8 எதார்த்தம்
8 எதார்த்தம்
தேவயானி இருந்த நிலையை பார்த்து அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்தார்கள் வெங்கடேசன் குடும்பத்தினர். தேவயானியை தனியாய் விட்டு செல்ல வெங்கடேசன் தயாராக இல்லை. தன் மனைவியும் மகளும் அவருடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். குறைந்தபட்சம், *காரியம்* நடந்து முடியும் வரையிலாவது அவர்கள் அங்கிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். அவருக்கு தெரியும், தங்களைப் போலவே சித்தார்த் குடும்பத்தினரும் கூட நொறுங்கித் தான் போயிருக்கிறார்கள் என்று. அவர்களை தனியே விடக்கூடாது என்று அவர் எண்ணினார். அதேநேரம், அலமேலுவையும் ஹரிணியையும் அவரால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அவர்களும் கூட தேவயானியுடன் இருந்தால் சற்று தேவலாம் என்று தோன்றியது அவருக்கு.
.......
தனது கட்டிலின் மீது அமர்ந்தபடி தரையை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் சித்தார்த். அவனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே அவனுக்கு புரியவில்லை. அவன் பார்த்தவுடன் விரும்பிவிட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எண்ணினான். ஆனால், அவளுடைய தமக்கையை அவன் மணந்து கொள்ள நேர்ந்தது. தனக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள அவன் தன்னை தயார்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணிய போது, அவன் மனைவி இறந்து விட்டாள்.
அது போதாதென்று, அவனுடைய விரல் நுனி கூட படாத அவன் மனைவி, கர்ப்பமாக இருந்தாள். ஷிவானி யாரையோ காதலித்திருக்கிறாள். வெங்கடேசனுக்காக அவள் தான் விரும்பியவனை விட்டுவிட்டு, தன்னை மணந்து கொண்டிருக்கிறாள். அதனால் தான் எப்பொழுதும் அவள் இறுக்கமாக இருந்திருக்கிறாள். அவள் மிக ஆழமாய் தன் காதலனை காதலித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவளுடைய அப்பாவின் கண்டிப்பான குணம் தெரிந்திருந்தும் கூட, தன்னையே அவனிடம் ஒப்படைக்கும் அளவிற்கு அவளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்காது. அவள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறாள். அதனால் தான் எதிரில் வந்த லாரியை கவனிக்காமல் விட்டிருக்கிறாள்.
அல்லது... ஒருவேளை... அவள் தெரிந்தே தன் உயிரை மாய்த்துக் கொண்டாளோ...! அதற்கும் வாய்ப்பிருக்கிறது. விஷயத்தின் தீவிரத்தை அவள் அலசி ஆராந்திருக்க வேண்டும். உண்மையை நினைத்தும், தன் அப்பாவை நினைத்தும் அவள் பயந்திருக்க வேண்டும். அவர்கள் தாம்பத்தியத்தை இன்னும் துவங்கவில்லை என்பதால், அவள் அவனை பற்றி கூட பயந்திருக்கலாம். அதனால் தான் அவள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும். அவள் மீது அலப்பரிய நம்பிக்கை வைத்திருந்த வெங்கடேசனுக்கு மட்டும் அவள் கர்பமாய் இருந்த விஷயம் தெரிந்தால் என்ன செய்வார்? அந்த உண்மை அவர் மனதை சிதைக்கும். தன் அக்காவின் மீது உயிரை வைத்திருக்கும் ஹரிணியும் தன் அக்கா தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டதை எண்ணி ஏமாற்றம் அடைவாள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் மூலம் ஹரிணி நேரடியாய் பாதிக்கப் படுவாள். அவளுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதால் வெங்கடேசன் அவளை சந்தேகபட துவங்கலாம். அவர் அவளை இறுக்கி பிடிக்கலாம். கல்லுரி வாழ்வின் இறுதியில் இருக்கும் அவளின் சந்தோஷம் பறிக்கப்படும். அவள் தன் சுதந்திரத்தை மொத்தமாய் இழப்பாள். தான் செய்யாத தவறுக்காக அவள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? இந்த உலகில் இல்லத ஒருத்தியை பற்றிய உண்மையை கூறுவதால் என்ன பயன்? மனகஷ்டம் தானே? அதனால் உண்மையை யாரிடமும் சொல்லவதில்லை என்று தீர்மானித்தான் சித்தார்த்.
