9 மறுமணம்

9 மறுமணம்

மறுநாள்

தமிழ் குடிலை விட்டு செல்ல தயாரானார்கள் வெங்கடேசன் குடும்பத்தினர். ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் கூறுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் செல்லும் போது அழக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார் தேவயானி.

"நாங்க இங்க வந்து போயிக்கிட்டு இருப்போம்" என்றார் அலமேலு.

சரி என்று தலையசைத்தார் தேவயானி.

"நீங்களும் எங்க வீட்டுக்கு வரணும். நம்ம உறவுக்கு ஷிவானி ஒரு முற்றுப்புள்ளியா இருக்கக் கூடாது" என்றார் வெங்கடேசன்.

"நிச்சயமா வறோம்... எங்களுக்கு மட்டும் வேற யாரு இருக்கா?" என்றார் சுவாமிநாதன்.

தேவயானியின் காலில் விழுந்து அவரிடம் ஆசி பெற்றாள் ஹரிணி.

"எப்பவும் சந்தோஷமா இருக்கணும்" என்று வாழ்த்தினார் தேவயானி.

சித்தார்த்தின் பார்வை அவள் மீது தான் இருந்தது. அங்கிருந்து செல்வதற்கு முன், தன்னிடம் அவள் ஏதாவது கூறுவாளா என்று காத்திருந்தான் அவன்.

"நாங்க கிளம்பறோம்... பாத்துக்கோங்க சித்தார்த்" என்றார் வெங்கடேசன்.

சரி என்று தலை அசைத்தான் சித்தார்த். தங்கள் காரை நோக்கி நடந்தார்கள் அவர்கள். வெங்கடேசனும், ஹரிணியும் தங்கள் உடமைகளை காரின் டிக்கியில் நிரப்பினார்கள். ஓட்டுனர் காரை கிளப்ப, ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார் வெங்கடேசன். சற்று தாமதித்த ஹரிணி, சித்தார்த்தின் பக்கம் திரும்பி,

"சாப்பிடாம இருக்காதீங்க. ஆன்ட்டியை பாத்துக்கங்க. அவங்களுக்கு நீங்க வேணும்" என்றாள்.

அவனுக்கும் கூட *ஒருவர்* வேண்டும் என்பது அவளுக்குத் தெரியுமா? என்று கூறாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றான் சித்தார்த். இதற்குப் பிறகு எப்பொழுது அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறதோ...!

"நீங்க சந்தோஷமா இருக்கலாம். உங்களை டிஸ்டர்ப் பண்ண நான் இங்க இருக்க மாட்டேன்" என்றாள் வலி நிறைந்த புன்னகையோடு. அது சித்தார்த்தை ரொம்பவே அசைத்து பார்த்தது.

"பை "

தன் அம்மாவின் பக்கத்து இருக்கையை அவள் ஆக்கிரமித்துக் கொள்ள, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள். மூச்சு முட்டுவது போலிருந்தது சித்தார்த்துக்கு. தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டான். எதைப் பற்றியும் சிந்திக்காமல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அது நிச்சயம் சாத்தியமல்ல.

.....

தன் முன்னே நின்று கொண்டிருந்த வெங்கடேசனை அமைதியாய் பார்த்தார் ஜோசியர். அவர் எதுவும் கேட்கும் முன்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் வெங்கடேசன்.

"உள்ள வாங்க" என்ற ஜோசியர் அவரை அமரும்படி சைகை செய்தார். அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார் வெங்கடேசன்.

"நான் உங்களை இப்படி கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க உண்மையிலேயே ஜோசியர் தானா?"

அவர் கேட்ட கேள்வியின் பொருள், ஜோசியருக்கு நன்றாகவே புரிந்தது.

"நான் ஷிவானியோட ஜாதகத்தை உங்ககிட்ட கொடுத்து சித்தார்த் ஜாதகத்தோட பொருத்தி பார்க்க சொன்னேன். கல்யாணத்தை உடனே நடத்த சொன்னீங்க. அவளுக்கு அற்ப ஆயுசுன்னு உங்களுக்கு தெரியலயா? அவ ரொம்ப நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டான்னு நீங்க கண்டு பிடிக்கலையா?"

