கு மட்டும் ஆசையா மா? என்னை இப்படி செய்ய வைக்கிறாங்க"
"இந்த மாதிரி சாபம் வாங்குறது நல்லது இல்ல, அரு..."
"அந்த சாபம் எல்லாம் என்னை எதுவும் செய்யாது மா"
"அப்படியெல்லாம் சொல்லாத அரு, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு வைப்ரேஷன் இருக்கு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்னு சொல்லுவாங்க"
அவரிடம் வந்து அவரது கரங்களை பற்றி கொண்ட அர்னவ்,
"அந்த சாபத்தை எல்லாம், ஆசிர்வாதமா மாத்துற ஒரு நல்ல அம்மா எனக்கு கிடைச்சிருக்காங்க. அப்புறம் ஏன் நான் அதைப் பத்தி கவலை படணும்?"
"இந்த விஷயத்தை எல்லாம் யாரையும் காயபடுத்தாம, ஸ்மூத்தா உன்னால ஹேண்டில் பண்ண முடியாதா, அரு?"
"ஸ்மூத்தாவா? எதுக்காக நான் அப்படி செய்யணும்? பப்ளிக்ல வச்சு நான் நேரடியா அவங்களை எல்லாம் அசிங்கப்படுத்தாம, அவங்க அம்மா அப்பா கிட்ட போய் பேசுறதுக்காக நீங்க சந்தோஷப்படணும்..."
"எனக்கு தெரியும். ஆனாலும்..."
"அம்மா, ப்ளீஸ் அதை விடுங்களேன்"
"இந்த பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. இதே வீட்ல எவ்வளவு ஹேண்ட்ஸமா நான் ஒருத்தன் இருக்கேன்... இவங்களுக்கெல்லாம் நான் ஏன் தெரிய மாட்டேங்குகிறேன்???" என்றான் நந்தா அலுப்புடன்.
"நீயும் என்னை மாதிரி நடந்துக்க ஆரம்பி. அதுக்கு அப்புறம் ஒருவேளை அவங்க உன்னை பார்க்கலாம்" என்றான் அர்னவ்.
"முயற்சி பண்ணி பாரு நந்து" என்று சிரித்தார் இரத்னா.
"என்னை போட்டுத் தள்ள ரெண்டு பேரும் பிளான் பண்றீங்களா??" என்றான் அதிர்ச்சியோடு நந்து.
"யார் உன்னை போட்டு தள்ள பிளான் பண்றது?" என்று கேட்டபடி மாடிப் படி இறங்கினார் அரவிந்தன்.
"வேற யாருப்பா? அம்மாவும் அருவும் தான்"
"நம்ப முடியலையே...!" என்றார் அரவிந்தன்.
"அப்படியா...? இவனை மாதிரியே என்னையும் நடந்துக்க சொல்லி எனக்கு இவன் அட்வைஸ் பண்றான்"
அதைக் கேட்டு சிரித்த அரவிந்தன்,
"அப்போ, நிச்சயமா உனக்கு பின்னாடி ஏதோ ஒரு சதி திட்டம் நடந்துகிட்டு இருக்கு. இப்ப நான் உன்னை நம்புறேன் நந்து" என்றார் அவர் சிரித்தபடி.
"நீங்களும் அவன் கூட கூட்டாப்பா?" என்றான் அர்னவ்.
"பின்ன என்னடா? நீ ஒரு தடவை திரும்பி பார்க்க மாட்டியான்னு பொண்ணுங்க பாவம் சாகுதுங்க... நீ என்னடா புதுசு புதுசா வழி கண்டுபிடிச்சு அதுங்கள மிரட்டி ஓட விடுற...! நேத்து கூட ஒரு பொண்ணு ஒளிஞ்சு ஒளிஞ்சு உன்னையே ஏக்கமா பார்த்துக்கிட்டு இருந்தா தெரியுமா?"
சட்டென்று அர்னவின் முகம் மாறியது.
"யாருப்பா அவ?" என்றான்.
அவனது கோபத்தை பார்த்து அரவிந்தனே கூட பின் வாங்கினார்.
சொல்லாதீங்க சொல்லாதீங்க என்று சைகை செய்தார்கள் ரத்னாவும் நந்தாவும்.
"சொல்லுங்கப்பா, யார் அந்த பொண்ணு?"
"நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா..." என்று ரத்னாவை பார்த்த அவர்,
"எங்களுக்கு காபி கொண்டு வாம்மா" என்றார்.
அர்னவின் கரத்தை பற்றி இழுத்து அவனை தன் பக்கத்தில் அமர வைத்த அவர்.
