21 ஷிவானியின் காதல்

21ஷிவானியின் காதல்

ஷீலாவின் கேள்வியை கேட்டு திடுக்கிட்டாள் ஹரிணி. அவளது கண்களில் கண்ணீர் ததும்பியது.

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

அப்பொழுது தான், தான் உண்மையை உளறிக்கொட்டி, தவறு செய்து விட்டதை உணர்ந்தாள் ஷீலா.

"தயவு செய்து சொல்லுங்க, ஷீலா. நீங்க சொன்னது சரி தான். அவ தற்கொலை தான் பண்ணிக்கிட்டா. என் ஒருத்தியைத் தவிர, எல்லாரும் அதை ஆக்சிடெண்ட்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இதைப் பத்தி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு பைத்தியம் பிடிக்குது. அந்த உண்மையை தெரிஞ்சுக்கத் தான் நான் மும்பை வந்தேன். தயவு செய்து என்னை ஏமாத்திடாதிங்க. ப்ளீஸ் உண்மையை சொல்லுங்க, ஷீலா..."

அவளது நிலையை பார்த்து உருகிப் போனாள் ஷீலா.

"இப்படித் தான் நடக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியும். அவளால நிச்சயம் விகாஸை மறக்கவே முடியாது... அவருடைய இடத்தை அவளால வேற யாருக்கும் கொடுக்கவும் முடியாது..."

"விகாஸா?"

"ஆமாம். அவங்க ரெண்டு பேரும் உயிருக்குயிரா காதலிச்சாங்க"

ஷீலா கூறுயதை ஹரிணியால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"ஷிவானி காதலிச்சாளா? ஆனா, இதைப் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாதே..."

"அவ படிப்பை முடிக்கிற வரைக்கும், உங்க அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்னு அவ நினைச்சா. அவருக்கு தெரிஞ்சிட்டா, அவளை மும்பைக்கு படிக்க அனுப்ப மாட்டார்னு அவ பயந்தா"

"என்கிட்ட கூட சொல்லணும்னு அவளுக்கு தோணவே இல்லையா? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்னு உங்களுக்கு தெரியும் தானே?" என்றாள் ஹரிணி வேதனையுடன்.

"உன்கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சா. ஆனா, நீ அவளை கிண்டல் பண்றேன்னு எதையாவது சொல்லி, அது உங்க அப்பா, அம்மா காதுல விழுந்துட்டா என்ன பண்றதுன்னு அவளுக்கு பயம்."

வெறுத்துப் போனது ஹரிணிக்கு. தனக்கு எல்லாமும் என்று நினைத்திருந்த தனது சகோதரிக்கு, தான் அறியாத வேறொரு வாழ்க்கை இருந்தது என்பதை அவளால் தாங்க முடியவில்லை.

"அவங்க எவ்வளவு நாள் காதலிச்சாங்க?"

"மூணு வருஷம். ஷிவானி, மும்பையில மாஸ்டர்ஸ் சேர்ந்ததே விகாஸுக்காக தான். நாள் ஆக ஆக, அவங்களுடைய காதல், ரொம்ப டீப்பாகிட்டே இருந்தது. காலேஜ் இல்லாத எல்லா நேரமும், அவருடைய கிளினிக்கில் தான் அவ இருப்பா"

"கிளினிக்கா?"

"ஆமாம். அவர் ஒரு டாக்டர். தினமும் அவருடைய கிளினிக்குக்கு போயிடுவா. அவ அவர்கிட்ட வேலை செய்கிறதா எல்லாரும் நினைச்சாங்க. அது அவங்களுக்கு ரொம்ப வசதியா போயிடுச்சு. யாருக்கும் அவங்க மேல சந்தேகம் வரல. பாவம், அவ நினைச்ச வாழ்க்கையை வாழ, அவளுக்கு கொடுத்து வைக்கல"

"ஆனா ஏன்? எதுக்காக அவங்க பிரிஞ்சாங்க?"

