5 யார் அவள்?

 5 யார் அவள்?

"என் பிள்ளை எப்படி இருக்கான்?" என்றார் கிரிவரன் அந்த செவிலியிடம்.

"நல்லா இருக்காரு சார். கரெக்டான டைமுக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு வந்துட்டதால பிளட் லாஸ் நிறைய இல்ல. லேட்டா கொண்டு வந்திருந்தா, அவரோட கண்டிஷன் ரொம்ப கிரிட்டிக்கல்லா தான் இருந்திருக்கும்"

ரிஷிவரனை மருத்துவமனையில் சேர்த்த அந்த பெண்ணை, இங்கும் அங்கும் தேடினார் கிரிவரன். அவள் அந்த அறையில் இல்லாமல் போகவே,

"அந்த பொண்ணு எங்க சிஸ்டர்?" என்றார்.

"டீ குடிச்சிட்டு வரேன்னு கேன்டினுக்கு போனா, சார்"

"அப்படிங்களா? சரி, நான் போய் பாத்துட்டு வரேன்"

அந்தப் பெண்ணை தேடி கேன்டினுக்கு சென்ற கிரிவரன், அங்கு யாரையும் காணாமல், மீண்டும் அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினார்.

"கேண்டின்ல யாரும் இல்லையே சிஸ்டர்...?" என்றார்.

"ஒருவேளை பாத்ரூமுக்கு போயிருக்காளோ என்னவோ. இப்ப வந்துடுவா... அவ உங்க சொந்தக்கார பொண்ணா தான் சார் இருக்கணும்"

"இல்ல சிஸ்டர். அவ எங்க சொந்தக்கார பொண்ணு இல்ல. உண்மைய சொல்ல போனா, அவ யாருன்னே எனக்கு தெரியாது"

"என்ன சார் இப்படி சொல்றீங்க? நான் அவ உங்களுக்கு ரொம்ப நெருக்கமான சொந்தமா இருப்பான்னு நெனச்சேனே"

"எத வச்சு நீங்க அப்படி நினைச்சீங்க, சிஸ்டர்?"

"அவருக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு மாதிரியும், உங்க பிள்ளையோட உயிர் அவளுக்கு ரொம்ப முக்கியம் மாதிரியும் அவரை பார்த்துக்கிட்டா சார்" அந்த செவிலி சற்று மிகைப்படுத்தி தான் கூறினார்.

அவர் கூறியது, கிரிவரனின் புருவங்களை உயரச் செய்தது.

"அவ உங்க சொந்தக்காரி இல்லனா, எதுக்காக சார் அவ்வளவு அக்கறை எடுத்து கவனிச்சுக்கிட்டா?" என்ற கேள்வியும் எழுப்பினார்.

அவருக்கே ஒன்றும் புரியாத போது, கிரிவரினால் என்ன பதில் கூற முடியும்?

"ஒரு நிமிஷம் கூட தூங்கல சார் அந்த பொண்ணு. சரியா டைம்க்கு ஊசி போட எனக்கு நியாபக படுத்தினா..." தனக்கு யார் என்றே தெரியாத ஒருவனுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்த அந்த பெண்ணை, அந்த செவிலிக்கு ரொம்பவே பிடித்து விட்டது.

அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று கிரிவரனுக்கும் ஆர்வம் அதிகமானது.

"இருங்க சார், நான் போய் பார்த்துட்டு வரேன்"

கழிப்பறைக்கு வந்து, அந்தப் பெண் அங்கு இருக்கிறாளா என்று தேடிப் பார்த்தார் அந்த செவிலி. அவள் எப்படி அங்கு இருப்பாள்? அவள் தான் ஏற்கனவே கிளம்பி சென்று விட்டாளே! ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார் அவர். அவர் எதுவும் கூறும் முன், அவள் அங்கும் இல்லை என்ற உண்மையை, அவரது முகமே கிரிவரனுக்கு  விளக்கி விட்டது.

