10 பேச்சு வார்த்தை

10 பேச்சுவார்த்தை (நீண்ட அத்தியாயம்)

வெங்கடேசனுக்கும் ஹரிணிக்கும் தேனீர் வழங்கிவிட்டு தானும் ஒரு குவளையை எடுத்துக் கொண்டு அமர்ந்தார் அலமேலு. தேநீரை பருகி முடித்துவிட்டு, காலியான குவளையுடன் எழுந்தாள் ஹரிணி.

"உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் மா" என்றார் வெங்கடேசன்.

மீண்டும் அமர்ந்து கொண்டாள் ஹரிணி. அவளுக்கு தெரியும், தன் தந்தை என்ன பேசப் போகிறார் என்று.

"உன்னை கேக்காம நான் சம்மந்தி அம்மாவுக்கு வாக்குக் கொடுத்துட்டேன்"

ஹரிணி ஏதோ கூற முயல, தன் கையை காட்டி அவளை தடுத்தார் வெங்கடேசன்.

"ஒரு அப்பாவா இது வரைக்கும் நான் எடுத்த எந்த முடிவும் தப்பா இருக்காதுன்னு நம்புறேன். அது உன் விஷயமா இருந்தாலும் சரி, ஷிவானி விஷயமா இருந்தாலும் சரி. எனக்கு எப்பவுமே என்னோட மகள்கள் சந்தோஷமா இருக்கணும்ங்குறது தான் விருப்பம். என்னோட கண்ணோட்டத்துல, சித்தார்த் மாதிரி ஒரு நல்ல பிள்ளையை நான் பார்த்ததில்ல. ஷிவானியோட மரணத்தால அவர் உடைஞ்சு போய் இருக்கார். அவருடைய இந்த நிலைக்கு நம்ம காரணம் இல்லனாலும், அதை சரிகட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, அவர் விடோயர் ஆயிட்டாரு. அவருக்கும் ஷிவானிக்கும் இடையில உறவு எப்படி இருந்ததுன்னு நமக்கு தெரியல. ஏன்னா நமக்கு நல்லா தெரியும், ஷிவானி ரொம்ப ரிசர்வ்டான பொண்ணு. அதுக்காக நான் இப்போ ரொம்ப சந்தோஷப்படுறேன். ஏன்னா, அவ மட்டும் ரொம்ப கலகலப்பா இருந்திருந்தா, அது சித்தார்த்தை இன்னும் அதிகமாக பாதிச்சிருக்கும்"

"நீங்க சொல்றது ரொம்ப சரி" -அலமேலு.

"என் மேல உனக்கு எந்த வருத்தமும் இல்லையே?"

"இல்லப்பா"

"உன்னை நான் சிக்கலான ரிலேஷன்ஷிப்ல மாட்டி விட்டுட்டேன்னு நினைக்காத. உன்னை விட நல்லா, வேற யாரும் இதுக்கு பொருந்துவாங்கன்னு எனக்கு தோணல. நீ புத்திசாலி பொண்ணு. சித்தார்த்தோட மனசு புரிஞ்சு, அவரை பொறுமையா ஹேண்டில் பண்ணுவேன்னு நான் நம்புறேன். அதோட, என் முடிவை ஏத்துக்கிட்டு சம்மந்தி அம்மா முன்னாடி நீ என்னை ரொம்ப பெருமையா உணர வச்சதுக்கு ரொம்ப நன்றி மா"

"எனக்கு தெரியும் பா...  ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி, அவ அப்பாவை விட வேற யாருக்கு அதிக கவலை இருக்கப் போகுது? நீங்க எது செஞ்சாலும் எங்க நல்லதுக்காகத் தான் செய்வீங்க.  மாமாவை பத்தியும் எனக்கு நல்லா தெரியும். ஷிவானி மேல அவருக்கு ரொம்ப பிரியம் அதிகம். அதை நானே பல தடவை பார்த்திருக்கேன். அவர் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. அவரோட கவலையை மறக்க வைக்க நான் நிச்சயம் முயற்சி செய்வேன் பா"

"என்னுடைய முடிவு எவ்வளவு சரியானதுன்னு நீ சீக்கிரமே  புரிஞ்சுக்குவ மா"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.

