4 உதவி

4 உதவி

இரத்த வெள்ளத்தில் கிடந்த ரிஷியை பார்த்து, திகிலடைந்தாள் மதுமிதா. சந்தேகமில்லாமல் அவன் தன் சுயநினைவை இழந்திருந்தான். அவனது கையை பிடித்து நடித்துடிப்பை சோதித்தாள். குறையாமல் இருந்த அவனது நாடி துடிப்பு அவளுக்கு நிம்மதியை தந்தது. நேரத்தை வீணாக்காமல், 108க்கு ஃபோன் செய்தாள். சில நிமிடத்தில் அவசர ஊர்த்தி அந்த இடத்தை வந்தடைந்தது. சிறிதும் யோசிக்காமல் அவளும் அந்த ஆம்புலன்ஸ்ஸில் ஏறி, அவனுடன் மருத்துவமனைக்கு சென்றாள்.

தன் அப்பாவிற்கு ஃபோன் செய்யலாம் என்று அவள் தனது கைபேசியை வெளியே எடுத்த போது, அவள் அப்பா ஊரில் இல்லை என்பது அவள் நினைவுக்கு வந்தது. என்ன செய்வது என்பதை பற்றி சில நொடி யோசித்த அவள், அவளது அப்பாவின் நண்பர் ஜெயச்சந்திரன், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவது அவள் நினைவுக்கு வந்தது. அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு அவருக்கு போன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்றார் ஜெயச்சந்திரன்.

"என்னடா மது, எப்படி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன் அங்கிள்"

"நீ நல்லா இருக்கேன்னா, எது உனக்கு என்னை ஞாபகப்படுத்துச்சி?" என்று சிரித்தார் ஜெயச்சந்திரன்.

"என்னோட ஃப்ரெண்ட்... இ மீன் என்னோட காலேஜ் மெட்டுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அங்கிள்"

"இப்போ அந்த *பொண்ணு* எங்க இருக்கா?"

"நான் *அவனோட* ஹாஸ்பிடலுக்கு வந்து கிட்டு இருக்கேன்"

"ஓ... நீயும் வரியா?"

"ஆமாம் அங்கிள்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் இன்னும் ஹாஸ்பிடல் தான் இருக்கேன். வா, நான் வெயிட் பண்றேன்"

"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்"

"மென்ஷன் நாட்"

அழைப்பை துண்டித்த மதுமிதா, தன் அப்பாவுக்கு ஃபோன் செய்தாள்.

"என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?" என்றார் சாம்பசிவம்.

"அப்பா..."

அவள் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து கொண்ட சாம்பசிவம்,

"ஒன்னும் பிரச்சனை இல்லையேடா?" என்றார்.

"பிரச்சனை தான்பா. என்னோட காலேஜ்ல படிக்கிற ஒரு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு" என்றாள் பதட்டத்துடன்.

"அவன் இப்போ எப்படி இருக்கான்?"

"நான் அவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன். ஜெயா அங்கிள் கிட்ட கூட பேசிட்டேன். அவர் ஹாஸ்பிடல்ல தான் இருக்காராம்."

"நல்லவேளை.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி பேசுறேன். நீ ஒன்னும் கவலைப்படாத"

"தேங்க்யூ பா"

"நான் ஜெயாவுக்கு கால் பண்றேன்"

"சரிங்கப்பா" என்று அழைப்பை துண்டித்தாள்.

அவசர ஊர்தியில் இருந்த மருத்துவர், ரிஷிக்கு முதலுதவி செய்வதை கவனிக்க துவங்கினாள்  மதுமிதா. அப்பொழுது ரிஷியின் ஃபோன் மணி ஒலிக்கத் துவங்கியது. அவனது பேண்ட் பாக்கெட்டில் வெளிச்சம் தெரிந்தது. அவனது கைபேசியை வெளியில் எடுத்து பார்த்த மதுமிதா, *டாட்* என்று ஒளிர்ந்ததை பார்த்து, நிம்மதி பெருமூச்சுடன் அந்த அழைப்பை ஏற்றாள்.

அவள் எதுவும் கூற துவங்கும் முன்,

"குட்டி, நாளைக்கு காலையில நான் சென்னைக்கு வந்துடுவேன். நீ சாப்பிடாம படுத்துடாத..." என்றார் கிரிவரன்.

"ஹலோ..." என்றாள் மதுமிதா மெல்லிய குரலில்.

தனது மகனின் கைப்பேசியில் பெண்ணின் குரலை கேட்ட கிரிவரன், குழப்பத்துடன்

"யார் பேசுறீங்க?" என்றார்.