"ஆமாம். நான் அதை கண்டுபிடிச்சேன். அதனால தான் அந்த கல்யாணத்தை சீக்கிரம் நடத்த சொன்னேன்"

"என்ன சொல்றீங்க நீங்க?"

"உங்க பொண்ணோட ஜாதகத்தை கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு தடவை நீங்க என்கிட்ட காட்டி இருக்கீங்க. அப்பவே நான் சொன்னேன், அவளுடைய ஜாதகத்தில் பிரச்சனை இருக்குன்னு"

ஆமாம் என்று தலையசைத்தார் வெங்கடேசன்.

"அவ ஒரு மாசத்துக்குள்ள இறந்துவிடுவான்னு எனக்கு தெரியும். அவ இறக்கும் போது சுமங்கலியா சாகணும்ங்குறது அவளுடைய விதி. அவ புருஷன் தான் அவளுக்கு கொல்லி வைக்கணும்னு அவள் ஜாதகம் சொல்லுது"

"ஆனா இதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லல?"

"எல்லாத்தையும் சொல்ற அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஏன்னா எல்லா உண்மைகளையும் எல்லாராலும் தாங்க முடியாது."

"இருக்கலாம்... ஆனா இன்னைக்கு, பாதிக்கப்பட்டு, வாழ்க்கை இழந்து நிக்கிறது என்னோட மாப்பிள்ளை தானே? அவருக்கு என்ன பதில்?"

"அவர் நல்லா இருப்பாரு. அவருக்கு அமைய போற இரண்டாவது வாழ்க்கை சிறப்பானதா அமையும்"

"அப்படின்னா...?"

"அவருடைய ஜாதகப்படி முதல் மனைவி நிலைக்க மாட்டா. உங்க பொண்ணை மட்டும் இல்ல, அவர் வேற யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் அந்த பொண்ணு இறந்து தான் போயிருப்பா. அதனால தான் இந்த கல்யாணத்தை நடத்த சொல்லி நான் சொன்னேன். அவருக்கு வரப்போற இரண்டாவது மனைவி, அவருடைய எல்லா கஷ்டத்தையும் மறக்க வைப்பா. அவரும் அந்த பெண்ணை உயிரா நேசிப்பார். அவரைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க"

"சித்தார்த் அவங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளை. அவங்களுக்கு எப்படி அவர் ஜாதகத்தில் இருந்த பிரச்சனை தெரியாம போச்சு?"

"இது வரைக்கும், அவங்க, அவருடைய ஜாதகத்தை பாக்காம இருந்திருக்கலாம். பொண்ணை பார்த்துப் படிச்சதுக்கு பிறகு பார்த்துக்கலாம்னு விட்டிருக்கலாம்."

"எப்படி அவங்க இப்படி விட்டாங்க?"

"அதுக்கு பேர் தான் விதி. நடக்குற எல்லாமே காரண காரியத்தோடு தான் நடக்குது. எல்லாமே அவங்கவங்களுடைய கர்மா. இன்னாருக்கு இன்னார் தான் பிள்ளைகளா பிறக்கணும்ங்குறதும், இன்னார் தான் சகோதர சகோதரிகளா வாய்க்கனும்ங்கறதும் கூட கர்மா தான் முடிவு பண்ணும். எல்லாம் நல்லபடியா நடக்கும். உங்க மாப்பிள்ளை சந்தோஷமா இருப்பார்."

"இந்த தடவை நான் உங்களை நம்பலாமா?"

"நம்பித் தான் ஆகணும். நான் சொன்னது நடக்கிறதை நீங்க கண்கூடா பாப்பீங்க. அப்போ ஷிவானி விஷயத்தில் நான் சொன்னது உண்மைன்னு உங்களுக்கு புரியும்"

சோபாவை விட்டு எழுந்த வெங்கடேசன், சற்றே நின்று,

"சித்தார்த் தன் இரண்டாவது மனைவியோட உண்மையிலேயே சந்தோஷமா இருப்பாரா?"

