31 உன்னை மட்டுமே

31 உன்னை மட்டுமே...

ஷிவானியின் பிரேத பரிசோதனை அறிக்கையை படித்த ஹரிணி அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஷிவானி மரணிக்கும் பொழுது, நாற்பத்தி ஐந்து நாள் சிசுவை சுமந்து கொண்டிருந்திருக்கிறாள். அதை நம்ப முடியாமல், திரும்ப திரும்ப படித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ஹரிணி. ஷிவானி கர்ப்பமாய் இருந்திருக்கிறாள்...! அவள் கண்கள் கட்டுக்கடங்காமல் பொழியத் தொடங்கியது.

இதனால் தான் ஷிவானி தற்கொலை செய்து கொண்டாளா? விகாஸை மறந்து சித்தார்த்துடன் வாழலாம் என்று அவள் ஆரம்பத்தில் நினைத்திருக்க வேண்டும். ஆனால் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்ற விஷயம் தெரிந்த பின், அவள் தன் மனதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவளுடைய உண்மை சொரூபம் வெளியே தெரிந்து விடும் என்று அவள் பயந்திருக்க வேண்டும். ஹரிணியின் கோபம், எல்லையை கடந்து கொண்டிருந்தது. எப்படி ஷிவானி இவ்வளவு அலட்சியமாய் இருந்தாள்? அவளைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் எந்த ஒரு அக்கறையும் அவள் மனதில் இருக்கவில்லையா?

அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல... அவள் கர்ப்பமாய் இருந்த விஷயம் சித்தார்த்துக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவன் அதை பற்றி வாயை திறக்கவே இல்லை. அவன் இதைப் பற்றி தன் அம்மாவிடம் கூட ஏதும் கூறவில்லை போலிருக்கிறது... ஏன்? எதற்காக இவ்வளவு பெரிய உண்மையை, அவன் அனைவரிடத்திலிருந்தும் மறைத்து வைத்திருக்கிறான்? அவன் மனதில் என்ன தான் இருக்கிறது? ஷிவானியை பற்றி யாரும் தாழ்வாய் நீக்க வேண்டாம் என்று நினைக்கிறானோ? அவன் ஷிவானியை இந்த அளவிற்கா காதலிக்கிறான்? தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒரு வஸ்துவை விழுங்கினாள் ஹரிணி.

அந்த காகிதத்தை மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, தேவயானி கேட்ட கோப்புடன் கீழ்த்தளம் வந்து அதை அவரிடம் கொடுத்தாள். தன் மனதின் எண்ண எழுச்சிகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க, அவளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

தங்கள் அறைக்கு வந்து அமைதியாய் சோபாவில் அமர்ந்தாள். அவளால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. இது எவ்வளவு பெரிய விஷயம்...! அதுவும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருப்பது என்றால், அது ஒரு குடும்பத்தின் கௌரவம் பற்றிய விஷயம் அல்லவா? ஷிவானி எப்படி இதையெல்லாம் மறந்தாள்? என்ன பெண் அவள்?

சித்தார்த்தின் வருகை, ஹரிணியின் எண்ணச் சங்கிலியை உடைத்தது. அவளைப் பார்த்தவுடன் அவன் முகம் பளிச்சிட்டது.

"ஹாய்... " என்றான்.

ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

"என்ன ஆச்சு?"

அதற்கும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

"ஏய், என்ன ஆச்சு? எதுக்காக என்னை அப்படி பார்த்து முறைச்சிகிட்டிருக்க?"

அப்பொழுது, தேவயானி ஹரிணியை அழைப்பது அவர்கள் காதில் விழுந்தது.

"ஹரி, சித்து காபி கேட்டான், கொஞ்சம் வந்து எடுத்துட்டு போறியா மா?"

உடனே அங்கிருந்து நகர்ந்தாள் ஹரிணி.

"என்ன ஆச்சி இவளுக்கு?" சித்தார்த் முகம் சுருகினான்.

