16 ஷிவானியின் மர்மம் என்ன?

16 ஷிவானியின் மர்மம் என்ன?

மறுநாள் காலை

நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த ஹரிணியின் பக்கத்தில் அமர்ந்து, அவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவள் தான் எவ்வளவு அழகு...! அவள் மனதைப் போலவே முகத்திலும் களங்கம் இல்லை. அவன் கண் விழித்தவுடன் தன்னையும் எழுப்பி விடுமாறு கூறினாளே...! நிம்மதியாய் உறங்கி கொண்டிருப்பவளை எப்படி எழுப்புவது? மெல்லிய குழல் கற்றைகள் சில அவள் கன்னத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவள் தூக்கத்தை கலைத்து விடாமல் மெதுவாய் அதை ஒதுக்கி விட்டான். ஏதோ நினைத்துக் கொண்டு, சட்டென்று கட்டிலை விட்டு கீழே இறங்கி, குளியலறையை நோக்கி நடந்தான். அவன் முகம் கழுவி வெளியே வந்த போது, இன்னும் அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து லேசாய் அவள் கன்னத்தை தட்டினான்.

"ஹரிணி..." என்றான்.

"ம்ம்ம்?"

"எழுந்திடு..."

சிறிய முனகலுடன் தன் உடலை நெட்டி முறித்து அவனை மென்று விழுங்க வைத்தாள் ஹரிணி. கண்ணைத் திறந்து அவனை பார்த்து, அழகாய் புன்னகைத்தாள்.

"குட் மார்னிங்" என்றாள்.

"குட் மார்னிங்"

கட்டிலின் மீது எழுந்து அமர்ந்து தூக்கம் கலையாதவளாய் இங்குமங்கும் பார்த்தாள்.

"தூக்கம் வந்தா தூங்கு" என்றான் சித்தார்த்.

"விட்டா நான் இன்னைக்கு ஃபுல்லா  தூங்கிக்கிட்டே இருப்பேன்"

சிரித்தபடி கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். ஜாக்கிங் செல்லாமல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற துவங்கினான் சித்தார்த்.

குளித்து முடித்துவிட்டு வந்த ஹரிணி, அவன் தண்ணீர் ஊற்றி கொண்டிருப்பதை பார்த்து, அவனிடமிருந்து தண்ணீர் குழாயை தன் கையில் பெற்றுக் கொண்டாள்.

"நீங்க போய் குளிங்க. நான் செய்யறேன்"

சரி என்று கூறிவிட்டு நடந்தான் சித்தார்த்.

"உங்க தோட்டத்துல ரோஜா செடி இல்லையா?" என்றாள் தன் கண்களை அங்கிருந்த செடிகளின் மீது தவழவிட்ட வாறு.

அந்த தோட்டத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிகளை அவளிடம் காட்டினான்.

"எனக்கு ரோஜா செடி ரொம்ப பிடிக்கும்" என்றாள் ஹரிணி.

"அதுல இப்ப தான் மொட்டு விட்டிருக்கு. அது பூத்த உடனே நீ அதை எடுத்துக்கலாம்"

"இல்ல... அது செடியில் இருந்தா தான் எனக்கு பிடிக்கும்"

"ஓ... "

"செடியிலிருந்து பறிச்சா கொஞ்ச நேரத்திலேயே வாடி போயிடும். செடியிலேயே இருந்தா ரெண்டு மூணு நாளைக்கு அழகாய் இருக்கும் இல்ல?"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"சரி, நீங்க போங்க"

குளியலறையை நோக்கி நடந்தான் சித்தார்த்.

சமையலறை

சிற்றுண்டியை சமைத்துக் கொண்டிருந்தார் தேவயானி. ஹரிணி அங்கு வந்தவுடன் அவளை பார்த்து புன்னகைத்து,

"குட்மார்னிங்" என்றார்.

"குட் மார்னிங் அம்மா..." அவள் கூறியதை கேட்ட  தேவயானியின் கைகள், செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்தியது.

"நான் உங்களை அப்படி கூப்பிடலாம் இல்ல?"

"நீ அப்படி கூப்பிடுறது ரொம்ப சந்தோஷம்"

"ஷிவானி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா, அவளுடைய மாமியாரை அம்மான்னு தான் கூப்பிடுவேன்னு"

"அப்படியா? ஆனா, என்னை அம்மான்னு நான் கூப்பிட சொன்னப்போ, அவ மறுத்துட்டாளே...!"

