34 பந்தயம்

34 பந்தயம்

அடியோடு குழம்பிப் போனாள் மதுமிதா. அவளால் ரிஷிவரனின் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை, விட்டு தள்ளவும் முடியவில்லை. ஏனென்றால், அவன் எதையும் செய்யக் கூடியவன் ஆயிற்றே...! அவனது வார்த்தைகளை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவன் என்ன செய்யப் போகிறான்? எப்படி செய்யப் போகிறான்? அவனது பெற்றோர் அவளை பெண் கேட்கப் போகிறார்களா? ஒருவேளை, அவனது பெற்றோர், அவளது பெற்றோரிடம் இதைப் பற்றி ஏற்கனவே பேசி இருப்பார்களோ? ஆனால் அவளது பெற்றோரை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே...! ரிஷியின் வீட்டிற்கு கொண்டு செல்லப் போகும் பரிசு பொருட்களை பற்றி பேசியபடி அவர்கள் சாதாரணமாக தானே இருக்கிறார்கள்...! அவளுக்கு தாட்சாயனியை பற்றி நன்றாகவே தெரியும். அப்படி ஏதாவது நடந்திருந்தால், அவர் சந்தோஷத்தில் வீட்டையே தலைகீழாக மாற்றி இருப்பார். அவளுக்கு பதிலும் கிடைக்கவில்லை, தூக்கமும் வரவில்லை.

இதற்கிடையில்,

கைபேசியை சிரித்தபடி கட்டிலின் மீது வீசி எறிந்தான் ரிஷிவரன். நாளை, அவன் மதுமிதாவை மடக்கியாக வேண்டும். இப்போதெல்லாம் அவள் அவனை ரொம்பவே கிண்டல் செய்கிறாள் இல்லையா? பார்ப்போம், நாளை அவள் அவனிடமிருந்து எப்படி தப்பி செல்கிறாள் என்று. சிரித்தபடி கட்டிலில் சாய்ந்தான்.

அவனது கைபேசி மீண்டும் ஒலித்தது. அதை எடுத்து பார்த்த அவன், வாய்விட்டு சிரித்தான். அந்த அழைப்பு மதுமிதாவுடையது தான். கைப்பேசியுடன் வெளியே ஓடி வந்தான். கிரிவரன் தன் அறையை நோக்கி செல்வதை பார்த்து,

"டாட் " என்று அழைத்தான்.

அவனை நோக்கி புருவம் உயர்த்தினார் கிரிவரன். அவரிடம் ஓடிச் சென்ற ரிஷி, தனது கைபேசியை அவரிடம் கொடுத்து, பேசுமாறு சைகை செய்தான். அவனது கைபேசியில் மதுமிதாவின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து, புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்றார் கிரிவரன்.  அவர் எதுவும் கூறுவதற்கு முன்,

"நீ என்ன சொன்ன?" என்றாள் மதுமிதா.

சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்த ரிஷிவரனை ஏறிட்டார் கிரிவரன்.

"இங்க பாரு ரிஷி, நான் ரொம்ப மோசமான பொண்ணு. என்கிட்ட உன் வேலையெல்லாம் காட்டாத. என்னோட உண்மையான பக்கம் உனக்கு தெரியாது. உன்னோட வாலை என்கிட்ட ஆட்டின்னா, ஒட்ட நறுக்கிடுவேன். ஜாக்கிரதை. ஏன் அமைதியா இருக்க? வாயில என்ன கொழுக்கட்டையா? வாயைத் திறந்து பேசு"

"நீ ரொம்ப நல்லவவவவன்னு நினைச்சேனே மா... " என்றார் கிரிவரன்.

கிரிவரனின் குரலைக் கேட்ட மதுமிதா, சிலையாகி போனாள்.

"அங்கிள்.. நான்... வந்து... எனக்கு தெரியாது... நீங்க தான்னு... நான் ரிஷின்னு நினைச்சேன். ஐ அம் சாரி அங்கிள்" பேசவே தடுமாறினாள் மதுமிதா.

"ஹலோ... ஹோல்ட் ஆன்... " சிரித்தார் கிரிவரன்.

