28 புன்னகை
28 புன்னகை
பாலாவை பார்த்த ராதிகாவுக்கு குலை நடுங்கியது. மதுமிதாவிற்கும் அவளது தோழிகளுக்கும் கூட தூக்கி வாரி போட்டது, காயத்ரி ஒருத்தியை தவிர. அவள் உள்ளுர நகைத்துக் கொண்டாள்.
"பாலா... நீயா...? நான் சும்மா தான்.." தடுமாறினாள் ராதிகா.
அவளிடம் அவ்வளவு நேரம் சந்தோஷமாய் அளவளாவிக் கொண்டிருந்த தேஜஸ்வினி, ஃபோனில் பாலாவின் குரல் கேட்டு திகில் அடைந்தாள். அவள் கல்லூரியில் விட்டு ஓடிவிடலாம் என்று எண்ணிய போது, அவள் வழியை மறித்து, தடுத்து நிறுத்தினான் சுதாகர்.
"நான் என்னோட கசின் பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன். அவன் பெயர் கூட ரிஷி தான்" பைத்தியக்காரி போல் பல்லை காட்டி சிரித்தாள் ராதிகா.
"அப்படின்னா தேஜஸ்வினி உன்னோட கசினை லவ் பண்றாளா?"
"ஆமாம், ஆமாம் நீ சொல்றது சரி தான்..."
"அப்படின்னா, தேஜஸ்வினி கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற ரிஷி யாரு?"
"அது வந்து..."
"நீ சொன்ன பொய்யை பத்தி ரிஷிக்கு தெரிஞ்சா, அவன் என்ன செய்வான்னு தெரியுமா?"
"ப்ளீஸ் பாலா, அவன் கிட்ட எதுவும் சொல்லிடாத"
"அப்படின்னா நீ பேசிகிட்டு இருந்தது நம்ம கிளாஸ் ரிஷியை பத்தி தான், இல்லையா?"
தான் பிடிபட்டு விட்டதை உணர்ந்தாள் ராதிகா.
"நீ ரிஷியை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க?" அவனது குரல் கடுமையாய் ஒலித்தது.
"தேஜஸ்வினி தான் அவனை காதலிக்கிறேன்னு ஹெல்ப் பண்ண சொல்லி கெஞ்சினா..."
"இதுக்கு பேரு தான் ஹெல்ப்பா? நீ அவன் மரியாதையை கெடுக்க பார்த்த. நீங்க நினைச்சதை எல்லாம் நடக்க விடறதுக்கு நாங்க ஒன்னும் மடையனுங்க இல்ல. உன்னை பத்தியும் உன்னோட ஃபிரெண்ட் பத்தியும் நான் ரிப்போர்ட் பண்ண போறேன் "
"ப்ளீஸ் பாலா, ப்ளீஸ் அப்படியெல்லாம் செஞ்சுடாதே. என்னோட அப்பா என்னை கொன்னுடுவாரு"
"இந்த மாதிரி கேடுகெட்ட வேலையை செய்றதுக்கு முன்னாடி, நீ அதைப் பத்தி யோசிச்சு இருக்கணும்"
"நான் இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டேன் பாலா, என்னை நம்பு"
"மறுபடியும் இப்படி செய்யணும்ங்கற எண்ணம் வேற இருந்துதா உனக்கு?"
"இல்ல... நான் அப்படி சொல்லல... இனிமே நான் தேஜஸ்வினி கிட்ட பேசவே மாட்டேன்"
மதுமிதாவை பார்த்த பாலா,
"சொல்லு மது, இப்போ நான் என்ன செய்யணும்?"
பாலாவின் கேள்வி மதுமிதாவை திகைக்க செய்தது. அவன் எதற்காக அவளிடம் இதை பற்றி கேட்கிறான்? 'எனக்கு ஒன்றும் தெரியாது' என்பது போல் அவள் தன் தோள்களை குலுக்கினாள்.
"மதுமிதா எதுவும் சொல்லாததால, நான் உனக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கிறேன்"
"தேங்க்யூ பாலா தேங்க்யூ சோ மச்" அவசரமாய் அவனுக்கு நன்றி கூறினாள் ராதிகா.
அப்பொழுது தேஜஸ்வினியை கேண்டீனுக்கு அழைத்து வந்தான் சுதாகர். அவளைப் பார்த்து தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றான் பாலா.
"இங்க என்ன நடக்குது பாலா? எதுக்காக இவன் என்னை இப்படி கட்டாயப்படுத்தி இங்க கூட்டிக்கிட்டு வறான்? என்றாள் தேஜஸ்வினி மிகவும் நல்ல பெண் போல.