"நான் சொன்னது நடக்கலைன்னா, நான் ஜோசியம் பார்க்கிறதையே விட்டுடறேன்"

தீவிரமாய் யோசித்தபடி அங்கிருந்து சென்றார் வெங்கடேசன்.

ஒரு மாதத்திற்கு பிறகு

ஃபோனில் கேட்ட செய்தி, வெங்கடேசனுக்கு பேரதிர்ச்சியை தந்தது. தேவயானிக்கு மாரடைப்பு.

"அலமேலு... சீக்கிரம் வா... நம்ம ஹாஸ்பிடல் போகணும்..." என்று வரவேற்பரையிலிருந்து கத்தினார்.

அலமேலுவுடன் ஹரிணியும் ஓடி வந்தாள்.

"ஹாஸ்பிடலுக்கா? யாருக்கு, என்னங்க ஆச்சி?" பாதறினார் அலமேலு.

"நம்ம சம்பந்தி அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்காம். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க"

"அய்யய்யோ... எப்பங்க?"

"நேத்து ராத்திரி. சாமிநாதன் தான் ஃபோன் பண்ணாரு. எப்படி இருக்காங்கன்னு தெரியல. வாங்க சீக்கிரம். போய் பாத்துட்டு வரலாம்"

மூவரும் காரை நோக்கி ஓடினார்கள். கார் ஓட்டுனரை அழைத்து, மருத்துவமனைக்கு வண்டியை செலுத்தச் சொன்னார் வெங்கடேசன்.

"எதுக்காகத் தான் நம்ம குடும்பத்துக்கு இப்படியெல்லாம் சோதனை மேல சோதனை வருதோ தெரியல" என்று புலம்பினார் அலமேலு.

"சித்தார்த் அவங்களுக்கு ஒரே பிள்ளை. தன் பிள்ளையோட வேதனையை எந்த அம்மாவால தான் சகிக்க முடியும்? அவரோட வாழ்க்கை சந்தோஷமா அமையனும்னு அவங்க எப்படியெல்லாம் கனவு கண்டிருப்பாங்க? பெத்த பிள்ளையை இப்படியெல்லாம் பாக்குறது ரொம்ப கொடுமை. சித்தார்த் எவ்வளவு உடைஞ்சு போயிருந்தார்னு நம்ம பாக்கலையா?"

"ஆமாம். பாத்தவுடனேயே அவருக்கு ஷிவானியை பிடிச்சு போச்சு. அவரு அவளை ரொம்ப நேசிச்சிருக்கனும்... அவருக்கு வாழக் கொடுத்து வைக்கல"

சித்தார்த்தின் இரண்டாவது வாழ்க்கையை பற்றி ஜோசியர் கூறியதை நினைத்துப் பார்த்தார் வெங்கடேசன். அவர்கள் பேசுவதை அமைதியாய் கேட்டபடி, தன் அக்காவை நினைத்து கண் கலங்கினாள் ஹரிணி.

மருத்துவமனை

ஒரு அவசர வேலையாக அலுவலகம் சென்று, அப்போது தான் மருத்துவமனைக்கு திரும்பிய சித்தார்த், அவர்கள் உள்ளே நுழைவதை கண்டான். அருகிலிருந்த தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டான். அவர்களை சந்திக்க அவன் விரும்பவில்லை. ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில், ஆளாளுக்கு அவன் மீது பரிதாபத்தை கொட்டி, அவனை படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்டு அவனுக்கு அலுத்துவிட்டது. மீண்டும் தன் காருக்குச் சென்று, ஏசியை ஆன் செய்துவிட்டு அமர்ந்துகொண்டான். அவர்கள் திரும்பி சென்ற பிறகு, அவனது அம்மாவின் அறைக்கு செல்வது என்று தீர்மானித்துக் கொண்டான்.

தேவயானி இருந்த அறைக்குள் நுழைவதற்கு முன், அலமேலுவை எச்சரித்தார் வெங்கடேசன்.

