25 எனக்காக...
25 எனக்காக...
சித்தார்த்தும், ஹரிணியும் புன்னகை புரிந்து கொண்டிருந்தார்கள்... ஆனால், தனித்தனியாக. ஹரிணி, ஜன்னல் அருகில் நின்று கடலை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். சித்தார்த், குளியலறையில், கண்ணாடியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ஹரிணி இவ்வளவு துணிச்சலான அடியை தன்னை நோக்கி எடுத்து வைப்பாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. ஹரிணியும், சித்தார்த் தன்னுடைய செயலை வழிமொழிவான் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. முகத்தை மூடி வெட்கத்துடன் சிரித்தாள் ஹரிணி. கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு தன் கைகளை கட்டிக்கொண்டு புன்னகைத்தான் சித்தார்த். இன்னும் அவர்கள் இருவரும் அந்த ஆனந்த நொடிகளிலிருந்து வெளிவரவில்லை போல் தெரிகிறது. ஆனால் அவர்களுக்குள் எழுந்த எண்ணமானது அவர்களுடைய புன்னகையை துடைத்தழித்தது.
*ஒரு பெண் தன் கணவனிடம் மனதை பறி கொடுப்பது என்பது சகஜம். அப்படி நடந்து கொண்டதற்காக ஹரிணி சங்கட படலாம். அவள் அப்படி நடந்து கொண்டாள் என்பதற்காக, சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டால், அது ஹரிணியை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கும். அவளை சங்கடத்திற்கு ஆளாக்கி, தன்னை நெருங்க வைப்பது சரியாய் இருக்காது. அவள் சுதந்திரமாய் செயல்படட்டும். அவளுக்கு என்ன வேண்டும் என்பதை அவளை முடிவு செய்யட்டும்.* என்று நினைத்தான் சித்தார்த்.
*தன் மனைவி வலிய வந்து முத்தமிடும் போது, எந்த ஆண்மகனும் தனது கட்டுப்பாட்டை இழப்பது சகஜம் தானே...? நான் முத்தமிட்டதால் தான் அவர் தன்னிலை இழந்திருப்பார். அவர் அப்படி நடந்து கொண்டார் என்பதற்காக, இந்த உறவு முறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அவர் முற்றிலும் தயாராகிவிட்டார் என்று அர்த்தமல்ல. இந்த சூழ்நிலை எதிர்பாராமல் ஏற்பட்ட ஒன்று. சற்று முன் நிகழ்ந்த நிகழ்வு, நிச்சயம் இந்த உறவுக்கு புது நம்பிக்கை அளித்திருப்பது உண்மை. ஆனால் அதற்காக, சித்தார்த்தை தொல்லை செய்வது சரியாய் இருக்காது, அவனைத் தொல்லை செய்யும் உரிமை அவளுக்கு இருந்தாலும் கூட அதை உடனே செய்வது சரியா இருக்காது. அவன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும். அதன் பிறகு, விடாமல் தொல்லை செய்து விட்டால் போகிறது...* உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் ஹரிணி.
இருவரும் ஒன்று போல் தான் யோசித்தார்கள். முக்கியமாக, முத்தமிட்டு விட்டதற்காக ஒருவர் மற்றொருவரிடம் நிச்சயம் *மன்னிப்பு* கோர கூடாது என்று எண்ணினார்கள். மன்னிப்பு கேட்டு விட்டால் அது *தவறு* என்பது போல் ஆகிவிடும் அல்லவா?
குளியலறையிலிருந்து வெளியே வந்தான் சித்தார்த். இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மெரைன் ட்ரைவ் செல்ல இருவரும் தயாரானார்கள்.
"போகலாமா?" என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சரி என்று தலையை அசைத்தார்கள் புன்னகையுடன்.
அறையை பூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். லிஃப்ட்டின் அருகில் வந்தவுடன், இருவரும் ஒரே நேரத்தில் பொத்தானை அழுத்த கையை நீட்டினார்கள். இருவரும் ஒரே நேரத்தில் கையை பின்னால் இழுத்தார்கள். மீண்டும் இருவரும் ஒரே நேரத்தில் கையை நீட்டி, யார் அழுத்துவது என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, லிஃப்ட் தானாகவே திறந்தது. அதிலிருந்து ஒரு தம்பதிகள் வெளியே வந்தார்கள். சிரித்தபடியே லிஃப்ட்டின்னுள் நுழைந்து, சிரித்தபடியே கீழே வந்தார்கள்.
