1 பிடிச்சிருக்கு
1 பிடிச்சிருக்கு
உலகில் தமிழன் தடம் பதிக்காத இடமே இல்லை. அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் இன்றும் வெற்றிக்கொடி நாட்டி தமிழினத்தை சிறப்பித்துக் கொண்டு வருகிறார்கள். அப்படித் தான் நமது தலைநகர் தில்லியிலும்...!
புது தில்லி
புது தில்லியின் மையத்தில் அமைந்திருக்கும் அழகிய இல்லத்தின் சுவற்றில் *தமிழ் குடில்* என்ற பெயர் பலகை தமிழில் மின்னுகிறது. அந்த இல்லத்தின் உள்ளே நுழையும் நம் காதுகளில் தமிழ்த்தேன் பாய்கிறது.
*அமைதியான நதியினிலே ஓடம்* பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, அந்த குடும்பத்தை சார்ந்தவர்களோ ஏதோ தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
"அப்பா, ப்ளீஸ் தயவு செய்து எல்லாத்தையும் நிறுத்துங்க. கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து பார்த்து எனக்கு வெறுத்து போச்சு. பொண்ணு பார்க்க போகும் போது ஒரு மாதிரியும், சாதாரணமா பாக்கும் போது வேற மாதிரியும் இருக்காங்க பொண்ணுங்க..." என்று அலுத்துக் கொண்டான் சித்தார்த்.
மாநிறத்திற்கும், சிவந்த நிறத்திற்கும் இடைப்பட்ட நிறத்தில், கருகருவென்ற மீசையுடன், களையான முகத்துடன் பார்த்தவரை கவரும் வகையில் அழகாய் இருந்தான் சித்தார்த்.
"எல்லா இடத்துலயும் அப்படித் தான் நடக்கும், சித்து. பொண்ணு பார்க்க வரும் போது கொஞ்சமா மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கிறது சகஜம் தானே... " என்றார் அந்த குடும்பத் தலைவியும் சித்தார்த்தின் அம்மாவுமான தேவயானி.
அதை கேட்டு களுக்கென்று சிரித்தான் சித்தார்த்.
"கொஞ்சமாவா? அரை இன்ச்சுக்கு மேக்கப் பண்ணிக்கிட்டு வராங்க. அவங்க அந்த மேக்கப்பை எப்படி கலைப்பங்கன்னே எனக்கு புரியல... ஒருவேளை, சால்ட் பேப்பரை வச்சி தேய்ச்சி எடுப்பாங்களா?"
அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தார் சித்தார்த்தின் அப்பா சுவாமிநாதன்.
"இவன் பேசுறதை பாத்தா, ஒரு படத்தில் சந்தானம் சொல்றது மாதிரி, பொண்ணை நைட்டி போட்டு கூட்டிக்கிட்டு வந்து நிக்க வைக்க சொல்லுவான் போல இருக்கு..." என்றார்.
"அதே தான் பா... தூங்கி எழுந்துக்கும் போது அவ பார்க்க லட்சணமா இருந்தா போதும் "
"அப்படிப்பட்ட பொண்ணுக்கு நாங்க எங்கடா போறது? நம்ம தமிழ்ச்சங்கம் துரைசாமி தான் இந்த பொண்ணை பத்தி சொன்னாரு. அந்தப் பொண்ணோட அப்பா வெங்கடேசன் கூட நம்ம தமிழ் சங்கத்திலே மெம்பரா இருக்காராம். அவருடைய பொண்ணு ஷிவானி பிரியாவைத் தான் உனக்கு பாக்கலாம்ன்னு இருக்கோம்" என்றார் சுவாமிநாதன்.
"இந்த பொண்ணு உனக்கு பிடிச்ச மாதிரி இருப்பான்னு நம்புவோம்" என்றார் தேவயானி.
அதைக் கேட்டு கண்களை சுழற்றினான் சித்தார்த்.