"அவங்க முன்னாடி எக்காரணத்தைக் கொண்டும் அழக்கூடாது. நம்ம அவங்களுக்கு தைரியம் சொல்லத் தான் வந்திருக்கோம். நீயும் அழுது அவங்க நம்பிக்கையை குறைக்காதே."

சரி என்று தலையசைத்த அலமேலு, தன் புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டார்.

அவர்களைப் பார்த்து பலவீனமாய் புன்னகைத்தார் தேவயானி. அவரது கரத்தை பற்றிக்கொண்டு அன்பாய் தடவிக் கொடுத்தார் அலமேலு.

"என்னங்க இதெல்லாம்? நீங்க இப்படி நம்பிக்கையை இழக்கலாமா? தைரியமா இருங்க"

"என் பிள்ளையோட முகத்தைப் பார்த்துக்கிட்டு நான் எப்படி தைரியமா இருக்கிறது? அவனுக்கு இருபத்தி எட்டு வயசு தாங்க... அவனுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு. ஆனா, விதி அவன் வாழ்க்கையில் விளையாடிடிச்சி..."

"நீங்க உங்களை ஸ்டிரெஸ் பண்ணிக்காதீங்க மா" என்றார் வெங்கடேசன்.

"என்னால இந்த கொடுமையை தாங்கவே முடியல அண்ணா. என் பிள்ளையை இப்படி என்னால பார்க்கவே முடியல. நான் என்ன செய்யுறது?" அவருக்கு தொண்டையை அடைத்தது.

"நம்ம எல்லாத்தையும் சரி செய்யலாம்"

"எப்படி சரி செய்ய முடியும்? சித்து எங்ககிட்ட பேசுறதே இல்ல... எப்ப பாத்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். அவன் மனசளவுல செத்துட்டான்"

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்ற வெங்கடேசனை கேள்விக்குறியுடன் பார்த்தார் தேவயானி.

"சித்தார்த் நல்ல பிள்ளை. அவர் சந்தோஷமா இருக்கணும். அதனால, நான் அவருக்கு ஹரிணியை கல்யாணம் பண்ணி கொடுக்க விரும்புகிறேன்"

தேவயானி மட்டுமல்ல, அலமேலுவும் ஹரிணியும் கூட அதிர்ச்சி அடைந்தார்கள்.

"ஆமாம்மா... நான் இன்னும் இதை பத்தி என் பொண்டாட்டி, பொண்ணுகிட்ட கூட பேசல. அவங்க என்னோட விருப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்"

அலமேலுவை பார்த்துவிட்டு, இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியையும் பார்த்தார் வெங்கடேசன்.

"இல்லைங்க அண்ணா... அப்படி செய்யாதீங்க. முதல்ல ஹரிணிகிட்ட பேசுங்க. இது அவளுடைய வாழ்க்கை. தனக்கு யார் புருஷனா வரணும்னு தேர்ந்தெடுக்கிற உரிமை அவளுக்கு இருக்கு"

"அவ என்னோட பொண்ணு. என்னோட முடிவை அவ நிச்சயம் ஏத்துக்குவா" தீர்க்கமாய் பதில் கூறினார் வெங்கடேசன் ஹரிணியை பார்த்தபடி.

"இல்லண்ணா... சித்து ஏற்கனவே உடைஞ்சு போய் இருக்கான். அவனுடைய சோகத்தில் இருந்து அவனை வெளியில கொண்டு வர்ற ஒருத்தி தான் அவனுக்கு வேணும். அதுக்கு அர்ப்பணிப்பு வேணும். அவளை நம்ம கட்டாயப்படுத்தக் கூடாது. தயவுசெய்து அவகிட்ட பேசி அவளுடைய விருப்பம் என்னனு கேளுங்க"

"தேவையில்ல ஆன்ட்டி. எங்க அப்பாவுடைய முடிவு எப்பவுமே தப்பா இருக்காது. எங்களுக்கு எது நல்லதோ அதை தான் செய்வார். அப்பாவுடைய முடிவை நான் ஏத்துக்கிறேன்" என்றாள் ஹரிணி.