சித்தார்த் புக் செய்த டாக்ஸி அவர்களுக்காக அங்கு காத்திருந்தது. அவர்கள் இருவரும் அதில் அமர்ந்து கொள்ள, டாக்ஸி, மெரைன் டிரைவ் நோக்கி புறப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி இருந்தார்கள். அவர்கள் டாக்சியை விட்டு கீழே இறங்கிய போது, ஹரிணி கூறியது அவர்களுடைய நினைவுக்கு வந்தது.
*நான் உங்க கையை விடாம பிடிச்சிக்கிட்டே இருந்தா தொலைஞ்சு போகமாட்டேன்*
*என் கையை பிடித்துக் கொள்* என்பது போல் சித்தார்த் அவன் கையை நீட்ட, அதே நேரம், அவன் கையைப் பிடித்துக் கொள்ள ஹரிணியும் தன் கையை நீட்டினாள்.
மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி விரல்களை பிணைத்துக் கொண்டார்கள். கைகளை கோர்த்தபடி மெரைன் டிரைவில் நடக்க துவங்கினார்கள். அப்பொழுது அங்கு ஒருவர் கடலை விற்றுக்கொண்டு இருந்தார். அவளது கரத்தை இறுக்கமாய் பற்றிக்கொண்டு கிண்டலாய் சிரித்தான் சித்தார்த், அவள் மீண்டும் ஓடிவிட போகிறாளோ என்பது போல. வாய்விட்டு சிரித்தாள் ஹரிணி. தங்கள் மனம் லேசானது போல் உணர்ந்தார்கள் இருவரும். அப்பொழுது சரியாய் சூரியன் கடலுக்குள் லேசாய் மூழ்கத் துவங்கியிருந்தது.
"சன் செட் ஆகுது " என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறி, இருவரும் ஒன்றாய் தலையை அசைத்தார்கள்.
சூரிய கதிர்களால் வானில் தீட்டப்பட்ட ஓவியத்தில் மெய்மறந்து நின்றாள் ஹரிணி. அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்ததில், தன் பக்கத்தில் சித்தார்த் இல்லாததை கவனிக்கவில்லை ஹரிணி. புன்னகையுடன் அவன் நின்றிருந்த திசையை நோக்கி திரும்பியவள், அவனைக் காணாமல் திடுக்கிட்டாள். அவனை இங்கும் அங்கும் தேட துவங்கினாள். அப்பொழுது அவளுக்கு கடலை வாங்கி வந்தான் சித்தார்த். அதைப் பார்த்து முகத்தை சுளுக்கு என்று வைத்துக்கொண்டாள் ஹரிணி. தன் புருவத்தை உயர்த்தியபடி அதை அவளை நோக்கி நீட்டினான் சித்தார்த். அதை அவனிடம் இருந்து பெற்றுக் கொண்டு மெரைன் டிரைவின் சுவற்றின் மீது அமர்ந்தாள்.
மெல்ல மெல்ல நீருக்கடியில் மூழ்கிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்த போது, அன்று காலை அவர்களுக்கு இடையில், சூரியனைப் பற்றி நிகழ்ந்த உரையாடல் அவளது நினைவுக்கு வந்தது. அவள் ஏன் சித்தார்த்திடம் ஷிவானியை பற்றி கூறக்கூடாது? ஷிவானி எப்பொழுதும் அவனை காதலிக்கவே இல்லை என்று தெரிந்தால், அவளது நினைவிலிருந்து வெளிவர நிச்சயம் அது சித்தார்த்துக்கு உதவும் அல்லவா? தன்னுடனான உறவு முறையை தொடரவும் அது வழிவகை செய்யலாம். சித்தார்த் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள் ஹரிணி. அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்"
சொல்லு என்பது போல் தலையசைத்தான் சித்தார்த்.
"ஐ அம் சாரி" என்றாள் தலை குனிந்தபடி.
சுருக்கென்றது சித்தார்த்துக்கு. இதற்குத் தான் அவன் பயந்தான். தன்னை முத்தமிட்டதற்காக அவள் மன்னிப்பு கேட்பதாக நினைத்தான் சித்தார்த். அவள் அப்படி செய்யவே கூடாது என்று அவன் எண்ணியிருந்தான். அவள் மன்னிப்பு கேட்டது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அப்படி என்றால், அவன் நினைத்தது போல் அவளிடம் நெருங்கிப் பழகுவது என்பது அவ்வளவு சுலபமாய் இருக்கப் போவதில்லையா? அவனது புத்தி, இல்லாத ஒன்றை அவசர அவசரமாய் சிந்தித்தது.