"ஒவ்வொரு தடவையும் இதைத் தானே மா சொல்றீங்க? எனக்கு ஒரு பிரேக் குடுங்க"
"இது தான் கடைசி தடவை. எங்களுக்காக ஒத்துக்கோ. இந்த பொண்ணு உனக்கு பிடிக்கலைன்னா நீ நிச்சயமா பிரேக் எடுத்துக்கலாம்." என்றார் தேவயானி.
"சரி, நான் அவளைப் பாக்குறேன். ஆனா, என்னுடைய வழியில போய் பார்ப்பேன்..."
"எப்படியோ... நீ பாத்தா சரி..." என்றார் சுவாமிநாதன்.
வெங்கடேசனின் மகளைப் பற்றி எண்ணியபடி தன் அறைக்குச் சென்றான் சித்தார்த்.
மறுநாள் காலை
வழக்கம் போல ஜாகிங் செல்ல தயாரானான் சித்தார்த். ஆனால் அவன் எப்பொழுதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியை தேர்ந்தெடுத்தான். அந்த வழி, அவனை வெங்கடேசனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. சற்று தொலைவிலேயே தனது காரை நிறுத்தினான். அங்கு சிலர் ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான். அவனை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா? வெங்கடேசன் இல்லம் இருக்கும் திசையை நோக்கி மெல்ல ஓடத் துவங்கினான். வெங்கடேசனின் இல்லத்தை நெருங்கிய பொழுது அவனுடைய வேகம் குறைந்தது. அந்த வீட்டின் வெளியில் ஒருவருமில்லை. ஏமாற்றத்துடன் அந்த வீட்டை கடந்து சென்றான் சித்தார்த். தெருமுனைக்கு வந்த பின் மீண்டும் திரும்பி அவர்கள் இல்லத்தை நோக்கி மெல்ல ஓடத் துவங்கினான். இந்த முறை, அந்த வீட்டின் வெளியில் அசைவுகள் புலப்பட்டது. யாரோ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தார்கள். அது ஒரு பெண். ஓடுவதை நிறுத்தி விட்டு, தன் கைகளை சுழற்றியபடி மெல்ல நடக்கத் துவங்கினான். வெங்கடேசனின் வீட்டருகில் வந்தவுடன், தனது ஷூ லேசை கட்டுவது போல் பாசாங்கு செய்து நின்றான். வெங்கடேசனின் வீட்டில் ஒரு பெண், வாயில் டூத் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். பல் துலக்கும் போது கூட ஒரு பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியும் என்பதை அவன் அன்று வரை கனவிலும் நினைத்திருக்கவில்லை. முதல் முறையாக, ஒரு பெண்ணை பார்த்து அவன் மனதில் ஒரு புது உணர்வு ஏற்பட்டது.
வீட்டின் உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
"பிரியா... சீக்கிரமா வந்து காபி ஆறி போறதுக்கு முன்னாடி குடி"
"இதோ வரேன் மா... " என்று கூறி விட்டு, தண்ணீர் குழாயை மூடிவிட்டு, உள்ளே ஓடிச் சென்றாள் அந்த பெண்.
அப்படியென்றால் அவள் தான் வெங்கடேசனின் மகள் ஷிவானி பிரியா. சந்தேகமில்லாமல் அவனுக்கு அந்தப் பெண்ணை பிடித்து விட்டது. அவளுடைய குரலையும் சேர்த்து. அந்தப் பெண்ணை மனக்கண்ணில் நினைத்தபடி புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் சித்தார்த்.
தமிழ் குடில்
சுவாமிநாதனுக்கு சிற்றுண்டியை பரிமாறிக் கொண்டிருந்தார் தேவயானி. அவர்களுடன் வந்து அமர்ந்தான் சித்தார்த்.
"அம்மா, வெங்கடேசன் பொண்ணை எனக்கு பேசி முடிங்க" என்றான் சித்தார்த்.
