8 மதுமிதா தான்

8 மதுமிதா தான்

ரிஷியின் நண்பர்கள், அவன் அந்தப் பெண்ணைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசியதை கேட்டு வெறுத்துப் போனார்கள். அவன் அந்தப் பெண்ணை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தன்னுடைய உள் மனம் அவளை அவன் கண்டுபிடிப்பான் என்று கூறுவதைப் பற்றியும், அவன் பேசும் போதெல்லாம் அவர்கள் கையெடுத்து கும்பிட்டு, அழ துவங்கினார்கள்.

"மச்சான் தயவு செய்து எங்களை விட்டுடுடா... எங்களுக்கு காதுல ரத்தம் வருது..." கெஞ்சினான் பாலா.

"சேம் பிளட்" என்றான் ஜெயப்பிரகாஷ்.

"அந்தப் பொண்ண கண்டு பிடிக்க என்ன செய்யணும் சொல்லு, செய்றோம். ஆனா, இந்த மாதிரி பேசிப்பேசியே எங்களை கொல்லாத" என்று மூக்கை சிந்தினான் சுதாகர்.

"என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி டா தெரியுது? நான் பினாத்துறேன்னு நினைக்கிறீங்களா? என்னோட ஃபீலிங்க்ஸை நீங்களே புரிஞ்சிக்கலன்னா, வேறு யாருடா புரிஞ்சுக்குவா?" என்றான் ரிஷி.

"அந்தப் பொண்ணை கண்டுபிடிக்க நம்ம கிட்ட எந்த வழியும் இல்ல. சும்மா பேசறதனால என்ன மச்சான் ஆயிட போது?" என்றான் பாலா.

ரிஷிக்கும் கூட அதை எப்படி செய்வது என்று தான் புரியவில்லை.

மதுமிதா மட்டுமல்ல, அந்த ஒட்டுமொத்த கல்லூரியுமே ரிஷியின் திடீர் மாறுதலை கண்கூடாய் கண்டது. அவன் தனது சுறுசுறுப்பை மொத்தமாய் தொலைத்தான். எதிலுமே விருப்பமில்லாமல் இருந்தான். யாரிடமும் சண்டையிடுவதைக் கூட நிறுத்தி விட்டான். அவன் *டோன்ட் கேர்* என்று இருந்தது, அவனது நண்பர்களுக்கு எரிச்சலை தந்தது.

ஒரு வாரத்திற்கு பிறகு

சாப்பிடாமல், ரிஷி தனது தட்டில் கோடுகளை வரைந்து கொண்டிருந்ததை பார்த்த கிரிவரன்,

"ஏன் குட்டி, உனக்கு சாப்பாடு பிடிக்கலையா?" என்றார்.

"ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங் டாட்... நான் அந்தப் பெண்ணை சந்திச்சே ஆகணும்"

"எந்த பொண்ணு?"

"இந்த கேள்வியை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல டாட். நான் எந்த பொண்ணை பத்தி பேசுறேன்னு உங்களுக்கு தெரியாதா?"

"ஓ... உன்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாளே, அந்த பொண்ணை பத்தி பேசுறியா?"

அதற்கு ஆமாம் என்று பதிலளிக்காமல்,

"நான் கேர்ள்ஸ் கூட வெளியில போறத எல்லாம் நிறுத்திட்டேன் டாட். நான் *ஒருத்திக்கு ஒருத்தனா* இருக்கணும்னு விரும்புகிறேன்" என்றான்.

முகத்தில் ஆச்சரியம் ததும்பி வழிய, அவனை பார்த்தபடி அவன் பக்கத்தில் அமர்ந்தார் கிரிவரன்.

"என்ன குட்டி சொல்ற? அப்படின்னா..."

ஆமாம் என்று தலையசைத்தான் ரிஷி சோகமாக.

"அவளை விட ஒரு நல்ல பொண்ணு எனக்கு கிடைப்பான்னு, எனக்கு தோணலை டாட்"

"ஆனா, அவளைப் பத்தி நமக்கு எதுவும் தெரியாதே... அவ எங்க இருக்கான்னு கூட தெரியலையே"

"அவளை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டாட்..."

பெருமூச்சு விட்டார் கிரிவரன்.