அந்தப் பெண்ணைப் பற்றி யோசித்தபடி, ரிஷிவரனின் பக்கத்தில் அமர்ந்தார் கிரிவரன். ஏன் அவள் அங்கிருந்து திடீரென்று மாயமானாள்? அவர் மருத்துவமனைக்கு வந்து சேரும் வரை அவள் அங்கு தானே இருந்தாள்? அவசர சிகிச்சை பிரிவிற்கு வருவதற்கான வழியை கூட அவள் தானே அவருக்கு கூறினாள்? பிறகு அவரை சந்திக்காமல் அவள் ஏன் சென்றாள்? அவருக்கு ஒன்றுமே பிடிப்படவில்லை.

மறுநாள்

ரிஷிவரனுக்கு பக்கத்தில் அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்தார் கிரிவரன். அப்போது ரிஷிவரனின் கைப்பேசி ஒலிக்கவே, அதை எடுத்து யாருடைய அழைப்பு என்று பார்த்தார் கிரிவரன். அந்த அழைப்பு பாலாவினுடையது. அழைப்பை ஏற்றார் கிரிவரன்.

"ஹாய் மச்சி..."

"பாலா..." என்று கிரிவரன் கூறவும்,

"அப்பா, ரிஷி எங்கபா?" என்றான்.

"அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கு, பாலா"

"ஹாஸ்பிடல்லயா? எதுக்குப்பா?"

"நேத்து சாயங்காலம் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சி"

"ஆக்சிடென்ட்டா? எந்த ஹாஸ்பிட்டல பா இருக்கான்?" என்றான் பதற்றத்துடன்.

"ஜி ஹெச் ல இருக்கான்"

"இதோ வரேன் பா" என்று அழைப்பை துண்டித்து விட்டு, தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி ஓடினான் பாலா, தன் மற்ற நண்பர்களுக்கு ஃபோன் செய்தவாறு.

.....

மதுமிதாவுக்கு ஃபோன் செய்தார் ஜெயச்சந்திரன். கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அவள், அந்த அழைப்பை ஏற்றாள்

"குட் மார்னிங் அங்கிள்"

"ரிஷியோட அப்பா ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டாரா டா?"

"வந்துட்டாரு அங்கிள்"

"நீ அவரை மீட் பண்ணியா?"

"இல்ல அங்கிள். நான் தான் சொன்னேனே, என்னைப் பத்தி அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம்னு"

"எதுக்காக நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கே டா?"

"உங்களுக்கு அவங்க கேங்கை பத்தி தெரியாது அங்கிள். ரிஷி தான் எங்க காலேஜோட டான். அவனும், அவனோட பிரண்ட்ஸும் எங்க காலேஜ்ல செய்யற அலப்பறை இருக்கே... சொல்லி மாளாது. அதுவும், அவன் என்னோட டிபார்ட்மெண்ட் கிடையாது. நான் தான் அவனைக் காப்பாத்தினேன்னு அவனுக்கு தெரிஞ்சா, நான் சம்மந்தப்பட்ட எல்லா விஷயத்துலயும் மூக்கை நுழைப்பான். அது, தேவையில்லாம அவனுக்கும் என்னுடைய டிபார்ட்மென்ட் பசங்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். ப்ளீஸ், என்னை பத்தி எதுவும் சொல்லிடாதீங்க அங்கிள்" என்றாள் கெஞ்சலாக.

பெருமூச்சு விட்ட ஜெயச்சந்திரன்,

"சரிடா, நான் எதுவும் சொல்லல. அவன் அப்பாவோட பேரு என்ன?"

"கிரிவரன் சொக்கநாதன்"

"யாரு... இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ்ல கொடிகட்டி பறக்கிறாரே, அவரா?"

"எனக்கு தெரியல அங்கிள்"

"அது அவரா தான் இருக்கணும். அவங்க எவ்வளவு பெரிய ஆளுங்கன்னு தெரியுமா?"

"எனக்கு தெரியாது அங்கிள்..."

"வியாபார உலகத்துல அவங்க ரொம்ப பிரபலம். சென்னையில் இருக்கிற ரொம்ப பெரிய பணக்காரங்கள்ல அவங்க குடும்பமும் ஒன்னு"

"ஓ..."

