29 சதுரங்கம்

29 சதுரங்கம்

ஹரிணி, சதுரங்க காய்களை அடுக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தான் சித்தார்த். அவளுடன் விளையாட தன்னை அழைப்பாள் என்று எண்ணினான். ஆனால் அவள் தனியாக விளையாட துவங்கினாள்.

"உனக்கு ரொம்ப போரடிக்குது போலயிருக்கு?" என்றான் அவளது கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் எண்ணத்தில்.

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. சும்மா தான்..." சதுரங்க பலகையில் இருந்து தன் கண்களை அகற்றாமல் கூறினாள் ஹரிணி.

"ரெக்கார்ட் நோட்டை எழுதி முடிச்சிட்டியா?"

"முடிச்சிட்டேன்"

"உனக்கு ஓகேன்னா நான் உன்கூட செஸ் விளையாட கம்பெனி கொடுக்கிறேன்" என்று வலிய வந்து பேச்சு கொடுத்தான்.

"செஸ்ல மட்டும் தானா?" என்றாள் ஹரிணி  மெல்ல தன் தலையை உயர்த்தி.

சில நொடிகள் தடுமாறினான் சித்தார்த். அவன் முகம் போன போக்கைப் பார்த்து கலகலவென சிரித்தாள் ஹரிணி.

"ஷாப்பிங் போகும் போது, கோவிலுக்கு போகும் போதெல்லாம் கம்பெனி குடுக்க மாட்டீங்களான்னு கேட்டேன்." என்று சமாளித்தாள்.

பெருமூச்சு விட்டு அவளுக்கு எதிரில் அமர்ந்தான் சித்தார்த்.

"விளையாடலாமா?" என்றான்.

ஹரிணி எதிர்பார்த்து காத்திருந்தது இதைத் தானே...! அவள் வேண்டாம் என்று கூறி விடுவாளா என்ன?

"விளையாடலாமே..."

வெகு சாதாரணமான நகர்த்தல்களை செய்ய முடிவு செய்திருந்தான் சித்தார்த். ஏனென்றால், அந்த ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு இல்லை. ஹரிணியுடன் சற்று, நேரம் செலவிட வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். ஆனால் ஹரிணியின் திட்டமோ வேறாக இருந்தது.

"ஸ்டார்ட் பண்ணு" என்றான் காய்களை அடுக்கியவாறு.

"என்ன பெட்?" என்றாள் ஹரிணி.

"பெட்டா?" என்றான் தலையை உயர்த்தி.

"பெட் இல்லாம ஆடினா என்ன சுவாரஸ்யம் இருக்கும்?"

"ஓகே... என்ன வேணாலும் பெட்டா வச்சுக்கோ" என்றான் சாதாரணமாக.

ஒரு நொடி கூட யோசிக்காமல் தனக்கு வேண்டியதை கேட்டாள் ஹரிணி.

"அடுத்த அரை மணி நேரத்துக்கு, தோக்குறவங்க ஜெயிக்கிறவங்க சொல்றதை கேட்கணும். என்ன சொன்னாலும் செய்யணும்... என்ன செஞ்சாலும் தடுக்கக் கூடாது."

புருவம் உயர்த்தினான் சித்தார்த்.

"இது என்ன பெட்?"

"இது தான் பெட்"

"ஓகே "

சித்தார்த் ஆர்வமானான். அவள் மனதில் ஏதோ திட்டம் இருக்கிறது என்று புரிந்து போனது சித்தார்த்துக்கு. அவள் ஏதோ எண்ணிக் கொண்டு தான் இப்படி ஒரு சவாலை முன்னிறுத்தி இருக்கிறாள். அப்படி அவள் மனதில் இருப்பது என்ன? ஒருவேளை ஷாப்பிங் அழைத்துச் செல்ல சொல்வாளோ? அதைப் பற்றி நினைத்தபடி ஆடத் துவங்கினான் சித்தார்த்.

வேண்டுமென்றே தவறாய் காய்களை நகர்த்தினான் சித்தார்த். உள்ளுக்குள் சிரித்தபடி, கவனமாய் ஆடினாள் ஹரிணி. ஆனால் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, அவள் கவனமாய் ஆட வேண்டிய தேவையே இல்லை என்று...! எப்படி இருந்தாலும் தோற்பது என்ற முடிவுக்குத் தான் சித்தார்த் வந்து விட்டானே...!

திட்டமிட்டது போலவே, ஆட்டத்தில் தோற்றான் சித்தார்த். ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம் பதற்றத்துடன் காணப்பட்டாள் ஹரிணி. அன்று அவளது வீட்டில் செய்தது போல், வானுக்கும் பூமிக்கும் குதிப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தாள் ஹரிணி.

"என்ன ஆச்சி, ஹரிணி? ஆர் யூ ஆல்ரைட்?"

ஆம் என்று தலை அசைத்தாள் ஹரிணி.

"உன்னுடைய டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சி. அடுத்த *ஹாஃப் அன் ஹவர்*  உன்னுடையது" என்றான் தனக்கிருக்கும் ஆர்வத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.

