41 எங்கே மதுமிதா?
41 எங்கே மதுமிதா?
அருணாச்சலத்திடமிருந்து விஷ்வாவுக்கு அழைப்பு வந்தது. அவன் அதை உடனே ஏற்றான் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.
"ஹலோ அருண்..." என்றான் ஆர்வமாய்.
"எனக்காக நீ ஒரு காரியம் செய்யணும்"
"என்ன வேணும்னாலும் செய்யறேன்" யோசிக்காமல் கூறினான் விஷ்வா.
"மதுமிதாவோட அப்பா, அவளை ரிஷிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு"
"அப்படியா?" என்றான் ஆர்வமாக.
"ஆமாம். அதுக்கான காரணம் எனக்கு தெரியணும்"
"நான் உனக்கு சொல்றேன்"
"எனக்கு *உண்மையான* (என்பதை அழுத்தி) காரணம் தெரியணும். தேவையில்லாம, இல்லாததை டெவலப் பண்ணி என்கிட்ட சொல்லலாம்னு நினைக்காத" என்று எச்சரித்தான் அருணாசலம்.
"இல்ல, இல்ல அருண்... நிச்சயமா நான் உனக்கு சரியான காரணத்தை தான் சொல்லுவேன்"
"அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது" அழைப்பை துண்டித்தான் அருணாச்சலம்.
மறுநாள்
ரிஷிவரனிடம் பிடிபட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள் மதுமிதா. வழக்கமாய் கல்லூரிக்கு செல்லும் நேரத்தை விட முன்கூட்டியே கல்லூரிக்கு வந்துவிட்டாள் அவள்.
ரிஷிவரனும் கூட அன்று கல்லூரிக்கு முன்கூட்டியே தான் வந்தான். ஆனால், மதுமிதாவை விட ஒன்றும் அல்ல. கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே அவளை பிடித்து விட வேண்டும் என்பது தான் அவனது குறிக்கோள். ஆனால், அவனது திட்டம் பலிக்கவில்லை. அன்று காலை முழுவதும் அவனால் மதுமிதாவை பார்க்கவே முடியவில்லை. கல்லூரி மணி அடித்தாகிவிட்டது. ஆனால், ரிஷிவரன் தனது வகுப்பிற்கு செல்லவில்லை. தேநீர் இடைவேளை வரை கல்லூரி வாசலிலேயே தவமாய் கிடந்தான். மதுமிதாவை காணாமல் அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இன்று அவள் கல்லூரிக்கு வரப்போவது இல்லையா? எப்படி அவள் இவ்வாறு செய்யலாம்? அவள் கல்லூரிக்கு வர வேண்டும் என்பது தானே அவர்களுடைய ஒப்பந்தம்? அவளும் நிச்சயம் வருவேன் என்று தானே கூறியிருந்தாள்? பிறகு ஏன் வராமல் போனாள்? ஒருவேளை, அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிருக்குமோ? தன் கைபேசியை எடுத்து, அவளது வீட்டின் லேண்ட் லைன் எண்ணுக்கு ஃபோன் செய்தான். அவன் எதிர்பார்த்தபடியே, அந்த அழைப்பை ஏற்றது தாட்சாயணி தான்.
"ஆன்ட்டி நான் ரிஷி பேசுறேன்"
"ஹலோ ரிஷி, எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி"
"நீங்க இன்னைக்கு காலேஜுக்கு போகலையா?"
"ஆமா ஆன்ட்டி, நான் காலேஜுக்கு போகல. மதுமிதா இன்னைக்கு காலேஜுக்கு போனாளா?"
"அவ ரொம்ப சீக்கிரமே கிளம்பி போயிட்டாளே"
"நிஜமாவா?"
"ஆமாம், நீங்க ஏன் இன்னைக்கு காலேஜுக்கு போகல?"
"எனக்கு கொஞ்சம் தலைவலி. அதனால தான் போகல"
"ஓ... ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி சாப்பிட்டுட்டு, கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. தலைவலி சரியாயிடும்"
"சரிங்க ஆன்ட்டி"
தாட்சாயினி அழைப்பை துண்டிக்கப் போக, ரிஷி அவரை அழைத்ததால், மீண்டும் ரிஸீவரை காதுக்கு கொடுத்தார்.
