26 மறந்த கதை

28 மறந்த கதை...

சித்தார்த்தின் கோப வெடிப்புக்குப் பிறகு, பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருவரும் ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் மனம், எதையும் சிந்திக்காமல் இல்லை என்று கூறுவதற்கு இல்லை. ஹரிணி உடனே தன்னுடைய பெற்றோரை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். தனது அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு, ஷிவானி பற்றிய அனைத்து விஷயங்களையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்று துடித்தாள். சித்தார்த்தோ, ஹரிணியிடம், அவன் அவளைத் தான் காதலித்தான் என்ற, தன் வாழ்நாளின் மிகப் பெரிய உண்மையை இனி மறைக்க கூடாது என்று எண்ணினான். அதோடு மட்டுமல்லாமல் ஷிவானி கருவுற்றிருந்த விஷயத்தைப் பற்றியும் அவளிடம் கூறி விட வேண்டும் என்று எண்ணினான். அவள் அவனிடம் நெருங்கி வருவதைக் கண்டு அவனுக்கு அந்த தைரியம் ஏற்பட்டது. அவளிடம் உண்மையை கூறுவதற்கு இது தான் சரியான நேரம். அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாய் இருக்கிறாள். அவளிடமிருந்து எதையும் மறைத்து வைப்பது சரியாய் இருக்காது.

குளியலறைக்குச் சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டு கண்ணாடியை பார்த்தாள் ஹரிணி. அவளது முகம் வறண்டது போல் இருந்தது. முகத்தை துடைத்தபடி வெளியே வந்த பொழுது தனது கைப்பேசியில் தனக்கு வந்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். மாய்ச்சுரைசர் லோஷனை எடுத்து தன் முகம், கை, கால்களில் தேய்த்துக் கொள்ள துவங்கினாள் ஹரிணி. அப்பொழுது அவளுடைய கைபேசி ஒலிக்கவே,

"ப்ளீஸ், ப்ளீஸ் என் ஃபோனை கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன்" என்றாள் சித்தார்த்திடம்.

அவளுடைய ஸ்லிங் பேக்கில் இருந்து அதை எடுத்த சித்தார்த், அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்து,

"அனு..." என்றான்.

"கொஞ்சம் ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்களேன்" என்றாள் ஹரிணி.

அழைப்பை ஏற்று, பின் ஸ்பீக்கரை ஆன் செய்தான் சித்தார்த். ஹரிணி எதுவும் பேசத் தொடங்கும் முன், அவளை திட்ட தொடங்கினாள் அனு.

"எங்கடி போய் தொலைஞ்ச? காலேஜ்க்கு வர்ற எண்ணமே இல்லையா உனக்கு? உன்னுடைய ப்ராஜக்டை சப்மிட் பண்ணனும்னு ஞாபகம் இருக்கா இல்லையா? ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்க?"

சிலை போல நின்றிருந்தாள் ஹரிணி. ஆம். திங்கட் கிழமைக்குள் அவள் தனது ப்ராஜெக்ட்டை சப்மிட் செய்தாக வேண்டும். எப்படி அதை மறந்தாள்?

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சினா, உன்னோட ஹஸ்பண்ட் ஹெல்ப் பண்ணுவாரு, உனக்கு நிறைய டைம் கிடைக்கும்னு சொன்னியே... எல்லாத்தையும் மறந்து போயிட்டியா?"

"ஆமாண்டா கண்ணா... நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்தேன் தெரியுமா..."

"நீயும் உன் டென்ஷனும்... சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் இழுத்து தலையில போட்டுக்கிட்டு, பெருசா புலம்ப வேண்டியது... காலேஜுக்கு வரப் போறியா இல்லையா?"

"வரேன்... நிச்சயம் வரேன்"

"எப்போ?"

"மண்டே"

"அதுக்கு முன்னாடி ரெகார்ட் நோட்டை எழுதி முடி. ஹிட்லர் மேடம் உனக்கு எந்த எக்ஸ்கியூஸும் கொடுக்க மாட்டாங்க"

"கடவுளே, இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு???"

"ஒரு வேலை பண்ணு..."

"என்ன?"

"எங்கயாவது ஓடிடு... ஹிட்லர் மேடம் கையில சிக்காத அளவுக்கு தூரமா ஓடிப்போ... பை"

"இருடா..."

