27 பலனளித்த திட்டம்
27 பலனளித்த திட்டம்
ரிஷிவரனை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. நாளை அவன் என்ன கலோபரம் செய்யப் போகிறானோ தெரியவில்லை. அவன் நிச்சயம் விஷ்வாவை விடப்போவதில்லை. விஷ்வாவும் அவனுக்கு சரிசமமாய் மல்லுக்கட்ட போகிறான். அவளிடம் பேசும் போதெல்லாம், விஷ்வா, ரிஷிவரனை பற்றி கேள்வி எழுப்ப தவறியதில்லை. ரிஷிவரனின் திடீரென்ற மாற்றம், கல்லூரியில் இருந்த அனைவருக்கும் வியப்பை அளித்தது. விஷ்வா தன்னை காதலிக்கிறேன் என்று கூறியதற்கு கூட, ரிஷியின் மாற்றம் தான் காரணமாக இருக்க வேண்டும். அவளுக்கு விஷ்வாவை பற்றி நன்றாகவே தெரியும். அவனுடைய *துறையை* சேர்ந்த மாணவிகள் வேறு எந்த துறையின் மாணவர்களுடனும் பேசுவது அவனுக்கு பிடிப்பதில்லை. அவள் ரிஷியுடன் பேசக்கூடாது என்பதற்காக தான், அவன் அவளை காதலிக்கிறேன் என்று கூறியிருக்க வேண்டும். அதன் மூலம் தன்னை கட்டுப்படுத்தி விட அவன் எண்ணி இருக்க வேண்டும்.
விஷ்வாவை எப்படி தடுப்பது என்று ஆலோசித்தாள் மதுமிதா. அவள் அதை எப்படியும் செய்து தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், அதிரடியான முறையில் அதை ரிஷிவரன் செய்வான். அப்படி நடக்கக் கூடாது. ரிஷிவரன் எதுவும் செய்வதற்கு முன், அவள் ஏதாவது செய்தாக வேண்டும். அவளது மனதில் ஒரு உபாயம் உதித்தது. அது அவளது இதழ்களை புன்முறுவலிக்கச் செய்தது. தன் கையில் இருந்த தலையணையில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளது முகத்தில் தவழ்ந்த புன்னகை மறையவில்லை.
மறுநாள்
கல்லூரிக்கு வந்த மதுமிதா, ரிஷிவரன் தன்னை நேர்குத்தாய் பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டு, தனது நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டாள். விஷ்வா இருக்கிறானா என்று, இங்கும் அங்கும் பார்வையால் அலசினாள். அவன் எங்கும் காணப்படவில்லை. ஒருவேளை, ரிஷிவரன் கூட அவனுக்காக தான் காத்திருக்கிறான் போலும். அவனை காணாததால் தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள். வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன், ரிஷிவிரனை திரும்பி பார்க்க அவள் தவறவில்லை.
ரிஷிவரனின் முதுகை தட்டி அவனை பார்த்து புன்னகை புரிந்தான் பாலா.
"மேடம் கிட்ட அப்படி என்ன சொன்ன? அவங்க பாடிலாங்குவேஜ் டோட்டலா மாறி போயிருக்கு?"
"அவ விஷ்வாவை தேடினா. அவ பயந்திருக்கா. அதனால தான் அவளோட நடையோட வேகம் குறைஞ்சது"
"அப்படின்னா, நேத்து நீ அவளை எக்கச்சக்கமா பயமுறுத்தி இருக்கேன்னு சொல்லு" என்றான் கிண்டலாய்.
அவனுக்கு வார்த்தையால் பதில் கூறாமல், புன்னகையை பதிலாய் தந்தான். அதிலிருந்தே பாலாவிற்கு புரிந்து போனது, அவன் அவளை பயமுறுத்தி தான் இருக்கிறான் என்று.
விஷ்வாவின் வரவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஆனால் அவன் வரவில்லை. அதனால் தங்கள் வகுப்பறைக்கு கிளம்பி சென்றார்கள்.
மதுமிதாவின் வகுப்பறை
அமைதியாய் அமர்ந்திருந்த மதுமிதாவிடம் வந்த காயத்ரி,
"என்ன ஆச்சு மது? ஏன் ஒரு மாதிரியா இருக்க?" என்றாள் ஒன்றும் அறியாதவள் போல்.