குளியலறைக்கு சென்று முகம், கைகால் கழுவி புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தான். அவனுக்கு காஃபி கொண்டு வந்த ஹரிணி, அதை டீபாயின் மீது வைத்துவிட்டு, அமைதியாய் கட்டிலில் அமர்ந்தாள். அது சித்தார்த்துக்கு மிகவும் விசித்திரமாய் பட்டது. காஃபியை பருகியபடி அவளை கவனித்துக் கொண்டிருந்தான். இன்று காலை அவள் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டாளே... இப்போது எதற்காக அவள் இவ்வளவு தொய்வுடன் இருக்கிறாள்? கல்லூரியில் அவளிடம் யாராவது சண்டையிட்டார்களோ?

காஃபியை குடித்து முடித்து குவளையை  மேஜையின் மீது வைத்தான். ஷிவானியின் பிரேத பரிசோதனை அறிக்கை காகிதத்தை எடுத்து வந்து அவன் முன் நீட்டினாள் ஹரிணி.

"இது என்ன?"

சித்தார்த்தின் முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாடியது. அவளிடம் கண்ட மாற்றத்திற்கான காரணம் அவனுக்கு புரிந்தது. இது ஹரிணிக்கு எப்படி கிடைத்தது? ஆனால், இப்போது பிரச்சனை அதுவல்ல. அவளிடமிருந்து அந்த காகிதத்தை அவன் பெற முயன்ற போது, தன் கையை பின்னால் இழுத்தாள் ஹரிணி.

"இது என்னன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்"

மெல்ல தன் கண்களை இமைத்தான் சித்தார்த்.

"எதுக்காக இந்த விஷயத்தை நீங்க மறச்சிங்க? யார்கிட்டயும் ஏன் இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல... என்கிட்ட கூட... எதுக்காக மறைச்சிங்கன்னு சொல்லுங்க"

"நான் இதைப் பத்தி சொல்லியிருந்தா மட்டும் என்ன ஆகி இருக்கும்? உயிரோட இல்லாத ஒருத்தியைப் பத்திய உண்மையை சொல்றதால என்ன பிரயோஜனம்?"

"ஒத்துக்கறேன், இந்த உண்மை தெரிஞ்சிருந்தா, எங்க அம்மா, அப்பா உடைஞ்சு தான் போய் இருப்பாங்க... "

"அது மட்டும் இல்ல ஹரிணி... இந்த உண்மை வெளியில தெரிஞ்சிருந்தா, நீ தான் அதிகமா பாதிக்கப்பட்டிருப்ப"

"நானா?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

ஆமாம் என்று தலையசைத்தான்
சித்தார்த்.

"நீ, உன்னுடைய காலேஜ் லைஃபோட எண்டுல இருக்க. இது, வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமா அனுபவிக்க வேண்டிய காலகட்டம். ஏன்னா, இந்த நாட்கள் வாழ்க்கையில் எப்பவும் திரும்ப வரவே வராது. நான் உண்மையை சொல்லிருந்தா, நீ உன்னுடைய சுதந்திரத்தை மொத்தமா இழுந்திருப்ப. ஏன்னா, தன் குடும்பம் எவ்வளவு கட்டுக்கோப்பானதுன்னு நிரூபிக்க உங்கப்பா உன்னை பலி கடாவா ஆக்கியிருப்பார். தன்னுடைய வளர்ப்பு முறையில் எந்த தப்பும் இல்லன்னு நிரூபிக்க, உன் மூலமா முயற்சி செஞ்சிருப்பார். உன் மேல வச்சிருந்த நம்பிக்கையை கூட அவர் இழுந்திருக்க வாய்ப்பிருக்கு. ஷிவானி செஞ்ச தப்புக்காக நீ பாதிக்கப்படுறதை நான் விரும்பல."

வாயடைத்து நின்றாள் ஹரிணி. அவளுடைய சந்தோஷத்தை மனதில் கொண்டா, அவன் உண்மையை மறைத்து வைத்தான்?

"என்ன இருந்தாலும் ஷிவானி செஞ்சது தப்பு. எப்படி அவ இப்படி செய்யலாம்? எப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே அவள் தன்னோட புனிதத்தை இழக்கலாம்?"

