25 மதுமிதாவும் தோழிகளும்
25 மதுமிதாவும் தோழிகளும்...
மதுமிதா தனக்கு சாதகமாய் பேசியதால் திக்கு முக்காடி போனான் ரிஷி. கோபத்துடன் தன் முஷ்டியை இறுக்கமாய் மூடிக்கொண்டு, மதுமிதாவை கோபப்பார்வை பார்த்துக் கொண்டு நின்ற விஷ்வாவுக்கும், மதுமிதாவுக்கும் இடையில், தன் சட்டையின் கையை மடக்கி விட்டபடி வந்து நின்றான் ரிஷி. மதுமிதாவின் மீது ஆபத்தான பார்வை வீசிவிட்டு அங்கிருந்து சென்றான் விஷ்வா.
"ஒன்னும் பிரச்சனை இல்லையே மது?" என்றான் ரிஷி.
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள் மதுமிதா.
"அவன் ஏதாவது சொன்னானா?"
ஒரு நிமிடம் திகைத்து நின்றாள் மதுமிதா. விஷ்வா தன்னிடம் காதலை சொன்னான் என்று ரிஷியிடம் அவள் எப்படி கூற முடியும்? விஷ்வாவின் தோலை உரித்து, தோரணம் கட்டி தொங்கவிட்டு விடுவானே ரிஷி... அவசரமாய் இல்லை என்று தலையசைத்தாள்.
"ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்ல தயங்க மாட்ட இல்ல?"
"ம்ம்ம்ம்"
" உன்கிட்ட என்னோட ஃபோன் நம்பர் இருக்கா?"
"ம்ம்ம்ம்"
"அதை நீ இன்னும் டெலிட் பண்ணலையா?" என்றான் புன்னகையுடன்.
சங்கடத்துடன் நின்றாள் மதுமிதா.
"நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணலாம்"
"ம்ம்ம்ம்"
"பை"
"பை"
"நல்ல காலம், நீ பேசிட்ட. நீ பேசுற சக்தியை நீ இழந்துட்டியோனு நினைச்சேன்" என்றான் வேடிக்கையாய்.
மெலிதாய் புன்னகைத்தாள் மதுமிதா.
"சீ யூ"
தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள் மதுமிதா.
அவன் அவளுடன் பேசுவதை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவளிடம் பேசினான் ரிஷிவரன். அப்போது தானே அவளிடம் நெருங்க யாரும் துணிய மாட்டார்கள்?
அந்தக் காட்சியை தேஜஸ்வினியும், அவளது தோழி ராதிகாவும் கூட பார்த்தார்கள். அவளுக்கு வயிற்றை பற்றி எரிந்தது என்று கூறத் தேவையில்லை.
"என்னால இந்த கொடுமையெல்லாம் பாக்கவே முடியல" என்றாள் தேஜஸ்வினி, விழியில் நெருப்பை கக்கியவாறு.
"கவலப்படாத, நீ சொன்ன விஷயத்தை எப்படியும் இன்னைக்கு நான் மதுமிதா காதுல போட்டுடுவேன்"
"அப்படி மட்டும் நடந்தா, உனக்கு நான் தாஜ் ஹோட்டலில் ட்ரீட் கொடுப்பேன்"
"நெஜமாவா சொல்ற"
"ஆமாம்"
"அப்படின்னா, நான் அதை எப்படியும் இன்னைக்கி செஞ்சி முடிப்பேன்"
அவர்களும் தங்கள் வகுப்பறைக்கு சென்றார்கள். தேஜஸ்வினி ரிஷியை பார்த்து சிரிக்க, அவன் அதற்கு மதிப்பளிக்காமல், தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். அது அவளை மேலும் கோபப்படுத்தியது.
*நாளைல இருந்து, மதுமிதாவும் உன்னை பார்த்து அவ மூஞ்சை இப்படித் தான் திருப்பிக்க போறா" என்று மனதில் எண்ணிக் கொண்டாள் தேஜஸ்வினி.
..........
தன் இருப்பிடம் சென்று அமர்ந்தாள் மதுமிதா.
"என்ன ஆச்சு மது? விஷ்வா என்ன சொன்னான்?" என்றாள் லலிதா.
"என்னை ப்ரொபோஸ் பண்ணான்" என்றாள்.