'ஐ அம் சாரி அங்கிள். நான் தெரியாம... "

"பரவாயில்லை விடுமா. நான் உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லட்டுமா?"

"என்ன அங்கிள்?"என்றாள் தயக்கத்துடன்.

"ரிஷி ஒரு சரியான குரங்கு பய... எப்ப பார்த்தாலும் வாலை ஆட்டிகிட்டு தான் இருப்பான். அவன்கிட்ட நீ ஜாக்கிரதையா இரு" என்று சிரித்தார்.

ரிஷியும் அவருடன் சேர்ந்து கொண்டு சிரித்தான். பதட்டத்துடன் நகம் கடித்தாள் மதுமிதா.

"ரிஷியை கூப்பிட்டு நான் ஃபோனை அவன்கிட்ட கொடுக்கட்டுமா?"

"இல்ல அங்கிள். வேண்டாம்"

"ஓகே, குட் நைட்"

"குட் நைட் அங்கிள்" அழைப்பை துண்டித்தாள்.

வாய்விட்டு சிரித்தான் ரிஷிவரன்.

"அவளை கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டியா நீ? அவ என்ன சொன்னா தெரியுமா?"

"அவ என்னை சேலஞ்ச் பண்ணதுக்கு பிறகு நான் எப்படி டாட் அவளை சும்மா விட்டுட முடியும்? அது சரி, அவ என்ன சொன்னா?"

"இங்க பாரு ரிஷி, நான் ரொம்ப மோசமான பொண்ணு. என்கிட்ட உன் வேலையெல்லாம் காட்டாத. என்னோட உண்மையான பக்கம் உனக்கு தெரியாது. உன்னோட வாலை என்கிட்ட ஆட்டின்னா, ஒட்ட நறுக்கிடுவேன். ஜாக்கிரதை. ஏன் அமைதியா இருக்க? வாயில என்ன கொழுக்கட்டையா? வாயைத் திறந்து பேசு" என்று மதுமிதாவை போல் பேசி காட்டினார் கிரிவரன்.

விழுந்து விழுந்து சிரித்தான் ரிஷிவரன்.

"அவ குழம்பி போய் இருக்கான்னு நினைக்கிறேன். நீ அவகிட்ட பேசு. கிளியர் ஆயிடுவா"

"நான் அவகிட்ட பேசினா தான் அவ ரொம்பவே குழம்பி போவா டாட்" மீண்டும் சிரித்தான் கிரிவரன்.

"சரி என்னவோ செய் " என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் கிரிவரன்.

மீண்டும் தன் அறைக்கு வந்த ரிஷிவரன், மதுமிதாவிற்கு ஃபோன் செய்தான். இந்த முறை, தயக்கத்துடன் அந்த அழைப்பை ஏற்றாள் மதுமிதா.

"ஹலோ என்றாள் மெல்லிய குரலில்.

"எதுக்காக எங்க அப்பாவுக்கு கால் பண்ண?" என்று வேண்டுமென்றே அவளை வம்புக்கு இழுத்தான்.

"நான் ஒன்னும் அவருக்கு கால் பண்ணல"

"அப்புறம், அவரா உனக்கு கால் பண்ணாரு?"

"நான் உனக்கு தான் கால் பண்ணேன்"

"உன்னோட வருங்கால புருஷன் கிட்ட பேசுறதுக்கு அவ்வளவு என்ன அவசரம், மது? நாளைக்கு நம்ம நிச்சயதார்த்தத்தில் பேசினா போகுது.."

"என்னது நிச்சயதார்த்தமா?" என்றாள் வேண்டுமென்றே.

"நீ என்ன மறந்துட்டியா? நீ என்னை சேலஞ்ச் பண்ணியிருக்க... நீ இந்த ரிஷிவரனை சேலஞ்ச் பண்ணி இருக்க..."

"சேலஞ்சா? நான் எப்ப சேலஞ்ச் பண்ணேன்?" என்றாள் அவள் அதை மறந்து விட்டது போல.

"நான் உங்க வீட்டுக்கு போளி கொண்டு வந்தப்போ, அதை சாப்பிட்டுக்கிட்டே நீ சொன்னியே, என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு, ஞாபகம் இல்லையா?"

"ஆமாம் இருக்கு... இப்போ என்ன அதுக்கு?"

