44 முடிவு

44 முடிவு

அருணாச்சலத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார் சம்பசிவம்.

"என்னங்க இது? அந்தப் பையன் இப்படி பேசிட்டு போறான்? அவன் வந்து பொண்ணு கேட்ட முறையே சரியில்லையே" என்றார் தாட்சாயணி திகிலுடன்.

அமைதியாய் இருந்தார் சாம்பசிவம். என்ன கூறுவது என்று அவருக்கும் புரியவில்லை.

"நம்ம பொண்ண ரிஷிக்கு கொடுக்கிறேன்னு சொல்லியிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? பாருங்க, இப்ப கண்ட கண்டவன் எல்லாம் நம்ம வீட்ல வந்து தைரியமா பொண்ணு கேட்டுட்டு போறான்...! கிரிவரன் குடும்பம் நம்ம கூட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, இவன் எல்லாம் நம்ம வீட்ல காலடி எடுத்து வச்சிருப்பானா?" என்றார் இயலாமையுடன்.

"அவனால ஒன்னும் செய்ய முடியாது. நான் தான் அவனை ஒரு வருஷம் காத்திருக்க சொல்லி இருக்கேனே. அதுக்கு முன்னாடி அவன் ஒன்னும் செய்ய மாட்டான்"

"இவன் எதுவும் செய்ய மாட்டான்... ஆனா ரிஷி எதுவும் செய்ய மாட்டான்னு நம்மளால சொல்ல முடியாது"

"அவனுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது" என்று எச்சரித்தார் சாம்பசிவம்.

"நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா, நிச்சயமா இந்த விஷயத்தை அவன் தெரிஞ்சிக்குவான்  பாருங்க"

யோசனையில் ஆழ்ந்தார் சாம்பசிவம். தாட்சயணி கூறுவது தவறு ஒன்றும் இல்லை. கிரிவரனின் கரங்கள் எல்லா இடத்திலும் பரவி கிடக்கிறது. அவரது அரசியல் செல்வாக்கு அனைவரும் அறிந்ததே. அதுவும் அருணாச்சலத்தின் அப்பா சோனாச்சலமே கிரிவரனுக்கு அடங்கியவர் தான். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், கிரிவரன் பக்கம் இருந்து மிகப்பெரிய தொகை அவர்களது கட்சிநிதியாக செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அருணாச்சலம் மதுமிதாவை பெண் கேட்ட விஷயம் மட்டும் கிரிவரனின் காதுகளுக்கு சென்றால், சோனாச்சலத்திற்கும் கிரிவரனுக்கும் இடையில் இருக்கும் நட்பு நிச்சயம் கெடும். ஆனால் அருணாச்சலம் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. என்ன பிள்ளை அவன்?

அருணாச்சலம் தன் வீட்டிற்கு வந்தது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாததை போல், வீட்டினுள் சகஜமாய் நுழைந்தாள் மதுமிதா. அவளை பார்த்து, சாம்பசிவமும், தாட்சாயனியும் அமைதியானார்கள். அவர்களை பார்த்து சிநேகமாய் சிரித்துவிட்டு, தனது அறைக்கு வந்த மதுமிதா, கதவை சாத்தி தாழிட்டு கொண்டாள். தன் கைபேசியை எடுத்து முதல் வேலையாய் ரிஷிவரனுக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்ற ரிஷிவரன்,

"என் கூட பேசாம உன்னால ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாதா?" என்று வழக்கமான தன் துடுக்கு பேச்சை துவங்கினான்.

அவனது கிண்டலுக்கு செவி சாய்க்காமல்,

"ரிஷி..." என்றாள்.

அவளது குரலில் இருந்த பதற்றத்தை கவனித்தான் ரிஷிவரன்.

"மது, எதுவும் பிரச்சனை இல்லையே?" என்றான் தன் குரலை தன்மையாய் மாற்றி.

"அருணாச்சலம் எங்க வீட்டுக்கு வந்து, எங்க அப்பா கிட்ட என்னை பொண்ணு கேட்டுட்டு போறான்"

"என்ன்ன்னனனது?" மீண்டும் அவன் குரல் மாறியது சீற்றத்துடன்.

"இப்போ தான் எங்க வீட்லயிருந்து போறான்"

"நீ சொல்றது உண்மையா மது?" அவள் தன்னை வம்புக்கு இழுக்க பொய் சொல்கிறாளோ என்று எண்ணினான் அவன்.

"அவன் அப்பாகிட்ட பேசிகிட்டு இருந்ததை நானே கேட்டேன்"

தனது பல்லை நரநரவென கடித்தான் ரிஷி.

"அப்பா உங்க சம்பந்தத்தை எதுக்காக வேண்டாம்னு சொன்னாருன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அந்த தைரியத்துல தான் அவன் வந்து பொண்ணு கேட்டுட்டு போறான்" என்றாள் கவலையாக.

"அதை அவனே சொன்னானா?"

"ஆமாம்"

"அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்...!"

