19 மும்பை செல்லும் திட்டம்

19 மும்பை செல்லும் திட்டம்

டீப்பாயின் மீது வைக்கப்பட்டிருந்த ஷீலாவின் திருமண பத்திரிக்கையை கண்டார் வெங்கடேசன். அலமேலு கொடுத்த காபியை பருகியபடி அந்த பத்திரிக்கையை எடுத்து பிரித்துப் பார்த்தார்.

"யாருடைய கல்யாண பத்திரிக்கை இது?"

"ஷிவானியோட ஃப்ரெண்ட் ஷீலாவுடைய கல்யாண பத்திரிக்கை" என்றார் அலமேலு.

"ஓஹோ"

"ஷிவானி இறந்தது தெரியாம பத்திரிக்கை அனுப்பியிருக்கா"

"ம்ம்ம்... போகணுமா?"

"போகணுமுன்னு தான் நினைக்கிறேன்"

"சரி, போகலாம்"

"ப்ரியாவையும் கூட்டிக்கிட்டு போகலாமா?"

சில நொடி யோசித்தார் வெங்கடேசன்.

"நம்ம ஏன் சித்தார்த்தையும் ஹரிணியையும் இந்த கல்யாணத்துக்கு அனுப்பக் கூடாது?"

அப்பாடா...! ஒருவழியாய் தான் நினைத்ததை கூறிவிட்டார் வெங்கடேசன் என்று சந்தோஷப்பட்டார் அலமேலு.

"இப்ப இருக்கிற சூழ்நிலையில நம்மால அவங்கள ஹனிமூனுக்கு அனுப்ப முடியல. அதை சித்தார்த் எப்படி எடுத்துக்குவாரோ தெரியல. ஆனா இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவங்க ரெண்டு பேரும் போயிட்டு வரட்டும். அவங்களுக்குள்ள இருக்கிற இடைவெளியை கொஞ்சம் குறைக்க இது உதவும்னு நான் நம்புறேன்"

"நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா சித்தார்த் ஃப்ரீயா இருக்கணுமே?"

"நான் அவர்கிட்ட பேசிப் பாக்குறேன்"

"சரிங்க" என்றார் சந்தோஷமாக அலமேலு.

தேவா டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம்

தனது வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்த சித்தார்த், நாற்காலியில் அமர்ந்து, பாட்டிலில் இருந்த தண்ணீரை பருகினான். மேற்கொண்டு தன் வேலையை துவங்கலாம் என்று அவன் எண்ணிய போது, அவனது கைபேசி கூக்குரலிட்டது.

*ஃபாதர் இன் லா* என்று திரையில் தோன்றியது. அதை பார்த்தவுடன் அவன் முகம் புன்னகையை அணிந்தது. வெங்கடேசனின் பேச்சு அவனுக்கு மனநிறைவை அளிக்க எப்போதும் தவறியதில்லை. இன்று நிலவும் பரபரப்பான காலகட்டத்தில், இப்படி ஒரு உறவு அமைவதெல்லாம் வரம் தான். அழைப்பை ஏற்று பேசினான் சித்தார்த்.

"ஹலோ அங்கிள்..."

"எப்படி இருக்கீங்க சித்தார்த்?"

"நல்லா இருக்கேன் அங்கிள்"

"ஹரிணி ஒன்னும் உங்களை தொந்தரவு செய்றது இல்லையே...?"

"நிச்சயமா இல்ல" என்றான் சிரித்தபடி.

"நெஜமாவா சொல்றீங்க? அது சாத்தியமே இல்லையே...! அவளால கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்கவே முடியாதே... அவளைப் பொறுத்த வரைக்கும் கொஞ்ச நேரம் பேசாம இருக்கிறது தான் ரொம்ப பெரிய தண்டனை. ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி ஏதாவது பேசிக்கிட்டே இருப்பா"

"ஆமாம். ஆனா அவ பேசுறது எனக்கு டிஸ்டர்பன்ஸா இல்ல..."

"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார் வெங்கடேசன்.

"நீங்க ஹரிணியையும் அவளோட சேட்டைகளையும் ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன்"

"சந்தேகமில்லாம... தன்னை சுத்தி இருக்கிற உலகத்தை மறந்துட்டு, சோஷியல் மீடியாவில் மூழ்கி போற பொண்ணு இல்ல அவ. தன்னை சேர்ந்தவங்களை எங்கேஜ் பண்ணி வச்சுக்கிட்டு, அவ இல்லாத வெறுமையை உணர வச்சுடுவா"

வெங்கடேசன் கூறுவது உண்மை தான். அவளை சார்ந்தவர்கள், அவளை தேடும் படி தான் செய்து விடுகிறாள்.