"எல்லாம் விதி... வேற என்ன சொல்றது? சமீபத்துல கூட, அவளை பத்தி என்கிட்ட விசாரிக்க விகாஸ் வந்தார். ஆனா, அவளுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை நான் அவர்கிட்ட சொல்லல. அவர் மேல எந்த தப்பும் இல்லனாலும், அவர்கிட்ட பேச எனக்கு பிடிக்கல."

"என்ன தான் நடந்துச்சு? ஏன் அவருடைய ரிலேஷன்ஷிப்பை அவ பிரேக்கப் பண்ணா?"

"வழக்கம் போல, அவரைப் பார்க்க சிவானி அவருடைய கிளினிக்குக்கு போனா... ஆனா அங்க அவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது"

"என்ன அதிர்ச்சி?"

"அன்னைக்கு அவ அங்க பாத்தது வேற ஒருத்தரை... அது தான் அவளுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடிச்சு..." என்று மேலே கூற போனவளை ஒரு குரல் தடுத்தது.

"இங்க நின்னு என்னடி பேசிக்கிட்டு இருக்க? எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க. ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. சீக்கிரம் வா..."

நடுத்தர வயது பெண்மணி ஒருவர் ஷீலாவின் கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றார்.

"நீ இங்க தானே இருப்ப? நான் நம்ம அப்புறம் பேசலாம்..." என்று கூறியபடி அவருடன் நடந்தாள் ஷீலா.

வேறு வழியில்லாமல் தலையசைத்தாள் ஹரிணி. அங்கு வேறொரு பெண்மணியை பார்த்த ஷீலா,

"ஒரு நிமிஷம் அத்தை" என்றாள்.

ஹரிணியை பார்த்து கையசைத்து,

"இங்க வா" என்றாள்.

அவளருகே ஓடிச் சென்றாள் ஹரிணி.

"இவ என்னோட ஃபிரண்ட் ஹரிணி. டெல்லியிலிருந்து வந்திருக்கா. அவளுக்கு ஒரு ரூம் அரேஞ்ச் பண்ணி கொடுங்க" என்றாள் ஷீலா

"நான் பார்த்துகிறேன், நீ போ" என்றார் அந்த பெண்மணி.

"தப்பா நினைச்சுக்காத ஹரிணி. நம்ம அப்புறம் பேசலாம்"

சரி என்று தலை அசைத்தாள் ஹரிணி.

"நீ தனியா வந்திருக்கியா மா?" என்றார் ஷீலாவின் அத்தை.

"இல்ல... என்னோட ஹஸ்பண்ட்டும் வந்திருக்கார்" என்று ஜன்னலோரம் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்தை,

"என்னங்க" என்றழைத்தாள்.

தங்களது பைகளுடன் அவர்களுக்கு அருகில் வந்தான் சித்தார்த்.

"இருந்த பெரிய ரூமை எல்லாம் ஃபேமிலியோட வந்த கெஸ்ட்டுங்க ஏற்கனவே ஆக்குபை பண்ணிட்டாங்க. ஒரு சின்ன ரூம் தான் இருக்கு. அதுவும் சிங்கிள் பெட். நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீர்களா?"

தயக்கத்துடன் சித்தார்த்தை பார்த்தாள் ஹரிணி. சித்தார்த் வசதியாய் இருந்து பழகியவன் ஆயிற்றே...!

"பக்கத்துல ஏதாவது ஹோட்டல் இருக்கா ஆன்ட்டி?" என்றாள் ஹரிணி.

"பக்கத்துல ஹோட்டல் எதுவும் இல்ல. இங்கிருந்து அரை மணி நேர தூரத்துல இருக்கு. ஆனா இது ஏசி ஹால். அந்த ரூம் உங்களுக்கு போதுமே..."

"ஆனா, நீங்க அதுல சிங்கிள் பெட் தான் இருக்குன்னு சொன்னீங்களே..."

"அதனால என்ன? நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தானே? உங்களால ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா?" என்றார் கண்களை சுருக்கி.

நகத்தைக் கடித்தபடி திருதிருவென விழித்தாள் ஹரிணி. உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட சித்தார்த்,

"நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குறோம்" என்றான்.

