18 அவருக்கு பிடிக்குமா?

18 அவருக்கு பிடிக்குமா?

மறுநாள் காலை

கண்களைக் கசக்கியபடி தூக்கத்திலிருந்து கண் விழித்தான் சித்தார்த். வாயில் டூத் பிரஷை வைத்துக்கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ஹரிணி. அதை பார்த்து அவனுக்கு வாய் விட்டு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. இதே காட்சி தான் சிலநாட்களுக்கு முன் அவனை அடித்து நொறுக்கியது. மடியில் ஒரு தலையணையை வைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான். அவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி...! அவனது மனைவி பல் துலக்கும் போது கூட எவ்வளவு அழகாய் இருக்கிறாள்...! தன் மனைவியை அவன் ரசித்துக் கொண்டிருந்ததில், கதவு திறந்து இருந்ததையும், அவனுடைய அம்மா உள்ளே வந்ததையும் அவன் கவனிக்கவில்லை.

அவன் ஹரிணியை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த தேவயானி, லேசாய் இரும அவன் திடுக்கிட்டான். தேவயானியை பார்த்து புன்னகைத்தாள் ஹரிணி.

"சித்து, நீ சொன்னது ரொம்ப சரி" என்றார் சத்தமாக தேவயானி.

ஹரிணிக்கு மட்டுமல்ல சித்தார்த்துக்கும் அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்று புரியவில்லை.

"பிரெஷ் பண்ணும் போது கூட ஹரிணி அழகா இருக்கா"

அதைக் கேட்ட சித்தார்த் தடுமாறி போனான். தேவயானியை பார்த்து அவன் முறைக்க, அவரோ அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. பார்வையை மெல்ல ஹரிணியின் பக்கம் அவன் திரும்பினான். அவள் முகத்தில் அழகான அதிர்ச்சி தெரிந்தது.

"உனக்கு தெரியுமா ஹரி, சித்துவுக்கு ரொம்ப மேக்கப் பண்ணா பிடிக்காது. இந்த காலத்துல இப்படி ஒருத்தன்னு யாருமே நம்ப மாட்டாங்க. உன்னுடைய இயற்கையான அழகு அவனுக்கு ரொம்ப பிடிக்கும். நீ பல் துலக்கும் போது ரொம்ப அழகா இருப்பேன்னு அவன் சொன்னப்ப நான் நம்பல. நீ பல் தேய்க்கும் போது பாக்கணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். சித்து சொன்னது பொய்யில்ல. நீ ரொம்ப அழகா இருக்க. நான் சொல்றது சரி தானே சித்து?"

ஹரிணியின் முகம் போன போக்கு, கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. வாயிலிருந்த பிரஷ்ஷை எடுத்து, தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள் அவள். தேவயானி கூறுவது உண்மையா அல்லது அவர் இட்டுக்கட்டி பேசுகிறாரா? அவர் கேட்ட கேள்விக்கு சித்தார்த்துக்கு என்ன பதில் கூற போகிறான் என்று தெரிய வேண்டும் அவளுக்கு. சித்தார்த் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள். அவனோ அவளுக்கு மேல் அசடு வழிந்து கொண்டிருந்தான். இப்படி ஒரு சங்கடமான நிலையில் நாம் தள்ளப்படுவோம் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. இப்பொழுது அவன், இல்லை என்றும் கூற முடியாது, ஆமாம் என்றும் கூற முடியாது.

ஹரிணியின் பார்வை தன் மீது குவிந்திருந்ததை அவன் கண்டான். அவனுக்கு எப்படி அவனால் ஏமாற்றத்தை அளிக்க முடியும்? *ஆமாம்* என்று தலையசைத்து, அவளை ஒரு புதிய உணர்வை உணர வைத்தான் சித்தார்த். தான் கீழே விழுந்து விடுவோமோ என்று தோன்றியது ஹரிணிக்கு. செயற்கையான புன்னகையுடன், தலை குனிந்தபடி குளியலறைக்கு சென்றாள் ஹரிணி.

