13 நட்பு...
13 நட்பு...
இரண்டு வாரங்களுக்கு பிறகு திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது.
"சித்து, ஹரிணிக்கு தேவையான கல்யாண டிரஸ்ஸை எல்லாம் நீயே சூஸ் பண்ணிடு. நமக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு" என்றார் தேவயானி.
"ஹரிணிக்கு எந்த பிரச்சனையும் இல்லனா, நான் செய்றேன்" என்றான் ஹரிணியை பார்த்து.
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றாள் ஹரிணி.
"நீயே ஒரு டிசைனர் தானே ஹரிணி... நீ டிசைன் பண்ணது இருந்தா கூட சித்துகிட்ட குடு. அவன் அதையே டிசைன் பண்ணிடுவான்"
"அவ, நிறைய டிசைன் பண்ணி வச்சிருக்கா" என்றார் அலமேலு.
ஹரிணியின் கையிலிருந்து அவளது கைபேசியை பிடுங்கி, அதில் இருந்த சில டிசைன்களை எடுத்து தேவயானியிடம் காட்டினார் அலமேலு.
"ஹேய்... இதெல்லாம் ரொம்ப அழகா இருக்கு... சித்து இதைப் பாரேன்"
அவளது கைபேசியை சித்தார்த்திடம் கொடுத்தார் தேவயானி. அவள் வரைந்து வைத்திருந்தவை, சித்தார்த்தின் புருவத்தை உயரச் செய்தன.
"நீ இவ்வளவு அழகான டிசைன்ஸை வச்சிருக்கும் போது, எதுக்காக எனக்கு எந்த பிரச்சினையும் இல்லன்னு சொன்னே?" என்றார் தேவயானி.
அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாய் இருந்தாள் ஹரிணி. யோசனையுடன் முகம் சுருக்கினான் சித்தார்த். அவள் மனதில் என்ன இருக்கிறது? அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா? எதற்காக பட்டும்படாமலும் இருக்கிறாள்? ஒருவேளை, உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்ற வார்த்தைகளை கடைப்பிடிக்கிறாளோ?
"கல்யாணத்துக்கு முதல் நாள் நீ டிசைன் பண்ணியிருக்கிற லேஹங்காவை போட்டுக்கோ. ரொம்ப நல்லாயிருக்கு" என்றார் தேவயானி.
"எனக்கு அந்த டிசைன்ஸ் அனுப்புங்க ஆன்ட்டி. நான் எங்க கம்பெனி டிசைனர்கிட்ட கொடுத்து அதையே டிசைன் பண்ண சொல்றேன்" சித்தார்த்.
"இதோ அனுப்புறேன்" அந்த டிசைன்களை அவனுக்கு அனுப்பி வைத்தார் அலமேலு.
"சித்து, ஹரிணியை நம்ம ஆஃபீஸுக்கு கூட்டிக்கிட்டு போய், டிசைனர்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சிடேன். அவளுக்கு வேண்டியதை அவளே பேசிக்கட்டுமே" என்றார் தேவயானி.
"இது ரொம்ப நல்ல ஐடியா. இல்லையா ஹரிணி?" என்றார் அலமேலு.
ஆம் என்று தலையசைத்தாள் ஹரிணி.
"இப்போ டைம் இருந்தா கூட்டிக்கிட்டு போயேன்" என்றார் சுவாமிநாதன்.
"நீங்க போயிட்டு வரதுக்குள்ள நானும் டின்னர் ரெடி பண்ணிடுறேன்" என்றார் தேவயானி.
அலமேலு, வெங்கடேசனை பார்க்க, அவர் சரி என்று தலையசைத்தார்.
"முதல்ல உங்க டிசைனர் ஃப்ரீயா இருக்காங்களான்னு கேட்டுக்கோங்க" என்றார் வெங்கடேசன்.
தனது கைபேசியை எடுத்து சீனிவாசனுக்கு போன் செய்தான் சித்தார்த்.
"சொல்லுங்க சார்"
"கிரண் ஃப்ரீயா இருக்காங்களா?"