"அப்படியா?" என்றாள் முகத்தில் குழப்ப ரேகை படர.

"ஆமாம். எந்த பார்மலிடீஸ்ஸும் வேண்டாம்ன்னு சொல்லிட்டா"

அதைக் கேட்டு அதிர்ந்தாள் ஹரிணி. ஏன் அப்படி கூறினாள் ஷிவானி? தன் மாமியார் வீட்டில் அவள் எப்படி இருக்கப் போகிறாள் என்பதை பற்றி அவள் அடிக்கடி பேசிக் கொண்டே இருந்தாளே...! என் மாமியாருடன் நான் அப்படி இருப்பேன்...! மாமியார் வீட்டில் நான் இப்படி செய்வேன்...! என்று தன் எதிர்காலம் குறித்து மிக நீண்ட கனவு இருந்தது அவளுக்கு. மாமியாரை அம்மா என்று கூப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஹரிணிக்கு ஏற்பட்டதே ஷிவானியால் தான். அப்படி இருக்கும் பொழுது, அவள் தேவயானியை ஏன் அம்மா என்று கூப்பிட மறுத்துவிட்டாள்?

சந்தேகத்தின் முதல் விதை ஹரிணியின் மனதில் விழுந்தது. அவள் ஏதோ ஆழ்ந்து யோசிப்பதை கவனித்தார் தேவயானி.

"என்னடா யோசிக்கிற?" என்றார்.

"நான் பாதாம் அல்வா செய்ய போறேன்" என்றாள் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

"ஆனா சித்து... "

அவர் கூறி முடிக்கும் முன்,

"ஸ்வீட் சாப்பிடமாட்டார்... அது தானே?  அவருக்கு சுகர் ஃப்ரீ யூஸ் பண்ணி செய்யலாம்"

சந்தோஷமாய் தலையசைத்த தேவயானி,

"நான் உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றார்.

"வேண்டாமா. நான் இதை யூட்யூபில் கத்துக்கிட்டேன்"

"பரவாயில்லையே... நடக்கட்டும்"

அவள் சமைப்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு நின்றார் தேவயானி. கம்ப்யூட்டர் உதவியுடன் சமையல் கற்றவளை போல் அல்லாமல், மனதார சமைத்தாள் ஹரிணி.

"நீ இதை ட்ரை பண்றது இது தான் முதல் தடவையா?" என்றார் தேவயானி.

"இல்ல மா... எங்க அம்மா தான் என்னுடைய *சோதனை எலி*" என்று அவள் சிரிக்க தேவயானியும் சேர்ந்து சிரித்தார்.

"இதை சாப்பிட்டு அவங்களுக்கு ஒன்னும் ஆகாம இருந்ததைப் பார்த்து தான் எனக்கு இதை இங்க சமைக்கிற  தைரியமே வந்தது. நல்லவேளை அவங்களுக்கு ஒன்னும் ஆகல... அலமு கிரேட் எஸ்கேப்..."

"நீ ரொம்ப லைவ்லி பர்சன் டா..." என்றார் தேவயானி.

எதையோ யோசித்த ஹரிணி,

"நானும் சிவாவும் பெஸ்ட் டீம். அவ லீவில் ஊருக்கு வரும் போதெல்லாம், நாங்க வீட்டை தலைகீழா மாத்திடுவோம். அவ எவ்வளவு ஜோவியல்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே..."

தேவயானியின் முகம் சட்டென்று மாறியதை கவனித்தாள் ஹரிணி.

"அவ உன்னை மாதிரி இல்ல... கொஞ்சம் ரிசர்வுடு டைப். ஒருவேளை, அவள் உயிரோட இருந்திருந்தா மாறி இருப்பாளோ என்னவோ..."

"அப்படின்னா, அவ உங்ககிட்ட கலகலன்னு பேசினது இல்லையா?"

இல்லை என்று தலையசைத்தார் தேவயானி. நம்பவே முடியவில்லை ஹரிணியால். அவளுக்கு தெரியாதா அவளுடைய அக்காவை பற்றி? எதற்காக அவள் தேவயானியுடன் ஒட்டாமல் இருந்தாள்? அவளுக்கு புரியவில்லை.