"என்னடி சொல்ற, அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்றாள் காயத்ரி.
"சந்தேகமே இல்ல. அவன் சுத்த பைத்தியம் தான்" என்றாள் பவானி.
"அவனுக்கு என்ன தான் பிரச்சனை?" என்றாள் லலிதா.
"எப்ப பார்த்தாலும் என்னை கடுப்பேத்திக்கிட்டே இருக்கான் அவன்" என்றாள் மதுமிதா எரிச்சலுடன்.
"அவனுக்கு, ரிஷியையும் அவனுடைய ஃபிரண்ட்ஸையும் பிடிக்காது. அதனால தான், அவன் உன்னை தன்னோட கன்ட்ரோபல்ல வச்சுக்கணும்னு நினைக்கிறான் போல இருக்கு" என்றாள் பவானி.
"ஆமாம் மது. பவானி சொல்றது சரி தான். அவன்கிட்ட பேச்சு வார்த்தை வச்சுக்காத" எச்சரித்தாள் காயத்ரி.
"நான் எங்க டா அவன் கிட்ட போய் பேசுறேன்? அவன் தான் என் உயிரை வாங்குகிறான்" என்றாள் மதுமிதா.
"ரிஷி என்ன சொன்னான்?" வினவினாள் லலிதா.
"விஷ்வா என்னை ப்ரொபோஸ் பண்ண விஷயம் ரிஷிக்கு தெரியாது"
"அவன் உன்கிட்ட எதுவுமே கேட்கலையா?" - பவானி.
"அவன் கேட்டான். ஆனா, நான் எதுவும் சொல்லல"
"ஏன் மது? எதுக்கு அவன்கிட்ட எதுவும் சொல்லாம வந்த?" என்றாள் காயத்ரி.
"என்னால பிரச்சனை வர்றதை நான் விரும்பல"
"நீ ரிஷியை நினைச்சு கவலைப்படுறியா பேபி?" என்றாள் லலிதா.
"அவனை நெனச்சு நான் ஏன் கவலைப்பட போறேன்? நான் விஷ்வாவை நினைச்சு தான் கவலைப்படுறேன். அவன் என்னை ப்ரொபோஸ் பண்ண விஷயம் மட்டும் ரிஷிக்கு தெரிஞ்சா, விஷ்வாவை அவன் கொன்னுடுவான். அவன் சாவுக்கு நான் காரணமா இருக்க விரும்பல" என்றாள் குறுஞ்சிரிப்புடன்.
"எனக்கு என்னமோ விஷ்வா இதோட நிறுத்துவானு தோணல" என்றாள் காயத்ரி.
"அதை பத்தி யாருக்கு கவலை?" என்றாள் மதுமிதா.
"நீ எங்கேயும் தனியா போகாத. எங்க போனாலும் யாரையாவது கூட்டிக்கிட்டு போ" என்று எச்சரித்தாள் பவானி.
"நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்" என்றாள் மதுமிதா.
"என்ன அது?" என்றார்கள் மூவரும் ஒரே நேரத்தில்.
"நான், தேஜஸ்வினியும் ராதிகாவும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன்"
"என்ன பேசிக்கிட்டு இருந்தாளுங்க?"
"தேஜஸ்வினி ரிஷியை அடைய முயற்சி பண்றா"
"ஓ..."
"அவன் எனக்காக மாறிட்டான்னு, ரிஷி மேல அவ செம கடுப்புல இருக்கா"
"அதனால?"
"அவளும் ராதிகாவும் சேர்ந்து, நான் ரிஷியை வெறுக்குற மாதிரி பிளான் பண்ணி இருக்காங்க"
"என்ன பிளான்?"
"ரிஷிக்கும், தேஜஸ்வினிக்கும் நடுவுல *எல்லாம்* நடந்து முடிஞ்சிட்டதா என்னை நம்ப வைக்க போறாங்களாம்"
"என்ன கன்றாவி இது?" என்றாள் பவானி.
"சரியான மானம் கெட்டவளுங்களா இருப்பாளுங்க போல இருக்கே..." என்றாள் லலிதா.
"அதுல என்ன சந்தேகம்? அவளுங்க உண்மையிலேயே வெட்கம் கெட்டவளுங்க தான்" என்றாள் பவானி.
