7 அவள் மதுமிதாவா?
7 அவள் மதுமிதாவா?
ஜெயச்சந்திரனின் அழைப்பை ஏற்றாள் மதுமிதா.
"ஹலோ அங்கிள்... "
"ரிஷியை காப்பாத்தின பொண்ணை பாக்கணும்னு ரிஷியும், அவனோட அப்பாவும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க" என்று சிரித்தார் ஜெயச்சந்திரன்.
"ரிஷி எப்படி இருக்கான் அங்கிள்?"
"இப்போ பரவாயில்ல. பெட்டரா இருக்கான். இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?" என்று பீடிகையுடன் தொடங்கினார் ஜெயச்சந்திரன்.
"என்ன அங்கிள்?"
"ஒரு பொண்ணு ரிஷியை பார்க்க வந்தா"
"ஓ..."
"அவ, தான்தான் ரிஷியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணேன்னு சொன்னா..."
அதைக் கேட்ட மதுமிதா அதிர்ச்சியானாள். யார் அந்த பெண்ணாக இருக்கும்?
"மது... லைன்ல இருக்கியா?"
மதுமிதா தன்னை சுதாகரித்துக் கொண்டாள்.
"இருக்கேன் அங்கிள். அப்புறம் என்ன ஆச்சு?"
"அப்புறம் என்ன... அப்பாவும், பிள்ளையும் அந்த பொண்ணை தலையில் தூக்கி வைச்சி கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க..."
மதுமிதா அமைதியானாள்.
"மது...."
"ஆங்..."
"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்த பொண்ணு அவ இல்லன்னு நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்"
"ஓ..."
"அவ ரிஷியோட கிளாஸ்மேட்டாம்"
"அவ பேரு என்ன அங்கிள்"
"எனக்கு தெரியலம்மா. அவங்களுக்கு அவ மேல சந்தேகம் வந்ததும், அவ அங்கிருந்து ஓட்டமா ஓடிப் போயிட்டா"
"ஓ..."
"அவனை காப்பாத்தின அந்தப் பொண்ணை, அவங்ககிட்ட கூட்டிகிட்டு வரச்சொல்லி என்னை ரெக்வெஸ்ட் பண்ணாங்க"
"ப்ளீஸ், அப்படி செய்யாதீங்க அங்கிள்"
"நீ அவங்களை மீட் பண்ணா, அவங்க உன்னை ட்ரபிள் பண்ணுவாங்கன்னு எனக்கு தோணல, டா"
"சரிங்க அங்கிள், நான் அதை பத்தி யோசிக்கிறேன்"
"ஓகே டா, குட் நைட்"
"குட் நைட் அங்கிள்"
அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவர்களிடம் என்ன ஆனாலும் சரி, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்ற முடிவில் இருந்தாள் மதுமிதா.
மறுநாள்
கல்லூரிக்கு வந்த தேஜஸ்வினியை சூழ்ந்து கொண்டார்கள் ரிஷியின் நண்பர்கள். அவர்கள் அவளை மடக்கி நிறுத்துவதை பார்த்த மதுமிதா, விஷயத்தை ஓரளவு யூகித்துக் கொண்டாலும் அதை நிச்சயப்படுத்தி கொள்வதற்காக, வேண்டுமென்றே அவர்களை கடந்து சென்றாள்.
"இங்க பாருடா... ரிஷியை ஹாஸ்பிடல்ல சேத்த தர்ம தேவதை இவங்க தான்" என்றான் பாலா.
தேஜஸ்வினி அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவர்கள் அவளுக்கு வழி விடாமல் நெறுக்கி கொண்டு நின்றார்கள்.
"எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு சொம்பை மாதிரி தெரியுதா....?" என்றான் சுதாகர்.
"எவ்வளவு தைரியம் இருந்தா, ஹாஸ்பிடலுக்கே போயி, அவங்க அப்பா முன்னாடியே நீ பொய் சொல்லியிருப்ப?" சீறினான் பாலா.