அது ஹரிணிக்கு ஆச்சரியத்தை தந்தது என்பதில் சந்தேகமில்லை.

சரி என்று தலையசைத்த அந்தப் பெண்மணி, அவர்களை அந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அது வெகு சிறிய அறை தான். கட்டிலுக்கு பக்கத்தில் ஒருவர் நிற்கும் அளவிற்கு தான் இடம் இருந்தது.

"நீ இங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. நான் வாஷ் ரூம்ல பண்ணிக்கிறேன்" என்று தனது உடைகளுடன் குளியலறைக்குச் சென்றான் சித்தார்த்.

ஷிவானியை பற்றி நினைத்தபடி உடைமாற்ற துவங்கினாள் ஹரிணி. இவ்வளவு பெரிய உண்மையை ஷிவானி தன்னிடம் மறைத்து விட்டாள் என்பதை ஹரிணியால் நம்பவே முடியவில்லை. விகாஸ்ஸை பற்றி அவள் தன்னிடம் ஜாடைமாடையாக கூட ஒருமுறை கூட பேசியதில்லை. மூன்று வருடங்களாக அவனுடன் காதலில் இருந்திருக்கிறாள். தினமும் அவனை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்து இருக்கிறாள். ஆனால் அதைப் பற்றி அவள் குடும்பத்தாருக்கு ஒன்றுமே தெரியாது.

அவளுக்கு திருமண ஏற்பாடு செய்த போது, ஏன் அவள் மறுத்து பேசவே இல்லை? அவள் முன்பு போல் கலகலப்பாக இருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள உடனடியாக ஒப்புக் கொண்டுவிட்டாளே...! குடும்பத்தை விட்டு பிரியப் போவதை எண்ணி கவலையாக இருப்பதாக காரணம் சொன்னாளே...!

அவள் மீது சிறு சந்தேகம் கூட ஹரிணிக்கு ஏற்பட்டதே இல்லை. ஏனென்றால், ஷிவானி தன்னிடம் எதையும் மறைக்க மாட்டாள் என்று அவள் ஆணித்தரமாய் நம்பினாள். அதை அவள் தன்னிடமிருந்து மறைத்திருக்கக் கூடாது. ஒருவேளை அவள் கூறியிருந்தாள், அவள் விகாஸையே திருமணம் செய்துகொண்டு இருந்திருக்க முடியும். எல்லாமே மாறிப் போயிருக்கும். ஹரிணி சித்தார்த்தை சந்திக்காமலேயே போயிருப்பாள். வலி நிறைந்த புன்னகை சிந்தினாள் ஹரிணி. ஷீலா கூறியது சரி தான். இதை விதி என்று தானே கூற முடியும்? ஏன் இப்படி நடக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

உண்மை தான். சித்தார்த்துக்கு ஹரிணி தான் வாழ்க்கைத்துணை என்பது விதி. திருமணம் என்னும் நேர்கோட்டில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்த பயன்பட்ட கருவி தான் ஷிவானி. வேறொன்றும் கூறுவதற்கில்லை.

குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்தான் சித்தார்த். வெளியே வந்தவன் தன்னை மறந்து அப்படியே நின்றான். அழகான டிசைனர் புடவையில், அதற்கு ஏற்ற நகைகள் அணிந்து, கூந்தலை பின்னாமல் விட்டு, அசத்தலாய் இருந்தாள் ஹரிணி. அவனை பார்த்து அவள் வெகுளியாய் புன்னகைக்க, உறைந்து நின்ற அவனது பார்வை, அவளை சிலிர்க்க செய்தது. தன் பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு,

"நீங்களும் என் கூட வரிங்க இல்ல?" என்றாள்.

"ஆங்... நான் இங்க என்ன செய்யப் போறேன்?" என்றான் சித்தார்த்.

