22 சந்தோஷ வானில்
22 சந்தோஷ வானில்
காலம் கழித்து உறங்கியதால், விடிந்தும் தூக்கம் கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தாள் ஹரிணி. அவளது கன்னத்தில் ஏதோ குத்துவது போலவும், அவளது உடலை ஏதோ அழுத்திக் கொண்டு இருப்பதைப் போலவும் இருந்தது அவளுக்கு. மெல்ல கண்களை திறந்தாள் ஹரிணி. அவளது தூக்கம் கலையாத கண்கள், அகலமாய் விரிந்தன, அவளுக்கு வெகு அருகில் சித்தார்த்தை பார்த்த பொழுது. மனம் ஒத்த தம்பதிகளை போல், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு இருந்தார்கள். அவள் கன்னத்தை குத்தியது, லேசாய் வளர்ந்தந்திருந்த அவனுடைய தாடி தான். பதட்டத்தில் அவளது இதயம் தாறுமாறாய் துடித்தது. சித்தார்த் அவளை அணைத்துக் கொண்டிருப்பதை பார்த்து வெடவெடத்து போனாள். அவன் கரத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் வெளி வர முயன்றால், அவன் தூக்கம் கலையும். இருவருமே சங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.
ஷிவானியின் காதல் கதை தெரிந்த பிறகு, ஹரிணிக்கு இருந்த உறுத்தல் சுத்தமாய் உடைக்கப்பட்டிருந்தது. ஷிவானி ஒருபோதும் சித்தார்த்தை விரும்பவே இல்லை என்ற உண்மை, அவள் மனதுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் அளித்தது. சித்தார்த் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாட எண்ணியது அவளது மனம். சித்தார்த் சிவானியை விரும்பினால் என்ன? ஷிவானி ஒருபொழுதும் அவனை விரும்ப வில்லையே. சித்தார்த்தை முழுமையாய் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் ஹரிணி. அவனை தன் வழிக்கு கொண்டு வருவது தான் அப்போது அவள் மனதில் இருந்த ஒரே எண்ணம். தற்போது தங்கள் இருக்கும் நிலையைப் பார்த்து அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். அதனால் வேண்டுமென்றே இருமினாள், சித்தார்த் தூக்கம் கலைந்து எழுவான் என்று எதிர்பார்த்து. ஆனால் அவனோ, அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, தன் காலை அவள் மீது போட்டுக்கொண்டான். ஹரிணிக்கு தன் உடல் முழுவதும் நண்டு ஊர்வது போல் இருந்தது. தாங்கமாட்டாமல் அவனது தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அது அவனது உறக்கத்தை கலைத்தது. கண்களை திறந்தவன், ஹரிணி தூக்கத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதை கவனித்தான். மெல்ல அவள் கன்னத்தை தட்டினான்.
"ஹரிணி, என்ன ஆச்சு?"
அவள் கண்களைத் திறக்கவும் இல்லை, பதில் கூறவும் இல்லை. என்னவென்று புரியாததால், அவள் கை, கால்களை தேய்த்துவிட தொடங்கினான். அது அவளை மேலும் திக்குமுக்காடச் செய்தது. அவள் தோள்களை பிடித்து தூக்கி அமர வைத்து, அவளது தோள்களைப் பற்றி உலுக்கினான்.
"ஹரிணி..."
அவனைப் பார்க்கும் தைரியம் இல்லாத ஹரிணி, கண்களை திறக்கவில்லை. அவள் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம், அவளை அணைத்துக் கொண்டு முதுகை தடவிக்கொடுத்தான்.
"ஹரிணி எழுந்திரு..." என்றான் படபடப்புடன்.
அதற்கு மேல் ஹரிணியால் திடமுடன் இருக்க முடியவில்லை. அவன் இடையை சுற்றி வளைத்து நெஞ்சில் முகம் புதைத்தாள்.
"என்ன ஆச்சு, செல்லம்?"
அவன், அவளை *செல்லம்* என்றழைத்ததை கேட்டு, மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள், அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல்.