"உன்னை கல்யாணம் பண்ணி, அந்த சேலஞ்சில நான் ஜெயிக்கப் போறேன்"

"என்னோட விருப்பம் இல்லாம, இந்த கல்யாணத்துக்கு எங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அதை ஞாபகம் வச்சுக்கோ"

"நீ நிச்சயம் ஒத்துக்குவ" என்றான் நம்பிக்கையோடு.

"ஓ... அப்படியா?" என்றாள் கிண்டலாய்.

"அப்படித்தான்" என்றான் அழுத்தமாய்.

"யாரு, யாருகிட்ட ஜெயிக்கிறதுன்னு பார்க்கலாம்"

"என்ன பெட்?"

"பெட்டா? ஒருவேளை நீ ஜெயிச்சா, கல்யாணத்துக்கு பிறகு நான் உன் வீட்டிலேயே இருக்கேன்" என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"நீ என் வீட்ல இருந்து தான் ஆகணும்... என் ரூம்ல...  என் கைக்குள்ள"

"வாயை மூடு... அழுக்கு புத்தி..."

"சரி, நான் ஜெயிச்சா, அடுத்த வாரத்துல, ஒரு நாள் முழுக்க நீ என் கூட இருக்கணும். என்ன சொல்ற?"

"நீ ஜெயிச்சா தானே?" என்றாள் அழுத்தமாய்.

"ஆமாம். நான் ஜெயிச்சா தான்" என்றான் திருத்தமாய்.

"ஓகே டன்"

"குட் நைட்,ஸ்வீட்ஹார்ட்" அழைப்பை துண்டித்தான் ரிஷிவரன்.

தன் கைபேசியை பார்த்தபடி புன்னகைத்தாள் மதுமிதா. மறுநாள் ரிஷி என்ன செய்யப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு அதிகரித்தது.

அன்பு இல்லம்

ரோகிணியின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கிரிவரன்.

"ரோகிணி..."

"சொல்லுங்க"

"எங்களுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்"

"எங்களுக்குன்னா?
யாருக்கு?"

அவருக்கு தெரியும் ரோகிணி வேண்டுமென்றே அவரை சீண்டுகிறார் என்று.

"நான் வேற யாருக்காக ரெக்கமெண்டேஷனுக்கு போகப் போறேன்? எனக்கும் நம்ம குட்டிக்கும் தான்"

"என்ன ஹெல்ப்? நாளைக்கு உங்களுக்கு எக்ஸ்ட்ராவா ஸ்வீட்ஸ் செஞ்சி கொடுக்கணுமா?" என்றார் முகத்தை சீரியஸா வைத்துக் கொண்டு.

"போதும் ரோகிணி. கிண்டல் பண்றதை நிறுத்து. நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கே தெரியும்"

"எனக்கு எப்படி தெரியும், நீங்க என்கிட்ட ஏதாவது சொன்னீங்களா?"

"குட்டி தான் என்னை உன்கிட்ட பேச சொல்லி அனுப்பினான். நான் எது கேட்டாலும் நீ மறுக்க மாட்டேன்னு அவன் நம்புறான்"

"ஓ..."

"ப்ளீஸ் ரோகிணி, உனக்கு தெரியுமா, மது என்ன செஞ்சான்னு?"

"என்ன செஞ்சா?"

"அவ நம்ம குட்டிகிட்ட சேலஞ்ச் பண்ணி இருக்கா"

"என்ன சேலஞ்ச்?"

"நம்ம குட்டியால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னாளாம்"

"இதுல சேலஞ்ச் எங்க இருக்கு? அவ உண்மையைத் தானே சொல்லி இருக்கா"

"இது சேலஞ்ச் இல்லையா?"

"இல்ல... 'உன்னால முடிஞ்சா என்னை கல்யாணம் பண்ணி காட்டு' அப்படின்னு சொல்லி இருந்தா தான் அது சேலஞ்ச். ஆனா அவ, 'உன்னால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு' தானே சொல்லி இருக்கா"

கிரிவரன் பெருமூச்சு விட, உள்ளுறை நகைத்துக் கொண்டார் ரோகிணி.

