36 காரணம்
36 காரணம்
"மன்னிச்சுடுங்க. எனக்கு இந்த சம்பந்தத்தில் சம்பந்தமில்ல" சாம்பசிவத்தின் பதில் அங்கிருந்து அனைவரையும் உடைத்துப் போட்டது.
மதுமிதாவின் கண்கள் அணிச்சையாய் கலங்கியது. தன் தந்தையிடம் இருந்து அப்படி ஒரு முடிவை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் ரிஷிவரனை சீண்டி பார்க்க நினைத்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது வேறு. ஆனால் இப்போது, அவள் தன் தந்தைக்கு எதிராக எப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும்?
ரிஷிவரனின் நிலையையோ வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. மதுமிதாவின் கலங்கிய கண்களை அவன் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கிரிவரனும், ரோகிணியும் மனம் உடைந்து போனார்கள். அவர்கள் சாம்பசிவத்தை குறைத்து எடை போட்டு விட்டதாய் எண்ணினார்கள். தாட்சாயினி கூட சாம்பசிவத்தின் மீது வெகு கோவமாய் இருந்தார். இப்படிப்பட்ட ஒரு நல்ல வரனை யாராவது வேண்டாம் என்று மறுப்பார்களா? தன்னிடமும், மதுமிதாவிடமும் கேட்காமல், அவராகவே எப்படி இவ்வாறு ஒரு முடிவை எடுக்க முடியும்?
"உங்களுக்கு ஏன் இந்த சம்மந்தத்துல சம்மதம் இல்லன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?" என்றார் கிரிவரன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு.
"அது தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, உங்க மனசை காயப்படுத்த நான் விரும்பல"
என்ற அவரது பதில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. காயப்படுத்துவதா? அப்படி என்ன கூறி விடப் போகிறார் சாம்பசிவம்?
"பரவாயில்ல சொல்லுங்க. என்ன காரணம்னு நாங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா?" என்றார் ரோகிணி. அவருக்கு காரணத்தை தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
"நம்ம ரெண்டு குடும்பத்தோட லைஃப் ஸ்டைலும் வேற. உங்களைப் பொறுத்த வரைக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொண்ணோட சுத்துறது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனா எங்களை பொறுத்த வரைக்கும், ஒருத்தன் எப்படிப்பட்டவன்னு அவனுடைய பழக்க வழக்கத்தை வச்சு தான் நாங்க முடிவு பண்ணுவோம்" என்றார் நேருக்கு நேராய் அவரது கண்களை சந்தித்தபடி.
பரிதாபமாய் தன் மகனை பார்த்தார் கிரிவரன். தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை விழுங்க படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான் ரிஷிவரன். ரோகிணி தலைகுனிந்தார்.
மதுமிதாவின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. இதற்கு என்ன அர்த்தம்? அவளுடைய அப்பா, ரிஷிவரனை பற்றி விசாரித்து இருக்கிறாரா?
"எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. நாங்க கிளம்பறோம்" என்றார் தன் கரங்களை குவித்து சாம்பசிவம்.
கிரிவரனும் ரோகிணியும் கரம் குவித்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். கண்ணிமைக்காமல் அவர்கள் செல்வதையே... இல்லை, இல்லை, மதுமிதா செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் ரிஷிவரன். யாரோ அவனது இதயத்தை கசக்கி பிழிவது போல் இருந்தது அவனுக்கு. செய்வதறியாது தவித்துக் கொண்டு நின்றான் அவன்.
கிரிவரன் அவனது தோளை தொட்டது தான் தாமதம், அவரை கட்டிக் கொண்டு ஓவென்று அழுதான் ரிஷிவரன். அவர்களது பலவீனத்தைக் கண்ட ரோகிணியால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்றும் தெரியவில்லை. ரிஷிவரனை பற்றி தெள்ளத்தெளிவாய் சாம்பசிவம் விசாரித்து இருக்க வேண்டும். அவன் மதுமிதாவுடன் இயைந்து பழகுவதை பார்த்ததால், அவருக்கு அதை செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். செய்வதற்கு இதில் ஒன்றுமில்லை. ரிஷிவரன் எப்படி மதுமிதாவை மறக்க போகிறான் என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு வேறு வழி இல்லை. அவன் மறந்து தான் ஆக வேண்டும், என்று எண்ணினார் ரோகிணி.