"இன்னொரு விஷயம், சித்தார்த்தை மாமான்னு கூப்பிட்டு, அவருக்கும் ஷிவானிக்கும் இருந்த உறவை ஞாபக படுத்தாத. நீ ஆசைப்பட்ட மாதிரி அவரை பேர் சொல்லியே கூப்பிடு" என்றார் வெங்கடேசன்.

 "சரிப்பா"

சிட்டி மருத்துவமனை

கட்டிலில் அமர்ந்திருந்தார் தேவயானி. அவருடைய தோழி டாக்டர் சாரா, அவருடைய ரிப்போர்ட்டை  பார்த்துக் கொண்டிருந்தார். சுவாமிநாதனும், சித்தார்த்தும் அவரருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

"நீ உன் மனசை அமைதியா வச்சிக்கணும், தேவா. எதுக்காகவும் உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. இன்னொரு அட்டாக் வந்ததுன்னா உன்னுடைய நிலைமை ரொம்ப மோசமாயிடும்" என்ற சாரா,
சுவாமிநாதனை வெளியே வருமாறு சைகை செய்தார். அவர்களை சித்தார்த் பின்தொடர்ந்தான்.

"என்ன ஆச்சு, சாரா?"

"எதுக்காக இவ இவ்வளவு வீக்கா இருக்கான்னு எனக்கு புரியல. எப்பவுமே ரொம்ப கூலா தானே இருப்பா? உங்களை மாதிரி எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துக்கிற ஹஸ்பண்டும், மகனும் இருக்கும் போது, அவ ஏன் இப்படி நம்பிக்கை இழந்து போயிருக்கா?"

"சித்தார்த் வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியாதா மா?"

"எல்லாம் தெரியும். ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன செய்றீங்க? நீங்க தானே அவளுக்கு தைரியம் சொல்லணும்?"

வேதனையுடன் நின்றிருந்த சித்தார்த்தை பார்த்தார் சுவாமிநாதன்.

"அவளை சந்தோஷமா வச்சுக்கோங்க. எதுக்காகவும் ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க. அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசாதீங்க. அவ இருக்கிற இடத்தை கலகலப்பா வச்சிருக்க முயற்சி பண்ணுங்க"

சரி என்று தலையசைத்தார் சுவாமிநாதன்.

"நான் அவகிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க இங்கேயே இருங்க"

சரி என்றார்கள் இருவரும். உள்ளே வந்த சாரா, தேவயானி கண்ணை மூடி படுத்திருப்பதை கண்டு, அவர் கன்னத்தில் லேசாகத் தட்டினார். சாராவை பார்த்தவுடன் எழுந்து அமர்ந்தார் தேவயானி.

"என்ன ஆச்சி?"

"கவலையே படாத... இனிமே சித்து உன்னை மறுத்து பேசமாட்டான்"

"தேங்க் யூ, சாரா"

"இதையே நான் மெயின்டேன் பண்ணணும்னு நினைக்கிறியா?"

"பின்ன...? அதனால தான் நான் உன்கிட்ட வந்தேன்...! சித்து எவ்வளவு உடைஞ்சி போயிருக்கான் தெரியுமா? அவன் எதுவும் செஞ்சி இந்த கல்யாணத்தை கெடுத்துட கூடாது"

"நான் பாத்துக்குறேன் விடு" என்றார் சாரா.

நிம்மதி பெருமூச்சு விட்டார் தேவயானி.

...