"அடுத்த அரை மணி நேரத்திற்கு நான் சொல்ற எல்லாத்தையும் நீங்க கேட்கணும்" என்றாள் தயங்கித் தயங்கி.

"அஃப்கோர்ஸ்... ( கடிகாரத்தை சுட்டிக்காட்டி ) இப்ப மணி எட்டரை ஆகுது. ஒன்பது மணி வரைக்கும் நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்"

"அது மட்டும் பத்தாது. நான் செய்யறதை நீங்களும் செய்யணும்"

"ஷ்யூர்... உன் கூட சேர்ந்து டான்ஸ் ஆடணுமா?"

அவன் சிரிக்க, இல்லை என்று தலையசைத்த ஹரிணி, அவனை நோக்கி நகர்ந்தாள். அவளது கூரிய பார்வை அவன் வயிற்றில் ஏதோ செய்தது. அவனை நோக்கி தன் கைகளை நீட்டி பிடித்துக் கொள்ளுமாறு சைகை செய்தாள். தன் கரங்களை அவள் கரத்தின் மீது வைத்தான் சித்தார்த். அவனை கட்டிலின் அருகே அழைத்துச் சென்று, அமருமாறு ஜாடை காட்டினாள். தனது தலையில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்தான் சித்தார்த்.

"உக்காருங்க"என்று அவளது குரல் கட்டளை போல் ஒலித்தது.

கட்டிலில் அமர்ந்து, தன் தலையை உயர்த்தி அவளை ஏறிட்டான் எந்த முடிவுக்கும் வர முடியாமல். ஆனால் அவள் ஏதோ செய்யப் போகிறாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயமானது. அவளுடைய கண்களும், செய்கையும் வழக்கமான ஹரிணியின் சாயலில் இல்லை. ஆம் அவள் ஏதோ செய்யத்தான் போகிறாள். அவளுடைய அடுத்த நடவடிக்கை, அதை உறுதிப்படுத்தியது. அது அவனுடைய மூலாதாரத்தையே ஆட்டி பார்த்தது. அவள், அவன் மடியில் அமர, தன் கைகளை இருக்கமாய் மூடினான் சித்தார்த் அனிச்சையாக.

அவன் கன்னத்தை வருடி, அவனை நிலை குலைந்து போக செய்தாள் ஹரிணி. அவன் நெற்றியில் தன் இதழ்களை அவள் பதித்த போது, நம்ப முடியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். வழக்கமாய், ஆட்டத்தில் ஜெயித்தவர் தான் பரிசு பெறுவது வழக்கம். ஆனால் இங்கு, தோற்றுப் போன சித்தார்த்துக்கு, தன் முத்தங்களை அவனது முகமெங்கும் வாரியிறைத்து பரிசளித்து கொண்டிருந்தாள் ஹரிணி.

திகைத்துப் போனான் சித்தார்த்...! அவளுக்கு வேண்டியது இதுவா? இதற்காகத்தான் அவள் வேண்டும் என்றே தன்னை சவாலுக்கு அழைத்தாளா?அவர்களது உறவு முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவள் தயாரா? இதற்காகத் தான் தன்னிடம் பெட் வைக்க சொல்லி கேட்டாளா? அவள் விஷயத்தை கையாளும் விதம் இது தானா?

அவன் காதலித்த பெண், அவன் மடியில் இருக்கிறாள்... அவனும் தன்னை காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்... பிறகென்ன தாமதம்? அவளை வாரி அணைத்துக் கொண்டு இதழ் பறித்தான் சித்தார்த், உலகமே தன்னிடம் சரணடைந்து விட்டது போல. தன் உடலின் ரத்த ஓட்டம் முழுதும் தலையில் பாய்வது போல் இருந்தது சித்தார்த்துக்கு, ஹரிணியும் அந்த முத்தத்தில் பங்கேற்ற போது. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல் அவர்களது முத்தமும் ஒரு முடிவுக்கு வந்தது. திகைப்புடன் ஹரிணியை பார்த்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த், அவள் என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன்.  அவன் எதிர் பார்க்காதபடி அவள் பேசத் துவங்கினாள்.

"ஷிவானி இறந்துட்டா... அவ நினைப்பிலிருந்து வெளியில வாங்க. அது சுலபம் இல்லனு எனக்கு தெரியும். ஆனா முடியாததும் இல்ல..."

 மென்று முழுங்கினான் சித்தார்த்.

"நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன். ஆனா நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். நம்மளோட அம்மா, அப்பா, நம்ம சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அவங்களை பத்தியாவது யோசிச்சு பாருங்க"

சித்தார்த் பொறுமை இழக்க துவங்கினான்.

"நான் செய்றதெல்லாம் நம்ம அப்பா அம்மாவுக்காக தான்னு நினைக்காதீங்க. எனக்கும் இந்த ரிலேஷன்ஷிப்ல எவ்வளவு ஈடுபாடு இருக்குன்னு காட்டத் தான் நான் இப்படி செஞ்சேன். நம்ம இப்படியே இருந்திட முடியாது. நம்ம போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. அதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க."