"ஏதாவது கெட்ட கனவு கண்டியா?"
அதைக் கேட்ட ஹரிணிக்கு *அப்பாடா* என்று இருந்தது. சித்தார்த்தே அவளுக்கு ஒரு சாக்கை கண்டுபிடித்து கொடுத்து விட்டானே... உடனே ஆமாம் என்று தலையசைத்தாள்.
"ஒன்னும் இல்ல... நான் இருக்கேன். பயப்படாத..."
சரி என்று தலையசைத்தாள். அவனிடமிருந்து விலக வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. சித்தார்த்தும் விலகிச் செல்லாமல் மெல்ல அவள் தலையை வருடி கொடுத்தான். அது அவளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
"ஹரிணி.. "
அவளை தன்னிடமிருந்து பின்னோக்கி இழுத்தான்.
"என்ன விஷயம், ஹரிணி?"
அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த விழித்தாள் ஹரிணி.
"பாரு, நீ கண் விழிச்சிட்ட... ஒன்னும் பயம் இல்ல. புரிஞ்சுதா?"
சரி என்று தலையசைத்தாள்.
"போய் குளிச்சிட்டு ரெடியாகு. நம்ம கல்யாணத்தை அட்டென்ட் பண்ணணும்"
அப்பொழுது தான், தான் இருக்கும் இடம் எது என்பதை உணர்ந்தாள் ஹரிணி. கட்டிலை விட்டு கீழே இறங்கி குளியலறை நோக்கி விரைந்தாள். அவளது விசித்திரமான செய்கையை எண்ணி முகம் சுருக்கினான் சித்தார்த்.
அதன் பிறகு சித்தார்த்திடம் எந்த ஆர்வமும் காட்டவில்லை ஹரிணி. அது ஆர்வம் இல்லை என்பதற்காக அல்ல. அவள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக. ஆனால், சித்தார்த்த அதற்கு முற்றிலும் மாறுபட்டு நடந்து கொண்டிருந்தான். அவனுடைய முழு கவனமும் ஹரிணியின் மீதே இருந்தது. அது அவளை மேலும் பதட்டம் அடைய செய்தது. அப்படி பயந்து நடுங்கும் அளவிற்கு என்ன கெட்ட கனவு கண்டிருப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன்.
திருமண நாளன்று ஷீலாவின் அருகில் கூட செல்ல முடியவில்லை ஹரிணியால். எப்பொழுதும் அவளை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவளுக்கு ஹரிணியின் வருகை நினைவிலேயே இல்லை என்று கூட சொல்லலாம். திருமணம் முடிந்த பிறகு தான் அவள் ஹரிணியை கவனித்தாள். அவளை காக்க வைத்ததற்காக வருத்தப்பட்டாள். அவளைத் தன்னிடம் வருமாறு அழைக்க, அவளிடம் வந்தாள் ஹரிணி.
"சாரி ஹரிணி. உன்கிட்ட பேச என்னால நேரம் ஒதுக்கி கொடுக்க முடியல"
"சிம்ரன், இல்ல பமீலாவை நான் பார்க்க முடியுமா?"
"பமீலா ஃபாரின்ல வேலை கிடைச்சு போன மாசம் தான் போனா. சிம்ரன் *டார்கெட்* பேசிஸ்ல வேலை செஞ்சுகிட்டு இருக்கா. அவளுக்கு சுத்தமா நேரமே இல்ல. அதனால தான் என் கல்யாணத்துக்கு கூட அவளால வர முடியல."
ஏமாற்றமாய் போனது ஹரிணிக்கு.
"எனக்கு உன்னுடைய நம்பரை கொடு. எனக்கு டைம் கிடைக்கும் போது நிச்சயம் நான் உனக்கு ஃபோன் பண்றேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு தன்னுடைய கைப்பேசியில் இருந்து அவளுடைய கைப்பேசிக்கு டயல் செய்தாள்.