தன் அம்மாவை நினைத்து கலங்கி போனான் சித்தார்த். தன் அம்மாவை அப்படி பார்க்க சகிக்கவில்லை அவனுக்கு. அவன் ஏதாவது ஒரு முடிவை வேகமாய் எடுத்தாக வேண்டும். அதற்கு, அவன் ஹரிணியை சந்தித்து அவளுடைய மனநிலையை அறிய வேண்டும். அவளுடைய விருப்பத்தை, நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான். அவனுக்கு தெரியும், வெங்கடேசன் எந்த அளவிற்கு தன் மகள்களை கட்டுப்பாட்டில் வைக்கக் கூடியவர் என்று. ஒருவேளை அவர் அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் அவளை சந்திப்பது தான் இதற்கு நல்ல தீர்வைத் தரும்.

ஹரிணிக்காக அவளுடைய கல்லூரிக்கு வெளியே, காரில் அமர்ந்தபடி காத்திருந்தான் சித்தார்த். அவன் அவளிடம் செஸ் விளையாடி தோற்ற அடுத்த நாள், அவன் அவளை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற அடுத்த நாள், அவள் அவனுடைய அலுவலகம் வந்திருந்தாள். அன்று அவள் அவனிடம் பேசியதை எண்ணிப் பார்த்தான் சித்தார்த்.

அன்று...

தனது அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தினான் சித்தார்த். பளிச்சென்ற புன்னகையுடன் அவனது அறைக்குள் நுழைந்தாள் ஹரிணி. அவளுடைய திடீர் வருகையை எதிர்பார்க்காத அவன் திக்குமுக்காடிப் போனான். ஆனால் அவளுக்கு, அப்படிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை.

"ஹாய் மாம்ஸ்... " என்றாள் சாதாரணமாக.

அவளுக்கு *ஹாய்* கூறாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

"என்னால நம்பவே முடியல, இவ்வளவு பெரிய கம்பெனியோட சிஇஓ, பதிலுக்கு ஹாய் கூட சொல்லாத ஒரு சிடுமூஞ்சியா இருப்பார்னு நான் நினைக்கல. அது சரி, எங்க சிவா?"

சிவாவா? என்பது போல அவளை பார்த்தான் சித்தார்த்.

"அவளுக்கு கொஞ்சம் கூட பங்ச்சுவாலிட்டியே கிடையாது..."

"சிவாவா?"

"அவளை நான் இங்க வர சொல்லியிருந்தேன்"

முகத்தை சுருக்கினான் சித்தார்த்

"என்னை பாத்து நீங்க இன்செக்யூரா பீல் பண்ண கூடாதுன்னு தான்"

இந்த பெண்ணை என்ன செய்வது என்று எண்ணினான் சித்தார்த்.

அலுவலக தொலைபேசியை எடுத்து, ஷிவானியின் எண்ணுக்கு போன் செய்தாள் ஹரிணி, சித்தார்த்தின் அனுமதியின்றி. அந்த அழைப்பை ஏற்றாள் ஷிவானி.

"எங்க இருக்க?"

".... "

"என்னது இன்னும் கிளம்பவே இல்லையா?"

".... "

"நான் இங்க வந்துட்டேன்"

"....."

"ஆமாம்... உன்னோட முசுடு புருஷன் முன்னாடி தான் நிற்கிறேன்" என்றாள் மெல்லிய குரலில்.

தன் பார்வையை அவளை நோக்கி உயர்த்தினான் சித்தார்த். அவள் கூறியது அவன் காதில் விழுந்து விட்டது.

"போ... நீயும், உன் தலைவலியும்... நான் உன் மேல கோவமா இருக்கேன். உன்கிட்ட பேசமாட்டேன்" முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அழைப்பை துண்டித்தாள் ஹரிணி.

"அவ வரலையாம்" என்றாள் கவலையாக.

"நான் இங்க ஏன் வந்தேன் தெரியுமா?"

அமைதியாய் அவளை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திடம் இருந்து அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.