"ஷட்ட்ட் அப்ப்ப்..." பாலா குரல், எழுப்ப அது தேஜஸ்வினியை பின்வாங்க செய்தது.
"உன்னோட ஃபிரண்ட் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா "
திகிலுடன் அவள் ராதிகாவை பார்க்க, அவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"அவ என்ன சொன்னா?" தனக்கு ஒன்றும் தெரியாததை போல் கேட்டாள் தேஜஸ்வினி.
"போதும், நடிக்கிறதை நிறுத்து. நீங்க ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன்"
"ராதிகா பேசிக்கிட்டு இருந்தது தேஜஸ்வினிகிட்ட தான்" என்றான் சுதாகர்.
"அப்படியா?" என்று அவளது கைபேசியின் கடைசி இன்கமிங் காலை பார்த்தான் பாலா. அது தேஜஸ்வினியிடம் இருந்து தான் வந்திருந்தது. அதை தேஜஸ்வினியிடம் காட்டிவிட்டு, மதுமிதாவிடம் காட்டினான் பாலா.
"இவங்க இவ்வளவு கண்ணிங்கா இருப்பாங்கன்னு நான் நினைச்சே பார்க்கல" என்றாள் காயத்ரி.
"நாங்களும் தான்" என்றான் சுதாகர்.
"அதானே... இவங்க இவ்வளவு மோசமானவங்களா?" என்றாள் லலிதா.
"எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்காங்க பாரு" என்றாள் பவானி.
"பாலா, நம்ம இவங்களை பத்தி பிரின்ஸிபால் கிட்ட கம்பளைண்ட் பண்ணலாம்" என்றான் சுதாகர்.
"ப்ளீஸ், என்னை விட்டுடுங்க என் லைஃபை கெடுத்துடாதீங்க" கெஞ்சினாள் ராதிகா.
"ப்ளீஸ் பாலா, இதெல்லாம் தெரிஞ்சா, எங்க வீட்ல அதோட என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்க. என்னோட ஃபியூச்சரே ஸ்பாயில் ஆயிடும். கம்ப்ளைன்ட் மட்டும் பண்ணாதீங்க" கண்கள் கலங்க கெஞ்சினாள் தேஜஸ்வினி.
அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது மதுமிதாவுக்கு. மீண்டும் மதுமிதாவை ஏறிட்டான் பாலா.
"அவங்களை விட்டுடுங்க பாலா. அவங்க மறுபடியும் இப்படி செய்ய மாட்டாங்க. நான் தான் அவங்க சொன்ன எதையும் நம்பலையே...! அப்புறம் என்ன பிரச்சனை இருக்கு?" என்றாள் மதுமிதா.
"மது கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்புங்க" என்றான் பாலா அதிகார குரலில்.
"சாரி மது" அவர்கள் இருவரும் கேண்டினை விட்டு தொங்கிய முகங்களுடன் கிளம்பினார்கள்.
சுதாகர் ஏதோ சொல்ல நினைக்க, அவனை அமைதியாய் இருக்கும்படி சைகை காட்டினான் பாலா.
"அவங்கள பத்தின உண்மையை வெளியில் கொண்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாலா" என்றாள் காயத்ரி, அதில் அவள் செய்தது ஒன்றுமில்லை என்பது போல்.
மெதுவாய் தலையசைத்தான் பாலா.
"நாங்க ரிஷியை தப்பா நினைக்கலன்னு அவர் கிட்ட சொல்லுங்க" என்றாள் காயத்ரி.
"தேங்க்யூ" பாலாவும் சுதாகரும் அங்கிருந்து சென்றார்கள்.
"எதுக்காக என்னை எதுவும் பேச விடாம தடுத்த? நான் ரிஷி பத்தி கொஞ்சம் பெருமையா பேசி இருப்பேன் இல்ல?" என்றான் சுதாகர்
"நீ அவனைப் பத்தி என்ன சொல்லி இருப்ப?"
"ரிஷி ரொம்ப நல்லவன். இவங்க அவனைப் பத்தி சொன்னதெல்லாம் பொய்யின்னு சொல்லி இருப்பேன்"
"அதனால தான் உன்னை நான் தடுத்தேன்"
"ஏன், அதுல என்ன தப்பு இருக்கு?"
"ரிஷி தேஜஸ்வினி கூட லஞ்சுக்கு போனது எல்லாருக்கும் தெரியும். நீ அதைப் பத்தி பேசியிருந்தா, மறுபடியும் மதுமிதா பழசை எல்லாம் நினைச்சு பார்த்திருப்பா... அதனால தான் வேண்டாம்னு சொன்னேன்"
"நீ சொல்றது சரி தான். நான் அந்த கோணத்தில் யோசிச்சு பாக்கல"
"பரவாயில்ல விடு"
.......