"என்னுடைய நம்பரை சேவ் பண்ணிக்கோ"
"சரி... தேங்க்யூ"
"என்னை தப்பா நினைச்சுக்காத ஹரிணி. என்னை பார்க்க நீ டெல்லியிலிருந்து வந்திருக்க. என்னால உனக்கு வேண்டிய விஷயத்தை சொல்ல முடியல"
"பரவாயில்லை ஷீலா. ஆனா டைம் கிடைக்கும் போது நிச்சயம் எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் உங்க ஃபோனுக்காக்க காத்திருப்பேன்"
"இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் ஃபோன் பண்றேன்."
"சரி நான் கிளம்பறேன்"
"சரி"
தங்களின் அறைக்கு வந்து, பேக்கிங் செய்ய தொடங்கினாள் ஹரிணி. அவள் சோர்வாக இருப்பதை உணர்ந்தான் சித்தார்த்.
"ஹரிணி, ஏன் என்னவோ மாதிரி இருக்க?"
ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
"நானும் உன்னை காலையிலிருந்து கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்... என்ன விஷயம்?"
அவளுக்கு நன்றாகவே தெரியும், சித்தார்த் அங்கு சுற்றி, இங்கு சுற்றி அவள் கண்ட கெட்ட கனவை பற்றி விசாரிப்பான் என்று. அவன் அவளை அணைத்ததால் ஏற்பட்ட *கலவரம்* தான் அது என்ற உண்மையை அவள் அவனிடம் எப்படி கூறுவாள்?
"அப்படி என்ன கனவு கண்ட, இந்த அளவுக்கு நீ டிஸ்டர்பா இருக்க?"
இதோ... வந்தாகிவிட்டது. அவள் எதிர்பார்த்தபடியே அவன் அந்த கனவில் தான் வந்து நின்றான். இதை எப்படி சமாளிப்பது என்று துரிதமாய் யோசித்தாள் ஹரிணி. இதை வேறு விதமாக தான் கையாள வேண்டும். வேறு ஏதாவது சொல்லி அவனை வாயை அடைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் ஹரிணி.
"உனக்கு என்கிட்ட சொல்லணும்னு விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம்"
"இல்ல. அப்படி ஒன்னும் இல்ல..."
"வேற என்ன?"
"தயவு செய்து அதை பத்தி மட்டும் கேட்காதீங்க" என்றாள் பதற்றத்துடன்.
"எதுக்காக இவ்வளவு டென்ஷன் ஆகுற?"
"நீங்க அந்தக் கனவை மட்டும் மறுபடி ஞாபகப் படுத்தாதீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு"
அப்படி என்ன கனவு அது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், சித்தார்த்தின் மனதில், முன்பைவிட அதிகரித்தது.
"நீ என்ன கனவு கண்ட சொல்லு"
"ப்ளீஸ், அதை விடுங்களேன்..."
அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பினான்.
"இங்க பாரு ஹரிணி, என்னோட பொறுமையை சோதிக்காதே. என்ன கனவுன்னு சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ சொன்னா தானே நான் ஏதாவது செய்ய முடியும்?"
"அது வந்து..."
*சொல்லு* என்பது போல் தலையசைத்தான்.
"நான்... என் கனவுல... உங்களை தான் பார்த்தேன்... ( முகத்தை சுருக்கினான் சித்தார்த் ) டிரஸ் இல்லாம..."
சித்தார்த்தின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே...! அவளைப் பிடித்திருந்த பிடி தளர்ந்தது. தனது கட்டை விரலால் நெற்றியை தடவினான். சிரிப்பை அடக்கியபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. தன் புருவத்தை உயர்த்தியபடி, வேறு எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் சித்தார்த் என்ன செய்வதென்று புரியாமல்.
தனது பையை எடுத்துக்கொண்டு, வெளியேறினாள் ஹரிணி, குறும்புப் புன்னகை பூத்தபடி. அமைதியாய் அவளை பின் தொடர்ந்து வந்தான் சித்தார்த். தூக்கத்தில் ஹரிணி எவ்வளவு நடுங்கினாள் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். அவனுக்கு வாய் விட்டு சிரிக்க வேண்டுமென்று தோன்றியது. திருமண மண்டபத்திற்கு வெளியே தனது பையுடன் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளருகே வந்த சித்தார்த், அவள் காதருகே குனிந்து,
"நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருந்தேன்?" என்றான்.
