19 பிரிவு
19 பிரிவு
சப்தமின்றி தன் படுக்கைக்கு வந்த ரிஷி, தன் அம்மா தன்னை பற்றி கூறிய விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்தான். அதுவரை அவன் மதுமிதாவின் நிராகரிப்பை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தான் மதுமிதாவிடம் நடந்து கொண்ட விதம் பற்றி, தன் அம்மா நேரடியாக வெளிப்படுத்திய அதிருப்தி, அவனை அது பற்றி எண்ண வைத்திருந்தது.
அது மட்டுமல்லாமல், அவனது அப்பா, மதுமிதா, அவனது அம்மாவைப் போலவே இருப்பதாக கூறினார். இதற்கு முன் கிரிவரன் அவனிடம் அது பற்றி கூறியிருக்கவில்லை. அதனால் தான், அவர் மதுமிதாவை முதல் முறை காந்தி பூங்காவில் சந்தித்த போது, அவன், அவளிடம் நடந்து கொண்ட விதம் குறித்து, அவர் அந்த அளவிற்கு கவலைப்பட்டார் போலும். அவனது அம்மாவே அவனது நடவடிக்கையை விரும்பவில்லை என்றால், மதுமிதா எப்படி விரும்புவாள்? முதன் முறையாய், *சரியாய்* யோசித்தான் ரிஷிவரன்.
அவனுக்கு மதுமிதா வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவனை பிளேபாய் என்று மதுமிதா நினைத்துக் கொண்டிருக்கும் வரை, அவள் நிச்சயம் அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அவனது அம்மா கூறினார். அதற்காக அவளை விட்டு விடுவது என்பது நடக்காத காரியம். அவன் உயிருடன் இருப்பதற்கு அவள் தான் காரணம். அதுமட்டுமல்லாமல், தொலைந்திருந்த அவர்களது குடும்பத்தின் சந்தோஷத்தை மீட்டு கொடுத்தவள் அவள். அவனது அம்மாவை அவனிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள். அவள் அவனது தேவதை. அவனால் மட்டும் தான் அவளுக்கு சந்தோஷமான வாழ்வை தர முடியும். அவள் மட்டும் தான் அவனுக்கு மனைவியாய் இருக்க முடியும். எப்பாடுபட்டாவது அவளை மணந்து கொண்டே தீர வேண்டும். ஆனால் எப்படி? அது பற்றி யோசித்தபடி கண்களை மூடினான். அவனை மதுமிதா ஏற்றுக் கொள்ளாத வரை, நிச்சயம் ரோகிணி அவனுக்கு உதவி செய்யப் போவதில்லை என்பது அவனுக்கு புரிந்தே இருந்தது.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண்விழித்த மதுமிதா, தன் கை, கால்களை நெட்டி முறித்து விட்டு, தான் உறங்கிக் கொண்டிருந்த அறையை விட்டு வெளியே வந்தாள். கிரிவரன் குடும்பத்தினர் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவள் அமைதியாய் நின்றாள்.
"நான் சென்னைக்கு போறேன். அடிக்கடி வந்து உங்களை உங்களையெல்லாம் பார்ப்பேன். இங்க இருக்கிற கேர் டேக்கர்ஸ் உங்களை கவனிச்சுக்குவாங்க. சரியா?" என்றார் ரோகிணி.
வளர்ந்த பிள்ளைகள் ரோகிணியின் சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள். ஆனால் சிறு பிள்ளைகள், அவரைக் கட்டிக் கொண்டு அழுதார்கள். அவர்கள் கண்களைத் துடைத்துக்கொண்டு, ரிஷிவரனை பார்த்தார்கள், அவன் பேச துவங்கிய போது.
"நீங்க எல்லாரும் ரொம்ப நல்ல பிள்ளைங்க. உங்க ரோகிணி அம்மா உங்களை விட்டுட்டு போறாங்கன்னு கவலைப்படாதீங்க. உங்களுக்கு அப்பாவும் ஒரு அண்ணனும் கிடைச்சிருக்கோம்னு சந்தோஷப்படுங்க"
அவனை அதிசயமாய் பார்த்தார் ரோகிணி.
"ஆமாம். அவன் சொல்றது சரி... ஐ மீன் உங்க அண்ணன் சொல்றது சரி. என்னை உங்க அப்பாவாவும், அவனை அண்ணனாவும் நினைச்சுக்கோங்க" என்றார் கிரிவரன்.
"நீங்க உங்க லைஃபை ரொம்ப சீரியஸா எடுத்துக்கணும். நல்லா படிக்கணும். நீங்க என்ன படிக்கணும்னு ஆசைப்படுறீங்களோ நாங்க உங்களை படிக்க வைப்போம். நீங்க நல்லா படிச்சா, லைஃப்ல செட்டில் ஆகலாம். சரியா?" என்றான் ரிஷிவரன்.
"சரிங்க குட்டி அண்ணா" பிள்ளைகள் கோரசாய் கூற,
"ஈஈஈ..." என்றான் ரிஷிவரன்.
