46 அனுவின் வருகை

46 அனுவின் வருகை

அனு, விண்ணப்பம் அனுப்பி ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால், இன்னும் அவளுக்கு பதில் வந்தபாடில்லை. அவள் விடாமல் ஹரிணியை தொந்தரவு செய்தபடி இருந்தாள். அவளுடைய விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்க போவது சித்தார்த்த தான் என்ற உண்மை தெரிந்த பின், அதைப் பற்றி சித்தார்த்திடம்  கேட்கும் தைரியம் ஹரிணிக்கு இருக்கவில்லை.

கிட்டத்தட்ட, ஹரிணி அவளுடைய புராஜெக்டை முடித்து விட்டாள், சித்தார்த்தின் துணையோடு. மறுநாள் அனுவின் விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்தான் சித்தார்த். சந்தேகமே இல்லை, ஹரிணிக்கு அதில் மிக்க சந்தோஷம். அனு அவளை தொலைபேசியில் அழைத்து, விஷயத்தைக் கூறிய போது, ஹரிணிக்கு தலைகால் புரியவில்லை.

"நாளையிலிருந்து நானும் உன்கூட ஆபீஸுக்கு வருவேன்" என்றாள் அனு.

"நானும் அதுக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன் டார்லிங்" என்று குதூகலித்தாள் ஹரிணி.

"உன்னோட ஹஸ்பண்டுக்கு என்னோட தேங்க்ஸை கன்வே பண்ணிடு"

"ஷூயூர்..." அழைப்பை துண்டித்து விட்டு, சித்தார்த்தின் அறையை நோக்கி ஓடினாள் ஹரிணி.

திடீரென்று தன் அறைக்குள் நுழைந்த ஹரிணியை பார்த்து, தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த்.
 
"சித்..." என்றாள் மூச்சிரைக்க.

"நின்னு, நிதானமா மூச்சு விட்டுக்கிட்டு அப்புறம் பேசு" என்றான் சித்தார்த்.

"தேங்க்யூ சோ மச்"

"எதுக்கு தேங்க்ஸ்?"

"அனுவோட அப்ளிகேஷனை அப்ரூவ் பணத்துக்கு"

லேசாய் தன் தலையை அசைத்து, அவளது *தேங்க்ஸ்ஸை* ஏற்றுக்கொண்டான் சித்தார்த்.

"சித், அனுவை கைட் பண்ண போறது யாரு?" என்றாள் ஆவலாக.

"ஏன் கேக்குற?"

"எனக்கு உங்களோட கைடன்ஸ் கிடைச்ச மாதிரி, அனுவுக்கும் ஒரு நல்ல கைடன்ஸ் கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும் இல்ல... அதான் கேட்டேன்..."

"அவளுக்கும் ஒரு நல்ல கைடு தான் கிடைப்பாங்க"

"ஓகே... அனு எப்போதிலிருந்து இங்க வரப் போறா?" என்றாள் அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த போதும்.

"நாளைல இருந்து வர சொல்லி மெஸேஜ் அனுப்பி இருக்கோம்"

"சரி, நான் போறேன்..."

"எங்க போற?"

"ஸ்கெட்ச் ரூமுக்கு. இன்னைக்கு காலையில நான் ஆரம்பிச்ச டிசைனை முடிக்கணும் இல்ல..."

"உனக்கு என்னோட *டச்* வேண்டாமா?" என்றான்.

"இப்போதைக்கு வேண்டாம். நான் அதை முடிச்சுட்டு, உங்களை கூப்பிடுறேன். நீங்க வந்து ஃபைனல் டச் கொடுத்தா போதும்"

"தட்ஸ் ஃபைன்..."

மீண்டும் ஸ்கெட்ச் அறைக்கு திரும்பி வந்தாள் ஹரிணி. தான் முடிக்காமல் விட்டு விட்டு சென்ற வேலையை தொடர்ந்தாள். ஒரு மணி நேரம் கழித்து சித்தார்த்தை அந்த அறைக்கு வருமாறு அழைத்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவள் முன் வந்து நின்றான் சித்தார்த். அவள் முடித்து வைத்திருந்த டிசைனை பார்த்து, திகைத்து நின்றான். அவனுடைய *டச் அப்* தேவையே படாத வகையில் அது அவ்வளவு நேர்த்தியாய் இருந்தது. அவளைப் பெருமையுடன் நோக்கினான் சித்தார்த்.