ரிஷி யார் என்று தெரிந்த பின்னும், அவள் ஆர்வமில்லாமல் இருந்தது ஜெயச்சந்திரனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவள் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், இதையே சாக்காய் வைத்துக் கொண்டு ரிஷியுடன் ஒட்டிக்கொள்ளவே நினைப்பார்கள். ஆனால் மதுமிதா அந்த ரகம் அல்ல. அவள் சாம்பசிவத்தின் மகள் ஆயிற்றே... என்று எண்ணி பூரித்துப் போனார் ஜெயச்சந்திரன்.

"சரிடாம்மா நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன்"

"சரிங்க அங்கிள். ரிஷியோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு மட்டும் முடிஞ்சா எனக்கு சொல்லுங்க"

"நிச்சயமா சொல்றேன் டா"

அழைப்பை துண்டித்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாரானாள் மதுமிதா.

அரசு மருத்துவமனை

மெல்ல கண்விழித்தான் ரிஷிவரன். சொல்ல முடியாத அளவிற்கு அவன் உடலில் வலி இருந்தது. அவன் உடல் மொத்தமும் புண்ணாய் போயிருந்தது.

"டாட்..." என்றான் தன் மொத்த சக்தியையும் திரட்டி.

"உனக்கு ஒன்னும் இல்ல குட்டி. நீ நல்லா இருக்க" என்றார் கிரிவரன்.

ரிஷி ஏதோ கூற முயற்சிக்க,

"நீ தயவு செய்து உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. நம்ம அப்புறமா பேசலாம்" என்றார்.

கண்களை மூடி தூங்க முயன்றான்  ரிஷிவரன்.

சிறிது நேரத்தில் அவனது நண்பர்கள் மூவரும் மருத்துவமனையை வந்தடைந்தார்கள்.

"அப்பா, ரிஷி எப்படி இருக்கான் பா?" என்றான் பாலா.

"சீக்கிரமே நல்லா ஆயிடுவான்" 

"அவனுக்கு என்ன ஆச்சு அங்கிள்?" என்றான் ஜெயப்பிரகாஷ் கவலையுடன்.

"எனக்கும் எதுவும் சரியா தெரியல. நேத்து ராத்திரி நான் அவனுக்கு ஃபோன் பண்ணும் போது, அவன் ஃபோனை ஒரு பொண்ணு எடுத்துப் பேசினா"

"பொண்ணா? யாரு பெரியப்பா அது?" என்றான் சுதாகர்.

"தெரியல. அவ தான் இவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கா. ராத்திரியெல்லாம் தூங்காம அவன் கூடவே இருந்து, அவனை கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கா. கரெக்ட் டைம்க்கு ஊசி போட நர்ஸுக்கு நியாபக படுத்தியிருக்கா. ஆனா, நான் வரும் போது அவ இங்க இல்ல"

"நீங்க வர்றதுக்கு முன்னாடியே அவ கிளம்பி போயிட்டா போல இருக்கு" என்றான் ஜெயபிரகாஷ்.

"இல்ல, நான் ஹாஸ்பிடலுக்கு வந்து ஃபோன் பண்ணப்போ, ரிஷியோட ஃபோன்ல,  எனக்கு ஐசியூவுக்கு வர வழி சொன்னதே அவ தான்"

"அப்புறம் எதுக்கு அங்கிள் உங்களை பார்க்காம இங்கிருந்து கிளம்பி போயிட்டா?"

"அது தான் ஏன்னு எனக்கும் புரியல. அவ நம்ம ரிஷியை கவனிச்சுக்கிட்டதை பார்த்து, அவ எங்களுக்கு ரொம்ப நெருக்கமான சொந்தக்காரியா இருப்பான்னு நர்ஸ் நினைச்சாங்களாம்" மெலிதாய் சிரித்தார் கிரிவரன்.

