38 மதுமிதாவின் கோபம்
38 மதுமிதாவின் கோபம்
கல்லூரியிலிருந்து வெறுப்புடன் வீடு திரும்பினாள் மதுமிதா. அவள் முகத்தை பார்த்த உடனேயே வித்தியாசத்தை புரிந்து கொண்டார் தாட்சாயினி.
"மது..."
"ஹாங்...?"
"என்ன ஆச்சு?"
மதுமிதா விழிப்படைந்தாள்.
"ஏம்மா?"
"பார்க்க ரொம்ப டல்லா இருக்கியே..."
"தலை வலிக்குதும்மா"
"காபி சாப்பிடுறியா?"
"குடிச்சா நல்லா இருக்கும்னு தான் தோணுது"
"கொண்டு வரேன்"
அவளுக்கு காபி கலந்து கொண்டு வர சமையலறைக்கு சென்றார் தாட்சாயணி. அவருக்கு தெரியும், மதுமிதா மனதில் ஏதோ அரித்துக் கொண்டிருக்கிறது என்று. தலைவலி என்று அவள் கூறியது ஒரு சாக்கு. காப்பியை கலந்து எடுத்துக்கொண்டு, அவளது அறைக்குச் சென்றார் தாட்சாயினி.
முகத்தைக் கூட கழுவாமல், கட்டிலில் அமர்ந்து கொண்டு, தரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. வழக்கமாய், வெளியே சென்று வந்தவுடன், அவள் நேராக செல்வது குளியல் அறைக்குத்தான். சில்லென்ற நீரில் முகத்தை கழுவி புத்துணர்ச்சி அடைந்த பின் தான் அவளுக்கு பேசவே தோன்றும்.
தாட்சாயணி அவளது தோளை தொட, தன் தலையை உயர்த்தி அவரைக் கண்டாள் மதுமிதா.
"என்ன ஆச்சு?"
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்துவிட்டு, அவர் கையில் இருந்த காப்பி குவளையை பெற்றுக் கொண்டாள்.
"எது உன்னை பாதர் பண்ணுது?" அவளுக்கு முன்னால் அமர்ந்தார் தாட்சாயினி.
"ஒன்னும் இல்லையே" என்று காப்பியை பருகினாள் மதுமிதா.
"நீ ரிஷியை விரும்புறியா?" என அவர் கேட்டவுடன், காபி குடிப்பதை நிறுத்திவிட்டு அவரை உறுதியுடன் ஏறிட்டாள் மதுமிதா.
"உனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும்"
"அது விஷயம் இல்ல மா"
"நீ அப்பாகிட்ட பேசலாம் இல்ல?"
மாட்டேன் என்று தலையசைத்தாள் மதுமிதா.
"ஏன்?"
"ரிஷியை தவிர்க்க அப்பா கொடுத்த காரணம் ரொம்ப சரியானது. இல்லன்னு நம்மளால சொல்ல முடியுமா? அவருக்கு இருக்கிற பயமும் நியாயமானது தானே, மா?"
"அப்படின்னா, ரிஷியை விட்டுட்டு வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணிக்குவியா?"
"மாட்டேன்" என்ற பதில் திடமாய் வந்தது.
"வேற என்ன செய்யப் போற?"
"உங்க கூடவே இருந்துட்டு போறேன்..." காபி குடித்து முடித்து குவளையை கீழே வைத்தாள் மதுமிதா.
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"
கலக்கத்துடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் மதுமிதா.
"நான் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்"
"அம்மா, ரிஷி முன்ன மாதிரி இல்ல, மாறிட்டான் அப்படிங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா அதுக்காக, அப்பாவை எதிர்த்துகிட்டு அவனுக்கு என்னால சப்போர்ட் பண்ண முடியாது. ரிஷி என்னை காதலிக்கிறது உண்மையா இருந்தா, அப்பாவோட சம்மதத்தோட என்னை கல்யாணம் பண்ணிக்கட்டும்"
"அப்படின்னா நீ அவனை காலேஜ்ல பார்க்கவே மாட்டியா?"
