20 செஸ் சாம்பியன்
20 செஸ் சாம்பியன்
தேவயானியை தேடிக்கொண்டு வந்தாள் ஹரிணி. அவர் சமையலறையில் இல்லாமல் போகவே, அவரது அறைக்கு வந்தாள். அவர் ஸ்வாமிநாதானுடன் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவரகளுக்கு முன் முழங்காலிட்டு அமர்ந்தாள் ஹரிணி.
"அம்மா, நீங்க செஸ் விளையாடுவீங்களா?" என்றாள்.
"ஓ..."
"என்கிட்ட ஏன் நீங்க முன்னாடியே சொல்லல? நம்ம ரெண்டு பேரும் விளையாடி இருக்கலாமே...?"
"எனக்கு அவ்வளவு ஒன்னும் நல்லா ஆட தெரியாது..."
"சித்துகிட்ட மட்டும் தான் அவ ஜெயிப்பா..." என்று கிண்டலாய் கூறி சிரித்தார் சுவாமிநாதன்.
"அதனால தான் நான் அவன் கூட விளையாடுறது இல்ல"
"ஏன் மா?"
"ஏன்னா, அவன் இவ கூட விளையாடும் போதெல்லாம், தோத்து போயி இவளை ஜெயிக்க வச்சிடுவான்" - சுவாமிநாதன்.
"அப்படியா?"
"ஆனா, அவங்க அப்பாவை மட்டும் அவன் ஜெயிக்க விட்டதேயில்ல" என்று சிரித்தார் தேவயானி.
"நான் ஒத்துக்கிறேன், அவனுக்கு ரொம்ப பிடிச்சவங்கள அவன் வேணுமின்னே தோத்து ஜெயிக்க வைப்பான் தான். அதுக்காக அவனுக்கு என் மேல பாசம் இல்லன்னு அர்த்தமில்ல. ஒரு நாளாவது நான் அவனை ஜெயிப்பேன்னு அவன் நினைச்சிருக்கலாம்" - சுவாமிநாதன்.
"ஆனா, அவன் என்னை ஜெயிக்க வச்சு ரொம்ப பெருமையா உணர வைப்பான்" என்றார் பெருமையாக தேவயானி.
"அவரை ஜெயிக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல. நான் கூட அவரை ஒரு தடவை ஜெயிச்சிருக்கேன்" என்றாள் ஹரிணி.
சுவாமிநாதனும், தேவயானியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அவர்களுடைய சிரிப்புக்கு அர்த்தம் புரியவில்லை ஹரிணிக்கு.
"ஏன் சிரிக்கிறீங்க?"
"உன்கிட்ட கூட அவன் தோத்துப் போனானா?" என்றார் சாமிநாதன்.
"இப்போ என்ன சொல்றீங்க? அவனோட மனசுக்கு பிடிச்சவங்களை அவன் வருத்தப்பட வைக்க மாட்டான்னு நான் தான் சொன்னேனே" என்றார் தேவயானி.
ஆமாம் என்று தலையசைத்தார் சுவாமிநாதன்.
"அவர் வேணும்னே என்கிட்ட தோத்தாருன்னு சொல்றீங்களா?" என்றாள் ஹரிணி.
ஆமாம் என்று தலையசைத்த தேவயானி, சுவாமிநாதனிடம் ஏதோ சமிக்ஞை செய்தார். அவர் அலமாரிக்கு சென்று, அங்கிருந்த சில சான்றிதழ்களை எடுத்து வந்து ஹரிணியிடம் கொடுத்தார். அதை பார்த்த ஹரிணிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவை அனைத்தும், சித்தார்த் வெற்றி பெற்ற செஸ் போட்டியின் சான்றிதழ்கள். அவன் ஒரு மாநில செஸ் சாம்பியன். பல வருடங்களாக அவனுடைய பள்ளிக்காகவும், கல்லூரிக்காகவும் விளையாடி வெற்றி பெற்றிருந்தான். முன்பெப்போதும் இல்லத அளவுக்கு திகைப்படைந்தாள் ஹரிணி. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் தேவயானி.