"ஃப்ரீயா தான் சார் இருக்காங்க. இப்ப தான் நம்முடைய அடுத்த பிராஜக்ட் ஃபைலை சப்மிட் பண்ணாங்க. நீங்க சைன் பண்ண வேண்டியது தான் பாக்கி"
"அவங்களை வெயிட் பண்ண சொல்லுங்க. நான் ஹரிணியை அழைச்சிகிட்டு இப்போ அங்க வரேன்"
"அவங்க ஆறு மணி வரைக்கும் ஆபீஸ்ல தான் சார் இருப்பாங்க"
"சரி" அழைப்பை துண்டித்தான் சித்தார்த், ஹரிணியின் மீது பார்வையை செலுத்தி.
"நான் போயிட்டு வரேன் மா" அவள் எழுந்து நின்றாள்.
சரி என்று தலையசைத்தார் அலமேலு. சித்தார்த் நடக்கத் துவங்க, அவனை பின்தொடர்ந்தாள் ஹரிணி.
காரில்...
தன் மூளையை குழப்பிக் கொண்டிருந்தான் சித்தார்த். தனக்கு பிடித்த உடையை டிசைன் செய்து கொள்ள அவள் ஏன் விரும்பவில்லை என்பதை அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று அவனுக்கு குழப்பமாய் இருந்தது. அவன் எதுவும் கேட்கும் முன்,
"நான் போட்ட பிளான் ஃபிளாப் ஆயிடுச்சி" என்றாள் ஹரிணி.
"எதைப் பத்தி பேசுற?"
"தேவா ஆன்ட்டி என்னுடைய டிசைன்ஸை வாங்கி பார்த்தாங்க இல்ல? அதைத் தான் சொல்றேன். நானே நாளைக்கு உங்க ஆஃபீசுக்கு வந்து, என்னுடைய டிசைன்ஸை உங்ககிட்ட கொடுக்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்."
அவள் அப்படி நினைத்ததற்கு என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
"ஏன்? உனக்கு என்ன வேணுமுன்னு நீ கேட்டிருக்கலாம் இல்ல?"
"நான் எல்லாரையும் சந்தோஷப்படுத்தலாம்னு நெனச்சேன்"
"எப்படி? "
"கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன்... நம்ம ரெண்டு பேருடைய டிசைனும் ஒரே மாதிரி இருந்தா, எப்படி இருந்திருக்கும்?"
அவள் கூறியது சுத்தமாய் புரியவில்லை சித்தார்த்துக்கு.
"யாருக்கும் தெரியாம என்னுடைய டிசைன்ஸ்ஸை உங்ககிட்ட ரகசியமா கொடுத்து, நீங்களும் அதை டிசைன் பண்ண பிறகு, அதை எங்க அம்மா பாத்திருந்தா அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்ன்னு நெனச்சிருப்பாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில பாசிட்டிவ் வேவ்ஸ் ஓடுதுன்னு நினைச்சி இருப்பாங்க. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்போம்னு நம்ப ஆரம்பிச்சுருப்பாங்க... ஆனா அதுக்கு சான்ஸ் இல்லாம போயிடுச்சு" பெருமூச்சு விட்டாள் ஹரிணி.
தன் பெற்றோர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவளது சிந்தனை அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. அவள் கூறிய வார்த்தைகளை அவள் கெட்டியாய் பற்றிக் கொண்டு விட்டாளோ என்று அவன் நினைத்திருந்தான். நல்லவேளை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான் சித்தார்த். அதேநேரம் அவனுக்கு சற்று வருத்தமாகவும் இருந்தது. நாளைக்கு அவளே நேரில் வந்து அவனை சந்திக்கலாமென்று இருந்திருக்கிறாள். அது நடக்காமல் போய்விட்டது. அவள் வந்திருந்தால், அவளுடன் வெகு நேரம் இருக்கக் கூடிய வாய்ப்பு அவனுக்கு கிடைத்திருக்கும்.
தேவா டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம்
டிசைனர் கிரணை ஹரிணிக்கு அறிமுகம் செய்து வைத்தான் சித்தார்த். அவர்கள் இருவரும் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொள்ள அவர்களுக்கு பின்னால் அமர்ந்து கொண்டான். அவன் அவர்களை குறுக்கீடு செய்யவில்லை என்றாலும், கணினியின் திரை அவனுக்கு தெளிவாய் புலப்பட்டது. ஹரிணியின் தொழில் ரீதியிலான பக்கத்தை பார்க்க வேண்டுமென்று விரும்பினான் அவன்.
