42 இவன் வேற மாதிரி
42 இவன் வேற மாதிரி
அந்தக் கடிதத்தைப் பிரித்தாள் ஹரிணி. அது தற்கொலை செய்து கொள்வதற்கு முன், சித்தார்த்துக்கு ஷிவானி எழுதிய கடிதம்.
{மன்னிப்பு கடிதம்...
இது வரை உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாத இந்த பெண், எதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறாள் என்று நீங்கள் எண்ணலாம். உங்களை திருமணம் செய்து கொண்டதற்காகவும், உங்கள் வாழ்க்கையை பாழாக்கியதற்காகவும் என்னை மன்னித்து விடுங்கள். மன்னிப்புக் கோருவதால் எதுவும் மாறி விடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், மன்னிப்பு கூட கேட்காமல் *போக* எனக்கு மனம் வரவில்லை.
நான் விகாஸ் என்பவரை காதலிக்கிறேன். ஆம்... இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். உங்களுடைய துரதிஷ்டம் என்னை உங்களுடன் பிணைத்துவிட்டது. உங்களை மணந்து கொள்ள நான் மறுப்பு தெரிவிக்க வில்லை, ஏனென்றால் ஏற்கனவே முடிந்துவிட்ட என் காதலை பற்றி என் அப்பாவிடம் கூறும் தைரியம் எனக்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இந்த வாழ்க்கைக்கு என்னை தயார்படுத்திக் கொள்ளலாம் என்று தான் எண்ணினேன். ஆனால் விகாஸின் குழந்தை என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை தெரிந்து கொண்ட பின்பு அதை செய்ய என்னால் முடியவில்லை. குற்ற உணர்ச்சியுடன் இந்த உறவைத் தொடர நான் விரும்பவில்லை. அதனால் என் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அதனால் தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என்னுடைய மரணத்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது. ஒருவேளை, அப்படி ஏதாவது பிரச்சனை ஏற்படுமாயின், இந்த கடிதம் அதை தீர்த்து வைக்கும்.
நீங்கள் மிகவும் நல்லவர். என் விருப்பப்படி என்னை இருக்க விட்டீர்கள். என்னை ஒரு போதும் நீங்கள் தொந்தரவு செய்யவில்லை. என்னை நினைத்து நான் பரிதாபம் கொள்கிறேன். உங்களைப் போன்ற ஒரு நல்லவரை கணவனாக அடைந்த பிறகும் கூட, எனக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை.
இந்த உலகத்தை விட்டுச் செல்லும் முன், உங்கள் மனதை புரிந்து கொள்ளும் ஒரு வாழ்க்கை துணை உங்களுக்கு அமைய, ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
என்னை தொந்தரவு செய்யாமல் இருந்ததற்கும், பொறுமை காத்ததற்கும், எல்லாவற்றிற்கும், கோடான கோடி நன்றிகள். என்னை மன்னித்து, மறந்து விடவும்.
-ஷிவானி}
அந்த கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள் ஹரிணி. குறைந்தபட்சம், சித்தார்த்திற்காவது தன்னுடைய நன்றியறிதலை காட்ட நினைத்தாளே ஷிவானி... அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்தாள்.
அவள் இன்னும் தரைதளம் வராமல் இருந்ததால், அவளை தேடி கொண்டு வந்தான் சித்தார்த். அவள் இன்னும் கூட உடையை மாற்றாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து முகம் சுளித்தான். அவளது கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து பதட்டம் அடைந்தான்.
"ஹரிணி, என்ன ஆச்சு?"
ஒன்றும் கூறாமல் அவனை அணைத்துக் கொண்டாள் ஹரிணி.
"ஹரிணி..."
ஷிவானியின் கடிதத்தை அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்த சித்தார்த்தும் கூட ஆச்சரியம் அடைந்தான். அதைப் படித்துவிட்டு ஹரிணியை பார்த்து புன்னகை புரிந்தான்.
"பாரு, அவ எவ்வளவு நல்ல பொண்ணு..."
ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.
"அவளால எனக்கு எந்த பிரச்சினையும் வந்துடக் கூடாதுன்னு நினைச்சிருக்கா. எல்லாத்துக்கும் மேல, என்கிட்ட அவ உண்மையை மறைக்க நினைக்கல"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"அழாதே. போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. அம்மா சாப்பிடாம காத்திருக்காங்க"
அவன் கையில் இருந்த கடிதத்தை வாங்கிக் கொண்டாள் ஹரிணி
"எக்ஸ்கியூஸ் மீ மேடம். அது என்னோட லெட்டர்" என்று சிரித்தான் சித்தார்த்.
"ஆனா, அதை *நான்* (என்பதை அழுத்தி) தான் கண்டுபிடிச்சேன்."
"அதனால?"