"சரி, நீங்க எனக்கு பதில் சொல்ல வேண்டாம். ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி உங்ககிட்ட பேச தான் வந்தேன். ( அவனை கோபப்பார்வை பார்த்தபடி கூறினாள். அது அவனுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது ) உங்ககிட்ட பேச மாட்டேன்னு சொல்ல தான் வந்தேன். ( அவளை திடமாய் பார்த்தான் சித்தார்த் ) உங்க மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன். நேத்து நீங்க என்னை பாதி வழியிலேயே இறக்கி விட்டுட்டு போனீங்க இல்ல? எப்படி நீங்க அப்படி செய்யலாம்? நான் தேவா ஆன்ட்டிகிட்ட உங்களை பத்தி கம்ப்ளைன்ட் பண்ண போறேன். அவங்க என்னோட ஃபிரண்ட்."

தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு,

"நான் ஒன்னும் உங்களை உங்க பொண்டாட்டிகிட்ட இருந்து பறிச்சிக்க மாட்டேன், நீங்க ரொம்ப அழகாகவே இருந்தாலும்..! அதனால நீங்க தைரியமா இருக்கலாம். இத அவ முன்னாடி சொல்லனும்னு தான் அவளை இங்க வர சொல்லி இருந்தேன். ஆனா அவ வரல"

அவன், அவளுடைய அக்காவை திருமணம் செய்வதற்கு முன்பே அவள் அவனை பறித்துக் கொண்டு விட்டாள் என்பதை அவன் எப்படி கூறுவான்?

"அப்புறம், உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லவும் தான் இங்க வந்தேன்( அவளுடைய முகபாவம் ஒட்டுமொத்தமாய் சந்தோஷமாய் மாறிப் போனது) நீங்க கொடுத்த பணத்துல, நான் நிறைய டிரஸ், ஹேண்ட்பேக், ஃபுட்வேர், எல்லாம் வாங்கினேன். இந்த டிரஸ் கூட நான் நேத்து வாங்கினது தான். நல்லா இருக்கா?" தனது கைகளை விரித்துக் காட்டினாள்.

அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. அதை பற்றி அவள் கவலைப் படவும் இல்லை.

"ஷாப்பிங் செம ஜாலியா இருந்தது... தேங்க்ஸ் மாம்ஸ்... சரி, நான் கிளம்பறேன். என்னை உள்ளே விட்டதுக்காக உங்க ரிசப்ஷனிஸ்ட்கிட்ட சத்தம் போடாதீங்க. சித்துவோட சிஸ்டர் இன் லா வை தடுக்கிற தைரியம் அவங்களுக்கு இருக்கும்னு எனக்கு தோனல"

"ஒரு நிமிஷம் "

அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஹரிணி.

"வாவ்... நீங்க பேசுவீங்களா...?" என்றாள் நக்கலாக.

"நீ ஒரு விஷயத்தை மறந்துட்டேன்னு நினைக்கிறேன்"

"என்னது? "

"என்கிட்ட பேச மாட்டேன்னு சொன்ன. ஆனா, அரை மணி நேரமா விடாம பேசிக்கிட்டே இருக்க..."

"இப்பவும் என்னோட முடிவுல நான் தீர்க்கமா தான் இருக்கேன். நான் உங்ககிட்ட பேச மாட்டேன். பை..."

சித்தார்த்தால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை. என்ன பெண் இவள்? மீண்டும் ஏதோ சொல்வதற்காக அவனை நோக்கி திரும்பினாள் ஹரிணி. *நடத்து* என்பது போல் அவளைப் பார்த்தான் சித்தார்த்.

"கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்னோட தொண்டை வத்தி போச்சு"

*இப்படி ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தால் ஏன் வற்றி போகாது?* என்று மனதில் நினைத்தான் சித்தார்த்.

தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜையின் மீது வைத்தான். அதை எடுத்து குடிக்க போனவள், குடிக்காமல் நின்றாள். அதன் உள்ளே பார்த்துவிட்டு சித்தார்த்தை பார்த்தாள்.

"என்ன?"