ஹரிணியின் டிசைன்களை பார்த்த கிரண், வெகுவாய் கவரப்பட்டாள். அந்த உடைகளுக்கான வண்ணங்களையும் ஹரிணியே தேர்ந்தெடுத்தாள். அவற்றை மாற்றக் கூடாது என்பதில் அவள் பிடிவாதமாக இருந்தாள். அவள் மிகுந்த ரசனை உடையவள் என்பது நன்றாகவே புரிந்தது. அவை சித்தார்த்துக்கும் பிடித்திருந்தது. அவளுடைய டிசைன்களில் அவள் கூறிய வண்ணங்களை இட்டு நிரப்பி அவளிடம் காட்டினாள் கிரண். அதிலிருந்து ஒரு லெஹங்காவையும், சில ரவிக்கையையும் தேர்ந்தெடுத்துவிட்டு திருப்தியுடன் எழுந்தாள் ஹரிணி.
"நான் உங்களுக்கு சீக்கிரமாவே இதையெல்லாம் கொடுத்துடுவேன்" என்றாள் கிரண்
"தேங்க்யூ சோ மச்" என்று அவளை சம்பிரதாயமாக அணைத்து நன்றி கூறினாள் ஹரிணி.
சங்கடமாக போனது கிரணுக்கு. ஹரிணி, அவளுடைய பாஸின் வருங்கால மனைவி ஆயிற்றே. அவள் வெகு சகஜமாய் இருந்ததை பார்த்து புன்னகைத்துக் கொண்டான் சித்தார்த்.
"நான் கிளம்புறேன் மேடம்" என்றாள் கிரண்.
ஹரிணி எதுவும் கூறுவதற்கு முன்,
"நீங்க கிளம்புங்க" என்றான் சித்தார்த்.
கைப்பையை எடுத்துக்கொண்டு சென்றாள் கிரண்.
கணினியின் முன் அமர்ந்த சித்தார்த், ஹரிணி தேர்ந்தெடுத்து வைத்திருந்த லெஹங்காவின் வண்ணத்தை ரத்த சிவப்பிலிருந்து செர்ரி சிவப்பாக மாற்றினான். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவனருகில் அமர்ந்தாள் ஹரிணி. அந்த நிறம், முதலில் இருந்ததைவிட மிக கவர்ச்சியாய் இருந்தது. ஹரிணியை நோக்கி திரும்பிய சித்தார்த்,
"பிளட்ரெட் ரொம்ப பிரைட்டா இருக்கும். அந்த கலர்ல டிரஸ் போடும் போது, அது உன்னுடைய ஸ்கின் கலரை டாமினேட் பண்ணும். அதுவே ஜெர்ரி ரெட்டா இருந்தா, உன்னோட ஸ்கின் கலரை அது ஹைலைட் பண்ணும்"
"ஓஹோ... "
"இந்த கலர் உனக்கு பிடிச்சிருக்கா?"
"பிடிச்சிருக்கு. இது பார்க்க ரொம்ப நல்லா இருக்கு"
கணினியின் திரையை அவளை நோக்கி திரும்பி, கேமரா ஆப்ஷனை கிளிக் செய்து, ஹரிணியை புகைப்படம் எடுத்துக்கொண்டான். அந்த புகைப்படத்தை, லெஹங்காவுடன் எடிட் செய்து அவளுக்கு காட்டினான். ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள் ஹரிணி.
"நான் உங்களை மக்குன்னு நெனச்சேன்..." என்று அவள் கூறியவுடன் அவன் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே...!
உதட்டை கடித்து தலையை இடவலமாக அசைத்தான் சித்தார்த்.
"நீங்க அப்படி இல்ல போல இருக்கே..." என்று அவள் கலகலவென சிரிக்க, அவனும் புன்னகைத்தான்.
"போகலாமா?" என்றாள் ஹரிணி சிரித்தபடி.
"ம்ம்ம் "
அப்பொழுது ஹரிணியின் கைப்பேசி மணி ஒலித்தது. அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவுடன் அவள் முகம் மாறியது. அழைப்பை கோபமாய் துண்டித்தாள் ஹரிணி. அவள் அப்படி செய்வதை பார்த்து கண்களை சுருக்கினான் சித்தார்த்.