"நான் உங்ககிட்ட இதை காட்டாம விட்டிருந்தா, உங்களுக்கு இந்த லெட்டரை பத்தி தெரிஞ்சே இருக்காதே?"
"ம்ம்... பாயிண்டு தான்"
"நீங்க போங்க. நான் வரேன்" என்றாள்.
சரி என்று தலையசைத்து விட்டு சென்றான் சித்தார்த். அந்தக் கடிதத்தைத் தன் கைப்பையில் வைத்துக் கொண்டு, உடை மாற்றிக் கொண்டாள் ஹரிணி.
இரவு, உணவு மேஜை
அந்தக் கடிதத்தைப் பற்றி சித்தார்த் தேவயானியிடம் கூறிவிட்டான் போல் தெரிகிறது. அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். அந்த சூழ்நிலையை மாற்ற முயன்றார் சுவாமிநாதன்.
"அம்மா ஹரிணி, நீ எப்போ உன்னுடைய ப்ராஜக்டை தொடங்கப் போற? உங்க அப்பா, கல்யாணத்துக்கு முன்னாடியே அதை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரே?"
"ஆமாம் பா. சீக்கிரமே ஆரம்பிக்கணும்"
அவள் குரலில் இருந்த தயக்கத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.
"உன்னை ஏதோ ட்ரபிள் பண்ற மாதிரி இருக்கே..." என்றார் தேவயானி.
"என்னோட ஃபிரண்ட் அனுவை உங்களுக்கு தெரியும் இல்ல மா...?"
"நல்லா தெரியுமே. நீ கூட அவளோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்த"
"அவளும் என் கூட ஆஃபீஸுக்கு வரேன்னு என்னை தொந்தரவு செய்றா மா"
சித்தார்த் சாப்பிடுவதை நிறுத்தினான். அதே நேரம், அவன் ஹரிணியை பார்க்கவுமில்லை. அவளுடைய தோழியை, அலுவலகத்திற்கு அழைத்து வரும் அவளுடைய எண்ணம் சித்தார்த்துக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அதை தன் பெற்றோர் முன் அவள் பேசியது, சுத்தமாய் பிடிக்கவில்லை. ஹரிணியை அலுவலகம் அழைத்துச் செல்வது பற்றி அவனிடம் ஏராளமான திட்டம் இருந்தது. தன் அலுவலகத்தில் அவளுக்கு என்று ஒரு தனி இடம் கொடுத்து, அவளை ராணி போல் நடத்த வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தான். ஹரிணியுடன் அனுவும் வந்தால், அவனுடைய திட்டங்கள் பாழாக கூடும். ஒருவேளை, அவனிடம் தனியாய் இருக்கும் போது ஹரிணி இதைப் பற்றி பேசியிருந்தால், அவன் நிச்சயம் மறுத்திருப்பான். ஆனால் இப்போது, அவனுடைய அம்மாவும், அப்பாவும் ஹரிணிக்கு துணை நிற்பார்கள்.
"அவ ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கா மா"
"அப்படின்னா அவளைக் கூட்டிக்கிட்டு போறதுல என்ன பிரச்சனை?" என்றார் தேவயானி.
"அது எப்படிப்பட்ட ஐடியாவா இருக்கப் போகுதுன்னு எனக்கு தெரியல"
"ஏன்? "
"கம்பெனியோட பாஸ் என்ன சொல்ல போறாருன்னு தெரியல. அவ என்னோட ஃபிரண்ட் அப்படிங்கிறதுக்காக மட்டும் அவளை கூட்டிகிட்டு போறதுல எனக்கு விருப்பம் இல்லம்மா"
அவளை உள்ளூர பாராட்டினான் சித்தார்த். அவன் எதுவும் கூறுவதற்கு முன்,
"நீ அதை பத்தி எல்லாம் கவலை படாதே மா. சித்து பாத்துக்குவான். சரி தானே சித்து?" என்றார் சாமிநாதன்.
பதில் கூறாமல் சிரித்தான் சித்தார்த்.
"அப்படின்னா நான் அனுவை என்கூட கூட்டிகிட்டு வரட்டுமா?" என்றாள் சந்தோஷமாக.
அவளுடைய ஆர்வம், சித்தார்த்தை ஆச்சரியப்படுத்தியது. அப்படி என்றால், தன் தோழியை அழைத்து வரவேண்டும் என்று அவள் விரும்புகிறாள். சரி என்று தலை அசைத்த சித்தார்த்,
"நம்ம கம்பெனியோட கைட் லைன்ஸை அவ மதிச்சா மட்டும் தான்" என்றான்.
"கைட் லைன்ஸா?"