"இதுல என்னமோ இருக்கு" அவனை நோக்கி அந்த பாட்டிலை நீட்டினாள்.

குனிந்து அதன் உள்ளே பார்த்தான் சித்தார்த். உடனே அந்த பாட்டிலை அழுத்தினாள் ஹரிணி. அதில் இருந்த தண்ணீர் அவன் முகத்தில் பீச்சி அடித்தது. தண்ணீர் சொட்டச் சொட்ட அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் சித்தார்த்.

"வாட் த ஹெல்... "

கலகலவென சிரித்தாள் ஹரிணி.

"என்னை நடுரோட்டில் இறக்கி விட்டுட்டு போனீங்க இல்ல? அதுக்குத் தான்... ஹரிணிகிட்ட வெச்சுக்கிட்டா இப்படித் தான் நடக்கும்" சிரித்தபடி அங்கிருந்து ஓடி போனாள் ஹரிணி.

பேச்சிழந்து போனான் சித்தார்த். இது வரை அவனிடம் இப்படி எல்லாம் விளையாட யாருமே துணிந்ததில்லை. தன் கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

இன்று...

அன்று நிகழ்ந்ததை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான் சித்தார்த். கல்லூரி மாணவர்கள் வெளியில் வர துவங்கி விட்டிருந்தார்கள். காரை விட்டு கீழே இறங்கி நின்றான்.

தனது கல்லூரி வாசலில் சித்தார்த்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் ஹரிணி. சந்தேகமே இல்லை, அவனுடைய பார்வை அவள் மீது தான் இருந்தது. அவன் ஏன் அங்கு வந்திருக்கிறான் என்பதை ஊகித்துக் கொண்ட அவள், அவனை நோக்கி வந்தாள். இருவருமே சிரித்துக் கொள்ளவில்லை.

"நான் உன்கிட்ட பேசணும்" என்றான்.

சரி என்று தலையசைத்துவிட்டு அவனது காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் ஹரிணி. பேச ஆரம்பிக்கவே தயங்கினான் சித்தார்த்.

"என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்க?"

"நம்ம குடும்பத்துக்காக நீ இதை செய்ய வேண்டியதில்ல"

"இதைன்னா? நீங்க எதை பத்தி பேசுறீங்க?" அவள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது போல் அவனை கேட்டாள்.

"கல்யாணம்...! இது உன்னோட வாழ்க்கை. அதுல மத்தவங்களை முடிவெடுக்க விடாத. நம்ம அப்பா அம்மா விரும்புறாங்க அப்படிங்கிறதுக்காக நீ இதை ஒத்துக்காத. மத்தவங்களுடைய சந்தோஷத்துக்காக உன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக்காத. நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா?"

கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

"உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய். பெரியவங்க சொல்றதுக்காக எல்லாத்துக்கும் சம்மதிக்காத"

"நீங்க ஷிவானியை ரொம்ப காதலிக்கிறிங்கன்னு எனக்கு தெரியும்."

இயலாமையுடன் மெல்ல தன் கண்களை இமைத்தான் சித்தார்த்.

"கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே மனைவியைப் பறிகொடுக்குறது எவ்வளவு வேதனையை தரும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அவளுக்கு உங்க மனசுல இருக்கற இடத்தை என்னால பிடிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். உங்களுக்கு, என்னோட *அதிகபிரசங்கி தனமான பேச்சு* பிடிக்காதுன்னும் எனக்கு தெரியும். அதனால தான் நீங்க என்னை அவாய்ட் பண்ணிங்க.  நான் அதை நிறைய தடவை ஃபீல் பண்ணி இருக்கேன். இப்போ, நான் என்ன ஃபீல் பண்றேன்னு உங்களுக்கு தெரியுமா? சிவா என்னுடைய அக்கா. அவ இடத்தைப் பிடிக்கிறது எனக்கு வேதனையா இருக்கு. அவகிட்ட இருந்து நான் எதையோ பறிச்சிக்கிற மாதிரி ஒரு உணர்வு ஏற்படுது. அவ இப்போ உயிரோட இல்லன்னா என்ன? நான் அப்படி நினைக்கவே இல்ல. அவ இன்னும் என்னோட தான் இருக்கா... நான் பிறந்ததிலிருந்து அவ கூடவே இருந்திருக்கேன்... ஆனா இப்போ..." தொண்டையை அடைக்க, கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஹரிணி.