"நான் வேணும்னா கொஞ்ச நாளைக்கு அவளை அங்கே கொண்டு வந்து விடட்டுமா, அங்கிள்?"

"இல்ல இல்ல... நாங்க அதை பழகிக்குவோம். பழகி தான் ஆகணும். பெண்ணை பெத்த அப்பா அம்மாவோட நிலை இது தான்"

அவர் பேச்சில் இருந்த இயலாமையை நன்றாகவே உணர்ந்தான் சித்தார்த். இது மிகவும் கசப்பான உண்மை.

"நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்"

"சொல்லுங்க அங்கிள்"

"ஷிவானியோட பெஸ்ட் ஃபிரண்ட்டுக்கு கல்யாணம். ஷிவானி இறந்த விஷயம் தெரியாம அவ இன்விடேஷன் அனுப்பியிருக்கா. ஹரிணியை கூட்டிக்கிட்டு அந்த கல்யாணத்துக்கு உங்களால போயிட்டு வர முடியுமா?"

ஒரு நிமிடம் திகைத்து நின்றான் சித்தார்த். ஷிவானியின் தோழியின் திருமணம் என்றால், அந்த திருமணம் நடைபெறப் போவது நிச்சயம் தில்லியில் அல்ல. ஹரிணியுடன் வெளியூர் செல்லும் வாய்ப்பா? உண்மையிலேயே இது ஒரு *ஆஹா* வாய்ப்பு தான்.

"எனக்கு ஒரு முக்கியமான வேலையை இங்க முடிக்க வேண்டிய இருக்கு. இல்லனா, நானும் அலமேலுவும் போயிட்டு வருவோம். இப்ப நான் இருக்கிற நிலைமையில, என்னால மும்பையில இரண்டு நாள் செலவு பண்ண முடியாது."

தன்னுடைய ப்ரோக்ராம் டைரியை புரட்டினான் சித்தார்த்.

"கல்யாணம் எப்போ அங்கிள்?"

"நாளை மறுநாள்... அப்படின்னா நீங்க நாளைக்கு கிளம்பணும்"

"நாளைக்கேவா?"

"ஆமாம், அவளும் தமிழ் பொண்ணு தான். நாளைக்கு சாயங்காலம் நிச்சயதார்த்தம், நாளை மறுநாள் விடியற்காலையில் கல்யாணம். நீங்க நாளைக்கு கிளம்பி போறது தான் சரியா இருக்கும்"

"ஓ..."

"ஆமாம். நாளைக்கு சாயங்காலம் நீங்க அங்க போயிட்டா, அதுக்கு அடுத்த நாள் காலையில கல்யாணத்தை அட்டென்ட் பண்ண சரியா இருக்கும். என்ன சொல்றீங்க? உங்களால முடியுமா?"

"இதை பத்தி ஹரிணிக்கு தெரியுமா? அவளுக்கு இந்த ட்ரிப் ஓகேவா?"

"அவளுக்கு இன்னும் இதைப் பத்தி தெரியாது. உங்க ஷெட்யூலை தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு அப்புறம் சொல்லலாமுன்னு நெனச்சேன். மும்பைக்கு போறது தெரிஞ்சா, அவ உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்படுவா. டெல்லியில் பிறந்து, வளர்ந்த பொண்ணுங்குறதால இது வரைக்கும் அவ கடலையே பார்த்ததில்ல. அவளுக்கு பீச்சுக்கு போகணும்னு ரொம்ப ஆசை. ஷிவானி, *மெரைன் டிரைவ்* பத்தி பேசும் போதெல்லாம் அவ முகம் தொங்கிப் போய்டும்" என்று சிரித்தார்.

"அவளை நான் கூட்டிட்டு போறேன் அங்கிள்" என்றான் சித்தார்த் புன்னகையுடன்.

"அப்படின்னா உங்களுக்கு எந்த முக்கியமான வேலையும் இல்லையே?"

ஏன் இல்லாமல்? ஒரு பேனாவை எடுத்து தனது டைரியில் குறித்து வைத்திருந்த அனைத்து வேலைகளையும், அதன் குறுக்காக ஒரு கோடு போட்டு அடித்தான் சித்தார்த். ஹரிணியை வெளியில் அழைத்துச் செல்வதை விட வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது அவனுக்கு?

"இல்ல அங்கிள்... எந்த முக்கியமான வேலையும் இல்ல" என்றான்.