"உன்னோட சால்ஜாபுக்கு எல்லாம் ரிஷி மடியலன்னு தெரிஞ்சி, மதர் தெரேசா வேஷம் போட ட்ரை பண்ணியா?" என்றான் ஜெயபிரகாஷ்.
"ரிஷி காலேஜுக்கு வரும் போது. அவன் கண்ணுல பட்டுடாத... உன்னை காலி பண்ணிடுவான்.... உன் மேல அவ்வளவு காண்டுல இருக்கான்..." என்றான் சுதாகர்.
வந்த வழியே திரும்பி ஓடிப் போனாள் தேஜஸ்வினி.
அப்படி என்றால், ரிஷியை ஏமாற்ற நினைத்தது தேஜஸ்வினி தானா எண்ணியபடி தன் வகுப்பறைக்கு சென்றாள் மதுமிதா.
ஒரு வாரத்திற்கு பிறகு
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினான் ரிஷி. அவன் பரிபூரணமாய் குணமடைந்து விட்டான் என்று கூறுவதற்கில்லை. இடது கை எலும்பில் ஏற்பட்டிருந்த விரிசல் இன்னும் முழுமையாய் குணமடையவில்லை. ஆனால், அது ரிஷியை கல்லூரிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விடவில்லை. கையில் கட்டு கட்டியபடி கல்லூரிக்கு வந்துவிட்டான் ரிஷி.
உணவு இடைவேளை
எதையோ யோசித்தபடி, மரத்தடியில் அமர்ந்திருந்தான் ரிஷி. மற்ற மூவரும் அவனை சுற்றி அமர்ந்து இருந்தார்கள்.
"என்ன மச்சி அவ்வளவு டீப்பா யோசிச்சுகிட்டு இருக்க?" என்றான் ஜெயபிரகாஷ்.
"அந்த பொண்ணை பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"
"ஓ..."
"அவ என்னைப் பத்தி என்ன நினைச்சான்னு தெரியல... ஏன் எங்களை பார்க்காமலேயே ஹாஸ்பிடல்ல இருந்து போனா?"
"விடு மச்சான். அதையே ஏன் யோசிச்சுகிட்டு இருக்க?"
"எப்படிடா விட்டுடுறது?"
"எப்படி விடுறதுன்னா, என்ன அர்த்தம்?"
"அந்தப் பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாது. எனக்கும் அவளுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. அப்படி இருந்தும், என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கா. அடிபட்டவங்களை ஹாஸ்பிடல்ல சேர்க்கிறது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். அது மனிதாபிமானம் உள்ள எல்லாரும் செய்யறது தான். ஆனா, ராத்திரி எல்லாம் என் கூடவே இருந்து, தூங்காம என்னை கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கா... ஹொவ் ஸ்வீட்...! ஹொவ் கேரிங்...! அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு பொறுப்புணர்ச்சி பாரேன்...! அவ லட்சத்துல ஒருத்தி மச்சான்...! இந்த உலகம் ரொம்ப சுயநலமானது. இல்லாதவங்களுக்கு பத்து ரூபா குடுத்தா கூட செல்ஃபி எடுத்து, பேஸ்புக்ல போட்டு, தன்னை ரொம்ப நல்லவனா காட்டிக்க துடிக்கிற உலகம் இது. ஆனா, அந்த பொண்ணு அந்த மாதிரி இல்ல. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காம, ஒரு தேங்க்ஸ் கூட எதிர்பார்க்காம, எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கா. அப்படின்னா அவ எவ்வளவு கிரேட்...?"
ஆமாம் என்று தலையசைத்தான் பாலா.
"இந்த மாதிரி ஒரு பொண்ணு, லைஃப் பார்ட்னரா கிடைச்சா, நம்ம லைஃப் எவ்வளவு நல்லா இருக்கும்...!"
மூவரும் அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டார்கள்.
"கல்யாணம் பண்ணிக்கிட்டா, இப்படி ஒரு பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும், மச்சான்..."
"டேய்... என்னடா பேசுற நீ? அவ யாருன்னு கூட உனக்கு தெரியாது" என்றான் பாலா.
"அவளை நீ பார்த்தது கூட இல்ல" என்றான் சுதாகர்.