.....
திருமணத்திற்குப் பிறகு எப்போதும் சிரிக்காத ஷிவானி, தமிழ் குடிலின் வரவேற்பறையில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள். மாலை அணிவிக்கப் பட்டிருந்த அவளது புகைப்படத்திற்கு முன் நின்று அழுதுகொண்டு இருந்தார் தேவயானி.
*சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கடி அம்மா நீ...! உன் முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை நான் பார்த்ததே இல்லையே...! எதுக்காக என் பிள்ளையோட வாழ்க்கையில வந்த? எதுக்காக எங்க எல்லாரையும் இப்படி கவலைப்பட வச்சிட்டு போயிட்ட? எனக்கு தெரியும் என் பிள்ளையை நீ விரும்பல. நீ ஏன் செத்துப் போனன்னு எனக்கு தெரியல. நீ நல்லவளா கெட்டவளான்னு கூட எனக்கு தெரியல. உன்னோட ஆத்மா சாந்தி அடைய நான் கடவுளை வேண்டிக்கிறேன். ஆனா, நீ எங்ககிட்ட இருந்து பறிச்சிக்கிட்டு போன சந்தோஷத்தை மட்டும் எங்ககிட்ட திருப்பி கொடுத்துடு* தன் மனதிற்குள் ஆதங்கப்பட்டார் அந்த தாய்.
தன் தோளின் மீது உணரப்பட்ட மென்மையான தொடுதலினால் திரும்பிப் பார்த்தார். அலமேலு கண்ணீருடன் நின்றிருக்க, அவரை கட்டிக் கொண்டு அழுதார் தேவயானி. சாமிநாதனுக்கும் வெங்கடேசனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.
.....
ஷிவானியின் புகைப்படத்தை பார்த்தபடி அலமேலுவின் மடியில் ஹரிணி படுத்திருந்ததை கண்டான் சித்தார்த். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டினுள் ரோஹித் நுழைவதை பார்த்து அவன் முகபாவம் மாறியது. அவனைப் பார்த்தவுடன் எழுந்தமர்ந்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஹரிணி. அவள் பக்கத்தில் தரையில் அமர்ந்துகொண்டான் ரோஹித்.
"ஆன்ட்டி எனக்கு ஒரு காபி கிடைக்குமா?" என்றான் அலமேலுவிடம்.
சரி என்று தலையசைத்தார் அலமேலு. அவருக்கு தெரியும், அவன் ஹரிணியை சமாதானப்படுத்த தான் அங்கு வந்திருக்கிறான் என்று. ஹரிணிக்கும் அப்படிப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் தேவை என்பது அவருக்கும் தெரியும்.
"எங்க அம்மா இறந்தப்போ நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான் ஹரிணியிடம்.
அவள் என்ன கூறினாள் என்பது அவளுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்ததால், தலையை குனிந்து கொண்டாள்.
"சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா அதை அனுபவிக்கும் போது தான் அது எவ்வளவு கஷ்டமானதுன்னு தெரியுது இல்ல? எனக்கு சொல்லும் போது சுலபமா சொல்லிட்ட. ஆனா, உனக்குன்னு வரும் போது எவ்வளவு கஷ்டப்படுற பார்த்தியா? இது தான் ரியாலிட்டி. லைஃப்ல எல்லா கட்டமும் ஒரு லெசன் தான். ஷிவானி இறந்திருக்கக் கூடாது. ஆனா நம்ம என்ன செய்ய முடியும்? அவ இல்லைங்கிறத நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இந்த உண்மையை ஏத்துக்கிட்டு அதிலிருந்து வெளியே வர உனக்கு நிச்சயம் கஷ்டமா தான் இருக்கும். ஆனா நீ அதை செஞ்சு தான் ஆகணும். உன்னோட பேரன்ட்ஸ்காக...! நீ தானே அவங்களுடைய ஸ்டிரெங்த்? இந்த சோகத்திலிருந்து அவங்களை வெளியில கொண்டு வா. அவங்களுக்கு தைரியம் கொடுத்து சந்தோஷப்படுத்து. அது உன்னுடைய பொறுப்பு. அதை புரிஞ்சுக்கோ. ஷிவானியுடைய மாமியாரும் ரொம்ப உடைஞ்சி போயிருக்காங்க. நீயும் சேர்ந்து அழுது பெரியவங்களை பலவீனப்படுத்தாதே. உன்னுடைய துக்கத்தை எல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு வெளியில அவங்களுக்காக சிரி."