"ஐ அம் சாரி. நான் அப்படி செஞ்சிருக்க கூடாது"
கண்களை மூடி தன் விரலால் நெற்றியை தேய்த்தான் சித்தார்த்.
"அதை நான் வேணுமுன்னு செய்யல... ஆனா செய்யணும்னு தோணுச்சு"
திடுக்கிட்டு தலையை நிமிர்த்தினான் சித்தார்த். *செய்ய வேண்டும் என்று தோன்றியதா?*
"எனக்கு வேற வழியில்லை... வேற எப்படி நான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிறது?"
முகத்தை சுளித்தான் சித்தார்த். *எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதா?*
"நான் ஆர்வமா இருக்கிறது தப்பா? நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் தானே?"
"ஆங்..."
*ஹரிணி இவ்வளவு போல்டான பெண்ணா?*
"நீங்க என்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"
"மாட்டேன்... நிச்சயமா மாட்டேன்" என்றான் அவசரமாக.
"நெஜமாவா? ரொம்ப தேங்க்ஸ். நான் இதுக்காகத் தான் மும்பை வந்தேன்"
"என்ன்ன்னனது...???"
"ஆமாம். நான் ஷிவானியை பத்தி தெரிஞ்சுக்க தான் இங்க வந்தேன்"
"ஷிவானியா?" என்று முகத்தை சுருக்கினான் சித்தார்த்.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.
"இவ்வளவு நேரமா நீ ஷிவானியை பத்தி தான் பேசிகிட்டு இருந்தியா?"
"ஆமா..."
அடேய் சித்தார்த்....! நீயும் உன் புத்தியும்...! உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான் சித்தார்த்.
"நான் இதைப் பத்தி உங்ககிட்ட முன்னாடியே சொல்லாம இருந்ததுக்கு சாரி"
தன் சிரிப்பை அடக்க போராடிக் கொண்டிருந்தான் சித்தார்த். அவளுக்கு எதிர்ப்புறமாக முகத்தை திருப்பி, தன்னுடைய எண்ணத்தை எண்ணி, கண்களை மூடிக்கொண்டு சிரித்தான்.
"என் மேல கோவமா இருக்கீங்களா?" என்றாள் ஹரிணி குழப்பமாக.
உதட்டைக் கடித்துக் கொண்டு இல்லை என்று தலையசைத்தான். தன்னை சுதாகரித்துக் கொண்டு,
"நீ என்ன சொல்ல வந்த சொல்லு" என்றான்.
"ஷிவானி ஆக்சிடெண்ட்ல சாகல. அவ சூசைட் பண்ணிக்கிட்டா"
அதைக்கேட்ட சித்தார்த் அதிர்ந்தான். அந்த உண்மை இவளுக்கு எப்படித் தெரிந்தது?
"அந்தக் கோவில்ல இருந்த குருக்கள், அவ வேணுமின்னே லாரி முன்னாடி போய் விழுறதை பார்த்திருக்காரு" அவள் கண்கள் கலங்கியது.
"ஏன்னு உங்களுக்கு தெரியுமா?"
குறுக்கீடு செய்யாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அவ வேற ஒருத்தரை காதலிச்சிருக்கா"
இது உண்மையிலேயே தரமான செய்தி தான்.
"உனக்கு எப்படி தெரியும்?"
"ஷீலா சொன்னாங்க"
அப்படி என்றால், ஷீலாவை சந்திக்க தான், அவளுடைய திருமணத்தை சாக்காக வைத்துக்கொண்டு இவள் இங்கு வந்திருக்க வேண்டும்.
"ம்ம்ம்... அவங்க தான் எல்லாத்தையும் சொன்னாங்களா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"ஷீலா சொன்னது பாதி தான்"
"அப்போ மீதி? "
"சிம்ரன் சொன்னாங்க"
"சிம்ரனா? அது யாரு? நீ கல்யாணத்துல வேற யார் கூடவும் பேசி நான் பாக்கலையே...?"
"நான் அவங்களை நேத்து இங்க தான் பார்த்தேன்"
"இங்கயா...? எப்போ?"
"நேத்து நான் கடலை வாங்க போகல..." அவள் தயக்கத்துடன் அவனை பார்க்க, என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டு தன் கைகளை கட்டிக் கொண்டு சிரித்தான் சித்தார்த்.