சீனிவாசனுக்கு சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு ஹரிணியுடன் கிளம்பினான் சித்தார்த். அதன் பிறகும் கூட அவளுக்கு அழைப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. இறுதியில் தனது கைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, கைப்பையில் வைத்துக் கொண்டாள் ஹரிணி.
அந்த அழைப்புகள் தேவையில்லாத நபரிடம் இருந்து வருகிறது என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவள் முகத்தில் தெரிந்த வெறுப்பு குறி, அதை அவனுக்கு உணர்த்தியது. ஆனால் அது யார் என்று அவனுக்கு தெரியவில்லை.
"அங்கிள் உனக்கு கால் பண்ணலாம்... உன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தா அவர் நெர்வஸ் அவாரு"
"ஏதாவது அவசரம்னா அவர் உங்களுக்கு கால் பண்ணுவாரு"
"உன்னுடைய ஃபிரண்ட்ஸ் கால் பண்ணலாம் இல்லையா?"
"எனக்கு யாரும் ஃபிரண்ட்ஸ் இல்ல" என்றாள் கோபமாக.
அவள் கோபத்தை பார்த்து பின்வாங்கினான் சித்தார்த்.
"உனக்கு ஃபோன் பண்ணது ரோஹித்தா?"
அவனுக்கு பதில் கூறவில்லை ஹரிணி. அப்படி என்றால் அது ரோஹித் தான்.
"எவ்வளவு நாளைக்கு அவனை நீ அவாய்ட் பண்ண முடியும்?"
"அவன்கிட்ட பேச நான் விரும்பல"
"நீ அவனுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணு"
"இத்தனை வருஷமா என் கூட இருந்து என்னை புரிஞ்சுக்காதவன், என்னுடைய வார்த்தைகளை மட்டும் எப்படி புரிஞ்சிக்குவான்?"
"புரிஞ்சுக்குவான்... ஏன்னா அவன் உன்னுடைய ஃபிரெண்ட்"
"இல்ல... அவன் என்னோட ஃப்ரெண்ட் இல்ல... ஏன்னா, அவனுடைய மனசு சுத்தம் இல்ல"
"ஏன் அவன் மேல இவ்வளவு கோவமா இருக்க?"
"தப்பு என்னுடையது தான். ஒரு ஃப்ரண்டா நான் அவன்கிட்ட ரொம்ப எதிர்பார்த்துட்டேன். ஒரு நல்ல ஃபிரண்டா கடைசி வரைக்கும் அவன் என் கூட இருப்பான்னு நெனச்சேன். ஆனா அவன் என்னை ஏமாத்திட்டான். அதனால தான், நான் யார்கிட்டயும் எதையுமே எதிர்பார்க்கிறது இல்ல. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தான் தருது"
"நீ உன்னை கூல் பண்ணிக்கிட்டு அவன்கிட்ட பேசுறது தான் சரி"
"நான் அவன்கிட்ட பேச விரும்பலன்னு சொன்னேன்ல?"
"ஆனா ஏன்?"
"அவன்கிட்ட இருந்து நான் விலகி இருக்கிறது தான் நல்லது. அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு என்னால அவன்கிட்ட முன்ன மாதிரி பழக முடியாது. உங்களுக்கும் அவனைப் பத்தி தெரியும். நான் பழைய மாதிரி அவன்கிட்ட பழக ஆரம்பிச்சா, அது தேவையில்லாம நம்ம வாழ்க்கையில நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி நடக்க வேண்டாம்னு நினைக்கிறேன்"
இந்தப் பெண் இன்னும் எத்தனை முறை தான் அவனுக்கு இப்படி ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறாளோ தெரியவில்லை. அவள் பிரச்சினைகளைக் கையாளும் விதமே அசத்தலாய் இருக்கிறது.
வண்டியை ஓரம் கட்டிவிட்டு, சற்று நேரம் அவளை ரசிக்க வேண்டும் என்று தோன்றியது சித்தார்த்துக்கு. அவள் ஏதோ முணுமுணுப்பதை கவனித்தான் அவன். அவள் பேசுவது அவன் காதில் விழா விட்டாலும் அவள் ரோஹித்தை திட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. அவனுடைய நடவடிக்கையால் அவள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். ஏன் இருக்காது? சிறுவயதிலிருந்து ஒன்றாய் பழகிய நண்பன். அவளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு கூட அவனை அழைக்க முடியாவிட்டால் வருத்தமாக தானே இருக்கும்? ரோஹித் எப்படியோ... ஆனால் ஹரிணி ரோஹித்துக்கு நல்ல தோழி.