ஆனால், தன் மகனின் கண்ணீரைத் துடைத்து விட்ட கிரிவரன்,
"நீ எதுக்காக டா கவலைப்படுற? மதுமிதா கண்கலங்கினதை நான் பார்த்தேன். அவளுக்கும் உன் மேல விருப்பம் இருக்கு. அப்புறம் ஏன் நம்ம சாம்பசிவத்தை பத்தி கவலை படணும்? அவளை கூட்டிக்கிட்டு வா. அவர் என்ன செய்றாருன்னு நான் பாக்குறேன்" என்றார் சீற்றத்துடன்.
வெலவெலத்து போனார் ரோகிணி. இவருக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது? ஒரு அப்பாவாக இருந்து கொண்டு தன் மகனுக்கு எப்படி அவர் இப்படி ஒரு தைரியத்தை வழங்கலாம்? கிரிவரன் மீது கோபம் வந்தது ரோகிணிக்கு.
"இல்ல டாட். அவங்க அப்பாவை மீறி அவ எதுவும் செய்ய மாட்டா" என்றான் தவிப்புடன்.
"அப்படின்னா, நீ என்ன செய்யப் போற? அவளை மறந்துட போறியா? உன்னால முடியுமா?" என்றார் கோபமாய்.
"சத்தியமா முடியாது... அவளை மறக்கறதுக்கு பதில் நான் உயிரை விடுவேன்"
"வேற என்ன செய்யப் போற?"
"நான் கொஞ்சம் யோசிக்கணும்" என்று தன் அறையை நோக்கி நடந்தான் ரிஷிவரன்.
ரோகிணியை ஏறிட்டார் கிரிவரன்.
"என்ன மாதிரியான அட்வைஸ் நீங்க அவனுக்கு கொடுக்குறீங்க? ஒரு அப்பாவா இருந்துகிட்டு நீங்க இப்படியா பேசுவீங்க?"
"ரோகிணி, குட்டி எந்த அளவுக்கு காயப்பட்டு இருக்கான்னு உனக்கு தெரியாது. இந்த விஷயத்துல நான் எது சரி, எது தப்புன்னு பார்க்க போறதில்ல. என் குட்டியும் அவனோட சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம். என்னை தடுக்கணும்னு மட்டும் நினைக்காத" அந்த இடம் விட்டு அகன்றார் கிரிவரன், ரோகிணியை திகைப்பில் ஆழ்த்தி.
அவர்களது இருபத்தைந்து ஆண்டு கால திருமண வாழ்வில், இது தான் முதல் முறை, கிரிவரன் ரோகிணி இடம் அவ்வளவு கடுமை காட்டி பேசியது. விஷயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள அது போதாதா ரோகிணிக்கு?
.........
வீடு சென்று சேரும் வரை ஒன்றும் பேசாமல் அமைதி காத்த தாட்சாயனி, வீடு வந்து சேர்ந்ததும் சாம்பசிவத்தின் கரத்தை பற்றி நிறுத்தினார்.
"என்ன செய்றோம்னு தெரிஞ்சு தான் செஞ்சீங்களா? எதுக்காக அவங்க சம்மந்தத்தை வேண்டாம்னு சொல்லிட்டு வந்தீங்க? அவங்களை மாதிரி ஒரு நல்ல குடும்பம் நமக்கு இந்த ஜென்மத்துல கிடைக்கும்னு நினைக்கிறீங்களா?"
"வசதியை வச்சு பார்க்கும் போது, அப்படி ஒரு குடும்பம் நிச்சயம் நமக்கு மறுபடியும் கிடைக்காது. ஆனா வாழ்க்கை, வெறும் வசதியை மட்டுமே சார்ந்தது இல்ல"
"உங்க பேச்சுக்கே வரேன்... வசதியை விட்டுட்டு தான் பாருங்களேன், கிரிவரனும் ரோகிணியும் எவ்வளவு நல்லவங்க... "
"அப்போ ரிஷி?"
அவரை குழப்பத்துடன் பார்த்தார் தாட்சாயணி.