"ஏன் பாக்க மாட்டேன்? நிச்சயம் பார்ப்பேன். அவன் என்னை உண்மையிலேயே காதலிக்கிறானா இல்லையான்னு நிச்சயம் அவனை கேட்பேன்" என்றாள் பல்லை கடித்துக் கொண்டு கோபமாக.
தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது தாட்சாயணிக்கு.
"போடி, நீயும் உங்க அப்பாவும்..." என்று அந்த இடத்தை விட்டு அகன்றார் அவர்.
அன்பு இல்லம்
தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியை பார்த்தபடி கட்டிலில் படுத்திருந்தான் ரிஷி. அங்கு வந்த ரோகிணியை கூட அவன் கவனிக்கவில்லை, அவர் அவனது தோளை தொடும் வரை. அவரைப் பார்த்த அவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான். அவன் முகத்தை படித்த படி அவன் அருகில் அமர்ந்தார் ரோகிணி.
"என்ன ஆச்சு மாம்?"
"உன் முகத்தில் களையே இல்ல. அப்பாவும் ஒழுங்கா சாப்பிடுறதில்ல. இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல, குட்டி"
தலை தாழ்த்தினான் ரிஷி.
"நம்ம இதுக்கு ஏதாவது செஞ்சாகணும்" என்ற அவரை, உணர்ச்சியின்றி ஏறிட்டான்.
"நீ சாம்பசிவத்தோட மனசுல இடம் பிடிக்கணும். உன்னைத் தவிர அவர் பொண்ணுக்கு ஏத்த ஒருத்தன் இல்லவே இல்லைன்னு நினைக்கிற அளவுக்கு அவர் மனசு மாறனும்"
வலி நிறைந்த புன்னகை சிந்தினான் ரிஷி.
"நம்மால சாதிக்க முடியாதுன்னு எதுவுமே இல்ல. நீ மதுமிதாவை காதலிக்கிற. அவளும் உன்னை விரும்புகிறா. சாம்பசிவத்தையும் நம்ம குறை சொல்ல முடியாது. அவருடைய இடத்தில யார் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு முடிவை தான் எடுப்பாங்க. ஏன்னா, எல்லா அப்பாவும் தன்னோட பொண்ணு சந்தோஷமா மட்டும் இருந்தா போதாது, நிம்மதியாவும் இருக்கணும்னு தானே நினைப்பாங்க?"
ஆமாம் என்று தலையசைத்தான் ரிஷி.
"அவர் மகளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுப்பேங்கற உத்திரவாதத்தை நீ அவருக்கு குடு"
"நான் என்ன மாம் செய்யணும்?"
"அவளுக்கு பாதுகாப்பாய் இரு. தினமும் அவளை வீட்ல கொண்டு போய் விடு. அவளை பத்திரமா பாத்துக்கோ"
"அப்படி செஞ்சா?" என்றான் குழப்பத்துடன்.
"நீ உன் மனசை மாத்திக்கலைன்னு சாம்பசிவம் நினைப்பாரு. நீ உன் முடிவுல உறுதியாக இருக்கேன்னு அவருக்கு புரியும்"
உண்மை தான் என்பது போல் தலையசைத்தான் ரிஷிவரன்.
"நல்லா படிச்சு, அப்பா பிசினஸை டேக் ஓவர் பண்ணு. சாம்பசிவத்தை நம்ம கம்பெனியோட மெயின் ஏஜெண்டா போடு. மதுமிதாவோட படிப்பு முடிஞ்ச பிறகு, அவளை உன்னோட பர்சனல் செகரட்டரியா அப்பாயிண்ட் பண்ணு"
அவர் கூற வருவது என்ன என்பது ஓரளவு புரிந்தது ரிஷிக்கு.