பாதாம் அல்வாவில் சர்க்கரை சேர்ப்பதற்கு முன், சிறிது எடுத்து வேறு வானலியில் மாற்றிவிட்டு அதில் சுகர் ஃப்ரீ கலந்தாள். தேவயானி செய்து வைத்திருந்த சிற்றுண்டியுடன் அதை உணவு மேஜைக்கு கொண்டு வந்து அனைவருக்கும் பரிமாறினாள் ஹரிணி. அனைவருக்கும் அது பிடித்தே இருந்தது... முக்கியமாய் நமது கதாநாயகனுக்கு. அது அவனுக்கென்றே அவள் பிரத்யேகமாய் செய்தது ஆயிற்றே...!

"ரொம்ப நல்லா செஞ்சிருக்க. உன்னோட கைப்பக்குவம், எங்க அம்மாவை எனக்கு ஞாபகப் படுத்துது" என்றார் தேவயானி.

"நிஜமாவா?" என்றாள் ஹரிணி.

"ஆமாம். எங்க மாமியார் ரொம்ப நல்லா சமைப்பாங்க" என்றார் சுவாமிநாதன்.

"ஆமாம்... ரொம்ப நல்லாயிருக்கு" என்றார் தேவயானி.

"தேங்க்ஸ் அம்மா"

அவள் தேவயானியை அம்மா என்று அழைத்ததை பார்த்து, அப்பாவும், பிள்ளையும் அவளை அதிசயமாய் பார்த்தார்கள்.

"உங்க அப்பா ஃபோன் பண்ணி இருந்தாரு. நீ உன்னோட காலேஜ் புக்ஸ்ஸை எல்லாம் இங்க கொண்டு வரலையாமே?" என்றார் சுவாமிநாதன்.

"கொண்டுவர வேண்டியது நிறைய இருக்கு பா... இப்போதைக்கு வேண்டியதை மட்டும் தான் கொண்டு வந்தேன்"

"இன்னைக்கு சித்து ஃப்ரீயா தானே இருக்கான்... போய் கொண்டு வாங்களேன்" என்றார் தேவயானி.

"நான் அவங்க ரெண்டு பேரையும் ஆஃபீஸுக்கு அனுப்பலாம்னு நினைச்சேன்" என்றார் சுவாமிநாதன்.

"ஆஃபிசுக்கு எதுக்கு?"

"சித்து ஒரு இன்வாய்ஸ்ஸை செக் பண்ணிட்டு சைன் பண்ணனும்னு சீனிவாசன் சொன்னான். அவங்க போயிட்டு வரட்டும்ன்னு நினைச்சேன்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. ஹரிணி அவளுடைய திங்சை எல்லாம் பேக் பண்ணி முடிக்கிறதுக்குள்ள, அவன் போய் சைன் பண்ணிட்டு வந்துடட்டும்" என்றார் தேவயானி.

ஹரிணி சித்தார்த்தை பார்க்க, அவன் சரி என்று தலையசைத்தான். அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

ஹரிணியின் மனதில், ஷிவானி குறித்த ஏராளமான கேள்விகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. ஷிவானி சித்தார்த்திடமாவது நல்லபடியாய் நடந்து கொண்டாளா? அவள் எப்போதாவது அவர்கள் இருவரும் சந்தோஷமாக பேசி பார்த்திருக்கிறாளா? எவ்வளவு யோசனை செய்த போதும், அப்படி ஒரு விஷயம் நடந்ததாக அவளுக்கு ஞாபகம் வரவே  இல்லை. அப்படியென்றால் அவர்கள் பேசிக்கொண்டதே இல்லையா? சித்தார்த் ஷிவானியை மிக ஆழமாய் காதலித்தான். ஆனால் அவளிடம் அவன் சகஜமாய் இருந்து அவள் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன், அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்தோ, ஒன்றாய் அமர்ந்தோ கூட அவள் பார்த்ததில்லை. யோசனையுடன் சித்தார்த்தை பார்த்தாள் ஹரிணி.

"உங்களுக்கு நான் செஞ்ச பாதாம் ஹல்வா பிடிச்சிருந்ததா?" பேச்சைத் துவங்கினாள் ஹரிணி.

"ரொம்ப நல்லா இருந்தது" என்றான்.