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரிஷி"

"எதுக்காக பயப்படுற? அவன் உன்கிட்ட நெருங்க கூட நான் விடமாட்டேன்"

"அவன் என்னை ஏதாவது பண்ணிட்டா என்ன செய்றது?" என்றாள் பயத்துடன்.

"அப்படி எதுவும் நடக்காம நான் பாத்துக்குறேன்"

"சரி, நான் காலை கட் பண்றேன்"

"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு நேராக கிரிவாரனின் அறைக்கு  சென்றான் ரிஷிவரன்.

"டாட்..."

"சொல்லு குட்டி"

"அருணாச்சலம் மதுவோட வீட்டுக்கு போய், சாம்பசிவம் அங்கிள் கிட்ட அவளை பொண்ணு கேட்டிருக்கான்" என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.

"என்னடா சொல்ற?" அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார் அவர்.

"ஆமாம் டாட்..."

"அதுக்கு சாம்பசிவம் என்ன சொன்னாராம்?"

"மது படிப்பை முடிக்கிற வரைக்கும், ஒரு வருஷம் அவனை காத்திருக்க சொன்னாராம்"

"நீ டென்ஷனாகாத. இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்" ரிஷிவரனை கட்டுக்குள் வைக்க நினைத்தார் அவர்.

"ஐ அம் சாரி டாட். நான் அருணாச்சலத்தை சும்மா விட போறதில்ல" எகிறினான் ரிஷிவரன்.

"அமைதியா இரு குட்டி"

"எப்படி டாட் நான் அமைதியா இருக்கிறது?" சீறினான்.

"சாம்பசிவம் தான் அவன் சம்பந்தத்தை ஏத்துக்கலையே, அப்புறம் எதுக்காக கோபப்படுற?"

"நான் மதுவை காதலிக்கிற விஷயம் அவனுக்கு தெரியும், டாட். அதை நானே அவன் கிட்ட சொன்னேன். அது தெரிஞ்சதுக்கு பிறகும் எப்படி அவன் அவளை பொண்ணு கேட்பான்?" அவனது விழிகள் ரத்த சிவப்பாய் மாறியது.

"குட்டி, இது நீயும் அவனும் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. அவங்க கட்சியோட நமக்கு நல்ல பிணைப்பு இருக்கு. அவனுடைய அப்பாவும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். நம்ம அவசரத்துல எந்த முடிவும் எடுக்க கூடாது"

எரிச்சலுடன் முஷ்டியை மடக்கினான் ரிஷி.

"புரிஞ்சிக்க முயற்சி பண்ணு, குட்டி. இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். என்னை நம்பு. விஷயம் நமக்கு சாதகமா தான் முடியும்" என்றார் நம்பிக்கையுடன்.

"எல்லாம் ஒரு அளவுக்கு தான் டாட். அவன் எல்லை மீறிப் போனா, நான் பொறுத்துக்க மாட்டேன்," கோபத்துடன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ரிஷிவரன்.

விஷயத்தை நிதானமாய் யோசித்த கிரிவரன், என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். மறுநாள் சோனாச்சலத்தை சந்திப்பது என்று முடிவு செய்தார்.

மறுநாள் கல்லூரியில்...

கிரிவரனின் அழைப்புக்காக காத்திருந்தான் ரிஷிவரன். இன்று அவர் சோனாச்சலத்தை சந்திக்கப் போகும் விஷயம் அவனுக்கு தெரியும். கல்லூரிக்குள் மதுமிதா நுழைவதை பார்த்து, அவன் மனம் சற்று சாந்தி அடைந்தது. ஆனால் அவன் முகம் பேயை போல் மாறியது, அவளை பின்தொடர்ந்து வந்த அருணாச்சலத்தை பார்த்து.

"ஹாய் மது" என்றான் அருணாச்சலம்.

அவனைப் பார்த்த மதுமிதா, ரிஷியை நோக்கி ஓடிச் சென்றாள். அவர்களுக்கிடையில் வந்து நின்றான் ரிஷிவரன்.

"ஹாய் ரிஷி, எப்படி இருக்க?" என்றான் சாதாரணமாய் அருணாச்சலம்.

"எதுக்காக மதுவை பொண்ணு கேட்ட?" என்றான் தன் பல்லை இறுக்கமாய் கடித்த படி.

"வேற எதுக்கு கேட்பேன்? கல்யாணம் பண்ணிக்க தான்" என்றான் சாதாரணமாய்.

அவனது சட்டை காலரை பற்றிய ரிஷி,

"உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்...! நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்னு உனக்கு தெரியும்ல?"

"ஆனா, அவங்க அப்பா தான் உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே..."

"அவர் சொன்னா என்ன? எங்களை யாராலயும் பிரிக்க முடியாது. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறதையும் யாரும் தடுக்க முடியாது"

"எதுக்காக உன்னோட கோவத்தை என் மேல காட்டுற? அவ மாஸ்டர்ஸ் முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ண சொல்லி அவங்க அப்பா என்கிட்ட சொல்லி இருக்காரு. அதுக்குள்ள நீ நல்லவன்னு அவருக்கு ப்ரூவ் பண்ணனும்னு அவர் நினைக்கிறாரு. நீ உன்னை எப்படி ப்ரூவ் பண்ண போற ரிஷி? அது அவ்வளவு ஈஸியா நடக்கும்னு நினைக்கிறாயா? ஒருத்தனை கெட்டவன்னு ப்ரூவ் பண்றது ரொம்ப ஈசி. ஆனா நல்லவன்னு ப்ரூவ் பண்றது அவ்வளவு ஈஸி இல்ல" என்றான் எகத்தாளமாய்.

"அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம். என்னை எப்படி நிரூபிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்துக்கும் மேல, மது என்னை காதலிக்கிறா. மத்த எதைப் பத்தியும் எனக்கு கவலை இல்ல"

"அவ உன்னை காதலிச்சா, என்ன செஞ்சிட முடியும் உன்னால? அவ கூட ஓடிப் போக போறியா? உன்னால முடியாது... நான் இருக்கிற வரைக்கும் அப்படி நடக்க விட மாட்டேன்"

"தேவையில்லாம என் வாழ்க்கையில தலையிடாத அருண். நான் உன்னை வார்ன் பண்றேன். விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்"

"பைத்தியக்காரத்தனமா பேசாத ரிஷி. எலக்சனுக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு. அப்புறம் ரெண்டு நாள்ல கவுண்டிங் முடிஞ்சிடும். இந்த தடவை நாங்க தான் கண்டிப்பா ஜெயிப்போம். அதுக்கப்புறம் உன்னால என் நிழலை கூட தொட முடியாது. இந்த ஸ்டேட்ல எங்க கை தான் ஓங்கி இருக்கும். கிரிவரனும் சரி, சாம்பசிவமும் சரி, யாராலையும் எங்களை தடுக்க முடியாது" வீராப்பு பேசினான் அருணாச்சலம்.

"ரொம்ப பறக்காத அருண். அது உனக்கு நல்லதில்ல. எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. கண்டிப்பா மாறும்"

"அதை நம்ம அப்புறம் பார்க்கலாம். நான் இப்ப சொல்றேன்னு கேளு, இன்னும் ரெண்டு வாரத்துல, இந்த பொண்ணு என்னுடையவ..."

ரிஷிவரனின் ரத்தம் கொதித்துப் போனது. இந்த வார்த்தையை கேட்ட பிறகு அவனை தடுத்து நிறுத்தும் சக்தி எதுவும் இல்லை. தன் விரல்களை மடக்கி, அருணாச்சலத்தின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

"மதுமிதா என்னுடையவ.  எந்த கொம்பனாலையும் அவளை தொட முடியாது. உன்னால முடிஞ்சதை பாரு. அவ எனக்கு தான்..." கர்ஜித்தான் ரிஷி.

மதுமிதாவின் கரத்தை பற்றிக்கொண்டு அங்கிருந்து நடந்தான் ரிஷிவரன். ரத்தம் வழியும் தன் உதட்டோரத்தை தொட்ட அருணாச்சலம், தன் கண்களை சுருக்கி அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றான்.

மதுமிதாவுடன் கேன்ட்டீனுக்கு வந்த ரிஷிவரன், திகிலுடன் இருந்த அவளது முகத்தை பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

"என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டா, நீ என்ன சொல்லுவ, மது?" என்றான் தன் பார்வையை அவள் முகத்தில் ஊன்றி.

அதிர்ச்சியில் உறைந்தாள் மதுமிதா. அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. நேற்று தான் அவனை காதலிக்கிறேன் என்று அவனிடம் அவள் கூறினாள். இன்று அவன், தன்னை மணந்து கொள்ள சொல்லி கேட்கிறான்.

அவளது கரத்தைப் பற்றிய ரிஷிவரன்,

"நான் இப்படி கேட்டது உனக்கு அதிர்ச்சியை தரும்னு எனக்கு தெரியும். ஆனா, நமக்கு வேற வழியில்ல. அருண் சொன்னது உண்மை தான். ஒருவேளை, அவன் எலக்ஷன்ல ஜெயிச்சுட்டா, அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவன் என்ன வேணா செய்வான். உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் இழக்க நான் தயாரா இல்ல. என்ன சொல்ற?"

ரிஷி கூறியதில் இருந்த உண்மை, மதுமிதாவுக்கு புரிந்து தான் இருந்தது அருணாச்சலம் எதையும் செய்யக் கூடியவன் தான். ஆனால், *எடுத்தேன், கவிழ்த்தேன்* என்று முடிவு செய்யும் விஷயம் அல்ல இது.

"எனக்கு யோசிக்க ஒரு நாள் டைம் கொடு, ரிஷி"

தான் பற்றி இருந்த அவளது கரத்தை விடுவித்தான் ரிஷிவரன். அவள் எதற்காக ஒரு நாள் அவகாசம் கேட்டாள் என்ற விஷயம் அவனுக்கு தெரியாது. எதையும் முடிவு செய்யும் முன், அருணாச்சலத்தை பற்றி அவள் சாம்பசிவத்திடம் பேச முடிவு செய்தாள். அது தெரியாத ரிஷிவரனும், ஓர் முடிவை எடுத்தான்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top