"விஷ்வா என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண விஷயம் ரிஷிக்கு தெரிஞ்சுடுச்சு" என்றாள் படபடப்புடன்.
"ஆனா அவனுக்கு எப்படி தெரிஞ்சது? நீ தான் அவன்கிட்ட எதுவும் சொல்லலைன்னு சொன்னியே?" என்றாள் லலிதா.
"அது தான் எனக்கும் புரியல. அவனுக்கு எப்படி தெரிஞ்சிது?" நகம் கடித்தாள் மதுமிதா.
"மது, உனக்கு ரிஷியை பத்தி தெரியாதா? அவனுக்கு தான் நம்ம காலேஜ்ல ஏகப்பட்ட *கைகள்* இருக்கே... அவன் நம்ம காலேஜோட கிங். மறந்துடாத..." என்றாள் பவானி.
"அவ சொல்றது ரொம்ப சரி. விஷ்வாவோட டீம்லயே கூட அவனுக்கு *ஸ்பை* இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்றாள் லலிதா.
உள்ளூர புன்னகைத்துக் கொண்டாள் காயத்ரி. ரிஷிவரனுக்கு விஷ்வாவின் தரப்பில் என்ன, மதுமிதாவின் தரப்பிலேயே *ஸ்பை* இருக்கத் தானே செய்கிறாள்? என்று எண்ணிக் கொண்டாள்.
"ஆமாம், நமக்கு தெரியாதா ரிஷியை பத்தி?" லலிதாவை ஆமோதித்தாள் பவானி.
"ரிஷி அந்த அளவுக்கு நம்ம காலேஜ்ல பவர்ஃபுல்லான ஆளா இருந்தா, இந்த நேரம், அவனுக்கு தேஜஸ்வினியோட பிளான் கூட தெரிஞ்சி இருக்கலாம்... யாருக்கு தெரியும்..." தன் தோள்களை குலுக்கினாள் காயத்ரி.
"நீ சொல்றது சரி தான் காயு. ஒருவேளை, தேஜஸ்வினியோட பிளான் மட்டும் ரிஷிக்கு தெரிஞ்சா, அவளோட கதி என்ன ஆகுமோ...!" லலிதா விழி விரிக்க,
"அதோ கதி தான்" என்றாள் பவானி.
"அப்படி நடக்கும் போது, அவ முகம் எப்படி போகுதுன்னு நான் பாக்கணும்" தன் முஷ்டியை மடக்கி கண்களை மூடி சிலிர்த்தாள் லலிதா.
"செக் பண்ணி பார்த்துடலாமா?" என்றாள் காயத்ரி.
"எப்படி?" என்றாள் லலிதா ஆர்வமாய்.
தனது திட்டத்தை... இல்லை, இல்லை, பாலாவின் திட்டத்தை அவர்களிடம் கூறினாள் காயத்ரி.
"வேண்டாம் காயு. ஒருவேளை, நம்ம பிரச்சனையில மாட்டிக்கிட்டா என்ன செய்றது?" என்றாள் மது மன கலக்கத்துடன்.
"நம்ம எதுக்கு பிரச்சனையில மாட்டிக்க போறோம்? நம்ம என்ன தேஜஸ்வினி, ராதிகா மாதிரி லவ்வர்ஸை பிரிக்க ட்ராமாவா பண்றோம்?" லலிதா சீரியஸாக சொல்ல,
"என்ன்னனது? நீ இப்ப என்ன சொன்ன? லவ்வர்சா?" அதிர்ந்தாள் மதுமிதா.
மூவரும் சிரித்தார்கள்.
"விடு, மது, சில சமயம் உண்மை வெளியில வரத்தானே செய்யும்?" அவளது காலை வாறினாள் லலிதா.
"நாங்க ஒன்னும் லவ்வர்ஸ் இல்ல" அவள் தோளில் ஒரு அடி போட்டாள் மதுமிதா.
"இப்போதைக்கு இல்ல..." சிரித்தாள் லலிதா.
அவளுக்கு பதில் கூற மது விழய,
"விடுடா, நம்ம அதைப்பத்தி அப்புறமா பேசிக்கலாம்" அவர்களது சண்டையை தடுத்தாள் பவானி.
"தேஜஸ்வினியை செக் பண்ணி பாத்துட்டா என்ன?" நேராடியாய் விஷயத்திற்கு வந்தாள் காயத்ரி.
"நான் வரேன், நான் வரேன்..."
