48 மண்ணுளி பாம்பு

48 மண்ணுளி பாம்பு

"ரோஹித் எப்படி இருக்கான்?"என்ற சித்தார்த்தின் கேள்வி அனுவை திகைப்படையச் செய்தது.

"நீங்க என்ன கேக்கிறீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல"

"ஓ, அப்படியா?"

"என்னங்க இதெல்லாம்? இதுக்கு என்ன அர்த்தம்?" என்றாள் ஹரிணி.

அவளுக்கு பதில் கூறாமல் அனுவை பார்த்து முறைத்தான் சித்தார்த்.

"அனு, அவர் ஏன் உன்னை இப்படிக் கேக்குறார்?"

"ஹரிணி, உன் வீட்டுக்காரருக்கு நான் இங்க வர்றது பிடிக்கலைன்னா, நான் இங்கிருந்து போயிடுறேன்"

"நிச்சயம் நீ இங்க இருந்து போகத்தான் போற... ஆனா ஹரிணிக்கு உன்னை பத்தி தெரியறதுக்கு முன்னாடி இல்ல..." என்றான் சித்தார்த்.

"என்னங்க, தயவுசெய்து நேரடியா விஷயத்துக்கு வாங்க. என்ன நடக்குது இங்க?" என்றாள் ஹரிணி.

தனது கைபேசியில் இருந்த ஒரு காணொளியை ஓடவிட்டான் சித்தார்த். அது அனுவுக்கும், ரோஹித்துக்கும் இடையில் நடந்த உரையாடல்.

"எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் உன்னை ஜெயில்ல இருந்து பெயிலில் கொண்டு வந்தேன்" என்றாள் அனு.

ஹரிணி அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ரோஹித்தை சிறையிலிருந்து அனு வெளியே கொண்டு வந்தாளா? அனுவை நம்பமுடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஹரிணி. மீண்டும் காணொளியின் பக்கம் தன் முகத்தை திருப்பினாள்.

"நான் தான் சித்தார்த்தை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன். ஷிவானியோட சாவுல அவரைப் பார்த்தவுடனேயே அவர் மேலே நான் காதல் வயப்பட்டேன். எங்க அப்பா, அம்மா கிட்ட கூட அவரைப் பத்தி சொல்லிட்டேன். ஆனா, பெருசுங்க எல்லாம் சேர்ந்து அவருக்கு ஹரிணியை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டுச்சிங்க. அவளும் அதுக்கு ஒத்துக்கிட்டா. நம்ம பேச்சை கேட்க அவ தயாரா இல்ல. நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. எனக்கு சித்தார்த் வேணும்"

"உன்னோட பிளான் படி, நான் ஹரிணி குடிச்ச ட்ரிங்க்ஸ்ல வோட்காவை கலந்து கொடுத்தேன். ஆனா, சரியான டைமுக்கு சித்தார்த் வந்துட்டாரு. ஹரிணியை காப்பாத்தி நம்ம திட்டத்தையும் சொதப்பிட்டார்"

"அதை மட்டும் ஞாபகப் படுத்தாத. என்னை காப்பாத்திக்கிறதுகாக  அவரை அண்ணான்னு வேற சொல்லி தொலைக்க வேண்டியதா போச்சு. நீ மட்டும் கொஞ்சம் லேட் பண்ணாம இருந்திருந்தா, அன்னைக்கு நம்ம பிளான் ஒர்க்கவுட் ஆகியிருக்கும். எவ்வளவு யோசிச்சு, யோசிச்சு அதை நான் பிளான் பண்ணினேன் தெரியுமா? அந்தத் திட்டம் மட்டும் பலிச்சிருந்தா, ஹரிணியை சித்தார்த் வீட்ல இருந்து துரத்தியடிச்சி இருப்பாங்க. நீ மிஸ் பண்ணிட்ட"

அமைதியாக நின்றான் ரோஹித்.

"உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? சித்தார்த், ஷிவானியை விரும்பவேயில்லையாம். ஹரிணி தான் கல்யாண பொண்ணுன்னு நெனச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாராம்."

"அது உனக்கு எப்படி தெரியும்?"

"ஹரிணியே என்கிட்ட சொன்னா"

"நெஜமாவா?"