"இல்லம்மா... உங்க அப்பா சொல்றதுக்காக உனக்கு பிடிக்காத விஷயத்தை நீ செய்ய வேண்டாம். உனக்குன்னு கனவுகள் இருக்கும் இல்லையா?"

"எங்கப்பா அம்மாவுடைய சந்தோஷம் தான் என்னுடைய கனவு. அதுக்கு மேல எனக்கு வேற எந்த கனவும் இல்ல, ஆன்ட்டி. அவங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்"

அவளது தோளை பெருமையுடன் சுற்றி வளைத்துக் கொண்டார் வெங்கடேசன். சந்தோஷமாய் அவளை அணைத்துக் கொண்டார் அலமேலு. தேவயானியின் நிலையோ வார்த்தையில் அடங்கவில்லை. மனதார கடவுளுக்கு நன்றி கூறினார் அவர்.

"இதுக்கு சித்தார்த் ஒத்துக்குவாரா?" என்றார் அலமேலு.

"நான் அவனை ஒத்துக்க வைக்கிறேன்" என்றார் தேவயானி, ஹரிணியை பார்த்தபடி.

"தேவைப்பட்டா அவர்கிட்ட நான் பேசறேன்" என்றார் வெங்கடேசன்.

சரி என்று தலையசைத்தார் தேவயானி.

"சீக்கிரம் குணமாயிட்டு வாங்க. நமக்கு நிறைய வேலை இருக்கு" என்று சிரித்தார் வெங்கடேசன்.

ஆனந்தக் கண்ணீர் தளும்ப அவர் முன் இரு கரம் கூப்பினார் தேவயானி.

"அழாதீங்க சம்பந்தி. இது சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்" என்றார் அலமேலு.

ஆம் என்று தலையை அசைத்தபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் தேவயானி.

"சுவாமிநாதனும் சித்தார்த்தும் எங்க?" என்றார் வெங்கடேசன்.

"எனக்கு சாப்பாடு கொண்டு வர அவர் வீட்டுக்கு போயிருக்கார். ஏதோ அவசரமான வேலைன்னு ஆஃபீஸ்ல இருந்து ஃபோன் வந்ததுன்னு சித்து போயிருக்கான்"

"நான் அவங்ககிட்ட அப்பறமா ஃபோன்ல பேசிக்கிறேன்"

சரி என்றார் தேவயானி.

தேவயானியிடம் இருந்து அவர்கள் விடை பெற்றார்கள். அவர்கள் மூவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வருவதை காரில் அமர்ந்தபடி கவனித்தான் சித்தார்த். வெங்கடேசன் ஹரிணியின் கரங்களை பற்றிக்கொண்டு ஏதோ கேட்டார். அதற்கு இல்லை என்று தலை அசைத்தாள் ஹரிணி. உணர்ச்சிவசப்பட்ட அலமேலு அவளை அணைத்துக் கொண்டார். அந்த காட்சியை கண்ட சித்தார்த், முகம் சுருக்கினான். அவர்களுக்கு இடையில் என்ன நடக்கிறது? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களுடைய கார் வந்தவுடன் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

காரைவிட்டு கீழே இறங்கி நடந்தான் சித்தார்த். அப்போது தேவயானிக்கு உணவு கொண்டுவர சென்ற சுவாமிநாதனும் வந்து சேர்ந்தார்.

"இப்போ தான் வரியா சித்து?"

"ஆமாம்பா"

"சரி வா"

இவரும் தேவயானி இருந்த அறைக்கு வந்தார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார் தேவயானி.

"இந்த ஜூஸை குடி" என்று ஒரு பாட்டிலை அவரிடம் நீட்டினார் சாமிநாதன்.

"எனக்கு எதுவும் வேண்டாம்"

"எதுவுமே சாப்பிடாம நீ எப்படி பெட்டரா ஃபீல் பண்ணுவ?"

"நான் ஏற்கனவே பெட்டரா தான் இருக்கேன்"

"என்ன சொல்ற நீ?"