"ஆன்ட்டி..."
"சொல்லுங்க"
"உங்களுக்கும் அங்கிள் மாதிரியே என் மேல வருத்தமா?"
"இல்ல ரிஷி. நான் உங்க மேல வருத்தத்துல இல்ல. ஆனா அதே நேரம், மதுவோட அப்பாவையும் நம்ம தப்புன்னு சொல்ல முடியாதுல்ல? ஒரு அப்பாவா தனக்கு வரப்போற மருமகன் இப்படித் தான் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்போட அவர் இருக்கிறது நியாயம் தானே? ஆனா, நீங்க மட்டும் உங்களை நிரூபிச்சி காட்டினீங்கன்னா நான் நிச்சயம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்"
"தேங்க்யூ சோ மச் ஆன்ட்டி. நீங்களும் என் மேல அப்செட்டா இருக்கீங்ளோன்னு நினைச்சேன்"
"நானும் உங்க மேல வருத்தத்துல தான் இருந்திருப்பேன், ஆனா, நீங்க இப்போ ரொம்ப மாறிட்டீங்கன்னு மது சொன்னா"
ரிஷிவரனின் புருவங்கள், அணிச்சையாய் மேலே எழுந்தது.
"நீங்க மதுவுக்காக மாறிட்டீங்கன்னு தெரிஞ்சப்போ, நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு அம்மாவுக்கு இதைவிட வேற எதுவும் தேவையில்ல. ஆனா, ஆம்பளைங்களோட கண்ணோட்டம் பொம்பளைங்கள விட வித்தியாசமா இருக்கும். மதுவோட அப்பா உங்களை ஏத்துக்காத வரைக்கும், என்னால எதுவும் செய்ய முடியாது பா"
"நீங்க ஒன்னும் அதைப் பத்தி கவலைப்படாதீங்க ஆன்ட்டி. நான் நிச்சயம் அவரை சம்மதிக்க வைப்பேன்"
"அப்படி நீங்க செஞ்சா, நான் தான் முதல்ல சந்தோஷப்படுறவளா இருப்பேன்"
"நிச்சயம் உங்களை சந்தோஷப்பட வைப்பேன் ஆன்ட்டி"
"தேங்க்யூ"
"பை ஆன்ட்டி"
அழைப்பை துண்டித்தான் ரிஷிவரன். அவன் மதுமிதாவுக்காக மாறிவிட்டதை அவள் நம்புகிறாள். இன்று அவள் கல்லூரிக்கும் வந்திருக்கிறாள். அப்படியென்றால் அவள் எங்கே? ஒருவேளை இன்னும் அவள் கல்லூரியை வந்தடைய வில்லையோ? வரும் வழியில் அவளுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ?
தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு, மதுமிதாவின் வீட்டை நோக்கி சென்றான். வண்டியை மெதுவாய் செலுத்தியபடி, வழியேற இங்கும் அங்கும் பார்த்தபடி பொறுமையாய் சென்றான். மதுமிதாவின் இருப்பிற்கான எந்த அடையாளமும் இல்லை. சில நொடிகள் யோசித்தான் அவன், தாட்சாயினி என்ன கூறினார்? அவள் வழக்கத்தை விட சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டாள் என்றல்லவா கூறினார்? தன்னிடமிருந்து ஒளிந்து கொள்வதற்காகத் தான் அவள் சீக்கிரம் வந்திருக்கிறாள். அப்படி என்றால், அவள் கல்லூரியில் தான் இருக்க வேண்டும்.
வண்டியை யூ டர்ன் செய்து கல்லூரியை நோக்கி விரைந்தான். வண்டியை நிறுத்திவிட்டு அவளது வகுப்பை நோக்கி நடந்த அவன், மீண்டும் யோசனையுடன் நின்றான். அவளது வகுப்பிற்குள் அவன் நுழைய முடியாது. அது அவர்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் உணவு இடைவெளிக்கு ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தது. அதனால் காத்திருக்க துவங்கினான்.