சித்தார்த் ஒரு செஸ் சாம்பியன். அவர் தேவயானியுடன் ஆடும் போது எப்பொழுதும் தோற்றுப்போய் அவரை சந்தோஷப்பட செய்திருக்கிறான். ஆனால் அதுவே சுவாமிநாதனுடன் ஆடும் போது சரியான ஆட்டம் ஆடி அவரை தோற்கடிப்பதை வாடிக்கையாய் செய்திருக்கிறான். சித்தார்த் தனது தந்தையுடன் ஆடிய ஆட்டத்தை யோசித்து பார்த்தாள் ஹரிணி. சந்தேகமில்லாமல், வெங்கடேசன் ஹரிணியை விட நன்றாகவே ஆடுவார். இதுவரை அவர் ஹரிணியிடம் எப்பொழுதும் தோற்றதே இல்லை. ஆனால் சித்தார்த்திடம் தோற்றார். வெங்கடேசனையே ஜெயிக்கக் கூடிய அளவிற்கு சித்தார்த் திறமைசாலி என்றால், தன்னிடம் மட்டும் எப்படி தோற்றான்? இதற்கு என்ன அர்த்தம்? அவள் சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவன் வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தானா? அவன் தன்னுடன் ஆடிய ஆட்டத்தை யோசித்துப் பார்த்தாள் ஹரிணி. ஆம் ஆரம்பத்தில் அவன் விளையாடியது *ஏ* கிளாஸ் ஆட்டம் தான். அதற்குப் பிறகு தான் அவன் மோசமாய் ஆடினான். ஏன்?
அவளது தோளை தட்டினார் தேவயானி.
"என்ன யோசிக்கிற ஹரி?"
"அவர் உங்ககிட்ட மட்டும் தான் தோப்பாரா?"
"தேவயானியோட அம்மாகிட்டயும் அவன் இப்படித் தான் செய்வான். அவனோட பாட்டியை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்"
"ஆமாம். ஆனா, ஒரு தடவை கூட எங்க அப்பாவை அவன் ஜெயிக்க விட்டதே இல்ல. அவர்கிட்ட பெட்டு கட்டி ஆடி, எதையாவது ஜெயிச்சிடுவான்" என்றார் தேவயானி.
செயற்கையாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள் ஹரிணி.
"என்ன விஷயம் ஹரி?"
"நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்க வந்தேன்"
"எதுக்கு?"
"மும்பையில என்னோட ஃப்ரெண்ட் கல்யாணம் நடக்குது. அதுக்கு நானும் அவரும் போயிட்டு வரட்டுமா?"
"அதெல்லாம் முடியாது. நீ போக வேண்டாம்"
ஹரிணியின் முகம் வாடிப் போனது. கலகலவென சிரித்தார் தேவயானி.
"உன் புருஷன் கூட நீ போறதுக்கு என்னோட பர்மிஷனை எதுக்கு கேக்குற? நீங்க என்ன குழந்தைகளா?"
"இந்த நேரம் சித்து, எங்கே தங்குறது, எப்போ திரும்பி வர்றதுன்னு எல்லாத்தையும் பிளான் பண்ணி இருப்பான். நீ என்னடான்னா இங்க வந்து பர்மிஷன் கேட்டுகிட்டு இருக்க" என்று சிரித்தார் சுவாமிநாதன்.
அசடு வழிந்தாள் ஹரிணி.
"எப்ப கிளம்புறீங்க?"
"நாளைக்கு மத்தியானம்"
"போய் தேவையானதை எல்லாம் எடுத்து வை"
"ரெண்டு நாள் தானே மா அங்க தங்க போறோம்...! அதுக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகுது?"
"வெறும் ரெண்டு நாளா?" என்றார் தேவயானி.
"ஆமாம் மா... நாளன்னைக்கு கல்யாணம். கல்யாணத்தை முடிச்சிகிட்டு திரும்பி வந்துடுவோம்"
"அப்படின்னு சித்து சொன்னானா?"
"அவர் சொல்லல..." என்று இழுத்தாள்.
"அவன்கிட்ட கேட்டு நிச்சயப்படுத்திக்கிட்டு அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் எடுத்து வை"
"ஏன் மா அப்படி சொல்றீங்க?"
"முதல் தடவையா மும்பைக்கு போற. சித்து வேற ஏதாவது பிளான் பண்ணி வச்சிருக்கலாம்"
"இது எதிர்பார்க்காத ட்ரிப் மா. இதுக்கே எப்படி அவரு ரெண்டு நாள் லீவு எடுத்தார்னு எனக்கு தெரியல. இன்னும் கூடுதலா லீவ் எடுத்தா அவருக்கு தானே கஷ்டம்..."