அதைக் கேட்டு திடுக்கிட்டாள் ஹரிணி. அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை, அவளுக்கு மயிர்க்கூச்செரிந்தது. அவனுக்கு எதிர்ப்புறம் முகத்தை திருப்பிக் கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். சுவற்றில் அடித்த பந்து திரும்பி வருவது என்றால் இப்படித் தானோ?
"நான் உன்கிட்ட என்னமோ கேட்டேன்" என்றான் இரகசியமாக.
தன்னை சுதாகரித்துக் கொண்ட ஹரிணி, அவளை நோக்கி திரும்பி, தன் உதட்டைக் கடித்தபடி, பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு *ஆமாம்* என்று தலையசைத்தாள்.
கல கலவென சிரித்த சித்தார்த், செல்லமாய் அவள் மூக்கை கிள்ளினான். அவளும் அவனுடன் சேர்ந்து சிரிக்க, தங்களை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்தார்கள் அவர்கள். டாக்ஸி வந்து நிற்க, தங்கள் நிலை உணர்ந்து, அதில் ஏறி அமர்ந்தார்கள். அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருந்தது கொலாபா. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி கொலாபா வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.
மும்பையின் மிகப் பெரிய பாரம்பரிய அடையாளமான தாஜ் ஹோட்டலுக்கு முன்னால் வந்து நின்றது அவர்களது கார். வரவேற்பில் தங்கள் அறையின் சாவியை பெற்றுகொண்டு ஹரிணியுடன் அந்த அறைக்கு வந்து சேர்ந்தான் சித்தார்த். அந்த அறையின் பிரம்மாண்டமான அமைப்பு ஹரிணியின் மனதை கொள்ளை கொண்டது.
அவளுடைய கண்களை பின்னாலிருந்து பொத்தினான் சித்தார்த். அவள் எதுவும் கூறும் முன்,
"ஷ்ஷ்ஷ்... நட..." என்றான்.
ஜன்னல் அருகில் அவளை அழைத்து வந்து, தன் கைகளை நீக்கினான். அரபிக் கடலின் அற்புதக் காட்சி அவள் கண் முன் விரிந்தது. அதன் கரையில் இருந்தது *கேட் வே ஆஃப் இந்தியா*
ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றாள் ஹரிணி. இதுவரை தான் பார்த்தேயிராத *கடலுக்கு* இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.
"வாவ்... எவ்வளவு அழகா இருக்கு..."
சித்தார்த்தை நோக்கி திரும்பி,
"நம்ம பீச்சுக்கு போகலாமா?" என்றாள்.
"சாயங்காலம் போகலாம். இப்போ நம்ம போட்டிங் போக போறோம்"
"கடல்ல போகப் போகிறோமா?" என்றாள் குதூகலமாக.
"ஆமாம். பக்கத்துல *எலெஃபன்ட்டா கேவ்ஸ்* அப்படிங்கிற ஒரு சின்ன தீவு இருக்கு. நம்ம அங்க தான் போக போறோம்"
"ஐய்யா... ஜாலி... தேங்க்யூ சோ மச்"
"ஏதாவது லைட்டான டிரஸை போட்டுக்கோ"
"ஓகே"
அரை மணி நேரத்தில், கேட் வே ஆஃப் இந்தியாவின் அருகிலிருந்த, ஜெட்டியை அவர்கள் வந்தடைந்தார்கள். அங்கு அவர்களுக்காக ஒரு படகு காத்திருந்தது. அவர்கள் ஏரி கொண்டவுடன் படகு புறப்பட்டது.
"அங்க நிறைய பேர் போட்டுக்காக காத்திருக்காங்க. ஆனா இவர் போட்டை ஸ்டார்ட் பண்ணிட்டாரே" என்றாள் ஹரிணி.