"அங்கிள், இவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நான் அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்"

"என்னது? ஆக்சிடென்ட்டா? எப்போ? எங்கே? எந்த ஹாஸ்பிடல்?"

"ஜிஹெச்க்கு கூட்டிகிட்டு போறேன் அங்கிள்"

"ஆமா மா... ஆக்சிடென்ட் கேஸ் எல்லாம் ஜிஹெச்க்கு தான் கொண்டு போவாங்க. நான் ஊர்ல இல்ல. மும்பை வந்திருக்கேன். எனக்கு காலையில ரெண்டு மணிக்கு தான் ஃபிளைட். விடிய காலையில அங்க வந்துடுவேன். டாக்டர் என்ன சொல்றங்கன்னு எனக்கு கொஞ்சம் ஃபோன் பண்ணி சொல்றியா மா?"

"சொல்றேன் அங்கிள்"

"ரொம்ப தேங்க்ஸ் டா கண்ணா"

"பரவாயில்ல அங்கிள். நாங்க ஹாஸ்பிடலுக்கு வந்துட்டோம். உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்"

"சரி மா..."

இயலாமையுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் கிரிவரன். அவரது கண்கள் குலமாயின. காலமான தன் மனைவியை எண்ணிப் பார்க்காமல் அவரால் இருக்க முடியவில்லை. அவரது மனைவி உயிரோடு இருந்திருந்தால், இப்பொழுது கிரியை கண்ணுக்குள் வைத்து கவனித்து கொண்டிருந்திருப்பார். அவருடைய துர்பாக்கியம், அவர் மனைவியை சுனாமியிலிருந்து காப்பாற்ற முடியாமல் போனது. தமிழ்நாட்டில் இருந்த முக்கியமான அனைத்து தளங்களையும் காண அவர்கள் சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த கொடூரம் அது. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு அவர்கள் சென்றிருந்த போது தான் அந்த அவலம் நேர்ந்தது. சுனாமியால் வெகு அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் வேளாங்கண்ணியும் ஒன்று. அப்பொழுது ரிஷிக்கு பத்து வயது.

அதைப் பற்றி நாம் பின்னால் வரும் அத்தியாயங்களில் விரிவாய் பார்ப்போம். இப்பொழுது ரிஷிக்கு என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

இதற்கிடையில்...

தான் கூறியது போலவே தன் நண்பனுக்கு ஃபோன் செய்து பேசினார் சாம்பசிவம். அந்த அழைப்பை ஏற்ற ஜெயச்சந்திரன்,

"சொல்லு சாம்பா" என்றார்.

"மது எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா. அவ பார்மாலிட்டிஸ்ஸை கம்ப்ளீட் பண்ண அவளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ஜெயா. நான் திருவண்ணாமலைக்கு வந்திருக்கேன். இல்லன்னா, நான் வந்து அவ கூட இருப்பேன்"

"நீ அதை பத்தியெல்லாம் ஒன்னும் கவலைப்படாதே. நான் தான் இருக்கேன்ல. நான் பார்த்துகிறேன்"

"ரொம்ப தேங்க்ஸ் ஜெயா. நீ மட்டும் ஹெல்ப் பண்ணலைனா மது ரொம்ப அப்செட் ஆயிடுவா..."

"ஹாஹா... எனக்கு தான் தெரியுமே அவளைப் பத்தி"

சிரித்தபடி அழைப்பை துண்டித்தார் சாம்பசிவம்.

அதேநேரம், மதுமிதாவும் ரிஷியும்  வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைந்தது. அவசர சிகிச்சை பிரிவிற்குள் எடுத்துச் செல்லப்பட்டான் ரிஷி. ஜெயச்சந்திரனிடம் வந்தாள் மதுமிதா.

"அந்தப் பையன் உன் ஃபிரெண்டா டா?

"என்னோட காலேஜ் மேட், அங்கிள்"

"அப்படின்னா அவனோட பேரண்ட்ஸ்க்கு கால் பண்ணிடு"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க அப்பாவே கால் பண்ணி இருந்தாரு, அங்கிள். அவர் அவுட் ஆஃப் ஸ்டேஷனாம். நாளைக்கு காலைல தான் வருவாராம்"

"ஓ அப்படியா? சரி பார்த்துக்கலாம் விடு. நாளைக்கு காலையில அவர் வந்த பிறகு அவர் கிட்ட சிக்னேச்சர் வாங்கிக்கலாம்"

"அப்படின்னா, அவர் சிக்னேச்சர் போடற வரைக்கும் நீங்க அவனை ட்ரீட் பண்ண மாட்டீங்களா?"

