24 எதிரிகள்

24 எதிரிகள்

அன்பு இல்லம்

"அப்புறம்?" என்றார் கிரிவரன்.

"அப்புறம் என்ன?" என்றான் ரிஷிவரன் புரியாமல்.

"தன்னோட மகளை பார்த்துக்கிற ரொம்ப பெரிய பொறுப்பை உன் மாமியார் உன்கிட்ட கொடுத்திருக்காங்களே..." என்றார் கிண்டலாய்.

அவன் என்ன பதில் கூறுகிறான் என்று ஆவலாய் ஏறிட்டார் ரோகிணி.

"டாட், அவங்க அதை ஒரு கர்ட்டஸிக்கு சொல்லியிருப்பாங்க"

"அப்படின்னா நீ மதுவை பாத்துக்க போறதில்லையா?"

"அது வேற விஷயம் டாட். உண்மையை சொல்லப் போனா, நான் அதை ஏற்கனவே செஞ்சுகிட்டு தான் இருக்கேன்... எப்பவும் செஞ்சிக்கிட்டும் இருப்பேன்... அவ என் காதலை ஏத்துக்கிட்டாலும் சரி, ஏத்துக்காம போனாலும் சரி..."

"கேக்கவே சந்தோஷமா இருக்குடா மகனே"

அவரைப் பார்த்து சிரித்து விட்டு தன் அறைக்கு சென்றான் ரிஷிவரன்.

"என் மகன் கிட்ட என்ன ஒரு மாற்றம்...!" என்றார் கிரிவரன்.

பெருமையுடன் புன்னகை புரிந்தார் ரோகிணி.

"இதுக்கெல்லாம் நீ தான் காரணம், ரோகிணி"

"இல்ல. நம்ம குட்டி ரொம்ப நல்ல பிள்ளை. அவன் பொறுப்பில்லாம திறிஞ்சுக்கிட்டு இருந்தாலும், இது தான் அவனுடைய இயற்கை குணம். நேரம் கூடி வரும் போது, அவனோட குணம் வெளியில வருது. அதோட மட்டுமில்லாம, அவனுடைய காதல் ரொம்ப உண்மையானது. அதனால தான், நான் சொன்ன வார்த்தையை கேட்டு அவன் நடந்துக்கிறான். ஏன்னா, உண்மையிலேயே மது தன் வாழ்க்கையில வரணும்னு அவன் விரும்புறான்."  என்றார் ரோகிணி.

"என்னவா வேணும்னாலும் இருக்கட்டும், அதுக்கான அத்தனை கிரடிடெட்டும் உன்னைத் தான் சேரும்" என்றார் கிரிவரன் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல்.

......

முகத்தை அலம்பி கொண்டு குளியல் அறையில் இருந்து வந்த ரிஷிவரன், சிரித்தபடி கட்டிலில் அமர்ந்தான். அவனுடைய குடும்பமும், மதுமிதாவின் குடும்பமும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இதன் பிறகு,  அவர்களது திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை என்று எதுவும் இருக்காது. அவனது பெற்றோர் சென்று கேட்டால், நிச்சயம் மதுமிதாவின் பெற்றோர்கள் அவர்களது திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். ஆனால் அதற்கு முன், அவன் மதுமிதாவின் சம்மதத்தை பெற வேண்டும். அப்பொழுது தான், அவனது அம்மா அடுத்த அடியை எடுத்து வைப்பார். மதுமிதாவை எண்ணியபடி கட்டிலில் சாய்ந்தான். அவன் சந்தித்த பெண்களிலேயே, அவள் ஒருத்தி தான் மிகவும் வித்தியாசமானவள். அவளை எப்படித்தான் கைப்பிடிக்க போகிறானோ என்று எண்ணியபடி உறங்கிப் போனான்.

மறுநாள் காலை

விடியற்காலையிலேயே ஒரு கப்பல் வர இருந்ததால், துறைமுகத்திற்கு செல்ல   சீக்கிரம் கிளம்பி தயாரானார் கிரிவரன். அப்போது, ரிஷிவரனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை கண்டு, அவன் அறையின் கதவை தட்டினார். ரிஷி கதவை திறந்தான்.

"குட்டி, இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செஞ்சுகிட்டு இருக்க?"

"எக்ஸாம்ஸ் வருது டாட்"

அதைக் கேட்டு திகைத்துப் போன கிரிவரன்,

"படிச்சுக்கிட்டா இருக்க?" என்றார்.

ஆம் என்ற தலையசைத்தான்.

"ஆனா, நீ ரிவிஷன் கூட பண்ணாம போய் எக்ஸாம் எழுதுறது தானே வழக்கம்?"

"நமக்கு ரொம்ப பெரிய பொறுப்பு இருக்கே டாட்... நான் எப்படி லைஃபை ஈசியா எடுத்துக்கிறது?"

அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று புரியாமல் முகம் சுருக்கினார் கிரிவரன்.