"நான், நம்ம சித்துவுக்கு கல்யாணம் பேசி முடிச்சுட்டேன்"

"என்ன்ன்ன்னது...?" என்று இருவரும் அதிர்ந்தார்கள்.

"ஆமாம்"

"அம்மா, இந்த நான்சென்ஸ்ஸை நிறுத்துறீங்களா?"

"மாட்டேன்... உன்னை சந்தோஷமா பார்க்கிற வரைக்கும் நிச்சயம் நிறுத்த மாட்டேன்"

"நான் நல்லா தான் மா இருக்கேன்"

"வாயை மூடு டா... உன் முகத்தைப் பாரு"

"அது எப்பவுமே அப்படித் தான் மா"

"உன் முகத்தைப் பத்தி எனக்கு தெரியாதா?"

"நான் வீட்டுக்கு போன அந்த சின்ன கேப்ல நீ எப்படி அவனுக்கு கல்யாணத்தை பேசி முடிச்ச?" என்றார் சுவாமிநாதன் குழப்பத்துடன்.

"அப்பா, அது எதுவா வேணா இருக்கட்டும். நான் கல்யாணம் பண்ணிக்க தயாராயில்ல. தயவுசெய்து என்னை விட்டுடுங்க. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பல..." அங்கிருந்து செல்ல திரும்பினான்.

"ஹரிணியை கூடவா?" என்று தேவயானி கேட்க, அதே இடத்தில் வேரூன்றி நின்ற சித்தார்த், அவரை நோக்கி திடுக்கிட்டு திரும்பினான்.

"ஹரிணியா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?"

முகத்தை சுருக்கிய சுவாமிநாதன்,

"நீ கேக்குறதுக்கு என்ன அர்த்தம்? நான் எதையாவது மிஸ் பண்றேனா?"

"நீங்க மட்டும் இல்ல... நம்ம எல்லாருமே முக்கியமான விஷயத்தை மிஸ் பண்ணிட்டோம்"

எச்சில் முழுங்கினான் சித்தார்த். தேவயானி உண்மையை கண்டு கொண்டு விட்டார் என்று அவனுக்குப் புரிந்து விட்டது. ஆனால் எப்படி?

"கொஞ்சம் கிளியரா பேசுறியா?"

"நம்ம சித்து பார்த்து ஆசைப்பட்டது ஷிவானியை இல்ல... ஹரிணியை"

"என்ன்னனது...???" என்று அதிர்ந்த சாமிநாதன் தன் பார்வையை சித்தார்த்தின் பக்கம் திரும்பினார். அவனோ தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். அவனுடைய செயலே உண்மையை பேசியது. அவன் அருகில் சென்று, அவன் தோள்களைப் பற்றிக் கொண்டார்.

"அம்மா சொல்றது உண்மையா?"

பதில் கூறாமல் அமைதியாக நின்றான் சித்தார்த்.

"நான் உன்கிட்ட தான் கேக்குறேன்"

"அது உண்மை இல்லன்னா, அவன் அமைதியா இருக்க மாட்டான்" என்றார் தேவயானி.

"அது என்னோட தப்புமா. வெங்கடேசன் வீட்ல ஹரிணியை பார்த்துட்டு, அவ தான் கல்யாண பொண்ணுன்னு நான் தான் தப்பா நினைச்சிட்டேன்"

அதைக் கேட்டு திகிலடைந்தார் சாமிநாதன்.

"இதை நீ ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லல?"

"ஹரிணி கல்யாண பொண்ணு இல்லைங்கிற உண்மை எனக்கு தெரிஞ்ச போது, நான் ஏற்கனவே ஷிவானி கழுத்துல தாலியை கட்டி இருந்தேன். பிறகு என்னால எதுவுமே செய்ய முடியல. அதனால தான் ஷிவானியை என் வைஃபா ஏத்துக்கிட்டேன்" அதற்கு மேல் அவன் எதுவும் கூறவில்லை.

