47 சித்தார்த்தின் கேள்வி
47 சித்தார்த்தின் கேள்வி
சித்தார்த்தும், ஹரிணியும், வீட்டிற்கு செல்லும் வழி நெடுக பேசிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்த போது, அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான் சித்தார்த்.
"என் மேல கோவமா இருக்கியா?"
இல்லை என்று தலையசைத்தாள் ஹரிணி.
"ஐ அம் சாரி டா... உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் அப்படி செய்யல"
"உங்களை எனக்கு நல்லா தெரியும். உங்ககிட்ட ஒரு வித்தியாசத்தை என்னால பாக்க முடியுது. உங்களை நான் அப்சர்வ் பண்ண வரைக்கும், உங்களுடைய எல்லா செயலுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கு. காரணம் இல்லாம நீங்க இப்படி நடந்துக்க மாட்டீங்க"
அவனது தொண்டைக்குழி, காரணத்தை சொல்லி விட தான் துடித்தது.
"எனக்கு ஒன்னும் இல்ல. என்ன நடந்தாலும் நான் நல்லா தான் இருப்பேன். என்னைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்" என்றாள் ஹரிணி.
"உன்னை பத்தி கவலைப்படாம நான் எப்படி இருக்க முடியும்?"
"நீங்க என் கூட இருக்கிற வரைக்கும் நான் ரிலாக்ஸா தான் இருப்பேன்..."
அனுவிடம் ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் ஹரிணிக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனால் அது என்ன என்பது தான் அவளுக்கு புரியவில்லை. சித்தார்த், 'அவளை சுற்றி இருக்கும் மனிதர்களிடம் ஜாக்கிரதையாய் இருக்க சொல்லி' திடீர் அறிவுரை வழங்கிய நாளிலிருந்தே அவள் அதைப் பற்றி யோசித்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஒருவேளை, அவன் மறைமுகமாய் அனுவைப் பற்றி தான் கூறினானோ என்னவோ. அனு விஷயத்தில் அவளுக்கு என்ன காத்திருக்கிறதோ தெரியவில்லை. அதை பற்றி அவளிடம் பேச, சித்தார்த் ஏன் தயங்குகிறான் என்பது அவளுக்கு புரிந்தே இருந்தது. அவள் ஏற்கனவே ஷிவானி மற்றும் ரோஹித் விஷயத்தில் அளவுக்கு அதிகமாகவே பாதிப்படைந்து இருப்பது அவன் அறிந்தது தான். அதனால், அனு விஷயத்தில் அவன் மௌனம் சாதிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எப்படி இருந்தாலும் உண்மை வெளியே வந்து தான் தீர வேண்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள் ஹரிணி.
"ஹரிணி..."
"நான் நல்லா இருக்கேன். ஓகேவா?"
"எனக்கு ஒரு காபி கிடைக்குமா?" என்று அவன் கேட்ட கேள்விக்கு,
"எனக்கு நீங்க கிடைப்பிங்களா?" என்ற பதில் கேள்வியை கேட்டு அவனை திகைப்படைய செய்தாள் ஹரிணி.
"என்னை நீ காப்பி குடிக்க விட போறதில்லையா?"
"நான் விருந்து வைக்கிறதை பத்தி பேசுறேன்... உங்களுக்கு வெறும் காபி போதுமா?" என்றாள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு.
"ஏன்? என்ன ஆச்சு?"
"சும்மா தான்... இதுக்கு கூடவா காரணம் வேணும்?"
"வேண்டியதில்ல... ஆனா இப்ப நிச்சயம் காரணம் இருக்கு. என்னன்னு சொல்லு"
"நீங்க ரொம்ப ஸ்டிரெஸ்டா இருக்கீங்க"
"எனக்கு ஒன்னும் இல்ல. நீ ரொம்ப டயர்டா இருக்கேன்னு எனக்கு தெரியும். வா காபி சாப்பிடலாம்"
"நிஜமா தான் சொல்றீங்களா?"
"ஆமாம்"
"ஆனா எனக்கு அது ஓகே இல்லையே"
மெல்ல தன் கண்களை இமைத்தான் சித்தார்த்.
"உங்களுக்கு வேண்டாம்னா விடுங்க. ஆனா எனக்கு வேணும்னு தோணுது"
அவன் மீண்டும் எதுவும் மறுத்துப் பேசும் முன், அவன் இதழ் மீது தன்னிதழை ஒற்றினாள். ஆனால் முத்தமிடவில்லை. அவனுக்கு இது வேண்டுமா, வேண்டாமா என்பதை அவனே முடிவு செய்து கொள்ளட்டும்.
தன் மனைவியின் இதழ்களை வேண்டாம் என்று விட்டுவிடும் அளவிற்கு சித்தார்த் ஒன்றும் மனோபலம் படைத்தவன் அல்ல. அவனது கரங்கள் அவள் இடையையும், இதழ்கள் இதழ்களையும் சிறைப்பிடித்தன. அதன் பிறகு ஹரிணியை தவிர்க்க அவனுக்கு எந்த காரணமும் இருக்கவில்லை. துவங்கியதை நிறுத்தும் எண்ணமும் அவனுக்கு இருக்கவில்லை. அவர்கள் காபி குடிப்பதை மறந்து போனார்கள்.