"அவன் அதைப் பத்தி எல்லாம் கவலைப் படுவான்னு எனக்கு தோணல"
தன் கண்களை சுருக்கினாள் ஹரிணி.
"போ, நாளைக்கு தேவையான ஏற்பாட்டை எல்லாம் கவனி" என்றார் தேவயானி.
"சரி" என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்தாள் ஹரிணி, வரும் வழியெல்லாம் செஸ் ஆட்டத்தைப் பற்றி யோசித்தபடி.
தனக்கு பிடித்தவர்களிடம் ஆட்டத்தில் தோற்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறான் சித்தார்த். அவன் அவளிடமும் தானே தோற்றான்? அதுவும், ஷிவானியுடன் அவனுக்கு திருமணமான அடுத்த நாளே...! அவனுக்கு தெரிந்த அனைத்து பெண்களிடமும் அவன் இப்படித் தான் செய்வானோ? தன்னிடம் சித்தார்த் ஏன் தோற்றான் என்று அவளுக்கு பிடிபடவே இல்லை. அதைப் பற்றி சித்தார்த்திடம் கேட்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். இல்லை... இது குறித்து சித்தார்த் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தாள்.
அவன், தனது மடிக்கணினியில் மும்முரமாய் வேலை செய்து கொண்டு, கைப்பேசியில் தான் செய்துகொண்டிருந்த வேலையை பற்றி எதையோ ஆலோசித்துக் கொண்டிருந்தான். மும்பைக்கு கிளம்பி செல்வதற்கு முன், இங்கு இருக்கும் வேலைகளை அவன் முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பது தெளிவாய் புரிந்தது. அதனால் அவனுடன் செஸ் விளையாடும் எண்ணத்தைக் கைவிட்டாள் ஹரிணி.
அழைப்பை துண்டித்த சித்தார்த்,
"அம்மாகிட்ட சொல்லிட்டியா?" என்றான்
"சொல்லிட்டேன். நான் நம்ம டிரஸ்சை பேக் பண்ணட்டுமா?"
"உன்னோட டிரெஸ்ஸை நீ பேக் பண்ணு. என்னுடையதை நான் செஞ்சுக்கிறேன்"
"உங்களுடைய டிரஸ்ஸையும் நானே பேக் பண்ணா என்ன? ரெண்டு நாளைக்கு தேவையானது தானே...?" என்றாள் தான் கேட்க வந்ததை நேரடியாக கேட்காமல்.
"இன்னும் இரண்டு செட் டிரஸ் எக்ஸ்ட்ராவா எடுத்துக்கோ"
"ரெண்டு செட் எக்ஸ்ட்ராவா? எதுக்கு?"
"நம்ம போறது புது இடம். பிரீபிளான்டா இருக்கிறது நல்லது தானே"
மறுபடியும் ஏதோ ஒரு அழைப்பு வர, அதில் தனது கவனத்தை செலுத்தினான் சித்தார்த். தனது பொருட்களை எடுத்துவைக்க துவங்கினாள் ஹரிணி. அவளது கண்கள் சித்தார்த்தின் மீது தான் இருந்தது. அவள் அப்போது ஒரு புதிய விஷயத்தை கவனித்தாள். சித்தார்த்தும் அவ்வப்போது அவளை பார்த்தபடி இருந்தான். எண்ணற்ற எண்ணங்களுடன் பேக்கிங்கை முடித்தாள் ஹரிணி. சாப்பிட்டு முடித்த பின்பும் வெகு நேரம் வேலை செய்து கொண்டிருந்தான் சித்தார்த். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத ஹரிணி தூங்கிப் போனாள்.
மறுநாள்
அன்று காலை சித்தார்த்தை பார்க்கவில்லை ஹரிணி. அவன் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டிருந்தான். தன்னுடைய உடைகளை, அவனும் பேக் செய்து வைத்திருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் அவளுக்கு சித்தார்த்திடம் இருந்து அழைப்பு வந்தது.
"ஹரிணி..."
"ஆங், சொல்லுங்க"
"நான் ரெண்டு மணிக்கு வீட்ல இருப்பேன். எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். சாப்பிட்டுட்டு ரெடியாயிரு"
"சரி"
அழைப்பை துண்டித்தான் சித்தார்த்.