"என்னது??? " என்று அதிர்ந்தார் தேவயானி.
"அவளை எனக்கு பெண் கேட்டுப் போங்கன்னு சொன்னேன்"
"உனக்கு திடீர்னு என்ன ஆச்சு?" என்றார் தேவயானி.
"அந்தப் பொண்ணை நீ பார்க்க வேண்டாமா?" என்றார் சுவாமிநாதன்.
"ஏற்கனவே பாத்துட்டேன்"
"எப்போ? எங்க? எப்படி?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் தேவயானி.
"இன்னைக்கு காலையில ஜாக்கிங் போனப்போ"
"மேக்கப் இல்லாமலா?" என்றார் சாமிநாதன் ஆர்வத்துடன்.
"தூங்கி எழுந்தவுடனே பார்த்தேன்... செடிக்கு தண்ணி ஊத்திக்கிட்டு இருந்தா... வாயில பிரஷை வச்சுக்கிட்டு"
"அப்படி இருந்தும் உனக்கு அவளை பிடிச்சிடுச்சா?" என்றார் சுவாமிநாதன் நம்பமுடியாமல்.
ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.
"என்ன டா டேஸ்ட் உனக்கு?" என்றார் சுவாமிநாதன்.
ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான் சித்தார்த்.
"அவளும் இவனை மாதிரியே செடிக்கு தண்ணி ஊதினதால இவனுக்கு அவளை பிடிச்சிடுச்சின்னு
நினைக்கிறேன்" என்றார் தேவயானி.
"அவ அழகா இருந்தா மா..."
சுவாமிநாதனும் தேவயானியும் ஒருவரை ஒருவர் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டார்கள். இது தான் முதல் முறை சித்தார்த் ஒரு பெண் அழகாய் இருக்கிறாள் என்று ஒப்புக்கொண்டது.
"அப்படின்னா, நாங்க அவங்க வீட்ல பேசலாமா?" என்றார் சுவாமிநாதன்.
ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.
"நிஜமாவே சீரியசா தான் சொல்றியா?" என்றார் தேவயானி.
"ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதிக் கொடுக்கணுமா?" என்றான் சித்தார்த்.
"ஏங்க, வெங்கடேசனுக்கு ஃபோன் பண்ணி, நம்ம எப்ப அவங்க வீட்டுக்கு பெண்பார்க்க வரலாமுன்னு கேளுங்க" என்றார் தேவயானி சந்தோஷமாக.
"அந்த பொண்ணு, வாயில இருந்து பிரஷை எடுக்கறதுக்கு முன்னாடி நம்ம போய் பொண்ணு கேட்டுடணும்னு நினைக்கிறேன்" என்றார் கிண்டலாக சுவாமிநாதன்.
சித்தார்த்தும் தேவயானியும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
"உண்மையிலேயே வாயில பிரஷ் இருக்கும் போது அவ அழகா இருந்தாளா?" என்றார் சுவாமிநாதன் நம்ப முடியாமல்.
ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.
"நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன் டா" என்று சிரித்தார் சுவாமிநாதன்.
உடனடியாய் வெங்கடேசனுக்கு ஃபோன் செய்தார் சுவாமிநாதன். வெங்கடேசனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சுவாமிநாதனையும் சித்தார்த்தையும் பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தார். மறுநாள் மாலை, பெண் பார்க்க வரச் சொல்லி அவர்களை அழைத்தார். சுவாமிநாதனும் ஒப்புக்கொண்டார்.
தன் மனம் கவர்ந்த பெண்ணைப் பார்க்க சித்தார்த் ஆர்வமாய் காத்திருந்தான். இந்த முறை டூத் பிரஷ் இல்லாமல் அந்த பெண்ணை பார்க்க விரும்பினான் அவன். ஷிவானி பிரியாவை நினைத்தபடி அலுவலகம் கிளம்பி சென்றான் சித்தார்த்.