அழைப்பைத் துண்டித்து விட்டாள் அனு. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் ஹரிணி.

சித்தார்த்துக்கு சுருக்கென்றது. இந்த முக்கியமான விஷயத்தை அவன் எப்படி மறந்தான்? அவள் இன்னும் அவளது படிப்பை முடிக்கவில்லை. அதைப் பற்றி அவன் எப்படி யோசிக்காமல் விட்டான்? இப்போது அவளது மனதை திசை திருப்புவது சரியாக இருக்காது. தனது கைப்பேசியை எடுத்தான்.

"சீனி, இன்னைக்கு ராத்தி ஃப்ளைட்ல எங்க டிக்கெட்டுக்கு அரேஞ்ச் பண்ணு" என்று அழைப்பை துண்டித்தான் சித்தார்த்.

"ஐ அம் சாரிங்க..."

"பரவாயில்ல விடு"

"நான் வந்து..."

"ஷிவானியோட டென்ஷன்ல மறந்துட்ட... அது தானே?"

ஆமாம் என்று பாவமாய் தலையசைத்தாள் ஹரிணி.

"உன்னோட படிப்பில கன்சன்ட்ரேட் பண்ணு. நீ உன்னுடைய கிராஜுவேஷனை முடிக்க இன்னும் இரண்டரை மாசம் தான் இருக்கு... முதல்ல அதை முடி. அதுக்கு முன்னாடி, ஊருக்கு போன உடனே ரெக்கார்டை முடி"

"நான் எங்க அம்மாவைப் போய் பார்க்கலாமுன்னு நினைச்சேன்" என்றாள் மெல்லிய குரலில்.

"எதுக்கு? ஷிவானியை பத்தி எல்லாத்தையும் ஒப்பிக்கவா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.

"அப்படி செய்யாத ஹரிணி. அது புத்திசாலித்தனமா இருக்காது. பெண்ணைப் பெத்தவங்களுக்கு அது ரொம்ப பெரிய வலியை தரும். எந்த தப்பும் செய்யாத உங்க அம்மா அப்பாவுக்கு அந்த தண்டனையை கொடுக்காத."

"நான் அவங்ககிட்ட உண்மையை மறைச்சேன்னு தெரிஞ்சா, அவங்க வருத்தப்படுவாங்க"

"நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தானே அந்த உண்மை தெரியும்? நீ சொல்லாம அவங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல"

"உண்மையை யாராலயும் மூடிவைக்க முடியாது. ஒரு நாள் அது வெளி வந்தே தீரும்"

"ஒருவேளை அப்படி விதிச்சிருந்தா, எப்படி நடக்கணுமோ அது அப்படி நடக்கட்டும். ஆனா, அதை நீ செய்யாத. புரிஞ்சுதா?"

அமைதியாய் இருந்தாள் ஹரிணி.

"என்னோட பேச்சுக்கு நீ மரியாதை கொடுப்பேன்னு நம்புறேன்"

*ஐயோ* என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டாள் ஹரிணி.

"உன்னுடைய திங்சையெல்லாம் பேக் பண்ணிக்கோ. நம்ம சீக்கிரம் ஏர்போர்ட்டுக்கு போய் சேரனும். இன்னும் ஒரு விஷயம்..."

"என்ன?"

"உன்னுடைய படிப்பு முடியுற வரைக்கும், வேற எதைப் பத்தியும் யோசிக்காதே..."

"ம்ம்ம்ம்"

"எதைப் பத்தியும்னா, *எதைப்பத்தி*யும் தான்..."

அவன் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று புரிந்து கொள்வதில் ஹரிணிக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. தனது உடைகளைத் மடித்து வைக்க தொடங்கினாள் ஹரிணி சித்தார்த் கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டு.

......

அவர்கள் மீண்டும் டெல்லி வந்து சேரும் போது நள்ளிரவாகி விட்டிருந்தது. அவர்களுக்காக உறங்காமல் காத்திருந்தார் தேவயானி.

"இன்னும் நீங்க தூங்கலையா மா?" என்றான் சித்தார்த்.

"நீங்க வர போறீங்கன்னு தெரிஞ்சு நான் எப்படி தூங்குவேன்?"

"நாங்க எங்க ஓடிப் போகப் போறோம்? காலையில எழுந்து பார்த்துகிட்டா போதாதா?"

