35 எச்சரிக்கை
35 எச்சரிக்கை
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டாள் ஹரிணி. விட்டால், சித்தார்த்தை விழுங்கி விடுபவள் போல் அவனை ஆழமாய் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சரின்னு சொல்லுங்க அங்கிள்" என்றான் சித்தார்த்.
அலமேலுவை பார்த்தார் வெங்கடேசன். அவர் சரி என்று தலையசைத்தார்.
"எங்க மாப்பிள்ளை கேட்கும் போது முடியாதுன்னு எங்களால மறுக்கவா முடியும்?" என்றார் வெங்கடேசன்.
அதைக் கேட்டு புன்னகைத்த சித்தார்த்,
"உங்களுக்கு எங்கயாவது போகணும்னு சாய்ஸ் இருக்கா? இருந்தா என்கிட்ட சொல்லுங்க."
"வேண்டாம், வேண்டாம் சித்தார்த். அந்தத் தப்பை மட்டும் செய்யாதீங்க"
"ஏன் அங்கிள்?"
"அலமேலுகிட்ட ஒரு பெரிய கோவில் லிஸ்ட் இருக்கு. நம்ம எல்லாரையும் அவர் காவி கட்ட வச்சுடுவா" என்று சிரித்தார் வெங்கடேசன்.
"அப்பா சொல்றது சரி. அம்மா நிச்சயம் அதை செய்வாங்க "
"கோவிலுக்கு போறது தப்பா?" என்றார் அலமேலு.
"நிச்சயமா தப்பில்ல. அதே நேரம், நம்ம எல்லாரும் யாத்ரீகர்களும் இல்லையே..." என்றார் வெங்கடேசன்.
"நம்ம சம்பந்தி அம்மாகிட்ட கேட்கலாமே. அவங்க என்ன சொல்றாங்களோ அப்படியே செஞ்சிடலாம்" என்றார் அலமேலு.
"அம்மாகிட்ட சொன்னீங்கன்னா, அவங்க ஏதாவது அம்யூஸ்மெண்ட் பார்க்குக்கு போகலாமுன்னு சொல்லுவாங்க" என்று சிரித்தான் சித்தார்த்.
"நீங்க ஒன்னும் கிண்டல் பண்ணலையே" என்றார் வெங்கடேசன்.
"நிச்சயமா இல்ல அங்கிள். அவுட்டிங் போகலாமுன்னு சொல்லிட்டா, அம்மா ஜாலியா இருக்கணும் நினைப்பாங்க"
"இது ரொம்ப நல்ல விஷயமாச்சே... அலமு, நீ சம்பந்தி அம்மாகிட்ட இருந்து கத்துக்கணும்"
"ஆமாம்பா, அவங்க எல்லா விஷயத்தையும் ஈசியா அடாப்ட் பண்ணிக்கிட்டு, மத்தவங்களையும் என்டர்ட்டெயின் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க" என்றாள் ஹரிணி.
"அப்படின்னா, அவங்க எங்க சொல்றாங்களோ, நம்ம அங்க போகலாம். அவங்களையே இடத்தை சூஸ் பண்ண சொல்லுங்க" - வெங்கடேசன்.
"அப்படின்னா சரி. அவங்க இடத்தை சூஸ் பண்ணதும், என்னைக்கு போகலாமுன்னு நான் சொல்றேன்"
"சரி. ராத்திரி சாப்பாடு எங்க கூட சாப்பிடலாமே" என்றார் வெங்கடேசன்.
அமைதியாய் சித்தார்த்தை பார்த்தாள் ஹரிணி, அவன் என்ன சொல்லப் போகிறான் என்று. ஒருவேளை இதற்கும் கூட அவன் ஏதாவது திட்டம் வைத்திருக்கலாம்.
"ஷ்யூர் அங்கிள்"
அப்படி என்றால், இதைப் பற்றி அவன் ஏற்கனவே தேவயானியிடம் கூறிவிட்டு இருக்கிறான் என்று புரிந்தது ஹரிணிக்கு. இந்த அம்மாவும் பிள்ளையும் ரசிக்கத் தகுந்தவர்கள். அவர்களுடைய வாழ்வின் அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள் ஹரிணி.
அவர்கள் அங்கு நேரத்தை சந்தோஷமாய் செலவழித்தார்கள் என்று கூறுவதைவிட, வெங்கடேசன் மற்றும் அலமேலுவின் மனதை லேசாக்கும் முயற்சியில் வெற்றி கண்டார்கள் என்று தான் கூற வேண்டும். அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்கள் சித்தார்த்தும் ஹரிணியும்.
"இது நீங்க எப்போ போட்ட திட்டம்?" என்றாள் ஹரிணி.
"திட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா தோணுச்சி..."
"என்ன தோணுச்சு?"