உணவு இடைவேளை மணி அடித்த பின், தன் வகுப்பிற்கு விரைந்தான்.
"நீ மதுவை பாத்தியா?" என்றான் பாலா.
"இல்ல அவ எங்க ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்னு எனக்கு தெரியல" என்றான் வெறுப்புடன்.
"நீ கவலைப்படாத, நான் அவ கிளாஸ்ல இருக்காளான்னு போய் பாத்துட்டு வரேன்" என்றான் சுதாகர்.
"நீ அவ கிளாசுக்கு நிஜமாவே போயிட்டு வர போறியா?"
"கண்டிப்பா போறேன்... வா ஜெயா போகலாம்" என்று அவர்கள் இருவரும் மதுமிதாவின் வகுப்பறையை நோக்கிச் சென்றார்கள்.
"இரு நான் விசாரிக்கிறேன்" என்றான் பாலா.
"எப்படி விசாரிக்க போற?"
அவனது கைபேசியை எடுத்து காயத்திரிக்கு ஃபோன் செய்தான் பாலா. ரிஷியின் முகம் ஒளிர்ந்தது. அவன் எப்படி காயத்ரியை மறந்தான்?
காயத்ரியின் ஃபோன் வைப்ரேட் ஆனது. பாலாவின் எண்ணைக் கண்ட அவள் புன்னகைத்தாள். தன் கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தூரமாய் வந்தாள்.
"ஹாய்"
"இன்னைக்கு மது காலேஜுக்கு வரலையா?"
"அவ காலேஜ்ல தானே இருக்கா"
"நெஜமாவா? எங்க இருக்கா?"
"நான் சொன்னா, அவ என்னை கொன்னுடுவா"
"ப்ளீஸ் காயத்ரி, ப்ளீஸ் அவ எங்க இருக்கான்னு சொல்லு. அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சா தான் ரிஷி சவால்ல ஜெயிச்சு, அவளை கல்யாணம் பண்ணிக்க முடியும். உனக்கே தெரியும் அவளுக்கும் ரிஷியை பிடிக்கும்னு. அப்புறம் எதுக்காக இந்த ஒளிஞ்சி விளையாடுற விளையாட்டு?"
"எதுக்காகன்னா, அவர் அவளை கண்டுபிடிக்கணும்னு அவ நினைக்கிறா. அவர் அவளை காதலிக்கிறது உண்மைன்னா, அவர் அவளை கண்டுபிடிப்பார் தானே?"
"அதை செய்யத் தானே அவனும் பாடுபட்டுக்கிட்டு இருக்கான்? அவன் காலேஜுக்கும் அவ வீட்டுக்கும் காலையிலிருந்து அலஞ்சிகிட்டு இருக்கான் தெரியுமா?"
"நெஜமாவா சொல்றீங்க?" என்றாள் வருத்தத்தோடு.
"ஆமாம். இன்னைக்கு காலையிலிருந்து அவன் ஒரு கிளாஸ் கூட அட்டென்ட் பண்ணவே இல்ல"
"சரி... நான் உங்களுக்கு நேரடியா சொல்ல மாட்டேன். ஆனா ஒரு க்ளூ மட்டும் கொடுக்கிறேன்"
பாலா எரிச்சலுடன் ரிஷியை பார்க்க, அவன் என்ன க்ளு என்று கேட்கும்படி சைகை செய்தான். ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு,
"சரி, என்ன க்ளு?" என்றான்.
"நம்ம காலேஜ் எதுக்கு ரெடி ஆயிகிட்டு இருக்கு?"
"எதுக்கு?"
"இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது. நீங்களே கண்டுபிடிங்க. பை " என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் காயத்ரி.
"நம்ம காலேஜ் எதுக்கு ரெடி ஆயிட்டு இருக்கு?" என்றான் பாலா.
"இன்டர் காலேஜ் காம்படிஷன். மதுவும் அதுல கலந்துக்க போறான்னு நினைக்கிறேன்" என்றான் ரிஷி குதூகலமாய்.
