7 உண்மை
6 உண்மை
தோழிகளுடன் ஆக்ராவுக்கு கல்லூரி சுற்றுலா சென்ற ஹரிணி, தாஜ்மஹாலுக்கு முன்னால் நின்று தனது தோழியருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு வெங்கடேசனிடம் இருந்து அழைப்பு வரவே, அதை சந்தோஷமாய் ஏற்றாள்.
"அப்பா, நாங்க எல்லாரும் தாஜ்மஹால் முன்னாடி இருக்கோம்..." என்றாள் வழக்கமான உற்சாகத்துடன், உண்மை தெரியாமல்.
அதையடுத்து வெங்கடேசன் கூறிய வார்த்தைகளை கேட்டு அவள் உறைந்து போனாள். அவளுடைய கண்களில் கண்ணீர் ததும்பியது. அதிர்ச்சி தாங்காமல், தனது சுயநினைவை இழந்து சரிந்தாள் ஹரிணி. அவளுடைய தோழி அனு, அவளது கைபேசியை எடுத்து வெங்கடேசனிடம் பேசினாள்.
"அங்கிள், ஹரிணி மயங்கிட்டா. என்ன ஆச்சு அங்கிள்?"
"ஒரு ஆக்ஸிடெண்ட்ல ஷிவானி இறந்துட்டா மா..." வெடித்து அழுதார் வெங்கடேசன்.
ஹரிணியின் கைப்பேசியையும், தரையில் மயங்கி கிடந்த ஹரிணியையும் நம்பமுடியாமல் மாறி மாறி பார்த்தாள் அனு. ஹரிணியின் தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டார்கள். தனது கல்லூரி பேராசிரியர்களிடம் விஷயத்தை கூறினாள் அனு. ஹரிணியை டெல்லிக்கு அழைத்து செல்ல, கல்லுரி நிர்வாகத்தால் ஒரு பேராசிரியை நியமிக்கபட்டார். ஹரிணியுடன் அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவரும் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு புறப்பட்டார்கள். அவர்கள் ஹரிணியை தனியாய் அனுப்பி வைக்க தயாராக இல்லை. அவர்களுக்குத் தெரியும், அவளும் ஷிவானியும் எந்த அளவிற்கு நெருக்கமானவர்கள் என்று.
அரசு மருத்துவமனை டெல்லி
பிணவறையின் வெளியே அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் நின்றிருந்தான் சித்தார்த். ஷிவானி கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு திருமணமாகி இருபது நாட்கள் கூட ஆகவில்லை. அவனுடைய நகம் கூட அவள் மீது பட்டதில்லை. ஆனால் அவள் 45 நாட்கள் வளர்ந்திருந்த கருவை சுமந்து கொண்டு இருந்திருக்கிறாள். இந்த உண்மை தெரிந்தால் அவள் குடும்பத்தினர் என்ன செய்வார்கள்? சில நிமிடம் எடுத்துக்கொண்டு விளைவுகளை அலசி ஆராய்ந்தான் சித்தார்த். தன் கையில் கொடுக்கப்பட்திருந்த ஷிவானியின் பிரேத பரிசோதனை சான்றிதழை மடித்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
அவனது அம்மாவும், அப்பாவும் அவனை தேடியபடி மருத்துவமனையின் உள்ளே ஓடி வருவதை கண்டான். அவர்களை அங்கு வரவேண்டாம் என்று அவன் கூறியிருந்த போதும் அவர்கள் வந்துவிட்டார்கள். அவனைக் கட்டிக் கொண்டு கதறினார் தேவயானி. சுவாமிநாதனால் தனது கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவர்கள் நொறுங்கிப் போயிருந்தார்கள். ஏன் இருக்காது? சித்தார்த் அவர்களின் ஒரே மகனாயிற்றே...! அவனுக்கு திருமணமாகி இன்னும் இருபது நாட்கள் கூட நிறைவடையவில்லை.
அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்றே புரியவில்லை சித்தார்த்துக்கு. என்ன கூறி அவர்களை சமாதானப்படுத்துவது? அவன் என்ன கூறினாலும், அந்த வார்த்தைகள் அவர்களை சமாதானப்படுத்தி விடுமா?
அப்பொழுது,
"பிரியா..." என்று ஓலமிட்டு அலறியபடி ஓடி வந்தார் ஷிவானியின் அம்மா அலமேலு.
அவர் கட்டுப்படுத்தவே முடியாதவராய் இருந்தார். சொல்ல போனால், அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் யாரும் எண்ணவில்லை. ஷிவானியை பெற்றவர் ஆயிற்றே...! தேவயானியை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதார்.
"என் பொண்ணு நம்மளை விட்டுட்டு போயிட்டா... எவ்வளவு சந்தோஷமா நான் அவளை கல்யாணம் பண்ணி கொடுத்தேன்... எவ்வளவு கனவு... இவ்வளவு எதிர்பார்ப்பு... நான் அவளை இழந்துட்டேன்... நம்மளை ஏமாத்திட்டு அவ போயிட்டா..."
அதைக் கேட்டு தன் தலையை நிமிர்த்தினான் சித்தார்த். அவர் கூறுவது சரி... ஷிவானி அவர்களை ஏமாற்றித் தான் விட்டாள்.
"அலமு, உன்னை கண்ட்ரோல் பண்ணு" என்றார் வெங்கடேசன்.
ஆனால், பிரேத பரிசோதனை முடித்து, வெள்ளை காடாத் துணியில் சுற்றி கொண்டுவரப்பட்ட ஷிவானியின் பூதவுடலை பார்த்து தன்னை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழுதார் அலமேலு.
"ஐயையோ நான் என்ன செய்வேன்? உன் தங்கச்சி கேட்டா நான் என்னடி பதில் சொல்லுவேன்? உன்னை இந்த நிலைமையில அவ எப்படி டீ பாப்பா? அவளோட அக்காவை இப்படி பார்த்தா என் குழந்தை உடைஞ்சு போயிடுவாளே..."
தொண்டை கட்டி, நெஞ்சை அடைக்க மயங்கி விழுந்தார் அலமேலு. அவருக்கு தண்ணீர் கொண்டுவர காரை நோக்கி ஓடினான் சித்தார்த்.
ஷிவானியின் உடல், தமிழ்குடிலை நோக்கி பயணமானது. தெரிந்தவர்களும், அறிந்தவர்களும், நண்பர்களும் வந்துவிட்டார்கள்... ஒருத்தியைத் தவிர... ஷிவானியின் ஒரே தங்கை ஹரிணி...! அவளுடைய வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர்.
தமிழ் குடில் சோகக் கடலில் மூழ்கியது. தனது பிறந்தநாளிலேயே தன் உயிரைவிட்ட ஷிவானிக்காக அனைவரும் பரிதாபப் பட்டார்கள்.
இந்த அனைத்து கலவரத்தின் இடையில், சித்தார்த்தின் கவனம் ஒரு குறிப்பிட்ட நபரின் மீது குவிந்திருந்தது. ஹரிணியின் நண்பன் ரோஹித்...! பார்க்க அழகாகவும், ஸ்டைலாகவும் ஹிந்தி பட ஹீரோ போல் இருந்தான். தமிழை கொச்சையாய் பேசினான். அவன் பேச்சில் ஹிந்தியின் ஆதிக்கம் தெரிந்தது.
*நான் சொல்றேன்ல* என்பதை,
*நா சொல்ற இல்ல?* என்றான்.
குடும்பத்தில் ஒருவனைப் போல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் உரிமையாய் வேலை வாங்கினார் வெங்கடேசன். அவன் அடிக்கடி தன் கை கடிகாரத்தை பார்ப்பதும், நுழைவு வாயிலை பார்ப்பதுமாய் இருந்தான். சந்தேகமே இல்லை, அவன் ஹரிணியை தான் எதிர்பார்த்து காத்திருந்தான். அவளை பற்றி வெங்கடேசனையும் கூட விசாரித்தான். பார்க்க வெகு நாகரிகமானவனாய் தெரிந்த போதிலும், ஏனோ அவனை சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை.