"இப்படிப்பட்ட நம்ப முடியாத வார்த்தையெல்லாம் உன்கிட்டயிருந்து கேட்பேன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லை குட்டி... நீ உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் கூட மாறவே மாட்டேன்னு  நினைச்சுகிட்டு இருந்தேன்"

அவரைப் பார்த்து முறைத்தான் ரிஷிவரன்.

"ஒரு சாதாரண பொண்ணு உன்னை ரொம்ப சாதாரணமா மாத்திட்டு போயிட்டாளே..." என்று ஆச்சரியப்பட்டவர் சற்றே நிறுத்தி,

"எல்லாம் சரி குட்டி, அந்தப் பொண்ணை கண்டுபிடிச்சதுக்கு பிறகு, அவ காந்திமதி ரேஞ்சுக்கு இருந்தா என்ன செய்வ? ( வாய்விட்டு சிரித்தவர் ) பாக்காமலேயே காதல் எல்லாம் சினிமாவுக்கு தான் சரிப்பட்டு வரும். மறுபடியும் நல்லா யோசிச்சுக்கோ. காதல் கோட்டை படத்துல, அஜித்தும், தேவயானியும் அழகா இருந்தா மாதிரி உன் வாழ்க்கையிலும் நடக்கும்னு நினைக்காத..." என்றார் கிண்டலாய்.

"நான் என்ன எதிர்பாக்குறேன்னு இப்ப கூட உங்களுக்கு புரியலையா டாட்? நான் எத்தனையோ பெண்ணுங்களை பார்த்திருக்கேன்... அப்போ எல்லாம் எனக்கு ஏற்படாத உணர்வு, இப்போ எனக்கு ஏற்படுதுன்னா, உங்களால என்னை புரிஞ்சுக்க முடியலையா?"

"இப்போ உனக்கு அப்படி தோணலாம். ஏன்னா, அந்த பொண்ணு செஞ்ச நல்ல செயல் உன்னை ரொம்ப ஆழமா பாதிச்சிருக்கு. ஒருவேளை அவளை நீ பார்த்ததுக்கு பிறகு, அவ உன்னுடைய எதிர்பார்ப்புக்குள்ள வரலைன்னா,  லைஃப் நல்லா இருக்காது குட்டி"

"என்னோட மாற்றம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலையா டாட்?"

"நிச்சயம் சந்தோசத்தை கொடுத்திருக்கு. அந்த சந்தோஷம் நிலைக்கனும்னா நீ சந்தோஷமா இருக்கணும். சில முடிவுகள் நம்ம வாழ்க்கையை புரட்டி போட்டுடும்.  தப்பான முடிவை எடுத்துட்டா, அதை மாத்துறதுக்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலேயே கூட போகலாம்..."

"எனக்கு வரபோற ஒய்ஃப் அழகா இருந்தா போதும்னு நீங்க நினைக்கிறீங்களா டாட்?"

"அழகா *மட்டுமே* இருந்துட கூடாதுன்னு நினைக்கிறேன்..."

"இவளை விட நல்ல பொண்ணு உங்க புள்ளைக்கு கிடைப்பான்னு நினைக்கிறீங்களா?"

"நிச்சயம் இல்ல..."

"அப்புறம் என்ன டாட்? அவளை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு ஒரு வழி சொல்லுங்க."

"நமக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை அந்த டாக்டரும் நர்சும் மட்டும் தான். அவங்களை வச்சு தான் நாம் அவளை கண்டுபிடிக்க முடியும்"

ஆமாம் என்று தலையசைத்த ரிஷி, சாப்பிடாமல் அப்படியே விட்டுவிட்டு எழுந்தான். தனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அவன் எங்கு செல்கிறான் என்பதை யூகிப்பதில் கிரிவரனுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. அதனால் அவர் அவனை தடுக்கவில்லை.

தன் மகனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவருக்கு புதிய நம்பிக்கையை தந்தது.

"வாழ்க்கை, யாரை, எப்போ, எப்படி மாத்தும்னே புரியல... என் பிள்ளை சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும்" என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார் கிரிவரன்.