இருவரும் திருமண கூடத்திற்கு வந்தார்கள். மேடைக்கு சற்று தூரத்தில் அமர்ந்து கொண்டார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் தனது மனதை செலுத்த நினைத்த ஹரிணியால் அது முடியவில்லை. அவளது மனம் சதா ஷிவானியை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

எல்லோருக்கும் காஃபி கொடுத்துக் கொண்டிருந்தவர் அவர்களிடம் வந்தார். ஹரிணி வேண்டாம் என்று மறுப்பதற்கு முன், அதிலிருந்து ஒரு டம்ளரை எடுத்து அவளிடம் நீட்டினான் சித்தார்த். அவன் செய்வதெல்லாம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"எடுத்துக்கோ. நீ ஃபிளைட்ல கூட எதுவுமே சாப்பிடல" என்றான்.

அவன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அவள் சான்ட்விச் சாப்பிட்டது அவனுக்கு தெரியாது.

"நீங்களும் எதுவும் சாப்பிடலயே" என்றாள் அசடு வழிந்தபடி.

"ம்ம்ம் "

"உங்களுக்கு பசிக்குதா?"

ஆமாம் என்பது போல தலையசைத்தான்.

"நீங்க ஆஃபீஸ்ல எதுவும் சாப்பிடலையா?"

"இல்ல" என்றான்.

"ஏன் சாப்பிடல?"

"நிறைய வேலை இருந்தது. சாப்பிட நேரம் கிடைக்கல"

"நீங்களும், உங்க வேலையும்..."

லேசாய் புன்னகைத்தான் சித்தார்த்.

"வாங்க போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம் "

"இன்னும் கொஞ்ச நேரம் தானே, அதுக்கு அப்புறம் சாப்பிடலாம்."

"சொல்றதைக் கேளுங்க"

"ஐ கேன் மேனேஜ்..."

"நெஜமா தான் சொல்றீங்களா?"

"ஆமாம்"

அப்பொழுது, வேறொருவர் குளிரூட்டப்பட்ட பாதாம் பாலை அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரை அழைத்து அதிலிருந்து ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டாள் ஹரிணி.

"காபியையும், பாதாம் பாலையும் சேர்த்து சாப்பிட போறியா?"

"இது உங்களுக்கு தான். நீங்க இதை சாப்பிடலாம். நீங்க காலையில இருந்து எதுவும் சாப்பிடல. அதனால உங்க சுகர் லெவல் ஒன்னும் ஏறிடாது"

"நான் ஒண்ணுமே சொல்லலையே..."

அதை அவளிடமிருந்து பெற்று, பருகினான்.

"ம்ம்ம்... ரொம்ப நல்லா இருக்கு"

"நெஜமாவா?"

"அந்த காஃபியை வச்சிட்டு நீயும் இதை குடி. உன்னோட காஃபி இந்நேரம் ஆறிப் போயிருக்கும்"

ஆமாம் என்று தலையசைத்தாள். எழுந்து சென்று அவளுக்கும் ஒரு தம்ளர் பாதாம் பாலை கொண்டு வந்து கொடுத்தான் சித்தார்த்.

"ஆமாம், இது ரொம்ப நல்லாயிருக்கு"

இருவரும் ரசித்து பருகினார்கள்.

ஹரிணிக்கு ஷீலாவுடன் பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. சடங்குகள் முடிந்த பின், விருந்தாளிகளுடனும், அதன் பின் புகைப்படங்கள் எடுக்கவும் பிஸியாகி போனாள் ஷீலா. கல்யாண சாப்பாடு பிரமாதமாக இருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு ஷீலாவுக்காக காத்திருந்தாள் ஹரிணி. மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் புகைப்பட கலைஞர்கள் தங்கள் வேலையை முடிப்பது போல் தெரியவில்லை. திருமணக்கூடம் கிட்டத்தட்ட காலியானது. ஹரிணியுடன் சித்தார்த்தும் காத்திருந்தான். ஹரிணியை பார்த்து சங்கடத்துடன் சிரித்தாள் ஷீலா. அவள் ஏன் காத்திருக்கிறாள் என்று ஷீலாவுக்கு தெரியும். ஆனால் ஹரிணிக்கு நேரம் ஒதுக்க அவளால் முடியவில்லை.

"எதுக்காக காத்திருக்க ஹரிணி?" என்றான் சித்தார்த்.

"சும்மா தான்..."