"எப்படி இருக்கு?"

"ஜஸ்ட் வாவ்..." என்று உதடு சுழித்து புருவம் உயர்த்தினான்.

"நெஜமாவா சொல்றீங்க?"

"நான் உன் விஷயத்தில் பொய் சொல்றதில்ல"

"எந்த ஃபைனல் டச்சும் தேவை இல்லையா?" என்றாள் ஹரிணி.

"தேவையில்ல. இட்ஸ் லுக்கிங் ஆசம்" என்றான் சித்தார்த்.

"ஏய்ய்ய்...." என்று சந்தோஷமாய் அவனை அணைத்துக் கொண்டாள் ஹரிணி.

"எனக்கு இந்த *டச்* நிச்சயம் வேணும்" என்றான் சித்தார்த் சிரித்தபடி.

"ஆஃபீஸ்லயா? " என்றாள் தன்னை விடுவித்துக்கொண்டு ஹரிணி.

"எங்க இருந்தாலும்..."

"சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்"

"நிஜமாவா சொல்ற?" என்றான் ஆச்சரியமாய்.

"ஆமாம். நான் ரொம்ப டயர்டா இருக்கேன்" என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

"டயர்டா இருக்கியா...?"

"ம்ம்ம்"

"எனக்கு வாய்ச்ச பொண்டாட்டி, சுத்த அண்ரொமான்டிகானவ" என்று பெருமூச்சு விட்டான்.

"எனக்கு வாய்ச்ச புருஷன் பொறுப்பு இல்லாதவனா?"

"நீ யாரை பத்தி பேசுற?" என்றான் கிண்டலாக.

"பின்ன என்ன? நீங்க ஒரு ட்ரிப் பிளான் பண்ணிங்க. ஞாபகம் இருக்கா?"

"நல்லா ஞாபகம் இருக்கு. அங்கிள் இந்த வாரம் ஃப்ரீ இல்லயாம். அதைப் பத்தி அவரே உன்கிட்ட பேசுறேன்னு சொல்லி இருந்தார். அதனால தான் நான் அதைப் பத்தி உன்கிட்ட எதுவும் சொல்லல. நம்ம அடுத்த வாரம் தான் போகப் போறோம்"

"ஆனா அப்பா எனக்கு கால் பண்ணவே இல்லையே..."

"ஒருவேளை இந்த வாரமே போக அவர் ட்ரை பண்றாரோ என்னவோ..."

"வேண்டாம்னு சொல்லுங்க நம்ம அடுத்த வாரமே போய்க்கலாம்"

"ஓகே"

"வீட்டுக்கு போகலாமா?"

"என்னை பொறுப்பில்லாதவன்னு சொன்னதை வாபஸ் வாங்கற வரைக்கும் நான் எங்கேயும் வர்றதா இல்ல" என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

"நீங்க ரொம்ப சமத்து" என்றாள் அவன் கன்னத்தைக் கிள்ளி.

சிரித்தபடி அவளுடன் அங்கிருந்து கிளம்பினான் சித்தார்த்.

மறுநாள்

அன்று மாலை, கல்லூரியிலிருந்து நேரடியாக, ஹரிணியும் அனுவும் அலுவலகம் வந்தார்கள். அனுவை அழைத்துக் கொண்டு சீனிவாசனின் அறைக்கு சென்றாள் ஹரிணி.

"ஹலோ சீனிவாசன் சார்..."

"ஹலோ மேடம், வாங்க..."

"இவ தான் என்னோட ஃபிரண்ட் அனு"

ஹரிணி, அனுவை பார்க்க, தான் கொண்டு வந்திருந்த சான்றிதழ்களின் நகல்களை சீனிவாசனிடம் கொடுத்தாள் அனு. அவற்றை வாங்கி, பார்வையிடமலேயே மேஜை மீது வைத்துக் கொண்டான் சீனிவாசன்.

"அனுவை கைட் பண்ண போறது யாரு?" என்றாள் ஹரிணி.

அதை தெரிந்து கொள்ள, அனுவை விட ஹரிணி மிகவும் ஆர்வமாய் இருந்தாள்.