பதில் கூறாமல் சிரித்தான் சித்தார்த்.
"அவங்களோட கவலையை மறக்க வைக்கணும்னு தோணி இருக்கும்... ஷிவானி பிரச்சனையிலிருந்து அவங்களை வெளியில கொண்டு வரணும்னு தோணி இருக்கும்... அவங்களை சந்தோஷப்படுத்தணும்னு தோணி இருக்கும்... அப்படி தானே?" என்றாள் ஹரிணி.
"அப்படி செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பு இல்லையா?"
சும்மாவே சித்தார்த்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஹரிணிக்கு, இப்படி லட்டு போல வாய்ப்பு கொடுத்தால் என்ன செய்வாள்.
"என்னை இப்படி குறுகுறுன்னு பார்க்காத... வண்டியை ஓட்ட விடு..." என்றான் சித்தார்த் சிரித்தபடி. ஆனால் அவன் கூறுவதை கேட்க ஹரிணி தயாராக இல்லை. அவன் உதட்டில் சதா தவழ்ந்து கொண்டிருந்த சிரிப்பை அள்ளி அணைக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
தமிழ் குடில்
தேவயானி அவர்களுக்காக காத்திருக்கவில்லை. ஏற்கனவே தன் அறைக்குச் சென்று விட்டிருந்தார். அவர்கள் வர காலதாமதம் ஆகும் என்பதை சித்தார்த் ஏற்கனவே அவரிடம் கூறியிருக்க வேண்டும். தங்கள் அறைக்கு வந்த ஹரிணி, மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு, சித்தார்த்தை முந்திக்கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
குளியல் அறைக்குள் நுழைய போன சித்தார்த், அவள் செயலைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான். சோபாவில் அமர்ந்தபடி அவள் வெளியே வர காத்திருந்தான். சில நிமிடங்களில் வெளியே வந்தாள் ஹரிணி. சித்தார்த் குளியல் அறையை நோக்கி சென்றான். ஆனால் அவனுக்கு அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவனை உள்ளே நுழையவிடாமல் ஹரிணி அவனை வழிமறித்து நின்றாள். அவன் வலது புறம் நகர அவளும் வலது புறம் வழி மறித்தாள். அவன் இடது பக்கம் நகர, அவளும் நகர்ந்தாள். கைகளை கட்டிக் கொண்டு நின்ற சித்தார்த், புருவம் உயர்த்தினான்.
"நீ என்ன செய்ய முயற்சி பண்ற?"
"உங்களை மயக்க ட்ரை பண்றேன்"
"உன்னால முடியாது"
அவளை இலேசாய் பிடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான். தரையை தன் காலால் உதைத்தாள் ஹரிணி.
குளித்துவிட்டு வெளியே வந்த சித்தார்த்தால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை, ஹரிணி சதுரங்க காய்களை அடுக்கி விட்டு அமர்ந்து இருந்ததைப் பார்த்த போது.
"வந்து என்கூட விளையாடுங்க" என்றாள் தெனாவட்டாக.
அவள் அருகில் வந்த சித்தார்த், அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்களை கலைத்து, அவற்றை மீண்டும் டப்பாவில் போட்டான். அதைப் பார்த்து பல்லைக் கடித்த ஹரிணி,
"பயந்தாங்கோலி..." என்றாள்.
"போய் தூங்கு"
"நீங்க ஒரு தொடை நடுங்கி..."
அவள் கூறியதற்கு செவிசாய்க்காமல்,
"குட் நைட் " என்று கூறிவிட்டு கட்டிலில் சாய்ந்த சித்தார்த், அவளுக்கு முதுகைக் காட்டியபடி படுத்துக் கொண்டான், சிரித்துக்கொண்டே.
அவன் இதையெல்லாம் இவ்வளவு சர்வ சாதாரணமாய் எடுத்துக் கொள்வான் என்பதை ஹரிணியால் நம்ப முடியவில்லை. கட்டிலின் மீது பாய்ந்து, அவன் முதுகை குத்த துவங்கினாள். அவளது திடீர் தாக்குதலால் திகைத்துப் போனான் சித்தார்த். சிரித்தபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான்.
"ஏய் காட்டுப்பூனை, போதும் நிறுத்து..."
அவள் சிணுங்கலுடன் முகம் சுளித்தாள்.
"உன்னோட எமோஷன்சை கட்டுப்படுத்த கத்துக்கோ. எல்லாத்துக்கும் உணர்ச்சிவசப்படுறது நல்லதில்ல"
"நீங்க என்னோட புருஷன், அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"
"அது ஞாபகம் இருந்ததால தான் நீ என்னை அடிச்ச போது நான் சிரிச்சேன்...!"