"ஆமாம், நான் இதை நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னு தான் செய்யறேன்... நிச்சயமா செய்வேன். ஏன்னா, எனக்கு என் குடும்பம் தான் ரொம்ப முக்கியம். அவங்க எல்லாரும் எப்படி உடைஞ்சு போய் இருக்காங்க...! சிவாவுடைய நினைவிலிருந்து மீள முடியாம அவங்க எவ்வளவு தவிக்கிறாங்க. அவங்களுடைய இழந்த சந்தோஷத்தை என்னால திருப்பிக் கொண்டுவர முடியும்னா, அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்... முழு மனசோட செய்வேன்...! ஏற்கனவே தேவயானி ஆன்ட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி. அதுக்கு அவங்களுடைய மன வேதனை தான் காரணம். தன்னுடைய ஒரே பிள்ளையோட வாழ்க்கை நாசமாகிறதை பார்த்துகிட்டு எப்படி அவங்களால நிம்மதியா இருக்க முடியும்? மறுபடியும் அவங்க மனசை உடைக்கிற தைரியம் உங்களுக்கு இருக்கா? அவங்களுக்கு ஏதாவது சீரியஸா நடந்துட்டா என்ன செய்வீங்க? என்னால் அப்படி செய்ய முடியாது. உங்களுக்கு என்னை பிடிக்கலன்னா அதை உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிடுங்க. உங்களுக்கு வேற பொண்ணு பாக்க சொல்லுங்க. ஆனா அதை நான் செய்வேன்னு எதிர்பார்க்காதீங்க. எனக்கு என் குடும்பம் சந்தோஷமா இருக்கணும். உங்களுக்கு என்னைப் பிடிக்குதா பிடிக்கலையாங்குறதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா நான் முடியாதுன்னு சொல்ல மாட்டேன். "

சற்று நிறுத்தியவள்,

"எப்படி பாத்தாலும் நீங்க ஏற்கனவே அப்செட்டா தான் இருக்கீங்க. உங்க அப்பா அம்மாவோட சந்தோஷத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்செட்டா இருங்களேன்... ( தனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு ) நான் ஒன்னும் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீங்க என்னை நம்பலாம். நீங்க சிவாவை நெனச்சுக்கிட்டே இருங்க"

தன்னைப் பற்றி அவள் கொண்டிருந்த எண்ணத்தை கேட்டு, நொந்து கொண்டான் சித்தார்த். அவனுக்கு சந்தோசப் படுவதா, அல்லது, வருத்தப்படுவதா என்றே புரியவில்லை. அவன் விரும்பிய ஒரே ஒருத்தி, அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். என்ன கொடுமை இது...! அதே நேரம் அவனுக்கு சந்தோஷமாகவும் இருந்தது. அவன் சொல்வதைக் கேட்க அவள் தயாராக இல்லை. அவள் எடுத்த முடிவில் அவள் உறுதியாக இருக்கிறாள்.

"நீ ஒரு விடோயரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணுவாங்க" என்றான் சித்தார்த்.

"*எல்லாரையும்* பத்தியெல்லாம் நான் கவலைப்படல. என் கூட கடைசி வரைக்கும் வரப்போற, என்னை சேந்தவங்களை பத்தி மட்டும் தான் நான் கவலை படுவேன்."

"இந்த முடிவுக்காக நீ பின்னால வருத்தப்படலாம்"

எரிச்சலாடைந்தாள் ஹரிணி.