அவன் கூறியது போலவே சரியாய் இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தான். சொற்ப நேரத்தை எடுத்துக் கொண்டு குளித்து, சாப்பிட்டு தயாரானான்.
"நாங்க கிளம்பறோம் மா" என்றான்.
"இந்த சான்ஸையாவது பயன் படுத்திக்கோடா" என்றார் கெஞ்சலாக தேவயானி.
*ஐயோ* என்பது போல் அவரை பார்த்து விட்டு காரை நோக்கி நடந்தான் சித்தார்த். தேவயானியிடமும் சாமிநாதனிடமும் விடைபெற்றாள் ஹரிணி.
"நீ விரும்புற எல்லாம் உனக்கு கிடைக்கட்டும்" என்று அவளை வாழ்த்தினார் தேவயானி.
அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ஹரிணி,
"தேங்க்யூ மா" என்றாள்.
இதில் உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது என்று புரியவில்லை தேவயானிக்கு. ஒருவேளை அவள் சித்தார்த்தை கவனிக்கத் துவங்கிவிட்டாளோ? பரவாயில்லையே...! என்று நினைத்துக்கொண்டார் தேவயானி.
சித்தார்த்தை பின்தொடர்ந்தாள் ஹரிணி.
அவர்களை ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு வந்தார் டிரைவர். இந்தியன் ஏர்லைன்ஸின் பிசினஸ் வகுப்பு இருக்கைகளை சித்தார்த்தும், ஹரிணியும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஹரிணிக்கு அது தான் முதல் விமான பயணம். விமானம் மேலே உயர்ந்த போது, கண்களை மூடிக்கொண்டு சித்தார்த்தின் கரத்தை கெட்டியாய் பற்றிக் கொண்டாள் ஹரிணி. அவளுக்கு தைரியம் அளிக்கும் விதத்தில் தன் கரத்தால் அவள் கரத்தை தட்டிக் கொடுத்தான் சித்தார்த். திடுக்கிட்டு கண் விழித்த ஹரிணி, அவனை ஆச்சரியமாய் இமை கொட்டாமல் பார்த்தாள்.
*அவனுக்கு உன்னை மிகவும் பிடிக்கும்* என்ற தேவயானியின் வார்த்தைகள் அவளது காதுகளில் ரீங்காரமிட்டன.
கண்ணை மூடி நாற்காலியில் சாய்ந்து அவள் சற்று நேரத்தில் உறங்கி போனாள். புன்னகையுடன் தானும் நாற்காலியில் சாய்ந்தான் சித்தார்த். முதல் நாள் இரவு அவன் சரியாக தூங்காததால் சீக்கிரமே தூக்கம் அவனை ஆட்கொண்டது. மும்பைக்கு சென்று இறங்கிய பின்,சற்று சுறுசுறுப்புடன் இருக்க இந்த தூக்கம் அவனுக்கு அவசியம். அவன் தூங்கிவிட்டான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு தன் கண்களை திறந்தாள் ஹரிணி. நல்லவேளை அவன் உறங்கி விட்டான். அவன் நிச்சயம் சோர்வாக தான் இருப்பான் என்று ஹரிணிக்கு தெரியும். அதனால் தான் அவனுக்கு தூங்க சந்தர்ப்பத்தை அளித்தாள். அவள் உறங்காமல் இருந்தால், அவனும் உறங்க மாட்டான் என்பதால் தான், தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். சற்று நேரத்தில் சித்தார்த்தின் தலை லேசாய் சரிந்தது. அவனது தலையை தனது தோளில் சாய்த்துக்கொண்டு, தன் கன்னத்தை அவன் தலையில் பதித்துக் கொண்டு சிரித்தாள் ஹரிணி.
சரியாய் ஒரு மணி நேரத்திற்கு பின், தூக்கம் கலைந்து கண் விழித்தான் சித்தார்த். ஹரிணிக்கு உள்ளுக்குள் அலாரம் அடிக்க, சட்டென்று கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். ஹரிணியின் தோளில் தான் சாய்ந்து கொண்டிருப்பதை கண்ட சித்தார்த், அவளிடமிருந்து விலக முயலாமல், அப்படியே சாய்ந்திருந்தது அவளுக்கு பேராச்சரியத்தை அளித்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து அமருவான் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாள். ஆனால், அவன் அதற்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்டான். இருவருமே பாசாங்கு செய்தபடி மும்பையை சென்றடைந்தார்கள்.