"அவளுடைய காதல் புனிதமானதா இருந்திருக்கலாம்... அதனால அவ தன்னுடைய புனிதத்தை இழந்திருக்கலாம் இல்லையா?"

"என்ன பேசுறீங்க நீங்க?"

"அவ விகாஸை உண்மையா, ரொம்ப ஆழமா காதலிச்சிருக்கணும். அது தான் அவளை சுத்தி இருந்த அத்தனை தடையையும் உடைக்க செஞ்சிருக்கும். விகாஸ் மேல அவ வச்சிருந்த காதலைவிட, அவளுக்கு வேற எதுவுமே பெருசா தெரிஞ்சு இருக்காது... அது தான் காதல்..."

"அப்படின்னா,  அவ செஞ்சது தப்பில்லன்னு சொல்கிறீங்களா?"

"அவளைப் பொறுத்த வரைக்கும் அவ செஞ்சது தப்பு இல்ல. அவ, விகாஸை எவ்வளவு ஆழமா காதலிச்சான்னு நமக்கு என்ன தெரியும்?"

"இதுக்கு பேரா காதல்? காதல் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா?"

"மனசு உண்மையா, முழுசா காதல்ல லயிச்ச பிறகு, எல்லாமே சரின்னு தான் தோனும். நம்ம காதலிக்கிற அந்த ஒரு நபர்னு வரும் போது, நம்ம இதயம் எதுவுமே தப்புன்னு சொல்லாது. கொஞ்சம் யோசிச்சு பாரு, அவ எந்த அளவுக்கு விகாஸை நம்பியிருந்தா அவ தன்னையே அவனுக்கு கொடுத்திருப்பா? எந்த அளவுக்கு விகாஸ் அவளோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருந்திருக்கணும்? அப்படி ஒரு நம்பிக்கையை சம்பாதிக்குறது எவ்வளவு பெரிய கௌரவம்...?"

அவன் காதலுக்கு அளித்த விளக்கத்தை வியப்புடன் கேட்டுக் கொண்டு நின்றாள் ஹரிணி.

"ஷிவானி தப்பான பொண்ணு இல்ல. அவ எதையுமே சரிகட்ட முயற்சி செய்யல. அவ மட்டும் என்கிட்ட நெருங்கி பழகி இருந்தா, அந்த குழந்தைக்கு நான் தான் அப்பான்னு இந்த உலகத்தை அவளால நம்ப வச்சி இருந்திருக்க முடியும். ஆனா, அவ அப்படி செய்ய நினைக்கல..."

"நீங்க ஷிவானியை ரொம்ப காதலிக்கிறிங்கன்னு எனக்கு தெரியும்..."

அவளது பேச்சை தடுத்து,

"இல்ல, நான் எப்பவுமே ஷிவானியை காதலிச்சதில்ல" என்றான் சித்தார்த்.

ஷிவானி கர்ப்பமாய் இருந்தாள் என்பதை விட, அவன் கூறிய அந்த வார்த்தைகள் ஹரிணிக்கு அதிக அதிர்ச்சியை தந்தன.

"நீங்க அவளை காதலிக்கலன்னு சொன்னா என்ன அர்த்தம்? அம்மா சொன்னாங்களே..."

"அது ஒரு பெரிய மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்... நான் அவளை காதலிக்கவும் இல்ல... கல்யாணத்துக்கு பிறகு, அவகிட்ட ஒரு வார்த்தை கூட பேசவுமில்ல..."

"என்ன்னனனது...???"

"ஆமாம்... ஷிவானி என்கிட்ட பேசினதே கிடையாது. அவ எப்பவுமே இறுக்கமாக இருந்தா. சாதாரண வார்த்தைகள் கூட என்கிட்ட பேசினது இல்ல."

"அப்புறம் எதுக்காக நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்பினீங்க?"

அழகான புன்னகையை உதிர்த்தான் சித்தார்த்.

"நான் தான் சொன்னேனே, அது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்னு"

"மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா?"

ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.

சந்தேகமே இல்லை, ஷிவானியை சித்தார்த் காதலிக்கவில்லை என்பது ஹரிணிக்கு சந்தோஷம் தான். ஆனால் எது அவளுக்காகவும், அவளுடைய காதலுக்காகவும் அவனை இவ்வளவு வக்காளத்து வாங்க வைத்தது?

"ஷிவானியை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க வேற யாரையாவது காதலிச்சிங்களா?" என்றாள் தயக்கத்துடன்.

அந்தக் கேள்வியை சித்தார்த் எதிர்பார்காவிட்டாலும், அதற்கு சந்தோஷமாய் பதிலளித்தான்.

"ஆமாம், காதலிச்சேன்... பார்த்த உடனேயே ஒரு பெண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன். அதனால தான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னேன்"

"கல்யாணமா?" என்று அதிர்ந்தாள் ஹரிணி.

அவளுக்கு அழுகையாய் வந்தது. அவன் ஷிவானியை காதலிக்கவில்லை. ஆனால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பி இருக்கிறான். ஆனால் ஏன் அவன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை? எதனால் அந்த திருமணம் தடைப்பட்டது? பல கேள்விகள் அவள் மனதில் எழுந்தது. அவள் கண்ணீரை கட்டுப்படுத்துவதை உணர்ந்தான் சித்தார்த்.

"ஆமாம், நான் அவளை கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சேன். ஆனா விதி, என்னை *அவளோட* அக்கா ஷிவானிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுச்சு." என்றான் அவளது முகத்தை ஊன்றி கவனித்தபடி.

"ஆனா ஷிவானி..." என்று ஏதோ கூற போனவள் நிறுத்தினாள். என்ன? அவன் இப்பொழுது என்ன கூறினான்? *அவளுடைய* அக்கா ஷிவானியை மணந்து கொண்டானா? அப்படி என்றால் என்ன அர்த்தம்?

நம்ப முடியாமல் சித்தார்த்தை பார்த்தாள் ஹரிணி. அவளது நாக்கு வாய்க்குள் ஒட்டிக் கொண்டது.

"அப்படின்னா... நீங்க..."

"கல்யாண பொண்ணு *நீன்னு* நினைச்சு தான் நான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்..."

தான் காண்பது கனவு இல்லையே என்று சந்தேகம் தோன்றியது ஹரிணிக்கு. எப்படி இதெல்லாம் சாத்தியம்? அவளுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. இதை விட ஒரு பெரிய அதிசயம் அவள் வாழ்வில் இருக்க முடியாது. சித்தார்த் விரும்பியது அவளை. ஆனால் மணந்து கொண்டதோ ஷிவானியை. இது எப்படி நடந்தது?

"எப்படி?"

"வெங்கடேசன் மகளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்க வீட்ல பேசின போது, அவரோட மகளை பாக்க நினைச்சி, ஒருநாள் காலையில நான் உங்க விட்டு பக்கம் வந்தேன். நீ உங்க வீட்டுக்கு வெளியில செடிக்கு தண்ணி ஊத்திக்கிட்டு இருந்த. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு, தூங்கி எழுந்த முகத்தோட கூட, நீ ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்த. அப்போ வெங்கடேசனுக்கு ரெண்டு மகள்னு எனக்கு தெரியாது. நீ தான் கல்யாண பொண்ணுன்னு நினைச்சு, கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன். எதிர்பாராதவிதமா, அப்போ நான் ஸ்ரீலங்கா போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்க நடந்த பாம் ப்ளாஸ்ட்டால, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் இந்தியாவிலிருந்த யாரையும் என்னால கான்டாக்ட் பண்ணவே முடியல. அதனால, *உண்மையான* கல்யாண பெண்ணை பத்தி தெரிஞ்சிக்க எனக்கு வாய்ப்பே இல்லாம போச்சு. கல்யாண பொண்ணு நீ இல்லன்னு எனக்கு தெரிஞ்ச போது, எல்லாமே என்னோட கைமீறி போயிருந்தது..."