"நானே தான் சமைச்சேன்"

"அப்படியா? நான் அம்மா சொல்லிக் கொடுத்தாங்கன்னு நெனச்சேன்"

"அவங்க சொல்லிக் கொடுக்கிறேன்னு தான் சொன்னாங்க... ஆனா நானே செஞ்சிட்டேன். அவங்க ரொம்ப ஸ்வீட்டான மாமியார்"

லேசாய் புன்னகைத்தான் சித்தார்த்.

"அவங்க நிச்சயமா ஷிவானியை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க இல்ல...?"

அவனுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை. ஷிவானி உன்னைப் போல் இல்லை என்றா?

"ஷிவானி கூட ரொம்ப நல்லா சமைப்பா. அவ உங்களுக்கு என்ன செஞ்சு கொடுத்தா?"

"எதுவும் இல்ல"

"அப்படின்னா?"

"எல்லாருக்கும் செஞ்ச ஸ்வீட்டை தான் எனக்கும் கொடுத்தா"

"நீங்க ஸ்வீட் சாப்பிட மாட்டீங்கன்னு அவகிட்ட சொல்லலையா?"

இல்லை என்று தலையசைத்தான்.

"ஏன் சொல்லல? நீங்க சொல்லி இருந்தா உங்களுக்கு பிடிச்ச மாதிரி அவ ஏதாவது செஞ்சிருப்பா. பாவம், அவளுக்கு எப்படி தெரியும்? நீங்க ஸ்வீட் சாப்பிட மாட்டீங்கன்னு தெரிஞ்ச போது அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்?"

நான் முதலிரவு அறைக்குள் செல்வதற்கு முன்பே அவள் உறங்கி விட்டாள் என்று கூற வேண்டும் என்று தான் அவனும் நினைத்தான். ஆனால் அது நாகரீகமாக இருக்காது அல்லவா...?

"அவ சமைக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அம்மா அவகிட்ட சொல்லிட்டாங்க"

"சொன்ன பிறகுமா அவ உங்களுக்கு அதே ஸ்வீட்டை கொடுத்தா?"

 "ம்ம்ம்" என்றான் சித்தார்த்.

மேலும் குழம்பிப் போனாள் ஹரிணி.

.....

அவர்கள் வெங்கடேசன் வீட்டை வந்தடைந்தார்கள். தேவயானி கொடுத்தனுப்பி இருந்த இனிப்பு பலகாரங்களை எடுத்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்காமல் சித்தார்த் இறங்கட்டும் என்று காத்திருந்தாள் ஹரிணி.

"நீங்க வரப் போறது இல்லையா?"

வருகிறேன் என்று தலையசைத்தான்.

"கவலைப்படாதீங்க, நான் உங்களை என்கூட செஸ் ஆட சொல்லி கூப்பிட மாட்டேன்"

சிரித்தபடி காரை விட்டு கீழே இறங்கினான் சித்தார்த். அவர்களை வரவேற்றார்கள் வெங்கடேசன் தம்பதியினர். வரவேற்பறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சதுரங்க பலகையில் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் ஹரிணி.

"நீங்க வர போறீங்கன்னு சுவாமிநாதன் சொன்னாரு. நீங்க ரெண்டு பேரும் தான் செஸ் விளையாடுவீங்களே" என்று சிரித்தார் வெங்கடேசன்.

"இல்லப்பா, நான் இன்னைக்கு அம்மா கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்"

"ஏன்டா? "

"நான் அவர் கூட தானே வாழ்க்கை முழுக்க இருக்க போறேன். அப்பறம் விளையாடிக்கிறேன்..."

சரி என்று புன்னகையுடன் தலையசைத்தார் வெங்கடேசன். சித்தார்த்துக்கு ஆனந்தமாய் இருந்தது. அலமேலுவுடன் சமையல் அறைக்கு சென்றாள் ஹரிணி.

"உங்களுக்கு காபி வர்ற வரைக்கும் நம்ம ஒரு ஆட்டம் போடலாமா?" என்றார் வெங்கடேசன்.

"ஓ, யெஸ்" என்று சதுரங்கப் பலகையின் முன்னால் அமர்ந்தான் சித்தார்த்.

அவர்கள் ஆட துவங்கினார்கள். சில நிமிடங்களில் சித்தார்த்துக்கு காபி எடுத்து வந்தாள் ஹரிணி. அதை சித்தார்த்திடம் கொடுத்துவிட்டு, சதுரங்கப் பலகையின் முன் முழங்காலிட்டு அமர்ந்து, அவர்கள் ஆடுவதை கவனித்தாள். ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தாள். சித்தார்த் ஆட்டத்தை ஜெயித்தான்.