ஜவுளி வியாபாரம் அவர்களுடையது. புது தில்லியின் மிக முக்கியமான இடங்களில், அவர்களுடைய மிகப் பெரிய ஜவுளிக் கடைகள் இருந்தன. தங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் உடைகளை வடிவமைப்பது, ஏற்றுமதி-இறக்குமதி என்று அனைத்து துறையிலும் அவர்கள் கொடிகட்டி பறந்தார்கள். சுவாமிநாதன் ஆரம்பித்த வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் விஸ்தரித்து இருந்தான் சித்தார்த்.
தேவா டெக்ஸ்டைல்ஸ்
அலுவலகம் வந்த சித்தார்த், தனது மேலாளர் சீனிவாசன் இன்னும் அலுவலகம் வராததை பார்த்து ஆச்சரியமடைந்தான். இன்று ஒரு முக்கியமான ஏற்றுமதி வியாபாரத்தை முடிக்க சீனிவாசன் கொழும்பு செல்ல வேண்டும். தனது கைப்பேசியை எடுத்து சீனிவாசனுக்கு ஃபோன் செய்தான் சித்தார்த். சீனிவாசனின் உடைந்த குரலைக் கேட்டு பதட்டமானான் சித்தார்த்.
"குட்மார்னிங் சார்" என்றான் சீனிவாசன் தாழ்ந்த குரலில்.
"என்ன ஆச்சு, சீனி? எங்க இருக்கீங்க?"
"நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் சார்"
"ஹாஸ்பிடல்லயா? உடம்பு சரி இல்லையா?"
"என்னோட ஒய்ஃப் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துட்டாங்க சார். ஆப்பரேசன் தியேட்டர்ல இருக்காங்க"
அதைக்கேட்டு அதிர்ச்சியானான் சித்தார்த். ஏனென்றால் சீனிவாசனின் மனைவி கருவுற்று இருந்தார்.
"எந்த ஹாஸ்பிடல்? "
"சிட்டி ஹாஸ்பிடல் சார்"
அழைப்பை துண்டித்து விட்டு சிட்டி ஹாஸ்பிடலை நோக்கி பயணமானான் சித்தார்த். ஆபரேஷன் தியேட்டரின் வெளியே கலங்கிய கண்களுடன் சீனிவாசன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனைப் பார்க்கும் போதே தெரிந்தது நிலைமை மோசம் தான் என்பது.
"என்ன ஆச்சி சீனி?"
"அபார்ஷன் ஆயிடுச்சு சார்" சீனிவாசனின் குரல் கம்மியது.
"என்ன சொல்றீங்க சீனி?" என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
"நான் எங்க அம்மாவை வர சொல்லி இருக்கேன் சார். அவங்க சீக்கிரம் வந்துடுவாங்க. நான் ப்ளான் பண்ண மாதிரி கொழும்பு கிளம்பிடுவேன்"
"ரிலாக்ஸ் சீனி... நீங்க அதை பத்தி கவலைப் படாதீங்க. நீங்க உங்க வைஃப் கூட இருங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை கேளுங்க"
"தேங்க்யூ சார்"
*நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்* என்று சித்தார்த் கூறினான் என்றால், சீனிவாசனுக்கு பதிலாக அவன் கொழும்பு செல்கிறான் என்று அர்த்தம். சீனிவாசனுக்காக சுவாமிநாதனும் தேவயானியும் வருத்தப்பட்டார்கள்.
ஆனால் அதே நேரம், சித்தார்த் கொழும்பு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது குறித்து அவர்களுக்கு வருத்தமாகவும் இருந்தது. முதல் முறையாக சித்தார்த் ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கூறி திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டான். ஆனால் சூழ்நிலை அவனை இப்பொழுது கொழும்புவுக்கு அழைத்துச் செல்கிறது. அவர்களை சமாதானப் படுத்தினான் சித்தார்த்.
"எனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சிருக்கு. நீங்க போய் பார்த்து பேசிட்டு வாங்க. நான் திரும்பி வந்ததுக்கு பிறகு மீதி விஷயத்தை பார்த்துக்கலாம். எனக்கு எல்லாத்தையும் அப்டேட் பண்ணுங்க."
அவனுடைய பெற்றோர் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அரை மனதாய் கொழும்பு கிளம்பி சென்றான் சித்தார்த்.
மறுநாள் காலை
சுவாமிநாதனும் தேவயானியும் பெண் பார்க்க வெங்கடேசன் இல்லம் கிளம்பிச் சென்றார்கள். சித்தார்த்தின் புகைப்படத்தை பார்த்த உடனேயே வெங்கடேசன் குடும்பத்தினருக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது. சுவாமிநாதன், தேவயானியின் அணுகுமுறையும் அவர்களை வெகுவாய் கவர்ந்தது. சித்தார்த்துக்கு எந்த அளவிற்கு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்பதை பற்றி தேவயானி அவர்களிடம் கூற, அவர்கள் மகிழ்ந்து போனார்கள். இந்த வரனை எப்படியும் முடித்தே தீருவது என்று முடிவெடுத்தார் வெங்கடேசன்.
"காலம் கடத்தாம அவங்க ஜாதகப் பொருத்தத்தை பார்த்துடலாமா?" என்றார் வெங்கடேசன்.
"தாராளமா நாளைக்கே செஞ்சிடலாம்" என்றார் சுவாமிநாதன்
"எங்க பக்கத்து வீட்டுக்காரர் ஜோசியர் தான். ரொம்ப நல்லா ஜாதகம் பாப்பாரு. கும்பகோணம் தான் அவருக்கு சொந்த ஊரு. நான் அவரை கூப்பிடட்டுமா?" என்று வெங்கடேசன் கேட்க, சுவாமிநாதனும் தேவயானியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வேண்டாம் என்று கூறினால் அவர் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்வாரோ என்று, சரி என்று தலையை அசைத்தார்கள்.
தனது பக்கத்து வீட்டு ஜோதிடரை அழைத்துக்கொண்டு வந்தார் வெங்கடேசன். பெண் வீட்டாருக்கு இந்த சம்பந்தத்தில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து மிக்க திருப்தி அடைந்தார்கள் சித்தார்த்தின் பெற்றோர்கள். சித்தார்த்திற்கு பெண்ணை பிடித்து விட்டது என்பதால், அவர்களுக்கும் கூட இதை தாமதப்படுத்துவதில் விருப்பமில்லை.
ஆனால் ஜோசியர் கூறிய விஷயம், அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. மணமகன், மணமகள் ஜாதகத்தை பொருத்தவரை, அன்றிலிருந்து பத்தாவது நாள் இருந்த ஒரே ஒரு முகூர்த்தம் தான் அவர்களுக்கு பொருந்தியது. அன்று அவர்களுக்கு திருமணம் நடைபெறா விட்டால், அடுத்த ஆறு மாதத்திற்கு அவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறினார் ஜோசியர்.
சித்தார்த்தின் பெற்றோர்கள், வெளியே எழுந்து வந்தார்கள் சித்தார்த்திடம் பேசி அவனுடைய எண்ணத்தை தெரிந்துகொள்ள. சித்தார்த்துக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினார் சுவாமிநாதன்.
"இப்போ நாங்க என்ன செய்றது? நீ என்ன சொன்னாலும் செய்ய நாங்க தயாரா இருக்கோம். முடிவு செய்ய வேண்டியது நீ தான் "
இந்த சூழ்நிலை சித்தார்த்துக்கு சிறிதும் சந்தோஷத்தை அளிக்கவில்லை. அந்தப் பெண்ணைத் தான் அவன் சதா நினைத்துக் கொண்டிருந்தான். அவளை பார்க்க முடியவில்லை என்று ஏற்கனவே அவன் வருத்தத்தில் இருந்தான். இப்போது என்னவென்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு காத்திருக்க வேண்டும் என்கிறார்களே...!