"போங்க, நான் உங்ககிட்ட பேச மாட்டேன். உங்ககிட்ட எல்லாத்துக்கும் பதில் இருக்கு"
அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி படுத்துக்கொண்டாள், அவன் தன்னை சமாதானப் படுத்துவான் என்ற எதிர்பார்ப்பில். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் போகவே, அது அவளை மேலும் கடுப்பேற்றியது. அவனை தன் பக்கம் பிடித்து இழுத்தாள். கண்களை மூடி இருந்த அமைதி தவழ்ந்த அவனது முகம், அவளையும் அமைதி படுத்தியது.
கோபத்தை மறந்து அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள். அவள் கொடுத்த அடிகளை எதிர்த்து நின்று விடலாம். ஆனால் இதை என்ன செய்வது? எதிர்த்து நிற்க முடியுமா அவனால்? மெல்ல கண் விழித்த சித்தார்த்தை, மீண்டும் கண்களை மூட செய்தாள் அவன் கண்களில் முத்தமிட்டு. சட்டென்று மாறிவிட்ட காலநிலை, அதன் பிறகு, அங்கு கேலி கிண்டலுக்கு இடமில்லை என்பதை எடுத்துக் கூறியது. தான் பலவீனம் அடைவதை உணராமல், அவளது செய்கையில் தன்னை இழந்து கொண்டிருந்தான் சித்தார்த். அவளது அழகு முகம் பற்றி படுக்கவைத்து இதழ் பதித்தான். சிந்தை தெளிந்த அவன், அவள் தலை கோதியபடி,
"இதை நான் கன்டினியூ பண்ணனும்னு நினைக்கிறியா?" என்றான்
அதைக் கேட்டு கண் திறந்தாள் ஹரிணி.
"உன்னோட எக்ஸாம் முடிய இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு. அது வரைக்கும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்"
"இப்ப நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணலன்னு நினைக்கிறீர்களா?"
"அது வேற டா..."
"ஆனா, அதுக்கு பிறகு நான் கூல் ஆயிடுவேன்"
"ஆனா, நீ என்கிட்ட அதையே எதிர்பார்க்க முடியாது"
"உங்களால கூல் ஆக முடியலைன்னா, நீங்க எனக்குள்ள எரியிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"
"நான் தனியாய் எரியமாட்டேன்... என்னோட சேர்த்து உன்னையும் எரிப்பேன்..."
"என்னால உங்களை மயக்க முடியாதுன்னு சொன்னீங்க?"
"நான் தான் ஏற்கனவே உன்கிட்ட மயங்கிப் போயிட்டேனே... மறுபடியும் நீ என்னை எப்படி மயக்க முடியும்?"
பெருமையுடன் புன்னகைத்தாள் ஹரிணி. கட்டிலில் படுத்து அவளை தன் நெஞ்சின் மீது இழுத்து அணைத்துக் கொண்டான்.
"ஹரிணி..."
"ம்ம்ம்ம்?"
"இன்னும் கொஞ்ச நாள் காத்திரு"
"என்னால வாக்குக் கொடுக்க முடியாது"
சிரித்தபடி அவளை இறுக்கிக் கொண்டான்.
"நீ என்னை எவ்வளவு பலவீனம் ஆக்குறேன்னு உனக்கு தெரியுமா?"
"அப்புறம் ஏன் காத்திருக்க சொல்றீங்க?"
"என்னை என்னாலேயே புரிஞ்சுக்க முடியல ஹரிணி. உன்னை நினைச்சு என் மனசுல ஏகப்பட்ட ஆசைகள் இருக்கு. அதுல சிலது மைல்ட்... சிலது வைல்ட்..."
தன் தலையை உயர்த்தி விழி விரிய அவனைப் பார்த்தாள் ஹரிணி.
"உன்னை பார்த்த நாளில் இருந்து, உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ரொம்ப ஆசையா காத்திருந்தேன். ஷிவானி கூட எனக்கு கல்யாணம் நடந்த போது, நான் என்னை ரொம்ப கஷ்டப்படுத்தி கட்டுப்படுத்திக்கிட்டேன். ஆனா, நீ எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொன்னியோ, அதுக்குப் பிறகு என் மனசை என்னால கட்டிப் போடவே முடியல. இது ஒரே நாளில் தீரும் தாகம் கிடையாது. அதை புரிஞ்சுக்கோ. உன்னோட படிப்பைக் கெடுத்துக்காத. நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்... வீட்ல மட்டும் இல்ல. ஆஃபீஸ்லயும், கம்ப்லீட்லி குவாலிஃபைட்டா... நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கவேன்னு நினைக்கிறேன்"
அவளது கண் இமைகள் படபடவென துடித்தன. அவனுடைய உணர்வுகளுடன் அவள் அதிகமாகவே விளையாடி விட்டது அப்போது தான் புரிந்தது ஹரிணிக்கு.