பெருமூச்சு விட்டு கண்களை மூடினான் சித்தார்த்.

"எனக்கு தெரியும், என்னை முழு மனசா ஏத்துக்க உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்... என்னை காதலிக்கிறது உங்களுக்கு கஷ்டம் தான்..."

கண்களைத் திறந்த சித்தார்த், பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாய் அவளைப் பார்த்தான்.
மேலும் அவள் எதுவும் உளருவதற்கு முன், அவள் வாயை பொத்தினான்.

"போதும் நிறுத்து... நான் உன்னை காதலிக்கலைன்னு எப்பவாவது சொன்னேனா? நான் உன்னை காதலிக்கிறேன்னு புரியலையா உனக்கு?" என்றான் சீற்றமாய்.

அதிர்ச்சியில் விரிந்த ஹரிணியின் கண்கள் இமைக்கவும் மறந்தன. அவன் கையை தன் வாயில் இருந்து மெல்ல அகற்றினாள் ஹரிணி.

"ஆனா..."

"நம்ம அம்மா அப்பாவுக்காக எல்லாம் கிடையாது... வேற எந்த காரணத்துக்காகவும் கிடையாது... நான் என் மனசோட அடி ஆழத்திலிருந்து உன்னை காதலிக்கிறேன்... உன்னைக் காதலிக்கிறது எனக்கு கஷ்டம்னு பைத்தியக்காரத்தனமான நினைக்காதே..."

மருட்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

"எனக்கு நீ வேணும்னு உனக்கு புரியவே இல்லையா? என்னோட தொடுதல்ல, எனக்கு உன் மேல இருக்கிற காதலை நீ உணரலையா?"

இந்த அதிரடி திருப்பத்தை எதிர்பார்க்காத ஹரிணி ஒன்றுமே புரியாமல் விழித்து கொண்டிருந்தாள். அவளுக்கு பேச்சே வரவில்லை. ஆனால், அவளது கண்கள் மட்டும் சிரித்தன.

அவளது முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி,

"நான் உன்னை காதலிக்கிறேன்... நான் சாகர வரைக்கும் அது மாறாது" என்றான்.

அவன் மடியிலிருந்து கீழே இறங்கி, கைகளைத் தட்டியபடி, குதிக்கத் துவங்கினாள் ஹரிணி. உதடு கடித்து சிரித்தான் சித்தார்த், தனது தலையை இடவலமாக அசைத்தபடி.

"அய்யய்யோ என்னால நம்பவே முடியலையே..." என்று நகம் கடித்தாள்.

மறுபடி அவன் மடியில் அமர்ந்து கொண்டு,

"நிஜமாவே நீங்க என்னை காதலிக்கிறீங்களா?" என்றாள்.

ஆமாம் என்று தலையசைத்தான். அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்ட அவளை அதிசயம் போல் பார்த்தான் சித்தார்த்.

"நானும் உங்களை ரொம்ம்ம்ம்ப காதலிக்கிறேன்" என்று அவன் கண்ணத்தை செல்லமாய்  கடித்தாள் ஹரிணி.

"நீ ஒரு பைத்தியக்காரி" என்று சிரித்தான், தன் கன்னத்தை தேய்த்தபடி.

அவன் கூறியதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு, *ஆமாம்* என்று தலையசைத்த ஹரிணி,

"இந்த பைத்தியக்காரிகிட்ட இருந்து நீங்க இனிமே தப்பிக்கவே முடியாது. ஏன்னா, நீங்களும் இந்த பைத்தியக்காரியை காதலிக்கிறேன்னு ஒத்துக்கிட்டீங்க. நீங்க தப்பிக்க நினைச்சா, இந்த பைத்தியம் உங்களைக் கடிச்சிடும். ஜாக்கிரதை..." என்று செல்ல மிரட்டல் மிரட்டினாள்.

அவளை வியந்து பார்த்து அதிசயித்தான் சித்தார்த். இந்த அளவிற்க்கா இந்த பெண் அவன் மீது காதல் கொண்டிருக்கிறாள்? அவன் அவளை காதலிக்கிறான் என்று கூறியவுடன் கைத்தட்டி, குதூகலித்து மகிழ்ந்தாளே...! அவன் முதல் பார்வையில் காதலித்தது, சிவானியை அல்ல,  அவளைத் தான் என்று கூறினால் அவள் என்ன செய்வாள்?அவனை வேண்டுமென்றே சவாலுக்கு அழைத்து, அவள் மனதில் இருந்ததை கூறி, அவனை அவள் ஆச்சரியப்படுத்தி விட்டாள். இது அவனுடைய முறை. பார்க்கலாம் அவள் என்ன செய்யப்போகிறாள் என்று... கண்களை மூடி, அவளை அணைத்தபடி அவள் தோளில் முகம் புதைத்தான்  சித்தார்த். அது அவனுடைய வெகு நாளைய ஏக்கம்...! அது புரியாமல் அவனை அணைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஹரிணி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top