"நீங்க தான்" என்றான் சீனிவாசன் சர்வ சாதாரணமாக.

"என்னது...??? நானா?"

"ஆமாம். நீங்க தான் அவங்களை கைட் பண்ண போறீங்க"

"ஆனா..."

"அவங்க ப்ராஜக்டை முடிக்க தானே இங்க வந்திருக்காங்க? அதுக்கு உங்களுடைய கைடன்ஸ் அவங்களுக்கு போதும்னு சித்தார்த் சார் நினைக்கிறார்"

மென்று விழுங்கினாள் ஹரிணி.

"கிட்டத்தட்ட ஒரு வாரமா, சித்தார்த் சார் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார் இல்லையா? அதை உங்க ஃபிரண்டுக்கு நீங்க சொல்லி கொடுங்க "

சரி என்று தலையசைத்தாள் ஹரிணி. அனுவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை நன்றாகவே உணர்ந்தான் சீனிவாசன்.

"என்னை இந்த கம்பெனியை சேர்ந்த யாராவது ஒருத்தர் தான் கைட் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்" என்றாள் அனு.

"நீங்க ஹரிணி மேடமை பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?  அவங்களும் இந்த கம்பெனியில் ஒருத்தர் தான்... மிஸஸ் சிஇஓ" என்றான் சீனிவாசன் மிடுக்காக.

சங்கடத்துடன் புன்னகைத்தாள் அனு.

"நீங்க அவங்களை ஸ்கெட்ச் ரூமுக்கு கூட்டிட்டு போகலாம் மேடம்" என்றான் சீனிவாசன்.

சரி என்று தலையசைத்த ஹரிணி, அனுவுடன் சீனிவாசனின் அறையைவிட்டு வெளியே வந்தாள். அனுவை சந்திக்க, சித்தார்த் விரும்பவில்லை என்பது அவளுக்கு புரிந்து போனது. அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது தான் அவளுக்கு புரியவில்லை.

"உன்னோட ஹஸ்பண்ட், உன்னை ரொம்ப நல்லா ட்ரெயின் பண்ணி இருக்காரு போல இருக்கே" என்றாள் அனு.

"நீ ரொம்ப லக்கி. உன்னோட பெஸ்ட் ஃபிரெண்டே உனக்கு கைடா வந்தது... நீ ரொம்ப ஜாலியா இந்த புராஜெக்டை முடிக்கலாம்... எந்த டென்ஷனும் இல்லாம" என்று நிலைமையை சமாளித்தாள் ஹரிணி.

"வேற யாரு என்னை கைட் பண்ணாலும் நான் டென்ஷன் இல்லாம தான் இருப்பேன்" என்றாள் அனு.

"நெவர் மைண்ட்"

"பெரிய கம்பெனியில ட்ரெயினிங் கிடைக்கப் போகுதுன்னு, நான் என்னமோ பெருசா கனவு கண்டுகிட்டு இருந்தேன்... என் முகத்துல இப்படி கரியை பூசுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

அமைதியாய் இருந்தாள் ஹரிணி. அனுவின் ஏமாற்றத்தில் தவறு இருப்பதாக அவள் நினைக்கவில்லை. அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றும் அவளுக்கு புரியவில்லை. தன்னால் இயலாத விஷயத்தில் அனுவுக்கு நம்பிக்கை கொடுக்க அவள் விரும்பவில்லை. அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களில் தான் தலையிடுவதில்லை என்பதில் அவள் உறுதியாக தான் இருந்தாள். ஆனால் சித்தார்த்தை கேள்வி கேட்க அவளுக்கு உரிமை இருக்கிறது. ஸ்கெட்ச் அறையை விட்டு வெளியேறி, சித்தார்த்தின் அறையை நோக்கி நடந்தாள். எப்பொழுதும் போலவே, அவனது அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்த அவளை பார்த்து, எப்பொழுதும் போலவே புன்னகைத்தான் சித்தார்த்.

"என்னங்க..." அவனை *சித்*என்று அழைக்காமல்,  *என்னங்க* என்று அவள் அழைத்ததை உணர்ந்தான் சித்தார்த். அவளது முகம், அவள் குழப்பத்தில் இருப்பதை நன்றாகவே அவனுக்கு எடுத்துக் காட்டியது.