"நீங்க உங்க குயினை அந்த மாதிரி மூவ் பண்ணி இருக்க கூடாது பா" என்றாள் ஹரிணி.

"ஆமாம் அங்கிள், ஹரிணி சொல்றது சரி. அதனால தான் நீங்க தோத்துட்டிங்க"

ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தாள் ஹரிணி.

"அப்படின்னா நீ அதை என்கிட்ட முன்னாடியே சொல்ல வேண்டியது தானே?" என்றார் வெங்கடேசன்.

"நீங்க என் ஹஸ்பன்ட் கூட விளையாடும் போது நான் எப்படிப்பா சொல்ல முடியும்? உங்க ரெண்டு பேரையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. நீங்க ரெண்டு பேருமே தானே எனக்கு முக்கியம்?"

காலி குவளையை எடுத்துக் கொண்டு சாவகாசமாய் நடந்து சென்றாள் ஹரிணி, சித்தார்த்தை திக்குமுக்காட செய்துவிட்டு.

"பாத்தீங்களா சித்தார்த், இந்த பொண்ணுங்க எப்படி ஒரே நாள்ல மாறி போயிடுறாங்க...! நேத்து வரைக்கும் என்னோட அப்பா தான் எனக்கு எல்லாமேன்னு சொல்லிக்கிட்டு இருந்த பொண்ணு, இன்னைக்கு என் புருஷனும் அப்பாவும் ஈக்குவல்னு சொல்றா..."

தலை கால் புரியவில்லை சித்தார்த்துக்கு. அவனுக்கு தெரியும் ஹரிணியின் மனதில் வெங்கடேசன் பெற்றிருக்கும் இடம் எப்படிப்பட்டது என்று. உண்மையிலேயே அவள் தன் தந்தைக்கு சமமாகவா அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்?

"எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. நான் போய்ட்டு வந்துடுறேன் அங்கிள்" என்றான் சித்தார்த்.

"சரிங்க சித்தார்த்." என்றவர் சமையலறையை பார்த்தவாறு,

"ஹரிணி சித்தார்த் கிளம்பறாராம்" என்றார்.

ஹரிணியுடன் அலமேலுவும் வெளியே வந்தார்.

"கிளம்பிட்டீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.

"என்னை கூட்டிட்டு போக வருவீங்களா. இல்லன்னா நான் தனியாவே வந்துடவா?"

"இல்ல, நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்..." கூறி விட்டு நடக்கத் துவங்கினான் சித்தார்த்.

அவனைப் பின்தொடர்ந்து வந்த ஹரிணி அவனுக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தாள். எல்லாம் புதிதாய் இருந்தது சித்தார்த்துக்கு. மன நிறைவுடன் தன் மாமியார் வீட்டை விட்டு கிளம்பினான் அவன்.

"அவர் வரதுக்குள்ள நான் கோவிலுக்கு போயிட்டு வந்துடவா?" என்றாள் ஹரிணி அலமேலுவிடம்.

"சீக்கிரம் வந்துடு"

"சரி மா"

"நான் கூட்டிகிட்டு போகட்டுமா?" என்றான் வெங்கடேசன்.

"இல்லப்பா... பக்கத்துல தானே... நான் சீக்கிரம் வந்துடுறேன்" என்று கிளம்பினாள் ஹரிணி, ஷிவானி இறப்பதற்கு முன் சென்ற கோயிலுக்குத் தான் செல்கிறேன் என்று அவர்களிடம் கூறாமல்.

அவள் மனம் குழப்பம் அடையும் போதெல்லாம் கோவிலுக்குச் செல்வது அவளுக்கு வழக்கம்.

ஆட்டோவிலிருந்து இறங்கினாள் ஹரிணி. அந்த இடத்திற்கு வந்தவுடன் அவள் மனம் கனத்துப் போனது. அவளும் ஷிவானியும் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். அம்மன் பக்தை என்பதால் இங்கு வர தவறுவதில்லை ஹரிணி. கோவிலில் இருந்த பண்டிதரை பார்த்து புன்னகை புரிந்தாள். அந்த கோவில் பண்டிதர் அவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம். ஹரிணியிடம் பிரசாதத்தை கொடுத்துவிட்டு,

"நான் இப்ப வந்துடுறேன். போயிடாதே" என்று ஹிந்தியில் கூறினார் பண்டிதர்.