"ஆமாம். நான் இந்த போட்டை நமக்காக புக் பண்ணியிருக்கேன்"
"நமக்காக மட்டுமா?"
"ஆமாம்"
"ஏன்? "
"எனக்கு கூட்டம் பிடிக்காது"
"முசுடு மாமா" என்று முணுமுணுத்தாள்.
"நீ ஏதாவது சொன்னியா?"
"நீங்க ரொம்ப நல்ல்ல்ல்லவர்ன்னு சொன்னேன்" என்றாள் கிண்டலாக.
நமுட்டு சிரிப்பு சிரித்தான் சித்தார்த்.
அது 100 பேர் வரை அமரக்கூடிய ஒரு படகு. ஆனால் ஹரிணிக்கு அதில் அமர விருப்பமில்லை. விருப்பம் இல்லை என்பதைவிட, அவளால் அமர முடியவில்லை. இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தாள். எதிர்காற்றில் அவள்,
"ஆஅஅஅஅ..." என்று கத்திய போது, பார்த்துக்கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தான் சித்தார்த்.
அடுத்த அரை மணி நேரத்தில், மும்பைக்கு வெகு அருகில் இருந்த அந்த சிறிய தீவில் வந்து இறங்கினார்கள் அவர்கள். தனது கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினாள் ஹரிணி சந்தோஷமாக.
"தனியா உள்ள போகாத, ஹரிணி" பின்னால் இருந்து கத்தினாள் சித்தார்த்.
ஆர்வமாய் இருந்த ஹரிணி, அவன் கூறியதை கேட்டு நிற்கவில்லை. சித்தார்த் ஏன் அப்படி கூறினான் என்று அவளுக்கு புரிந்து போனது, அங்கிருந்த ஏராளமான குரங்குகளை பார்த்த போது. அவள் கையிலிருந்த தின்பண்டங்களுக்காக குரங்குகள் அவளை நோக்கி வந்தன. மீண்டும் தங்களது படகை நோக்கி ஓடத் துவங்கினாள் ஹரிணி. கையில் நீளமான பிரம்புகளுடன் அவளை நோக்கி வந்தான் சித்தார்த். அவனைக் கட்டிக்கொண்டு,
"குரங்கு...குரங்கு..." என்று கத்தினாள் ஹரிணி.
"அதுங்க போயிடுச்சு"
பின்னால் திரும்பி பார்த்து, பெருமூச்சு விட்டாள்.
"அதுங்க போயிடுச்சு" என்று பைத்தியக்காரி போல் சிரித்தாள்.
"ஆமாம்" என்றான் புன்னகையுடன்.
அப்பொழுது தான், தான் அவனை கட்டிக் கொண்டு நிற்பதை கவனித்தாள் ஹரிணி. அவனை விட்டு இரண்டடி பின்னால் எம்பி குதித்தாள். அவளிடம் ஒரு பிரம்பை கொடுத்தான் சித்தார்த்.
"இதை கையில வச்சுக்கோ. இங்க குரங்குகள் தொல்லை ரொம்ப அதிகம். பிரம்பு இல்லாம உள்ள போகாத"
சித்தார்த் சிரித்துக் கொண்டே இருப்பதை கவனித்தாள் ஹரிணி.
"சும்மா சிரிக்காதீங்க. குரங்குங்க உங்களை துரத்தியிருந்தா நீங்களும் தான் பயந்திருப்பீங்க"
"நான் அதுக்காக சிரிக்கல"
"வேற எதுக்கு சிரிச்சிங்க?" என்றாள் பாட்டிலில் இருந்த தண்ணீரை பருகியபடி.
"நீ கண்ட கனவை விட இந்த குரங்குங்க உனக்கு அதிக பயத்தைத் தந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்"
குடித்த தண்ணீரை அப்படியே துப்பினாள் ஹரிணி, சிரிப்பை அடக்க முடியாமல்.
"பார்த்து..."
அவனைப் பார்த்து மேலும் சிரித்தாள் ஹரிணி. சிரித்தபடி நடந்தார்கள் இருவரும்.