ஸாண்டா க்ரூஸ் விமான நிலையத்திலிருந்து சரியாய் ஒன்னரை மணி நேரத்தில் இருந்தது கல்யாண். மக்கள் தொகையிலும், போக்குவரத்து நெரிசலிலும், மும்பை, டெல்லிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல... என்று எண்ணினார்கள் அவர்கள் இருவரும்.
குளிர்சாதன வசதி செய்யப்பட்ட மிகப்பெரிய திருமண மண்டபத்தின் முன் அவர்கள் வந்து இறங்கினார்கள். அலங்காரம் செய்து கொண்டு நின்றிருந்த சில பெண்கள், வாசலில் நின்று பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து அவர்களை வரவேற்றார்கள். சம்பிரதாயமாய் அதை எடுத்துக் கொண்டு, அவர்கள் இருவரும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். திருமண மண்டபம் பாதியே நிரம்பியிருந்தது. இன்னும் சடங்குகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிந்தது. அங்கு ஒருவரையும் அவர்களுக்கு தெரியாது என்பதால் இங்குமங்கும் பார்த்தபடி நின்றார்கள். அவர்களுக்கு அருகில் நின்று இருந்த ஒருவரை அணுகினாள் ஹரிணி.
"அங்கிள்..."
"சொல்லு மா..."
"கல்யாண பெண்ணை பார்க்கணும்"
"அவங்க மாடியில இருக்காங்க. ரைட் சைடு, லாஸ்ட் ரூம்..."
"தேங்க்யூ அங்கிள்"
அவர்கள் இருவரும் முதல் மாடிக்கு வந்தார்கள்.
"நான் இங்க வெயிட் பண்றேன். நீ போய் அவங்களை பாத்துட்டு வா" என்றான் சித்தார்த்.
உடனே சரி என்று தலையசைத்தாள் ஹரிணி. ஷிவானியைப் பற்றி அவள் விசாரிக்கும் போது, அவன் தன்னுடன் இருக்க வேண்டாம் என்று தான் அவளும் விரும்பினாள். அந்த குறிப்பிட்ட அறையை நோக்கி நடந்தாள், ஷீலாவை சந்திக்க. ஆளுயர கண்ணாடியை பார்த்தபடி தனது புடவையை சரி செய்து கொண்டிருந்தாள் ஷீலா. தலையை உயர்த்திய ஷீலா கண்ணாடியில் தெரிந்த ஹரிணியை பார்த்து அவளை நோக்கி திரும்பினாள். அவளது முகத்தில் குழப்பத்தின் சாயை தெரிந்தது. ஹரிணி யாரென்று அவளுக்கு நினைவுக்கு வந்த போது அவள் முகம் மலர்ந்தது. ஹரிணியை நோக்கி சந்தோஷமாய் ஓடிவந்தாள் ஷீலா.
"நீ ஹரிணி தானே?"
"ஆமாம்"
"ஷிவானி உன்னைப் பத்தி ஓயாம பேசிக்கிட்டே இருப்பா"
வலி நிறைந்த புன்னகை பூத்தாள் ஹரிணி.
"எங்க அவ? வெளிய ஒளிஞ்சிகிட்டு இருக்காளா?" வெளியே சென்று எட்டிப் பார்த்த ஷீலா, ஹரிணி கூறியதைக் கேட்டு, அவள் பக்கம் திரும்பினாள்.
"இல்ல ஷீலா... அவ வரல"
"என்னது அவ வரலையா? அவளோட ஹஸ்பன்ட் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாரா?"
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல"
"என்னை சர்ப்ரைஸ் பண்ண பிளான் பண்ணி இருக்காளா?"
"அவ இப்போ உயிரோட இல்ல ஷீலா"
"என்னது... நீ என்ன சொன்ன?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"ஷிவானி இறந்துட்டா"
"இறந்துட்டாளா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி. ஷீலாவின் அடுத்த வார்த்தைகள் அவளை உலுக்கிவிட்டது.
"அவ தற்கொலை பண்ணிக்கிட்டாளா?"என்று ஷீலா கேட்க, உறைந்து நின்றாள் ஹரிணி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top