"இங்க *புதுசா* எதையாவது கத்துக்க தானே அனு வந்திருக்கா? அப்படியிருக்கும் போது, எதுக்காக அவளை கைட் பண்ண என்னை அஸைன் பண்ணியிருக்கீங்க?"

"இந்த ஒரு வாரத்துல நீ *புதுசா* எதையுமே கத்துக்கலையா?" என்றான் நிதானமாக.

"நான் கத்துக்கிட்டேன் தான்..." என்றாள் தயக்கத்துடன்

"அப்போ, அதை அவளுக்கு சொல்லிக் கொடு"

"அவ ஒரு அப்ரண்டிஸ்... நம்ம கம்பெனியோட எக்ஸ்பர்ட் யாராவது அவளுக்கு சொல்லிக் கொடுத்தா, அது நம்ம கம்பெனிக்கு தானே நல்ல பெயரை கொடுக்கும்?"

"தேவா டெக்ஸ்டைல்ஸ்க்கு ஏற்கனவே ரொம்ப நல்ல பேர் இருக்கு. உண்மையை சொல்லப் போனா, இந்த மாதிரி, புது ஆளுங்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்து விட எல்லாம் இங்கே யாருக்கும் நேரம் இல்ல. உனக்காகத் தான் உன்னோட ஃபிரண்டுக்கு சொல்லிக் கொடுக்க நான் ஒத்துக்கிட்டேன்"

"அவ ரொம்ப டிஸப்பாயின்டடா இருக்கா..."

"இது ஒரு ஃபேமஸான கம்பெனி. இதுக்குள்ள காலெடுத்து வைக்கிறதே பெருமைக்குரிய விஷயம். வேணுமுன்னா அவளை வெளியே விசாரிச்சு பாக்க சொல்லு. நம்ம கம்பெனி பேரோட, அவளுக்கு சர்டிபிகேட் கொடுக்க போறோம். அதை விட வேற என்ன வேணும் அவளுக்கு? அவளுக்கு என்ன கிடைக்குதோ அதை வச்சு திருப்தி அடைய சொல்லு"

சற்று நிறுத்தி அவன்,

"ஒரு வேளை, அது அவளுக்கு திருப்தியை தரலைனா, இந்த கம்பெனியை விட்டு போக சொல்லு"

அதைக் கேட்ட ஹரிணி அதிர்ச்சி அடைந்தாள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருந்து வெளியே செல்வதா? சித்தார்த்துக்கு என்ன ஆனது? எப்படி அவன் இப்படி எல்லாம் பேசலாம்?

"உங்களுக்கு அனுவை பிடிக்கலையா?"

"எனக்கு ஏன் அவளை பிடிக்கணும்?" என்ற கேள்வி பதிலாய் வந்தது.

"நான் என்ன சொல்ல வரேன்னா..."

"குடும்பமும் ஆஃபீசும் ஒன்னானா இப்படித் தான் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்..."

"ஆனா, நான் ஆபிசுக்கு வரணும்னு நீங்க தானே விரும்புறீங்க?"

"அது வேற, இது வேற... ரெண்டுத்துக்கும் இருக்கிற வித்தியாசத்தை முதல்ல நீ புரிஞ்சுக்கோ. எப்பவும் உன்னை மத்தவங்களோட சேர்த்து வச்சு பேசத் துணியாத. என்னோட வைஃப், ஒரு வாரமா என் கூட ஆஃபீஸுக்கு வந்துகிட்டு தான் இருந்தா. ஆனா இது வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சனையும் வரல. ஆனா இப்போ, வந்திருக்கு... அந்த பிரச்சினைக்கு நம்ம ரெண்டு பேரும் காரணம் இல்ல...."

"இந்த பிரச்சனைக்கு அனுவும் காரணம் இல்ல..."

பல்லைக் கடித்துக் கொண்டு மென்று முழுங்கினான் சித்தார்த். அவனது கோபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் ஹரிணி. எப்பொழுதும் சித்தார்த், தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதே இல்லை... ரோஹித் பிரச்சனை பெரிதாகி வெடித்த போது கூட... இப்பொழுது மட்டும் ஏன்? அவளிடம் பதிலில்லை.

மௌனமாய் அவன் அறையை விட்டு வெளியேறினாள் ஹரிணி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top