அதை கேட்டு சிரித்த ஜெயச்சந்திரன்,

"என்னோட சொந்த ரிஸ்குல நான் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன். போதுமா?" என்றார்

"தேங்க்யூ சோ மச் அங்கிள்"

"பரவாயில்ல விடுடா. பத்து மணிக்கு, சீனியர் ஸ்டாஃப் நர்ஸ் ஒருத்தர் டூட்டிக்கு வருவாங்க. அவனை அவங்க பார்த்துக்குவாங்க. ஓகேவா?"

"நான் இங்க இருக்க முடியாதா அங்கிள்?"

எதையோ யோசித்து விட்டு சரி என்று தலையசைத்தார். மதுமிதா அவளது அப்பாவின் அனுமதியோடு அங்கு வந்திருப்பதால், அதில் யோசிக்க ஒன்றுமில்லை.

"தேங்க்யூ சோ மச் அங்கிள்"

அறுவை சிகிச்சை முடியும் வரை, மதுமிதாவுடன் ஜெயச்சந்திரனும் காத்திருந்தார். அறுவை சிகிச்சை பிரிவின் வெளியே எரிந்து கொண்டிருந்த சிகப்பு விளக்கு அணைந்தது. ரிஷியின் நிலைமையை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள தயாரானாள் மதுமிதா.

அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த மூத்த மருத்துவர் ஒருவர், ஜெயச்சந்திரனுடன் கைகுலுக்கினார்.

"லெஃப்ட் ஹேண்ட்ல லேசா ஃபிராக்சர் ஆகி இருக்கு. கீழ விழும் போது அந்த பையன் கையை கீழ ஊனி இருக்கணும். நெத்தியும், தொடையும் கிழிஞ்சி, தையல் போட்டிருக்கு. அவன் உடம்புல நிறைய காயம் பட்டிருக்கு. ஒரு வாரமாவது அவன் ஹாஸ்பிடல்ல இருக்கணும்"

"சரிங்க டாக்டர்" என்றார் ஜெயச்சந்திரன்.

"அவங்க அப்பா வந்தவுடனே, அவர்கிட்ட கையெழுத்து வாங்க மறந்துராதீங்க" என்றார் அந்த மருத்துவர்.

"கண்டிப்பா வாங்கிடுறேன் டாக்டர்" என்றார் ஜெயச்சந்திரன்.

அந்த மருத்துவர் அங்கிருந்து அகன்றார்.

"மது மா, நீ உண்மையிலேயே இன்னைக்கு ராத்திரி இங்க இருக்க போறியா? இல்ல நான் உன்னை வீட்டில விடட்டுமா?"

"இல்ல அங்கிள். அவங்க அப்பா வர வரைக்கும் நான் இங்க இருக்கேன்"

"சரி. அப்படின்னா, நான் வீட்டுக்கு போயிட்டு உனக்கு கார் அனுப்புறேன். காலையில உனக்கு எந்த வண்டியும் கிடைக்காது. அதே நேரத்தில், வேற ஏதாவது வண்டி பிடிச்சு போறதும் உனக்கு சேஃப் இல்ல"

"சரிங்க அங்கிள்... " சில நொடிகள் தாமதித்த மதுமிதா,

"அங்கிள்" என்று அழைத்தாள்

"சொல்லுமா"

"நான் தான் அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்னு அவனுக்கு தெரிய வேண்டாம், அங்கிள்"

"ஆனா ஏன்? நீ தான் அவனை காப்பாத்தி இருக்க... அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்க... அவன் கூட இருக்கப் போற... அவன் உன் காலேஜ் பையன் தானே?"

"இல்ல அங்கிள். அவனுடைய இடத்துல வேற யார் இருந்தாலும் நான் இதைத் தான் செஞ்சிருப்பேன்"

"அப்படியே இருந்தாலும் அவனுக்கு தெரியறதுனால என்னம்மா தப்பு?"

"உங்களுக்கு எங்க காலேஜ் பசங்களை பத்தி தெரியாதா அங்கிள்?"

ஆம் என்ற தலைகசைத்தார் ஜெயச்சந்திரன்.

"ஆனா, அவங்க அப்பா வரும் போது என்ன செய்வ? அவரை வச்சு அவன் உன்னை ஈசியா கண்டுபிடிச்சிடுவானே..."

"அவர் இங்க வரும் போது நான் இங்க இருக்க மாட்டேன் அங்கிள்"

தன் உதட்டை அழுத்தி, இடவலமாய் தலையசைத்த ஜெயச்சந்திரன்,

"இந்த காலத்து பசங்களை புரிஞ்சிக்கவே முடியல" என்றார்.