"ஷிவானி வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு நான் தெரிஞ்சிக்க நினைச்சேன். சிம்ரன் கார்ல போறதை பார்த்த உடனே நான் எல்லாத்தையும் மறந்து..."
"அவ கார் பின்னாடி ஓடிட்ட..."
ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள்.
"சரி... அவ என்ன சொன்னா?"
ஷிவானி விகாஸிடம் தன்னை தந்ததைத் தவிர மற்ற அனைத்தையும் கூறி முடித்தாள் ஹரிணி.
"அவ இப்படி பண்ணியிருப்பான்னு என்னால நம்பவே முடியல. என்னை ஏமாத்த அவளுக்கு எப்படித் தான் மனசு வந்ததோ? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸா இருந்தோம் தெரியுமா? எந்த விஷயத்தையும் நான் அவகிட்ட மறச்சதே இல்ல. ஆனா அவளோட வாழ்க்கைல நடந்த எவ்வளவு பெரிய உண்மையை அவ என்கிட்ட மறைச்சிட்டா. என்னைப் பத்தி அவ என்ன நினைச்சுகிட்டு இருந்தாளோ எனக்கு புரியல. புரிதல், அன்பு, உண்மை இதெல்லாம் வெறும் வார்த்தை தானா...? அதுக்கெல்லாம் மதிப்பே இல்லையா? என்னை அவ இப்படி ஏமாத்துவான்னு நான் நினைச்சு கூட பாக்கல." என்று உதடு கடித்து தன் அழுகையை அடக்க முற்பட்டாள் ஹரிணி.
அவள் தோளைத் தொட்டு கண்ணிமைத்தான் சித்தார்த்
"அவ டல்லா இருந்ததை பார்த்து, நான் எத்தனை தடவை அவகிட்ட காரணம் கேட்டேன் தெரியுமா? ஆனா அவ வாயை கூட திறக்கலை. அப்பா கல்யாண பேச்சை எடுத்த போது கூட ஒரு வார்த்தையும் சொல்லல. அவ எவ்வளவு கன்னிங்கா இருந்திருக்கா..."
முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் ஹரிணி.
"முடிஞ்சு போன விஷயத்துக்காக அழுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. நம்மால எதையும் மாத்த முடியாது. ஷிவானி இறந்துட்டா. அவ மேல வருத்தப்பட்டு உனக்கு என்ன கிடைக்கப் போகுது? ஒண்ணுமே இல்ல"
அவள் கண்களை துடைத்துவிட்டான் சித்தார்த்.
"ஷிவானி சேப்டர் முடிஞ்சு போச்சு. தயவுசெய்து அங்கிள், ஆன்ட்டிகிட்டே இதைப் பத்தி எதுவும் சொல்லாத. அவங்க உடைஞ்சு போயிடுவாங்க"
அவளது கன்னத்தை தொட அவன் முயன்ற பொழுது, அவன் கையை தட்டிவிட்டாள் ஹரிணி.
"ஷிவானி செத்துட்டா தான்... ஆனா நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன்...? எனக்கு ஃபீலிங்ஸ் இல்லையா? நான் வருத்த பட மாட்டேனா? என்னோட ஃபீலிங்ஸ்க்கு மரியாதை இல்லையா?"
வலுக்கட்டாயமாய் அவள் கன்னங்களை பற்றி, தன் அருகில் இழுத்தான்.
"நீ உயிரோட இருக்குறது எனக்காக தான்... உனக்காகவும் உன்னோட ஃபீலிங்ஸ்காகவும் தான் நான் இருக்கேன்..." என்ற போது அவன் வார்த்தைகளில் கோபம் தெரிந்தது.
மலைத்துப் போனாள் ஹரிணி. தாங்கள் தனிமையில் இல்லை என்பதை உணர்ந்த சித்தார்த், அவளை விட்டு விலகினான். கடலை நோக்கி திரும்பி, சில்லென்ற காற்றில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விழைந்தான். ஆனால் ஹரிணிக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சற்று நேரம் பிடித்தது. சித்தார்த்தின் வார்த்தைகள் அவள் மனதில் ரீங்காரமிட்டன.
*நீ உயிரோட இருக்குறது எனக்காகத் தான்...*
நம்பமுடியாத புன்னகையுடன், கடலைப் பார்த்துக்கொண்டு நின்ற சித்தார்த்தை பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top