"நம்ம குட்டி என்னை நம்பி ஒரு முக்கியமான வேலையை கொடுத்தான். ஆனா என்னால அதை செய்ய முடியாது போல இருக்கு"

"அப்படி என்ன வேலையை அவன் உங்க கிட்ட கொடுத்தான்?"

"மது அவங்க அம்மா அப்பாவோட நம்ம வீட்டுக்கு வரும் போது, அவளை பெண் கேட்க சொல்லி இருந்தான்"

"மது நம்ம குட்டியை விரும்புறாளா?"

"நான் ஊர்ஜிதமா நம்புறேன்"

"எப்படி சொல்றீங்க?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அவ நம்ம குட்டிக்கு கால் பண்ணி இருந்தா. குட்டி என்கிட்ட ஃபோனை கொடுத்து பேச சொன்னான். நான் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, அவ அவனை திட்டினா, எச்சரிக்கை பண்ணா, மிரட்டுனா... நான் உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தப்போ நீ செஞ்சியே... அதே மாதிரி" என்று சிரித்தார்.

தன் விழிகளை சுருக்கி அவரை ஏறிட்டார் ரோகிணி.

"நீ மனசு வச்சா, அவ மனசுல என்ன இருக்குன்னு நிச்சயமா கண்டுபிடிச்சிட முடியும். ப்ளீஸ் நம்ம குட்டிக்காக அதை செய்யேன்"

"நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?"

"ஒரு அம்மாவா அவங்க கிட்ட அவளை பொண்ணு கேளு. அவளுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா, நம்ம விட்டுடலாம்"

"ஒன்னு பண்ணுங்க. நீங்க அவளை பொண்ணு கேளுங்க"

கிரிவரனின் முகம் ஒளிர்ந்தது.

"அஃப்கோர்ஸ், நான் தாராளமா அதை செய்வேன்" சற்றே நிறுத்திய அவர்,

"அதை நான் செய்யணும்னு ஏன் நீ நினைக்கிற?" என்றார்.

"நான் கேட்டா, அது என்னோட தனிப்பட்ட விருப்பம்னு அவங்க நினைப்பாங்க. அதுவே நீங்க கேட்டா, நம்ம ரெண்டு பேரும் ஏற்கனவே அதை பத்தி பேசிடோம்னு நினைப்பாங்க" என்றார் ரோகிணி.

"வாவ்... இது தான் ரோகிணி..."

"நாளைக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. காலையில சீக்கிரம் எழுந்துகணும். தூங்குங்க"

"ஆமா, ஆமா..." சந்தோஷமாய் படுத்துக் கொண்டார்.

மறுநாள்

அன்பு இல்லம் சூடேறி போனது. மதுமிதாவையும் அவளது குடும்பத்தாரையும் வரவேற்க தயாரானது. அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தார் ரோகிணி. கிரிவரன் ஏற்கனவே அங்கு தான் இருந்தார். ரிஷிவரன் மட்டும் தான் மிஸ்ஸிங்.

"குட்டி எங்க?" என்றார் ரோகிணி.

"இரு கால் பண்ணி பாக்குறேன்" என்று தன் கைபேசியை எடுத்து அவர் அவனுக்கு ஃபோன் செல்ல செய்ய முயல,

அப்போது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. கதவை திறக்க ஓடினார் ரோகிணி. அவரை பின்தொடர்ந்து சென்றார் கிரிவரன். மதுமிதாவின் குடும்பத்தினர் அங்கு நின்றிருந்தார்கள்.

"வாங்க" என்று கை கூப்பி அவர்களை வரவேற்றார் ரோகிணி.

உள்ளே வந்த அவர்களை அமருமாறு கேட்டுக் கொண்டு, வேலைக்காரரை அழைத்தார். அவரது அழைப்பின் பொருளை புரிந்து கொண்ட வேலைக்காரர், அவர்களுக்கு மாம்பழரசம் கொண்டு வந்தார்.

மதுமிதாவின் கண்கள், குறிப்பிட்ட அந்த ஒரு நபரை எதிர்பார்த்து, ஓயாமல் அந்த வீட்டை சலித்துக் கொண்டே இருந்ததை, கவனித்துக் கொண்டே இருந்தார் ரோகிணி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top