"நீங்க என்ன சாப்பிட்டீங்க ஹரிணி?" என்றார் தேவயானி.

"ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டோம் மா."

"சரி போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க"

"இல்லம்மா. நிறைய எழுதுற வேலை இருக்கு" என்று தங்கள் அறையை நோக்கிச் சென்றாள் ஹரிணி.

ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.

"மண்டே, அவ ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ண வேண்டியிருக்கு"

"ஓஹோ"

"நானும் நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரம் ஆஃபீஸ்க்கு போகணும்"

"ஏன்டா?"

"சீனி ஃபோன் பண்ணி இருந்தார். ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கு. சீக்கிரம் வந்துடுவேன்"

"சரி. இப்ப போய் தூங்கு"

அவன் அங்கிருந்து போக நினைத்த போது, அவன் கையைப் பிடித்து நிறுத்தினார் தேவயானி.

"ஏதாவது முன்னேற்றம் இருந்துதா?" என்றார் ரகசியமான குரலில்

தங்களுக்குள் நிகழ்ந்த ஏராளமான சுவாரசியமான நிகழ்வுகளையும், நிகழ்ந்த உரையாடல்களையும், பரிமாறிக்கொண்ட முத்தத்தையும் நினைத்துக் கொண்டான் சித்தார்த். அவன் அமைதியாய் இருந்ததைப் பார்த்து,

"இல்லையா...?" என்றார் தேவயானி.

சித்தார்த்துக்கு நன்றாகவே தெரியும், *ஆமாம்* என்று கூறிவிட்டால், அன்றே அவனுடைய அம்மா அவர்களது முதல் இரவுக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து விடுவார். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில், அது நடக்க கூடாது. முதலில் ஹரிணி படிப்பை முடிக்கட்டும். *இல்லை* என்று தலையசைத்தான்.

கோபத்தில் பல்லைக் கடித்தார் தேவயானி.

"நீ ஒரு உதவாக்கரை... தண்டம்... எந்த வேலைக்கும் உதவ மாட்ட... போ.. போய் போத்திகிட்டு தூங்கு..."

புலம்பியபடி தன் அறையை நோக்கி நடந்தார் தேவயானி. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றான் சித்தார்த்.

மறுநாள்

தனது ரெகார்ட் நோட்டை எழுதி முடிப்பதில் தீவிரமாய் இருந்தாள் ஹரிணி. அவளிடம் பேச நேரமே கிடைக்காமல் போனது தேவயானிக்கு. அவர்களுடைய மும்பை பயணம் எப்படி இருந்தது என்று கேட்க நினைத்தார் அவர். இவர்கள் இருவரும் மாறவே மாட்டார்களோ என்று எண்ணி பெருமூச்சு விட்டார்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான் சித்தார்த். சோபாவில் அமர்ந்துகொண்டு தேவயானியை அழைத்தான்.

"மா..." என்று உரக்க கூவினான்.

சமையலறையிலிருந்து அதை கேட்ட தேவயானி, வெளியே வந்தார். அவருடைய கையில் ஒட்டியிருந்த மாவு, அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார் என்று கூறியது.

"எப்ப வந்தே?" என்றார்.

"இப்ப தான் வந்தேன். என்ன செய்றீங்க?"

"அப்பா, பூரி கேட்டாரு. அதான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்"

"ஓ..."

"நீ எதுக்கு என்னை கூப்பிட்ட?"

"எனக்கு ஒரு காபி வேணும். தலை வலிக்குது. கொஞ்சம் தைலம் தேச்சு விடுறீங்களா?"

"இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்..." என்றார் காட்டமாக.

"ஏன் மா?"

"உனக்கு பொண்டாட்டி இருக்கா. ஞாபகம் இருக்கு இல்ல? இன்னும் ஏன் நீ என்னை டார்ச்சர் பண்ற? நான் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா, இல்லையா? நானே தான் எல்லாம் செய்யணுமா? உன் பொண்டாட்டிகிட்ட கேட்கணும்னு உனக்கு தோணாதா? எனக்கும் வயசாயிகிட்டு இருக்கு. நான் ஒன்னும் மிஷன் இல்ல"

மீண்டும் சமையலறைக்குச் சென்றார் தேவயானி, சித்தார்த்தை திகைப்புக்கு ஆளாக்கிவிட்டு. இப்பொழுது அவன் என்ன தவறாக கேட்டுவிட்டான் என்று அவனுடைய அம்மா இப்படி அவன் மீது பாய்ந்துவிட்டு செல்கிறார்? எழுந்து தன் அறைக்குச் சென்றான் சித்தார்த்.

