49 ஹரிணியின் மன ஓட்டம்
49 ஹரிணியின் மன ஓட்டம்
ஹரிணியின் தலையை ஆதரவாய் தடவிக்கொடுத்தான் சித்தார்த்.
"உன்னோட நிலைமையை என்னால புரிஞ்சுக்க முடியுது ஹரிணி. இது தான் உண்மை. அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்..."
"ஏன் எல்லாம் எனக்கே நடக்குது? என்னை சேர்ந்தவங்களை நம்புறது தப்பா?"
"மத்தவங்களை நம்புறது தப்பில்ல. ஆனா தப்பானவங்களை நம்புறது எப்பவுமே தப்பா தான் முடியும். நீ நம்புறவங்க, உன்னோட நம்பிக்கைக்கு பாத்திரமானவங்க தானான்னு தெரிஞ்சுக்கிட்டு நம்பணும். கண்மூடித்தனமா யாரையும் நம்பக் கூடாது,ஹரிணி. அதேநேரம் எல்லோரையும் சந்தேகப்பட வேண்டிய அவசியமும் இல்ல"
தன் கண்களைத் துடைத்தபடி அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஹரிணி.
"நமக்கு எதிரில நிக்குற ஆளு, நம்ம நம்பிக்கைக்கு தகுதியானவரா இல்லையான்னு நம்மளையே நம்ம கேள்வி கேட்டுக்கணும். அப்படி அலசி ஆராயும் போது தான், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் நமக்கு தெளிவா புரியும். சில நேரங்கள்ல, நம்ம அடுத்தவங்க மேல வெச்ச அன்பு, நம்ம கண்ணை மறைக்கும். அவங்க மேல சந்தேகப்படுற திறனையே நம்ம மொத்தமா இழந்திருப்போம். அவங்களை சந்தேகப்படுற தைரியம் கூட நமக்கு இருக்காது. ஏன்னா, ஒருவேளை அவங்க தப்பானவங்களா இருந்துட்டா, அவங்களை இழந்துட வேண்டிய வருமோன்னு பயம் நம்மளை கொல்லும். ஆனா உண்மையை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்"
தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்தான் சித்தார்த். அவனிடமிருந்து அதை ஹரிணி பெற முயன்ற போது, அதை அவளிடம் தராமல், பாட்டிலில் இருந்த தண்ணீரால் அந்த கைக்குட்டையை நனைத்து, அவள் முகத்தை துடைத்து விட்டான்.
"கேன் ஐ ஹேவ் ய ஹக்?" என்றான் அவள் மன நிலையை புரிந்து கொண்டு.
"எனக்கு ஒன்னும் இல்லங்க" என்றாள் சோகமாய்.
சித்தார்த்துக்கு நன்றாகவே தெரியும் அவள் கூறுவது பொய் என்று. அவள் நிச்சயம் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவள் மனதை மாற்ற வேண்டியது அவன் தான்.
"ஆஃப் கோர்ஸ், உனக்கு ஒன்னும் இல்ல. ஆனா நான் நல்லா இல்லையே... என் வைஃபோட டல்லான முகத்தை பார்த்து, நான் எப்படி நல்லா இருக்க முடியும்?"
தலையை குனிந்து கொண்டாள் ஹரிணி. அவளை தன்னிடம் இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் சித்தார்த்.
"நான் மீட்டிங்கை போஸ்ட்போன் பண்ணிடுறேன். நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம்"
"ஒன்னும் வேண்டாம். நீங்க மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுங்க"
"நீ வீட்டுக்கு தனியாவா போக போற?"
"நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்"
அதைக்கேட்ட சித்தார்த்தின் முகம் தொங்கிப் போனது. இந்த சந்தர்ப்பத்தில், அவள் தன் அம்மாவை சந்திக்க நினைப்பது நியாயம் தானே? மன அமைதிக்காக தன் அம்மாவின் தோளில் சாய்ந்து கொள்ள போகிறாள். அவளுக்கு வேண்டிய மன நிம்மதியை தன்னால் தர முடியாவிட்டால் என்ன? அதை செய்ய, அவளுடைய அம்மாவாவது இருக்கிறாரே. அது வரை சந்தோஷம் தான் என்று நிம்மதி அடைந்தான் சித்தார்த்.
சரி என்று தலை அசைத்தான் சித்தார்த். தனது கைப்பையை எடுத்துக்கொண்டு அவனிடமிருந்து விடை பெற்றாள் ஹரிணி.