"நானும் வரேன்"
லலிதாவும், பவானியும் ஹைஃபை தட்டிக் கொண்டார்கள்.
"எனக்கு பயமா இருக்கு" என்றாள் மதுமிதா.
"ஏன் மது?" என்றாள் காயத்ரி.
"ரிஷி என்ன செய்ய போறானோ... விஷ்வாவோட பிரப்போசலை பத்தி தெரிஞ்சப்போவே, சீறி எழுந்தான்..."
"இது எப்போ நடந்தது?" என்றாள் பவானி.
"நேத்து ராத்திரி..."
"அவன் உன்னை மீட் பண்ணானா?" என்றாள் லலிதா ஆச்சரியத்துடன்.
"இல்ல... ஃபோனை போட்டு, வாங்கு வாங்குன்னு வாங்கிட்டான்..."
"அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உன்கிட்ட அப்படி நடந்துக்குவான்?" என்றாள் காயத்ரி பொய் கோபத்துடன் வேண்டுமென்றே.
"இல்ல. அவனுக்கு என்னை பத்தி தான் கவலை. விஷ்வா ஏதாவது சீன் கிரியேட் பண்ண கூடாதுன்னு அவன் நினைக்கிறான்"
"ஓ..."
"எது எப்படி இருந்தாலும், நம்ம தேஜஸ்வினியை கண்ட்ரோல் பண்ணியே ஆகணும். அது ஒட்டு மொத்த காலேஜுகும் ஒரு பாடமா இருக்கணும். அப்ப தான் நம்மகிட்ட வாலாட்ற தைரியம் யாருக்கும் வராது" என்றாள் பவானி.
"ஆமாம், இந்த சான்சை நம்ம கைநழுவிப் போக விட்ற கூடாது" என்றாள் லலிதா.
மதுமிதா கவலையுடன் பெருமூச்சு விட, உள்ளூர புன்னகைத்துக் கொண்டாள் காயத்ரி. அவர்களது திட்டம் பலிக்கப் போகிறது.
"சரி, பிரேக் டைம்ல முடிச்சிடலாம்" ஒப்புக்கொண்டாள் மதுமிதா.
"டன்..."
.........
மறுபுறம், தேஜஸ்வினியை பார்த்து முறைத்த வண்ணம் இருந்த ரிஷிவரனை தடுக்க படாதபாடு பட்டுக் கொண்டு இருந்தான் பாலா. விட்டால்,
தேஜஸ்வினியை, ரிஷி தன் பார்வையாலேயே எரித்து விடுவான் போலிருந்தது.
"நமக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சின்னு நீயே அவளுக்கு க்ளு கொடுத்திடுவ போல இருக்கே... கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" ரகசியமாய் கூறினான் பாலா.
"அவ சந்தோஷமா சிரிக்கிறத பார்த்தா டென்ஷனாகுது எனக்கு" பொறுமினான் ரிஷி.
"இன்னிக்கி லாஸ்ட் பெல் அடிக்கிறதுக்குள்ள, அவ சிரிப்பை நான் நிரந்தரமா நிறுத்துறேன். இதுக்கு அப்புறம், நமக்கு முன்னாடி அவ எப்பவும் சிரிக்கவே மாட்டா" ரிஷியின் கோபத்தை தணிக்க முயன்றான் அவன்.
சரி என்று ரிஷிவரன் தலையசைக்க, சுதாகருக்கும், ஜெயபிரகாஷுக்கும் ஜாடை காட்டினான் பாலா. நாங்கள் தயார் என்பது போல் அவர்கள் கண்ணிமைத்தார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே கூறிவிட்டிருந்தான் பாலா. அவர்கள் ரிஷிவரனை திசை திருப்பி வைக்க வேண்டும்.
இடைவேளை நேரம்
மதுமிதாவும் அவளது தோழிகளும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்கள். அவர்கள் தேஜஸ்வினியை தான் தேடினார்கள். அவர்களைப் பார்த்த தேஜஸ்வினி, மீண்டும் தன் வகுப்பறைக்குள் ஓடினாள்.
"அவ கிளாசுக்குள்ள ஓடிட்டா" என்றாள் லலிதா.
"ராதிகாவை அனுப்புவா பாரு" என்றாள் காயத்ரி.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே, வெகு சகஜமாய் வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் ராதிகா.