"சரி நான் கிளம்பட்டுமா?"

"நீங்க கிளம்புங்க அங்கிள். நான் பாத்துக்குறேன்"

ரிஷி இருந்த கட்டிலுக்கு வந்த மதுமிதா அங்கு போடப்பட்டிருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள். அவனது கட்டைவிரல் ரேகையை கைபேசியில் பதித்து, *டாட்* என்ற எண்ணுக்கு ஃபோன் செய்தாள்.

"குட்டி எப்படிமா இருக்கான்?"

"ஐசியு ல நல்லா இருக்காரு அங்கிள்"

"உன்னை தொல்லை பண்றதுக்கு என்னை தயவு செய்து மன்னிச்சிடுமா"

"இதுல என்ன அங்கிள் இருக்கு...? மனுஷனுக்கு மனுஷன் செஞ்சுக்குற சாதாரண உதவி தானே?" என்றாள் தன்மையாக.

கேட்காமலேயே தன் மகனுக்கு உதவிய அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிரிவரனின் மனதில் எழுந்தது.

"நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்த உடனே ஃபோன் பண்ணுங்க அங்கிள். நான் ஐசியு க்கு எப்படி வரணும்னு வழி சொல்றேன்"

"நிச்சயமா பன்றேன் மா... தேங்க்யூ சோ மச். நீ ரிஷியோட ஃபிரண்டா மா?"

"இல்ல அங்கிள். அவருக்கு ஆக்சிடென்ட் ஆகும் போது, நான் ஸ்பாட்ல இருந்தேன் அவ்வளவு தான்"

"நீ ரொம்ப நல்லா இருக்கணும்மா"  

"நான் உங்க பேரை தெரிஞ்சுக்கலாமா அங்கிள்?"

"கிரிவரன் சொக்கநாதன்"

"ஓகே அங்கிள், பை"

ஜெயச்சந்திரன் கூறியது போல், பத்து மணிக்கு சீனியர் ஸ்டாஃப் நர்ஸ் டூட்டிக்கு வந்தார். ரிஷியின் ரிப்போர்ட் பேடை படித்துப் பார்த்த அவர், அலமாரிக்கு சென்று, ஒரு ஊசியை கொண்டு வந்து சலைன் பாட்டிலில் செலுத்தினார்.

"இந்த சலைன் பாட்டில் காலியாகும் போது, என்கிட்ட சொல்லு" என்றார் மதுமிதாவிடம்.

"சரிங்க சிஸ்டர்"

"ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை அவனுக்கு ஊசி போடணும்" என்றார்.

சரி என்று தலையசைத்தாள் மதுமிதா.

தன் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார் அந்த செவிலி. சிறிது நேரம் கூட தூங்காமல், ரிஷியின் பக்கத்தில் கண் விழித்து அமர்ந்திருந்த மதுமிதாவை பார்க்கும் போதெல்லாம், அவள் அவனுக்கு மிகவும் நெருக்கமான சொந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் அந்த செவிலி. அவனுடைய சலைன் பாட்டிலை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவரை அழைத்து, அவனுக்கு ஊசி போடச் செய்தாள்.

மறுநாள் காலை

மருத்துவமனையை வந்தடைந்த கிரிவரன், ரிஷிவரனின் எண்ணுக்கு ஃபோன் செய்தார். அந்த அழைப்பை மதுமிதா ஏற்றாள்.

"அம்மா, நான் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன் டா. நீ எங்க இருக்க?"

"ஐ சி யு அங்கிள். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கேன்"

"இதோ வரேன் மா"

ரிஷியின் கைபேசியை அவனது தலையணைக்கு அடியில் வைத்த மதுமிதா, செவிலியை நோக்கி சென்று,

"சிஸ்டர், நான் டீ குடிக்க போறேன். அவனோட அப்பா எப்ப வேணும்னாலும் இங்க வருவாரு. அவர்  பேர் கிரிவரன் சொக்கநாதன்" என்றாள்.

சரி என்று தலையசைத்தார் அந்த செவிலி. வெளியில் சென்ற மதுமிதா, அங்கிருந்த ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டாள். டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி  விரைவதை கவனித்தாள்.

உள்ளே சென்ற அவர், ரிஷியை பற்றி அந்த செவிலியிடம் விசாரித்துவிட்டு, ரிஷியின் கட்டிலை நோக்கி நடந்தார். நிம்மதி பெருமூச்சு விட்ட மதுமிதா சத்தம் இல்லாமல் அந்த இடம் விட்டு அகன்று, ஜெயச்சந்திரன் தனக்காக அனுப்பியிருந்த காரை நோக்கி நடந்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top