"ஆமாம். அவங்களைப் பிரிக்க நமக்கு ஒரு அருமையான பாயிண்ட் கிடைச்சிருக்கு"

"என்னது?"

"அந்த விஷயத்தை நம்ம ஹரிணியோட அப்பா அம்மா கிட்ட சொல்லணும். ஷிவானியோட சாவுக்கு சித்தார்த்த தான் காரணம்னு சொல்லணும். ஹரிணியை கல்யாணம் பண்ணிக்க, அவரு ஷிவானியை டார்ச்சர் பண்ணாரு. அதனால தான் ஷிவானி தற்கொலை செஞ்சுகிட்டா. அதுக்குப் பிறகு, தான் சோகமா இருக்கிறதா எல்லாரையும் நம்ப வச்சாரு. அப்ப தானே, அவங்க அம்மா அப்பா எல்லாரும் சேர்ந்து அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பாங்க. அப்படி பேச்சு வரும் போது, அவங்களுடைய முதல் சாய்ஸ், ஹரிணியா தானே இருப்பா? ஹரிணியை கல்யாணம் பண்ணிக்க, அந்த சந்தர்ப்பத்தை சித்தார்த் பயன்படுத்திக்கிட்டார்னு அவர்களை நம்ப நம்ப வைக்கணும்"

தன் திட்டத்தை கூறி முடித்தாள் அனு.

"ஹரிணியோட அம்மா, அப்பா இதையெல்லாம் நம்புவாங்கன்னு நீ நினைக்கிறாயா?"

"ஏன் மாட்டாங்க? இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் நம்ம பரப்பி விடணும். அவங்ககிட்ட ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இதைப்பத்தி மறுபடி-மறுபடி கேக்கும் போது, அவங்களுக்கு நம்பத் தோணும். குறைஞ்சபட்சம், சித்தார்த் மேல அவங்களுக்கு சந்தேகமாவது வரும்"

"சித்தார்த் ரொம்ப செல்வாக்கு உள்ள ஆளு. என்னோட கேஸ்ல, ஹரிணி பேர் அடிபடாம அவளை அவர் எப்படி காப்பாத்தினார்னு நம்ம தான் பார்த்தோமே"

"அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்பட வேண்டாம். நான் ஹரிணி துணையோட அவங்க கம்பெனிக்குள்ள நுழைய போறேன். ஹரிணியோட நிழலில் இருக்கிற வரைக்கும் என் மேல யாருக்கும் சந்தேகம் வராது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சித்தார்த்துக்கு நெருக்கமாவேன். நான் ஏற்கனவே அவரை அண்ணான்னு சொன்னதால, என் மேல் அவருக்கு சந்தேகம் வராது"

"பிரில்லியன்ட்... ஆனா நீ தான் என்னை பெயில்ல எடுத்தன்னு சித்தார்த்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?"

"நான் என்ன அவ்வளவு முட்டாளா? அவருக்கு தெரிய கூடாதுன்னு தான் நான் இந்த விஷயத்துல நேரடியா இறங்கல. அதனால தான், என்னோட பக்கத்து வீட்டுக்காரரை வச்சு உன்னை வெளியே எடுத்தேன்"

"இப்போ நான் என்ன செய்யணும்?"

"எனக்கு கொஞ்சம் டைம் கொடு. சித்தார்த்தை நான் மடக்குன உடனே, நீ ஹரிணியை அடைய உனக்கு வழி செய்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திரு "

தனது கைபேசியை ஆஃப் செய்தான் சித்தார்த். ஹரிணியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகி கொண்டிருந்தது.

"இதனால தான், உன்னை சுத்தி இருக்கிறவங்க கிட்ட ஜாக்கிரதையா இருன்னு சொன்னேன் ஹரிணி"

"ஹரிணி, இதெல்லாம் சுத்த பொய். என்னை பத்தி உனக்கு தெரியாதா? அந்த வீடியோவை நம்பாதே. அது ஃபுல்லா கிராபிக்ஸ்"

"சீனி..." என்று அழைத்தான் சித்தார்த்.