"நீ இதையெல்லாம் செஞ்சா, நீ அவரோட கண்காணிப்பில் இருக்கிறதா சாம்பசிவம் நினைப்பாரு. மதுமிதாவும் எல்லா நேரமும் உன் கூட இருக்கிறதால, அவளைத் தவிர வேறு யாரையும் நீ டேட் பண்ண மாட்டேன்னு அவர் உன்னை முழுசா நம்ப ஆரம்பிப்பார்"
சந்தோஷமாய் தன் அம்மாவை அணைத்துக் கொண்டான் ரிஷி. அப்போது அவர்கள்,
"சூப்பர் பிளான் ரோகிணி" என்றபடி கிரிவரன் உள்ளே வருவதை பார்த்தார்கள்.
ரோகிணியின் பக்கத்தில் வந்து அமர்ந்த அவர்,
"நீ கலக்கிட்ட " என்றார்.
"அம்மாங்குற முறையில, நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுக்கணும். எக்காரணத்தைக் கொண்டும், மதுமிதாவையோ, அவங்க அப்பாவையோ, உன்னை தேர்ந்தெடுத்ததுக்காக வருத்தப்பட வைக்க கூடாது"
அவர் கரத்தைப் பற்றிய அவன்,
"சத்தியமா, என் வைஃப்க்கு நான் உண்மையா இருப்பேன். என் மாமனாரையும் பெருமைப்படுத்துவேன்" என்றான்.
அன்பாய் அவன் நெற்றியில் முத்தமிட்டார் ரோகிணி.
"எப்படியோ ஒரு நல்ல பாயிண்ட் கிடைச்சது," என்று நிறுத்திய கிரிவரன்,
"எனக்கு செமையா பசிக்குது. மீன் குழம்பை ஒரு பிடி பிடிக்கணும்" என்றார்.
"மீன் குழம்பு இருக்கு. ஆனா உங்களுக்கு இல்ல. குட்டிக்கு மட்டும் தான்" என்றார் ரோகிணி.
"எனக்கு இல்லையா? ஏன்?" என்றார் அதிர்ச்சியுடன்.
"உங்களுக்கு தான் நான் வச்ச மீன் குழம்பு பிடிக்கலையே..."
"யார் சொன்னது?"
"நீங்க வேண்டா வெறுப்பா சாப்பிட்டதை தான் நான் பார்த்தேனே..."
"மதியானம் நான் அப்செட்டா இருந்தேன்"
"அதனால?"
"ப்ளீஸ், ப்ளீஸ், நீ என்னோட செல்ல பொண்டாட்டி இல்லையா?"
"டாட் டாட்.... நான் இங்கிருந்து கிளம்புறேன். அதுக்கு அப்புறம் நீங்க ரொமான்ஸ் பண்ணிக்கோங்க" என்று சிரித்தான் ரிஷி.
அங்கிருந்து ஒரே ஓட்டமாய் ஓடிப் போனார் ரோகிணி.
ரிஷியை சந்தோஷமாய் அணைத்துக்கொண்டார் கிரிவரன்.
"பாத்தியா, என் ரோகிணி உன் பிரச்சனையை தீர்த்துட்டா?"
"டாட், அவங்க ஐடியா தான் கொடுத்திருக்காங்க. ஆனா அதை செஞ்சு முடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல"
"ஈசி இல்ல தான். ஆனா, முடியவே முடியாதது ஒன்னும் இல்லையே...! கஷ்டப்பட்டு ஜெயிச்சு காட்டு" அவனது தோளை தட்டினார்.
"ஜெயிக்காம விடுறதா இல்ல"
"இப்பதான் நீ என் பிள்ளை"
"சரி கிளம்புங்க. நீங்க உங்க டார்லிங்கை தாஜா பண்ண வேண்டி இருக்கு. இல்லைனா உங்களுக்கு மீன் குழம்பு கிடைக்காது" என்றான் கிண்டலாய்.
"ஆமா டா. நீ சொல்றது சரி தான். எனக்கு பிடிக்கும்னு அவ ஆசையா சமைச்சதை நான் மதியானம் ஒழுங்காவே சாப்பிடல. அவ மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்" என்றபடி விரைந்தார் கிரிவரன்.