அவர்கள் இருவரும் காபி குடிக்க கீழே வருவார்கள் என்று காத்திருந்தார் தேவயானி. ஆனால் அவர்களை அழைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அதை அவர் எப்போதும் செய்ததும் இல்லை. அவர்களுக்கு காபி வேண்டும் என்றால் அவர்களே வருவார்கள். அப்படி அவர்கள் வரவில்லை என்றால், காபி குடிப்பதை விட வேறு முக்கியமான வேலை இருக்கிறது என்று தானே அர்த்தம்...! ஆனால், இரவு உணவு சாப்பிடக் கூட அவர்கள் கீழே வராமல் இருந்ததை பார்த்த பின், அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஆம், இருவரும் நிம்மதியாய் உறங்கி விட்டிருந்தார்கள்.
அவர்கள் அறைக்கு வந்து கதவை தட்டினார் தேவயானி. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான் சித்தார்த். சிறிது நேரம் வரை, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அது இரவா, பகலா என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. தன்னை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஹரிணியை பார்த்துவிட்டு கடிகாரத்தை நோக்கினான். மணி ஒன்பது என்றது. ஆனால் வெளியே இருட்டியிருந்தது. அப்பொழுது தான், நடந்தவை அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. ஹரிணியின் கன்னத்தை தட்டினான். அவளோ அவன் கையை தட்டி விட்டாள்.
"ஹரிணி, எழுந்திடு. அம்மா கதவைத் தட்டுறாங்க பாரு"
மெல்ல கண்ணை திறந்து,
"அப்படின்னா போய் கதவைத் திறங்களேன்" என்றாள்.
"நீ எப்படி இருக்க பாரு... உன் டிரஸ்சை நீட் பண்ணிக்கோ"
"நீட்டா?"
கண்களை அகல விரித்தபடி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். கீழே கிடந்த தனது துப்பட்டாவை எடுத்து கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள். தனது சட்டையை அணிந்து சென்று, கதவை திறந்தான் சித்தார்த்.
"டின்னர் ரெடியா இருக்கு சார். நீங்க கீழே வரிங்களா? இல்ல, நான் இங்க அனுப்பி வைக்கட்டுமா?" என்றார் தேவயானி.
"நாங்க டயர்டா இருந்தோம் மா. கொஞ்ச நேரம் படுக்கலாம்னு நினைச்சி படுத்து, நல்லா தூங்கிட்டோம்"
"ஓ... டயர்டா இருந்ததால தூங்கினியா?" என்றார் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு.
"ஆமாம். நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல" என்று வலிய போய் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டான் சித்தார்த்.
"எந்த மாதிரி?"
"நீங்க நினைக்கிற மாதிரி"
"நான் என்ன நினைக்கிறேன்?"
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்"
"அப்படியா? இன்னொரு விஷயமும் எனக்கு தெரியும். செக் பண்ணி பார்க்கலாமா?"
"என்னது? " முகத்தை சுருக்கினான் சித்தார்த்.
"ஹரிணி, வாஷ் ரூம்ல இருக்கா கரெக்ட்டா?"
தன் கை விரல்களை தன் தலைமுடியில் ஓடவிட்டு அசடு வழிந்தான் சித்தார்த்.
"பொய் சொல்ல கத்துக்கோ மகனே... டின்னர் சாப்பிட்டுட்டு தூங்கு. குட் நைட்"
சங்கடத்துடன் நெளிந்தான் சித்தார்த். சிரித்தபடி அங்கிருந்து சென்றார் தேவயானி.
மறுநாள்
தேவா டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம்
ஸ்கெட்ச் அறையில் தன்னுடைய டிசைனை வரைந்து கொண்டிருந்தாள் அனு. அதை முடிக்க அவளுக்கு உதவி கொண்டிருந்தாள் ஹரிணி. அடுத்த சில நிமிடங்களில், அவளது முதல் டிசைனை வெற்றிகரமாய் முடித்தாள் அனு.
"முடிச்சிட்டேன்..." என்றாள் பெருமையாக அனு.
"வாவ்... லுக்கிங் குட்" என்றாள் ஹரிணி.
"நெஜமாவா?"
"எஸ்"
"இந்த டிசைனை சித்தார்த் லைக் பண்ணுவாரா?"
"நிச்சயம் லைக் பண்ணுவார்" என்றாள் ஹரிணி தன் தோழியின் மனதை குளிர்விக்க.
"அப்படின்னா நான் இதை அவர்கிட்ட காட்டிகிட்டு வரேன்"
ஹரிணி தன்னுடன் வர காத்திருக்காமல் சித்தார்த்தின் அறையை நோக்கி ஓடினாள் அனு. அதைப் பார்த்து திகைத்து நின்றாள் ஹரிணி. தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தாள்.