சீனி தனியாக வரவில்லை அவனுடன் வேறு ஒருவனும் இருந்தான். உள்ளே நுழைந்த சீனியுடன் இருந்தது சாக்ஷாத் ரோஹித்தே தான். அவனை பார்த்த அனுவின் முகம் வெளிறிப் போனது. புரியாமல் சித்தார்த்தை பார்த்துக் கொண்டு நின்றாள் ஹரிணி.

"அந்த வீடியோவை ரெக்கார்ட் பண்ணது நான் தான்" என்றான் ரோஹித்.

அதைக்கேட்ட அனுவின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ரோஹித்தின் மீது தன் பார்வையால் நெருப்பை கக்கினான் அவள்.

"அனுவோட திட்டத்துக்கு நான் துணை போனது உண்மை தான். ஆனா ஜெயில நான் பட்ட அனுபவம்  என்னுடைய புத்தியை மாத்திடிச்சி. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நெனச்சேன். அப்போ தான், சித்தார்த்துக்கு தெரியாம அனு என்னை வெளியில கொண்டு வந்தா. ஆனா, சீக்கிரமே சித்தார்த் அந்த விஷயத்தை தெரிஞ்சுக்குவாருன்னு எனக்கு நிச்சயம் தெரியும். நான் எதிர்பார்த்த மாதிரி, சில மணி நேரத்திலேயே சித்தார்த்துக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு. அனு, சித்தார்த்தை விரும்பிய விஷயம் எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். அதனால தான் அவ உன்னோட கல்யாணத்துக்கு எதிரா இருந்தா. எனக்காகவும் சப்போர்ட் பண்ணா. நானும் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பியதால அவ சொன்ன பேச்சுக்கெல்லாம் ஆடினேன். ஆனா, ஜெயில் எனக்கு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்தது. தான் சரியான ஆட்டம் ஆடுறதா அனு நெனைச்சுக்கிட்டு இருந்தா. ஆனா, என்னை ஜெயில்ல இருந்து வெளியே கொண்டு வந்து, அவ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா. அதனால தான் அவளுடைய உண்மையான  எண்ணம் சித்தார்த்துக்கு தெரிஞ்சிடுச்சு. அவர் எனக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். அனுவுடைய முகத்திரையை கிழிக்க நான் அவருக்கு ஹெல்ப் பண்ணா, என்னை இந்த கேசில் இருந்து விடுவிக்கிறேன்னு சொன்னாரு. நான் அதுக்கு உடனே ஒத்துக்கிட்டேன். அவருக்கு நான் இந்த வீடியோவை அனுப்புன உடனேயே, என் மேல இருந்த கேசை அவர் வாபஸ் வாங்கிட்டாரு."

அனு, ரோஹித்தை நோக்கி கோபத்துடன்  கையை ஓங்கினாள். அவள் அவனை அடிக்கும் முன், அவளைத் தன்னை நோக்கி இழுத்து, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ஹரிணி. அவளது தோள்களை இறுகப் பற்றிக் கொண்டு,

"ஏண்டி இப்படி எல்லாம் செஞ்ச? நம்பிக்கை துரோகி... ஏன் நான் நம்புற எல்லாரும் என்னை இப்படி கழுத்தை அறுக்குறீங்க? இதுல என்னோட தப்பு என்ன இருக்கு? உங்களை எல்லாம் நம்பினதை தவிர நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னோட வாழ்க்கையைக் கெடுக்க நீ இவ்வளவு வேலை செஞ்சிருக்கியா? ஏண்டி இப்படி எல்லாம் செஞ்ச?" கதறியழுத ஹரிணியை பார்க்கவே பாவமாய் இருந்தது சித்தார்த்துக்கு.

அவள் அனுவை பிடித்திருந்த பிடியை தளரச் செய்து,

"ரிலாக்ஸ் ஹரிணி..." என்றான்.

"இல்லங்க... இவ என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இவ என்னோட ஃப்ரெண்ட் இல்ல... என்னை ஃபிரண்டாவே அவ நினைக்கல. எனக்கு எதிரியா தான் இருந்திருக்கா. நான் ஒரு முட்டாள். அதை புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்..."