அவர்கள் *குட்டி* அண்ணன் என்று கூறியதை கேட்டு வாய்விட்டு சிரித்தார் கிரிவரன். அவரும், ரோகிணியும் ரிஷிவரனை அப்படி அழைத்ததை கேட்ட பிள்ளைகள், அவர்களும் அவனை குட்டி என்று அழைத்தார்கள்.
"ஃபாதர் ஜான் பாலோட ஆபீஸ்ல ஒரு வோட்டிங் மெஷின் இருக்கு. ஒவ்வொரு மாசமும் உங்களுக்கு எந்த கேர்டேக்கரை ரொம்ப பிடிச்சிருக்கோ, அவங்களுக்கு நீங்க ஓட்டு போடலாம். எந்த கேர் டேக்கடர் அதிகமா ஓட்டு வாங்குறாங்களோ, அவங்களுக்கு நாங்க மன்த்லி போனஸ் கொடுப்போம். அந்த ஓட்டை நான் தான் எண்ணுவேன்"
"ஆனா, நீங்க சென்னையில இருக்கீங்களே, எப்படி நீங்க எண்ண முடியும், குட்டி அண்ணா?" என்றான் ஒரு சமத்து பிள்ளை.
"அது கம்ப்யூட்டரைஸ்டு வோட்டிங் மெஷின். அதை சென்னையில் இருந்தும் எண்ண முடியும்"
"ஓஹோ..."
"அது மட்டும் இல்ல, நாங்க குட் ஸ்டுடென்ட்ஸ்க்கு கூட அவார்ட் கொடுக்க போறோம்"
பிள்ளைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
"யாரெல்லாம் அவார்ட் வாங்க போறீங்கன்னு பாக்கலாம்..."
"நான் வாங்குவேன்"
"நானும் வாங்குவேன்"
"குட்... கீப் கோயிங்" என்று புன்னகைத்தான் ரிஷிவரன்.
ரிஷிவரன் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தாள் மதுமிதா. அவளுக்கு ரிஷிவரனிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. பிள்ளைகளிடம் அவனுக்கு இருந்த கரிசனம் நன்றாகவே தெரிந்தது.
பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்த ரிஷிவரன், தன் மனதில் ஏதோ உணர்ந்தான். மெல்லிய பூங்காற்று வருடுவது போல் உணர்ந்ததால் கண்களை மூடினான். பின்னால் திரும்பிப் பார்த்தவன், அங்கு, இரவு உடை அணிந்து கொண்டு நின்றிருந்த மதுமிதாவை கண்டான். அவன் தன்னை கவனிக்கிறான் என்பதை புரிந்து கொண்ட மதுமிதா, அங்கிருந்து நழுவிச் சென்றாள். தனக்குள் ஏற்பட்ட அந்த புதிய உணர்வை எண்ணி, வியந்தான் ரிஷிவரன். மதுமிதா அங்கு நின்றதை அவன் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கு புரியவில்லை.
அவர்கள் சென்னைக்கு கிளம்பும் நேரம் வந்தது. எவ்வளவு தான் சமாதான படுத்த முயன்றாலும், யாராலும் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஃபாதர் ஜான் பால், ஆசிரமத்தின் பணியாளர்கள் மற்றும் பிள்ளைகளிடமிருந்து, கண்ணீருடன் பிரியா விடை பெற்றார் ரோகிணி.
அவர்கள் நாகைப்பட்டினம் வந்து சேர்ந்தார்கள். அவர்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்ல, அங்கு ஹெலிகாப்டர் காத்திருந்தது. மதுமிதாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்ட ரோகிணி, அவளை பார்த்து புன்னகை புரிந்தார். தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணை தனக்கு மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் இருந்தது. ஆனால் அவரது மகன், அவள் மனதில் வித்தியாசமான எண்ணத்தை விதைத்து விட்டிருந்தான் என்பது அவருக்கு வருத்தத்தை தந்தது. அதை எப்படி மாற்றி அமைப்பது என்று அவருக்கு புரியவில்லை. இதற்குப் பிறகு அவரது மகன் எப்படி நடந்து கொள்ளப் போகிறான் என்றும் அவருக்கு தெரியவில்லை. கடவுள் அருளால், அவன் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
"உங்க குடும்பத்துல நீங்க எத்தனை பேர், மது?" என்றார் ரோகிணி
"அப்பா, அம்மா, நான்... நாங்க மூணு பேர், ஆன்ட்டி"
"கூட பிறந்தவங்க யாரும் இல்லையா?"