"நீ ரொம்ப நல்ல காரியம் செஞ்சிருக்க, தேவா. இந்த கல்யாணத்தை சீக்கிரம் நடத்தணும்"

"அப்பா ப்ளீஸ்... நான் காதலிச்சேங்குறதுக்காக அவளோட வாழ்க்கையை கெடுக்காதீங்க"

"உன் மனசாட்சியை தொட்டு சொல்லு... உனக்கு அவ மேலே இப்ப காதல் இல்லைன்னு?"

"அது என்னுடைய தலையெழுத்து மா. ஆனா நீங்க இப்ப செய்யுறது சுயநலம். நான் ஒரு விடோயர்"

"வாயை மூடுடா. நீ சொல்றதை நான் கேட்க மாட்டேன். எது எப்படி இருந்தாலும் இந்த கல்யாணத்தை நான் நடத்தி தான் தீருவேன். உண்மையை சொல்லப் போனா, கல்யாண பேச்சை எடுத்தது, நான் இல்ல, உன்னுடைய மாமனார் தான். ஹரிணி உடனே ஒத்துக்கிட்டா. அவளை யாரும் கட்டாயப்படுத்தல"

அப்படி என்றால், சற்று நேரத்திற்கு முன்பு இதைப் பற்றித் தான் அவர்கள் வெளியில் பேசிக் கொண்டிருந்தார்களா?

"ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சிக்கோ, சித்து. ஒருவேளை இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கலைனா, ஷிவானி வேற ஒருத்தருடைய குழந்தையை சுமந்துகிட்டு இருந்தா அப்படிங்கற உண்மையை நான் அவங்ககிட்ட சொல்லிடுவேன்"

சித்தார்த்தும் சுவாமிநாதனும் ஏகத்துக்கும் அதிர்ந்தார்கள்.

"நீ என்ன சொல்ற தேவா?"

"ஹாஸ்பிடல்ல அலமேலு மயங்கி விழுந்தப்போ, அவங்களுக்கு தண்ணி கொண்டுவர நீ காருக்கு போயிட்ட. ஷிவானியை போஸ்ட்மார்ட்டம் பண்ண பையன், என்கிட்ட பணத்தை எதிர்பார்த்து, கர்ப்பிணிப் பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய சொன்னான்"

தூக்கிவாரிப்போட்டது சித்தார்த்துக்கு.

"சித்து, விஷயத்தை புரிஞ்சுக்கோ. எங்க இடத்தில வேற யாராவது இருந்திருந்தா, ஷிவானியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு, உன் வாழ்க்கையை கெடுத்ததுக்காக அவங்களை நார் நாரா கிழிச்சுருவாங்க. என்னை அதை செய்ய வைக்காத. இதை அவங்க சரிக்கட்டித் தான் ஆகணும். உன்னுடைய வாழ்க்கையை அவங்க திருப்பிக் கொடுத்து தான் ஆகணும்" என்றார் தவிப்புடன் சுவாமிநாதன்.

சித்தார்த்திற்கு தெரியும், இந்த கசப்பான உண்மை தன் தந்தையை அடித்துப் போட்டு விட்டது என்று. அவர் இப்படியெல்லாம் பேசக்கூடியவர் அல்ல. சூழ்நிலை அவரை இப்படி நடந்து கொள்ள வைக்கிறது.

"வேண்டாங்க. வெங்கடேசன் அண்ணன், முழு மனசோட, நம்ம சித்தார்த்துக்கு ஹரிணியை கல்யாணம் பண்ணி கொடுக்குறேன்னு சொல்லியிருக்கார். நம்ம அவரை மதிக்கணும்"

"இவன் ஏதாவது செஞ்சு சொதப்பாத வரைக்கும், அவர் மேல நான் வச்சிருக்கிற மரியாதை குறையாது" என்று எச்சரித்தார் சுவாமிநாதன்.

தனது அப்பா அம்மாவிற்கும், மாமனார், மாமியாருக்கும் இடையில் என்ன நடந்திருந்தாலும் சரி, ஹரிணியிடம் பேசி அவள் விருப்பத்தை தெரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாய் செயல்பட முடியாது. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டாக வேண்டும். அவளை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து அவளை கஷ்டப்படுத்துவதில் அவனுக்கு உடன்பாடில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top