"ரொம்ப நல்லதா போச்சு. தேங்க்யூ சோ மச் சித்தார்த்"

"மை பிளஷர் அங்கிள்"

"கல்யாணம் நடக்கப் போறது மும்பை கல்யாண்ல. அதுக்கு தகுந்த மாதிரி பிளான் பண்ணிக்கோங்க"

"அப்படியா அங்கிள்? நான் தாஜ் ஹோட்டலில் ரூம் புக் பண்ணலாம்னு நெனச்சேன்"

"கல்யாண்ல இருந்து கொலபாவுக்கு போக ஒரு மணி நேரம் ஆகும். கல்யாணத்தை முடிச்சிட்டு அதுக்கப்புறம் வேணுமுன்னா தாஜுக்கு வாங்க. கல்யாண்ல நீங்க தங்க வேண்டிய எல்லா ஏற்பாட்டையும் ஷீலா குடும்பத்தாரே செஞ்சு கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்."

"பரவாயில்ல அங்கிள். நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்"

"ஓகே சித்தார்த், டேக் கேர்" அழைப்பைத் துண்டித்தார் வெங்கடேசன்.

சித்தார்த்துக்கு தலைகால் புரியவில்லை. அவனும் ஹரிணியும் மும்பைக்கு செல்ல போகிறார்கள். சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து, தாஜ் ஹோட்டலில் கடலைப் பார்த்த வண்ணம் இருக்கும் அறையை புக் செய்யச் சொன்னான். கடலைப் பார்த்து ரசித்தபடி, சூடாய் தேநீர் அருந்துவது அலாதியானது. நிச்சயம் ஹரிணிக்கு அது பிடிக்கும்.

தமிழ் குடில்

காதில் கைபேசியை வைத்தபடி துள்ளி குதித்தாள் ஹரிணி, அவளை மும்பைக்கு அழைத்துச் செல்ல சித்தார்த் சம்மதித்து விட்டான் என்று அலமேலு கூறியதைக் கேட்ட போது.

"நெஜமாவா? முசுடு மாமா ஒத்துக்கிட்டாரா?"

"என்னடி, மரியாதை இல்லாம... முசுடு மாமான்னு சொல்ற?"

"முசுடை முசுடு தானம்மா சொல்லணும்?"

"அவர் கேட்டா என்ன நினைப்பார்?"

"அவர் ஏற்கனவே கேட்டுட்டார்" என்று சிரித்தாள் ஹரிணி.

"அவரை நீ அந்த பேர் சொல்லி தான் கூப்பிடுறியா?"

"அடிக்கடி" என்றாள் சிரிப்பை அடக்கியபடி ஹரிணி.

"எல்லாத்துலயும் உனக்கு விளையாட்டு தானா?"

அப்பொழுது தனது அறையை நெருங்கி வந்த காலடிச் சத்தத்தைக் கேட்டாள் ஹரிணி.

"அம்மா, முசுடு மாமா வந்துட்டார்னு நினைக்கிறேன். நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்"

அழைப்பை துண்டித்து விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள் ஹரிணி. தன் கையில் இருந்த புத்தகத்தின் பக்கத்தை திருப்பினாள். உள்ளே நுழைந்த சித்தார்த் அவளை பார்த்து புன்னகைத்தான்.

"இன்னைக்கு சூரியன் மேற்கில் உதிச்சிதா?" என்றாள் ஹரிணி

"என்ன?" என்றான் புரியாமல்.

"நீங்க இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்களே... அதனால கேட்டேன்"

"நான் இன்னைக்கு காலையில சூரியனை பார்க்கல" என்றான் தன் சட்டையை கழட்டியபடி.

கழற்றிய சட்டையை தன் மடியில் வைத்துக் கொண்டு, உள்பனியனுடன் கட்டிலின் மீது அமர்ந்தான் சித்தார்த். அவன் மீதிருந்த ஹரிணியின் கண்கள் நகர மறுத்தன. அவளது வயிற்றுக்குள் பிள்ளைப்பூச்சி நெண்டுவது போல் இருந்தது. ஷேவ் செய்யாமல் விடப்பட்ட இரண்டு நாள் தாடியும், அவனது பரந்த தோள்களும், அவளுக்குள் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தின. இன்று ஏன் அவன் முற்றிலும் வித்தியாசமாய் தெரிகிறான்? அவளைக் கொல்லாமல் கொன்றான் சித்தார்த். பார்ப்பவரை சுண்டி இழுக்கும் அவனது புன்னகை, அவளது இதயத் துடிப்பை அதிகரித்தது.