என்ன தான் கணவன் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தாலும், பெண்பிள்ளைகளிடம் எப்பொழுதுமே அவர்களுடைய அம்மா தான் முதல் இடம் பெறுகிறார். பெருமூச்சு விட்டான் சித்தார்த். அவன் நினைப்பது சரி தான். ஆனால் அன்று, ஹரிணி அவளுடைய அம்மாவை சந்திக்கச் சென்றது அதற்காக அல்ல. அதற்கு ஒரு காரணம் இருந்தது.
......
ஹரிணியை பார்த்த வெங்கடேசனும் அலமேலுவும் சந்தோஷம் அடைந்தார்கள். அவள் தான் அங்கு சென்று எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது...!
"என்ன சர்ப்ரைஸ்... நீ தனியா வந்திருக்க?" என்றார் அலமேலு.
அவள் முகத்தில் தெரிந்த செயற்கையான புன்னகை, அவர்களுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.
"ஒன்னும் பிரச்சனை இல்லையே, ஹரிணி?" என்றார் வெங்கடேசன்.
அமைதியாய் சோபாவில் அமர்ந்தாள் ஹரிணி. அவள் பக்கத்தில் அமர்ந்து அவளது தோள் மீது கை வைத்தார் அலமேலு.
"என்ன ஆச்சி ஹரிணி?" என்றார் அலமேலு.
ஷிவானி எழுதிய கடிதத்தை, தனது கைப்பையில் இருந்து எடுத்து அவரிடம் நீட்டினாள் ஹரிணி. மடிக்கப்பட்ட அந்த கடிதத்தை அலமேலு பிரிப்பதற்கு முன் அவரிடம் இருந்து அதை பறித்து படிக்கத் துவங்கினார் வெங்கடேசன். அலமேலுவும் அவருடன் சேர்ந்து அந்த கடிதத்தை படிக்க தொடங்கினார்.
அந்தக் கடிதத்தை படித்து முடித்த இருவரும், ஹரிணியை நிமிர்ந்து பார்த்தார்கள்.
"ஷிவானி தற்கொலை பண்ணிக்குறதுக்கு முன்னாடி, இந்த லெட்டரை எழுதி இருக்கான்னு நினைக்கிறேன். பெட்டுக்கு அடியில இருந்து இதை நான் எடுத்தேன்."
வெங்கடேசனும் அலமேலுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஷிவானியின் கடிதத்தில் இருந்த எந்த விஷயமும் அவர்களுக்கு புதிதல்ல, அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், இப்போது எதற்காக ஹரிணி அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கிறாள் என்பது தான் அவர்களுக்கு புரியவில்லை.
"உங்களுக்கு ஷிவானியை பத்தி ஏற்கனவே தெரிந்சிருந்தாலும், இந்த லெட்டரை பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்னு நான் நினைக்கிறேன். சாகறதுக்கு முன்னாடி ஷிவானியோட மனசுல இருந்தது இது தான். அவளோட சாவுக்கும் *என்னோட புருஷனுக்கும்* எந்த சம்பந்தமும் இல்லைன்னு நிரூபிக்க இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்ல"
தன் கண்களை சுருக்கினார் வெங்கடேசன்.
"இந்த விஷயத்தில யாரும் *என் புருஷனை* நோக்கி கை நீட்டுறதை நான் விரும்பல. ஷிவானியும் அதே காரணத்துக்காகத் தான் இந்த லெட்டரை எழுதி இருக்கா."
"நாங்க சித்தார்த்தை தப்பா நினைப்போம்னு நீ எப்படி நெனைச்ச?" என்றார் வெங்கடேசன்.
"நம்ம எல்லாருமே மனுஷங்க தான் பா. நம்மளுடைய மனசு எப்படி வேணும்னாலும் யோசிக்கும். இப்போ இல்லனாலும், எப்பவாவது, யாராவது சித்தார்த்தை ஏதாவது சொல்ல வாய்ப்பு இருக்கு. அப்படி சொல்றவங்களை நீங்க நம்புவீங்கன்னு நான் சொல்ல வரல. ஆனா சந்தேகம் எழ வாய்ப்பு இருக்கு. அப்படி நடக்கிறதை நான் விரும்பல"
அலமேலு அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார். ஆனால் வெங்கடேசன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
"என்னை தப்பா எடுத்துக்காதீங்க, அம்மா. ஒரு நாள், நான் இன்னைக்கு செஞ்சது சரின்னு நீங்க சொல்லுவீங்க. ஏன்னா, நம்மள சுத்தி இருக்கிற எல்லாரும், அடுத்தவங்களுடைய குடும்பத்தையும், நம்பிக்கையையும் உடைக்கிறதுல ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அப்படிப் பட்டவங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க நான் விரும்பல"
"நீ யாரைப் பத்திப் பேசுகிற?" என்றார் அலமேலு.