"அப்படின்னா, பார்த்தவுடனே உங்களுக்கு பிடிசசிடுச்சின்னு அம்மா சொன்னது, என்னை தானா?" என்றாள் தட்டுத்தடுமாறி.

"உன்னை மட்டும் தான்... "

அனிச்சையாய் அவனை நோக்கி நகர்ந்தாள் ஹரிணி.

"நீங்க உண்மையிலேயே என்னை தான் காதலிச்சிங்களா? ஷிவானியை இல்லையா?"

நம்பிக்கை இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் ஹரிணி. ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.

"என்னால இதை நம்ப முடியல... நம்பவே முடியல..."

"நம்பித் தான் ஆகணும்... ஏன்னா, அது தான் உண்மை. நான் காதலிச்சது, காதலிக்கிறது, காதலிக்க போறது உன்னை மட்டும் தான்..."

"நீங்க என்னை அவாய்ட் பண்ணதைப் பார்த்த போது, உங்களுக்கு என்னை பிடிக்கலன்னு நினைச்சேன்"

"ஷிவானி என்கிட்ட நெருங்கி பழக ஆரம்பிச்சா, உன்னை மறந்துடலாம்னு நான் நினைச்சேன். ஆனா, அவ என்கிட்ட இருந்து தூரமா விலகியே இருந்தா. அதனால் உன்னோட நினைவிலிருந்து என்னால வெளியில வரவே முடியல. உன்னை பார்க்கும் போதெல்லாம், என்னை கட்டுப்படுத்த நான் தடுமாறினேன். நீயும், உண்மை தெரியாம, ரொம்ப இன்னசன்ட்டா எங்கிட்ட பழகின. அது மேலும் மேலும் உன்னைப் பத்தியே என்னை நினைக்க வைச்சிது. அதுக்கு பயந்து தான் உன்கிட்ட இருந்து நான் ஓடினேன். ஆனா, இப்படி ஒரு திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்ல. நம்ம கல்யாணம் பண்ணிகிட்டோம்..."

"ஆனா, நம்ம கல்யாணத்துல நீங்க விருப்பமே இல்லாம இருந்தீங்களே...!"

அதைக் கேட்டு புன்னகைத்தான் சித்தார்த்.

"விருப்பம் இல்லாம இருந்தேனா? நானா? நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற வரைக்கும் நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். உன்னை கட்டாயப்படுத்த வேண்டாமுன்னு நான் நினைச்சேன். நீ முழு மனசோட சம்பாதிக்கணும்னு விரும்பினேன்"

"இதெல்லாம் ஏதோ கனவு மாதிரி தெரியுது" என்றாள் கனவுலகில் சஞ்சரிப்பது போல.

லேசாய் அவள் மூக்கை கிள்ளினான்.

"அவுச்..."

"நீ கனவு காணல" என்று சிரித்தான் சித்தார்த்.

"நீங்க என்னை தான் காதலிச்சிங்கன்னு ஏன் சொல்லல?"

"ஷிவானி மேல உனக்கு ரொம்ப ஆழமான பிடிப்பு இருந்தது. அவளோட டெத் உன்னை ரொம்பவே பாதிச்சது. அவ தற்கொலை பண்ணிக்கிட்ட விஷயம் தெரிஞ்சா, நீ அதை எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியல"

"நான் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னதுக்கு பிறகாவது சொல்லி இருக்கலாம் இல்ல?"

"இன்னிக்கு ராத்திரி, உன்னை டின்னருக்கு வெளிய அழைச்சுக்கிட்டு போகணும்னு நினைச்சது அதுக்காகத் தான்"

"நிஜமாவா?"

 ஆமாம் என்று தலையசைத்தான்.

"நான் இதை சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல. இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு புரியல. எல்லாமே தலைகீழாக மாறி போச்சு." என்று நம்பமுடியாமல் கூறிய ஹரிணியை, சிரித்தபடி தன் அருகில் இழுத்துக் கொண்டான் சித்தார்த்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top