சோபாவில் இருந்து எழுந்து நின்றாள் ஹரிணி. அவனுடன் இருப்பது அவளுக்கு நிச்சயம் நன்மை பயக்காது. அவனிடம் கையும் களவுமாக அகப்பட்டுக் கொள்ள அவள் விரும்பவில்லை.

"என்ன ஆச்சு?" என்றான் சித்தார்த்.

"நான்... நான் உங்களுக்கு காபி கொண்டுவரேன்"

"நான் அப்புறம் சாப்பிடுறேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உக்காரு"

விதியே என்று அமர்ந்தாள் ஹரிணி. பேச போகிறானா? அப்படி என்றால் அவன் முகத்தை அவள் பார்த்து தான் தீரவேண்டும். வேறு வழியில்லை.

"உங்க அப்பா எனக்கு கால் பண்ணாரு"

"ஓ... "

"மும்பையில நடக்குற ஒரு கல்யாணத்துக்கு நம்ம ரெண்டு பேரும் போகணும்னு அவர் விரும்புறார்"

" ஓ... "

"உனக்கு ஓகேன்னா நம்ம போகலாம்"

" ஓ... "

*ஓ* போடுவது என்றால் இது தான் போலிருக்கிறது.

"உனக்கு மும்பை போக விருப்பமில்லையா?"

"ஓ "

முகம் சுளித்தான் சித்தார்த்.

"ஹரிணி" என்றான் சற்று அதட்டலாக.

"ஆங்...?" என்று விழித்தாள்.

"என்ன யோசனை?"

"தாடி... பனியன்..." என்று உளறினாள்.

"என்ன ஆச்சு உனக்கு?"

இரண்டு அடி எடுத்துவைத்து அவளை வந்தடைந்த அவன், அவளது தோள்களைப் பற்றி உலுக்கினான்.

"என்ன ஆச்சு?" என்றாள் கனவிலிருந்து வெளி வந்தவளைப் போல.

"அதையேத் தான் நானும் கேட்கிறேன். என்ன ஆச்சு உனக்கு?"

திரு திருவென விழித்தபடி நின்றாள் ஹரிணி.

"மும்பைக்கு போக உனக்கு விருப்பம் இல்லையா?"

"இருக்கே... இருக்கு..."

"ஹரிணி, உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?"

சோபாவில் அமர்ந்து, தன் முகத்தை, கரங்களால் மூடிக்கொண்டாள் ஹரிணி.

"என்ன ஆச்சி ஹரிணி?"

சோபாவை விட்டு எழுந்து நின்றவள்,

"இதுக்காகத் தான் நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்னு சொன்னேன்..." என்றாள் சிணுங்கலுடன்.

"காபியா? இங்க காபி எங்கிருந்து வந்தது?"

"உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் உங்களுக்கு காபி கொண்டுவரேன். நீங்க குடிக்கிறீங்க... புரிஞ்சுதா?" என்றாள் அதட்டலாக.

பின் வாங்கினான் சித்தார்த். என்ன ஆகிவிட்டது இந்த பெண்ணுக்கு? கதவருகே சென்று நின்றவள், திரும்பி அவனை பார்த்து,

"நான் போயிட்டு வர்றதுக்குள்ள நீங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிகிட்டு இல்லன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்." என்றுவிட்டு நடந்தாள்.

தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் நின்றான், சித்தார்த். கண்களை அகல விரித்து தன் தலையை இடவலமாக அசைத்தபடி குளியலறை நோக்கி நடந்தான். அவள் திரும்பி வரும் போது, அவன் உடை மாற்றாமல் இருந்தால், மீண்டும் அவன் மீது அவள் பாயலாம்.

......

திடீரென்று என்ன ஆனது ஹரிணிக்கு? நன்றாகத் தானே இருந்தாள்? அவளது திடீரென்ற, இந்த வித்தியாசமான நடவடிக்கைக்கு என்ன காரணம்? சித்தார்த் அழகாக இருக்கிறான் என்பது தான் அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியுமே? அப்படி இருக்க, இன்று மட்டும் அவளுக்கு என்ன ஆனது? அவனுடைய இரண்டு நாள் தாடியும், ஆளைக் கொல்லும் புன்னகையும் மட்டும் தான் அவளை அடித்து போட்டு விட்டதா? நிச்சயம் இல்லை. பிறகு என்ன?