"நம்மளை நம்பி, வேளாங்கண்ணி ஹோம்ல நிறைய குழந்தைகள் இருக்காங்க மறந்துட்டீங்களா?"

"போதும் ரிஷி, நிறுத்து. எனக்கு நெஞ்சு வலி வந்துடும் போல இருக்கு..." என்று சிரித்தார்.

ரிஷியும் சேர்ந்து சிரித்தான்.

"நான் ரோகிணி கிட்ட உனக்கு காபி போட்டு கொடுக்க சொல்றேன்"

"வேணாம் டாட், அவங்க தூங்கட்டும். அப்புறமா குடிச்சிக்கிறேன்"

சரி என்று தலையசைத்து விட்டு, அங்கிருந்து திருப்தியுடன் சென்றார் கிரிவரன். தன் மகனை இப்படி பார்ப்போம் என்று அவர் கனவிலும் கண்டதில்லை.
.........

தன் பெற்றோர் வழங்கிய பொறுப்பை, ரிஷி எப்படி ஏற்று நடக்கப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கல்லூரிக்கு வந்தாள் மதுமிதா.

முதல் நாளை போலவே, ரிஷி கல்லூரிக்கு வர தாமதமானது. தனது பையை தன் இடத்தில் வைத்துவிட்டு, பெண்கள் அறையை நோக்கி சென்றாள் மதுமிதா. பெண்கள் அறையின் அருகே அவள் வந்த போது, அது உள்பக்கம் சாதப்பட்டிருப்பதை கண்டாள். அது ஏன் என்று புரியாத அவள், அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் வந்து ஜன்னல் வழியாய் உள்ளே பார்த்தாள். கல்லூரியின் தூய்மை பணியாளர்கள், அந்த அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவள் அங்கிருந்து சென்று விடலாம் என்று எண்ணிய போது, அந்த கட்டிடத்தின் பின்னால் பேச்சு குரல் கேட்டது. அந்த குரல் அவளது பெயரை உச்சரித்தது. அது, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கும் அவளது ஆவலை அதிகரித்தது.  சத்தம் செய்யாமல் மெல்ல அவர்களை அணுகிச் சென்றாள் மதுமிதா. அங்கு இருப்பது யார் என்று அவளுக்கு புரிந்து விட்டது. அது ரிஷிவரனின் வகுப்பைச் சேர்ந்த தேதஸ்வினியும் மற்றொருத்தியும்.

"ரிஷி இப்படி மாறிட்டான்னு என்னால நம்பவே முடியல" என்றாள் தேஜஸ்வினி கோபமாய்.

"அவனுடைய மாற்றத்துக்கு மதுமிதா தான் காரணம்னு எல்லாரும் பேசிக்கிறாங்க" என்றாள் மற்றொருத்தி.

"கொஞ்சம் சும்மா இருக்கியா ராதிகா, நான் நேத்து ஃபுல்லா அவனை கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன். அவன் அவ பக்கம் திரும்ப கூட இல்ல" என்றாள் சிடுசிடுப்புடன்.

"அது கூட, அவளோட கவனத்தை தன் பக்கம் திருப்பத்தான் அவன் அப்படி செய்றான்னு சொல்றாங்க"

"என்கிட்ட இல்லாதது அப்படி அவ கிட்ட என்ன இருக்கு?"

"அவ சுயநலம் இல்லாத ரொம்ப நல்ல பொண்ணாம்"

"என்ன பெரிய நல்ல பொண்ணு? அவனை அவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணா... அதுக்காக அவ சுயநலம் இல்லாதவளா? அவனுக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ, நான் அங்க இருந்திருந்தா, நானும் தான் அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்திருப்பேன்..."

"இதையெல்லாம் நம்ம பேசி என்ன பிரயோஜனம் இருக்கு? ரிஷி தான் அவளை காதலிக்கிறானே..."

"அப்படியெல்லாம் போகட்டும்னு என்னால விட்டுவிட முடியாது"

"இது நீ மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. ரிஷியும் உன்னை காதலிக்கணும். அப்ப தான் இது வேலை செய்யும்"

"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு"

"என்ன ஐடியா?"

"நாங்க  டேட்டுக்கு போனப்போ, ரெண்டு பேரும் ரொம்ப குளோசா இருந்ததா மது கிட்ட நான் சொல்ல போறேன்"

"ஆனா ரிஷி தான் உன்னை தொடவே இல்லையே..."

"அது உனக்கு மட்டும் தானே தெரியும்?"

"ரிஷி கூட டேட்டுக்கு போன எல்லாருக்கும் தெரியும்"

"அவன் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி தான் நடந்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே... நான் அவனுக்கு ஸ்பெஷலா இருந்தா, அவன் அப்படி நடந்துக்க வாய்ப்பு இருக்கு தானே?"

"ஆனா நீ எப்படி மதுவை நம்ப வைப்ப?"