அவனைப் பார்த்து சரி என்று தலையசைத்தாள் ஹரிணி. ரோஹித்தை தனக்கு பிடிக்கவில்லை என்ற போதும், சித்தார்த்துக்கு மன நிறைவாய் இருந்தது. ஹரிணி சந்தோஷமாக இருந்தால் போதும். அது தான் அவனுக்கு வேண்டும். ஆனால் ரோஹித்தின் அடுத்த வார்த்தைகள் அவனுக்கு உறுத்தலாக இருந்தது.
"நான் சொன்னா நீ கேட்பேன்னு எனக்கு தெரியும். ஏன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற புரிதல், வேற யாருக்கும் கிடைக்காத ஒன்னு. நான் இருக்கேன். உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். அது உனக்கும் தெரியும்"
ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.
ரோஹித்திடம் காபி டம்ளரை நீட்டிய அலமேலு,
"நீ வந்தது ரொம்ப நல்லதா போச்சு ரோஹித். இந்த சமயத்துல உன்னை மாதிரி ஒருத்தர் எங்களுக்கு தேவை" என்றார் சோகமாகவும் அதே நேரம் சந்தோஷமாகவும்.
அங்கிருந்து அமைதியாய் சென்றான் சித்தார்த்.
ஒரு வாரத்திற்கு பிறகு
ஹரிணியிடம் சீரான மாற்றத்தை கண்டான் சித்தார்த். தான் சாதாரணமாய் இருப்பதைப் போல் அவள் காட்டிக் கொள்ள முயன்றாள். தன்னுடைய கலகலப்பான பாணியில் அனைவரையும் சமாதானப்படுத்தவும் செய்தாள். அதேநேரம் அவள் தனியாய் இருக்கும் போது அழுவதையும் அவன் கவனித்தான். அவள் ரோஹித்தின் அறிவுரையை ஏற்று நடந்து கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. இந்த அளவிற்கா அவள் ரோஹித்தை மதிக்கிறாள்? இது வெறும் மதிப்பு மட்டும் தானா அல்லது அதற்கும் மேலா? அவனுக்கு தவிப்பாய் இருந்தது. ஏனோ அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. என்ன செய்வதென்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.
.....
ஒரு தட்டில் அன்னமிட்டு, அதை சித்தார்த்துக்காக வேலையாள் சோமுவிடம் கொடுத்தனுப்பினார் தேவயானி. தேவயானியும், அலமேலுவும், தத்தம் கணவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சமையலறையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தாள் ஹரிணி. தனக்கும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள். அப்பொழுது சோமு, தான் எடுத்துச் சென்ற தட்டை திருப்பிக் கொண்டு வந்தான்.
"அம்மா, தம்பி பசிக்கலைன்னு சொல்லிட்டாரு"
சுவாமிநாதனை கவலையுடன் பார்த்த தேவயானி,
"அவன் உடம்பை கெடுத்துக்குறான்" என்றார்.
"பிரேக் ஃபாஸ்ட் கூட அவன் ஒழுங்கா சாப்பிடல" என்றார் சுவாமிநாதன் கவலை தோய்ந்த குரலில்.
"பிரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல. ஷிவானி இறந்ததுக்கு பிறகு அவர் ஒழுங்காவே சாப்பிடுறது இல்ல" என்றார் வெங்கடேசன்.
"அவனுடைய கஷ்டம் நமக்கு புரியுது. ஆனா பட்டினி கிடக்கிறது இதுக்கு ஒரு தீர்வாகாதில்லையா?" என்றார் சுவாமிநாதன்.
தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்தாள் ஹரிணி. அவளை அனைவரும் கேள்விக்குறியுடன் பார்த்தார்கள்.
"அவருக்கு நான் சாப்பாடு கொடுத்துட்டு வரேன்" தட்டை எடுத்துக்கொண்டு அவன் அறையை நோக்கி நடந்தாள் ஹரிணி.
"அவன் அவளை எதுவும் சொல்லாம இருக்கணும்" பதற்றத்துடன் கூறினார் சுவாமிநாதன்.