"அவ எப்படி இருப்பான்னு கூட உனக்கு தெரியாது" என்றான் பிரகாஷ்.
"எது எப்படி இருந்தாலும் சரி, நான் அவளை பார்க்கணும். நான் அவளை எப்படியும் கண்டுபிடிப்பேன்"
"ஒருவேளை, அவ கல்யாணம் ஆனவளா இருந்தா என்ன செய்வ?" என்றான் சுதாகர்.
"இல்ல. அவ கல்யாணம் ஆனவ இல்ல. அந்த நர்ஸ் என்கிட்ட தீர்க்கமா சொன்னாங்க"
"சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காத மச்சி, இது கேட்கவே ரொம்ப முட்டாள் தனமா இருக்கு" என்றான் பாலா.
"இல்ல, நான் அவளை நிச்சயம் சந்திப்பேன்னு என் உள் மனசு சொல்லுது"
"என்னடா இவன்...? உன் மனசுன்னு சொல்றான்... கல்யாணம்னு சொல்றான்... ரிஷிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத விஷயத்தை எல்லாம் பேசுறானேடா..." என்றான் ஜெயப்பிரகாஷ்.
"இவன் இந்த உலகத்திலேயே இல்ல மச்சான்" என்றான் சுதாகர்.
அவர்களின் கேலி கிண்டல்களுக்கு செவி சாய்க்கவில்லை ரிஷி. அமைதியாய் மரத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
"நம்ம சமூக சேவை செம்மல், தேஜஸ்வினி எங்கடா மச்சான் போனா?" என்றான் சுதாகர் நக்கலாக.
"அவ காலேஜுக்கே வரல" என்றான் ஜெயபிரகாஷ்.
"நம்ம மச்சான் இன்னைக்கு காலேஜுக்கு என்ட்ரி கொடுப்பான்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கும்" என்றான் பாலா.
"நீங்க அவளை ஏதாவது செஞ்சீங்களா?" என்றான் ரிஷி சிரித்தபடி.
"விட்டுடுவோமா நாங்க அவளை? எவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு...! நான் தான் உன்னை காப்பாத்தினேன்னு அவ சொல்லுவாளாம்... நாம நம்பிடுவோமாம்... என்னா வில்லத்தனம்...!" என்று பொறுமினான் பாலா.
"அதானே...? அவ எது சொன்னாலும் நம்ம நம்பிடுவோம்னு அவ நினைச்சிருக்கா பாரு... நம்மளை பாத்தா அவ்வளவு மக்கு மாதிரியா தெரியுது?" என்றான் சுதாகர்.
"நமக்கு பயந்துகிட்டு தான் அவ காலேஜுக்கு வரல..." என்றான் ஜெயபிரகாஷ்.
"லாங் லீவ் எடுக்கறது தான் அவளுக்கு நல்லது" என்றான் ரிஷி.
தன் வகுப்பை விட்டு வெளியே வந்த மதுமிதா, மரத்தடியில் அமர்ந்திருந்த ரிஷியை பார்த்து, ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். அவன் அன்று கல்லூரிக்கு வரப் போகிறான் என்று அவளுக்கு தெரியாது. அன்று காலை கல்லூரிக்கு அவன் தாமதமாய் வந்ததால், அவனை அவள் பார்க்கவில்லை. அவர்களது கேங்கை கடந்து, அவள் பெண்கள் அறையை நோக்கி நடந்தாள், ஓரக் கண்ணால் அவனை கவனித்தபடி. அவன் எதையோ பறிகொடுத்தது போல் இருந்தான். மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டு, ஒரு நீண்ட மெல்லிய குச்சியால் தரையைசோம்பலாய் அடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அடிபட்ட அவனது இடது கை, அவன் கழுத்தில் ஊஞ்சல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. அவன் இன்னும் முழுமையாய் குணமாகவில்லை என்பதை அது காட்டியது. அவனை முழுமையாய் அளந்து விட்டு, தன் கண்களை நேராய் திருப்பிக் கொண்டாள் மதுமிதா.