"நான் அவகிட்ட போய் சொன்னா அவ நம்ப மாட்டா"

"வேற என்ன செய்யப் போற?"

"நீ போய் சொல்லு... அதுவும் அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி, அப்படியே உண்மைய சொல்ற மாதிரி இருக்கணும்"

"சரி, அவ சரியா என்னை கிராஸ் பண்ணும் போது, நான் உங்களைப் பத்தி வேற யார்கிட்டயோ ஃபோன்ல பேசுற மாதிரி பேசுறேன்..."

"செம ஐடியா"

எதுவுமே கேட்காதவளை போல, அங்கிருந்து நகர்ந்து சென்றாள் மதுமிதா.

அவளது வகுப்பறைக்கு அவள் வந்த போது, விஷ்வா அவளை அழைத்தான். அவனைப் பார்த்த உடனேயே அவளுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இன்று அவன் எதைப் பற்றி கேட்டு, அவளை கடுப்பேற்ற போகிறானோ. ஆனால் அவளுக்கு வியப்பளிக்கும் வகையில்,

"ஐ அம் சாரி மது" என்றான் விஷ்வா.

அவனே பேசட்டும் என்பது போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் மது.

"நான் நேத்து உன்கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது" என்றான் வருத்தத்துடன்.

சரி என்று தலையசைத்து விட்டு அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது,

"நீ என்னை மன்னிச்சுட்டியா?" என்றான்.

"ம்ம்ம்"

"அப்படின்னா நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆயிடலாமா?" என்று தன் கையை அவளிடம் நீட்டினான்.

அவன் கையை பார்த்துவிட்டு, அவன் முகத்தை ஏறிட்டாள் மதுமிதா.

"நான் பார்த்ததுலேயே நீதான் ரொம்ப நல்ல பொண்ணு. உன் கூட நான் ஃபிரண்டா இருக்கணும்னு நினைக்கிறேன்"

"ஃப்ரெண்ட்டுங்கற பேரோட, என்னோட சொந்த விஷயத்துல யார் தலையிட்டாலும் எனக்கு பிடிக்காது" என்றாள் திடமாய்.

அவன் மனதில் இருந்த தந்திரத்தை அவள் கண்டு கொண்டு விட்டதால் வாயடைத்துப் போனான் விஷ்வா.

"இல்ல இல்ல... "

அவனுடன் கை குலுக்காமல் அங்கிருந்து செல்ல விழைந்தாள் மதுமிதா.

"மது, நான் உன்கிட்ட சொல்ல வந்த விஷயமே வேற. பதட்டத்துல ஏதோ உளறிக்கிட்டு இருக்கேன்..."

"பதட்டமா? எதுக்கு பதட்டம்?"

"நான்... நான்... ஐ லவ் யூ"

"என்னது? என்ன பேத்தல் இது? உளர்றதை நிறுத்திட்டு போ..." மீண்டும் அவள் அங்கிருந்து செல்ல முயன்றாள்.

"மது நில்லு... " அவளது வழியை மறித்தான் விஷ்வா.

அப்போது அவர்கள்,

"என்ன ஆச்சு மது?" என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். அங்கு ரிஷிவரன் நின்றிருந்தான்.

"ஏதாவது பிரச்சனையா மது?"

மதுமிதா எதுவும் கூறுவதற்கு முன்,

"ரிஷி, இது உனக்கு தேவையில்லாத விஷயம்" என்றான் விஷ்வா.

ரிஷியின் கோபத்தின் சீற்றத்தை அதிகரிக்க, அந்த வார்த்தைகள் போதுமானதாய் இருந்தது.

"இது எனக்கும் மதுவுக்கும் இடையில் இருக்கிற சொந்த விஷயம். நீ இதுல தலையிடாத"

விஷ்வாவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவை நோக்கி திரும்பினான் ரிஷி.

"மது, நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல" என்றான் விஷ்வா கூறியதற்கு மதிப்பளிக்காமல்.

"எதுக்காக நீ எங்க விஷயத்துல தலையிடுற? நீ யாரு? அவ மேல உனக்கு என்ன உரிமை இருக்கு?"

கோபத்தில் தன் பல்லை கடித்தான் ரிஷி. விஷ்வாவின் முகத்தில் ஓங்கி குத்துவதற்காக தன் விரல்களை மடக்கினான். ஆனால் மதுமிதா உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு அவனது கோபம் சட்டென்று குளிர்ந்தது.

"ரிஷிக்கு எல்லா உரிமையும் இருக்கு. என்னை பார்த்துக்க சொல்லி என்னோட பேரண்ட்ஸ் தான் ரிஷியை  ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டாங்க. நாங்க பேமிலி ஃபிரண்ட்ஸ். புரிஞ்சுதா உனக்கு?" ரிஷியின் பக்கம் நின்று, விஷ்வாவுக்கு ஏமாற்றத்தையும், ரிஷிக்கு ஆச்சரியத்தையும் அளித்தாள் மதுமிதா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top