சிரித்தபடி அவரை பின்தொடர்ந்தான் ரிஷி.
மறுநாள்
சாம்பசிவத்திடம் நல்ல பெயர் வாங்க, ரோகிணியின் அறிவுரையை பின்பற்றுவது என்று முடிவு செய்தான் ரிஷி. ஆனால் மதுமிதாவை கையாள்வது என்பது வேறு விஷயம். அவளது நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்பினான் அவன். கல்லூரியின் கடைசி மணி அடிக்கும் வரை, அவள் கண்களில் படுவதில்லை என்று முடிவு செய்தான். அதனால், முதல் நாளை போலவே தன் வகுப்பிலேயே மதிய உணவை சாப்பிட நினைத்தான்.
முதல் நாளை போலவே அன்றும் ரிஷியை பார்க்காததால், உணவு இடைவேளை வரை காத்திருந்த மதுமிதா, அவனைத் தேடி கேன்டினுக்கு சென்றாள். அவன் அங்கு இல்லாததால், அவனது வகுப்பறைக்கே அவனை தேடி வந்த அவள், அவன் தன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டாள். மதுமிதாவை தன் வகுப்பறையில் பார்த்த ரிஷிவரன், திகைத்துப் போனான். அவனது நண்பர்களும் ஆச்சரியமடைந்தார்கள். அவளது முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. சுதாகரையும், ஜெயப்பிரகாஷையும் பார்த்து சைகை செய்தான் பாலா.
"இன்னைக்கு ரிஷி செம்ம அடி வாங்க போறான்னு நினைக்கிறேன்" என்றான் அவன் கிண்டலாய்.
அவர்களைப் பார்த்து மதுமிதா முறைக்க, தத்தம் சாப்பாட்டு டப்பாக்களை எடுத்துக்கொண்டு, அவர்கள் வகுப்பறையை விட்டு அமைதியாய் வெளியேறினார்கள். ரிஷி அவர்களை தடுக்கவில்லை.
கோபத்துடன் அவனை நோக்கி வந்தாள் மதுமிதா. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாய் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரிஷிவரன்.
"உன் மனசுல என்னைப் பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?"
தன் வலது புருவத்தை உயர்த்தி, அவளை பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் ரிஷிவரன்.
"என்னை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க, எங்க அப்பாவுக்கு விருப்பம் இல்லைன்னா, நீ பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டே இருப்பியா?" சீறினாள் அவள்.
"நான் என்ன செய்யணும்னு நினைக்கிற?" என்றான் அவன் கைகளை கட்டிக் கொண்டு.
"என்ன மடத்தனமான கேள்வி இது? இந்த கேள்வியை கேட்க தான் என் பின்னாடி சுத்திகிட்டு திரிஞ்சியா?" கொதிப்புடன் கேட்டாள் மதுமிதா.
"உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இல்லனா, நான் வேற என்ன செய்றது? நீ தான சொன்ன, என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு?"
"நீ தானே சொன்ன, உன்னால முடியாதுன்னு யாராவது சேலஞ்ச் பண்ணா, அதை செஞ்சு காட்டுவேன்னு...? அதனால தான் அப்படி சொன்னேன்"
"அதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் அவனுக்கு புரியாதது போல.
கோவம் பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. பல்லை கடித்தாள் அவள்.
"நீ எதையாவது செஞ்சு தொலை... ஆனா என் முன்னாடி வந்த, உன்னை கொன்னுடுவேன்" தரையை ஓங்கி மிதித்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றாள் மதுமிதா.
அவள் சொல்வதையே பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தான் ரிஷிவரன்.
ஆனால் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வேறொரு நபர் கேட்டுக் கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியாது. அந்த நபர் வேறு யாருமல்ல, *ஏதாவது கிடைக்காதா?* என்று சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருந்த தேஜஸ்வினி தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top