அரசு மருத்துவமனை 

தனது டூட்டியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டார் அந்த செவிலி. ஆனால் அவரைப் பார்க்காமல் தவற விடும் அளவிற்கு, அவ்வளவு ஒன்றும் ரிஷிவரன் அதிர்ஷ்டம் இல்லாதவன் அல்ல.  மருத்துவமனையின் வாசலில் அவரை பிடித்து விட்டான். அவனைப் பார்த்தவுடன், அந்த செவிலி அவனை அடையாளம் கண்டு கொண்டு புன்னகை புரிந்தார்.

"எப்படி இருக்கீங்க?" என்றார்.

"ரொம்ப நல்லா இருக்கேன்"

"அப்புறம் ஏன் இங்க வந்தீங்க?" என்று சிரித்தார்.

"நான் உங்களை பார்க்க தான் வந்தேன். எனக்கு உங்களோட ஹெல்ப் வேணும்"

"என்ன ஹெல்ப்?"

"அந்தப் பெண்ணை எங்கேயாவது பாத்தீங்கன்னா, எனக்கு கொஞ்சம் கால் பண்ணி சொல்ல முடியுமா?"

"எந்த பொண்ணு? உங்களை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணாளே, அவளா?"

"அவளே தான்... ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, சிஸ்டர்"

"நிச்சயமா பண்றேன். உங்க ஃபோன் நம்பரை கொடுத்துட்டு போங்க"

ரிஷயின் கைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு, தன் கைபேசியில் இருந்து அவனுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தார் அந்த செவிலி.

"என் பெயர் ரிஷிவரன்"

"ஆங்... எனக்கு தெரியும்" என்று அவனது எண்ணை தன் கைபேசியில் சேமித்துக் கொண்டார் அவர்.

அன்று, அவனால் டாக்டர் ஜெயச்சந்திரனை சந்திக்க முடியவில்லை. அவர் அன்று மருத்துவமனையில் இல்லை. ஏற்கனவே தனது டூட்டியை முடித்துக் கொண்டு சென்று விட்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு,

ஷாப்பிங் மால்

"எதுக்காக டா இப்படி எங்களையும் கூட இழுத்துகிட்டு அலைஞ்சுகிட்டு இருக்கே? எனக்கு ஷாப்பிங் வர்றதுனாலே பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா?" என்று சுதாகரின் மீது ஏறிந்து விழுந்தான் ரிஷி.

ரிஷிக்கு ஷாப்பிங் என்றாலே கடுப்பு என்று அவர்களுக்கு தெரியும். அதனால், பொய் கூறி அவனை அழைத்து வந்திருந்தான் சுதாகர்.

"விடு மச்சான். அவன் நம்ம ஃபிரண்டு தானே? அவனுக்கு மட்டும் வேற யார் இருக்கா? நம்ப தான அவனக்கு கம்பெனி கொடுக்கணும்" என்றான் பாலா.

"அது மட்டும் இல்ல மச்சான், ஏற்கனவே நம்மளை கட்டம் கட்ட அவனவன் வெறியோட சுத்திகிட்டு இருக்கானுங்க. என்னை எவனாவது சுத்து போட்டுட்டா, தனியா மாட்டிக்கிட்டு நான் என்ன செய்வேன்? அதுக்கு தான் உங்களை கூட்டிகிட்டு வந்தேன்" என்றான் சுதாகர்.

"ஒரு ஷர்ட் வாங்க இவ்வளவு தூரம் வரணுமா? வீட்டு பக்கத்துல இருக்கிற கடையில வாங்கிக்க வேண்டியது தானே? இல்ல, ஆன்லைன்ல புக் பண்ண வேண்டியது தானே?" என்றான் ரிஷி.

"வீட்டுக்குள்ளேயே இருந்தா போர் அடிக்கலயா? இன்னைக்கு சண்டே... பாரு, இந்த மால் எவ்வளவு கலர்ஃபுல்லா இருக்கு..." என்று அசைடு வழி தான் சுதாகர்.

மற்ற இருவரும் சிரிக்க, அவனைப் பார்த்து முறைத்தான் ரிஷி.

அதேநேரம் அந்த மாலின் மூன்றாவது மாடியில்...

தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க, அவருக்கு ஒரு கைப்பையை வாங்கிக் கொண்டு இருந்தாள் மதுமிதா.  அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது, யார் மீதோ அவள் மோதிக்கொள்ள போக, சற்று பின்வாங்கி,

"ஐ அம் ரியலி, சாரி" என்றாள்.

"ஏய்....! நீயா...! எப்படி இருக்க" என்றார் அவள் மீது மோதிக்கொள்ள இருந்த அந்த செவிலி.

"நான் நல்லா இருக்கேன்" என்று கூறிய மதுமிதா, அவர் யார் என்று கண்டு கொண்டு விட்டாள்.

"அன்னைக்கு எதுக்காக ரிஷியோட அப்பாவ மீட் பண்ணாமலேயே  ஹாஸ்பிடல் இருந்து அவ்வளவு அவசரமா போயிட்ட?" என்றார்.

"எனக்கு எங்க அம்மா கிட்ட இருந்து கால் வந்தது. அதனால தான் போயிட்டேன்"

"ஓ... அந்த பையன் ரிஷி இருக்கானே, அவன் உன்னை பாக்கணும்னு  தேடிக்கிட்டு இருக்கான் தெரியுமா?"

"ஓ... அப்படியா?" என்றாள் ஆர்வமில்லாமல்.

"என்கிட்ட அவனோட நம்பர் இருக்கு. டயல் பண்ணி கொடுக்கிறேன், பேசுறியா?" என்று தன் கைபேசியை வெளியில் எடுத்தார்.

"இல்ல வேண்டாம்.... எக்ஸ்கியூஸ் மீ..." அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து விரைவாய் நடையை கட்டினாள் மதுமிதா.

"ஏய்... நில்லுமா ஏன் இப்படி ஓடுற?" என்று அவள் பின்னால் அவர் ஓட, அங்கிருந்து சிட்டாய் பறந்து போனாள் மதுமிதா.

யோசிக்காமல் உடனடியாய் ரிஷிக்கு ஃபோன் செய்தார் அந்த செவிலி. அவரது எண், தன் கைபேசியில் ஒளிர்ந்ததை பார்த்து, ஒரு நொடியும் தாமதிக்காமல் அந்த அழைப்பை ஏற்றான் ரிஷி.

"ஹலோ" என்றான் ஆவலுடன்.

"ரிஷி, நான் அந்த பொண்ணை பார்த்தேன்"

"அந்தப் பெண்ணை பார்த்தீங்களா? எப்ப பார்த்தீங்க? எங்க பாத்தீங்க?"

"இப்போ தான்.. ஸ்பேஸ் மால்ல..."

"ஸ்பேஸ் மாலா? நான் அங்க தானே இருக்கேன்... எங்க அந்த பொண்ணு?"

"தேர்ட் ஃப்ளோர்ல இருந்து இப்ப தான் கீழே இறங்கி போறா. அவளுக்கு உன்னை பார்க்கிறதுல விருப்பம் இல்லன்னு நினைக்கிறேன்" அங்கிருந்து கீழே எட்டிப் பார்த்தார் அந்த செவிலி.

அவரிடம் பேசியபடி தன் தலையை உயர்த்தினான் ரிஷி. அவர் மூன்றாம் தளத்திலிருந்து கீழே எட்டி பார்ப்பதை  பார்த்து, அவரை நோக்கி கையசைத்தான். அப்போது, மதுமிதா எஸ்கலேட்டர் வழியாக இரண்டாவது தளத்திலிருந்து கீழே இறங்குவதை கண்டார் அந்த செவிலி.

"அந்த எஸ்கலேட்டரை பாரு... அந்த பொண்ணு தான்... ஆக்குவா ப்ளூ  டாப்ஸ்ஸும், ஒயிட் ஜீன்ஸ்ம் போட்டுக்கிட்டு, ஃபெதர் கட் பண்ணியிருக்கா பாரு..." என்றார் அவர்.

எஸ்கலேட்டரில் இறங்கிக் கொண்டிருந்த மதுமிதாவின் மீது ரிஷியின் பார்வை தாவியது. நம்ப முடியாத உணர்வை அவனது முகம் வெளிப்படுத்தியது. அந்தப் பெண் மதுமிதாவா?

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top