தன் தலையில் அடித்துக்கொண்டு தேவயானியை பார்த்து முறைத்தான் சித்தார்த்.

"என்ன வேலை மா பண்ணிட்டீங்க நீங்க?"

"நான் என்னடா செஞ்சேன்?" என்றார் கூலாக.

"நீங்க முட்டையை உடைச்சிருக்க கூடாது"

"போடா... உடைச்ச முட்டையை என்னால ஆம்லெட் போட முடியலையேன்னு நானே வருத்தத்திலே இருக்கேன்..."

மீண்டும் அவரைப் பார்த்து முறைத்தான்.

"எப்போ, எங்க, அப்படிங்கற விவரத்தை எல்லாம் நான் சொன்னேனா? இல்ல தானே? அப்புறம் என்ன? விடு..."

"அம்மா, ப்ளீஸ் தயவுசெய்து இதை நிறுத்திடுங்க"

"அப்படின்னா நீ அவளைக் காதலிக்கிறதை நீயே சொல்லிடு"

"நீங்க என்ன நெனச்சிகிட்டு இருக்கீங்க? எனக்கு மட்டும் அவ கிட்ட சொல்லணும்னு விருப்பம் இல்லையா?"

"அப்போ சொல்லிடு"

"அவ எப்படி எடுத்துக்குவான்னு தெரியலம்மா. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க"

"அவ நல்ல பொண்ணு. புரிஞ்சுக்குவா. உன்னை மாதிரி இல்ல"

தன் மூக்கு வடத்தை அழுத்தியபடி பெருமூச்சுவிட்டான் சித்தார்த்.

"இந்த உலகத்துல இருக்கிற ஒவ்வொரு பொண்ணுமே தான் காதலிக்க படணும்னு தான் விரும்புவாங்க"

அமைதியாய் இருந்தான் சித்தார்த்.

"ஹரி வந்து உன்கிட்ட கேப்பா. அதுக்கு பதில் சொல்லு" என்று அங்கிருந்த சிரித்தபடி சென்றார் தேவயானி.

தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டான் சித்தார்த். நல்ல வேளை, அவனது அம்மா விஷயத்தை முழுதாய் கூறவில்லை.

குளியலறையில்...

வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு, கண்ணாடியின் முன் நின்று, கண்ணாடியில் ஒளிர்ந்த தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. அவள் பல் துலக்கியதை சித்தார்த் எப்போது பார்த்தார்? நேற்று கூட அவள் குளியலறைக்கு உள்ளே தானே பல் துலக்கினாள்...! உண்மையிலேயே அவர் அம்மாவிடம் அப்படியா கூறினார்? அப்படியும் கூறிவிட முடியாது. தேவயானி எல்லாவற்றையுமே சற்று மிகைப்படுத்தி தான் கூறுகிறார். எல்லோரையும் சந்தோஷப்படுகிறார். சித்தார்த் கூட, தன்னை சந்தோஷப்படுத்த தான் *ஆமாம்* என்று ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அதனால் சந்தோஷப்பட அதில் ஒன்றுமில்லை. தேவயானி அம்மா கூறியது போல், மேக்கப் அணிவது அவனுக்கு பிடிக்காது என்பதால் தேவயானி கூறிய போது அவன் ஆம் என்று தலையசைத்திருக்க வேண்டும். குளியலை முடித்துக்கொண்டு வந்தாள் ஹரிணி.

அவளிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது சித்தார்த்துக்கு நிம்மதியை அளித்தது. வெகு இயல்பாய் இருந்தாள் ஹரிணி. அவளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலவரப்பட்டுகொண்டு இருந்தான் அவன். அதற்கு அவசியமில்லாமல் செய்துவிட்டாள் ஹரிணி.