காரணம் வெகு சாதாரணமானது. 'உன்னை சித்தார்த்துக்கு மிகவும் பிடிக்கும்' என்று தேவயானி கூறினார் அல்லவா? அது தான் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறது. தன் மீது தன் கணவனுக்கும் விருப்பம் இருக்கிறது என்று தெரிந்து விட்டால், அவனது மனைவி, அவன் மீது அதிகமான ஈடுபாடு காட்டுவது சகஜம் தானே? சித்தார்த்தின் மனதில் இருப்பதை ஹரிணி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் தேவயானி அதைக் கூறினார். ஆனால் விஷயம் இங்கு தலைகீழாய் மாறி விட்டிருக்கிறது. சித்தார்த் ஹரிணியை சீக்கிரமே கையும் களவுமாய் பிடித்து விடுவான் போல் தெரிகிறது. அவள் தன் கணவனின் காதல் வலையில் விழுந்து விட்டாள் என்ற விஷயம், அவளுக்கே கூட தெரியாதே...! ஆனால் அதுவும் கூட முக்கியம் தானே? தன் மனதில் சித்தார்த் பிடித்திருக்கும் இடம் என்ன என்பதை ஹரிணி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

காபியை கொண்டு வந்து சித்தார்த்திடம் கொடுத்தாள் ஹரிணி. குறுநகையை உதிர்த்தபடி அதை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டான் சித்தார்த்.

*சிரிக்காதே* என்று கூறி, அவன் முகத்தில் ஒரு குத்து குத்த வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

சற்று நேரத்திற்கு முன், மும்பை செல்வதைப் பற்றி அவளிடம் என்னவெல்லாம் கூறினானோ, அதை மறுபடியும் கூறினான் சித்தார்த். இந்த முறை அவன் கூறுவதை கவனமாய் கேட்டுக் கொண்டாள் ஹரிணி. அதற்காக, அவள் தன் கணவனை கவனிக்கவில்லை என்று அர்த்தமல்ல.

"மும்பை போணுமா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி. அது சித்தார்த்துக்கு ஆச்சரியத்தை தந்தது. அவள் கட்டிலை விட்டு குதித்து எழுவாள் என்று அவன் எண்ணியிருந்தான்.

"அங்கிள் சொன்னார், நீ இதுவரைக்கும் பீச்சே பார்த்ததில்லையாமே...?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"இந்த ட்ரிப்ல உன்னுடைய விருப்பம் நிறைவேறும்"

அவள் ஆர்ப்பாட்டமில்லாமல் புன்னகைக்க, அவளுடைய அமைதியான அணுகுமுறை அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல் இருந்தது.

"உனக்கு விருப்பம் இல்லைன்னா, நம்ம இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணிடலாம்" என்றான்.

அது ஹரிணியை உலுக்கிவிட்டது. அவளுடைய பைத்தியக்கார மனதால், ஷிவானியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள கிடைத்த அருமையான வாய்ப்பை தவற விட்டு விடுவாள் போலிருக்கிறதே... அவளது உள்ளுணர்வு அவளை எச்சரித்தது. வலிய புன்னகைத்து,

"எனக்கு கையும் ஓடல காலும் ஓடல" என்றாள் அசட்டு சிரிப்புடன்

"ஏன்?"

"நான் மும்பைக்கு போய், பீச்சை பார்க்கப் போறேன்னு என்னால நம்பவே முடியல. தேங்க்யூ சோ மச்"

"நாளைக்கு மதியானம் நம்ம கிளம்பணும்"

"என்னைக்கு கல்யாணம்?" என்றாள் தனக்கும் ஆர்வம் இருக்கிறது என்பதை காட்டிக்கொண்டு.

"நாளை மறுநாள்..."

"அப்படின்னா நாம எதுக்கு நாளைக்கே கிளம்பணும்?"

"கல்யாணம் விடியற்காலையில் நடக்கப் போகுது. நாளைக்கு சாயங்காலம் போனா தான் நம்மால கல்யாணத்தை அட்டென்ட் பண்ண முடியும்"

"ஓ... சீக்கிரமா போயிட்டா, நம்ம பீச்சுக்கு போகலாமா?"

"நம்ம போற ஏரியாவில பீச் இல்ல"

"ஓ" என்றாள் சோகமாக.

"கல்யாணம் முடிஞ்ச பிறகு போகலாம்"

"ஓகே... இதைப் பத்தி நீங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா?"

"இன்னும் இல்ல"

"நான் போய் சொல்லிட்டு வரேன்"

அங்கிருந்து ஓடிச் சென்றாள் ஹரிணி. வெளியே வந்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இரண்டு நாட்கள் முழுதாய் அவள் எப்படி சித்தார்த்துடன் இருக்க போகிறாளோ தெரியவில்லை. தன்னை நினைத்து பரிதாபப் பட்டாள் ஹரிணி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top