அவளை பார்க்காதவர்கள் போல, வேறெங்கோ பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தார்கள் அவர்கள்.
"வாங்க போலாம்" என்றாள் காயத்ரி.
"எங்க?" என்றாள் மது.
"கேன்ட்டினுக்கு... அப்போ தான், அவ பேச வேண்டியதை பேச நம்ம அவளுக்கு டைம் கொடுக்க முடியும்"
"அவ சொல்றது சரி தான். வாங்க போகலாம்" என்றாள் பவானி.
கேன்ட்டீனுக்கு சென்ற அவர்கள், பழச்சாறை வாங்கிக் கொண்டு, ஒரு மேஜையை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு அடுத்த மேசையில் வந்து அமர்ந்தாள் ராதிகா. அவளது கைபேசி ஒலித்தது. அவர்களது திட்டப்படி, அவளுக்கு ஃபோன் செய்தது தேஜஸ்வினியே தான்.
"ஹாய், எப்படி இருக்க?" என்றாள் ராதிகா, வேறு யாருடனோ பேசுவது போல் பாசாங்கு செய்து.
"அவளுங்க நீ பேசறத கவனிக்கிறாளுங்களா?" என்றாள் தேஜஸ்வினி.
"ஆமாம்..."
"நடத்து..."
"ஓ... நீ தேஜுவை கேக்குறியா? அவளுக்கென்ன, செம ஜாலியா இருக்கா. அவளோட பாய் ஃப்ரெண்ட் ஒரே கிளாஸ்ல இருக்கிறதால அவளுக்கு நேரம் போறதே தெரியல"
"வாவ், நீ கலக்குற ராதிகா"
"ஆமாம் அவனோட பேரு ரிஷிவரன். ரெண்டு பேரும் ரொம்ப டீப்பா லவ் பண்றாங்க"
"கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு" என்றாள் தேஜஸ்வினி.
"ஆமாம், ரெண்டு பேரும் டேட்டிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க"
"மதுமிதா என்ன செய்றா?" என்றாள் தேஜஸ்வினி ஆர்வமாய்.
ராதிகா, மதுமிதாவை நோட்டமிட, அவள் சோகமாய் இருந்தது தெரிந்தது. அவளது தோழிகளோ, அவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் திட்டம் பலித்து விட்டதாய் முழுமையாய் நம்பினாள் ராதிகா. அவளை நோக்கி வந்து கொண்டிருக்கும் புயலைப் பற்றி அறியாமல்.
"தேஜுவை தன்னோட டேட்டுக்கு வர சொல்லி ரிஷி கேட்டுக்கிட்டே இருப்பான். அவன் எப்பவும் அவ கூடவே இருக்கணும்னு விரும்புறான்"
"இந்த பொய் எவ்வளவு அழகா இருக்கு" என்றாள் தேஜஸ்வினி கனவில் மிதந்து கொண்டு.
"ஆமாமா... அது வெறும் டேட் மட்டும் இல்ல... அதுக்கும் மேல... எல்லாமே..."
"வாவ்..."
"மேலன்னு சொன்னா, அவங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சி..."
"சூப்பர்..."
"ரிஷி, தேஜுவை அவனுடைய வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய், அவங்க அம்மா கிட்ட இன்ட்ரொடியூஸ் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி இருக்கான்"
"உனக்கு இன்னைக்கி தாஜ்ல ட்ரீட் கன்ஃபார்ம்"
"இல்ல இல்ல... அதெல்லாம் வெறும் கட்டுக்கதை. ரிஷிக்கு தேஜுவை தவிர வேற யாரையும் பிடிக்காது"
"அப்படி போடு" என்று குதுகலித்தாள் தேஜஸ்வினி.
"ஒரு பொண்ணு அவனுக்கு ஹெல்ப் பண்ணதால மட்டும் அவன் அவளை விரும்பிடுவானா? தேஜுவோட இடத்தை ரிஷியோட வாழ்க்கையில யாராலயும் பிடிக்க முடியாது"
திடீரென்று, ராதிகாவின் கைப்பேசி பின்னால் இருந்து பிடுங்கப்பட்டது. கோபத்துடன் நாற்காலியை விட்டு எழுந்த ராதிகா பின்னால் திரும்ப, பேச்சிழந்து போனாள். அவள் கைபேசியுடன், பார்வையில் நெருப்பைக் கக்கியவாறு நின்றிருந்தான் பாலா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top