தன்னை கடந்து சென்ற மதுமிதாவை கண்டான் ரிஷி. ஜெயச்சந்திரன் கூறிய வார்த்தைகள் அவனது காதில் எதிரொலித்தன. ஃபெதர் கட் செய்யப்பட்ட அவளது அடர்ந்த கருங்கூந்தல், அலையலையாய் காற்றில் அழகாய் அசைந்தாடியது.
"டாக்டர் சொன்னாரு, அந்த பொண்ணு குண்டும் இல்லாம, ஒல்லியும் இல்லாம பூசுன மாதிரி இருந்தாளாம்... முகம் களையா இருந்துதாம்... ஃபெதர் கட் பண்ணி இருந்தாளாம்..." என்றான் மதுமிதாவை பார்த்தபடி.
அந்த மூன்று பேருடைய பார்வையும், ரிஷியின் பார்வை நிலைத்திருந்த திசையை நோக்கித் தாவியது. அவன் கூறிய அங்க அடையாளங்களுக்கு ஒத்துப்போன மதுமிதாவை பார்த்த அவர்கள்,
"தப்பு கணக்கு போடாத மச்சி... அந்தப் பொண்ணு மதுமிதாவா இருக்க துளி கூட வாய்ப்பில்ல... நம்ம அவளை ஓட்டுன ஓட்டுக்கு, நம்மள எந்த நிலைமைல பார்த்தாலும் காப்பாதணும்னு அவ சத்தியமா நினைக்க மாட்டா." என்றான் பாலா.
"ஆமாம் ப்ரோ... அவ இருக்கிற கடுப்புக்கு, பெரிய கல்லை தூக்கி நம்ம தலையில் போட்டு, மொத்தமா கணக்கை ஃபினிஷ் பண்ணா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல..." என்று சிரித்தான் சுதாகர்.
"அந்தப் பொண்ணு மதுமிதா தான்னு நான் சொல்லலையே" என்றான் ரிஷி மெல்லிய குரலில், சுரத்தே இல்லாமல்.
"ஆனா, அந்த பொண்ண பத்தி சொல்லும் போது, உன்னோட கண்ணு, அவ மேல இருந்ததே..."
"அவளோட ஃபெதர் கட்டை பார்த்த உடனே, டாக்டர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது..."
"ஃபெதர் கட் பண்ண பொண்ணுங்க நம்ம காலேஜ்லயே எக்கச்சக்கமா இருக்காங்களே..." என்றான் சுதாகர்.
"நம்ம கிளாஸ்லையே மூணு பேர் இருக்காங்க" என்றான் ஜெயபிரகாஷ்.
"இரு இப்ப வரேன்" என்று மதுமிதாவை நோக்கி ஓடிய சுதாகர், அவள் வழியை மறித்தான்.
அவன் திடீரென்று தன் முன்னாள் தோன்ற, திடுக்கிட்டு பின்வாங்கினாள் மதுமிதா.
"அந்த பொண்ணு நீ தானே?" என்றான்.
"எந்த பொண்ணு?" என்றாள் மதுமிதா.
"எங்களுக்கு தெரிஞ்சு போச்சு... சந்தேகமே இல்ல... அது நீ தான்..."
அங்கிருந்து ஒரே ஓட்டமாய் ஓடிப் போனாள் மதுமிதா. அவள் ஓடியதை பார்த்து அவன் சிரிக்க, பாலாவும் ஜெய்பிரகஷும் அவனுடன் இணைந்து கொண்டார்கள். தன் கையில் இருந்த நீண்ட குச்சியால், சுதாகரை ஒரு அடி போட்டான் ரிஷி. அவன் அடியில் இருந்து தப்பிக்க எம்பி குதித்தான் சுதாகர்.
"இடியட்... எதுக்காக டா அவளை ட்ரபிள் பண்ற நீ?" என்றான்.
"ஜஸ்ட் ஃபார் ஃபன்..." என்று சிரித்தான் சுதாகர்.
தன் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன், திரும்பி அவர்களை பார்த்த மதுமிதாவை பார்த்து புன்னகை புரிந்தான் ரிஷி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top