ரிஷிவரனின் நண்பர்கள் மூவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அந்தப் பொண்ணு ஏன் என்னை மீட் பண்ண விரும்பலைன்னு எனக்கு தெரியல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ரிஷிக்கு ஹெல்ப் பண்ண அந்த பொண்ண பாக்க நான் ரொம்ப ஆர்வமா வந்தேன். அவளுக்கு தேங்க்ஸ் கூட சொல்ல முடியல" என்று வருத்தப்பட்டு கொண்டார் கிரிவரன்.

அப்பொழுது, ரிஷியை பரிசோதிக்க அங்கு வந்தார் ஜெயச்சந்திரன்.

"ஹலோ டாக்டர், நான் கிரிவரன் சொக்கநாதன். ரிஷிவரனோட அப்பா"

"நைஸ் டு மீட் யூ சார்"

தான் கொண்டு வந்திருந்த காகிதங்களை கிரிவரனை நோக்கி நீட்டிய ஜெயச்சந்திரன்,

"நீங்க இதுல சைன் பண்ணணும் சார்" என்றார்.

"யாரோட சிக்னேச்சரும் இல்லாம நீங்க எப்படி சார் ரிஷியை ட்ரீட் பண்ணிங்க?" என்றார் கிரிவரன்.

"இவரை ஒரு பொண்ணு கொண்டு வந்து அட்மிட் பண்ணா. இவரோட அப்பா வந்துகிட்டே இருக்கிறதாகவும், அதுவரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம்ன்னும் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டா..."

"ஒரு பொண்ணு கெஞ்சி கேட்டான்னு நீங்க எப்படி சார் ரிஸ்க் எடுக்க முடியும்?"

"ஏன்னா, ரிஷியோட கண்டிஷன் அவ்வளவு ஒன்னும் மோசமா இல்ல. ஒருவேளை பெரிய சர்ஜரி தேவைப்பட்டிருந்தா, நிச்சயம் நாங்க செஞ்சிருக்க மாட்டோம். அதனால தான் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தோம்..."

எதையோ யோசித்தார் கிரிவரன்.

"ஆனாலும் ஜனங்க ரொம்ப சிக்கலானவங்க சார். நாங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணா, எங்களை இரக்கமில்லாதவங்கன்னு சொல்றாங்க. அதுவே நாங்க இரக்கத்தோட ட்ரீட் பண்ணா, ரூல்ஸ் பேசுறாங்க" என்று சிரித்தார் ஜெயச்சந்திரன்.

"ஒரு நிமிஷம் டாக்டர், உங்களுக்கு இவனோட பேர் ரிஷின்னு எப்படி தெரியும்?" என்றான் பாலா.

தான் செய்த தவறை உணர்ந்து கொண்ட ஜெயச்சந்திரன்,

"அந்த பொண்ணு தான் சொன்னா. இவர் ( கிரிவரனை காட்டி ) அவளுக்கு ஃபோன் பண்ணும் போது சொல்லி இருக்கணும்னு நினைக்கிறேன்..." என்று சமாளித்தார்.

"ஆமாம், நான் சொன்னேன்" என்று ஒப்புக்கொண்டார் கிரிவரன்.

ஜெயச்சந்திரனிடமிருந்து அந்த காகிதங்களை பெற்று, அதில் தன் கையொப்பமிட்டு கொடுத்தார் கிரிவரன்.

"மனிதாபிமானத்தோட என் பையனுக்கு ட்ரீட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். உங்களை நான் எப்பவும் மறக்க மாட்டேன்" என்றார் கிரிவரன்.

புன்னகையுடன் அந்த இடம் விட்டு அகன்றார் ஜெயச்சந்திரன்.

"எனக்கு அந்த பொண்ணை பாக்கணும்" என்றார் கிரிவரன்.

"நாங்களும் பாக்கணும்" என்றார்கள் மற்ற மூவரும்.

அரை தூக்கத்தில் இருந்த ரிஷிவரன், அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். எந்த கைமாறும் கருதாமல் தனக்கு இந்த அளவிற்கு உதவி செய்த அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று அவனுக்கும் கூட பேராவல் எழுந்தது.

 தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top