அனைவரது கவனமும் நுழைவாயிலின் பக்கம் திரும்பியது, அவர்கள் காத்திருந்த நபர் உள்ளே நுழைந்த போது...! ரோஹித்தின் முகத்தில் மின்னல் ஒளிர்ந்ததை கவனித்தான் சித்தார்த். ஹரிணியை பார்த்தவுடன் அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், சித்தார்த்திற்கு ஏதோ ஒன்றை நிச்சயப்படுத்தியது. ரோஹித் ஹரிணியிடம் நண்பனாக மட்டும் பழகவில்லை. அவனுக்கு அவள் மீது விருப்பம் இருக்கிறது.
சிறு நடை நடந்து, அச்சம் நிறைந்த முகபாவத்துடன் உள்ளே நுழைந்தாள் ஹரிணி. அவள் உடல் நடுங்குவதை தெளிவாய் காண முடிந்தது. அவளது கண்கள் நம்பமுடியாத பார்வையை வெளிப்படுத்தின. ஷிவானியின் உடலை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள் அவள். அவளுடன் வந்த தோழிகள் அவளையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளை அப்படி பார்த்த அலமேலு பதட்டம் அடைந்தார். அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, ஹரிணி அந்த இடத்தையே இரண்டாக்கி விடுவாள் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. அவளை நோக்கி ஓடிச் சென்ற அலமேலு, அவள் கன்னத்தை தட்டினார். அப்போதும் ஹரிணியின் கண்கள் ஷிவானியிடமிருந்து அகலவில்லை.
"பிரியா... இங்க பாரு... ஏதாவது பேசு... அக்கா உன்னைத் தான் பார்த்துகிட்டு இருப்பா... நீ அழாம இருந்தா அவ வருத்தப்படுவா... இப்படி ஜடம் மாதிரி இருக்காத... ஏதாவது சொல்லு..." அவளது தோள்களை பற்றி குலுக்கினார்.
ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அங்கு கூடியிருந்த அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது. வெங்கடேசனை பார்த்த அலமேலு,
"என்னங்க, என் பிள்ளைய பாருங்க. அவளை ஏதாவது சொல்ல சொல்லுங்க. நீங்க சொன்னா அவ கேப்பா. எனக்கு இவளை இப்படி பார்க்க பயமா இருக்கு. ஏற்கனவே நான் ஒருத்தியை இழந்துட்டேன். இவளை என்னால இப்படி பார்க்க முடியல. ஏய் கடவுளே... உனக்கு என் மேல கருணையே இல்லையா? எதுக்காக என்னோட குழந்தைங்களை இப்படி சோதிக்கிற?" என்று கடவுளை திட்டினார்.
அங்கு வந்த தேவயானி, அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஹரிணியின் கன்னத்தில் பட்டென்று அறைந்தார். திடுக்கிட்டு அவரை பார்த்த ஹரிணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.
"அம்மா ஹரிணி... " என்ற தேவயானியிடம், ஷிவானியின் உடலை நோக்கி தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி,
"சிவா... " என்றாள்.
அவளை கட்டிக்கொண்டு வெடித்து அழுதார் தேவயானி. அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவள், ஷிவானியின் உடலை நோக்கி ஓடினாள்.
"ஏய் சிவா... என்னை பாரு. உன்கிட்ட சொன்ன மாதிரியே, உன் பர்த்டே முடியறதுக்கு முன்னாடி நான் உன்னை பார்க்க வந்துட்டேன். நான் உனக்கு கொடுத்த வாட்ச் எங்க? சொல்லு... என்கிட்ட பேசு. இப்போ நீ என்கிட்ட பேசலனா நான் உன்கிட்ட எப்பவுமே பேசமாட்டேன்... எப்பவும் பேசமாட்டேன்..." என்று அவள் அருகில் அமர்ந்து பரிதாபமாய் அழுதாள்.
தேவயானியும், அலமேலுவும் அவள் அருகில் அமர்ந்து அவளை சமாதானம் செய்ய முயன்றார்கள்.