பிரேக்கை அழுத்திக் காரை நிறுத்தினான்.
"உன்னோட ஃபோனை ஸ்விட்ச் ஆன் பண்ணு"
அவனை தயக்கத்துடன் பார்த்தாள் ஹரிணி.
"பிரச்சனையை தவிர்க்கிறதை விட அதை முடிக்க பாரு"
தன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக் கொண்டாள் ஹரிணி.
"உன்னை பார்க்க, அவன் நேரா உன் வீட்டுக்கு வந்தா என்ன செய்வ?"
"எனக்கு அவனுடைய ஃப்ரெண்ட்ஷிப் வேண்டாம். என்னால அவன் கூட பழைய மாதிரி பழக முடியாது"
"அப்படின்னா அதை அவன்கிட்ட நேரடியா சொல்லிடு"
சரி என்று தலையசைத்துவிட்டு தன் கைபேசியை ஆன் செய்தாள் ஹரிணி. அடுத்த நொடி அவள் கைப்பேசியின் மணி ஒலித்தது. தொடர்சியாக அவளுடைய எண்ணுக்கு தொடர்புகொள்ள ரோஹித் முயன்று கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. சித்தார்த்தை பார்த்தாள் ஹரிணி.
*பேசு* என்பது போல் அவளுக்கு ஜாடை காட்டினான்.
ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அந்த அழைப்பை ஏற்றாள் ஹரிணி, அவன் பேசுவதை சித்தார்த்தும் கேட்கட்டும் என்று.
"எதுக்காக என்னை டிஸ்டர்ப் பண்ற? உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கலைன்னு உனக்கு புரியலையா? ஸ்டாப் ஆல் யுவர் நான்சென்ஸ்" அவள் அழைப்பைத் துண்டிக்க முனைய,
"ஐ அம் சாரி ஹரிணி... ஐ அம் ரியலி சாரி. நான் என்னுடைய ஃபீலிங்சை உன்கிட்ட மறைச்சிருக்கக் கூடாது. உன் மனசுல என்னோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாதுன்னு நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்துட்டேன். எனக்கு இப்ப தான் தெரியுது, உன் மனசுல எனக்குன்னு இருக்கிறது ஃபிரண்ட்ஷிப் மட்டும் தான்னு. நீ என் கையிலிருந்து மொத்தமா போயிட்டேன்னு தெரிஞ்ச போது என்னால கோபத்தை கட்டுபடுத்த முடியல. அதனால தான் நான் அப்படி ரொம்ப கேவலமாக நடந்துக்கிட்டேன். அப்படி நடந்துக்கிட்டதுக்காக என்னை மன்னிச்சிடு ஹரிணி. சித்தார்த் கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு. உன்னால முடிஞ்சா, இவ்வளவு நாள் பழகின நம்ம நட்புக்காக என்னை மன்னிக்க முயற்சி பண்ணு. ஐ அம் சாரி" அழைப்பை துண்டித்தான் ரோஹித்.
ஹரிணியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. ரோஹித்தின் பேச்சு அவளை கலக்கமடைய செய்து விட்டது என்பதை உணர்ந்தான் சித்தார்த். ஆனால் ஏனோ அவனுக்கு மட்டும் ரோஹித்தை நம்ப வேண்டும் என்று தோன்றவில்லை. அவனுக்கு ஏதோ தவறாய் பட்டது. அவன் பேச்சில் தென்பட்ட கவலை, உண்மையாய் தோன்றவில்லை. ஆனால் ஹரிணியின் முகபாவம், அவள் அவனை நம்பி விட்டாள் என்று கூறியது. அவனால் ரோஹித்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பேசிய பேச்சு, அவன் எவ்வளவு கோபத்தில் கொந்தளித்து போய் இருக்கிறான் என்பதை காட்டியது. ஆனால் இப்பொழுது பேசியது, அதற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், நேர் மாறாய் இருந்தது. அவன் மனதில் என்ன இருக்கிறதோ தெரியவில்லை. சித்தார்த்துக்கு சரியாகப்படவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top