சித்தார்த் இப்போதிருக்கும் நிலையில் அவன் என்ன கூறுவான் என்று தேவயானிக்கும் கூட தெளிவில்லை. ஹரிணியை பின்தொடர்ந்து சென்று, அவர்கள் பேசுவதை கேட்கக்கூடிய தூரத்தில் நின்று கொண்டார்.
தன் வலது கையை மடித்து நெற்றியின் மீது வைத்தபடி, கண்ணை மூடி கட்டிலில் படுத்திருந்தான் சித்தார்த். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கண் திறந்தான். ஹரிணி தட்டுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, பெயர் கூற முடியாத முகபாவத்துடன் எழுந்து அமர்ந்தான். அவனிடம் அனுமதி பெறாமல் ஹரிணி உள்ளே நுழைய, கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்றான் சித்தார்த். அவள் எதற்காக அங்கு வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. அது அவன் எதிர்பாராதது கூட. ரோஹித் கொடுத்த அறிவுரையை அவள் தன்னிடம் கூட செயல்படுத்துவாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. அவள் தன்னையும் அவளை சார்ந்தவனாக எண்ணியது அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது.
"நீங்க உங்க பொண்டாட்டி மேல ரொம்ப பிரியமா இருந்தது எல்லாருக்கும் தெரியும். அதை நீங்க பட்டினி கிடந்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல. உங்களுக்கு அவளை எவ்வளவு நாளா தெரியும்? எங்க அப்பா அம்மாவை விடவா நீங்க அவளை ரொம்ப நேசிச்சிட போறீங்க? அவங்க கீழே சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு அவ மேல பாசம் இல்லையா? எனக்கு என் அக்கா மேல பாசம் இல்லையா? நாங்க எல்லாரும் சாப்பிடத் தான் செய்றோம். அதை நாங்க சந்தோஷமா செய்யுறோம்னு அர்த்தமில்ல. இல்லாத ஒருத்திக்காக உங்க அம்மா அப்பாவை சாகடிக்காதிங்க. அவ செத்துட்டா...! அதை யாராலையும் மாத்த முடியாது. அதை புரிஞ்சுக்கோங்க. இப்படிப் பட்டினி கிடக்கிறது நல்லதில்ல. உங்களுக்குன்னு இன்னும் சில பேர் இருக்காங்க. அவங்களுக்காக தயவு செய்து சாப்பிடுங்க."
தான் கொண்டு வந்த தட்டை அவனிடம் நீட்டினாள். அந்த தட்டையும் பார்த்துவிட்டு அவளையும் பார்த்தான் சித்தார்த். அவள் முகத்தில் எந்த குழப்பமும் இல்லை. வெகு தெளிவாக இருந்தது. அவளிடமிருந்து அந்த தட்டை பெற்றுக்கொண்டான் சித்தார்த்.
"சாப்பிடுங்க "
சரி என்று தலை அசைத்தான். அவனைப் பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டு அங்கிருந்து சென்றாள் ஹரிணி. அவளிடமிருந்து அந்த ஒரு புன்னகையை பெற, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு. வெளியே வந்த ஹரிணி, அங்கு தேவயானி நின்றதை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள்.
சித்தார்த் கட்டிலின் மீது அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட தேவயானியின் கண்கள் கலங்கின. சந்தேகமே இல்லை அவன் விரும்பியது ஹரிணியை தான் என்று அவருக்கு தீர்க்கமாய் புரிந்தது. இல்லாவிட்டால் அவன் ஹரிணியின் வேண்டுதலை... இல்லை... உத்தரவை ஏற்றிருக்க மாட்டான்.
உணவு மேஜைக்கு வந்தார் தேவயானி.
"சித்து சாப்பிடுறானா?" என்றார் சுவாமிநாதன்.
ஆமாம் என்று தலையசைத்த தேவயானி, ஹரிணிக்கு கண்களால் நன்றி கூற,
"ரொம்ப தேங்க்ஸ்மா" என்றார் சுவாமிநாதன்.
அவரைப் பார்த்து நட்பாய் புன்னகைத்தாள் ஹரிணி. வெங்கடேசனோ எதையோ சிந்தித்தபடி இருந்தார்.