சரி என்று தலையசைத்தாள் ஹரிணி.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கி விட்டு, அவளிடம் வந்தார் பண்டிதர்.

"எப்படி இருக்க மா?"

"நல்லா இருக்கேன்"

"ஷிவானி அப்படி ஒரு முடிவு எடுப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றார் வருத்தத்துடன்.

அவர் எந்த முடிவை பற்றி கூறுகிறார் என்று புரியவில்லை ஹரிணிக்கு.

"அவ புருஷனோட சந்தோஷமா இருக்கலயா? அதைப் பத்தி உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?"

"நீங்க எதை பத்தி பேசுறீங்க?"

"அவ சந்தோஷமா இருந்திருந்தா ஏம்மா தற்கொலை பண்ணிக்கணும்?"

ஹரிணியின் உடலின் ரத்த ஓட்டமே நின்று போனது.

"அவ லாரி முன்னாடி வலிய போய் விழுந்ததை நான் பாத்தேன். உடனே அதை உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். ஆனா உன்னோட ஃபோன் நம்பர் என்கிட்ட இல்ல"

"நீங்க சொல்றது உண்மையா? அவ தற்கொலை பண்ணிக்கிட்டாளா?"

"ஆமாம். சாமி கும்பிடும் போது அவ அழுதுகிட்டே இருந்தா. என்ன விஷயம்னு கேட்டா, ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் எதிர்ல வந்த லாரி மேல போய் விழுந்து, தன்னுடைய வாழ்க்கையை முடிச்சிக்கிட்டா"

இது என்ன கொடுமை...! ஷிவானி தற்கொலை செய்து கொண்டாளா? ஆனால் ஏன்? அவள் சந்தோஷமாக இல்லையா? அவள் இறப்பதற்கு முதல் நாள் அவளை சந்தித்த போது எதையோ பறிகொடுத்தது போல் தான் இருந்தாள். தேவயானி கூட அதை பற்றிக் கூறி கவலைப் பட்டாரே.

ஹரிணியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவளும் ஷிவானியும் இசையும் சப்தமும் போல இணைபிரியாமல் இருந்தவர்கள். அவர்களுக்கிடையே எந்த ஒளிவு, மறைவும் இருந்ததில்லை. அனைத்து விஷயத்தையும் தன்னிடம் ஷிவானி கூறி விடுவாளே. எது அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது? இதைப் பற்றி சித்தார்த்துக்கு தெரியுமா? அவர் தானே அன்று அவளை கோவிலுக்கு அழைத்து வந்தார்? அல்லது... அவள் மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில் சித்தார்த் தான் காரணமா? இருக்காது... அவர் தான் அவளை உயிராய் நேசிக்கிறாரே... இதை பற்றி சித்தார்த்திடம் கேட்டால் என்ன? கேட்டால் அவர் எப்படி எடுத்துக்கொள்வார்? அவரை சந்தேகிப்பதாய் எண்ணிக் கொள்வாரோ? அவர் அவளது கணவன் ஆயிற்றே... திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் ஷிவானி தற்கொலை செய்து கொண்டால் என்ன நினைப்பது? அவரை சந்தேகத்தால் தான் என்ன தவறு? கணவன் மனைவிக்கு இடையில் என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்?

ஷிவானியை பற்றி தேவயானி கூறியதை எண்ணிப் பார்த்தாள் ஹரிணி. ஷிவானி தன்னிடம் எதையாவது மறைத்து விட்டாளோ? அது என்னவாக இருக்கும்? திருமணத்திற்கு பின், அவளது மாமியார் வீட்டில், அவள் ஒரு நாள் கூட சுறுசுறுப்பாய், சந்தோஷமாக இருந்து அவள் பார்க்கவே இல்லையே... ஏன் அப்படி இருந்தாள்? என்ன குழப்பம் இது?

இந்த விஷயம் தன் பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதன் பிறகு அவர்களால் நிம்மதியாக இருக்க முடியுமா? இந்த எதிர்பாராத, மோசமான உண்மையால் கதிகலங்கி போனாள் ஹரிணி. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஷிவானியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அவளுக்கு தெரிந்தாக வேண்டும். அதை எப்படியும் கண்டு பிடித்தே தீருவது என்று முடிவெடுத்தாள் ஹரிணி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top