குளியல் அறைக்கு செல்லலாம் என்று எண்ணியவன், அவள் தனது ஈரக்கூந்தலை அடித்து துவட்டுவதை பார்த்து மெய்மறந்து நின்றான். தண்ணீர் முத்துக்கள் சிதறி இருந்த அவளது முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது அவனுக்கு. அவன் பக்கம் திரும்பிய ஹரிணி, தன் புருவத்தை உயர்த்தி என்ன? என்பது போல் அவனை கேட்க, ஒன்றுமில்லை என தலையசைத்துவிட்டு குளியலறைக்கு விரைந்தான் சித்தார்த்.

சமையல் அறைக்கு வந்தாள் ஹரிணி.

"அம்மா எனக்கு ஏதாவது வேலை இருந்தா குடுங்க" என்றாள்.

"நீ ஃப்ரீயா இருக்கும் போது எனக்கு ஹெல்ப் பண்ணா போதும்" என்றார் தேவயானி.

"பரவாயில்லை மா, ஏதாவது சொல்லுங்களேன்"

சமையலறையில் மேடையை காட்டி

"இங்க உட்காரு" என்றார்.

சிரித்தபடி அதன் மீது அமர்ந்து கொண்டாள் ஹரிணி.

"முதல்ல காபி குடி. அப்புறமா வேலை செய்யலாம்"

அவளிடம் காபியை கொடுக்க, அதை பருகினாள் ஹரிணி. எதையோ யோசித்துக் கொண்டு வாய்விட்டு சிரித்தாள் ஹரிணி.

"நான் உனக்கு காபி தானே கொடுத்தேன்? நைட்ரஸ் ஆக்சைடை கொடுத்த மாதிரி எதுக்காக சிரிக்கிற?" என்றார் .

"வாவ் உங்களுக்கு லாஃபிங் கேஸ் பத்தி எல்லாம் கூட தெரியுமா?"

"எதுக்காக சிரிச்சேன்னு சொல்லு" என்றார் அவள் கேள்விக்கு பதில் கூறாமல்.

"இப்போ நம்ம ரெண்டு பேரையும் யாராவது பார்த்தா, நான் தெனாவட்டா உட்கார்ந்துகிட்டு, உங்களை வேலை வாங்கி கொடுமை பண்றதா நினைக்க மாட்டாங்க?" என்று அவள் சிரிக்க,

அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்த தேவயானி,

"அப்படி நினைக்க வாய்ப்பிருக்கு" என்றார்.

"ஒரு மாமியார், மருமகள் கூட இவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருக்க முடியும்னு நான் நினைச்சி கூட பார்த்ததில்ல. நான் ரொம்ப லக்கி. உங்களை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்ல"

அவள் கூறுவதை சிரித்தபடி கேட்டுக் கொண்டே தன் வேலையை செய்து கொண்டிருந்தார் தேவயானி.

"உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணியா?" என்றார்.

"நேத்து தானே மா அங்க போயிட்டு வந்தேன்?"

"அப்படி நினைக்காத ஹரிணி. ஏற்கனவே அவங்க ஷிவானியை இழந்திருக்காங்க. உன்னை விட்டா அவங்களுக்கு வேற யாரும் இல்ல. அவங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீ மட்டும் தான். தினமும் அவங்களுக்கு ஃபோன் பண்ணி, கொஞ்ச நேரம் பேசு. சாப்பிட்டீங்களா? என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க? நான் உங்களை மிஸ் பண்றேன்... அப்படின்னு ஏதாவது சொல்லு. அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய வித்தியாசத்தை கொடுக்கும்னு உனக்கு தெரியாது"

"போற போக்கை பார்த்தா, நான் அவங்களை மிஸ் பண்ணமாட்டேன் போல தெரியுது"

"ஏன்?"

"இங்க எனக்கு வெறுப்பா இருந்தா தானே மா நான் அவங்களை மிஸ் பண்ணுவேன்? நீங்க இவ்வளவு நல்லவங்களா இருந்தா, நான் எப்படி அவங்களை மிஸ் பண்ணுவேன்...?"