சற்று நேரம் உறங்கினால் தேவலாம் என்று தோன்றியது. சட்டையை தளர்த்திக் கொண்டு கட்டிலில் படுத்தான். கண்களை மூடி, தேவயானி ஏன் அப்படி எரிந்து விழுந்தார் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவர் ஏதோ ஒரு டென்ஷனில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவருக்கு அப்படி கோபம் வந்திருக்கும்.

அப்பொழுது, அவனது நெற்றியை மென்மையாய் வருடுவது போல் இருந்தது அவனுக்கு. கண்களை திறந்தவன், ஹரிணி அவன் அருகில் அமர்ந்து கொண்டு, அவனுக்கு தைலம் தடவிவிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தான். அவன் எழுந்து அமர முற்பட்ட போது, அவனது தோள்களை அழுத்தி மீண்டும் படுக்க வைத்து,

"ரொம்ப ஓவரா பண்ணாதீங்க... உங்களால தான் அம்மா அப்செட்டா இருக்காங்க. எதுக்காக எல்லாத்துக்கும் அவங்களையே தொந்தரவு செய்றீங்க? என்கிட்ட எதையும் கேட்க மாட்டீங்களா? இப்படியே வாழ்க்கை பூரா இருக்கப் போறதா உத்தேசமா? ஏதாவது என்கிட்ட செய்யச் சொன்னா, நான் ஒன்னும் உங்களை முழுங்கிட மாட்டேன் புரிஞ்சுதா?" என்றாள்.

இன்று என்ன, அவனுக்கு பிரியமானவர்கள் அவன் மீது பாய வேண்டிய நாளோ? ஆளாளுக்கு ஏன் அவன் மீது கோபம் கொள்கிறார்கள்? அவள் அங்கிருந்து கிளம்ப நினைத்த போது, அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் சித்தார்த். அவன் பிடித்திருந்த தன் கரத்தையும் பின் அவன் முகத்தையும் பார்த்தாள் ஹரிணி.

"தலையை கொஞ்சம் அழுத்தி விடேன், ரொம்ப வலிக்குது" என்றான்.

மீண்டும் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை பிடித்து விட துவங்கினாள் புன்னகையுடன். அவள், அவன் தலையை அழுத்த துவங்கியவுடன், அவன் கண்களை மூடி இளைப்பாறுவான் என்று எண்ணினாள் ஹரிணி. ஆனால் அப்படி நடக்கவில்லை. அவனது கூரிய பார்வை அவள் முகத்தில் குத்திட்டு நின்றதால், சங்கடத்திற்கு உள்ளானாள் அவள். அவனது பார்வையை சந்திக்க இயலாமல் இங்குமங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

"நீங்க கண்ணமூடி கொஞ்ச ரெஸ்ட் எடுத்தா, உங்களுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்" என்றாள் அவனை பார்க்காமல்.

"நான் ஏற்கனவே ரிலாக்ஸ் ஆயிட்டேன். கண்ண மூடினா தூங்கிடுவேன்" என்றான் நமுட்டு புன்னகையுடன்.

"அப்படின்னா தூங்குங்க"

"அப்போ, ராத்திரி நீ எனக்கு கம்பெனி குடுக்குறியா?"

திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினாள் ஹரிணி.

"இப்போ தூங்கிட்டா, ராத்திரி தூக்கம் வராது இல்ல... அதை சொன்னேன்"

ஆம் என்று தலையசைத்த ஹரிணி,

"போதுமா?" என்றாள்.

"ஏன்? உனக்கு கை வலிக்குதா?" என்றான்.

"இல்ல..."

"அப்பறம்...?"

"ஒன்னும் இல்ல"

அவள் எச்சில் விழுங்கிதைப் பார்த்து புன்னகை புரிந்தான் சித்தார்த். அவனது கேள்வியும் பதிலும் அவளுக்கு கிறக்கத்தை தந்தது.

"நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்"

அவனது பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து ஓடிப்போனாள் ஹரிணி. அதற்கு காரணத்தை புரிந்து கொண்ட சித்தார்த் புன்னகை புரிந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top