"ரிலாக்ஸ்... அவங்க பேசுனத மது கேட்டது ரொம்ப நல்லதா போச்சு. அதனால நம்ம அதை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல" என்றாள் காயத்ரி.
"ஒருவேளை, மது மட்டும் அதை கேட்காம போயிருந்தா என்ன ஆகும்? அதை அவ நம்புறாளோ, இல்லையோ, அது இரண்டாவது விஷயம். ஆனா அவளுக்கு எவ்வளவு பெரிய மனக்குழப்பம் ஏற்பட்டிருக்கும்? இதெல்லாம் தேவையா?" என்றாள் பவானி.
"அதுங்க பிளான் என்ன, டார்லிங்?" என்றாள் லலிதா.
"ரிஷிக்கும், தேஜஸ்வினிக்கும் நடுவுல இருக்கிற ரிலேஷன்ஷிப்பை பத்தி, ராதிகா ஃபோன்ல யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசப் போறா, கரெக்டா நான் அவளை கிராஸ் பண்ணும் போது"
அனைவரும் ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
"ஒருவேளை, நீ அவளை கிராஸ் பண்ணவே இல்லைனா...?" என்றாள் லலிதா.
"அவ ரிஷியை பத்தி பேச, நீ அவளுக்கு சான்சே கொடுக்கலன்னா...?" என்றாள் பவானி.
எதையோ யோசித்த காயத்ரி,
"இல்ல, நம்ம அப்படி செய்யக் கூடாது" என்றாள்.
"ஏன்?"
"நம்ம அவங்க பிளான் படி நடக்க விடணும், ஆனா அவங்களோட பிளானை ஜெயிக்க விடக்கூடாது"
"ஆமாம், இன்னைக்கு ஃபுல்லா அவங்களை செமையா வெறுப்பேத்திட்டு, நாளைக்கோ நாளைய மறுநாளோ, அவங்க பிளானை ஃபிளாப் பண்ணலாம்." என்றாள் லலிதா உற்சாகத்துடன்.
"ஆமாம் இவளுங்க கிட்ட ஏன்டா வச்சுக்கிட்டோம்னு, அவளுங்க, கதறணும்..." என்றாள் காயத்ரி.
அனைவரும் சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.
இடைவேளை நேரம்
தன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் மதுமிதா, அவளது தோழிகளுடன். தேஜஸ்வினியும் ராதிகாவும் அவர்களை கண்காணிப்பதை அவர்கள் கண்டார்கள்.
"அதுங்க நம்மளை தான் பார்த்ததுங்க" என்றாள் லலிதா.
"அலர்ட்..." என்றாள் காயத்ரி.
தனது கைபேசியை காதில் வைத்த படி, அவர்களை நோக்கி வந்தாள் ராதிகா.
"கெட் ரெடி" என்றாள் பவானி.
ஒரு புத்தகத்தை திறந்து கொண்டு, அவர்கள் ஏதோ முக்கியமான பாடத்தைப் பற்றி விவாதிப்பது போல பாசாங்கு செய்தார்கள்.
ராதிகா அவர்களை நோக்கி முன்னேறினாள். அவள் அவர்களை நெருங்கும் வரை அவர்கள் காத்திருந்தார்கள். ராதிகா தொட்டுவிடும் தூரத்திற்கு வந்த போது,
"அய்யய்யோ..." பதற்றத்துடன் கத்தினாள் லலிதா. ராதிகா தூக்கி வாரி போட்டவள் போல் நின்றாள்.
"என்னாச்சு பேபி?" என்றாள் காயத்ரி.
"நீ அதை மறந்துட்டியா?" என்றாள் லலிதா.
"அய்யய்யோ, ஆமாம் டார்லிங்... நான் எப்படி அதை மறந்தேன்?" என்றாள் காயத்ரி.
"ஆனா, நான் மறக்கல. எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு" என்றாள் மதுமிதா.
"எனக்கும் ஞாபகம் இருக்கு" என்றாள் பவானி.
"வாங்க போலாம்"
நால்வரும் அங்கிருந்து ஓடினார்கள். அவர்களை பார்த்துக் கொண்டு குழப்பத்துடன் நின்றாள் ராதிகா. திடீரென்று என்ன ஆனது இவர்களுக்கு? ஏன் இப்படி அவர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்கள்? அவர்கள் போகும் திசையில் கேண்டின் தானே இருக்கிறது? கேண்டினுக்கு வந்த நால்வரும், கலகலவென சிரித்தார்கள்.