"அவ எந்த காம்படிஷன்ல கலந்துக்க போறா?" என்றான் பாலா
"வா கண்டு பிடிக்கலாம்"
"இன்டர் காலேஜ் காம்படிஷனுக்கான ப்ராக்டிஸ், நிறைய பில்டிங்ல நடந்துகிட்டு இருக்கு. நம்ம எப்படி அவளை கண்டுபிடிக்கிறது?"
"ப்ரோக்ராம் இன்சார்ஜ் யாரு?" என்றான் ரிஷி.
தனக்குத் தெரியாது என்பது போல் தலையசைத்தான் பாலா. அப்போது சில மாணவிகள் அவர்களை கடந்து சென்றார்கள்.
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றான் பாலா.
"சொல்லுங்க" என்று நின்றாள் ஒரு பெண்.
"இன்டர் காலேஜ் காம்படிஷனோட இன்சார்ஜ் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"பிரசாத், தேர்ட் இயர் பிஎஸ்சி மேத்தமேடிக்ஸ்"
"தேங்க்யூ" என்றபடி ரிஷியை பார்த்து புன்னகை புரிந்தான் பாலா.
"நம்ம கிளாஸ்ல இருந்து ஒருத்தர் கூடவா எந்த காம்படிஷன்லயும் கலந்துக்கல?" என்றான் ரிஷி கவலையுடன்.
"நீயும் நானும் தான் கலந்துக்கணும்" என்று சிரித்தான் பாலா.
"சரி வா, நம்ம லஞ்ச்பிரேக் முடியறதுக்கு முன்னாடி பிரசாத்தை பிடிக்கணும். இல்லன்னா, அவன் கிளாசை விட்டு போயிடுவான். அதுக்கப்புறம் அவனைப் பிடிக்க நம்ம காலேஜ் முழுக்க சுத்த வேண்டியது இருக்கும்" என்றபடி நடக்கத் தொடங்கினான் ரிஷி.
அவர்கள் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் வகுப்பறைக்கு வந்தார்கள். அந்த வகுப்பில் இருந்து வெளியே வந்த ஒரு மாணவனை நிறுத்திய பாலா,
"பிரசாத் யாரு?" என்றான்.
அவன் ஒரு மாணவனை சுட்டி காட்டினான். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவசர அவசரமாய் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பிரசாத். அவன் முகத்தில் அப்படி ஒரு சோர்வு தெரிந்தது. அந்த போட்டிகளுக்காக அவன் கடினமாய் உழைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.
"பிரசாத்..." என்று அவனை அழைத்தான் பாலா தடுத்து நிறுத்திய அந்த மாணவன். பிரசாத் அவர்களை நோக்கி திரும்ப,
"இவங்க உன்னை பார்க்கணுமாம்" என்றான் ரிஷியையும், பாலாவையும் காட்டி.
அவன் சாப்பிடுவதை விட்டுவிட்டு எழ முயல,
"ஒன்னும் அவசரம் இல்ல. சாப்பிட்டு முடிச்சிட்டு வா" என்றான் ரிஷி.
சரி என்று தலையசைத்த பிரசாத், வேகமாய் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவர்கள் காத்திருந்தார்கள். சாப்பிட்டுவிட்டு அவர்களை நோக்கி வந்தான் பிரசாத்.
"நீ தானே ப்ரோக்ராம் இன்சார்ஜ்?"
"ஆமாம்"
"மதுமிதா எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எந்த காம்படிஷன்ல பார்ட்டிசிபேட் பண்றா?"
தன்னிடம் இருந்த, போட்டியில் கலந்து கொள்வோருக்கான பட்டியல் இருந்த நோட்டுப் புத்தகத்தை திறந்து, அதில் மதுமிதாவின் பெயரை தேடிய பிரசாத்,
"அவங்க ஸ்பீச் காம்பெட்டிஷன்ல கலந்துக்கிறாங்க" என்றான்.
"ஸ்பீச் காம்பெட்டிஷன்ல கலந்துகிற ஸ்டுடென்ட்ஸ், எந்த பில்டிங்கில் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க?"
"கம்யூனிட்டி ஹால், ஜுபிடர் விங்"
"தேங்க்யூ"
அவர்கள் ஜூபிடர் கட்டிடத்தை நோக்கி விரைந்தார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top