"நான் சொல்றதை கேளு, ஹரிணி"

 அவன் சொல்வதைக் கேட்காமல்,

"அவ செஞ்ச தப்புக்கு அவளுக்கு தண்டனை கிடைக்கணும். அவ வாழ்க்கை ஃபுல்லா ஜெயில்ல கிடக்கட்டும்..."

"ஹரிணி, ப்ளீஸ், ஹரிணி" என்றாள் அனு

"ஷட் அப்ப்ப்ப்ப்... என் பேர சொன்ன, உன் வாயை கிழிச்சிடுவேன். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னையும் என் புருஷனையும் பிரிக்க இவ்வளவு கீழ்த்தரமா பிளான் பண்ணியிருப்ப?"

சித்தார்த்திடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் அனுவை ஓங்கி அறைந்து, கோபமாய் அவளை பிடித்து தள்ளினாள் ஹரிணி. அனு மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருமே அவளது கோபாவேசத்தை பார்த்து அதிர்ந்தார்கள்.

சித்தார்த் எல்லோரையும் விட  அதிகமாய் அதிர்ச்சியடைந்தான். விட்டால், ஹரிணி அனுவை கொன்று விடுவாள் போல் தெரிந்தது. பின்னாலிருந்து அவள் கையை சேர்த்து அணைத்தபடி கெட்டியாய் பற்றிக் கொண்டான் சித்தார்த்.

"என் கண்ணு முன்னாடி நிக்காத. உன்னை நான் கொன்னுடுவேன். அவளை போலீஸ்ல புடிச்சுக் கொடுங்க. இப்பவே..." தொண்டை கிழிய கத்தினாள் ஹரிணி.

சீனியை பார்த்தான் சித்தார்த். தனது கைப்பேசியில் எடுத்து போலீசுக்கு ஃபோன் செய்தான் அவன். அந்த அறையின் ஒரு மூலையில் ஒடுங்கி நின்றிருந்தான் ரோஹித். தங்களின் இத்தனை வருட நட்பு காலத்தில், அவன் ஹரிணியை இவ்வளவு ஆக்ரோஷமாய் பார்த்ததே இல்லை. சொல்லப் போனால், அவளிடம் இப்படி ஒரு எதிர்வினையை யாருமே எதிர்பார்க்கவில்லை... சித்தார்த்தும் கூட...!

"ஐ அம் சாரி ஹரிணி" என்றாள் அனு.

அதைக்கேட்ட சித்தார்த், தான் ஹரிணியை பற்றியிருந்த பிடியை  மேலும் இறுக்கிக் கொண்டான், முன்னெச்சரிக்கையாக. அவன் நினைத்தது சரி தான். மீண்டும் அனுவின் மீது பாய முயன்றாள் ஹரிணி.

"போடிங்ங்ங்க... சாரி சொல்றாளாம்... வெட்கம் கெட்டவளே... நீ என்ன நெனச்ச? கொஞ்ச நேரம் அழுதுட்டு உன்னை மன்னிச்சிடுவேன்னு நினைச்சியா? என் வாழ்க்கையில் விளையாடி நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. இவரு என் புருஷன் டி... அவரை என்கிட்ட இருந்து பறிக்கப் பாத்தவ நீ. நீ செஞ்சதை நான் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன். ஜெயிலுக்கு போய் சாவுடி..." என்று அரற்றினாள் அந்த அறையே அதிரும் வண்ணம்.

சிறிது நேரத்திலேயே அவர்கள் எதிர்பார்த்தபடி அனுவை அழைத்துச் செல்ல காவலர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்த அனுவின் முகம் பேயறைந்தது போலானது.

"தயவுசெய்து இப்படி செய்யாதே ஹரிணி. ப்ளீஸ்..."

அவளுடைய கெஞ்சல்களுக்கு செவிசாய்க ஹரிணி தயாராக இல்லை. பல்லை கடித்துக் கொண்டு, கண்களை மூடி நின்றாள். சீனியும், ரோஹித்தும் அங்கிருந்து அமைதியாய் நகர்ந்தார்கள்.

அவளைத் தன்னை நோக்கி திருப்பினான் சித்தார்த். தாமதிக்காமல் அவனை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் ஹரிணி, அவன் நெஞ்சில் முகம் புதைத்து, மன நிம்மதியைத் தேடி...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top