"பயமா இருக்கா?" என்றான் சித்தார்த்.
இல்லை என்று அவசரமாய் தலையசைத்த ஹரிணி, ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள்.
"பயப்படாதே... அது காதல்... அளவுக்கு அதிகமான காதல்..." என்றான் சிரித்தபடி.
அவனை இறுக்கமாய் தழுவிக்கொண்டாள் ஹரிணி. அது பயத்தினால் கூட இருக்கலாம். அவளை ஆச்சரியப் படுத்தியது என்னவென்றால், இவ்வளவு தீராத ஆசையை மனதில் வைத்துக்கொண்டு சித்தார்த் எப்படித் தான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறானோ என்பது தான். எதிர்காலத்தில் சித்தார்த்தை சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டு இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டாள் ஹரிணி.
மறுநாள் காலை
முதல் நாள் இரவு, தங்களுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடலை எண்ணியபடி, உடையணிந்து கொண்டு இருந்தான் சித்தார்த், சிரித்தபடி. காலையிலிருந்து அவன் இன்னும் ஹரிணியை பார்க்கவில்லை. அவள் தேவயானியுடன் இருக்க வேண்டும். அல்லது அவள் பயந்து விட்டாளோ? மீண்டும் சிரித்தான் சித்தார்த்.
அப்போது அவனுடைய கைப்பேசி ஒலித்தது. அது அவனுக்கு தெரியாத எண்ணாக இருந்த போதிலும், அந்த அழைப்பை ஏற்றான்.
"ஹலோ"
"ஹாய் சித்தார்த்..."
"யார் பேசுறீங்க?"
"ரோஹித்"
சித்தார்த்தின் நரம்புகள் அனிச்சையாய் முறுக்கேறின. ஆனால் அந்த அற்ப்பனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்த கூடாது என்று எண்ணினான்.
"எப்படி இருக்க?"
"சுத்தமா நல்லாவே இல்ல"
"ஏன்? உடம்பு சரியில்லையா?"
"கிட்டத்தட்ட அப்படித் தான்"
"அப்படின்னா, நீ எனக்கு பதிலா டாக்டருக்குல்ல ஃபோன் பண்ணி இருக்கணும்?"
"இப்போ நீங்க தான் என்னோட டாக்டர்"
"நல்ல காமெடி"
"என்னுடைய நம்பரை ஹரிணி பிளாக் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்"
அந்த செய்தி நிச்சயம் சித்தார்த்துக்கு உற்சாகம் அளித்தது.
"அப்படியா? அது எனக்கு தெரியாது"
"உங்க போனை கொஞ்சம் ஹரிணிகிட்ட கொடுக்கிறீர்களா?"
அது நிச்சயம் சித்தார்த்தை எரிச்சல் படுத்தியது.
"உன்னோட நம்பரை ஹரிணி பிளாக் பண்ணிட்டான்னா, அவளுக்கு உன்கிட்ட பேச விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அவ ஏன் உன் நம்பரை ப்ளாக் பண்ணான்னு எனக்கு தெரியாது"
"அப்படின்னா அவகிட்ட நீங்களே காரணம் கேளுங்க"
"அது என்னுடைய வேலை இல்ல. சின்ன பசங்க சண்டையில தலையிட நான் விரும்பல"
"நாங்க சின்ன பசங்க இல்ல "
"அப்படின்னா உங்க பிரச்சனையை நீங்களே தீர்த்துக்க வேண்டியது தானே?"
"அப்படியில்ல..."
"நான் நினைக்கிறேன், உன்னோட இந்த இர்ரிட்டேட்டிங் பிஹேவியர் தான் அவ உன்னோட நம்பரை பிளாக் பண்ண காரணமா இருக்கணும். இன்னொரு விஷயத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோ. நானும் ஒரு அளவுக்கு தான் பொறுமையா இருப்பேன். என் பொண்டாட்டியை எவனாவது இப்படி எல்லாம் இர்ரிட்டேட் பண்றதை என்னால பொறுத்துக்க முடியாது. நான் பொறுமையா இருக்கிறேன் அப்படிங்கிறதால நான் எல்லாத்தையும் பொறுத்துக்குவேன்னு அர்த்தமில்ல. என்னோட பொறுமை எல்லை கடந்தா, எதிர்ல நிற்கிறது யாருன்னு நான் பாக்க மாட்டேன். நான் சி.த்.தா.ர்.த்..." என்று அவன் தன் பெயரை உச்சரித்த விதம், ரோஹித்தின் வயிற்றை கலக்கியது.
"என்னைப் பத்தி வெளியில விசாரிச்சு பாரு" என்று அழைப்பை துண்டித்துவிட்டு, கைபேசியை கட்டில் மீது தூக்கி எறிந்தான் சித்தார்த்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top