அவர்களைத் தொடர்ந்து வந்த ராதிகா, அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தாள். இதற்காகவா அவர்கள் இப்படி ஓடி வந்தார்கள்? குட்டி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
"எப்படி நம்ம இதை மறந்தோம்?" என்றாள் லலிதா, தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை உயர்த்தி பிடித்து.
"ஆமாம், நம்மால இதை மறக்கவே முடியாது" என்றாள் தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை தன் கன்னத்தில் ஒற்றியவாறு பவானி.
மீண்டும் தன் கைபேசியை காதில் வைத்துக் கொண்டு, அவர்களை நோக்கி வந்தாள் ராதிகா.
"ஏய், அங்க பாருங்க, பாலா வரான்" என்றாள் காயத்ரி.
கைபேசியை பற்றி இருந்த ராதிகாவின் கரம், பயத்தில் அணிசையாய் கீழே இறங்கியது. பாலாவை பார்க்கும் போது, ரிஷி எவ்வளவோ தேவலாம். அடிப்பதற்கு முன்பு, சிறிது நேரமாவது ரிஷி யோசிப்பான். ஆனால் பாலாவோ, அடித்த பிறகு கூட யோசிக்க மாட்டான்.
அவர்கள் அங்கிருந்து மீண்டும் ஓடிச் சென்றார்கள்.
கேன்டினுக்கு அருகில் இருந்த ரிஷி, மதுமிதாவிற்கு தெரியாமல் அவளை கவனித்துக் கொண்டிருந்தான். அவள் தன் தோழிகளுடன் சிரித்து சந்தோஷமாய் இருந்ததை பார்த்த போது அவனுக்கும் சந்தோஷமாய் இருந்தது. விஷயம் என்ன என்று தெரிந்திருந்தால், அவன் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருக்க மாட்டான். மதுமிதா சந்தோஷமாக இருக்கிறாள். இப்போதைக்கு அவனுக்கு அதுவே போதுமானதாய் இருந்தது. அதன் காரணத்தை எல்லாம் அவன் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை.
தனக்கு பின்னால் திரும்பிய ராதிகா, அங்கு பாலா இல்லாததை கண்டு குழம்பினாள். பாலா வந்ததாய் அவர்கள் கூறினார்களே...! அவளுக்கு ஏமாற்றமாய் போனது. மதுமிதா தன் தோழிகளுடன் வகுப்பறைக்குள் நுழைவதை கண்டு, அவளும் தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள். அவளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த தேஜஸ்வினி,
"என்ன ஆச்சு?" என்றாள்.
"நான் எவ்வளவோ ட்ரை பண்ணியும் அவகிட்ட நெருங்க முடியல"
அலுப்புடன் பெருமூச்சு விட்டாள் தேஜஸ்வினி.
"நான் அவகிட்ட விஷயத்தை சொல்ல போற நேரத்துல, அங்க பாலா வந்துட்டான்"
"அய்யய்யோ... பாலாவா? அவன்கிட்ட நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவன் ரொம்ப ஆபத்தானவன். பாலாவுக்கு, ரிஷி எவ்வளவோ மேல்" என்று எச்சரித்தாள்.
"எனக்கு தெரியாதா? அதனால தான் நான் எதுவும் பேசாம வந்துட்டேன்"
"போகட்டும் விடு. நம்ம மறுபடியும் பார்க்கலாம்"
உணவு இடைவேளை
"காயத்ரி எங்க?" என்றாள் பவானி.
"கேர்ள்ஸ் ரூமுக்கு போயிருக்கான்னு நினைக்கிறேன்" என்றாள் லலிதா.
"ஓ..."
பாலாவை தேடிக் என்றாள் காயத்ரி. அவனது வகுப்பறைக்கு வந்தவள், அவர்கள் வழக்கம் போல மரத்தடியில் அமர்ந்திருப்பதை கண்டாள். அவளைப் பார்த்த பாலா தன் புருவம் உயர்த்தினான். அவனை தன்னிடம் வருமாறு சைகை செய்தாள் காயத்ரி.
"நான் இப்ப வரேன்" என்று அவளை நோக்கி சென்றான் பாலா.