"இன்னும் டைம் ஆகும் போல தெரியுது. அவங்க காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும் இல்லையா, நீ அவங்கள டிஸ்டர்ப் பண்றது சரியா இருக்காது."

அவன் கூறுவதும் தவறல்ல. சரி என்று தலையசைத்த ஹரிணி, அவனுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து உடைகளை மாற்றிக் கொண்டாள்.

இனி தான் விஷயமே...!

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"ஒரு சோஃபா இருந்தா நான் அதுல தூங்கியிருப்பேன்." என்றான் சித்தார்த்.

"ஆனா, இங்க சோஃபா இல்ல..."

"ஆமாம்..."

இல்லாத விஷயத்தை பற்றி விவஸ்தை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

"நம்ம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..." என்றாள் ஹரிணி.

"வேற வழியில்ல"

"நான் லெஃப்ட் சைட்ல படுத்துகிறேன்"

"ரைட் சைடு தான் உனக்கு சேஃபா இருக்கும். லெஃப்ட் சைடு படுத்தா நீ கீழே விழுந்துடுவ"

"ரைட் சைடு படுத்தா, நீங்க கீழே விழுந்துடுவீங்க. நான் உங்களை பிடிச்சி தள்ளிடுவேன்." என்று முணுமுணுத்தாள்.

"என்ன சொல்ற?"

"நான் விழமாட்டேன்னு சொன்னேன்"

"ஆர் யூ ஷ்யூர்?"

"யா..."

கட்டிலில் படுத்துக்கொண்டு இருவரும் வெகு நேரம் தூங்காமல் இருந்தார்கள். ஹரிணி, ஷிவானியை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். சித்தார்த்தோ, ஹரிணி கீழே விழுந்து விடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தான். அவள் கட்டிலின் ஓரத்தில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவாள் போல படுத்துக் கொண்டிருந்தாள்.

முதலில் தூக்கியவள் ஹரிணி தான். சித்தார்த்துக்கு தூக்கம் வரவில்லை. ஏன் என்று கூற வேண்டிய அவசியமும் இல்லை. அவ்வளவு அருகில் ஹரிணி உறங்கிக் கொண்டிருந்தால், அவன் எப்படி உறங்குவதாம்? தூக்கத்தில், தன் கையை, அவன் முகத்தில் தொப்பென்று போட்டாள் ஹரிணி. அவள் கையில் முத்தமிட்ட சித்தார்த், மென்று விழுங்கியபடி அவள் கையை, அவள் வயிற்றின் மீது மெல்ல வைத்தான். போகிற போக்கை பார்த்தால், இன்று அவன் உறங்குவது போல் தெரியவில்லை.

கடைசியில், அவன் பயந்தது போல், ஹரிணி, பிரண்டு கீழே விழப்போனாள். அவள் இடையை தன் கரத்தால் சுற்றிவளைத்து, தன்னிடம் இழுத்து, தனது மேற்கரத்தில் படுக்கவைத்து கொண்டான் சித்தார்த். இப்பொழுது அவளை அணைத்துக் கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இல்லாவிட்டால் அவள் கீழே விழுந்து விடுவாள். அதனால் தான் அவன் அவளை அணைத்துக் கொண்டான் என்று கூறினால், நாம் நம்ப வேண்டும்.

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஹரிணிக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாது, தான் என்ன செய்கிறோம் என்றும் தெரியாது. ஆனால், சித்தார்த்தின் நிலை அதுவல்ல. ஹரிணி கீழே விழுந்து விடுவாள் என்பதை தாண்டி, இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை *தூங்கி* வீணாக்க அவன் விரும்பவில்லை.

காத்திருத்தலின் பலன் எப்பொழுதுமே அலாதியானது. அப்படிப்பட்ட பலன் அவனுக்கும் கிடைத்தது. தூக்கத்தில் அவனை அணைத்துக் கொண்டு, அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள் ஹரிணி. தான் காதலிக்கும் பெண்ணால் அணைத்து கொள்ளப்பட்ட சித்தார்த், சிறகுகள் இல்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தான்... ஹரிணியை அணைத்தபடி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top