சித்தார்த்தின் அறைக் கதவைத் தட்டினாள் அனு, தனது உடைகளை சரிசெய்து கொண்டு.
"கம் இன்" என்றான் சித்தார்த்.
பளிச்சென்ற சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள் அனு. ஹரிணியின் துணை இல்லாமல் தனியாக வந்த அனுவை பார்த்து முகத்தை சுருக்கினான் சித்தார்த்.
"நான் என்னோட டிசைனை முடிச்சுட்டேன்" என்றாள் குதூகலமாக.
"அதனால?" என்றான் சிறிதும் விருப்பம் இல்லாமல்.
"உங்ககிட்ட காட்டலாம் நினைச்சேன்" தான் கொண்டுவந்த சார்ட் பேப்பரை அவனிடம் விரித்து காட்டினாள்.
அதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல்,
"இதை என்கிட்ட காட்ட சொல்லி உனக்கு யார் சொன்னது?" என்றான் சித்தார்த்.
"யாரும் சொல்லல. நான் தான் என்னுடைய டிசைனை உங்ககிட்ட காட்ட நெனச்சேன்"
"நீ என்ன நெனச்சிட்டு இருக்க? இங்க நான் வேலை இல்லாம சும்மா உட்கார்ந்து இருக்கேன்னு நினைச்சியா?" எரிந்து விழுந்தான் சித்தார்த்.
"அப்படியில்ல... நான்..."
அவள் பேச்சின் இடையே குறுக்கிட்டு,
"நீ இங்க ஒரு அப்பரன்டிஸ். அதுக்கு தகுந்த மாதிரி எப்படி நடந்துக்கணும்னு முதல்ல கத்துக்கோ. என்னோட கேபின்குள்ள வர உனக்கு பர்மிஷன் கிடையாது. உன்னோட டிசைன்ஸை ஹரிணியோட நிறுத்திக்கோ. புரிஞ்சுதா உனக்கு. யூ மே கோ நவ்" என்றான் முகத்தில் அடித்தது போல.
"ஹரிணி தான் இதை உங்ககிட்ட காட்ட சொன்னா. அதனால் தான் வந்தேன்" கண்ணீர் ததும்ப பொய் உரைத்தாள் அனு.
"அவ ரொம்ப அப்பாவி... உன்னை மாதிரி இல்ல" என்றான் சித்தார்த் குத்திக் கிழிக்கும் பார்வையுடன்.
அவனைப் பதட்டத்துடன் ஏறிட்டாள் அனு.
"அவளோட அப்பாவித்தனத்தை உனக்கு சாதகமா பயன்படுத்திகலாம்னு நினைக்காத. நான் அவளை மாதிரி கிடையாது. என்னை சுத்தி இருக்கிறவங்களையும், அவங்களுடைய எண்ணத்தையும் நல்லாவே புரிஞ்சுக்க தெரிஞ்சவன். உன்னோட விளையாட்டை என்கிட்ட விளையாடாத"
"நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க"
"கெட்ட்ட் அவுட்" மேலும் அவள் பேச்சை கேட்க விரும்பாமல் கத்தினான் சித்தார்த்.
அனுவின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி பட்ட அவமானத்தை அவள் சந்தித்ததே இல்லை. அவளை அவமானப் படுத்தியதற்காக சித்தார்த் பதில் கூறியே ஆக வேண்டும். அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது, அவர்கள் பேசியதைக் கேட்ட படி உள்ளே நுழைந்தாள் ஹரிணி. சந்தேகமில்லாமல் அவள் அதிர்ச்சி அடைந்து தான் போயிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அழுதபடி அவளை அணைத்துக் கொண்டாள் அனு.
"சித்தார்த் என்னை இன்சல்ட் பண்ணிட்டாரு, ஹரிணி"
சித்தார்த்தை கவலையுடன் ஏறிட்டாள் ஹரிணி.
"என்னை பார்த்து கெட் அவுட் ன்னு சொல்லிட்டாரு"
ஒன்றும் கூறாமல் சித்தார்த்தை பார்த்தபடி அமைதியாய் நின்றாள் ஹரிணி.
"நான் இங்க ஒரு அப்பரண்டிஸ்னு எனக்கு தெரியும். உன் புருஷன் உன் மேல மரியாதை வச்சிருக்காருன்னு நெனச்சேன். அதனால என்னையும் மதிப்பா நடத்துவார்னு நினைச்சேன். நான் நெனச்சது தப்பு. அவருக்கு உன் மேல கொஞ்சமும் மரியாதை இல்ல"
பேசிக் கொண்டே சென்ற அனுவை, சித்தார்த் கேட்ட கேள்வி தூக்கிவாரிப் போட செய்தது.
"ரோஹித் எப்படி இருக்கான்?" என்றான் சித்தார்த்.
ஹரிணியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, சித்தார்த் போலீசில் பிடித்துக் கொடுத்து, இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ரோஹித்தை பற்றி, சித்தார்த் ஏன் அனுவிடம் கேட்கிறான் என்ற அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் ஹரிணி. அனுவோ பதட்டத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top