"ஆன்ட்டி, இன்னைக்கு நான் வரணும்னு அவ சொல்லும் போது, நீங்க எங்க கூட இருந்திங்க இல்ல?"
ஆமாம் என்று அழுதபடி தலையசைத்தார் தேவயானி.
"நான் வந்துட்டேன் இல்ல? உங்க சோம்பேறி மருமகளை எழுப்புங்க... எப்படி தூங்குறா பாருங்க..."
தன் தலையில் அடித்துகொண்டு அழுதார் அலமேலு.
கல்லைப் போல் நின்றிருந்த சித்தார்த்தின் மனதை கூட அவளுடைய கதறல் கலங்கச் செய்தது. அவன் கண்ணிலிருந்து கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்தது. அவனை வலி நிறைந்த பார்வை பார்த்தாள் ஹரிணி. அவனை பார்க்கவே அவளுக்கு பாவமாய் இருந்தது. பரிதாப உணர்வுடன் அவனை பார்த்து கண்ணீர் வடித்தாள் அவள். அவளை பொறுத்த வரை, அவன் தன் அக்காவை உயிராய் நேசித்தவன் ஆயிற்றே...! அவளுடைய பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட சித்தார்த்துக்கு *அட போங்க டா* என்றிருந்தது.
தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்ட திடுக்கிடும் திருப்பங்களை எண்ணியபடி, கண்களை மூடிக்கொண்டான் சித்தார்த். இன்னும் எவ்வளவு திருப்பங்களை தான் அவன் கடக்க நேரிடுமோ? இப்பொழுது அவன் இருக்கும் நிலை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரிடமும் கூறக் கூட அவனால் முடியவில்லை. என்ன கொடுமை இது?
ஷிவானியின் உடல், அங்கிருந்து கொண்டு செல்லபட்ட போது மயங்கி விழுந்தார் தேவயானி. சமையலறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவர் முகத்தில் தெளித்தாள் ஹரிணி. ஆனாலும் அவர் நினைவு திரும்பவில்லை. மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவருடைய ரத்த அழுத்தம் தாறுமாறாய் எகிறி போயிருந்தது. அவருக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுத்துவிட்டு சென்றார் மருத்துவர்.
ஷிவானியின் இறுதி சடங்கு நிறைவு பெற்றது. தன்னிடம் பேசாத, தன்னுடன் வாழாத, தான் ஒரு போதும் விரும்பாத, வேறு யாருடைய குழந்தையையோ சுமந்து கொண்டிருந்த அவளின் சிதைக்கு, கணவன் என்ற முறையில் தீ மூட்டினான் சித்தார்த்.
மாயனத்தில் இருந்து வந்த சித்தார்த், தனது அறைக்கு வந்து குளிக்கச் சென்றான். ஷவரை திறந்துவிட்டு தண்ணீருக்கடியில் நின்றான். ஷிவானி கர்ப்பமாக இருந்திருக்கிறாள். அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஷிவானிக்காவது அதைப் பற்றி தெரியுமா? அதைப் பற்றி எண்ணியபடி தன் முகத்தை உயர்த்தி, தன் முகத்தை தண்ணீரில் நனைத்த படி நின்றான்.
தன் முகத்தில் வழிந்த தண்ணீரை கையால் வழித்துவிட்டு நிமிர்ந்தவன், குளியலறையின் வென்டிலேட்டர் கதவு சாத்தப்பட்டிருந்ததை கவனித்தான். அங்கிருந்த சிறிய ஸ்டூலின் மீது ஏறி நின்று, அதை திறந்துவிட்டு, அதன் கொக்கியை மாட்ட முயன்றான். அப்பொழுது அவன் கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்தவனின் மூச்சு, அவன் நுரையீரலை விட்டு வெளியேற மறுத்தது. அது கருவுற்றிருப்பதை உறுதி செய்யும் சிறிய வெள்ளை நிற சாதனம். அதில் இரண்டு சிவப்பு நிற கோடுகள் இருந்தன...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top