அந்த சிறு தீவு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மும்பையின் நெருக்கடியான கூச்சலுக்கு அப்பாற்பட்டு, வெகு அமைதியாய் இருந்தது அந்த இடம். பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள் மனதைக் கவர்ந்தன. குறிப்பாய், ராவணன் கைலாச மலையை தூக்கிக் கொண்டு இருப்பது போன்ற சிற்பம் வெகு நேர்த்தியாக இருந்தது. அங்கு செலவிட்ட நேரம் உபயோகமாய் தெரிந்தது. அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கியபின் மேலும் சிறிது நேரம் சுற்றி திரிந்தார்கள்.
தன் கையை சித்தார்த்தை நோக்கி நீட்டினாள் ஹரிணி. தன் புருவத்தை உயர்த்தியபடி, அவள் கரத்தை பற்றினான் சித்தார்த்.
"இந்த ட்ரிப்காக உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"உனக்கு பிடிச்சிருந்ததா?"
"ரொம்ப... இப்படி ஒரு சர்ப்ரைஸை நான் எதிர்பார்க்கல"
"போகலாமா?"
"இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே"
"இப்ப கிளம்பினா தான் நமக்கு சரியா இருக்கும். நம்ம சீக்கிரம் மும்பை போனா தான், *மெரைன் டிரைவ்* போக முடியும்"
"மெரைன் டிரைவ்வா? அப்படின்னா வாங்க சீக்கிரம் போகலாம்"
இந்தமுறை, அவசரப்படாமல் சித்தார்த்துடன் நடந்தாள் குரங்குகளுக்கு பயந்து.
ஒரு மணி நேரத்தில் தங்கள் அறைக்கு திரும்பினார்கள்.
"உனக்கு டயர்டா இருந்தா கொஞ்ச நேரம் தூங்கு"
"வேண்டாம். தூங்கினா என்னால எழுந்துக்க முடியாது"
குளியலறைக்குச் சென்று சில நிமிடங்களில் தயாராகி வந்தாள் ஹரிணி. அவளது பொறுமையை சோதிக்காமல் சித்தார்த்தும் விரைவாய் கிளம்பினான்.
ஒரு டாக்சி பிடித்துக்கொண்டு, அவர்கள் மெரைன் டிரைவ் வந்து இறங்கிய போது, லேசாய் இருட்டத் தொடங்கி விட்டிருந்தது.
"நம்ம கொஞ்ச நேரம் நடக்கலாமா?" என்றாள் ஹரிணி.
"ஓ..."
அரபிக்கடலின் காற்றை உள் வாங்கியபடி அவர்கள் உல்லாசமாய் நடக்கத் துவங்கினார்கள். எதிர்ப் புறத்தில் இருந்த பேல்பூரி கடை அவள் கண்ணில் பட்டது. சித்தார்த்தின் தோளை சுரண்டி, அந்த கடையை நோக்கி கை நீட்டினாள் ஹரிணி.
"சரி இரு" என்று சிரித்தபடி அந்த கடைக்கு சென்றான் சித்தார்த்.
சித்தார்த் தன்னிடம் வெகு இயல்பாய் பழகியது ஹரிணிக்கு சந்தோஷத்தை அளித்தது. தன் வாழ்நாளில், இவ்வளவு சீக்கிரம், இப்படிப்பட்ட சந்தோஷமான நாட்களை சந்திப்போம் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
அப்போது, அவளை கடந்து சென்ற காரில் இருந்த ஒரு பெண்ணை பார்த்த போது, அவள் முகம் மாறியது. அவள் ஷிவானியின் தோழி சிம்ரன். ஹரிணி, பேல் பூரியை மறந்தாள்... மெரைன் டிரைவ்வை மறந்தாள்... சித்தார்த்தை மறந்தாள்... தன்னையே மறந்தாள்.
"சிம்ரன்..." என்று அழைத்தபடி அந்த காருக்கு பின்னால் ஓடத் துவங்கினாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top