"கேட்க சந்தோஷமா இருக்கு. உண்மை என்னன்னா, அம்மா அப்பாவோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவங்களுக்கு மாற்றே கிடையாது. அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்க வேண்டியது உன்னோட கடமை"

"சரிம்மா. நான் தினமும் அவங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுறேன்" என்று கூறிய ஹரிணி, மேடையில் இருந்து கீழே குதித்து, அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ சோ மச்" என்றாள்.

அவள் கூறியதை கேட்டுக்கொண்டு சமையலறை வாசலில் நின்றிருந்தான் சித்தார்த். அவனைப் பார்த்து புன்னகைத்த தேவயானி,

"சித்து, என்னை பார்த்து பொறாமை படாதே" என்று சிரித்து, அவர்கள் இருவரையும் சங்கடப் படுத்தினார்.

"நான்... காபிக்காக வந்தேன்" என்று தடுமாறினான் சித்தார்த்.

"உன் பொண்டாட்டி எனக்கு முத்தம் கொடுக்குறதை பார்க்க தான் நீ வந்தேன்னு நான் சொல்லலையே..." என்றார் கிண்டலாக.

"எனக்கு ஒரு காபி கிடைக்குமா?" என்றான்.

"அவனுக்கு நீ காபி கொடுக்கிறியா ஹரிணி?"

அவள் சரி என்று தலையசைத்து, அவனுக்கு காபி போட பாலை சூடேற்றினாள்.

"உள்ள வா சித்து" என்றார் தேவயானி.

மாட்டேன் என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து விரைந்து சென்றான் சித்தார்த். அவன் தலை தெறிக்க ஓடுவதை பார்த்து சிரித்தார் தேவயானி.

"எதுக்காக மா அவரை நீங்க இப்படி கேலி செய்றீங்க?"

"நான் அப்படி செய்யறது உனக்கு பிடிக்கலையா?" என்றார்.

அதற்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை ஹரிணிக்கு.

"அவருக்கு அது வெறுப்பைத் தரலாம்"

"நான் அப்படி நினைக்கல"

"அவர் கொஞ்சம் *மூடியா* தெரியறார்"

"அவன் அப்படி இருக்குறானேன்னு நம்ம விட்டுடக்கூடாது. அதுக்காகத் தான் நான் அவனைக் கிண்டல் பன்றேன்"

"அவர் உண்மையிலேயே அப்படி சொன்னாரா?"என்றாள் தயக்கத்துடன்.

"எப்படி?"

"நான் அழகா இருக்கேன்னு..." என்றாள் தயங்கி தயங்கி.

"நீ என்ன நினைக்கிற? நான் இட்டுக்கட்டி பேசுறேன்னு நினைக்கிறாயா?"

இல்லை என்று அவசரமாய் தலையசைத்த ஹரிணி, ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள்.

"இல்லாத விஷயத்தை நான் இட்டுக்கட்டி பேசுறது இல்ல" என்று சிரித்தார் தேவயானி.

"அப்படின்னா, அவருக்கு என்னை பிடிக்குமா?"

"ரொம்ப பிடிக்கும். நீ வேணும்னா அவனை கவனிச்சு பாரு. நீயே தெரிஞ்சுக்குவ"

சரி என்று யோசனையுடன் தலையசைத்தாள் ஹரிணி. உள்ளூர புன்னகைத்துக் கொண்டார் தேவயானி. இந்த நிமிடத்திலிருந்து, சித்தார்த்தின் எல்லா செயலையும் ஹரிணி கவனிக்கத் தொடங்கி விடுவாள் என்று அவருக்கு தெரியும். இனி, தன் மனதில் இருப்பதை மூடி மறைப்பது சித்தார்த்துக்கு சுலபமாய் இருக்காது.

.....

தனது அறைக்கு வந்த ஹரிணி, அலமேலுவுக்கு ஃபோன் செய்தாள். அலமேலுவின் குரலில் இருந்த உற்சாகத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன பிரியா, காலைல எனக்கு ஃபோன் பண்ணியிருக்க?"

"உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு மா. உங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன்"

அதைக்கேட்டு புன்முறுவல் பூத்தார் அலமேலு.