தேஜஸ்வினியும், ராதிகாவும் தலை குனிந்த படி வகுப்பறைக்குள் நுழைவதை பார்த்தார்கள் ரிஷியும், பிரகாஷும்.
"விஷயத்தை முடிச்சிட்டானுங்க போல இருக்கு" என்று சிரித்தான் பிரகாஷ்.
வழக்கமாய் தேஜஸ்வினியுடன் அமரும் ராதிகா, கடைசி இருக்கையில் சென்று தனியாக அமர்ந்து கொண்டாள்.
"அப்படித்தான் நினைக்கிறேன்" என்றான் அதை பார்த்த ரிஷிவரன்.
"இப்போ விஷ்வா மட்டும் தான் மிச்சம்"
"ரொம்ப சீக்கிரமே அவனுக்கு நான் ஒரு நல்ல பாடம் கத்துக்கொடுப்பேன். அவன் காலேஜுக்கு வரட்டும்... இருக்கு அவனுக்கு..." தன் கோபத்தை விழுங்கினான் ரிஷி.
பாலா வகுப்பறைக்கு வந்த போது, அவனை பார்த்து மீண்டும் தலையை கவிழ்ந்து கொண்டார்கள் தேஜஸ்வினியும், ராதிகாவும். தன் இருப்பிடத்திற்கு வந்த பாலா, ரிஷியிடம் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான். தன் உதடுகளை அழுத்தி கண்ணிமைத்தான் ரிஷி.
அன்று விஷ்வா கல்லூரிக்கு வராமல் போனதால் ஏமாற்றம் அடைந்தான் ரிஷி. அந்த விஷயத்தை அவன் உடனடியாய் முடிக்க நினைத்தான்.
உணவு இடைவேளை
மதுமிதாவின் வகுப்பறைக்கு வந்த ரிஷி அவள் தன் தோழிகளுடன் அமர்ந்திருப்பதை கண்டான். அவனைப் பார்த்த காயத்ரி,
"மது, ரிஷி வந்திருக்கான்" என்றாள்.
வாசலில் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் மீது தன் பார்வையை திருப்பினாள் மதுமிதா. அவனைப் பார்த்தவுடன் ஒட்டுமொத்த வகுப்பறையும் அமைதியாகி போனது. தன்னை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, மதுமிதாவை நோக்கி நடந்தான் ரிஷி.
"தேஜஸ்வினி பண்ண பிரச்சனைக்காக நான் உன்கிட்ட சாரி கேட்டுக்குறேன்..."
பரவாயில்லை என்பது போல் தலையசைத்தாள்.
"என்னைப் பத்தி யாராவது உன்கிட்ட ஏதாவது சொன்னா, அதை நேரடியா என்கிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்கோ. உன்கிட்ட தான் என்னோட நம்பர் இருக்கே... எப்ப வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு"
அவளது வகுப்பு மாணவர்கள் அனைவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த மதுமிதா, சரி என்று தலையசைத்தாள். தன் பாக்கெட்டில் இருந்த ஒரு *பார் சாக்லேட்டை* எடுத்து அதை அவளிடம் நீட்டினான்.
"அம்மா உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க"
"எதுக்கு?"
அவளது வகுப்பறையில் தன் கண்களை ஓடவிட்ட ரிஷி,
"எதுக்குன்னு அப்புறம் பர்சனலா சொல்றேன்" என்றான்.
மதுமிதாவின் புருவங்கள் மேல் எழுந்தது.
"பை..." அவளது வகுப்பை விட்டு சென்றான் ரிஷிவரன்.
தன் கையில் இருந்த சாக்லேட்டை பார்த்து முகம் சுளித்தாள். எதற்காக அவனது அம்மா இதை அவளிடம் கொடுக்க சொல்லி இருப்பார்கள்? ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்குமோ? அப்பொழுது அவளைப் பார்த்து கிண்டலாய் சிரித்துக்கொண்டிருந்த அவளது தோழிகளை பார்த்தாள்.
"என்ன விஷயம் மது?" என்றாள் லலிதா.
"ரிஷியோட பேரன்ஸ், அவனோட லவ்வுக்கு கிரீன் சிக்னல் காட்டிட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் காயத்ரி.
மதுமிதா எந்த பதிலும் கூறவில்லை என்றாலும், அவளது வகுப்பில் இருந்த அனைவரும் அதை உண்மை என்றே எண்ணினார்கள். ரிஷி மற்றும் மதுவின் குடும்பத்தார் ஏற்கனவே நல்ல பிணைப்புடன் இருந்தது அவர்களுக்கு தெரிந்தது தான். ரிஷி, மதுவிற்கு சாக்லேட் கொடுத்த விஷயம் கல்லூரி முழுவதும் பரவியது. சிலர் அது பற்றி ரிஷியிடம் நேரடியாகவே கேட்டார்கள். அவர்களுக்கு புன்னகையை மட்டுமே பதிலாய் தந்து நகர்ந்து கொண்டான் ரிஷி.