"கோவப்படாம உக்காரு. ஒரு பொண்ணு, அவ மனசுக்கு பிடிச்சவனை பாக்கணும்னு நினைக்கிறது அவளோட உரிமை. நீ ஏன் இவ்வளவு கோபப்படுற? ஒரு பொண்ணுக்கு அவளுக்கு பிடிச்சவனை பார்க்க உரிமை கூடவா கிடையாது? தான் காதலிக்கிறவன் இவ்வளவு கொடுமையா நடந்துக்கிட்டா அந்த பொண்ணு மனசு எவ்வளவு வேதனைப்படும்?"
"நீங்க காதல்னு எதைப்பா சொல்றீங்க? நான் லைஃப்ல செட்டில் ஆயிட்டேன், ஹார்வட்ல படிச்சிட்டு வந்தேன், பாக்க நல்லா இருக்கேன், செவன் டிஜிட்ல சம்பாதிக்கிறேன், இதையெல்லாம் பார்த்து வரதுக்கு பேரா காதல்? இங்க யாருமே இதயத்தை ஃபாலோ பண்றது கிடையாது. மூளையை வச்சு தான் எதிர்காலத்தை கணக்கு போடுறாங்க. காதல் மூளை சம்பந்தப்பட்ட விஷயமில்ல. அது இதயம் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால தான் இந்த மாதிரி பார்வைக்கு எல்லாம் நான் எந்த முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. இங்க காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது. இந்த உலகம் லாப நட்டத்தை கணக்கு பண்ணி தான் சுழலுது"
"நீ என்ன தான் எதிர்பார்க்கிற, அரு?"
"நான் எதையும் எதிர்பார்க்கல. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தான் தரும். நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதுக்கு மேல எனக்கு எதுவும் தேவையில்ல"
"சீக்கிரமே நீ உன்னோட சோல்மேட்டை சந்திக்கணும்னு நான் கடவுளை வேண்டுறேன்"
"சோல்மேட்டா...? அதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை பா...! எல்லா பொண்ணுங்களும் அம்மா மாதிரியே இருப்பாங்கன்னு நினைக்காதீங்க" என்று சிரித்தான்.
"அதை நான் நிச்சயம் ஒத்துக்குவேன். உங்க அம்மாவோட ஒரு பார்வைக்காக, அவங்க வீட்டுக்கு நடையா நடந்து, அவங்க ரோட்டை தேய்சது எனக்கு தானே தெரியும்" என்று சிரித்தார் அரவிந்தன்.
அவர்களுக்கு காப்பி கொண்டு வந்த ரத்னா வெட்கத்துடன் புன்னகைத்தார்.
"நீங்க பட்ட கஷ்டம் ஒன்னும் வீண் போகலையே...! வொர்த் இருக்கு தானே?" என்றான் அர்னவ் புன்னகைத்தபடி.
"பின்ன... ஹார்ட் வொர்க் எப்படி வீண் போகும்?" என்றார் அரவிந்தன்.
"அதனால தானே, இந்த வீட்டுக்கு கூட இரத்னா மஹால்னு தாஜ்மஹால் ரேஞ்சுக்கு பேர் வச்சிருக்காரு..." என்றான் நந்தா, இரத்னாவின் கன்னத்தை செல்லமாய் கிள்ளி.
"ஆனா, என் பிள்ளைங்க ரெண்டு பேருமே என்னை மாதிரி இல்லைங்கிறது எனக்கு ரொம்ப பெரிய ஏமாற்றம்" என்றார் அரவிந்தன்.
"அப்படியெல்லாம் மனச தளர விட்றாதீங்க பா... உங்க பிள்ளை நான் இருக்கேன்...! உங்க பேரை நான் நிச்சயம் காப்பாத்துவேன்" என்றான் நந்தா.
"என் இரத்னா மாதிரியே என் பிள்ளைகளுக்கும் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா, அதைவிட வேற சந்தோஷம் எனக்கு வேற எதுவும் இல்ல" என்றார் அரவிந்தன்.
காபியை குடித்து முடித்த அர்னவ் எழுந்து நின்றான், அந்த பேச்சை மேலும் வளர்க்க விரும்பாமல்.
"நான் ஆஃபீஸ் கிளம்புறேன் பா. எனக்கு லேட் ஆகுது" என்றான்.
அவன் கையைப் பிடித்து நிறுத்திய அரவிந்தன்,
"எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இல்ல, அரு. நீ அதை புரிஞ்சிக்கணும். உன்னோட மைண்ட் செட்ல இருந்து தயவு செய்து வெளியில வா அரு... காதலுக்கு உண்மையான அர்த்தம் தெரிஞ்ச பெண்கள் நிறைய பேர் இருக்காங்க"
அவர் முகத்தை ஊன்றி பார்த்தவாறு தன் கையை அவர் பிடியிலிருந்து விடுவித்து அங்கிருந்து சென்றான் அர்னவ்.
அரவிந்தனும் இரத்னாவும் ஒருவரை ஒருவர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டார்கள். அவன் பழையபடி மாற வேண்டும் என்பது தான் அவர்களது ஒரே ஆசை...! தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top