"ரிஷியோட காலேஜ்ல அவனுக்கு பொம்பள பசங்க கிட்ட ரொம்ப பெரிய டிமாண்ட் இருக்கு. எந்த பொண்ணு கூப்பிட்டாலும், அவ கூட அவுட்டிங் போறதை அவன் வழக்கமா வச்சிருக்கான்"
அதிர்ச்சியுடன் மதுமிதாவை ஏறிட்டார் தாட்சாயினி.
"அப்பா சொல்றது உண்மையா?"
"அவன் அப்படி இருந்தது உண்மை தான். ஆனா இப்போ அவன் மொத்தமா மாறிட்டான்" என்றாள் உறுதியாய்.
"எது அவனை அப்படி மாத்துச்சு?" என்றார் சம்பசிவம்.
சில நொடி திகைத்து நின்ற மதுமிதா,
"அவனுக்கு நடந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு தான் அவன் மாறினான். வாழ்க்கை நிலையில்லாததுன்னு அவனுக்கு புரிஞ்சு இருக்கணும்."
"நீ நிஜமாத் தான் சொல்றியா?" என்றார் தாட்சாயினி.
"அந்த ஆக்சிடென்ட் பிறகு, அவன் யார் கூடயும் போறதை நான் பார்க்கல. அவன் பொம்பள பசங்க கிட்ட பேசுறதயே நிறுத்திட்டான்"
"அவ சொன்னதை நீங்க கேட்டீங்களா?"
"எட்டாத பழத்துக்கு ஆசைப்படுறது நல்லதில்ல தாட்சாயினி. நமக்கு பொருத்தம் இல்லாத ஒன்னை பத்தி நம்ம ஏன் யோசிக்கணும்?" அங்கிருந்து அகன்றார் சாம்பசிவம்.
தன் அறைக்கு வந்த மதுமிதா, இடிந்து போனவளாய் கட்டிலில் அமர்ந்தாள். இது அவள் எதிர்பாராதது. ரிஷிவரனும் கூட இதை எதிர்பார்த்து இருக்க மாட்டான். அவளது பெற்றோர் அவனை ஏற்றுக் கொள்வார்கள் என்று அவன் உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தது அவளுக்கு தெரியும். அவன் என்ன செய்யப் போகிறானோ...! நாளை கல்லூரியில் அவளுக்கு என்ன நாடகம் காத்திருக்கிறதோ...!
......
ரிஷிவரனுக்கு தூக்கம் வரவில்லை என்றால் அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட ஒரு வலி நிறைந்த சூழ்நிலையை அவன் எப்பொழுதும் எதிர்கொண்டதில்லை. எந்த ஒரு பெண்ணுக்காகவும் அவன் வருத்தப்பட்டதும் இல்லை. மதுமிதா அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளை அவன் காதலிக்கவில்லை. யாரிடமும் காண முடியாத அருங்குணங்கள் அவளிடம் இருந்தது. அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மனம் போன போக்கில் இருப்பதை பற்றி, பலமுறை கிரிவரன் அவனை எச்சரித்தார். அவனது இந்த வகையான நடத்தை, அவனது எதிர்காலத்தை மோசமாய் ஒரு நாள் பாதிக்கும் என்றும் அவர் கூறினார். அப்போது ரிஷிவரன் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவரது வார்த்தைக்கு அவன் செவி கூட சாய்க்கவில்லை. ஆனால் இன்று, தன் நடத்தையால் விளைந்த கசப்பான கனியை அவன் சுவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் விதைத்த விதை, முள் விருட்சமாய் வளர்ந்து, அவனுக்கும் மதுமிதாவுக்கும் இடையில் பேயென நிற்கிறது.
இப்போது அவன் என்ன செய்யப் போகிறான்? மதுமிதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவனது ஆசையை, அவனது இதய சுரங்கத்தில் இருந்து வெட்டி வீசி விட முடியுமா அவனால்? நிச்சயம் முடியாது. அவள் அவனை மணந்து கொண்டு தான் ஆக வேண்டும். கிரிவரன் கூறியது உண்மை தான். மதுமிதாவிற்கு அவனை பிடித்திருந்தால், அவன் ஏன் சாம்பசிவத்தை பற்றி கவலை கொள்ள வேண்டும்? ஆனால் மதுமிதா அவனை விரும்புகிறாளா? விடை தெரியாத அந்த கேள்வி அவனுக்கு எரிச்சலை தந்தது.