"யார்கிட்ட இருந்தும், எந்த சலுகைகளையும் அவ எதிர் பார்க்க கூடாது. நம்ம கம்பெனிக்கு அவ வேலையை கத்துக்க தான் வரா. அதனால அவளுடைய லிமிடெட்ல அவ இருக்கணும். அவளுக்கு வேலை சொல்லிக்கொடுக்க, நம்ம கம்பெனியிலிருந்து யாரை அஸைன் பண்றமோ, அவங்க மட்டும் தான் அவளை கைட் பண்ணுவாங்க. எல்லாத்துக்கும் மேல முக்கியமான விஷயம், அவளுக்கு நீ எந்த அட்வான்டேஜும் கொடுக்கக் கூடாது. இதையெல்லாம் தெளிவா சொல்லிட்டு, அதுக்கப்புறம் அவளை கூட்டிகிட்டு வா"
தன் கண்களை இமைக்காமல் அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. சித்தார்த்தா இவ்வளவு கண்டிப்புடன் பேசுவது? சற்று முன்பு வரை, அவளிடம் கிண்டலும் கேலியுமாக விளையாடிக் கொண்டிருந்த அந்த சித்தார்த்தா இவன்? இல்லை... இவன் சித்தார்த் இல்லை... அந்த நிறுவனத்தின் முதலாளி. அவள் சரி என்று தலை அசைத்தாள். தங்கள் நட்பை, அனு எந்த விதத்திலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டாள் என்று அவள் நம்பினாள்.
"அப்படினா பிரச்சனை முடிஞ்சிது" என்றார் சுவாமிநாதன்.
"என்னைக்கு நீ ஆபீசுக்கு போக போற?" என்றார் தேவயானி.
"சிஈஓ வோட உத்தரவுக்காக காத்திருக்கிறேன்" என்றாள் ஹரிணி.
தேவயானி வாய்விட்டு சிரிக்க,
"மேடம் சிஈஓ வுக்காக நம்ம கம்பெனி காத்திருக்கு. ஆனா, அனுவை மாதிரி அப்ரென்டிஸ், ஆபிசுக்கு வரணும்னா, அதுக்குண்டான ஆர்டரை வாங்கிக்கிட்டு தான் வரணும்"
அது ஹரிணிக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தியது.
"அவ என்ன செய்யணும்?"
"ஆன்லைன்ல அப்ளை பண்ண சொல்லு. அவளோட ப்ரொஃபைல் அக்சப்ட் ஆச்சின்னா, கம்பெனியோட டீம் அவளை கூப்பிடும்."
"ஓ..."
"நீ அவளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. நீ எப்ப வேணும்னாலும் ஜாயின் பண்ணிக்கலாம்"
"ஆனா..."
அவளது பேச்சை துண்டித்து,
"உன்னை நான் நாளைக்கு கூட்டிகிட்டு போறேன். ரெடியாயிரு"
அவன் ஹரிணிக்கு உத்தரவிட்டதை பார்த்து, ஹரிணி மட்டுமல்ல, தேவயானியும், சுவாமிநாதனும் கூட வியந்து தான் போனார்கள். ஆம், அது ஓர் உத்தரவு போல் தான் ஒலித்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"இதுல ஆச்சரியப்பட எதுவுமில்ல. என் ஒய்ஃப் என்ன செய்யணும்னு, வொர்த்தான ஆடர் போடுற ரைட்ஸ் எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன்"
அது அவர்களுக்கு மேலும் வியப்பை அளித்தது. வொர்த்தான ஆடரா? என்ன அது?
"எனக்கு ரைட்ஸ் இல்லையா?" என்றான் ஹரிணியிடம்.
அவள், *இருக்கிறது* என்பது போல் அவசரமாய் தலையசைத்தாள்.
"ரொம்ப அதிர்ச்சி அடையாத ஹரிணி. இவன், வேலைன்னு வந்துட்டா, வேற மாதிரி... ஹரிணின்னு வந்தாலும் வேற மாதிரி தான்" என்றார் சுவாமிநாதன்.
"அவளை ரொம்ப பயமுறுத்தாதீங்க" என்று சிரித்தார் தேவயானி.
"அவளை நம்ம கொஞ்சம் பயமுறுத்துறது நல்லது. இல்லன்னா, அவனோட சுயரூபத்தை ஆஃபீஸ்ல நேரில் பார்க்கும் போது அவளுக்கு மயக்கம் வர வாய்ப்பு இருக்கு" என்று சிரித்தார் சுவாமிநாதன்.
அவர்கள் பேசியதற்கு சித்தார்த் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்ததை பார்த்த போது, ஹரிணிக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்து போனது. அலுவலகத்தில் அவளுக்காக நிறைய சுவாரசியமான விஷயங்கள் காத்திருக்கிறது.
இது பற்றி பேசி அனுவை பயமுறுத்த வேண்டாம் என்று தீர்மானித்தாள் ஹரிணி. அனு, புரிதல் உள்ள பெண். அலுவலகத்திற்கு வரும் போது தானாக புரிந்து கொள்வாள் என்று எண்ணினாள் ஹரிணி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top