"உங்களுக்கு என்ன பிரச்சனை? ஆன்ட்டிகிட்ட சொல்லி உங்களுக்கு வேற பொண்ணு பாக்க சொல்லட்டுமா? ஏன்னா, எப்படி இருந்தாலும் உங்களுக்கு ஆன்ட்டி இன்னொரு கல்யாணம் பண்ணித் தான் வைப்பாங்க. உங்க அம்மா அதை செய்யலைன்னா, நிச்சயம் எங்க அப்பா செய்வாரு. அதனால நீங்க ரொம்ப நாள் கல்யாணம் பண்ணிக்காம இருக்க முடியாது. என்னைத் தவிர, நீங்க வேற யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், சிவா மேல நீங்க வச்சிருக்கிற பிரியத்தை  அவங்களால புரிஞ்சுக்கவே முடியாது. அதை புரிஞ்சுக்கோங்க. நான் எங்க அப்பாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அதை நான் மாத்திக்க மாட்டேன். நான் தான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்றேன்ல? அப்புறம் என்ன உங்களுக்கு பிரச்சனை? ( என்று சலித்துக் கொண்டு ) அதுக்கப்புறம் உங்க இஷ்டம்"

காரை விட்டு கீழே இறங்க முயன்றாள் ஹரிணி.

"உன்னை நான் ட்ராப் பண்றேன்"

"தேவையில்ல... கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க ஒன்னும் என்னை சகிச்சிக்க வேண்டிய அவசியமில்ல" என்றாள் வெடுக்கென்று.

அவள் கதவைத் திறக்கும் முன், காரை ஸ்டார்ட் செய்தான் சித்தார்த். திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் ஹரிணி.

"சீட் பெல்ட்டை போடு" என்றான் சாலையை பார்த்தபடி.

அது நிச்சயம் கட்டளை தான். அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் ஹரிணி. ஏனென்றால், இன்று அவள் அவனிடம் காண்பது புதிது. அவளை நோக்கி திரும்பி,

"சீட் பெல்ட்டை போடுன்னு சொன்னேன் ஹரிணி..." என்றான்.

நேராக அமர்ந்து கொண்டு தனது சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டாள் ஹரிணி. அதற்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஹரிணி அமைதியடைந்து விட்டதாகத் தெரிந்தது. ஆனால் சித்தார்த் அமைதியாக வில்லை.

அவன் விரும்பிய பெண் அவனை மணந்து கொள்ள சித்தமாய் இருக்கிறாள். ஆனால் அவள் அதை, தன் குடும்பத்திற்காகவும், அவளை பெற்றவர்களின் சந்தோஷத்திற்காகவும் செய்கிறாள். தன் அக்காவின் ஸ்தானத்தை பறித்துக் கொள்வதாய் நினைக்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு அவளை பிடிக்காத காரணத்தால், இந்த திருமணத்தில் அவனுக்கு விருப்பமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் கூறிய  *நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்* என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. உண்மையிலேயே அவள் அவனை டிஸ்டர்ப் செய்ய மாட்டாளா? அல்லது அதுவும் கூட, *நான் உங்ககிட்ட பேச மாட்டேன்* என்று கூறியது போல் இருக்குமா? பேசமாட்டேன் என்று கூறிவிட்டு, விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள் அல்லவா?  அது போலவே, டிஸ்டப் செய்ய மாட்டேன் என்று கூறி விட்டு விடாமல் டிஸ்டர்ப் செய்து கொண்டே இருப்பாளோ?

தன் எண்ணத்தை எண்ணி உள்ளுற சிரித்துக் கொண்ட சித்தார்த்,

*வேணாண்டா சித்து... ரொம்ப யோசிக்காதே. எதிர்பார்ப்பை வளர்த்துக்கிட்டாலே பிரச்சனை தான். கிடைச்சதை சந்தோஷமா ஏத்துக்கோ. உனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்கு அதை மறந்துடாத* என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top