"இல்ல ஆன்ட்டி"
"நீயும் எங்க குட்டி மாதிரி ஒரே பிள்ளை தானா?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"அவங்க குடும்பமும் நம்ம குடும்பம் மாதிரி தான், ரோகிணி. அவங்க அப்பாவுக்கு நம்ம மேல ரொம்ப மதிப்பும், மரியாதையும் இருக்கு. அதனால தான் அவர் மதுவை எங்க கூட நம்பி அனுப்பி வச்சாரு"
"அவங்களை நம்ம வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடணும்" என்றார் ரோகிணி
"நிச்சயமா செய்யலாம். அதே மாதிரி, அவங்க வீட்டுக்கு போய் நம்மளும் அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்"
"கண்டிப்பா செய்யணும். அதுக்கு முன்னாடி, நம்ம மதுவுக்கு தேங்க்ஸ் சொல்லணும்" என்றார் ரிஷிவரனை பார்த்து. லேசான புன்னகையுடன் நிறுத்திக் கொண்டான் ரிஷிவரன்.
அவன் தங்கள் உரையாடலில் பங்கு பெறாமல் இருந்ததை கண்ட ரோகிணி, குழப்பம் அடைந்தார்.
அவர்கள் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சேர்ந்தார்கள். மதுமிதாவிற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார் சாம்பசிவம்.
"வாங்க சாம்பசிவம்" என்று அவருடன் கைகுலுக்கினார் கிரிவரன்.
"வணக்கம் சார்" என்றார் சம்பசிவம்.
"அப்பா, இவங்க தான் ரோகிணி ஆன்ட்டி"
"வணக்கங்க"
"மதுவை இவங்க கூட அனுப்பி வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றார் ரோகிணி.
"பரவாயில்லமா. நீங்க உங்க குடும்பத்தோட ஒண்ணு சேர்ந்துட்டீங்களே. அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்"
"ரொம்ப நன்றிங்க"
"நாங்க கிளம்பறோம்" என்றார் சாம்பசிவம்.
கிரிவரனும், ரோகிணியும் சரி என்று தலையசைக்க, ரிஷிவரன் மட்டும் தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை மென்று விழுங்கினான். இனிமேல் மது அவனுடன் இருக்க மாட்டாள். கடந்த இரண்டு நாள் தான் அவனது வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான நாட்களாய் இருந்தது. அவளுடன் பேசிப் பழக்கம் சந்தர்ப்பம் அவனுக்கு கிடைக்காவிட்டாலும், அவள் அவனுடன் இருந்ததே அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவள் செல்லப் போகிறாள் என்று தெரிந்தவுடன், அவனது இதயத்தில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டது. அவள், அவன் குடும்பத்துடன், குடும்பத்தில் ஒருத்தியாய் இருந்தாள். அவள் எப்போதும் தன்னுடனேயே இருந்துவிடக் கூடாதா? அவனது மனம் அலை பாய்ந்தது.
ரோகிணியை நோக்கி கைசைத்தபடி, தன் அப்பாவின் இரு சக்கர வாகனத்தில் அவர்களை கடந்து சென்றாள் மதுமிதா. அவளது உருவம் தன் கண்ணில் இருந்து மறையும் வரை, அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரிஷிவரன்.
அன்பு இல்லம் நோக்கி ரோகிணியுடன் புறப்பட்டார்கள் அப்பாவும் பிள்ளையும். தன் வீட்டிற்கு வந்த ரோகிணி உணர்ச்சிவசப்பட்டார். குளித்து முடித்து பூஜையறையில் விளக்கேற்றினார்.
மதுமிதாவை பற்றி எண்ணியபடி தன் அறைக்குச் சென்றான் ரிஷிவரன். அவனால் அவளது நினைவுகளில் இருந்து வெளியே வரவே முடியவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, அன்று தன் கணவனுக்காகவும், பிள்ளைக்காகவும் சமைத்தார் ரோகிணி. அவர்கள் அதை ரசித்து சாப்பிட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.
"உன்னோட கை பக்குவம் கொஞ்சம் கூட மாறவே இல்ல ரோகிணி" என்றார் கிரிவரன்.
லேசான புன்னகையை பதிலாகத் தந்தார் ரோகிணி.
"நீ அங்க ஹோம்ல இருக்கும் போது கூட சமையல் செஞ்சுகிட்டு தான் இருந்தியா?"
"சில சமயம் செஞ்சிருக்கேன். ஆனா, பெரும்பாலும் சமைக்கிறவங்க கூட உதவியா இருப்பேன்"
"குட்டி, நீ ஏன் அமைதியா இருக்க?" என்றார் கிரிவரன்.
தன் தலையை உயர்த்திய ரிஷிவரன், தன் அம்மாவை பார்த்து,
"நான் உங்ககிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பேசணும் மாம்" என்றான் முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு.
கிரிவரனும் ரோகிணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ என்கிட்ட என்ன வேணா பேசலாம் குட்டி"
கிரிவரனை ஒரு பொருள் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு, தன் பார்வையை ரோகிணியின் பக்கம் திருப்பிய ரிஷிவரன்,
"நான் மதுமிதாவை காதலிக்கிறேன்" என்றான் அமைதியாக, ரோகிணியின் முகபாவத்தை கவனித்தபடி.
அதை கேட்ட ரோகிணி அசந்தே போனார். அவன் அவ்வளவு சீக்கிரம் அவரிடம் இவ்வளவு வெளிப்படையாய் பேசுவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top