ரிஷி எதிர்பாராத வண்ணம், உணவு இடைவேளையின் இறுதியில், கல்லூரிக்கு வந்தான் விஷ்வா. அவனைப் பார்த்த பிரகாஷும் லலிதாவும், தத்தம் நண்பர்களிடம் விஷயத்தை கூற விரைந்தார்கள்.
"காலேஜ் முடியறதுக்கு முன்னாடி நான் அவன் கதையை முடிக்கிறேன்" என்று முஷ்டியை மடக்கினான் ரிஷி.
மறுப்புறம், மதுமிதாவோ பதற்றத்திற்கு ஆளானாள். ரிஷி என்ன செய்யப் போகிறானோ...! கல்லூரி நேரம் முடியட்டும் என்று காத்திருந்தான் ரிஷி.
ஒரு வழியாய் கல்லூரி மணி அடித்தது. தான் அமர்ந்திருந்த பெஞ்சை தாண்டி குதித்து ஓடினான் ரிஷி. அவனது நண்பர்கள் அவனை பின் தொடர்ந்து ஓடினார்கள்... ரிஷிக்கு துணை புரிய அல்ல... விஷ்வாவை அவனிடமிருந்து காப்பாற்ற.
விஷ்வா தன் வகுப்பறையை விட்டு வெளியே வருவதை பார்த்தான் ரிஷி. எந்த கேள்வியும் எழுப்பாமல் அவன் முகத்தை குறி வைத்து தன் கையை உயர்த்தினான் ரிஷி. தன்னை சுதாகரித்துக் கொண்ட விஷ்வா, சட்டென்று கீழே குனிந்து அவனது குத்தில் இருந்து தன் முகத்தை காத்துக் கொண்டான். அங்கு ரிஷியின் அவனது நண்பர்கள் மூவரும் ரிஷியை பின்னால் இழுத்தார்கள்.
"எதுக்குடா இப்ப நீ என்னை அடிக்கிற?" என்றான் விஷ்வா.
"எவ்வளவு தைரியம் இருந்தா நீ மதுவை ப்ரொபோஸ் பண்ணுவ?"
"ஆமாம், நான் அவளை ப்ரொபோஸ் பண்ணேன் தான்... இப்போ என்ன அதுக்கு? அவ என்ன உன் பொண்டாட்டியா? நீ அவளை ப்ரொபோஸ் பண்ண மாதிரி நானும் பண்ணேன்...! என்னை ஏத்துக்கிறதும் ஏத்துக்காம போறதும் அவ இஷ்டம்? நீ எதுக்கு நடுவுல புகுந்து எகுற?"
ரிஷியை தாக்கும் தோரணையில் அவனை நோக்கி முன்னேறினான் விஷ்வா. ரிஷியை அவனது நண்பர்கள் கெட்டியாக பற்றிக் கொண்டிருந்த போதிலும், தன் காலை தரையில் அழுத்தமாய் ஊன்றி எழும்பி, விஷ்வாவின் வயிற்றில் தன் காலால் ஓர் உதை விட்டான் ரிஷி. கீழே விழுந்த விஷ்வாவின் மீது பாய்வதற்கு அவன் தயாரான போது,
"ரி....ஷி...." என்ற குரல் கேட்டு நின்றான் ரிஷி.
மதுமிதாவின் குரலைத் தவிர வேறு எது அவனை தடுத்து நிறுத்தி விட முடியும்? பெயர் கூற முடியாத முகபாவத்துடன், தன்னை பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவை பார்த்து, தன் உடைகளை நேர்படுத்திக் கொண்டான் ரிஷி. அவர்களை சுற்றி இருந்த அனைத்தும் அமைதியானது.
"ஒரு நிமிஷம்..." என்றாள் மதுமிதா.
வியர்த்து வழிந்து கொண்டிருந்த தன் முகத்தை துடைத்தபடி அவளிடம் சென்றான் ரிஷி.
"உங்க பேரன்ஸை எங்க வீட்டுக்கு வர சொல்லி அப்பா சொல்ல சொன்னாரு. அவங்க கிட்ட சொல்லிடு" அதை அவள் அழகான புன்னகையோடு கூறியது தான் ஹைலைட். அதே புன்னகையோடு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் தன்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டதை நம்ப முடியவில்லை ரிஷியால். அவள் தான் புன்னகைக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாள்...! அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்... அவனது நண்பர்கள் உட்பட... விஷ்வாவையும் சேர்த்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top