சுதாகரும், ஜெயப்பிரகாஷும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள். ரிஷி முன்பு போல் சுற்றி திரிவதில்லை, என்பதால் அவன் அவர்களுடன் இல்லை.
"என்ன மச்சான் விஷயம்? பாலா காயத்ரி கிட்ட போறான்?"
"எனக்கும் ஒன்னும் புரியல மாமா... இங்க என்ன நடக்குது?"
காயத்ரியிடம் வந்த பாலா,
"என்ன விஷயம் காயத்ரி?" என்றான்.
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"
"சொல்லு"
"இங்க இல்ல. என்னோட ஃப்ரெண்ட்ஸ் என்னை பார்த்துடுவாங்க"
"சரி, அப்படின்னா எனக்காக சாயங்காலம் பஸ் ஸ்டாண்ட்ல காத்திருக்க முடியுமா?"
"சரி நான் வெயிட் பண்றேன்"
"ஓகே"
"பை"
அங்கிருந்து சென்றான் பாலா. சுதாகரும், ஜெயப்பிரகாஷும் ஒருவர் தோலில் ஒருவர் கை போட்டு நின்று கொண்டு,
"ஜெயா, நீ எதையாவது பார்த்த?" என்றான்.
"நான், ஒரு பெண்ணும் ஒரு பையனும் பேசுறதை பார்த்தேன்..." என்றான் ரகசியமாக.
"யாருடா அவங்க?"
"எனக்கு அந்த பொண்ணை மட்டும் தான் பா தெரியும்... அந்த பையனை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்ல"
"அப்படியா, அவன் எப்படி இருப்பான்னு தோராயமா சொல்லு..."
"வாய மூடுரிங்களா?" என்றான் பாலா.
"பின்ன என்னடா? ஒரு பொண்ண பார்த்ததும் நைசா நழுவி ஓடுற..."
"அவ என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னா..."
"எதை பத்தி?"
"அதைப்பத்தி அவை எதுவும் சொல்லல. அவ எனக்கு சொன்ன உடனே, நான் உங்களுக்கு சொல்றேன்"
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்ள்.
"இந்த விஷயம் ரிஷிக்கு தெரிய வேண்டாம்" என்றான் பாலா.
"ஏதாவது பிரச்சனையா மச்சான்?"
"இருக்கலாம்"
"அவ உன் கிட்ட இந்த விஷயத்தை எப்ப சொல்லுவா?" என்றான் சுதாகர்.
"சாயங்காலம்"
"அப்படின்னா நாங்களும் உன் கூட வருவோம்" என்றான் ஜெயபிரகாஷ்.
"ரிஷிக்கு நம்ம மேல சந்தேகம் வரும்"
"அவன் தான் இப்பெல்லாம் காலேஜ்ல இருக்கிறதே இல்லையே..."
"ஆமாம், அவன் தான் இப்பெல்லாம் சீக்கிரமா கிளம்பி வீட்டுக்கு போயிடுறானே..."
"சரி, நம்ம அவன் இருக்கானா, இல்லையான்னு பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்" என்றான் பாலா.
மாலை
கல்லூரியின் மணி அடித்த உடனேயே கல்லூரியை விட்டு கிளம்பி சென்றான் ரிஷி, வழக்கம் போலவே.
காயத்ரியுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள் மதுமிதா. காயத்ரியின் வழித்தட பேருந்து வந்த போதும் அவள் அந்த பேருந்தில் ஏறவில்லை. அது மதுமிதாவிற்கு குழப்பத்தை அளித்தது.
"ஏன் டா உன் பஸ்ஸை மிஸ் பண்ணிட்ட?"
"நான் உன்னை தனியா விட்டுட்டு போக விரும்பல"
"ஒன்னும் பிரச்சனை இல்ல, காயு"
"ரிஷி இங்க இருந்தா நான் கவலைப்பட மாட்டேன். ஆனா இப்ப உன்னை இங்க விட்டுட்டு நான் போக முடியாது"
அடுத்த சில நிமிடங்களில், மதுமிதாவின் வழித்தட பேருந்து வந்தது.
"நீ கெளம்பு, மது"
"பை"
மதுமிதா அங்கிருந்து கிளம்பிச் சென்றாள். எதிர்ப்புறமிருந்து தன்னை நோக்கி வந்த பாலாவை பார்த்து புன்னகை புரிந்தாள் காயத்ரி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top