ஒன்றும் கூறாமல் அமைதியாக நின்றாள் ஹரிணி.
"சொல்லு, ஹரிணி. என்ன பிரச்சனை?" என்றார் வெங்கடேசன்.
ரோஹித்தை பற்றியும், அனுவைப் பற்றியும் ஆரம்பத்தில் இருந்து ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தாள் ஹரிணி. வெங்கடேசனும் அலமேலுவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"என்னையும் சித்தார்த்தையும் பிரிக்க அவங்க ரெண்டு பேரும் ஆரம்பத்திலிருந்தே திட்டம் போட்டுக்கிட்டு இருந்திருக்காங்க. ஷிவானியோட தற்கொலையை சித்தார்த்துக்கு எதிரா திருப்பி விட நினைக்கிறாங்க. அதுக்காகத் தான் இதையெல்லாம் இப்பவே உங்ககிட்ட சொல்றேன். ஏன்னா, என்னோட புருஷனை யாரும் தப்பா நினைக்க என்னால விட முடியாது. அதை என்னால தாங்கவும் முடியாது. எனக்கு நெருக்கமான எல்லாரையும் ஒவ்வொருத்தரா நான் இழந்துக்கிட்டு இருக்கேன் பா. இதுக்கப்புறம் யாரையும் இழக்க என்னால முடியாது. நீங்களும் சித்தார்த்தும் மட்டும் தான் எனக்காக மிஞ்சி இருக்கீங்க. நீங்களாவது எனக்கு கடைசி வரைக்கும் வேணும்"
"அழாதே டா. உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. நானும் அம்மாவும் கூட, ரோஹித்தையும் அனுவையும் கவனிக்கத் தவறிட்டோம். போகட்டும் விடு. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவங்க மேல கவனத்தை செலுத்து. எல்லாம் சரியாயிடும்"
"ஆமாம் ஹரிணி, கடவுள் புண்ணியத்துல உனக்கு நல்ல புருஷன் கிடைசிருக்காரு. நடந்த எல்லாத்தையும் மறந்துடு. எக்காரணத்தைக் கொண்டும் பின்னாடி திரும்பி பார்க்காத. நிகழ்காலத்தை பத்தி மட்டும் நினை" என்றார் அலமேலு.
"நிச்சயமா செய்வேன். நான் அப்படி செய்ய நிச்சயம் சித்தார்த் எனக்கு ஹெல்ப் பண்ணுவாரு. அந்த மோசமான மனுஷங்களோட நினைவிலிருந்து என்னை வெளியே கொண்டு வருவார். அவரு ரொம்ப நல்லவரு பா. அவரைப் பத்தி யாராவது, ஏதாவது சொன்னா என்னால அதைப் பொறுக்க முடியாது."
அவள் தன் கணவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையை பார்த்து அவர்கள் புன்னகை பூத்தார்கள். அவளிடம் தெளிவும் உறுதியும் இருந்தது. நல்ல வேலை, அவள் சந்தேகிக்க வேண்டியவர்களின் பட்டியலில் சித்தார்த்தை சேர்க்கவில்லை. மாறாக அனைவரும் அவனை நம்ப வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறாள்.
"யாரும் உன் புருஷனை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. கவலைப்படாதே" என்றார் வெங்கடேசன்.
"இரு. நான் உனக்கு காபி கொண்டு வரேன்" என்றார் அலமேலு.
"வேண்டாம்மா. நான் வீட்டுக்கு போய் அவர் கூட சேர்ந்து சாப்பிட்டுகிறேன்"
மறுப்பு ஏதும் கூறாமல் சரி என்று தலையசைத்தார் அலமேலு புன்னகையுடன்.
"எல்லாரும் சேர்ந்து ட்ரிப்புக்கு போக சித்தார்த் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு. அதை என்ஜாய் பண்ண தயாராகுங்க" என்றாள் ஹரிணி.
"நிச்சயம் செய்யறோம் டா" என்றார் வெங்கடேசன் சிரித்தபடி.
அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினாள் ஹரிணி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top