"அப்பா, பத்தாவது நாள் இருக்கிற முகூர்த்தத்தை ஃபிக்ஸ் பண்ணுங்க. நான் அதுக்கு முன்னாடி வந்துடுவேன்"
"நெஜமா தான் சொல்றியா?" என்றார் நம்பமுடியாமல்.
"ஆமாம்பா. நான் இன்னும் நாலஞ்சு நாள்ல இந்தியா வந்துடுவேன். நீங்க கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ணுங்க. நம்ம வீட்டிலேயே கல்யாணத்தை வைச்சுக்கலாம்"
நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சுவாமிநாதன்.
"அப்போ நாங்க மேற்கொண்டு பேசலாம் இல்லையா?"
"தாராளமா செய்யுங்க"
சந்தோஷமாய் அழைப்பைத் துண்டித்தார் சுவாமிநாதன். சித்தார்த் திருமணத்தை ஏற்பாடு செய்ய சொல்வான் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவன் கூறியதை அனைவரிடமும் கூறினார் சுவாமிநாதன். வெங்கடேசன் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது.
"இன்னும் அஞ்சு நாள்ல சித்தார்த் வந்துடுவான். நம்ம ஆக வேண்டிய வேலையை பார்க்கலாம்" என்றார் தேவயானி.
"நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம். நாளைக்கு குலதெய்வ பூஜையுடன் நாங்க வேலையை ஆரம்பிக்கிறோம்" என்றார் வெங்கடேசன்.
அவர்களிடமிருந்து விடை பெற்றார்கள் சித்தார்த்தின் பெற்றோர்கள்.
சித்தார்த்திற்கு ஃபோன் செய்தார் தேவயானி.
"சொல்லுங்கம்மா"
"பேசி முடிச்சிட்டோம்"
"ரொம்ப சந்தோஷம். அவளுடைய போட்டோவை எனக்கு அனுப்புங்க"
தன் நாக்கை கடித்தார் தேவயானி. மிதமிஞ்சிய சந்தோஷத்தில் அவர் ஷிவானி ப்ரியாவை புகைப்படம் எடுக்க மறந்து போனார்.
"அவ வாயில டூத் பிரஷ் இல்லையே, சித்து..." என்றார் சோகமாக.
தன் கண்களை சுழற்றிய சித்தார்த்,
"காமெடியா? சிரிப்பு வரல" என்றான்.
"அவ அரை இன்ச்க்கு மேக்கப் போட்டு இருந்தா. அதனால அவளை போட்டோ எடுக்கணும்னு எனக்கு தோனல. கவலைப்படாதே அடுத்த தடவை நிச்சயமா போட்டோ எடுத்து அனுப்புறேன்"
"ஃபோட்டோ எடுக்க மறந்துட்டு, கதை சொல்றீங்களா?" என்று சிரித்தான் சித்தார்த்.
"ஆமாண்டா... மறந்து தான் போயிட்டேன்"
"பரவாயில்ல விடுங்க"
"அவங்க வீட்டுல நாளைக்கு குலதெய்வ பூஜை போடுறாங்க. அதை பத்தி பேசுற சாக்குல, அவ நம்பரை வாங்கி உனக்கு கொடுக்கிறேன். நீயே அவ போட்டோவை அனுப்ப சொல்லி கேளு"
"போதும், நிறுத்துங்கம்மா"
"சரி..."
"நடக்கிறதை எனக்கு அப்டேட் பண்ணுங்க"
"நிச்சயமா... ஃபோட்டோஸோட"
"ஓகே "
"பை "
தன் மகன் இந்த திருமணத்தில் எந்த அளவிற்கு ஆர்வமாய் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார் தேவயானி. அவர் எண்ணம் தவறல்ல. சித்தார்த்துக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top