"இந்த ஒரு காலகட்டத்தை எல்லா பொண்ணுங்களும் கடந்து தான் ஆகணும். ஸ்கூல் முடியும் போது அழுத... காலேஜ் முடியும் போதும் அழுத... அதே மாதிரி தான் இப்பவும்... இதுவும் உனக்கு பழகி போகும்"

"நீங்க என்னை மிஸ் பண்ணலயா?"

"ரொம்பவே மிஸ் பண்றேன். நம்ம வீடு அவ்வளவு அமைதியா இருக்கு. ஆனா இது தான் எதார்த்தம். அதை நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இப்போ நீ என்கிட்ட ஃபோன் பண்ணி பேசுறல்ல? அது போதும் எனக்கு. நீ சந்தோஷமா இருந்தா, நாங்க சந்தோஷமா இருப்போம்"

"சரி மா... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?"

"ஒரு ஸ்பெஷலும் இல்ல. ( எதையோ யோசித்தவர் ) ஆங்... உனக்கு ஷீலாவை ஞாபகம் இருக்கா? ஷிவானி ஃப்ரெண்ட்...?"

அவளுக்கு ஏதோ பொறி தட்ட.

"நல்லா ஞாபகம் இருக்கு மா" என்றாள்.

"அவளுக்கு கல்யாணம். ஷிவானி இறந்த விஷயம் தெரியாம, நம்ம வீட்டுக்கு இன்விடேஷன் அனுப்பி இருக்கா"

சில நொடி யோசித்த ஹரிணி,

"அவ கல்யாணத்துக்கு நான் போயிட்டு வரட்டுமா அம்மா?" என்றாள்.

"நீ போகப் போறியா? ஏன்?"

"எனக்கு மும்பைக்கு போகணும், மெரைன் டிரைவ் பாக்கணும்னு ரொம்ப ஆசை மா. இந்த சான்சை நான் பயன்படுத்திகிறேனே..."

"ஆனா, நீ எப்படி போக முடியும்? உன்னை சித்தார்த் கூட்டிக்கிட்டு போவாரா?"

அடக் கடவுளே...! இந்த விஷயத்தை அவள் ஏன் யோசிக்கவில்லை? அவள் அம்மா கூறுவது சரி தான். முசுடு மாமா ஒரு கணிக்க முடியாத பீஸ். அப்பொழுது சித்தார்த் பற்றி தேவயானி கூறியது அவள் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அவர் கூறுவது உண்மையாய் இருந்தால், அவர் கூறுவது போல் சித்தார்த்துக்கு அவளை பிடித்திருந்தால், அவன் நிச்சயம் அவளை மும்பைக்கு அழைத்துச் செல்வான். இந்த விஷயம் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அவள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் ஆகும். சித்தார்த் தன்னை விரும்புகிறானா என்று தெரிந்து கொண்டது போலும் ஆயிற்று, ஷீலாவை சந்தித்து ஷிவானியை பற்றி தெரிந்து கொண்டது போலும் ஆயிற்று... ஹரிணியின் ஆர்வம் அதிகமாயிற்று.

"அம்மா, ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்"

"சரி, நான் அப்பாகிட்ட பேசறேன். அவர் உன்னை மும்பைக்கு கூட்டிக்கிட்டு போக சொல்லி சித்தார்த்கிட்ட சொல்லுவார். சரியா?"

"என்ன ஒரு ஐடியா...! அலமுன்னா அலமு தான்...!"

"நான் முதல்ல அப்பாகிட்ட பேசிடுறேன். அது வரைக்கும் இதைப் பத்தி நீ சித்தார்த்கிட்ட எதுவும் சொல்லாத"

"சரி மா"

அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். ஷீலாவை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஹரிணிக்கு அதிகரித்தது. இந்த சந்திப்பு நிச்சயம் அவளுக்கு ஷிவானியை பற்றிய உண்மையை விளக்கும். ஷீலாவுக்கு நிச்சயம் ஷிவானியை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இதற்கு வெங்கடேசன் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் என்ன சொல்லப் போகிறாரோ...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top