இரவு
சித்தார்த்திற்கு உணவு எடுத்துச் செல்லலாம் என்று ஹரிணி எண்ணிய போது, அவனே சாப்பிட வந்தான். சிரித்தபடி அமர்ந்துகொண்டாள் ஹரிணி. கூப்பிடாமலேயே அவன் சாப்பிட வந்தது, அனைவருக்கும் நிம்மதியை தந்தது.
"நாங்க நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கோம்" என்றார் வெங்கடேசன் தயக்கத்துடன்.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான் சித்தார்த். அதை கவனித்தார் தேவயானி.
"ஆமாங்க... எல்லா சடங்கும் முடிஞ்சு போச்சு. போட்டதை போட்ட மாதிரி விட்டுட்டு வந்தேன். வீட்டுக்கு போய் எல்லாத்தையும் முதலிலிருந்து ஆரம்பிக்கணும்" என்றார் அலமேலு.
"ஹரிணியும் பத்து நாள் லீவ் எடுத்துட்டா. அவளும் காலேஜுக்கு போகணும் இல்லையா?" என்றார் வெங்கடேசன்.
சித்தார்த்தின் பார்வை ஹரிணியின் மீது ஊன்றி நின்றது.
"நீங்க எங்க கூட இருந்தது தான் எங்களுக்கு கொஞ்சமாவது ஆறுதலை தந்தது" என்றார் சாமிநாதன்.
"நாளையில இருந்து எங்க வீடு சுடுகாடு மாதிரி இருக்க போகுது" என்று கண்ணீரை விழுங்கினார் தேவயானி.
"நாங்க என்ன பாவம் செஞ்சோமோ தெரியல. கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே எங்க பிள்ளை தன் வாழ்க்கையை இழந்துட்டான்" வேதனைப்பட்டார் சுவாமிநாதன்
அந்த இடத்தை விட்டு உடனே எழுந்து சென்றான் சித்தார்த்.
"சித்து... " தேவயானி அழைத்தும் கூட அவன் நிற்கவில்லை. அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
தேவயானியும் சாப்பாட்டை பாதியில் விட்டு எழுந்து சென்றார்.
வெங்கடேசனும் அலமேலுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாட்களில் தேவயானியும், சுவாமிநாதனும் எந்த அளவிற்கு இடிந்து போயிருந்தார்கள் என்பதை அவர்கள் கண்கூடாய் கண்டிருந்தார்கள். பலமுறை மயங்கி விழுந்தார் தேவயானி. அவர்களுடைய மன அழுத்தம், உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்தது. சுவாமிநாதனும், சித்தார்த்தும் அலுவலகம் செல்லவே இல்லை. அவர்களுடைய மேலாளர் சீனிவாசன் தான், வீட்டிற்கு வந்து அவர்களிடம் முக்கியமான கோப்புகளில் கையெழுத்து பெற்றுச் சென்றான்.
"அவங்களை எப்படி சமாதானப் படுத்துறதுன்னே தெரியல" என்றார் அலமேலு.
"ஆமாம். நம்ம பெண்ணை பறிகொடுத்தோம். ஆனா அவங்க, தன் பிள்ளையோட வாழ்க்கையை தொலச்சிடாங்க" என்று வேதனைப்பட்டார் வெங்கடேசன்.
ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தாள் ஹரிணி.
"என்ன யோசிக்கிற பிரியா?" என்றார் அலமேலு.
"அவங்க ரெண்டு பேருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்த நம்ம பக்கத்து வீட்டு ஜோசியரை பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கேன். சிவா இறந்திட போறான்னு அவருக்கு நிச்சயம் தெரிஞ்சு இருக்கணும் இல்ல? அப்புறம் எதுக்காக அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி அவசர படுத்தினார்? பாவம் மாமா... அவர் சொன்னதால தான், இன்னைக்கி தன் சந்தோஷத்தை இழந்துட்டு நிக்கிறார்."
அவள் கூறிய வார்த்தைகளில் மூழ்கிப்போனார் வெங்கடேசன். அவள் கூறுவது மிக சரி. எதற்காக ஜோசியர் ஷிவானியின் முடிவைப் பற்றி ஒன்றும் கூறவில்லை? எதற்காக இந்த திருமணத்தை அவ்வளவு அவசரமாக நடத்தும்படி கூற வேண்டும்? மறுநாள் அவரை சந்தித்து கேட்டு விடுவது என்று தீர்மானித்தார் வெங்கடேசன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top