மறுநாள்
வழக்கத்திற்கு மாறாக கல்லூரிக்கு சற்று முன்னதாகவே வந்து விட்டான் ரிஷிவரன். மதுமிதா எப்படி நடந்து கொள்கிறாள் என்று பார்க்க வேண்டும் அவனுக்கு. அவள் சாதாரணமாக இருக்கிறாளா, அல்லது அவனிடம் இறுக்கம் காட்டுகிறாளா என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கிறது அல்லவா?
அவன் மரத்தடியில் அமர்ந்திருந்ததை கண்ட பாலா அவனிடம் வந்தான்,
"என்ன மச்சான் ஆச்சரியம்...! நீ இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட?"
கல்லூரியின் நுழைவுவாசலில் இருந்து தன் கண்களை அகற்றாமல், ஆம் என்று தலையசைத்தான் ரிஷிவரன்.
"என்ன ஆச்சு ரிஷி, ஏன் டென்ஷனா இருக்க?"
"அம்மா, மதுமிதாவோட அப்பாகிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினாங்க. ஆனா அவர் தனக்கு அதுல சம்மதம் இல்லைன்னு சொல்லிட்டாரு"
"என்னடா சொல்ற?" அதிர்ந்தான் பாலா.
கண்களை மூடி, தன் நெற்றியை தேய்த்தான் ரிஷிவரன்.
"அத பத்தி மது எதாவது சொன்னாளா? அதுக்கு அவளோட ரியாக்ஷன் என்ன?"
"அவளோட கண் கலங்கிடுச்சு"
"அப்புறம் என்ன ரிஷி? அவகிட்ட நேரடியா கேட்டுடு"
"அதை காலேஜ்ல என்னால செய்ய முடியாது. யாருக்காவது தெரிஞ்சிட்டா, அவளுக்கு அது பிரச்சனையாகும்"
அப்போது மதுமிதா கல்லூரிக்குள் நுழைவதை அவர்கள் கண்டார்கள். ரிஷியை மறைத்துக் கொண்டு நின்றான் பாலா. மதுமிதாவை அவன் வித்தியாசமான பார்வை பார்ப்பதை, மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பது தான் அவனது நோக்கம். தலை குனிந்த படி தன் வகுப்பை நோக்கி நடந்தாள் மதுமிதா. அவள் ரிஷியின் பக்கம் திரும்பி பார்க்காமல் சென்றது அவனது கோபத்தில் எண்ணெயை ஊற்றியது.
"ம...து...."
எந்த உணர்ச்சியும் இன்றி மெல்ல அவனை நோக்கி திரும்பினாள் மதுமிதா. அவளிடம் விரைந்து சென்றான் ரிஷிவரன்.
"எதுக்காக என்னை பாக்காம போற?"
"எதுக்காக நான் உன்னை பார்க்கணும்?"பதில் கேள்வி கேட்டாள் அவள்.
"உங்க அப்பா இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்ன போது எதுக்காக உன்னோட கண் கலங்குச்சு?"
அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல்,
"நான் தான் சொன்னேனே, உன்னால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு..."
"நீ சொன்ன. ஆனா நான் அதை ஒத்துக்கல"
"அது முக்கியம் இல்ல"
"முக்கியம் தான். நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அதை யாராலும் மாத்த முடியாது. புரிஞ்சுதா?"
"உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு" முணுமுணுத்த படி அங்கிருந்து நகர்ந்தாள் மதுமிதா.
பாலாவை பார்த்து புன்னகை தான் ரிஷி.
"இதெல்லாம் என்ன ரிஷி?" என்றான் பாலா குழப்பத்துடன்.
"அவள் எதையும் மறக்கக்கூடாது. இப்போதிலிருந்து, நான் சொன்னதை தான் அவ நினைச்சுக்கிட்டு இருப்பா" என்றான் புன்னகையோடு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top